kamagra paypal


முகப்பு » அனுபவம், அரசியல், உலக அரசியல்

க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்  (பகுதி – 2)

ஹோல்கின் (Holguin)

க்யூபாவின் குறுக்கே தொடர்ந்த எங்களது நெடியபயணத்தில், நாட்டின் சில முக்கிய நகர்களுக்கிடையே பயணித்து மாலையில் ஹோல்கின் (Holguin) என்கிற சிறு நகருக்கு  வந்துசேர்ந்தோம். அங்குள்ள அரசு ஹோட்டல் ஒன்றில், இரவுக்காகத் தங்கினோம். சாலைகள் நன்றாக இருந்தபோதிலும், ஜீப்பில் மணிக்கணக்காக உட்கார்ந்தே வந்ததால் சோர்ந்திருந்தோம். இரவில் எங்கும் செல்லவில்லை. சாப்பிட்டுப் படுத்துவிட்டோம்.

அடுத்த நாள் எங்களோடு ஹோட்டலில் உட்கார்ந்து காலைஉணவு சாப்பிட, எங்களோடு வந்திருந்த க்யூப மொழிபெயர்ப்பாளரை அழைத்தோம். அவரும் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் அவர் க்யூபன் என அறிந்ததும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்! நாங்கள் குறுக்கிட்டுப் பேசியும் பிரயோஜனமில்லை. அவர் வெளியேறி வேறெங்கோ போய் சாப்பிடுமாறு ஆயிற்று. க்யூபாவின் வெளிஉலகுக்குத் தெரியாத  ரகசி்ய முகங்களில் இதுவும் ஒன்று. ஹோல்கின் நகரில் அநேக சிறு பூங்காக்கள், அறிவியல், சரித்திர மியூசியங்கள் உள்ளன. சிறிய விமான நிலையமும் இந்நகரில் இருக்கிறது. ஹவானா மற்றும் மற்ற நகர்களுக்கு இங்கிருந்து செல்லும், பழைய ரஷ்ய சிறுவிமானங்களில் பயணிக்கலாம். இந்த நகரில் இன்னொரு சிறப்பு இங்கு பேஸ்பால் ஸ்டேடியம் (Baseball stadium) ஒன்றும் உள்ளது. க்யூபாவில் பேஸ்பால், இந்தியாவில் கிரிக்கெட் மாதிரி!

havana_cuba_hotel_seville_view

சாந்த்தியாகோ த க்யூபா (Santiago de Cuba)

க்யூபாவின் சாந்த்தியாகோ  என அழைக்கப்படுகிறது இந்நகரம்.(ஏனெனில், இன்னொரு சாந்த்தியாகோ-வும் இருக்கிறது. அது தென்னமெரிக்காவில், சிலே (Chile) நாட்டின் தலைநகரம்). ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தின் படைப்புகளில் ஒன்றான இது,  தலைநகர் ஹவானாவிலிருந்து சுமார் 830 கி.மீ.தொலைவில், கரீபியக்கடலின் வளைகுடாப் பகுதியைப் பார்த்துப் பரந்திருக்கிறது. இங்கு அடுத்த நாள் காலையில் வந்து சேர்ந்ததும் வித்தியாசமாய் உணர்ந்தேன். இங்கும் ஜனத்தொகை அதிகம் இல்லை. ஆயினும் நகரின் சாலைகள் அகன்று கம்பீரமாகக் காட்சியளித்தன.  பெரிய டூரிஸ்ட் பஸ்கள்(சீன அன்பளிப்பு) ஆங்காங்கே செல்வதைக் காணமுடிந்தது. சிறிய சக்கரங்களுடன் சைக்கிள் ரிக்‌ஷாக்களும்  டூரிஸ்ட்டுகளுக்காக அங்கும் இங்கும் அலைந்தன. க்யூபாவின் பழைய தலைநகரங்களில் ஒன்றாக, சாந்த்தியாகோ இருந்திருக்கிறது. இந்த நகரின் புரட்சித் தலைவனான ஃப்ராங்க் பாயிஸ் (Frank Pais) க்யூபப் புரட்சிக்காக சிறப்புப்பணி ஆற்றியவர். இளைஞர்களிடையே தொடர்ந்து பேசி பத்திஸ்த்தாவின் அரசுக்கெதிராக, ஆள் சேர்த்து, ஆயுத, மருந்து சப்ளைக்கான ஏற்பாடுகள் செய்து காஸ்ட்ரோவின் புரட்சிக்கனவு பலிக்க காரணமான சரித்திரப்புள்ளி. ஜனவரி 1, 1959-ல் சாந்த்தியாகோவிலிருந்துதான் க்யூபப் புரட்சியாளர்களின் வெற்றியை  உலகுக்கு அறிவித்தார் ஃபிடெல் காஸ்ட்ரோ.

குவந்தானமோ / பரக்கோவா (Guantanamo /Baracoa)

க்யூபாவின் கிழக்குக்கோடிக்கு, குவந்தானமோ மாநிலத்திற்கு வந்து சேர்ந்ததும் ஒருவித உற்சாகம் மனதை அள்ளிக்கொண்டது. அந்தப் பிரதேசமே ஒரு மாய உலகம் போன்றது. பசுமையான காடுகள், வயல்வெளி. பனை, தென்னை மரங்களோடு, கோக்கோ மரங்கள், வாழைகள் என எங்கும் கரும்பச்சை; ஒரே இயற்கைச் செழிப்பு. நாட்டின் 70 சதவிகித கோக்கோ உற்பத்தி இந்தப்பகுதியில்தான் என்றார்கள்.  29 சிறு ஆறுகள் அங்குமிங்குமாக ஓடுவதால் எப்போதும் குளிர்ந்திருக்கும் பூமி.

இந்த மாநிலத்தில்தான் வருகிறது க்யூபாவின் அசத்தலான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பரக்கோவா எனும் ஊர். புதியதொரு உலகைத் தேடித்திரிந்த உலகப்புகழ்பெற்ற மேற்கத்திய மாலுமியான க்றிஸ்டோஃபர் கொலம்பஸ், பஹாமா தீவுகளிலிருந்து பயணித்து, 1492—ல் க்யூபாவின் பரக்கோவா பகுதியில் வந்திறங்கினார்;  இதன் அழகைக்கண்டு சொக்கிப்போனார். `இந்த உலகில் இப்படி ஒரு அழகைத்தான் இதற்குமுன் கண்டதில்லை; பூமியின் காணக்கிடைக்காத அதிசயப் பிரதேசம் இது!` எனத் தன் பிரமிப்பை டையரிக்குறிப்புகளில் காட்டியிருக்கிறார் கொலம்பஸ். கொலம்பஸின் வருகைக்கு முன்காலத்தில் ஒரு கோர சம்பவம் நடந்திருக்கிறது இங்கே. ஸ்பெயின் காலனிய ஆதிக்கவாதிகளால், இங்கு அப்போதிருந்த தைய்னோக்கள் (Tainos) என அழைக்கப்பட்ட பழங்குடிகள் தாக்கப்பட்டு கூண்டோடு அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டு நொந்துபோனேன். ஆனால் சரித்திரக்குறிப்புகளில், ஏதோ ஒரு பேர் தெரியாத வியாதியினால் பீடிக்கப்பட்டு, அந்த இனம் அழிந்துபோனதாகக் கதை கட்டியிருக்கிறார்கள், மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். இப்படி உலக சரித்திரத்தில் இன்னும் எத்தனை, எத்தனை அண்டப்புளுகுகளோ, யார் கண்டது!

