kamagra paypal


முகப்பு » சிறுகதை

சக்யை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்  பாடி பள்ளியெழுச்சி கொள்ள அவன் அரங்கத்தில் இல்லை.இன்று தேய்பிறை ஆறாம்நாள். மூன்றாம்நாள் சந்திவேளையில் மணிவெளிச்சத்தோடு மாதவனும் மறைந்துவிட்டான். அரங்கனில்லா அரங்கம் .

“மனம்கொள் மாதவனே எழுந்தருள்வாய்
தனம்உறை மார்பனுக்கு மங்களம்”

என மனதினுள் ஒலிக்க , செங்கரையிட்ட வெண்பட்டு புறத்தே ஒலிக்க கரவுவழியின் இருளில் தோழியின் கைவிளக்கு வழிகாட்ட நடந்து அந்த கருங்கல் அரங்ககினுள் நுழைந்தாள்.புலரிமென்னொளி சாளரத்தின் வழி மூங்கில்களென  சரிந்திருந்தன.

விரிக்கப்பட்ட நாணல்பாய்களில் அரங்கத்தின் காவலர்களும் ,அரங்கனுக்கு உரிமையானவர்களும் வந்து அமர்ந்தபடியிருந்தார்கள்.மேற்குநோக்கியிருந்த பாயில் வெள்ளையம்மா அமர, தோழி தூணின் பின்னால் நின்று கொண்டாள். தனியள் என்ற எண்ணம் நிலையழிக்க விழிகளைச் சுழற்றினாள்.கண்ணசைக்கையிலேயே ஓடிவரும் இவன் …அன்று களித்தோழனான அவனே என நெஞ்சம் மயங்கியது.

மெல்லியதோள்கள் ,செவிப்புற மென்கன்னத்து இள மயிர்கள்,செப்பு உதடுகள்..பார்த்துக்கொண்டிருக்கையிலேயே மடியிலமர்ந்து கொண்டான்.கரங்களை அவன் மார்பின் குறுக்காக வைத்தாள்.ஒருமுறை சிலிர்த்து ஏற்றுக்கொண்டான்.கண்கள் செல்லும் திசை பார்த்தாள்.அச்சுதன்……. மடியிலிரும் மைந்தனை அழைத்த அச்சு அவளைக்கண்டதும் திரும்பிக்கொண்டான்.“பாடுங்க மாமி ..”என்ற இளையஅச்சு வளைகளை ஆட்டினான்.தென்றலின் தொடுகை பாடவைத்தது.

“தருதுயர் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை” …கண்களெல்லாம் பனித்துக் கொண்டிருக்கையில் உள்ளேநுழைந்த சுதர்சனபட்டர் “இப்ப நிலையும் இதானே…கால்லவிழக்கூட ரெங்கன் இங்கில்ல”என்றவுடன் அவை விம்மியது.“போரும்..கண்ண கசக்கினதெல்லாம்…. உலூக்கான் போயென்ன தளபதி சீவிட்டேயிருக்கான். அரங்கம் சுடுகாடா போவுதே ..என்ன பண்ண” அமைதியை கலைக்கவில்லை அவை. ஆள் துலங்கும் வெளிச்சம் வந்தது.

பட்டர், “ஒன்னும் பிடியில்ல…என்னமாச்சும் துலக்கிட்டு வாங்கோ..நேக்கு பத்தாம் நிலவறை காரியமிருக்கு..இருந்தா சாயரச்ச பாப்பம்,”உரைத்தபடியே நடந்து பின்புறம் வெளியேறினார்.

 நான்கு கரவுவழிகளிலும் பெருமூச்சொலிகள் ஒலித்து வெளியேறிக்கொண்டிருந்தன.தோழி இவளின் அணிகளை ஒழுங்குபடுத்தினாள்.“காவிரியோட கடவுளே போன என்ன?கழுத்தில சரப்பொளி சங்கீதம் பாடணுமில்ல ..”என்றபடி மேகலையிடையை கட்டிக்கொண்டிருந்த மைந்தனை இழுத்துக்கொண்டான் அச்சுதன்.“கூரிய சொற்கள்”என்ற தோழியிடம்  “அமுத ஆலமடி…”என்று புன்னகைத்தாள்.

