விட்டுச் செல்வோர்

மிஷேல் குஓ, ஆல்பர்ட் வூ

வரலாற்றாளர் எட்வர்ட் பாமர் தாம்ப்ஸன் (எ.பா.தாம்ப்ஸன் என்று அறியப்படுபவர்) உழைக்கும் மக்களை ‘வருங்காலத்தின் பிரும்மாண்டமான குனிந்து நோக்குதலிலிருந்து’ தான் காப்பாற்ற விரும்புவதாகத் தெரிவித்து எழுதியவை பிரபலமான வார்த்தைகள்.  எ.பா. தாம்ப்ஸனைப் பொறுத்தவரை குரலில்லாதவர்களுக்குக் குரலாக இருப்பதும், அவர்களுடைய அன்றாட வாழ்வு எனும் சாகசப் போராட்டங்களை மறு உருவாக்கம் செய்து காட்டுவதும் ஒரு வரலாற்றாளரின் வாழ்வுக் கடன். ‘நாயகர்களின்’ சாகசக் கதைகளை எழுதும் மரபு வழி வரலாறுகளால் கவனிக்கப்படாமல் விடப்பட்டவர்களின் அனுபவங்களை பிழையில்லாமல் முழுதுமாகச் சேகரித்துப் பதிவு செய்வதுதான் வரலாறு எழுதுவதன் நோக்கமே என்று அவர் கருதினார்.
எலினா ஃபெர்ராண்டேயின் கொண்டாடப்படும் நான்கு நியபாலிடன் நாவல்களின்1 தொகுப்பில் மூன்றாவதும், மிக வெளிப்படையாகவே அரசியல் பேசுவதுமான ’தோஸ் ஹூ லீவ் அண்ட் தோஸ் ஹூ ஸ்டே(ய்)” எனும் நூலில் , இலக்கியத்தால் தாம்ப்ஸனின் சவாலை ஏற்றுப் பதிலளிக்க முடியுமா என்று சோதிக்கிறார் ஃபெராண்டெ.  அவர் கேட்கிறார்: எழுத்தால் வாழ்வைக் கைப்பற்றி விட முடியுமா? குரலற்றோருக்கு அதனால் குரல் கொடுக்க முடியுமா? (நாவலில்) கதைக் குரலாக வருபவரான எலினா க்ரேகோ, அவரும் ஒரு எழுத்தாளர், எடுக்கும் கதைப் பொருள் தாம்ப்ஸனால் தக்க இலக்காகக் கருதப்படும்:  அது இவருடைய உற்ற தோழியான லீலா. நேபிள்ஸ் நகரை விட்டு நீங்கி ஒரு பெயர் பெற்ற பல்கலைக்குப் படிக்கப் போகும் எலீனாவைப் போலன்றி, லீலாவின் படிப்பு ஐந்தாம் வகுப்போடு நின்று விடுகிறது, அவளுடைய பெற்றோர் மேலும் படிப்பதற்குச் செலவு செய்ய மறுக்கிறார்கள். காலப் போக்கில் லீலா உள்ளூரில் ஒரு மளிகைக் கடைக்காரரை மணம் செய்து கொள்கிறார், பின்னர் தன் விவாகரத்துக்குப் பிறகு, இரண்டு பெண்களும் வளர்ந்த அதே ஊர்ப்பகுதியில் தங்கி இருக்கிறார். சில காலத்துக்கு பதனிட்ட இறைச்சியைத் தயார் உணவாக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்.
லீலாவோ தன்னைப் பற்றி எழுதப்படுவதை விரும்புவதில்லை. “நீ என்ன எல்லாம் தெரிந்தவளாக காட்டிக் கொள்கிறாயா- ஒழுக்க போதனையாளியாகிறாயா? … நம்மைப் பற்றி நீ எழுத விரும்புகிறாயா? (அல்லது) என்னைப் பற்றி எழுத விரும்புகிறாயா?” நாவலின் துவக்கத்தில் இப்படிக் கேட்கிறார்.  இருவரும் அறுபது வயதுகளில் இருக்கிறவர்கள். “என்னைச் சும்மா இருக்க விடு லீனு. நாம் எல்லாம் அப்படியே இருக்கலாம். நாம் மறைய வேண்டியவர்கள், எதையும் பெறுவதற்கு நாம் உரியவர்களல்ல,” என்கிறார் அவர். “இதைச் செய்யத் துணியாதே, எனக்குச் சத்தியம் செய்து கொடு.”
