உலகம் இன்று நம் கையில்

ஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ.

இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில்,  அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய (20/1/2017) வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை.  திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, ஆனாலும் பொது அரசியலில் திடீரென இறங்கி, அதிபர் தேர்தலுக்கு முக்கியமான ஒரு கட்சியின்  வேட்பாளராக உள்கட்சித் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் மாற்று வேட்பாளர்களுடன் பொதுத்தேர்தலிலும் போட்டியிட்டு வென்றவர்,  டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.

தான் ஒரு பெரும்பணக்காரர் என்பது அடிக்கடி இவரே சொல்லிக் கொள்ளும் தகுதி. அரசியலுக்கு வருவதற்குத் தகுதி என்ன வேண்டும்? அனேக அமெரிக்கர்கள் அரசியலுக்குத் தகுதிகள் எல்லாம் பயனற்றவை என்ற கருத்துக்கு வந்து சில பத்தாண்டுகள் ஆகி விட்டன. அவர்கள் அடிக்கடி தேர்ந்தெடுப்பவர்கள் கிட்டத்தட்ட அறிவிலிகளாகவே இருப்பதும் ஒரு பாணியாகி விட்டது. அறிவுள்ளவர்கள் தேர்தலில் நிற்க முயன்றால் அவர்களைக் கேலி செய்வதும் உதாசீனப்படுத்துவதும் கூட நடக்கிறது- ஆல் கோர் என்பாரின் வேட்பு அப்படிக் கீழ்மைப்படுத்தப்பட்டது.

இருந்தாலும் ட்ரம்ப் இப்படி முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் எவரையும் விட மோசமானவர், கேவலமானவர் என்றும், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்க அரசியலை மிகக் கீழ்மைப்படுத்தி இருப்பதாக விமர்சித்தும் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வேறுபலர் இந்த எதிர்ப்பு ஒன்றே இவர் ஒரு சிறப்பான நபர் என்பதற்கு நிரூபணம், ஏனெனில் எதிர்ப்பவர்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு எதிரிகள், வெள்ளை இனத்தை அழிக்க முயல்பவர்கள் என்றும், இவரால்தான் அமெரிக்கா மறுபடியும் உயர்ந்த நாடாக எழப்போகிறது என்றும் ஆர்ப்பரிக்கின்றனர். [இதே போன்ற வேறு சில அதிபர்களை நாம் பல நாடுகளில் பார்க்கலாம். துருக்கியின் அர்த்வானும், ரஷ்யாவின் புட்டீனும் இப்படிப் பட்ட நபர்களே. ஆனால் ஒரு மாறுபாடு உண்டு- யாரும் புட்டீனை அறிவிலி என்று சொல்வதில்லை. கயமை நிறைந்தவர், நரித்தனம் மிக்கவர் என்று எதிராளிகளும் கூடச் சொல்கிறார்கள். ஆக சாமர்த்தியம் என்பது அவரிடம் நிறைய உண்டு என்பது பொது முடிவு. ]

இரு கட்சிகளில் எது உண்மை என்றால் இரண்டுமே உண்மை இல்லை. மாறாக இரண்டும் பிரமைகளை மக்களிடம் பரப்ப முயலும் செய்கைகள்.

இவரால் அமெரிக்காவை மீண்டும் தட்டி எழுப்ப முடியுமா என்றால், முதலில் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று ஒத்துக் கொள்ள வேண்டும். பிறகுதான் மீண்டும் எழுப்புவதைப் பற்றிப் பேச முடியும் இல்லையா?