நீலப்பச்சைக் கடலை ஒட்டிய பரக்கோவாவின் பூங்காவில், கொலம்பஸின் மார்பளவு பெரிய சிலை ஒன்று கண்டு அதிசயித்தோம். வெளிநாட்டவர் சிலர் ஏற்கனவே அங்கு வந்து புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.  பெரும்பாலும் கனடிய, ஐரோப்பிய டூரிஸ்ட்டுகள். அமெரிக்கர்கள் வர அனுமதியில்லாத காலமது. சிலையின் முன் சென்று அந்த இடத்தின் இனந்தெரியாத அழகையும், காலங்கடந்த அமைதியையும் உள்வாங்கி நின்றேன். கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கொலம்பஸ், நிஜமாகவே அங்கு நிற்பதாய்த் தோன்றியது ஒருகணம் எனக்கு. சிலைக்கு இருமருங்கிலும் நின்று படம் எடுத்துக்கொண்டோம். கொலம்பஸையே தன் மீது ஏற்றிவந்து இந்தப் பிராந்தியத்தின் சொக்கும் அழகைக் காணவைத்த நீலப்பெருங்கடலை ஆசையோடு, வியப்போடு பார்த்தேன். எண்ண அலைகளில் மனதை மோதவிட்டு,  நேரம்போவது தெரியாமல் நிற்கலாம் போலிருந்தது.

cubamapwithcities

அங்கிருந்து எங்களது ஜீப்பில் குவந்தானமோ நகர் நோக்கி, நாட்டின் தென்கிழக்குக் கோடிக்குப் பயணித்தோம். அதிக தூரமில்லை. எங்கள் டிரைவர் ரஃபேல் லெர்ரோ. `ரஃபா!` என்று செல்லமாக அழைப்போம். சுவாரஸ்யமான இளைஞர். எங்களது பார்ட்டிகளில் `ரோன்` அடித்துவிட்டு அழகாகப் பாடுவார். ஆடுவார். க்யூபாவின் தேசபக்திப் பாடல்களில் ஒன்றான “குவந்தானமேரா குவாஜிரா…!“ எனப் பாடிக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டுவந்தார். “குவந்தானமோவின் கிராமத்துப் பெண் நான்..! “ எனப் பெருமையாக பெண் ஒருத்தி பாடி, ஆடிச் செல்வதாக அமைந்த பாடல். க்யூப தேசத்தவர்களுக்கு மிகவும் பிடித்த நாட்டுப்பாடல். ரஃபா பாட ஆரம்பித்தால் போதும். அவரது உடம்பு தன்னாலே சால்ஸா ஆடும்! வண்டி என்னவோ ஆடாமல் ஓடிக்கொண்டிருந்தது. திருப்தி.

போகிற வழியெல்லாம், பனை, கோக்கோ மரங்கள். வழக்கம்போல் சாலைகளில் ஆளில்லை. குவந்தானமோவை நெருங்குகையில், நாங்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப,  எங்கள் ஜீப் மெதுவாகச் சென்றது. கசங்கிய துணி அணிந்த ஒரு சில இளைஞர்கள் கழுதைகளில் சாலை ஓரமாகப் பயணிப்பதைப் பார்த்தேன். மக்களுக்கு பஸ், வாகனப் ப்ராப்தியில்லை. கழுதைப்பயணம் அல்லது கால்நடைப்பயணம். கொடுமை. 60 ஆண்டு சோஷலிச ஆட்சியின், புரட்சி ஆட்சியின் சமூக விளைவு. சற்று தொலைவு சென்றபின், திடீரென எதிரே கரும்பச்சையில் பெரிது பெரிதாக ஏதோ வருவதைக் கண்டு குழம்பினேன். நெருங்கியபின்தான் தெரிந்தது. மிலிட்டரி ட்ரக்குகள். க்யூபாவுக்கு சீனாவின் சப்ளை! (லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழ்மையையும், இயற்கை வளத்தையும் தனக்கேற்றாற்போல் பயன்படுத்தி கூத்தடித்து வருகிறது சீனா. கேட்பார் இல்லை).

ஹவானாவிலிருந்து சுமார் 875 கி.மீ. தூரத்தில் இருக்கும் குவந்தானமோ மாநிலத்தின் ஒரு சிறிய முனிசிப்பல் நகர் குவந்தானமோ. அங்கு இறங்கி சுற்றுமுற்றும் அதிசயமாய்ப் பார்த்தோம். அரைகுறை ஆடையோடு, அலட்டிக்கொள்ளாமல் நின்றிருந்த இளம் ஆண்கள், பெண்கள் வேற்று தேசத்தவரான எங்களை ஆச்சரியத்தோடு நோக்கினார்கள். எதற்காக உடம்பெல்லாம் இவ்வளவு துணியை இவர்கள் சுற்றியிருக்கிறார்கள் ! – என்று அவர்கள் எங்களைப்பற்றி நினைத்திருப்பார்கள். 18-20 வயது இளம்பெண்கள் சிறிய மார்புக்கச்சை, ஒரு பழைய ஷார்ட்ஸ் போன்ற ஒன்றை அணிந்திருந்தார்கள். இளைஞர்கள் அரை ட்ரவுசர்களைத்தவிர வெற்றுடம்போடுதான் இருந்தார்கள். கோக்கோவின் அதீத விளைச்சலினால் அங்கு வீடுகளில் குடிசைத்தொழில்போல் சாக்கலேட் செய்கிறார்கள். அவற்றை சிறிய பாக்கெட்டுகளில் டூரிஸ்ட்டுகளுக்கு அந்த ஊர் இளைஞர்கள் விற்றார்கள்.  ஒரு சி.யூ.சி (Cuban Convertible Currency) விலை. அரை சி.யூ.சி காசைக் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டார்கள். அவ்வளவு எளிமை, ஏழ்மை. அவர்கள் பேசும் மொழியும் ஹவானாவில் பேசும் க்யூபன் –ஸ்பானிஷ் இல்லை. பெரும்பாலும் சைகையில் சம்பாஷித்தோம். அமைதியான நட்பான ஜனங்கள். கடற்கரைப்பகுதியில்  உலகிலேயே மிகவும் சிறியவகை அதிசயத் தவளைகள், ஆரஞ்சு நிறக் குட்டி நண்டுகள் ஆகியவற்றை எங்களுக்கு அந்த ஊர் இளைஞர்கள் காண்பித்தார்கள். அந்தப் பிரதேசத்தின் விசேஷங்களில் ஒன்றாம் இது.

