முகமது அலி

ட்டைப் பந்தாட்டத்தைக் கடக்காமல் சென்னையில் எப்படி ஒருவர் வளர்ந்திருக்கமுடியாதோ அதைப் போலவே, வடசென்னையில் குத்துச்சண்டையைக் கடக்காமல் ஒருவர் வளர்ந்திருக்கமுடியாது. வடசென்னைதான் பரம்பரைக் குத்துச்சண்டையின் தாயகம். அங்கே, எழுபதுகளின் துவக்கத்தில் முகமது அலிதான் ஆதர்ஷ நாயகன். சென்னையில் டாக்டர் பெசண்ட் சாலையில் ஒரு அல்வாக் கடையில் பாய் ஒட்டிவைக்கப்பட்டிருந்த தபால் அட்டை அளவு புகைப்படத்திலிருந்து, இன்று யூட்யூபில் தேடிப்பிடித்துப் பார்க்கும் குத்துச்சண்டைகள் வரையில் முகமது அலியின் மீதான எனது ஈர்ப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 
 
இன்றைக்கு ‘கதம்பத் தற்காப்புக் கலை’களில் (Mixed Martial Art) வீரர்கள் வீசத் துடிக்கும் நங்கூரக் குத்தின் (Anchor punch) பிதாமகன் முகமது அலி. கிட்டத்தட்ட தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் நேராக வீசப்படும் குத்து. முதன்முதலில் இந்தக் குத்தினை முகமது அலியிடமிருந்து  தாடையில் வாங்கி வீழ்ந்தவர் சன்னி லிஸ்டன். ஆண்டு 1965.
எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதான தோற்றத்தை உண்டாக்கி எதிரியை அழைத்து, எதிரி தாக்குவதற்கு வந்தவுடன் அதிவேகமாக எதிரியைத் தாக்கி வீழ்த்தும் வியூகம் இது.  இந்த வீச்சில் முகமது அலி, அவரேகூட தனது குத்து இத்தனை வேகத்தில் வீசப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, காரணம், தான் குத்தினை வலக்கரத்தால் வீசிய பின் தனது எதிராளி (சன்னி லிஸ்டன்) வீழும்போது தன்னுடைய இடக்கரத்தால் இன்னொரு குத்தினையும் வீசிவிடவேண்டும் என்னும் முனைப்புடன் சன்னி லிஸ்டன் வீழும் திசையில் தனது இடக்கரத்தை வீசினார், ஆனால், அது காற்றில்தான் வீசப்பட்டது. அலியின் அடுத்த குத்தும் சன்னியின் தாடையும் சந்திப்பதற்குள் சன்னி வீழ்ந்துவிட்டார். முதலில் வீசப்பட்ட குத்தில் அத்தனை வேகம். நேரில் இந்தக் குத்துச்சண்டையைப் பார்த்தவர்கள் முகமது அலி வீசிய குத்தினைப் பார்க்கவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள். நொடியின் தசமப் பகுதிகளுக்கும் குறைவான வேகம்.
பின்னர் ஒரு குத்துச்சண்டையில் இப்படியான வீச்சினை வீசி முகமது அலி வென்றிருந்தாலும், வல்லுனர்கள் அதனை நங்கூரக் குத்தென ஏற்கவில்லை.
குத்துச்சண்டை வீரர்களின் உடலமைப்பில் வீச்சு எல்லை (reach) என்னும் ஒரு அளவைக் குறிப்பிடுவார்கள். கையின் நீளம் என்று சொல்லலாம். பாரம்பரியப் பாணியில் குத்துகளின் எல்லை வீச்செல்லைக்குள்தான் இருக்கும். முகமது அலியின் பாத அசைவுகள் (foot work) மிகவும் வேகமானவை. வேகமான பாத அசைவுகளுடன் குத்துகளை வீசும்போது வீச்சின் திசையின் கொஞ்சம் சாய்ந்து தனது வீச்செல்லையை அதிகமாக்கிக்கொள்வதும் முகமது அலியின் பாணியாக இருந்தது.