அனேக அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்றுதான் கருத்து, ஆனால் எப்படி, எப்போதிலிருந்து, எத்தனை தூரம் என்பதெல்லாம் யாரும் ஒரே முடிவுக்கு வரவியலாத புதிர்களாகவே உள்ளவை. வீழ்ந்து விட்டதாகக் கருதும் அமெரிக்கர்களிலும் பெரும்பான்மை அது ஒரு மாயத் தோற்றம், உள்ளடக்கத்தில் அமெரிக்காதான் இன்னும் உலகப்பெரும் சக்தி என்றும் ஒரு அகம்பாவக் கருத்து உண்டு. இதற்கு எதிராக அமெரிக்கா வீழவில்லை, மாறாக அதன் வளங்களை எல்லாம் ஒரு சிறு கூட்டம் சதி செய்து தன்கையகப்படுத்தி விட்டு, 99% மக்களை ஓட்டாண்டிகளாக்கி வைத்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இந்தத் தேர்தல் மக்களிடம் கேட்ட கேள்விகளுக்கு மக்களின் விடை, நாங்கள் அந்த 1% கொள்ளையரைத்தான் நம்புகிறோம் என்பது. ட்ரம்ப் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் பிரதான உறுப்பினர் என்று சொல்லப்பட முடியாதவர். ஆனால் அவர்களுக்குக் கடன் / உடன்பட்டவராகத்தான் இருக்கக் கூடியவர்.

நிதர்சனப் பார்வை ஒன்று கொண்டு நோக்கினால் இவரால் அமெரிக்காவை மீண்டும் உலகப் பெரும் சக்தியாக ஆக்க முடியாது என்றுதான் ஒத்துக் கொள்ள வேண்டி வரும். அது பற்றி இன்னொரு கட்டுரையில்தான் பார்க்க வேண்டும்.

உலகமயமாதலை உலகெங்கும் பரப்பித் தான் அந்த வைக்கோல் போரின் மீது நின்று குரைக்கும் நாயாக இருக்க ஆசைப்பட்ட நாடு அமெரிக்கா. அதன் ஆசைகள் நிராசையாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிராசையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கப் பாட்டாளிகளும், சிறுபான்மை மக்களும்தான். குறிப்பாக விவசாயக் கூலிகளும், பெருநகரக் கூலி வேலைக்காரர்களும்  தம் உழைப்பின் மதிப்பைப் பெறுவதற்குப் பெரும் பாடுபடும் கட்டத்தில் இருக்கின்றனர். ஆனால் இதே மக்களில் கணிசமானவர்கள் தம் வெள்ளை இன அடையாளத்தின் உந்துதலால் ட்ரம்பின் பின்னே செல்பவராகவும் இருக்கின்றனர்.

எதிரெதிர் கருத்துகளை ஒரே நேரம் கொள்ளக் கூடியவர்கள் மனிதர்கள் என்று உளவியலாளர்களும், சாதாரண மக்களும் எளிதாகவே ஒத்துக் கொள்வார்கள். அமெரிக்கர்கள் உலக மக்களே போன்றவர்கள் என்பது இந்த வகை நடத்தையால் உடனே தெரியும். அவர்கள் தொடர்ந்து பல மாநிலங்களிலும் தாம் விரும்புவதை நடக்க விடாமல் எந்த அரசியலாளர்கள் செய்வார்களோ அவர்களுக்கே வாக்களித்து விட்டு, மாயாஜாலம் நடந்து தம் நிலைமை முன்னேறும் என்று நம்புகிற பேதைகளாகத் தெரிகிறார்கள். இந்த விஷயத்தில் தமிழக மக்களும் அமெரிக்கர்களும் அதிகம் வேறுபட்டவர்கள் இல்லை.

~oOo~

ஊரெல்லாம் ஒன்று சொன்னால் அதற்கு ஏறுமாறாக ஏதும் சொல்லாவிட்டால் நாம் எதற்கு, நம்மை யார் மதிப்பார்கள் என்று எண்ணும் மனிதர்களின் அடையாளப் பெயர் சிந்தனாவாதி என்பது. சிந்தனை என்பதே யாரோடும் ஒத்துப் போகாமல் தனித்து நிற்பது என்று ஒரு கேலிச் சித்திரம் நம்மிடையே புழங்குகிறது. அது ஓரளவுதான் உண்மை. ஏராளமான சிந்தனையாளர்கள் ஊரோடு புழங்கி, தம் சிந்தனையை ஒளித்துப் பதுங்கிச் செல்வதுதான் தம் பிழைப்புக்கு நல்லது என்று நினைப்பவர்கள்தான். சிந்திப்பது என்பதே பிழைப்புக்குச் சுலபமான மாற்று வழிகளைக் காண்பதுதான் என்று தமிழகத்தில் பலர் நினைக்கிறார்கள்- இவர்களில் பலரும் ‘சிந்தனையாளர்கள்’ என்று சுவரொட்டிகளில் இருந்து மாநாட்டு விளம்பரங்கள் வரை தம்மைப் பெரும் எழுத்துகளில் சித்திரித்துக் கொள்வதை விரும்பும் பெருமகன்கள்.