க்யூப குவந்தானமோவிலிருந்து 15 கிமீ. தூரத்தில் இருக்கிறது குவந்தானமோ அமெரிக்க கடற்படைத்தளம். அருகிலேயே world’s most notorious detention centre என வர்ணிக்கப்படும் குவந்தானமோ உயர்பாதுகாப்பு சிறைக்கூடம். ஈராக், ஆப்கன் போர்களில் பிடிபட்ட அல்குவைதா மற்றும் ஏனைய தீவிரவாதிகள், ஈராக்கிய வீரர்களை சித்திரவதை செய்த, சர்ச்சையில் மாட்டிய அமெரிக்க சிறைச்சாலை இதுதான். 1903-ல் ஆட்சிசெய்த க்யூப அரசாங்கத்தினால், க்யூப-அமெரிக்க உறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்கு குத்தகையில்  தாரைவார்க்கப்பட்ட பகுதி. இன்னமும் அமெரிக்க வசமே இருக்கிறது. நாங்கள் நின்றிருந்த க்யூபப் பகுதியிலிருந்தே அமெரிக்க கடற்படைத்தளக் கட்டிடங்களை எங்களுக்கு க்யூப நாட்டவர் காட்டினார்கள். அந்தப் பக்கம் போய்ப் பார்க்க டூரிஸ்ட்டுகளுக்கு அனுமதி இல்லை.

என் மூன்று வருட க்யூப நாட்டு வாழ்வனுபவங்கள், இதற்குமுன் அந்த நாட்டைப்பற்றி இதற்குமுன் படித்திராத, கேள்விப்படாத  சில சங்கதிகளை முன்வைத்தன. சமத்துவம் என்கிற பெயரில் காஸ்ட்ரோவின் புரட்சி/சோஷலிச அரசு, அப்பாவி மக்களின் மீது சுமத்தியிருந்த அதீதக் கட்டுப்பாடுகள், கிடுக்கிப்பிடி நெருக்கல்கள் ஆகியவை கண்ணெதிரே தெரிந்ததால் மனதிற்குப் பெரும் வருத்தம் தந்தது. பொருளாதாரம் என்றால் என்னவென்றே அறிந்திராத அப்பாவி க்யூப மக்கள், படிப்பிற்குப்பின் என்ன செய்வதென அறியாது விழிக்கும் இளைய தலைமுறை என ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சமூகமே, வேலைவாய்ப்பின்றி அலைந்து திரிகின்றது.  வாய்திறந்து ஏதும் சொல்ல, செய்ய வழியின்றி, நமது விதி இதுதான் என்பதாக ஒரு நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ஜனங்கள். முன்னாள் சோவியத் யூனியனின் பெரும் பொருளாதார, நிதி உதவிகள் நின்றபின், க்யூபாவின் உயிர்நாடியே திணறியது; க்யூப மக்களின் வாழ்வு நவீன உலகில் காணச்சகிக்காத ஒரு அவலமானது. அங்கேயே தங்கி அவர்களுடனேயே க்யூப சரித்திரத்தின் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் வாழநேர்ந்ததால்,  உள்ளிருந்து நான் கண்ட காட்சிகள், நாட்டு நடப்புகள் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

Giant Lenin head, Parque Lenin, Havana

நிதி நெருக்கடியும் பாரபட்சபோக்குகளும்

க்யூபாவுக்குள் நுழைந்ததும் முதலில் தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட்டது க்யூபா இரட்டைச் செலாவணி அதாவது இரண்டுவகை கரன்சி நோட்டுகளை அனுமதித்துள்ள அபூர்வ நாடு என்பது. இதில் என்ன விசேஷம் என்றா அப்பாவித்தனமாக கேட்கிறீர்கள்? இருக்கிறது. அமெரிக்க பொருளாதார, பயணத் தடைகளினால் கிட்டத்தட்ட ஒரு அரை நூற்றாண்டுகாலமாக வெளி உலக சம்பந்தமின்றி,  க்யூப மக்கள் வாழ நேர்ந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப்பின்னோ நிலைமை படு மோசம். அமெரிக்காவோடு இடையறாது  வறட்டுவம்புசெய்துகொண்டிருந்த க்யூபாவுக்கு, ஐரோப்பிய நாடுகளும் உதவுவதாக இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டிய அந்நிய உதவி, டாலர் வரத்து நின்றுபோய் பலவருடங்கள் ஆகிவிட்டன. மக்களை விட்டுத்தள்ளுங்கள். க்யூப அரசாங்க நிர்வாக ஆட்டபாட்டங்களுக்கே போதுமான அந்நியச்செலாவணி கிட்டியில் இல்லை. இந்நிலையில்தான் வெளிநாட்டுக் கரன்சிகளோடு க்யூபாவில் மாற்றத்தக்க ஒரு க்யூபன் கரன்சி நோட்டு- சியூசி (CUC-Cuban convertible currency) அரசினால் அறிமுகப்படுத்தப்ட்டது. ஸ்பெயின் நாட்டு காலனிய ஆதிக்கக்காரர்களுக்கெதிராக, க்யூபப் போராட்டங்களுக்கு வித்திட்ட புரட்சி சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் என க்யூபாவில் கொண்டாடப்படும் ஹொசே மார்த்தியின்(Jose Marti) படம் க்யூப கரன்சி நோட்டுகளில் இருக்கும். நமது கரன்சி நோட்டுகளில் காந்திபடம் போல. சியூசி-யின் விசேஷம் – இது க்யூபாவில் வசிக்க நேர்ந்த துரதிர்ஷ்டம் பிடித்த வெளிநாட்டுக்காரர்கள், சுற்றுலாப்பயணிகளின் உபயோகத்திற்குமட்டுமே. அதாவது, இந்தக் கரன்சி நோட்டை க்யூப நாட்டவர் பயன்படுத்த அனுமதி இல்லை. இந்தக் கரன்சிக்கு க்யூப அரசினால் அமெரிக்க டாலரை விட, செயற்கையாக மதிப்பு உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன் இதன் மதிப்பு ஒரு சியூசி = 1.10 அமெரிக்க டாலர் ! இந்த சியூசி-யை க்யூபாவைவிட்டு வேறு நாட்டுக்கு எடுத்துப்போவதில் அர்த்தமில்லை. ஏனெனில், க்யூபா தவிர வேறு எந்த நாட்டிலும் நீங்கள் இதை மாற்ற/பயன்படுத்தமுடியாது ! வெளிநாட்டவர் க்யூபாவுக்குள் தங்கள் பயணம், தங்குதல் ஆகியவற்றிற்கான ஹோட்டல், டேக்ஸி, ரெஸ்டாரண்ட் என்று தொட்டதெற்கெல்லாம் சியூசி-யில்தான் பணம் கொடுக்கவேண்டும். அமெரிக்க டாலர் அல்லது யூரோ போன்ற வெளிநாட்டுக் கரன்சிகளை அரசாங்க சியூசி-டாலர் ரேட்படி மாற்றவேண்டிய கட்டாயம். எல்லாமே அரசாங்க நிறுவனங்கள்தான் என்பதால், நேராக இத்தகைய அந்நியச்செலாவணி வருமானம் (அமெரிக்க டாலர், யூரோ, பிரிட்டிஷ் பௌண்ட்) புரட்சி அரசாங்கத்தின் கருவூலத்தில் போய்ச்சேர்ந்தது.

