kamagra paypal


முகப்பு » தொழில்நுட்பம், வேளாண்மை

பசுங்குடில் பயன்பாடும், கொய்மலர் வளர்ப்பும், வர்த்தகமும் – ஓர் அறிமுகம்

கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை முடித்து 1995-ல் ஓசூரில் பிர்லா குழுமத்தின் மலர்ப்பண்ணையில் வேலைக்கு சேரும்போது தெரிந்திருக்கவில்லை கடலின் கரையில் கால்நனைக்கப் போகிறேன் என்று. இருபத்தோரு வருடங்கள் கடந்துவிட்டன; இன்னும் அலைப்பகுதியில்தான் இருப்பது போன்ற உணர்வு. கொய்மலர் வளர்ப்பின் பிரமிப்புகளும், வியப்புகளும், ஆச்சர்யங்களும் அறிமுகமான அந்த தொண்ணூறுகளின் பின்பாதி இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. ஓசூரில் பதினோரு வருடங்கள் முடித்து, மும்பைக்கு 2006-ல், ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் மலர்ப்பிரிவில் சேர்ந்தபோது எல்லைகள் அகலமாயின.

2011-ல் கென்யா வந்தபின்தான் மலர்த்துறையின் பிரமாண்டம் கண்முன் விரிந்தது.ஆச்சர்யங்களால் விரிந்த கண்களும் மனமும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

Kenya_Flowers_with Snow Bubble

எண்பதுகளில் கொய்மலர் வர்த்தகத்தின் தலைநாடான ஹாலந்திலிருந்து நிபுணர் குழு ஒன்று வந்து இந்தியாவெங்கும் சுற்றி ஆய்வு செய்து பசுங்குடிலில் கொய்மலர் வளர்ப்பதற்கான சாதகமான தட்பவெப்ப சூழல் எங்கு நிலவுகிறது என்று அறிக்கை ஒன்றை அரசுக்கு தாக்கல் செய்தது (ஆய்வில் விமான போக்குவரத்து வசதிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன). அதில் குறிப்பிடப்பட்ட இரு இடங்கள் –

1. பெங்களூர் சுற்றுப்புறம் (ஓசூர் வரை)

2. புனே சுற்றியுள்ள இடங்கள் (தலேகான் வரை).

கொய்மலர் வளர்ப்பிற்கு முக்கியத்தேவை சாதகமான தட்பவெப்பம். கடல்மட்டத்திலிருந்து 600 மீ முதல் 2800 மீ வரை உயரம் கொண்ட பகுதிகள் உகந்தவை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு; மும்பையின் பன்வெல் அருகே நான் வேலை செய்த “சம்பாலி” பண்ணை வெறும் 50 மீ உயரத்தில் அமைந்தது; உயரம் குறைவான பகுதிகளின் அமைந்த பண்ணைகளில் வளர்ப்பு சவால்கள் அதிகம்.

பசுங்குடில் அமைப்பதற்கு, சமதளமான நிலப்பரப்பிருந்தால் சௌகர்யம். கென்யாவின் மிகப்பெரும் அனுகூலம் கடல்மட்டத்திலிருந்து 1000 மீ மேலும் 3000 மீ வரை பல்லாயிரக்கணக்கான ஹெக்டர்கள் சமதளமாய் இயற்கை நிலப்பரப்பு. கொய்மலர் வளர்ப்பிற்கு லட்டு மாதிரியான சூழல்; கென்யாவின் முக்கிய அந்நிய வருவாய் கொய்மலர் ஏற்றுமதியில்தான். பசுங்குடில் அமைப்பது உள்ளே சீதோஷ்ணத்தை நாம் கட்டுப்படுத்தலாம் என்பதற்காகத்தான்; மேலும் வெளி இயற்கை இடர்களிலிருந்து (அதிக வெப்பம், தொடர்மழை) காப்பதற்கும்; உள்வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியஸிலிருந்து 30 வரை வைக்கப்படவேண்டும்; உள்காற்றின் ஈரப்பதம் 60 விழுக்காட்டிற்கு குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சொட்டுநீர்ப்பாசனமும், நீரில் கரையும் உரங்களும் அவசியமானவ. கொய்மலர் வளர்ப்பில் இயற்கை வேளாண்மையின் சாத்தியங்கள் குறைவு; ஆனாலும் முடியாதென்பதில்லை; ஆய்வுகளும் முயற்சிகளும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடுகள் இயற்கை முறையில் வெற்றிகரமாக செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் சுமார் 1800-லிருந்து 2000 மீ உயரத்தில் இருந்தாலும், பெரும் பண்ணைகளுக்கான பசுங்குடில்கள் அமைப்பதற்கேற்ற சமதள நிலப்பரப்பற்றவை. மேலும் கொய்மலர்கள் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைந்தவை; விமானநிலைய சிக்கல்களும் உண்டு. விமானநிலைய குளிர்கிடங்கு வசதிகள் முக்கியமானவை. இவ்விடங்களில் குறும்பண்ணைகள் அமைக்கலாம்; ரோஜாவல்லாமல், கார்னேஷன், ஜெர்பேரா, லில்லி, கிரைசாந்திமம் போன்ற இதர கொய்மலர்கள் வளர்க்கலாம். பசுங்குடில் அமைப்பதற்கும், சொட்டுநீர் பாசன வசதிக்கும், பண்ணையில் குளிர்சாதன அறைகள் அமைப்பதற்கும் அரசு APEDA, NABARD, தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும் சில துறைகள் மூலம் மான்யமும் கடன்களும் அளிக்கிறது.

