kamagra paypal


முகப்பு » எதார்த்தக் கதை, சிறுகதை

ஆழம்

viewingSky

தங்கை தான் இரண்டு மூன்று நாட்களாய் சொல்லிக்  கொண்டு இருக்கிறாள்.

அண்ணா மாலாயா பேத்தி தண்ணிக் குடத்தை கிணத்துல போட்டுட்டாண்ணா.  நீ கொஞ்சம் எடுத்துக் கொடேன்?

என்ன குடம்?

பித்தளை குடம்ணா?

அம்மாம் பெரிய குடத்தையா கிணத்தில போட்டிங்க?

இல்லைண்ணா. தண்ணி மேல கிடக்குன்னு குடத்தையே கட்டி இழுத்தா பாருண்ணா அப்படியே அறத்துகிட்டு உள்ள போயிடுச்சு

தண்ணி  வேற கிணறு முக்கா திட்டம் கிடக்கா? யாரும் எடுத்து தர வரமாட்டேன்னு சொல்றா.

இருக்கறதே ஒரே ஒரு செப்புக்குடம் தான். அதையும் கிணத்துல போட்டுட்டு பாலாயாவுக்கு பயந்துகிட்டு தே நிக்கறா பாரேன்.

என்னை பார்த்ததும் ஐன்னலோரம் முழுவதும் மறைத்துக் கொண்டாள். காதோரச் சுருள் முடியும், காதில் இருந்த லோலக்கும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

அண்ணா அது அவ அம்மாவோட குடமாம் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான நீ கொஞ்சம் வாயேன்?

சரி நீ போயி, அத யார்ட்டியாவது பெரிய தாம்பு கயிறா வாங்கி எடுத்துட்டு வர சொல்லு.

நான் கிணற்றடிக்கு போறேன்.

மாலாயா மருமகள் ஆன கிருஷ்ணாக்காவை நான் தான் கடைசியாக ஒரு நாள் மாலை கடலூர் செல்லும் சி.டி.பி பேருந்தை இடையில் நிறுத்தி ஏற்றி விட்டேன்.

பள்ளியிலிருந்து வந்தவுடனே கிருஷ்ணாக்கா அம்மாவிடம் அழுது கொண்டு இருந்ததை பார்த்தேன். கணவரும் மாமியாரும் வீட்டில் இருக்கக் கூடாது என்று வெளியில் இழுத்து விட்டு விட்டதாகவும் தான் மாமியாருக்கு செய்வினை செய்து கொண்டு இருப்பதாக யாரோ சொல்லிக் கொடுத்து உள்ளனர். அதனால் படியேறக் கூடாது என்கின்றனர். நான் எங்கள் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

கிருஷ்ணாக்கா மகள் ஆன இந்த சின்னப் பெண்ணை பார்க்கும் போது எல்லாம் மனம் கனக்கும்  எனக்கு. தாயிருந்தும் இல்லாமல் இந்தப் பெரியவர்கள் இப்படி செய்கிறார்களே? இந்த சின்னப் பெண்ணை நினைத்தாவது கிருஷ்ணாக்காவை அழைத்து வந்து இருக்கலாமே.  கடைசியாக நாம் தானே பஸ் ஏற்றி விட்டோம் பிறகு அந்த அக்கா வரவும் இல்லை நாம் பார்க்கவும் இல்லை. அந்த அக்காவாவது வந்து இருக்கலாம் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ?

தெருக்கோடியில் அவர்களது வீடு. சுற்றி நிஷாகந்தி பூக்களை உடைய முள் வேலி சுற்றி வாகைநாரயண மரங்கள், இனிப்பு நாரத்தை மரம் அதனோட்டி இருந்த கிளுவ மரத்தில் அடுக்கு மல்லி பந்தல் அதிலிருந்து வீசும் பூவின் மணம்

இரண்டு மாட்டுக் கொட்டைகள். கொட்டகைக் காலில் எருமைகள் கட்டி இருக்கும். அங்கிருந்து அடிக்கும் பசுஞ்சாணம் மணம் எல்லாவற்றையும் நுகர்ந்து கொண்டு அங்கே கோலிகுண்டு விளையாடிய போது பொட்டுக்கடலை,பொரி அரிசியும் கூம்பு போல் செய்து கிருஷ்ணாக்கா கையில் நிறைய வலையளிட்டு கன்னத்திலும் கையிலும் சந்தனம் பூசி நெற்றியில் குங்குமம் இட்டார்கள்.