“நான் யாரையும் பற்றி எழுத மாட்டேன், உன்னைப் பற்றியும் எழுதவில்லை.” எலீனா உறுதி கொடுக்கிறார்.
ஆனாலும் லீலாதான் எலீனாவின் இலக்காகிறாள்- நாம் அவளைப் பற்றியே படிக்கிறோம். இந்தப் புத்தகத்தின் மீது கவியும் நிழல், எலீனா எப்படி லீலாவின் எதிர்ப்பை மறுக்கிறாள், அதன் மூலம் நம்மையும் இந்த நம்பிக்கைத் துரோகத்தில் சிக்க வைக்கிறாள் என்பது பற்றிய கேள்விதான்.
யார் கண்ணுக்கும் அகப்படாமல் உலவும் ஃபெராண்டே, இத்தாலியில் உயிருடனிருக்கும் எழுத்தாளர்களிலேயே மிகப் பிரபலமானவர் என்று நாம் சொல்லக் கூடும். அவர் ஒரு மர்மம் நிறைந்த உரு- ஒரு புனைபெயரில் எழுதுகிறார், அவருடைய அந்தரங்கத்தை மிக்க ஜாக்கிரதையோடு காத்து வருகிறார். விமர்சகர்கள் இவருடைய பெண்ணியத்துக்காகவும், மேலும் பெண்களிடையே உள்ள நட்பின் அச்சுறுத்தலான நெருக்கத்தைக் கைப்பற்றி விடும் இவரது திறமைக்காகவும், இவரைப் புகழ்ந்திருக்கிறார்கள்.
இதற்குச் சமமான கிளர்ச்சியூட்டுவதான, ஆனால் குறைவாகவே விவாதிக்கப்பட்டதான ஒரு பொருள் உண்டு, உலகப் போருக்குப் பின் இத்தாலியின் சமூகத்தின் மீது இருபதாம் நூற்றாண்டின் கருத்தியல்கள் என்னவொரு கழுத்து நெறிப்பு போன்ற பிடியைக் கொண்டிருந்தன என்பதை ஃபெராண்டே எவ்வளவு திறம்படச் சித்திரிக்கிறார் என்பதுதான் அது. இந்த நாவல்களில் நெடுகவும், நேபிள்ஸ் நகரத்துச் சுற்றுப்புறங்கள் எனும் கண்ணாடிவில்லை வழியே இத்தாலிய அரசியல் மோதல்களைப் பார்க்கிறோம்:  ஃபாஸிஸ்ட் ஸோலாராக்களும், கார்ராச்சீக்களும், கம்யூனிஸ்டு என்ஸோ, மேல்மட்டத்துத் தாராளவாதியான ஐரோடாஸ், தீவிரக் கலக-கம்யூனிஸ்டுகளான பாஸ்க்வாலும் நாதியாவும், மேலும் துவக்கநிலை நடுத்தர வர்க்கத்தினளான எலீனா (ஆகியோரிடையே). கருத்தியல்கள் இவர்களின் வாழ்வுகளை ஊடுருவுகின்றன, சிலரின் சுய வரையறுப்புக்கு உருக்கொடுக்கின்றன, வேறு சிலருக்கோ சுய நியாயப்படுத்தலுக்கு வசதி செய்து கொடுக்கின்றன. இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைவரிலும் லீலா ஒருத்திதான் (எந்த) ஒரு அரசியல் வகைமாதிரிக்குள்ளும் முழுதாகப் பொருத்தப்பட முடியாதவளாக இருக்கிறாள்: அவள் அரசியல் முத்திரைகளை மீறுகிறாள், புரட்டிப் போடுகிறாள், மற்றோர் எல்லாரையும் மீறி எழும் அச்சம் தரும் உருவாக இருக்கிறாள், அவர்களுடைய பற்பல புனிதத்தலங்கள் மீது எச்சில் துப்புபவளாக இருக்கிறாள்.