இணையம் இல்லாத அந்நாள்களில், சின்னச்சின்னப் பெட்டிச் செய்திகளாக நமது தமிழ்த் தினசரிகளும், வாரப் பத்திரிகைகளும் முகமது அலி தொடர்பான செய்திகளைத் தந்துகொண்டேதான் இருந்தன. குமுதம் இதழில் முகமது அலியின் கரத்தின் முட்டியுடைய (fist) முழு அளவு படத்தைப் பதிப்பித்திருந்தார்கள். நமது கரத்தை அதில் வைத்து அளவு பார்த்துக்கொள்ளலாம் என்னும் குறிப்பும். இந்தக் குறிப்பு சொல்லப்படாவிட்டாலும் நான் எனது கரத்தை அந்தப் படத்தில் வைத்து அளவு பார்த்திருப்பேன்.
பாரம்பரிய குத்துச்சண்டைப் போட்டிகளிலிருந்து மாறுபட்டு மல்யுத்தத்திற்கும் குத்துச்சண்டைக்கும் போட்டி ஒன்று வைக்கப்பட்டது. அண்ட்டோனி இனோகியும் (ஜப்பானியர்), முகமது அலியும் போட்டியிட்டனர். எழுபதுகளின் மத்தியில் நடந்த இந்தப் போட்டியின் முடிவினைத் தெரிந்துகொள்வதற்காக வானொலி கேட்போரைத் தேடிச் சென்று செய்தியைக் கேட்ட நிலை.
சென்னையில் இருந்த முகமது அலி ரசிகர்கள் மிகவும் மகிழ்ந்தது எழுபதுகளின் இறுதியில் தேவி திரையரங்கில் திரையிடப்பட்ட ‘தி கிரேட்டஸ்ட்’ திரைப்படத்தால்தான். திரைப்படங்கள் பார்க்கையில் வரும் செய்திக் கதம்பங்களில் எபோதாவது காட்டப்படும் சில வினாடி குத்துச் சண்டைக் காட்சிகள் தவிர்த்து முதன் முறையாக முகமது அலியின் போட்டிகள் பலவற்றை ஒன்றரை மணி நேரம் திரையில் பார்ப்பதென்பது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயம். வாய்வழிச் செய்தியாக மட்டும் கேள்விப்பட்டிருந்த ஜோ ஃப்ரேசர், ஜார்ஜ் ஃபோர்மென், கென் நார்ட்டன் இவர்களுடைய குத்துச் சண்டைகளைப் பார்த்த பிரமிப்பை எங்கள் நட்பு வட்டத்தில் வாரக்கணக்கில் கதைகதையாகப் பேசித்தீர்த்தோம். ஒரு குத்துச் சண்டை வீரர் போட்டியிட்ட சண்டையைப் படம் பிடித்து அதனைப் போட்டுப் பார்த்து செய்த தவறுகளைத் திருத்திக்கொள்வதைப் பார்ப்பதெல்லாம் இன்றைக்கு மிகவும் சாதாரணமான நிகழ்வுகள், ஆனால், அவற்றை அன்று திரையில் பார்த்தபோது ஏற்பட்டது அளவில்லாத ஆச்சரியம்.
‘தி கிரேட்டஸ்ட்’ படத்தின் பாதிப்பு நீண்ட நாள்களுக்கு எங்களிடம் தங்கியிருந்தது. தங்கப் பதக்கத்தை நதியில் வீசும் காட்சியும், உணவகத்தில் தன்னை வம்புக்கு அழைப்பவர் மீது எந்தக் குத்தும் வீசாமல் அவரது குத்துகளை, முகமது அலி, தனது உடலசைவால் தவிர்க்கும் காட்சியும் நினைவில் நிரந்தரமாகிப்போனது.
இன்றைக்கு அதிநவீன உடற்யிற்சிக்கூடங்கள் (fitness centre) பரவலாகக் காணக்கிடைக்கும் சென்னையில்தான், குத்துப்பை (punching bag, bag kit) வைத்துக்கொள்ளும் வசதியில்லாமல் மணல் மூட்டைகளைத் தொங்கவிட்டு சென்னை மாநகராட்சி உடற்பயிற்சிக்கூடங்களில் குத்துப் பழகிய நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். நண்பர்களின் சகவாசத்தால் குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது இப்போது பழங்கதையாகிப் போனாலும், முகமது அலியின் மீதான ஈர்ப்பு மட்டும் இன்றைக்கும் சிறிதளவும் குறையவில்லை.
முகமது அலி இன்றைக்கு நம்மிடையே இல்லை என்பதை கனத்த மனதுடன் ஏற்று கடந்துசெல்லத்தான் வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.