இதே போன்றவர்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. இதில் அமெரிக்கரோ, தமிழரோ மட்டும் தனித்துவம் கொண்டவர்கள் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் பெருமையும் கீழ்மையும் அருகருகே இருக்கின்றன, பெருமை என்பது பொதுவாக அடங்கி இருப்போரிடம் அதிகமும், கீழ்மை என்பது ஆர்ப்பரிப்பையே நம்பிப் பிழைப்பவரிடமும் நிறைய காணப்படும். இதிலும் எல்லாப் பண்பாடுகளும் ஒரே போலத்தான் உள்ளவை. வெளிப்பாட்டு வடிவங்களில் வேறுபாடுகள் இருக்கலாம், அது அந்தந்ந்த நாடுகளின் அரசு/ நிர்வாக அமைப்புகள் ஏற்படுத்தி வைத்த கட்டுப்பாடுகள், சட்டகங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பு.

அமெரிக்க அரசியலில் தெருக்களில் சுவரொட்டிகளும், பெரும் பொதுக் கூட்டங்களும் அனேகமாகக் காணப்படுவதில்லை. இது போன்ற சில அமைப்பு சார் ‘ஒழுங்குபடுத்துதல்’ நிறைந்த அமெரிக்க அரசியல் தமிழக அரசியல் அளவு கேவலங்களும், கீழ்மைகளும் இல்லாதது என்று வாதிடும் அறிவு ஜீவிகளை நாம் உலக வலையில் பார்க்க முடியும். இவர்கள் பெரும்பாலும் யூரோப்பியத்தின் ஜால்ராக்கள் என்று நாம் ஒதுக்கி விடலாம். அமெரிக்கச் சிறப்பு குணங்கள் என்று வருணிக்கப்படும் சிலவற்றை அமெரிக்கர்களில் கணிசமானவர்கள் இன்னமும் நம்புகிறார்கள். அந்த மயக்கங்கள் வந்தேறிகள் சிலரிடமும் தொற்றுவதை நாம் எதிர்பார்க்கலாம். அன்னமிட்ட கையைக் கடிக்கலாமா?

நேற்று அமெரிக்க அதிபரான ட்ரம்ப் இவர்களின் இத்தனை கால ஜல்லியை ஒரு வருடத்தில் பல்லிளிக்கச் செய்து விட்டாரென்பது இந்த அதிபர் தேர்தலை நன்கு கவனிப்பவர் எவருக்கும் புரிந்திருக்கும். பெரும் உலகச் சக்தி என்று இறுமாப்புடன் உலவிய அமெரிக்க அரசதிகாரிகள், அரசியல்வாதிகளின் பகட்டையும் இந்தத் தேர்தல் ஒரே வருடத்தில், இல்லை, சில மாதங்களிலேயே, காற்றுப் போன பலூனாகச் சுருக்கி விட்டது. பெரும் சரிவில் பல பத்தாண்டுகளாக இருந்த ரஷ்யச் சர்வாதிகார அரசு அமெரிக்க அரசியலில் நுட்பமான முறைகளில் ஊடுருவி அமெரிக்க அரசியல்வாதிகளை அலறடித்து விட்டது என்று அமெரிக்கர்களும், அமெரிக்க ஊடகங்களும், அமெரிக்க அரசின் உளவு நிறுவனங்களும் ஓலமிடத் துவங்கி இருப்பது இது ஏதோ ஒரு விதத்தில் நடத்தப்பட்ட சதி வேலை என்று அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களையே நம்பச் செய்கிறது.