ஒருக்கால், சமீப கால இலக்கியத்தில், வேறெந்தப் பாத்திரத்தையும் விட லீலாதான் நீட்ஷாவுடைய சித்தம் என்பதற்குப் பிரதிநிதியாக இருக்கிறாள், தூயதும், வன்முறை நிறைந்த சக்தியுமான ஒரு உரு, எல்லாச் சக்தியும் உடையவளாக, சிறிதும் அச்சமற்றவளான ஒரு பாத்திரமாக இருக்கிறாள். லீலா ஒரு பெண் மீமனுஷி (Übermensch). பொய்க் கடவுளரைப் பொறுக்க மாட்டாதவள். அந்த நகரில் சௌக்கியமான வாழ்க்கையை ஆபத்தில்லாத முறையில் பெறுவதை உறுதி செய்ய உதவும் கருத்தியலாக அது இருந்த போதும், ஃபாசிஸத்தை விலக்குகிறாள்- சிறுமியாக இருந்த போது, மார்ச்செல்லோ ஸோலாராவின் கழுத்தில் கத்தியைப் பதிக்கிறாள், அவனோ நகரில் அனைவரும் அடிபணியும் ஃபாசிஸ்டுகளின் மகனாக இருக்கிறான். தன் ஒரே அரசியல் உரையைத் துவக்குகையில் உழைக்கும் வர்க்கம் என்பது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கிண்டலோடு துவங்கும் அவள் கம்யூனிசத்தையும் ஒதுக்குகிறாள், இவளை மிக்க மதிப்போடு பார்க்கிறார்கள் என்ற போதும் அதன் சார்பாளர்களை ஏளனமாகப் பார்க்கிறாள். புத்தித் தெளிவு கொடுப்பதற்கு வழி என்று கல்வியைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் கருத்தையும் ஒதுக்குகிறாள்- எலீனாவின் ஆசிரியரிடம் இவள் சொல்வது இது: “உங்களைப் போலப் பேராசிரியர்கள் கல்வியை இத்தனை தூரம் வலியுறுத்துவது ஏனென்றால், அதன் மூலம்தான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், ஆனால் படிப்பதால் ஒரு பயனும் இல்லை, அது ஒருத்தரை மேம்படுத்துவது கூடக் கிடையாது- இன்னும் சொன்னால் அது ஒருவரை கெடுமதியாளனாகத்தான் ஆக்குகிறது.” கடைசியாக தீவிர பெண்ணியத்தையும் ஏற்கவில்லை, ஏனெனில் அது மறுதலிக்கும் பல விஷயங்களில் நெருக்கக் குடும்பமும் இருக்கிறது. காதலனான நீனோ சார்ரடோர்ரெக்காக எலீனா தன் கணவனையும், குழந்தைகளையும் விட்டு நீங்க முடிவெடுக்கும்போது லீலா வெடிக்கிறாள். லீலாவைப் பொறுத்தவரை இது விடுதலை இல்லை, முட்டாள்தனம்:

நீனோவுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறியப் போகிறாயா நீ? …உனக்கு என்ன ஆகப் போகிறது என்று உனக்குத் தெரியுமா? அவன் உன்னைப் பயன்படுத்திக் கொள்வான், ரத்தத்தை உறுஞ்சுவான், உனக்கு வாழ இருக்கும் விருப்பத்தை ஒழிப்பான், பின் உன்னைக் கைவிட்டு விடுவான். நீ எதற்காக அவ்வளவு படித்தாய்? என் சார்பில் நீயாவது வாழ்க்கையை மகிழ்வோடு அனுபவிப்பாய் என்று நான் கற்பனை செய்து கொண்டிருந்தேனே, அதெல்லாம் என்ன மயிருக்கு? நான் தப்பு செய்தேன், நீ ஒரு முட்டாள்.

1960களில் லீலாவே தன் கணவன் ஸ்டெஃபானோ கார்ராச்சியை விட்டு வந்து விட்டாள், அவன் ஒரு ஃபாசிஸ்டின் மகன் – இது மரபை ஒட்டி வாழும் அவளுடைய கதோலிக்க அக்கம்பக்கத்தாருக்குப் பெரும் அவச்செயலாகத் தோன்றியது. நாம் இதை தைரியமான முடிவெடுப்பு என்று தீர்மானிக்கக் கூடுமென்றாலும், அவள் இதைத் தோல்விக்கான ஒப்புதலாகவே பார்க்கிறாள்.”   [அவர்களின் நண்பன் என்ஸோவிடம்] சொல்லு, நான் [இருக்கவே] முயற்சி செய்தேன், ஆனால் என்னால் முடியவில்லை,” என்று தோழி எலீனாவிடம் அவள் சொல்கிறாள். “ஸ்டெஃபானோ, தான் என்ன செய்கிறோம் என்று கூட அறியாமல், என்னையும், குழந்தையையும் கொன்று விடுவதற்கு முன்னதாக, நான் இந்த வீட்டை விட்டுப் போய்விட வேண்டும்.” பெண்ணிய விழித்தெழலொ, அல்லது வேறெந்த கருத்தியல் பிணைப்போ லீலாவின் தேர்வை உந்தவில்லை. மாறாக, அவளை அவசியமே, எந்த விதத் தளையிலும் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிக்க எழும் அனாதி காலத்து விருப்பே உந்துகிறது.
