kamagra paypal


முகப்பு » சிறுகதை

சுழலில் மிதக்கும் பூ

 

தேர்வறையிலிருந்து ராமர் வெளியே வந்து தூணில் சாய்ந்து முதுகைச் சற்று குனித்து கருப்பு ஷுவைப் பார்த்தபடி நின்றான். ஆறடிக்கு சற்று குறைவானவன். மே மாத வெயில் முதுகில் படிந்து கொண்டிருந்தது. தேர்வு பற்றிய பேச்சுகள் இணைந்து இரைச்சலாகியது. மேகங்களற்ற தெளிவானை வெறிக்கத் தொடங்கினான்.

கருப்பு வெள்ளைச் சீருடைகளுக்கிடையே புகுந்து நீலவண்ணச் சீருடையில் வந்த இவள் அவன் கைப்பற்றி புருவம் தூக்கினாள். “பாஸாயிடுவேன் …,” என்றவனின் அடுத்திருந்து வந்தவன், “இதுல பாஸாயிட்டா போதுமா?” என்றபடி சிரித்தான்.

கடைசியாக வந்த பாலா அவனிடம் கீழே சைகை காட்டப் படியிறங்கிச் சிரித்தவன் ஓடினான். “வெயிலடிக்குதுடா…இந்தட்டம் வா,” பாலாவின் குரலால் கலைந்து தலையாட்டியபடி ராமர் நகர்ந்தான். வியர்வை பெருகி முதுகை நனைத்திருந்தது.

“கீழப்போய் சாப்பிட்டுப் போலாம்,” என்றவனிடம் ராமர் மறுத்தான். மீசையைத் தடவியபடி பாலா புருவம் சுருக்கி,“ஏண்டா…இன்னுமா?”என்றபடி திரும்பிக் கொண்டான். நிற்கையிலேயே கடந்து சென்று வடியும் வாய்க்கால் நீராக நண்பர்கள் இறங்கிச் சென்று மைதானத்திலும் உணவகத்திலும் தேங்கினர்.

படிகளில் மேல்கீழாய் இவளும், ராமரும் அமர்ந்ததும் பாலா உண்பதற்கு வாங்கி வரச் சென்றான். ராமர் முன்னால் சுவரில் பாதிக்குமேலிருந்த சன்னல்வழி இளஞ்சிவப்பில் காய்ந்து முற்றியிருந்த சோளக்காட்டைப் பார்த்தபடியிருந்தான். முற்றிய சோளக்கதிரில் அதன் ஆட்டத்திற்கேற்ப உடலை வளைத்துக்கொண்டே அமர்ந்து சோளம் கொறித்துக் கொண்டிருந்தது ஒரு பச்சைக்கிளி. ஓசைகள் அடங்கிய அந்த மூன்று மாடிக் கட்டடம் வெப்பத்துடன், காற்று நடமாட்டமின்றி அழுந்தியிருந்தது.

சேலையைச் சரிசெய்தபடி இவள் இறங்கிவந்த படிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சென்ற மாதத்திலிருந்த ராமரை நினைத்துக் கொண்டாள். முகம்நோக்கி பேசுவதைத் தவிர்க்கும் இவனின் அடுத்த துருவம் அவன்.

வாரம் முழுவதும் விடுமுறையிலிருந்த ராமரைப்பற்றி செவ்வாயன்று நேற்று திருமணம் என்றும், புதனன்று பதிவுமணமென்றும், சனியன்று காவலர் விசாரணை என்றும் கல்லூரியின் நூறுநாவுகளும் ரகசியம் பேசிக் கொண்டிருந்தன. திங்களன்று எவரையும் பார்க்காத பார்வையோடு ராமர் கல்லூரி மீண்டான்.

நெருங்கிய நண்பர்களை முற்றிலும் தவிர்த்த அவனை அவர்கள் தள்ளிநின்று மீள எதிர்பார்த்திருந்தனர். வகுப்பில் “பதின்பருவ மாணவர்கள் மேல் ஒப்பார் குழுவின் ஆதிக்கம், முக்கியத்துவம் என்ன?…என்பது நினைவில் நிறுத்த வேண்டிய பாடப்பகுதி. அந்தப் பகுதியை நடத்திய ராமர் நினைவு படுத்தலாம்,” என சாந்தகுமார் அய்யா சொல்லி ஐந்துநிமிடங்கள் சென்று எழுந்தவன் நினைவில்லை என அமர்ந்தான். கைகளைப் பிசைந்து உதட்டைக் கடித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா இவன்? …என்ன ராமர்?” குரல்களை மீறி ஒலித்தது மணி. மைதானத்தைச் சுற்றி மாறிமாறி, பசுமைகொண்டிருந்த வேம்பு, புங்கைகளின் மேற்கே ராமர் நெடுநேரமாக நின்றிருந்தான்.