சரி, க்யூப நாட்டவரின் உப்யோகத்திற்கு? இன்னொரு கரன்சி இருக்கிறது. க்யூபன் பெஸோ (Cuban Peso) என்று அழைக்கப்பட்ட மதிப்பு மிகக்குறைவான கரன்சி அது.( 2009-ல் 24 பெஸோக்கள்=1 சியூசி). கிட்டத்தட்ட வெறுங்காகிதம் என அந்நாட்டவரே மெதுவாகச் சொல்வார்கள். நாட்டில் மக்களின் தினசரி செலவினங்களுக்காக அரசு அனுமதித்திருக்கும் கரன்சிதான் இந்த க்யூபன் பெசோ. சிறுசிறு க்யூபன் கடைகள், காய்கறி, மாமிச மார்க்கெட்டுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இனி ஹவானா, சாந்தியாகோ போன்ற முக்கிய நகர்களில் இருக்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகளின் நிலவரம் என்ன? இங்கும் வெளிநாட்டவர், க்யூபா தேசத்தவர் எனப் பாகுபாட்டை, ஓரவஞ்சனையை க்யூப அரசே ஏற்படுத்தியிருந்தது. காஸ்ட்ரோவின் புரட்சி சோஷலிசத்தின் இருண்ட பகுதி! அதாவது டெபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்கள், 3, 5 நட்சத்திர ஹோட்டல்கள், கடற்கரை  உல்லாச விடுதிகள் (beach resorts) ஆகியவற்றில் வெளிநாட்டினருக்கும், அங்கு வேலை செய்யும் க்யூபர்களுக்கு மட்டுமே அனுமதி. சாமானிய க்யூபர்கள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கமுடியாது! பணமிருந்தாலும். அப்படியே தப்பித் தவறி அதற்குள் நுழைந்துவிட்டால், அரசாங்க ஏஜெண்ட் ஒருவர் அவரைத் தள்ளிக்கொண்டுபோய் விஜாரிப்பார். அந்த க்யூப ஆசாமி எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார் . ஹவானாவில் பால்கோ (Palco) என்கிற பெயரில் வெளிநாட்டவருக்கென்றே ஏற்படுத்தப்பட்ட அரசு டெபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளது. வெளியே கம்பீரம். உள்ளே? பெரும்பாலான ஷெல்ஃபுகள் சாமான்களின்றி காலியாகவே இருக்கும்.கேட்டால் அடுத்த வாரம் வரும் என்பார்கள்!

NSS_CUBA-advocado.JPG

ஹவானாவில் ஆஸ்பத்திரிகளின் கதையும் இதேதான். வெளிநாட்டவருக்கென (தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள்), சிர கார்சியா (Cira Garcia) என்றொரு மருத்துவமனை  க்யூப அரசினால் நடத்தப்படுகிறது. எந்த வலி, வேதனையாக இருந்தாலும், அவசரமாக இருந்தாலும், அங்குதான் வெளிநாட்டவர் செல்லவேண்டும். வேறு ஒரு மருத்துவமனை அருகிலிருக்கிறது என்று நீங்கள் முயற்சித்தாலும், அவர்கள் உங்களை சிர கார்சியாவுக்கு விரட்டிவிடுவார்கள். ஜாக்ரதை! ஒரு காலத்தில் (சோவியத் உதவிகாலத்தில் – எனப் படிக்கவும்), க்யூப மருத்துவத்திற்கு கொஞ்சம் பேர் இருந்தது. இப்போது பத்தோடு பதினொன்னு என்றாகிவிட்டது. ஆயினும் மருத்துவ வசதி இலவசமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்பது உண்மை. அதன் தரம்தான்  குறைந்துவிட்டிருந்தது.

க்யூபா அரசமைப்பில், `குபால்சே`(Cubalse) என்கிற கார்ப்பரேஷன், அங்கு வசிக்கும் வெளிநாட்டவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. வாடகை வீடு, ஹோட்டல், வேலைக்காரி, கார்களை விற்றல்/வாங்கல், ஓட்டுநர் என்று வெளிநாட்டவருக்கு எது தேவைப்பட்டாலும் நேரடியாக க்யூபர்களிடம் பேச அனுமதி இல்லை. குபால்சே மூலமாகத்தான் எதனையும் செய்யமுடியும்.. சுருக்கமாக வெளிநாட்டவரின் தேவையை கவனிப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக்கொண்டு காலங்கழித்த அரசு கார்ப்பரேஷன் இது. வெளிநாட்டவர்களின் நடவடிக்கைகள் எதுவாயினும், ஆழமாகக் கவனிக்கும் ஒரு அரசு நிறுவனம். சராசரி க்யூபன் (க்யூப அழகி உட்பட)  தங்களோடு வசிக்கும், ஊர்சுற்றும் வெளிநாட்டவனைப்பற்றி தான் அறிந்த தகவல் எதுவாயினும் குபால்சேவுக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளான்/ உள்ளாள் என்பது இதன் தவிர்க்கமுடியாத உள்வரிசை – காஸ்ட்ரோ அரசின் இன்னொரு புரட்சி அம்சம்! ஹவானாவில் கொஞ்சநாள் பழகி, ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டபின், ஒரு டாக்ஸி ஓட்டுநர் பகிர்ந்துகொண்ட தகவல்: `ஹவானாவில் எந்த ஐந்து க்யூபர்களை நீங்கள் எடுத்துக்கொண்டாலும், அதில் இரண்டு பேர் அரசாங்கத்தின்/ஆளும்கட்சியின் ஏஜெண்ட்டுகள் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்களே ஏதாவது உளறிவிட்டாலும் உடனே கோழிச்சொல்லி, எங்களுக்கு வெடிவைப்பவர்கள் இவர்களே!` என்றார் அந்த மனிதர்.