லீலாவின் சக்தி கட்டுப்பாடற்ற உள்ளுணர்வையும், கனலாய்ச் சுடும் புத்திக் கூர்மையோடு இணைத்துருக்க முடிகிற அவளது திறமையிலிருந்து எழுகிறது. அவளுடைய காந்தச் சக்திக்கு ஒரு சான்று, அவளை எல்லாப் பட்சங்களும் தம்மோடு சேரச் சொல்லி ஈர்க்க முயல்கிறார்கள் என்பதே. தங்கள் இயக்கத்தில் இவளைச் சேர்க்க விரும்பும் பாஸ்க்வெல் என்னும் கம்யூனிஸ்ட், “உன்னை மாதிரிப் பெண் யாருமில்லை, நீ வாழ்விற்குள் அப்படி ஒரு வேகத்தோடு பாய்கிறாய், அது போல சக்தி எங்கள் எல்லாரிடமும் இருந்தால், உலகம் என்றோ மாறி இருக்கும்,” என்கிறார். மேலும் (சொல்வது) “இந்த வட்டாரத்தில் கார்ராக்கிகளையும், சோலாராக்களையும் நீ முகத்திலடித்தது போல யாரும் செய்ததில்லை, நான் உன் பக்கம்தான் இருக்கிறேன்.”  அதே போல ஃபாசிஸ்டான சோலாராக்கள் (குடும்பத்தினர்) லீலாவின் நம்பிக்கையைப் பெற விடாது முயற்சி செய்கிறார்கள். அந்த வட்டாரத்தில் மிக சக்தியும் பெரும் செல்வமும் கொண்டவரான மிச்செல் சோலாரா, லீலாவின் மேதமையை அங்கீகரிப்பதோடு, அதைத் தன் தனிப்பட்ட விருப்புகளுக்கும், அரசியல் மற்றும் பண லாபங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறான். லீலா இவனை மறுபடி மறுபடி உதறித் தள்ளுகிறாள்.
தனக்கிருக்கும் எல்லா அரசியல் தேர்வுகளையும் லீலா உதறித் தள்ளுகிறாளென்றால், அவளுடைய அரசியல் நிலைதான் என்ன? புரிந்து கொள்ளக் கடினமான இந்தக் கேள்விதான் ஒருவேளை புத்தகத்தின் மீது கவிந்து நிற்கிறதோ என்னவோ.
ஃபெர்ராண்டெ அரசியல் செயலுக்கு லீலா தயாராகி நிற்பது பற்றி ஒரு சிறு அளவு நமக்குப் பார்க்கக் கொடுக்கிறார். தொழிலாளர்களைத் திரட்டி எழுப்ப நடக்கும் ஒரு கூட்டத்தில் லீலா ஒரு உரையாற்றுகிறாள். (அவள் லட்சியவாதத்தால் உந்தப்பட்டு இப்படிச் செய்யவில்லை, மாறாக முன்பு தனக்குக் காதலில் போட்டியாக இருந்த ஒருத்தியின் மீதுள்ள வெறுப்பால் இதைச் செய்கிறாள்.) அந்த தயாரிப்பு மாமிசத் தொழிற்சாலையில் வேலை செய்யும் தன்னையும், இதரத் தொழிலாளர்களையும் பற்றி அவள் சொல்வது இது,” ஈனத்தனத்தைத் தவிர கற்பதற்கு ஏதும் இல்லை.”  அவள் தன் உரையால் கவர்ந்து இருக்கிற, பேசி முடித்ததும் அவளைப் பாராட்டுகிற ஒரு கூட்டத்திடம் கேட்கிறாள், மோர்த்தடெல்லா பன்றி மாமிசத்தைச் சமைத்த தண்ணீர் இடுப்பு வரை இருக்கும்படி நின்றபடி ஒரு நாளில் எட்டு மணி நேரம் செலவழிப்பது என்பதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? உங்கள் மேலாளரும், காவலரும் (சோதிக்கவோ, வேறு மோசமான நோக்கத்தோடோ) உங்கள் உடலைத் துழாவித் தடவுவது எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மிருகங்களின் எலும்புகளில் ஒட்டி இருக்கும் மாமிசத்தை வெட்டி எடுப்பதில் உங்கள் விரல்கள் பூராவும் சிறு