அதே இடத்தில் நண்பர்களிடையே தோளில் கை போட்டு பேசிச்சிரிக்கும் கூட்டத்தில் இவன் தலை தனியே தெரியும். கூட்டத்திலும், வெளியிலும் சட்டென்று கண்களில் பட்டுப் பதிந்த முகம்…சிரிக்கும் முகத்தை நினைத்துப் பார்த்த இவள் அவனருகே சென்று, “சாரோட முகமே மாறிடுச்சு …என்னாச்சு உனக்கு?” என்றபோது பாலா அருகில் வந்தான்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு நகர்ந்தான். அடுத்து வந்த நாட்களில் வலிய பேசிப்பேசி இருவரும் அவனை நெருங்கினார்கள்.

வகுப்பில் மறுமுறையும் பதிலளிக்காமல் நின்ற அவனை ஓங்கிப்பேசினார் அய்யா. உணவு  இடைவேளையில் வகுப்பில்  அருகில் அமர்ந்து “ஏன் ?” என்று பாலா அழுத்திக் கேட்டவுடன், “ஐஞ்சு நிமிசம் யோசிச்சும் ஞாபகம் இல்லப்பா..” என்ற ராமரைக்  கண்கள் சுருங்கப் பார்த்தான் பாலா. அடுத்த இருக்கையிலிருந்து எழுந்து வந்து ராமர் கைகளில் இருந்த தாளை இவள் வாங்கிப்பார்த்தாள். அதில் அய்யா கேட்ட கேள்வியை முழுத்தாளில் மீண்டும் மீண்டும் எழுதியிருந்தான்.  உணவிற்காகக் கலைந்தனர்.

சுள்ளென்று நடுமண்டையில் உறைத்த வெயிலைத் தடுக்க முந்தானையைத் தலையில் போட்டு விடுதியிலிருந்து நடந்த இவளும், தோழியும் பொறியியல் கல்லுாரிப் பாதையில் முந்தானையைக் கையில் பிடித்தபடி “சோறு திங்க நாலு காலேஜ் தாண்டவேண்டியிருக்கு…ஊருக்கு இளைச்சவன் வாத்தியாரு மட்டுமில்ல, அதுக்கு படிக்கிறவளும் தான். எல்லையில கொண்டி பி.எட் காலேஜுக்கு திட்டம் போட்டவன்  புள்ளக்கி கணக்கு வராம போவ.” சிரித்தபடி சோற்றுப்பாத்திரத்தைக் கைமாற்றினாள்.  “புதுசா என்ன? அவனோட பேச்சு…அவன்லாம் ஒரு..வாயில வந்துடும் …வீட்ல சாப்பாடு போடலயா அவனுக்கு…?” என்றபடி கல்லூரிக்குள் நுழைந்தாள் சுகுணா.

மைதான மரவரிசையில் வடக்குப்பக்க சிமெண்ட்பெஞ்சில் அமர்ந்திருந்த ராமரிடம் “சாப்பிடு…,” நீட்டியபடி அமர்ந்தாள். சூடாக இருந்த முள்ளங்கி குழம்புச் சோற்றைக்  குதறிக்கொண்டிருந்தான். பாலாவும் வந்தமர்ந்து கொண்டான்.

இருவரும் இருபுறமும் அமர்ந்து தேர்வுக்கான பாடங்களைக் கலந்து பேசத் தொடங்கினார்கள். இடையில் பாலாவிடம் ராமர், “இது நினைவிருக்கு. அவ டியூட்டி முடிஞ்சு வர்ரவரை ஹாஸ்பிடல் வராண்டாவில் இதைத்தான் படிச்சிட்டிருந்தேன்,” என்றான். அதிலிருந்து படிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் அதையே வழிமுறையாகக் கொண்டார்கள். தேர்விற்கான நாட்கள் அறிவிக்கப்பட்டு கல்லூரி பதட்டம் கொண்டிருந்தது.

பாலாவின் அறையிலேயே தங்கிக்கொண்டான் ராமர். கிணற்றில் ஊற்றுமுகம் வரை வற்றிய நீரை இறைப்பதைப்போல நீண்டதொலைவு சென்றும், உள்நோக்கி முகர்ந்தும், வெளியிழுக்கும் வேகத்தில் சிந்தியும் ஏதோவொரு பற்றுக்கயிறால் நினைவை இறைத்துக் கொண்டிருக்கும் ராமரை சொல்லாலும், சிரிப்பாலும், தொடுகையாலும் சூழ்ந்திருந்தான் பாலா.

மருத்துவரிடம் சென்றபோது அவர் நிறையப் பேசினார். இரவு உறக்கத்திற்கு ஒரு மாத்திரை ஒரு மாதத்திற்குக் கொடுத்து “ஒன்னுமில்ல…சின்னதா ஒரு எதிர்சுழற்சி,” என்று தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பினார்.