வாயிலை நோக்கிசெல்லஎத்தனித்தவள் திரும்பி தோழியிடம் “இப்பணி உனக்கு விதிக்கப்பட்டதல்ல. இவ்வழி சென்று உன் இல்லம் சேர். உனக்குரியது வந்து சேரும்,”என்றவளைத் தோழி ஈரவிழிகளுடன் கடந்து சென்றாள்.

“எங்கு செல்கிறாய்…”  என்றான் அச்சுதன்.

“எந்த அதிகாரத்தில் கேட்கிறாய்?”

“……”

“உன் வாய்மொழி கேட்கவும் அருகதையில்லாதவள் நான் என சொன்னவன் நீயல்லவா? …அரங்கமே சிலிர்க்கும் கதைகள் கேட்க என் செவிகளுக்கு அருளில்லை..”

“தசையைக் கீறி எடுத்த முத்தைத் தரையில் வீசியவள் சிப்பியின் வலியை அறிந்திருக்க நியாயமில்லை”

“பருவாய் காண்பவை மாயமென உன்வேதம் சொல்லவில்லையா?”

“வாயைக்கிழிப்பேன்…இன்னொரு சொல்லெடுத்தாயானால்,”

“அனைத்திலும் ஒளிரும் ஒளி ஒன்றே…சேற்றில் விழும் ஒளியையும் சேறென்பவனா நீ?…மனம் கடந்தவளல்ல நான்.”

“…….”

“எங்கு செல்கிறீர் மாமி…”

“விதிக்கப்பட்ட இடத்திற்கு.இளைய அச்சு..என் தோழமையை மட்டும் நாடியவன்,” புன்னகைத்து நடந்தாள்.

அங்கிருந்த மூர்த்திக்கு முறைமைகள் எதுவுமின்றி ,

“……அந்தரம் சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்…” பாடிக்கொண்டேயிருந்தார் அன்பன் ஒருவர்.

தெருக்களெங்கும் தாழ்திறவா கதவங்கள், அரவமில்லாத் திண்ணைகள், சுண்ணமும் செங்குழம்பும் எழுதாவாசல்கள்.இவள் சிலம்போசை விரைந்தும், தயங்கியும், நின்றும்,தேய்ந்தும் ஓரங்கநாடகம் நடத்தியது.எருமைகள் கலக்கியனவாய் நிலை குலைந்திருந்தன அல்லித் தாமரைக் குளங்கள்.புள்ளரையன் கோயிலின் காலை மணியோசை நகர்நிறைக்கும் பொழுதில்…இத்தனைதெருக்கள் கடந்தும் ஒற்றை மகவோசை கேட்க அருளில்லையென நெஞ்சில் கை வைத்து மதில்களின் வாயிலைக் கடந்து அரங்கனின் முதல் சுற்றினுள் நுழைந்தாள்.

கோயில் விமானத்தை வணங்கி நீள்துயில்கொண்டோனை நெஞ்சில் நிறுத்தி சந்தனமண்டபத்தைப் பார்த்தாள்.வாட்களுடன் அயல்தேசத்தினர்.அகன்ற தெருக்களில் நெருப்பிட்டு உணவு வாட்டினர்.உள்ளுக்குள் எழுந்த நடுக்கம் உதறி இடை ஒசித்தாள் கண்பார்வை மாற்றி தாளநடையொலிக்க மண்டபத்திற்கு நடந்தாள்.தடுப்பவர் இன்றி வெடிச்சிரிப்புகளையும்,புரியா ஊளைகளையும்,சமிக்கைகளையும் கடந்து உள்ளே சென்றாள்.

“இன்னைக்குப் பெருமாளை காட்டணும்கறார்..”என்றான் விலைபோனவன். மையெழுதிய விழிகளை உருட்டியதைக் கண்டு  புறம்நோக்கினான். நீள்சிகையும்,பழுப்பங்கியுமாக வந்தவன், சிலகணங்களில் புருவம் சுருக்கியதும் வணங்கினாள். ஏதோ உரைத்தவண்ணம் அவள் தோளில் கைவைத்தான்.

அவனுடன் குதிரையில் இரண்டாம் மதிலைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். குளம்படிகளின் ஓசை முரசொலியாய் அதிர்ந்தது. நிமிர்கையில் பிணந்திண்ணிகள் கார்த்திகைக் கோபுரமதிலில் சிறகு குறுக்கி அமர்ந்திருந்தன. காற்றில்  நிணவீச்சம் ஏறியிருந்தது.