வெட்டுகளால் மூடப்படுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஜீரோவுக்குக் கீழே இருபது டிகிரிகள் இருக்கும் குளிர்பதன அறைகளுக்குள் போய்ப்போய் வருவதையும், அதற்காக மணிக்குப் பத்து லியரெ (பணம்)- குளிருக்காக ஈடு கட்டுவதற்கு- பெறுவதையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இதை எல்லாம் கற்பனை செய்ய முடிந்தால், அப்படி வாழும்படி கட்டாயத்தில் இருக்கும் மக்களிடமிருந்து கற்க என்ன இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ma
லீலாவின் இந்த உரை நாவலில் இருக்கும் காட்சிகளில் மிக்க தாக்கம் உள்ள ஒரு காட்சி, ஏனெனில் அவளுடைய மேதமை மேடையேறுகிறது, அவளுடைய பல வகைப் புத்திசாதுரியமெல்லாம் ஒன்றாக்கப்பட்ட மேதமை அது: எதார்த்தத்தை அடிவயிறுவரை தாக்கும் விதமாக வருணித்தல், பிறர் பேச்சில் உள்ள போலித்தனத்தை அம்பலமாக்குதல், மக்களைப் புறம் தள்ளி நிறுத்தி அதன் மூலம் தன்பால் கவர்தல் ஆகியன இவை. யாரிடம் பேசுகிறாளோ அவர்களை நிராகரிப்பதன் மூலம் அவளுக்கு ஒரு காந்த சக்தி கிட்டுகிறது. எ.பா. தாம்ப்ஸன் இந்த வகை வரலாற்று நபரைத்தான் பார்வைக்குக் கொணர்ந்து, அவர்களின் சார்பில் நாம் பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் லீலாவோ தாம்ப்ஸனின் விருப்பத்திலிருந்து பின்வாங்குகிறாள். இதை உங்களால் கற்பனை செய்ய முடியுமென்றால், வேறு என்ன கற்கவிருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  ஏதுமில்லை- உங்களால் என்னிடமிருந்து எதையும் கற்க முடியாது, இதைத்தான் அவள் சொல்வதாகத் தோன்றுகிறது.
நமது கதாநாயகி அரசியல் மாறுதல் குறித்து இப்படி ஒரு அவநம்பிக்கை கொண்டிருக்கிறாளென்றால், ஃபெர்ராண்டெ நமக்கு ஏதாவது நம்பிக்கை தருகிறாரா? இப்புத்தகங்களில் மகிழ்ச்சிக்கான ஓர் அபூர்வமான வாய்ப்பாக கற்பதுதான் இருக்கிறது. எழுதும்போது எலீனா காலம் என்பதை மறக்கிறாள்: கணினி அறிவியலைத் தானாகவே கற்கையில் லீலா,”ஒவ்வொரு நாளும் மேன் மேலும் கிளர்ச்சியடைகிறாள்…கீழ்மை நிறைந்த மொத்த உலகையும் சுழியமும், ஒன்றும் கொண்டிருக்கும் உண்மைக்குச் சுருக்கி விடும் அவசரம் பீடிக்கிறது அவளை.” ஆனால் இந்தத் தனிநபர் வளர்ச்சிப் பாதை உலகைச் சந்திக்கும்போது, மாயாஜாலம் அழிகிறது. கருத்து உருவாக்குவது அல்லது எழுதுவது அல்லது பேசுவது ஆகியன எல்லாம் குறைப்பட்டன, பொய்ப் புகழ்ச்சி நிறைந்தன, அல்லது விற்பனைப் பொருளாக்கப்பட்டன. ஓர் இலக்கியப் பரிசை வென்ற பின் எலீனா, தான் நிலாவில் நடந்த விண்வெளியாளர்களைப் போல சந்தோஷமாக உணர்வதாக அறிவிக்கிறாள். லீலா, இந்த உணர்ச்சி வசப்படுதலை முட்டாள்தனம் என்று கண்டு கொள்கிறாள்.  சந்திரன் என்பது எத்தனையோ மிலியன் கற்களைப் போல இன்னொரு கல் என்று அவள் சொல்கிறாள். மாறாக, “பூமியின் தொல்லைகளில் உன் கால்களை ஊன்றி நிற்க வை,” என்று கண்டிக்கிறாள்.