அம்மா கூட வந்து இருந்தார் கையிலிருந்த வாழைப்பழம் எனக்கு தந்தார்கள்

என்ன விசேசம்மா? என்றதற்கு கிருஷ்ணாக்காவுக்கு வளைக்காப்புடா இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்கும் என்றார்கள்.

அப்போது பிறந்தவள் தான் இவள் தற்போது தெருமுனைக்கு வந்தவள் கிணறை நோக்கி விட்டு என்னைக் கண்டதும் தலையைக் குனிந்து கொண்டாள்.

சிலை போன்ற கருநிற மேனியில் ஒளி போன்ற நீல தாவணியில் அலைஅலையான கூந்தலை நேர்வாக்கு எடுத்து ஒத்த சடை பின்னி அடுக்கு மல்லிச் சரம் சூடி இருந்தாள். கிட்டே நெருங்கி வர வர பூவின் மணம் முன்னே வந்தது குப்பென்று.

இது நாள் வரை பேசியதே இல்லை

கயிறை அங்கே வைத்து விட்டு போ?

அதற்குள் தங்கையும் வந்து விட்டாள்.

நீங்க போங்க. நான் எடுத்து மேலே வந்த பிறகு வரலாம்.

கயிறை கிணற்றை ஒட்டியிருந்த பிச்சி மர அடியில் சுருக்கிட்டு மேலும் ஒரு முடி போட்டு கயிறை கிணற்றில் போட்டேன். முக்கால் திட்டம் தண்ணீர் ததும்பியது.

கிணற்றில் இறங்கச் சொல்லி அப்பாதான் பழக்கப்படுத்தியது. சின்னக் கிணறில் ஒரு நாள் குளிக்கத் தண்ணி மொள்ளும் போது வாளி அறுந்து விட்டது. அப்போது எனக்கு ஒரு பத்து பன்னிரண்டு வயசு இருக்கும். அருகில் இருந்த மற்ற வாளியில் என்னை அமரச் சொல்லி பயந்த என்னிடம் சத்ரபதி சிவாஜி புலி நகம் அணிந்து தப்பி வந்த கதையைச் சொல்லி உள்ளே இறக்கியது.

நான் பயத்தில் வாளியில் அமர்ந்து கொண்டு கயிறையும் பிடித்துக் கொண்டேன். அமர்ந்து இருந்த வாளி கிணற்றில் கிடந்த வாளி அருகே சென்றதும் யானை தும்பிக்கையை நீட்டி வாங்குவது போல் வாளியை ஏந்திக் கொண்டு ஏற்றம் போல் மேலே வந்தேன் சிரித்துக்கொண்டு. அப்போது தொடங்கியது தான் கிணற்றில் இறங்குவது. வாரம் தவறினாலும் மாதம் தவறாது.

கிருஷ்ணாக்கா மகள் என்று தெரியாமல் போய் விட்டது தெரிந்து இருந்தால் முன்பே எடுத்து இருக்கலாம்.

லுங்கியையும் சட்டையையும் கழற்றி உறை மேல் வைத்து விட்டு கிணற்றில் மேலே ஏறி கண்ணை மூடிக் கொண்டு குதித்தேன். சில்லேன்ற நீர் உடம்பில் மோதியது. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் ஆழத்தில் சென்று கொண்டு இருந்தேன் கால் தரையைத் தொடவில்லை தண்ணீரின் அழுத்தம் ஆழத்தை உணர்த்தியது. நுரையீரல் காற்றுக்கு தவித்து ஏங்கியபோது, தண்ணீரை மிக வேகமாக இரண்டு கையாலும் கீழே அழுத்தி இதோ இதோ என உயிராற்றலுக்கு மேலே வந்து

ப்பா… பா… ம்ம்ம் என மூச்சு வாங்கினேன்.