க்யூப மக்களின் சமூக வாழ்க்கை: இலவச ரேஷனோடு, இலவசப்பள்ளிக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவை க்யூப அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் இவற்றின் தரம் பாதாளத்தில் விழுந்துவிட்டது என்பது வேறு விஷயம். 2006-ல் உடல் நலக்குறைவால் ஃபிடெல் காஸ்ட்ரோ பதவி விலகி, தன் சகோதரரான ராவ்ல் காஸ்ட்ரோவிடம் பதவியை ஒப்படைத்தார். ஃபிடெலின் ஆட்சியில், க்யூப மக்களுக்கு சாட்டலைட் டிவி, இண்டர்நெட் போன்றவைகளுக்கு அனுமதி தரப்படவில்லை. ராவ்ல் காஸ்ட்ரோ இத்தகைய தீவிரக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்த ஆரம்பித்திருந்தார் 2008-09-களில்.

rock-concert-at-the-karl-marx-theater

இத்தனை ஏழ்மை, அரசுக் கட்டுப்பாடுகள், தொல்லைகளுக்கு மத்தியிலும் க்யூப மக்கள் இயல்பாகவே ஜாலியானவர்கள் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்போதும் பாட்டு, ஆட்டம்தான். நல்லவேளையாக, காஸ்ட்ரோவின் அரசு இவர்களது சமூக நிகழ்வுகளில், உரிமைகளில் அவ்வளவாகத் தலையிடவில்லை. க்யூபர்களின் கல்யாண வாழ்க்கை, விவாகரத்து போன்றவை எளிதானது. எப்படி? கல்யாணத்திற்கோ விவாகரத்துக்கோ கோர்ட் கெடுபிடிகளோ, பணத்தேவையோ இல்லை! எந்தவிதப் பீடிகை, அலட்டல் இல்லாமல், கல்யாண உறவில் இணையலாம். விலகலாம். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்பது போன்ற மனப்பான்மை க்யூப நாட்டவரிடம் உள்ளது. நன்றாகப் பழக்கமாகிவிட்ட க்யூப நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை “எனக்கு இரண்டு மகன்கள்!“ என்றார் சந்தோஷமாக. `ஒருநாள் கூட்டிக்கொண்டுவருவதுதானே` என்றேன். `மாதத்துக்கு ஒருமுறைதான் நான் அவர்களைப் போய்ப்பார்ப்பது வழக்கம்.` என்றார்.

`ஏன், ஹாஸ்டலில் இருக்கிறார்களா?

`இல்லையில்லை. என்னுடைய முந்தைய மனைவியோடு வசிக்கிறார்கள்!`

அவருடைய மனைவியை நான் ஒரு பார்ட்டியில் பார்த்திருக்கிறேன். `முந்தைய மனைவியா! இப்போது இருப்பது ?`

`என் இரண்டாவது! ` சாதாரணமாகச் சொன்னார் அந்த மனுஷன். இத்தனைக்கும் அவருக்கு 34-35 வயதுதானிருக்கும்.

`முதல் மனைவியோடு ஏதாவது ப்ராப்ளமாகிவிட்டதா?` என்றேன்.

`அவள் நல்லவள்தான். ஆனால், நான் இன்னொரு பெண்ணோடு நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டாள். நான் `சாரி` சொல்லியும், என்னிடமிருந்து விலகிக்கொண்டாள். பிரியும்போது என் மகன்களையும் கூட்டிச்சென்றுவிட்டாள்!`

`இப்போது அந்தப் பெண் தனியாகவா இருக்கிறார்?` கேட்டேன்.

`இல்லை. இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டாள்! `. அவர் குரலில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது. முதல் மனைவியை இன்னும் விரும்புகிறாரோ!

`உங்கள் பையன்களைப் பார்க்க அவர்கள் வீட்டுக்குப் போகையில், புதுக்கணவரும் இருப்பாரே! ஏதாவது பிரச்னை வராதா?` என்று கேட்டேன்.

.`ஒரு பிரச்னையும் இல்லை. அவளது கணவரும் நானும் ஃப்ரெண்ட்ஸ்!` என்றார் இந்த ஆள்!

`முன்பே உங்களுடைய நண்பரா? தெரிந்தவரா?`

‘அப்படியில்லை. But we are OK!’

எப்படியிருக்கு கதை? நீ அவளோடு ஆடுகிறாயா, நல்லா ஆடு! நான் இவனைக் கோர்த்துக்கொண்டுவிட்டேன்.. போய் வருகிறேன்! –இதுதான். இதுதான் க்யூப மக்களின் சமூகவாழ்வின் சாராம்சம். இது விளையாட்டான விஷயம் என்று உடனே எண்ணிவிடாதீர்கள். காதல், கல்யாணம் போன்ற விஷயங்களில் ஆண்களோ, பெண்களோ சளசளத்து அடித்துக்கொண்டால், அது கவனிக்கப்பட்டு மேலிடத்துக்கு விஷயம் செல்லும். சமூக உறவுகளில் ஆத்திரம், அசூயை காண்பிப்பது, சமூக அமைதியைக் குலைப்பதாகும். அதனால் சட்டவிரோதம் க்யூபாவில். தண்டனை நிச்சயம். எதை அரசாங்கம் விரும்பாதோ, எதனை குற்றமாகக் கருதுகிறதோ, அந்தக் காரியங்களில் க்யூபர்கள் ஈடுபடமாட்டார்கள் என்பது உறுதி. அப்படி ஒரு கெடுபிடி, கட்டுக்கோப்பில் நாட்டை அரைநூற்றாண்டாக வைத்திருக்கிறார் காஸ்ட்ரோ. இப்போது ஆட்சியிலிருக்கும் ஃபிடெல் காஸ்ட்ரோவின் தம்பியான ராவ்ல் காஸ்ட்ரோவும்(Raul Castro) டிட்டோ. சட்டதிட்டங்களில் எந்த மாறுதலும் இல்லை.

வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள் க்யூபாவின் அழகான கடற்கரைகளை நோக்கி வருவதாகக் கூறப்பட்டாலும், பின்னணியில் வேறு  ஒரு விஷயமும் மறைவிலிருந்து வெளிப்பட்டது. கனடிய, ஐரோப்பிய மத்தியவயது ஆண்கள் சுற்றுலா என்கிற பெயரில், நிஜத்தில் க்யூபாவின் ஸ்பானிஷ் சாயலடிக்கும் அழகிய நங்கைகளை நாடியே வருகின்றனர் என்பதுதான் அது. இப்படிப்பட்டோர் வெளிப்படையாகவே பதின்மவயது க்யூப அழகிகளைத் தேடினார்கள். வெளிநாட்டவர் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், விடுதிகளிலேயே இவர்களை காதும்காதும் வைத்தாற்போல் `அரேஞ்`செய்துகொடுக்கிறார்கள். பின்னே, டூரிஸ்ட்டுகளை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டாமா!  தாய்லாந்தைப்போல் இங்கும் அவர்கள் டூரிஸ்ட்டுகளுக்கு எளிதில் கிடைக்கிறார்கள். ஐரோப்பியக் கிழடுகள் இளம் நங்கைகளை காரில் உட்காரவைத்து, கடற்கரை சொகுசு பங்களாக்களுக்குத் தள்ளிப்போவதை ஜூலை- செப்டம்பர் மாதங்களில் நிறையவே காணலாம். டூரிஸ்ட்டுகளுக்கு துணையாக, தோழியாக, சொகுசு ஹோட்டல்களுக்குள் நுழைய, தங்க, இத்தகைய க்யூப இளம்பெண்களுக்கு மட்டும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது! பெயர் சொல்லப்படாத,  ஒருவகை `பாலியல் சுற்றுலா` என இதனை வகைப்படுத்தலாம். இத்தகைய பெண்களுக்கும், தங்களது வருமானத்திற்கு, குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்கு இது ஒரு உத்தியாக, வழியாகவே தோன்றுகிறது.  பெற்றோர் தங்களின் பதின்மவயதுப் பெண்,  ஊர்பேர் தெரியாத வெளிநாட்டவனுடன் ஊர்சுற்றிக் களித்து, பணம் சேர்த்துவருவதை அமைதியாக அனுமதிக்கிறார்கள். அரசாங்கத்திடமிருந்தும் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதோடு, மறைமுக ஒத்துழைப்பும் கிடைக்கிறது இவர்களுக்கு என்பதனையும் சிலமாதங்களில் புரிந்துகொண்டேன். க்யூபாவின் கம்யூனிஸ்ட் அரசு இந்தப் பெண்களைப் பயன்படுத்தி, வந்து செல்லும் வெளிநாட்டவர்பற்றிய அரிய தகவல்களையும் சேகரிக்கிறது! க்யூபாவிலேயே எளிதில் கிடைக்காத,  விலையுயர்ந்த `கொஹிபா`(Cohiba) போன்ற க்யூபன் சிகார் வகைகளை, அரசு நிறுவனங்களில் சொல்லி, ப்ரிமியம் ரேட்டில் வெளிநாட்டவர்க்கு வாங்கித் தருவார்கள் இந்தப் பெண்கள். அரசுக்கேற்ற குடிமகன்கள்-இல்லை-குடிமகள்கள். ஜாடிக்கேத்த மூடி!

கல்வி, கலாச்சாரம்: க்யூப நாட்டவர் பகலெல்லாம் காஃபி குடித்துக்கொண்டு, புகைத்துக்கொண்டு, சிறுசிறு வேலைகள் கிடைத்தால் செய்துகொண்டு பொழுதுபோக்குவார்கள். இரவில் சிகார், க்யூபன் சால்ஸா நடனம், க்யூபன் மியூசிக். ஃப்ளாமெங்க்கோ, ஆட்டத்தினிடையே அருந்தி மகிழ ரம் அல்லது பீர். பாக்கெட்டிற்கு ஏற்ப, அல்லது உங்களை அழைத்துவந்திருக்கும் நண்பரின் தாராளத்துக்கு ஏற்ப! ராத்திரி 1 மணி, 2 மணி வரை குடித்து, ஆடி திரும்புவார்கள்.  குடித்துவிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறவன் க்யூபனாக இருக்கமுடியாது. நாகரீகமான நடத்தை ஸ்பானிஷ் கலாச்சாரத்தின் கொடை; க்யூப அரசின் கட்டுப்பாட்டுமுறையும் கூட.

மக்களிடையே தங்கள் க்யூபக் கலாச்சாரப் பெருமிதம் ரொம்பவே உண்டு, குறிப்பாக க்யூபாவின் ஆஃப்ரோ-க்யூபன் ஜாஸ்(Afro-Cuban Jazz),சால்ஸா (Salsa), ஃப்ளாமெங்க்கோ(Flamenco சங்கீதம், நாட்டியம் போன்றவற்றில் ஆர்வமும் பெருமையும் உண்டு. அதேபோலவே தங்கள் நாட்டின் உலகப்புகழ்பெற்ற படைப்புகளான க்யூபன் சிகார் என அழைக்கப்படும் க்யூபன் சுருட்டுகள், பிரத்தியேக ருசியோடு அந்த நாட்டில் தயாராகும் ரோன் (ரம்) வகைகள் மேலும். க்யூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சி ஹீரோவுமான  ஃபிடெல் காஸ்ட்ரோவுக்காக ஸ்பெஷலாகப் பதனிடப்பட்டு தயாரிக்கப்படும் சுருட்டுவகை, உலகப்புகழ்வாய்ந்த `கொஹிபா` (Cohiba).மேலும் வகைகள்: மாண்டெ க்றிஸ்த்தோ, பொலிவார் போன்றவகை சுருட்டுகள் (Monte Cristo, Bolivar). க்யூபாவின் ஹவானா க்ளப் ரம் வகைகள் (Havana Club Ron ), உலகக் குடிகார அரங்கில் மதிக்கப்படும் ஒரு ப்ராண்ட்! இதுதவிர, க்றிஸ்த்தால் (Crystal) மற்றும் புக்கனேரோ (Buccanero) என்பவை ப்ரபலமான க்யூப பீர்கள் (Cuban beers). தரமானவை.

ஹவானா பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு மாணவரைவிடவும்  வெளிநாட்டவர் அதிகம்போல் தோன்றும். இங்கு மருத்துவம் படிக்க பக்கத்து நாடுகளிலிருந்தும், முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்தும் கட்டணச்சலுகை பெற்று மாணவர்கள் வருகிறார்கள். நமது நாட்டின் வடகிழக்கிலிருந்து ஒரு மாணவி ஹவானா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார் அப்போது. முதல் வருடம் ஸ்பானிஷ் மொழி, மற்ற வருடங்களில் மருத்துவம் என மொத்தம் 6 வருட மருத்துவப்படிப்பு அங்கே. ஹவானாவில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதிவகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு போலீஸ், டாக்ஸி ஓட்டுனர், ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் போன்ற சிறு பணிகளில் அமர்ந்துவிடுகிறார்கள். மெத்தப் படித்ததால் அதற்கேற்ப சம்பளம் தரும் உத்தியோகங்கள் க்யூபாவில் இல்லை. வெளிநாடு போக க்யூபர்களை காஸ்ட்ரோ அரசு அனுமதிப்பதில்லை. அதற்கான பணத்திற்கும் அவர்கள் எங்கே போவார்கள்?