எலீனாவைப் போலவே லீலாவும் தன் தனி நபர் முயற்சியால் கற்றவை – கணினித் துறையில் அவளுடைய கல்வியறிவு – உலகத்தோடு சேர்கையில் களங்கப்பட்டு விடுவதைக் காண்கிறாள். ‘தோஸ் ஹூ லீவ் அண்ட் தோஸ் ஹூ ஸ்டே(ய்)’ புத்தகத்தின் இறுதியில், லீலாவின் கணினித் திறன் அவளைத் தனவதியாக ஆக்கி இருக்கிறது.  ஃபாசிஸ்டான மிஷெல் ஸோலாரா அவளைத் தங்கள் தொழிற்சாலைகளில் ஒன்றில் தொழிலாளர்களைச் சீர்ப்படுத்தும் (streamline) தொழில்பிரிவின் தலைவராக அறிமுகப்படுத்துகிறான். வெற்றி பெற்றவளாக லீலா முன் நிறுத்தப்படுகிறாள்- அவள் இப்போது மாதத்திற்கு 450,000 லீயர்ரெக்கள் சம்பாதிக்கிறாள். லீலாவை வெகு நாட்களாக வென்றெடுக்க முயன்று கொண்டிருந்த மிஷெல், இறுதியாக அந்தப் பரிசைப் பெற்று விடுகிறான். போர்க்காலத்துக்குப் பிந்தைய இத்தாலியைப் பற்றிய முடிவில்லாத இருண்மை நிறைந்த ஒரு சித்திரிப்பில், மிஷெலுக்குப் பணியும் லீலாவைக் காட்டும் இடம்தான் இருப்பதிலேயே மிக இருண்ட, சிறிதும் நம்பிக்கை தராத காட்சி.  தன் விருப்புகளையே தொடர்பவளும், மிக்க திறமைசாலியும், எல்லா விதிகளையும் உடைத்தெறியக் கூடியவளும், உலகைத் தன் விருப்புக்கு வளைக்கக் கூடியவளுமான லீலா கூட இறுதியில் எந்திரத்தின் ஒரு பகுதியாகி விடுகிறாள். இங்கு ஃபெராண்டே, உங்கள் நம்பிக்கைகளை எந்த அரசியல் கட்சிகளிடத்தும் வைக்காதீர்கள், எந்த அரசியல் முத்திரைகளையும் நம்பாதீர்கள், ஏன் அரசியல் என்னும் நடப்பையே நம்பாதீர்கள் என்று சொல்வதாகத் தோன்றுகிறது. நீட்ஷாவின் உயர்மனிதர் கூட வரலாற்றின் சக்திகளுக்குப் பலியாகித்தான் தீர வேண்டும்.
’தோஸ் ஹூ லீவ் அண்ட் தோஸ் ஹூ ஸ்டே(ய்)’ நாவலில் குறிப்பாக ஒரு கணம் அவளுடைய தோல்வியை முன்னதாகச் சுட்டுகிறது.  லீலாவின் தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் நான்கு மாணவர்கள் அவளுடைய உரையைக் கொண்ட பிரசுரத்தை விநியோகிக்கிறார்கள். (இந்தப் பிரசுரம் அதனளவில் அவளுக்கு உவப்பைத் தரவில்லை, அவளுடைய மேலாளரிடம் அவளுக்குத் தொல்லையைக் கொணர்கிறது, மேலும் அதைச் சூழ்ந்துள்ள பொருட்கள், அவளுடைய பார்வையில், கேவலமான பசப்பலாகத் தெரிகின்றன.) மாணவர்களை அடித்துத் துவைக்க, அவளுடைய வட்டாரத்திலிருந்து ஒரு கும்பல் வருகிறது. அவர்கள் சங்கிலிகளையும், உலோகத் தடிகளையும் கொணர்கிறார்கள். லீலாவின் சிறுமிப் பிராயத்தில் தெரிந்திருந்தவனான ஜீனோ, எலீனாவின் வீட்டுப் பாடத்தைக் காப்பி அடித்தவனும், எலீனாவின் முலைகளைப் பார்க்கப் பணம் தருவதாகச் சொன்னவனும், பின்னர் எலீனாவின் முதல் காதலனாக ஆனவனுமான ஜீனோவை அந்தக் கும்பலில் பார்த்து லீலா திடுக்கிடுகிறாள். ஜீனோ வளர்ந்து, சிறுமதி கொண்டவனாக ஆகி இருக்கிறான். ஒரு மாணவனைப் பின்னாலிருந்து கம்பால் அடிக்கும் ஜீனோ, லீலாவின் முகத்தில் துப்பி அவளை ‘நாய்’ என்று அழைக்கிறான். அவன் இப்போது உள்ளூர் ஃபாசிஸ்டுகளுடைய ஏவலைச் செய்பவனாக ஆகி இருக்கிறான்.