விளையாட்டு இல்லை எடுப்பது, தண்ணீர் எப்படியும் ஒரு முப்பது அடி இருக்கும் என்பதை மனம் கணக்கிட்டு விட்டது.

சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மூச்சையிழுத்துக் கொண்டு, நடுவில் இறங்கி இரண்டு கையாலும் நீரை மேலே தள்ளி ஒரே சீராக சென்றேன். கால் தரையைத்  தொட்டதும் இரண்டு கையையும் விரித்து ஒரே சுற்று கையில் அகப்பட்டதை பிடித்து கொண்டு தரையை பலம் கொண்ட மட்டும் உந்தியதில் மேல் நோக்கி சீறி மிதந்து நீந்தி மேல்மட்டம் வந்ததும் ம்ம்..ப்பா ..ப்பா என மூச்சு வாங்கினேன்.

சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு கையைப் பார்த்தால் இரண்டும் அலுமினிய தவலைகள்.

ஏமாற்றமாக இருந்தது, அதை கயிற்றில் முடிந்து மிதக்க விட்டேன். தொடர்ந்து மேலும் மூன்று முறை முயற்சித்து மேலும் அலுமினியத் தவலைகளே கிட்டின. எல்லாவற்றையும் கயிற்றிலே கட்டி மிதக்க விட்டேன்

செப்புக்குடம் மட்டும் கிட்டவில்லை நான் மிகவும் சோர்ந்து இருந்தேன், கிருஷ்ணாக்கா மகளின் ஏமாற்றமான முகம் கண் முன்பு தோன்றியது.

இனி முடியாது என்று இருந்த நான், கடைசியாக ஒரு முறை பார்ப்போம் என்று முழு ஆற்றலையும் பயன்படுத்தி உள்ளே சென்றேன். தரையை தொட்டதும் இம்முறை இரண்டு முறை கையை வட்டமாக சுற்றிய போது நெற்றியில் இடித்தது.  ஒரு கையால் பற்றி கொண்டு தரையை உதைத்து ஒரு கையால் தண்ணிரை தள்ளி மேலே வருவதற்குள் சுத்தமாகச் சோர்ந்து போய் மிகுந்த ம்ம்ம் …ப்பாஆ என்று மூச்சு வாங்கினேன்.

கிணற்று படியில் காலை ஊன்றி சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே பார்த்தேன். இரண்டு பேரும் கவலையோடு என்னைப்பார்த்துக்கொண்டு இருந்தனர். வரிசையாக வலையில் கட்டி இருக்கும் தக்கைகள் போல் மிதந்த அலுமினியத் தவலைகளைக் கையை காட்டி மேலே இழுக்க சொன்னேன்

இந்த தவலை அன்னம்மாவுது, இது மலரத்தையுது, இது பாலாக்காவுது. மிச்சம் இது எல்லாம் யாருதுன்னு தெரியலயே!

ஐயோ என்னோட செப்புக்குடம்?

ஏமாற்றத்தோடு வாடிய முகத்தோடு எட்டிப் பார்த்தவளுக்குத் தண்ணீரிலிருந்து செப்புக் குடத்தையெடுத்து காண்பித்தேன்.

அவள் முகம் பூப்போல் மலர்ந்தது.

அந்த செப்புக்குடத்தையும் கயிற்றில் பிணைந்து விட்டு மேலேயிழுத்ததும் தண்ணீரை விட்டு மேலே வந்து கிணற்று உரையில் காலை ஊன்றி நின்றேன். முழங்காலிலும் கையிலும் குச்சிகள் கீறி இருந்தது எரிந்து கொண்டு இருந்தது.

அப்போது

உங்க அண்ணனுக்கு அறிவே இல்லேடி?

ஏண்டி?  அப்படி சொல்ற?

பின்ன என்னடி செப்புகுடத்த எடுத்து வரவேண்டியது தான? ஊருது எல்லாம் எடுத்து இருக்காரு?…

***

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.