க்யூப நாட்டவர்களில் பலர் நல்ல வாசகர்கள். ஸ்பானிஷில் புத்தகங்கள் கிடைத்தால் ஆசையோடு படிப்பவர்கள். கலாரசனை உடையவர்கள். தங்களுக்குப்பழக்கமில்லாத பிரதேசங்களின் மொழி,கலாச்சார, தத்துவ சிந்தனைகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பதை அறிந்தேன். இந்திய அரசினால் க்யூப நாட்டவரின் பயன்பாட்டுக்கென ஸ்பானிஷ் மொழியில் India Perspectivas என்கிற இந்திய கலாச்சார மாதாந்திர இதழ் ஒன்றை வெளியிட்டது. க்யூப நாட்டவர் இந்திய தூதரக லைப்ரரிக்கு வந்து, இதழின் இலவச காப்பியை ஆர்வமாக வாங்கிச்செல்வதை பார்த்திருக்கிறேன். ஆங்கிலம் கற்றவர்கள் அங்கே மிகக் குறைவு. ஓரளவு ஆங்கிலம் கற்றவர்கள் – டாக்ஸி ஓட்டுநர்கள்கூட,  நிறையப் பொது அறிவு வைத்திருக்கிறார்கள். ஒருவர் என்னோடு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டுவருகையில் `நீங்கள் இந்தியரா?` என்றார். இவ்வளவு புரிந்துகொண்டாரே என்கிற ஆச்சரியத்தைக் காட்டாது சுருக்கமாக ‘ஆம்’ என்றேன். ‘மஹாத்மா காந்தியின் நாடு !’ என்று கூடவே ஒரு கமெண்ட் போட்டு அசத்தினார். சரி! இவரோடு கொஞ்சம் பேசலாம்! `காந்தியைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?` என்றேன். `அவரது வாழ்க்கைபற்றிய புத்தகங்களை நான் ஸ்பானிஷில் படித்திருக்கிறேன். I like him. He was a great man!’ என்றார். எனது தேசப்பிதாவை கடல்கடந்த தூரத்து நாடொன்றில் ஒருவன் தெரிந்துவைத்திருக்கிறான்; புகழ்கிறான். சிலிர்த்த நான், காலரை லேசாகத் தூக்கிவிட்டுக்கொண்டேன்!

2007-08 –வாக்கில், க்யூப நாட்டவரிடையே இந்திய பாலிவுட் சினிமா ப்ராபல்யம் அடைந்தது! அப்போது அக்டோபர் மாதம் ஹவானாவில் உள்ள ஒரு தியேட்டரில் இந்திய தூதரக முயற்சியால், பிரபல ஹிந்திப் படங்கள் திரையிடப்பட்டன. அமோக ஆதரவு. க்யூப தேசத்தவர் தியேட்டர்முன் அலைமோதினார்கள். இந்திய திரைப்பட விழா வாரம் முடிந்தபின்னும், சாமானிய க்யூபர்கள் தூதரகத்துக்கு வந்து அடுத்த படவிழா எப்போது என்று கேட்டுச்சென்றார்கள்.

இந்திய தூதரக லைப்ரரிக்கு வந்து புத்தகம் எடுக்கும் ஒரு மத்திமவயதான க்யூபப் பெண், ஆங்கிலம் பேசத்தெரிந்தவர் அறிமுகமாகி தோழியாகிவிட்டார். அவர் ஒருநாள், `இந்திய ஞானகுருக்களைப்பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆசை!` என்று ஒரு போடுபோட்டார். எனக்கோ இன்ப அதிர்ச்சி! இவருக்கு நமது ஆன்மீக குருக்களைப்பற்றி ஏதாவது தெரிந்திருக்குமா என சந்தேகித்து, லைப்ரரியில் விவேகானந்தர் புத்தகங்கள், பரமஹம்ச யோகானந்தாவின் ‘Autobiography of a Yogi’ போன்றவற்றைக் காட்டினேன். `படித்துவிட்டேன்` என்றார் சாதாரணமாக! நான் உஷாரானேன். இவர்களிடம் ஜாக்ரதையாக இருக்கவேண்டும்! மாலை சந்திப்பதாகக் கூறினேன். சந்தித்தேன். தவறாது வந்திருந்தார் அந்தப் பெண் தன் நண்பர் ஒருவருடன். பேச்சு மீண்டும் இந்திய குருக்களைப்பற்றியே சுற்றியது. அரவிந்தர், ரமண மகரிஷி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றி நான் கொஞ்சம் குறிப்பிட்டு, ஒரு தயக்கத்துடன் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி லேசாக சொன்னேன். அங்கேயும் அதிர்ச்சி காத்திருந்தது! ஜேகே-யின் அமெரிக்க பயணங்கள்பற்றித் தெரிந்துவைத்திருந்தார்கள் அந்தப் பெண்ணும் அவரது நண்பரும். மேலும் ஜேகே-பற்றி, அவரது வாசகங்களில் `தனக்குள்ளே சென்று ஆராய்த`லின் உட்கருத்தென்ன எனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். 1984-ல் நான் டெல்லியில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கங்களுக்கு சென்றிருந்தேன் என்றதும், என்னை  மரியாதைகலந்த கவனிப்புடன் பார்த்தார்கள். அற்புதமான, ஆழமான மனிதர்கள். க்யூபாவில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவர்கள்.

பாராட்டத்தக்க சில அம்சங்கள்: ஃபிடெல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் – (2006-லிருந்து சகோதரர் ராவ்ல் காஸ்ட்ரோ), சோஷலிச அரசமைப்பில் சில, பல நல்லவைகளும் நடந்துள்ளன என்பதையும் உணர்ந்தேன். தலைகொள்ளா பிரச்சினைகள் உள்ள ஒரு நாட்டு மக்களிடம்  தேசபக்தி, க்யூபன் என்கிற ஒற்றுமை, பெருமித உணர்வு, civic sense காணப்படுவது நல்ல விஷயம்.  ஒவ்வொரு க்யூபனும் தன் வீட்டை, வசிக்கும் தெருவை சுத்தமாக வைத்திருப்பான். தெருக்களில் குப்பையைக் காண்பது அபூர்வம். இன்னொரு மிக முக்கியமான, பாராட்டத்தக்க அம்சம் என நான் கருதுவது: நாட்டின் இயற்கை வளங்களை, அவை சாலையோர மரங்களாகட்டும், கிராமப்புற வாழைத்தோட்டங்கள், மாந்தோப்புகள், கோக்கோ, தென்னை, பனை மரவகைகளாகட்டும், நீர், நிலவளமாகட்டும், கடற்கரைகள், மலைப்பகுதிகளாகட்டும் – யாரும் அனாவசியமாக் கை வைக்க அரசின் அனுமதியில்லை. பொறுப்பில்லாமல் யாரும் மரங்களை வெட்டியதாக, காடுகளை, நீர்நிலைகளை சிதைத்ததாகக் கேட்கவில்லை. அருமையிலும் அருமை.

