அத்திப் பழமும் கூட்டுவாழ்வும்

figwasp3

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. Knowing Tomato is a fruit is knowledge. Not adding it to a fruit salad is wisdom. அது உண்மைதான். தக்காளி என்பது பழம். இந்தத் தாவரவியல் மிகவும் விந்தையானது. நிறைய முரண்களை உடையது. ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். சீதாப்பழங்கள் என்று எழுதவேண்டுமோ. தெரியவில்லை. கொஞ்சம்‌ விலை அதிகமாக இருந்தாலும் அதிகமாகச் சாப்பிடப்படும்‌ அத்திப்பழம் மற்றப் பழங்களைப்போல் பூப்பூத்து சூல்கொண்டு பழமாவதில்லை. என் வழி தனி வழி என்று அத்தி மரம் தனி வழி வைத்திருக்கிறது. அதற்கு முன்..

உயிரியல் என்பது சார்புதான். ஆ! அதெல்லாம் இல்லை. நான் யாரையும் சார்ந்து இருக்கவில்லை என்று ஜம்பமெல்லாம் பேச முடியாது. நம் உணவை செரிமானம் செய்கிற வேலையில் குறிப்பிடத் தகுந்த அளவை gut biota எனப்படும் வயிற்றில்‌ இருக்கும் நுண்ணுயிரிகள் செய்கி‌ன்றன. ஆக செரிமானம் முதற்கொண்டு நாம் பிற உயிரிகளை நம்பி இருக்கத்தான் வேண்டியிருக்கிறது. இந்தச் சார்பு பல விதமாய் இருக்கும். ஒன்று predation. ஒரு ‌உயிர் இன்னொரு உயிருக்கு உணவாகும். இது ஒரு பக்கச் சார்புடையது. அடுத்தது parasitism. தொற்றுயிரி. ஒரு உயிரியின் உடலில் வாழ்ந்து அதனிடம் இருந்து உணவை, வாழிடத்தைப் பிடுங்குவது. அடுத்தது symbiosis. ஒத்துவாழ்தல். இது இரண்டு பக்கமும் நன்மை பயக்கும். நம் வயிற்று பாக்டீரியாக்கள் அப்படித்தான். அதற்கு இடமும் உணவும் கிடைக்கிறது. நமக்கு செரிமானப் பளு குறைகிறது. இது எல்லாமே வாய்ப்பிருந்தால்‌ மட்டுமே நிகழக் கூடியது. இவற்றையெல்லாம் விட சிக்கலான ஒரு அமைப்பு இருக்கிறது. Mutualism. சார்புயிர்ப்பு(சொல்லுக்கு நன்றி : கவிஞர் மகுடேஸ்வரன்) இரண்டின் வாழ்க்கைச் சுழற்சியும் ஒன்றோடொன்று பிணைந்தவை. இது இல்லாமல்‌ அது இல்லை. வெகு சில உயிரினங்கள் அப்படி இருக்கின்றன‌. அவற்றுள் குறிப்பிடத் தக்கது அத்திப் பழமும், அத்திப்பழத்து வண்டும்(fig wasp).