“இது அவள் சாம்பல் டிரஸ் போட்டு வந்தன்னக்கி, அவள் பிறந்த நாளன்னக்கி ‘குமரப் பருவத்தினரை புரிந்து கொள்ளுதல்’ நடத்தினாங்க.

“அவளோட ஜீ.ஹெச் போன அன்னக்கி ‘ஆளுமை’ நடத்தினார் பாஸ்கர் சார்..” என்று ராமர் பாடங்களை மெல்ல மெல்ல மீட்டெடுத்து வராதவைகளை ஒதுக்கினான்.

தேநீர் விருந்தன்று பேச்சிற்கான நேரத்தில் ஆளுக்கொரு கருத்து சொல்கையில் ராமர், “வெள்ளம் எப்பவரும், நாம எப்பவிழுவோன்னு தெரியாது. டீனேஜ் கூட வெள்ளம் மாதிரிதான்… அந்த நேரத்தில நம் பிள்ளைகளுக்கு அவனை நோக்கி வரும் அத்தனை விசைகளிலும் துணையிருப்போம். அதுக்கும்தான் ஆசிரியன்.” என்றான்.

தேர்வன்று ராமர் மிகவும்பதட்டமாக இருந்தான். இவள், “எனக்கும்தான் மறந்துட்டு எல்லாம். சும்மா குழம்பாத,” என்று கருப்புக்கயிறைக் கையில் கட்டினாள். பக்கத்திலிருந்தவன், “நீ இந்தமாதிரி ஏதாவது ஆரம்பிச்சா கைநிறைய காசு பாக்கலாம்…அவன் பண்ணினதுக்கு இன்னும் இருக்கு,” என்றான்.

அவனிடம்,“கூட்டமான பஸ்சுக்கு காத்துக்கிட்டுருக்கவன் தானே நீ..” என்றாள். “வெள்ளப்பூனைக்குட்டி மாறி இருந்துக்கிட்டு புலின்னு நெனப்பு,” என்றவுடன் “பூனக்கி புலியத் தெரியுமோ இல்லையோ பால் எதுன்னு நல்லா தெரியும்,” என்றவுடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

பாலா இரவுபகலாகவும், இவள் கல்லூரியிலுமாக அவன் காதுகளில் கேட்க பாடங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இடையில் ஞாயிறன்று மூவரும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அமர்ந்திருக்கும்போது, “உனக்கு என்கிட்ட தயக்கமா இல்லையா?..உன் ப்ரண்ட்ஸ் கண்ணில தெரியுது.” என்றவனிடம்

“முதல்ல இருந்தது…கூட்டத்தில நிக்கும்போதே தனியா தெரிவ. தனியா நிக்கும்போது மொட்டமேட்டுல நிக்கிற ஒத்தப் பனைய பாக்கற மாதிரி பக்குனு இருந்துச்சி. தனியா விடமுடியல,” என்றவளின் கைகளைப் பிடித்துக் கொண்டான் ராமர்.

“உன்னோட ப்ரண்ட்ஸ் கூட ஏன் பேசமாட்டிக்கிற?” என்ற பாலாவிடம் ராமர்,

“பேசக் கூடாதுன்னு நெனைக்கலடா…என்னன்னு தெரியல அவங்களப் பாக்கவே தயக்கமா இருக்கு…” என்றான்.

தேர்வுகள் நிறைவு பெற்று அமர்ந்திருக்கும் இன்று ஒரு கனவு என நினைத்துத் தலையைக் குலுக்கி இவள் தன்னிலைக்கு வந்தாள்.

கீழிருந்து உணவுப்பொட்டலங்களோடு பாலா வந்தான். பையிலிருந்த டிபன் பாக்ஸையும் எடுத்து படிகளில் வைத்துவிட்டு பேண்டைத் தூக்கிவிட்டு அமர்ந்து கண்ணாடி சரிசெய்து கால்களால் ஷூவை நெம்பிக் கழட்டியபடி,“சாப்பிடலாமா?” என்றான்.

இவள் முந்தானையால் தண்ணீர் பாட்டிலைத் துடைத்துத் திறந்தாள். இவ்வளவுக்கும் பிறகும் அசையாமலிருந்த ராமரைத் தட்டினான் பாலா. எங்கிருந்தோ மீண்டெழுந்தவன் போலொரு அசைவை அவனிடம் உணர்ந்த இவள் இவ்வளவு நேரம் அவன் என்ன நினைத்திருந்திருப்பான் என்று உள்ளே கேட்டுக்கொண்டாள்.

பாலா, “ஒரு டியூசன் சென்டரில் ப்ளஸ்டூ மேத்ஸ்க்கு என்னய கூப்பிட்டிருக்காங்க. உனக்கும் தமிழ் வேக்கண்ட் கேக்கட்டா…” என்றான்.