க்யூப நாட்டவரிடம் மற்ற லத்தீன் அமெரிக்க நாட்டவரோடு ஒப்பிடுகையில் வன்மம், வெறுப்பு போன்ற குணங்களின் கடுமைகளைக் காண்பதரிது. பெரும்பாலும் சரியான நடத்தை, நேர்மை இவற்றை க்யூபர்களிடம் எதிர்பார்க்கலாம். பின்னிரவில் தனியாக ஒரு வெளிநாட்டுப்பெண் பயணிக்க நேர்ந்தாலும், டாக்ஸிக்காரர் பாதுகாப்பாக சரியான இடத்தில் கொண்டுவந்துவிட்டு, சரியான கட்டணத்தை வாங்கிச்செல்வார். காஸ்ட்ரோ அரசின் தனிப்பட்ட, புகழத்தக்க சாதனையாக நான் இன்னொன்றையும் குறிப்பேன்: அண்டை நாடுகளான கொலம்பியா, மெக்சிகோ, பொலீவியா போன்ற நாடுகளைப்போல் அல்லாமல், க்யூபாவில் போதைப்பொருட்களின் வெறியாட்டம் துளியும் இல்லை எனலாம். பெருங்குற்றங்கள்பற்றி நான் ஏதும் கேட்டதில்லை. குற்றங்களை அழிப்பதில், கட்டுப்படுத்துவதில் க்யூபன் போலீஸ் திறமையானவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

Vintage postage stamp. Sports. Cuba.

விளையாட்டுக் கலாச்சாரம்

க்யூபாவின் விளையாட்டுக் கலாச்சாரம் சிறப்பானது. பாராட்டுக்குரியது. க்யூபர்களுக்கு பேஸ்பால் (Baseball) என்றால் உயிர். கூடவே, குத்துச்சண்டை (boxing), மல்யுத்தம் (Wrestling), ஜூடோ (Judo) போன்றவற்றில் ஒலிம்பிக் பதக்கங்களை அனாயாசமாகத் தட்டிச்செல்லும் நாடு. ஒலிம்பிக் கிராமத்தில் க்யூப வீரர்கள் திறமைமிகுந்த பயிற்சியாளர்களிடம் கடுமையாக, முறையான பயிற்சிக்குள்ளாகிறார்கள். கிராமத்தை விட்டு வெளியே ஊர்சுற்ற, ஏனைய க்யூபர்களைப்போல், பெண்களோடு அலைந்து திரிய அவர்களுக்கு அனுமதி இல்லை. மனதில் எப்போதும் அடுத்த ஒலிம்பிக்கிற்கான கடும் முயற்சிகள், ஏற்பாடுகள். பெரும்பாலும் கருப்பினத்தவரே க்யூபாவின் சார்பில் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. க்யூபாவின் விளையாட்டு அமைச்சரும் ஒரு கருப்பினத்தவரே. நான் க்யூபாவில் பணிபுரிந்த காலத்தில்தான், இந்தியா க்யூபாவுக்கிடையே விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. விளைவாக, க்யூபக் குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் இந்தியா சென்று நம்மவர்களுக்கு, குறிப்பாக ஹரியானா வீரர்களுக்குப் பயிற்சி தந்தார்கள். க்யூபாவின் ஒத்துழைப்பினால்,  இந்தியா விஜேந்தர் சிங், யோகேஷ்வர் தத் போன்ற வீரர்களை சர்வதேசத்தரத்திற்கு உயர்த்தி பதக்கங்கள் வெல்லமுடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2016 க்யூபப் பயணத்துக்குப்பின், இதுகாறும் ஸ்தம்பித்துப்போயிருந்த, இருதரப்பு ராஜீய உறவுகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளன. க்யூபாவுடனான வணிகம், சுற்றுலா போன்றவற்றில் இருந்த கடும் தடைகள் விலக்கப்படும் நிகழ்வுகள் ஆரம்பம் கண்டுள்ளன. ஜனாதிபதிகள் பாரக் ஒபாமா, ராவ்ல் காஸ்ட்ரோ தலைமையில் இரு நாட்டு மக்களிடையே வணிகம், சுற்று்லா, பொருளாதார, கலாச்சார ஒத்துழைப்பு என்று புதிய வசதிகள், வாய்ப்புகள் பெருகும் நாட்கள் இனி தொலைவிலில்லை. அமெரிக்க, ஐரோப்பிய, உலகவங்கி நிதி உதவிகள், வணிக ஒத்துழைப்பால், க்யூபாவின் பொருளாதாரம்  சீரான வளர்ச்சிப்பாதையில் செல்லும வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. அறுபது ஆண்டுகாலத்துக்கும் மேலாக கஷ்டத்துக்கு மேல் கஷ்டமாக அனுபவித்துவந்த க்யூப மக்களின் வாழ்வில் விடிவுகாலம் வந்துவிட்டது எனலாம்.

இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் தருணத்தில், கடந்த 10 வருடங்களாக உடல்நலம் குன்றியிருந்த,  க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் மறைவுச் செய்தி வந்திருக்கிறது. க்யூப, லத்தீன் அமெரிக்க சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சகாப்தம் காஸ்ட்ரோ. அவரது ஆட்சிவகை, தன்மை, அதன் நீண்டகால விளவுகள்  எதுவாயினும், ஏனைய லத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளின் மத்தியில், க்யூபாவை போதைப்பொருள் அபாயம் இல்லாத, பெருங்குற்றங்கள் காணப்படாத, மிகவும் அமைதியான நாடாக ஆக்கிய பெருமை காஸ்ட்ரோவுக்கு உண்டு. பனிப்போர் காலத்திய கூட்டுசேரா நாடுகள் அமைப்பின் (Non-Aligned Movement) நேரு, நாஸர், ஜூலியஸ் நைரேரே போன்ற உலகத் தலைவர்களின் வரிசையில் சத்தானவர், சத்தமானவர்  எனவும் சரித்திரம் அவரைப் பாடும்.

Series Navigationக்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.