அத்திக்காய் என்பது பிற தாவரங்களைப்போல் பூ காயாக வளர்வதில்லை. காய் என்பதே உள்பக்கமாய் மையத்தை நோக்கி வளர்ந்த பூக்களின் தொகுப்பு. ஆங்கிலத்தில் syconium என்று பெயர். அதில் மகரந்தம் உள்ள ஆண் பூக்களும், சூல்பை உள்ள பெண்பூக்களும் உண்டு. அத்திக்காய்களில் ஆண் காய்களும்(caprifigs) உண்ணக்கூடிய காய்களும் உண்டு(edible figs). இரண்டிலும் உள்ளே பூக்கள்தான். ஆனால் ஆண் காய்களில் பெண் அத்திப்பூச்சிகள்(fig wasp) முட்டையிட ஏதுவான பூக்கள் இருக்கும். பெண்காய்களில் முட்டையிட முடியாத நீளமான பூக்கள் இருக்கும். இந்த ஆண் காய்களில் இயற்கையாக இருக்கும் ஒரு துவாரம் வழியாக பெண் அத்திப்பூச்சி(fig wasp) உள்நுழையும். அதற்குத் தேவை முட்டையிட ஒரு இடம். பூவுக்குள் நுழையும் முயற்சியில் அது தன் இறகுகளையும், முன்னால் இருக்கும் ஆண்டனாவையும் இழந்துவிடும். சோர்ந்தபடி குற்றுயிராய்ப் போய் தன் முட்டைகளை இடும். முட்டையிடுகையில் தன் பிறந்த வீடான பழைய அத்திக்காயிலிருந்து எடுத்து வந்த மகரந்தத்தால், இந்தப் பூவில் மகரந்தச் சேர்க்கை நடத்தும். முட்டையிட்டு முடித்தபின் அந்தப் பூவிலேயே மடிந்து விடும். முட்டைகள் பொரிந்து புழுக்களாய் மாறுகையில் அத்தி‌விதையைச் சுற்றி இருக்கும் சதைப்பற்றான பாகத்தை உண்டு வளரும். ஆண் அத்திப்பூச்சிகள் முதலில் முழு வளர்ச்சி பெற்று வளர்ச்சி அடையாத பெண் அத்திப்பூச்சிகளோடு உறவு கொண்டு சூல்‌ கொள்ளச் செய்யும். குருடாய், இறக்கையின்றிப் பிறக்கும் இந்த ஆண் பூச்சிகள், உறவு கொண்டபின்னர் உள்ளிருக்கும் ஆண் பூக்களைச் சிதைத்து மகரந்தத்தை வெளிப்படுத்தி, பின் பெண் பூச்சிகள் வெளியேற உள்ளிருந்து பாதை குடையும்‌. பழத்தை விட்டு வெளிவந்ததும் சிறிது நேரத்திலேயே இறந்துவிடும். பெண் பூச்சிகள் வளர்ந்து மகரந்தத்தைச் சேகரித்து ஆண் குடைந்து வைத்த வழியாக வெளிவரும். பின்னர் முட்டைக்காக இன்னொரு அத்திக்காயைத் தேடிப் பறக்கும்‌. இங்குதான் இயற்கை கொஞ்சம் தகிடுதத்தம் செய்கிறது.

figwasp2

இந்தப் பெண் பூச்சிகளால் ஆண் காய்களுக்கும்(caprifigs) உண்ணக்கூடிய காய்களுக்கும்(edible figs) வேறுபாடு சொல்ல முடியாது. ஏற்கனெவே சொன்னதுபோல் உள்ளே போய்விடும். அங்கு ஆண் காயானால் முட்டையிட்டு மகரந்தச் சேர்க்கை நடத்தும். உண்ணக்கூடிய காயானால் முட்டையிட முடியாது. மகரந்தச் சேர்க்கை மட்டும்தான். ஆக ஆண் பூவானால் சாகும் தறுவாயில் “என்னோட கடமையை நான் செஞ்சுட்டேன். நிம்மதியா செத்துப் போறேன்” என்று வசனம் பேசும் ஹீரோவின் அப்பாவைப்போல் உள்ளேயே செத்துப் போகும். மறுபடி சுழற்சி ஆரம்பிக்கும். பெண் பூவில் நுழைந்தால் ஆன்டி க்ளைமாக்ஸ். மகரந்தத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பூக்கள் தன் வேலையைப் பார்க்கப் போய்விடும். அத்திப்பூச்சி ஏமாற்றத்தோடு சாகும். முட்டையிட்டால் பழம் நமக்கில்லை, முட்டையிட முடியவில்லை எனில் பழம் நமக்கு. அப்படி உன்ணக் கூடிய பழத்தைதான் பறவைகளும், விலங்குகளும் உண்டு தம் கழிவுகளால் அத்தி மரத்தை பரப்புகின்றன.