ட்ரம்ப் எத்தனை தூரம் அசாதாரணமான வெற்றி பெற்றவர் என்ற ஒரு கேள்வி இப்போது நம் முன் நிற்கிறது. அமெரிக்க ’முற்போக்கு’ முகாம்கள் இந்த அதிபர் தேர்தலில் தம் வேட்பாளரான ஹிலரி க்ளிண்டனே வெல்லப் போகிறார் என்று உறுதிப்பாடு கொண்டிருக்கையில் கடைசி நேர ஓட்டத்தில் திடீரென முந்தும் எதிர்பாராத குதிரையாக ட்ரம்ப் இருந்த தேர்தல் அது. அது ஒன்றே இதை அசாதாரணமான வெற்றியாக்குமா என்றால் இல்லை. வெள்ளை இனவெறியின் பிரதிநிதி வெல்வது அமெரிக்க அரசியலில் சகஜ நிகழ்ச்சி. அது நடக்காவிட்டால்தான் அது செய்தியாக வேண்டிய நிலை என்பது, அமெரிக்காவில் பல பத்தாண்டுகளாக நிலவுவதுதான்.

அப்படித்தான் முந்தைய அதிபரான ஒபாமாவின் வெற்றி ஒரு அதிசய நிகழ்வாக இருந்தது. ஹிலரி வெற்றி பெற்றிருந்தால் அது ஓரளவு அதிசயமாக இருந்திருக்கும். பெண் ஒருத்தர் அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளராகப் பல நூற்றாண்டுகளில் ஒரு தடவை கூட நிற்க முடிந்ததில்லை. அவர் வெல்வது நிச்சயம் அசாதாரணமாக இருந்திருக்கும்.

இருந்தாலும் அறிவுஜீவிகளுக்குத் தம் சமூக இருப்புக்கு ஏதாவது நியாயம் கற்பிக்க வேண்டும் என்ற அரிப்பு போகவே போகாது. நடப்பு எதையும் தம்மில் ஒருத்தர் பன்னெடுங்காலம் முன்பே ஊகித்தறிந்து விட்டிருந்தார் என்று காட்டிக் கொள்வது அறிவுஜீவிக் கூட்டத்தின் முக்கிய குணாதிசயம். இதில் அவர்கள் ஜோஸ்யர்கள், மதகுருமார்கள், சாமியார்கள் போன்ற பல சமூக ஒட்டுண்ணிகளின் கூட்டத்தில் சேர்ந்தே காணப்பட வேண்டியவர்கள். அவர்களைப் போலவே இந்த அறிவுஜீவிகளின் செயல்பாடும் அனேகமாக சமூக இயக்கத்துக்கோ, நடப்புக்கோ ஒரு புண்ணாக்குக்கும் பயனற்றதாகவே இருப்பதையும் நாம் காண முடியும். ஆனால் சமூகம் என்ற செங்கல் அடுக்கு தம் சிந்தனைப் பிசினாலேயே இறுகலாக, உடைக்கப்பட முடியாததாக நிற்கிறது என்ற சுய மயக்கம் நிரம்பிய மனிதர்கள் இந்த அறிவுஜீவிகள்.

அரசியலிலேயே ஊறி அதையே பிழைப்பாகக் கொண்டவர்களை விடத் தமக்கே அரசியல் நிகழ்வுகளின் நிஜம் புரியும் என்று நம்பாத அறிவு ஜீவிகளையோ, துறை வல்லுநர்களையோ காண்பது அரிது. இவர்களின் பன்னெடுங்கால ஊக முடிவுகள் அனேகமாக எப்போதும் தோற்றவையாகவே இருக்கின்றன என்பதெல்லாம் இவர்களின் தன்னம்பிக்கையை முறியடிப்பதே இல்லை. அந்த விதத்தில் இவர்களும் அரசியலாளர்களே போன்றவர்கள்.

இப்படி ஒரு அறிவு ஜீவி அமெரிக்காவிலும் இருந்திருக்கிறார். அவர் காலஞ்சென்ற ரிச்சர்ட் ரார்டி என்ற பல்கலைத் தத்துவாளர். இவருடைய சிந்தனை வளத்தை வாசகர்களுக்குக் கொடுக்க முயலப்போவதில்லை, அச்சப்பட வேண்டாம். ஆனால் இந்த அமெரிக்கத் தேர்தலின் விளைவை இவர் பல பத்தாண்டுகள் முன்னரே ஊகித்து விட்டார் என்றும், அப்போது இவர் எழுதியது எத்தனை தூரம் நபித்தனமான ஊகம் என்றும் சுட்டும் ஒரு கட்டுரையை அமெரிக்க ‘சிந்தனை’யை வளர்ப்பவர்களுக்கான பத்திரிகையாகத் தன்னை நினைத்துக் கொள்ளும் நியுயார்க்கர்  பிரசுரித்திருக்கிறது.