மூன்றாம் மதிலின் தவிட்டறையையடுத்த, கழுத்து மணியோசையும், மூச்சுச் செருமலுமில்லா தொழுவைக் கடக்கையில் மூச்சையிழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

கிழக்கு கோபுரத்தினடியில் இறங்கி குதிரையைத்தடவிக் கொடுத்து இடப்புறத் திண்டில் அமர்ந்து அவளை அருகில் அழைத்தான். அவனின் அணுக்கப்படை கண் பார்க்கும் தொலைவிலிருந்தனர்.பின்காலைமென்காற்று வாயில்புகுந்து நகரத்தெருக்களில் நடந்தது.

கோபுரத்தின் நான்காம் உள்ளடுக்கில் சுழன்றேறுகையில் அவளுள்ளே “ரெங்கா ரெங்கா ….”அழைத்துக்கொண்டு பின் நினைத்துக்கொண்டவளாய் …….பல்லக்கில் எந்தவெளியில் எங்கு போகிறானோ எனக் கண்களை இறுக்கிக் கொண்டாள். கையைப் பிடித்திழுத்தவனிடமிருந்து  புன்னகைத்து விடுவித்தபடி பாடுவதாய் சைகை செய்தாள். அந்தி  நெருங்கிக் கொண்டிருந்து.

“புகுந்திலங்கும் அந்திப்பொழுத்தது அரியாய்

இகழ்ந்த இரணியதாகம்:சுகிர்ந்தெங்கும்

சிந்தப் பிளந்த திருமால்”…கண்கள் சிவக்க சீறீய மூச்சடக்கி, பாடி நிறைந்தவேளை இருவரும் கலச உச்சிக்கு வந்திருந்தார்கள்.

கண்கள் வெறிகொள்ள தலையாட்டிக் கைவீசி “எங்கே?” என சைகை செய்தான்.

விளிம்பிற்கு சென்று மேற்கே சற்றுதொலைவில் தெரிந்த கோயில்விமான பரவாசுதேவரை சுட்டினாள். ஆசையில் முன்னகர்ந்தவனைக் காண்கையில் ஐந்துதலை நாகமென விரல்கள் விரிந்தெழ பின்னிலிருந்து ஓங்கிய மூச்செழ தள்ளிவிட்டாள்.நினைக்கப் பொழுதொதுக்கினால் முடியாதெனத் தானும் விழுந்தாள்.உள்ளூர்ப் படை சூழ தளபதியிழந்த அன்னியப்படை சிதறியது.

வெண்பட்டு செம்பட்டாகக் கிடந்தவளைச் சூழ்ந்திருந்தவர்கள் “பெருமாளே உன்னவ …சுருக்க அழைச்சிக்கப்படாதா,”வெனக் கதறினர்.

அண்மையில் வந்த அச்சுதன்..பெருங்குரலெடுத்து “அரங்கன் நான். என்ன வேண்டும்.?” உடல் வசமிழந்து நடுங்கியது.

செருகிய விழிகள் உயர்த்தி..வலிநிறை குரலில்  “அரங்கனின் சேவகிகள் விண்ணேகினால் மடைப்பள்ளி நெருப்பு,அரங்கனின் துளசிநீர்……ம்ம்…அவன்மாலை,பரிவட்டம் வேண்டும்..”..அமைதிக்குப்பின் “இவன் தோழமை..”

“தந்தேன். அரங்கனின் சொல் அரங்கத்தின் நியதி..” குரல் தளர்த்தித் தன்னிலைக்கு வந்தான் அச்சு.வெள்ளையம்மாளின் தலையில் கரங்களை வைத்தான்.தழல் குளிர்ந்தது.குதிரைகள் வெளியேறும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.மணிவெளிச்ச வெளியைக்காட்டி”அதோ அங்க..நன்னா பாருடி…கருடன்..ஒருநா பாற்கடலில நம்ம ரெங்கன் ஒறங்கையில இது என்ன பண்ணித்தாம் தெரியுமோ…கதைய கேளுடி அசடு……”அச்சுவின் குரல் தேய்ந்து கொண்டிருந்தது.

One Comment »

  • நா கௌதமன் said:

    சிறப்பான சிறுகதை சகோ…

    # 5 March 2017 at 9:18 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.