 அத்திப்பழம் இந்த அத்திப்பூச்சி இன்றியும், அத்திப்பூச்சி இந்த அத்திப்பழம் இன்றியும் இருக்க இயலாது. ஒன்றின் இருப்பு மற்றொன்றின் இருப்பைச் சார்ந்தே உள்ளது. அமெரிக்காவிற்கு 20 வகை அத்தி மரங்களை ஆனால் நான்கு வகை அத்திப்பூச்சிகள் மட்டுமே அறிமுகப்படுத்தப் பட்டது, அப்போது அந்த நான்கு வகை அத்திப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை நடத்தும் அத்தி வகைகள் மட்டுமே செழித்து வளர்ந்தன. மீதி வகைகளில் தோல்வி. இந்த மாதிரியான ஒன்றின் உயிர் இன்னொன்றின் கையில் மாறி மாறி இருத்தலை கட்டாயச் சார்புயிர்ப்பு(obligate mutualism) என்று அழைக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பரிணாம அமைப்பு சுமார் ஒன்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக அறுதியிடுகிறார்கள். அப்போதிலிருந்தே அத்தி மரமும், அத்திப் பூச்சியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துதான் இருக்கின்றன.

 அதுசரி இந்தப் பூச்சி உள்ளேயே சாகிறதே சாப்பிடுகையில் அப்படியே இருக்குமா? அத்திப்பூச்சிகள் ஊசியின் காதை விடச் சிறியவை. இம்சை அரசன் பாணியில் வந்த புறாவைத் தாங்கள் வறுத்தா தின்பது என்று அத்திக்காய்க்குள் சுரக்கும் ficini என்னும் என்ஸைம் அந்தப் பூச்சியை அப்படியே புரதமாக மாற்றிவிடும். மேலும் கடைகளில் நாம் வாங்கிச் சாப்பிடும் அத்திப் பழங்கள் உருவாக மகரந்தச் சேர்க்கை தேவையில்லை.அதனால் வண்டுகள் உள்ளே போக வாய்ப்பில்லை. ஆகவே வாயில் சிக்குவது விதைகள்தாம். பூச்சிகள் அல்ல‌. தயங்காமல் சாப்பிடுங்கள்.

 ஞான மலர்கொண்ட காயைத் துளைத்துள்ளே

போனதோர் பூச்சிதன் முட்டையிட்டால் – தானாக

மொத்தச் சுழற்சியும் மீளவரும் இல்லையெனில்

அத்திக்‌ கனியுண்ண வாம்

நேரிசை வெண்பா

ஞான மலர் -உள்நோக்கி வளர்வதால் அத்திப்பூவை ஞான மலர் என்று சொல்லலாம்தானே

2 Replies to “அத்திப் பழமும் கூட்டுவாழ்வும்”

  1. எத்தனை அதிசயமான ஒரு உண்மை! படைத்தவனைப் புகழுவதா? அல்லது அது இப்படி இப்படி நிகழ்கிறது என்று கண்டுபிடித்த மனிதனைப் புகழுவதா?
    இந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டாம் என்று எங்கள் மருத்துவர் கூறினார் – பூச்சி இருக்கும் என்பது தான் காரணம். ஆனால் பூச்சி புரதமாகிவிடும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே! கடைகளில் நாம் வாங்கும் பழங்கள் உருவாக மகரந்தச் சேர்க்கை தேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பழத்தை சாப்பிடும் வழக்கம் இல்லை. அதனால் ரொம்பவும் யோசிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
    மிகத் தெளிவாக எளிமையான தமிழில் எழுதியிருக்கிறீர்கள். ஒரு நல்ல கட்டுரையைப் படித்து நிறைய விஷயங்களை அறிந்துகொண்ட திருப்தி ஏற்படுகிறது.
    பாராட்டுக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.