கட்டுரை சிறியதுதான் என்பதால் அதற்குச் சுருக்கக் குறிப்பு தரப்போவதில்லை. ஆனால் அமெரிக்க ‘இடது’ சாரி/ முற்போக்கு இயக்கங்களும், சிந்தனையாளரும் எத்தனை தூரம் சுயமயக்கங்களில் சிக்கி வரலாற்றுப் போக்கை அறியவோ, கவனிக்கவோ தவறினர் என்பதை ரார்ட்டியின் புத்தகம் ஒன்று 1998 இலேயே சொல்லி விட்டது என்று சொல்லி நியுயார்க்கர் மிகவுமே மகிழ்கிறது. இதைத்தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று நம் தமிழ் சமூகம் சொல்லும். [வேல் என்றால் என்ன என்று நம்மில் பலருக்கு விளக்க வேண்டி இருக்கலாம், அது காலத்தின் கோலம். ]

ரார்ட்டி சொன்னதில் ஒரு கருத்து கவனிக்கத் தக்கது என்று மட்டும் சொல்ல வேண்டி இருக்கிறது. தற்காலிக வெற்றிகளை மட்டுமே துரத்தத் துவங்கிய அமெரிக்க இடது, (இந்திய இடது சாரிகளைப் போலவே) அடையாள அரசியல் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் பெரும் சமூக மாறுதல்களை நிகழ்த்தி விடலாம் என்று  கனாக் கண்டு முதல் நடவடிக்கையாக பல்கலைகளைக் கைப்பற்ற பெருமுயற்சி செய்து அதில் அனேகமாக வெற்றியும் கண்டு விட்டது. [இது இந்தியாவிலும் நடந்திருப்பதுதான். ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒரு வேறுபாடு, இந்திய இடதுசாரிகளும் முற்போக்குகளும் ஊடகங்களிலும் கணிசமான ஆதிக்கம் செலுத்துகின்றனர். அமெரிக்காவில் வலதுசாரி ஊடகங்களுக்கு இருக்கும் சூப்பர் வலு இடது சாரி ஊடகங்களுக்கு இல்லை, இடது சாரியினருக்கும் அப்படி ஒரு பொது ஜனத் தாக்கம் இல்லை. ] இந்த மெலிவைத்தான் குறிவைத்து ரார்ட்டி தன் புத்தகத்தில் தாக்கி உள்ளார். அமெரிக்கப் பாட்டாளி மக்களின் நலன்களைப் பின்னே தள்ளி, அடையாள அரசியலின் சில சலுகைகளை மட்டுமே துரத்தியதால் தம்மை அமெரிக்கப் பாட்டாளிகளிடமிருந்து மிகவும் அன்னியப்படுத்திக் கொண்டவை இந்த இடதுசாரி இயக்கங்கள் என்று ரார்ட்டி கருதுகிறார் போலத் தெரிகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு மாற்று முகம் கொடுக்க மட்டும் அமெரிக்க முற்போக்காளர் உதவினர் என்பது இன்று நமக்குத் தெரியும்.

அதற்கு மாறாக இந்திய முற்போக்காளர்கள் சாதித்தது எல்லாம் இந்தியாவையும், இந்திய மக்களின் பாரம்பரியம், சமூகம் ஆகியவற்றையும் இழிவாகச் சித்திரித்து அமெரிக்கர், யூரோப்பியர் ஆகியோரிடம் அதற்குப் பாராட்டையும் வெகுமதிகளையும் சம்பாதித்தது ஒன்றுதான். உள்நாட்டில் ஃபாசிஸ்டுகள் என்று அவர்களே கருதும் அரசியலாளர்கள் சுலபமாக இவர்களைத் தம் ஜால்ராக்களாகவும், தம் முன் கைகட்டி நிற்கும் ஏவலர்களாகவும் மாற்றி விட்டனர். இவர்களை விடப் பன்மடங்கு சூட்சுமமாக அடையாள அரசியல் நாடகங்களை நடத்துபவர்கள் இந்த ‘முற்போக்கு’ முலாம் பூசிய ‘ஃபாசிஸ்டுகள்.’ நிஜ முற்போக்குகள் இவர்கள் முன் வெறும் பப்படம்.