Kenya_Flowers_2

தொண்ணூறுகளின் பின்பாதியிலும், நூற்றாண்டின் துவக்கத்திலும் ஓசூரில் கொய்மலர் உற்பத்தி உச்சத்தில் இருந்தது. நான் பணிபுரிந்த பிர்லா குழுமத்தின் பண்ணை, டாடாவின் “ஓரியண்டல்” பண்ணைக்கு அடுத்து 93-ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கொய்மலர்களோடு பசுங்குடில்களில் காய்கறி வளர்ப்பும் நடக்கிறது; அதுவும் லாபகரமான தொழில்தான். தற்போது ஓசூர் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகளின் குறும்பசுங்குடில் குடைமிளகாய் வளர்ப்பு ரோஜா கொய்மலர் வளர்ப்பிற்கு இணையாய் பிரசித்திபெற்றது. மரக்கட்டைகளாலும் பசுங்குடில் அமைக்கலாம்; ஆனால் வாழ்நாள் குறைவு. துத்தநாகம் பூசிய கால்வனைஸ்டு இரும்பு குழாய்களாலான பசுங்குடில்களின் வாழ்நாள் அதிகம்.

கொய்மலர் வர்த்தகத்தில் முதலிடம் ரோஜாவுக்குத்தான். ரோஜாக்களின் தரமும், உற்பத்தி எண்ணிக்கையும் பண்ணை அமைந்த கடல்மட்ட உயரத்திற்கு தகுந்தாற்போல் வேறுபடும். உயரம் அதிகமாக அதிகமாக தரம் அதிகரிக்கும்; ஆனால் உற்பத்தி குறையும். வளர்ப்பு பண்ணை அமைக்கும்போது, முதலில் எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறோம் என்று முடிவுசெய்வதிலிருந்து துவங்கவேண்டும். அந்த நாடுகளில் எந்த வகை அல்லது நிறங்கள் அதிகம் விற்பனையாகின்றன என்று கவனித்து அதற்கு தகுந்தாற்போல் தேர்வுசெய்து பயிரிடவேண்டும். பசுங்குடிலில் ரோஜாக்கள் ஒருமுறை நடவுசெய்தால் ஐந்தாறு வருடங்கள் தொடர்ந்து பூக்கள் அறுவடை செய்யலாம்.

கொய்மலர் வர்த்தகத்தில் இன்னொரு பிரகாசமான வருவாய் ஈட்டும் வழி, இடைநிலை விற்பன்னராய் வர்த்தகம் செய்வது. ஆர்டர் பிடித்து பல வளர்ப்பு பண்ணைகளிலிருந்து பூக்கள் வாங்கி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யலாம். எனக்கு தெரிந்து சிறிய அளவில் வாங்கி விற்க ஆரம்பித்த பலர் இன்று வருடம் ஒன்றிற்கு இரண்டிலக்க இலட்சங்களிலும், கோடிகளிலும் வியாபாரம் செய்கிறார்கள். இந்தியாவின் கொய்மலர் உள்நாட்டு விற்பனை வருடாவருடம் வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. கடந்த பிப்ரவரி காதலர் தின பருவத்தில் “தாஜ்மஹால்” என்ற சிவப்பு ரோஜா வகை, ஒரு பூ 18 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

உலக நாடுகளில் அதிகளவில் பூக்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடுகளில் முக்கியமானவை ஜெர்மனி, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ருஷ்யா மற்றும் ஸ்விஸ். சமீபத்திய இணைப்புகள் ஆஸ்திரேலியாவும், மத்திய கிழக்கு நாடுகளும். உலகின் மிகப்பெரிய மலர் விற்பனை மையமான நெதர்லாந்தின் ஆல்ஸ்மீர் மலர் ஏல மையத்தின் தோராய வருடாந்திர விற்பனை மதிப்பு ஐந்து மில்லியன் டாலர்களுக்கும் மேல். உற்பத்தி அளவிலும், தரத்திலும் இந்தியா எட்டிப்பிடிக்க வேண்டிய நாடுகள் கொலம்பியா, ஈக்வடார் மற்றும் கென்யா.

 

2 Comments »

  • பிரபு மயிலாடுதுறை said:

    ஆர்வமூட்டும் பதிவு.மலர் உற்பத்தி கூட செய்து விடலாம்.தமிழ்நாட்டில், தோட்டத்திலிருந்து விமான நிலையம் வரை கொண்டு செல்லும் பணியையும் உற்பத்தியாளரே செய்ய வேண்டியிருப்பது தாண்ட வேண்டிய ஒரு தடை.நண்பர்களுடன் இணைந்து பசுமைக்குடிலில் கொய்மலர்கள் உற்பத்தி செய்ய ஒரு திட்டம் உள்ளது.

    # 3 September 2016 at 4:10 am
  • Venky (author) said:

    வாழ்த்துக்கள் பிரபு.

    # 4 September 2016 at 4:20 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.