“அரியலூர்லயா?” என்று அமைதியானான்.

“உங்க ஊர்லருந்து பக்கம்தானேடா,” என்றான்.

இவள் “என்னன்னு சொல்லித்தொலையேன்,” என்றாள்.

ராமர் “வீட்ல தெரிஞ்சுட்டதால தான் கல்யாணம் பண்ண வேண்டியதாயிடுச்சு,”…அமைதிக்குப் பின்

“மூணு நாள் அரியலூர்ல இருந்தோம்…அவங்க வீட்ல போலீசோட வந்துட்டாங்க.”

இவள் “மூணு நாளாவும் அந்தபொண்ணு உன்கிட்ட எதுவும் சொல்லலையா?”

ஏதோ கேட்க வந்த பாலா இவள் முகம் பார்த்து நிறுத்திக்கொண்டான்.

“என்ன?” என்றவளிடம் “உன்கிட்ட எல்லாம் சொல்லியே ஆகணுமா?” என்று நெற்றி சுருக்கினான்.

ராமர் “இல்ல..போலீஸ் சொன்ன பிறகுதான் தெரியும். எவ்வளவு மனஉழச்சலா அவளுக்கு இருந்திருக்கும்,” பேசியபடி ராமர் கையிலெடுத்த தக்காளிசாதத்தின் மிளகாயை பாலா எடுத்தபடி “எந்த நேரத்திலயும் முழுசா சிதறிடக் கூடாது ராமர். கற்பனையாவாவது எதையாவது பிடிச்சுக்கனும். அடுத்தது என்னன்னு பாக்கலாம். இளங்கோ அண்ணாகிட்ட சட்ட ரீதியா என்ன பண்ணலான்னு கேக்கனும்.” என்றான்.

“உடல் சம்மத்தப்பட்ட பிரச்சனையை அந்த பிள்ள என்னன்னு சொல்லும். அவங்க வீட்ல அதைதான் காரணமா சொல்லிருக்காங்க…”  என்ற ராமர் வேறுபுறம் பார்த்தான்.

வெளியே அடர்பசுமையில் நின்ற வேம்புகளும், புன்னைகளும் 40 டிகிரி வெயிலை வாங்கித்தந்த பதநிழலில் தோழிகளும் நண்பர்களும் பேசியபடியிருந்தனர். காகம் விருட்டென பறந்த அசைவில் கலைந்தனர் மூவரும்.

“இளங்கோ அண்ணந்தான் வாதாடுறாரு…முன்னாடி ஒருத்தரும் பேசமுடியாது. அவரும் பரீட்சை முடிக்கனுமில்ல.  நிமிந்து உக்காருடா முதல்ல..” என்றவளைப் பார்த்தபடி உணவிலிருந்து எதையோ தூக்கி எறிந்தான் ராமர்.

“அவ உன்கிட்ட வந்துட்டா நீ முழுசாயிடுவ…பசங்கக்கிட்ட உன்னால ஈசியா மூவ் பண்ணமுடியுன்னு தோணுது. வேலைக்கு ஸ்கூலுக்கெல்லாம் அப்லை பண்ணணும்.” என்றபடி அவன்தோளில் தட்டிவிட்டு எழுந்து ஷூவுக்குள் காலை நுழைத்தான் பாலா.

“அண்ணன் ஸ்கூலுக்கு, அண்ணி ஹாஸ்பிட்டலுக்கு …ரெண்டுபேரும் வேலைக்கு ம்ம்ம்…சமைக்க, பாத்திரம் கழுவ கத்துக்கடா” என்றவளைப் பார்த்து சிரித்தான் ராமர்.

“உன்னோட ப்ளான் என்ன?” என்றான் பாலா.

இவள்,“உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணுமா?” என்றாள்.

“என் கிட்ட சொல்லு,” என்றான் ராமர்.

“ம்ம்..பயோடேட்டா,” என்றெழுந்தாள்.

“கல்யாணத்துக்கா? சிண்டுவச்ச கத்தரிக்கா மாதிரி இருந்துக்கிட்டு..” என்றபடி படிகளில் இறங்கி ஓடினான் பாலா.

திரும்பி சிரித்து முடியொதுக்கியவன் புதிய ராமர்.  அவன்  பின்னால் ஓடியபடி “இல்லடா..சிண்டுவச்ச வெள்ளமுள்ளங்கி,” என்றான்.

“உலக அழகன்களா…வரன்டா..” என்றபடி படிகளைத் தாண்ட எடுத்தக் காலை சேலை தடுக்கியது. இவளுக்கு ஏனோ ‘ராமரின் அவள்’ நினைவிற்கு வந்தாள். கீழே இருவரின் அரவம் கேட்டுக்கொண்டிருந்தது.

<<##>>

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.