அமெரிக்காவில் அப்படி அரசியல்வாதிகள் அந்தப் புரட்சி சிந்தனையாளர்களை மாற்றத் தேவை இருக்கவில்லை. அவர்களே தம்மை அப்படித்தான் கட்டுப்படுத்திக் கொண்டு இயங்குகின்றனர். அந்த விதத்தில் அமெரிக்க அறிவு ஜீவிகளுக்கு எதார்த்தத்தில் ரொட்டியின் எந்தப் பக்கத்தில் வெண்ணெய் இருக்கிறது என்பது நன்கு தெரியும். அதைக் கை தவற விட மாட்டார்கள். 🙂

சுவரொட்டி அனுமதிக்கப்படாத, பொதுக்கூட்டங்களை எளிதில் கூட்ட முடியாத வகைத்  தேர்தல் கொண்ட நாட்டில் தொலைக்காட்சி ஊடகங்களும், இன்று சமூக ஊடகங்களும் கருத்து வெளியில் ஆட்சி செய்கின்றன. அமெரிக்க சிந்தனையாள முற்போக்குகள் இந்த வெளிகளில் உலவி ஆட்சி செய்ய முயன்று பரிதாபகரமாகத் தோற்றிருப்பதை சமீபத்து அமெரிக்க அதிபர் தேர்தல் மறுமொரு தடவை நிரூபித்தது.

அத்தேர்தலில் எப்போதும்போல பொய்களும், அண்டப்புளுகுகளும், தொடர்ந்த இழி பிரச்சாரமும், இனவெறித் தூண்டல்களும், திசை திருப்பல்களும்தான் பொதுவெளியை ஆக்கிரமித்தன. இவற்றில் நிரம்பப் பயிற்சி கொண்ட அரசியல்வாதிகள் முன்பு பல்கலைச் சிந்தனையாளர்கள் எம்மாத்திரம்?

ஆனாலும் ரார்ட்டி கொடுத்த எச்சரிக்கைக்குக் கொஞ்சமாவது பயன் இருக்கிறது. அது என்னவென்று கட்டுரையைப் படித்தால்தான் புலப்படும். துன்பப்பட்டாவது அதைப் படிக்க உங்களைத் தூண்டுகிறோம். கட்டுரையாளர் மெட்காஃப் ஒரு சிந்தனையாளர் என்பதால் அவருக்கும் தாம் சொல்வதன் விளைவு என்ன, இந்தச் சிக்கலுக்கு என்ன விடை என்பதெல்லாம் தெரியவில்லை என்பதையும் முன்னரே சொல்லி வைக்கிறோம். விடைகளைக் காண நாம் சிந்தனையாளர்களிடம் போவதில்லை, கேள்விகளைச் சரியாகக் கேட்க உதவியாக இருப்பார்கள் என்றுதான் நாம் அவர்களிடம் செல்கிறோம் என்று ஜான் ப்ராக்மான் என்ற (வேறு யாராக இருக்க முடியும்?) சிந்தனையாளர் தான் பதிப்பித்த ஒரு புத்தகத்தின் முன்னுரையிலும், அதே புத்தகத்துக்கு எழுதப்பட்ட இன்னொரு முன்னுரையின் ஆசிரியரான இயன் மகெவனும் நமக்குத் தெரிவிக்கிறார்கள். புத்தகத்தின் தலைப்பே சற்று வினோதமானது. ‘வாட் வி பிலீவ் பட் கேன்னாட் ப்ரூவ்?’ (What We Believe but Cannot Prove: Today’s Leading Thinkers on Science in the Age of Certainty (Edge Question Series): John Brockman) என்ற புத்தகம் இது. சமீபத்துப் புத்தகக் கண்காட்சியில் சென்னையில் கிட்டியது. இதையும் படித்துப் பாருங்கள் என்று ஒரு யோசனை சொல்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.