ஃபாசிஸ்டுகள் அனேகமாகச் சுற்றுப்புறத்திலிருந்தே வருபவர்கள், லீலாவுக்கு இவர்களில் சிலரைத் தெரியும். ஃபாசிஸ்டுகளானவர்கள்,  ஸ்டெஃபானோவின் அப்பாவான டான் அகில்லெ, ஸ்டெஃபானோவே இப்படித்தான் ஆகியிருந்தான், ஸோலாரா குடும்பத்தினரும்தான், தாத்தா, அப்பா, பேரன் எல்லாரும், சில சமயங்களில் முடியாட்சியின் ஆதரவாளர்களாகவோ, சில நேரம் கிருஸ்தவ ஜனநாயகத்தினர் போலவோ, அவர்களுக்கு வசதிப்பட்டபடி செயல்படுவர்.  சிறு பெண்ணாக இருந்த நாளிலிருந்தே, அவள் அவர்களை வெறுத்து வந்திருக்கிறாள்…. ஏனெனில் அப்போதே அவர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கும், எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டவும் வழி ஏதும் இல்லை என்பதை அவள் கண்டுபிடித்திருந்தாள். கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் இருந்த தொடர்பு ஒரு போதும் நிஜமாக உடையவில்லை[.]

வன்முறையும், அடக்கி வைப்பதும் சேர்ந்த வட்டச் சுழற்சிகள் தோற்கடிக்கப்பட முடியாதபடி சக்தி வாய்ந்தவை. மகன்கள் அப்பாக்களாகிறார்கள், தம் ஆத்திரங்களையும், வருத்தங்களையும் தொடர்ந்து கைமாற்றிக் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
(இந்த) நான்கு புத்தகத் தொடரில், ’த ஸ்டோரி ஆஃப் அ நியூ நேம்’ என்ற இரண்டாம் புத்தகத்தில், லீலா ‘தான் மட்டும் அந்தச் சுற்று வட்டாரத்திலிருந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தால், ஒரு தலைமுறையில் எல்லாமே மாறி இருக்கும், பின்பு அங்கு சாமர்த்தியசாலிகளும், திறனற்ற சோதாக்களும், நல்லவரும் கெட்டவரும் என்ற பேதங்களே இல்லாமல் போயிருக்கும் என்று மறுபடி மறுபடி சொல்கிறாள்.’ ‘தோஸ் ஹூ லீவ் அண்ட் தோஸ் ஹூ ஸ்டேய்’ புத்தகத்தின் இறுதியிலோ, லீலா தன் முதன்மையானதும், உண்மையானதுமான குறிக்கோளை அடைவதில் தோல்வி அடைகிறாள்: அது (அதே) வரலாறு மறுபடி மறுபடி நடக்காமல் தடுத்தழிப்பது என்ற நோக்கம். ’அனைத்தையும் அகற்றி விடும்’ அவளது அனைத்து முயற்சிகளாலும் கூட, அவளால் கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் உள்ள தொடர்பை அறுத்து உடைக்க முடிவதில்லை. இதனால்தானோ என்னவோ அவள் தன்னைப் பற்றி ஏதும் எழுதப்படுவதை விரும்பவில்லை: தன் தோல்வி பதியப்படுவதை அவள் விரும்பவில்லை. “நாம் மறையவேண்டும், நாம் எதற்கும் தகுதியற்றவர்கள்,” என்று எலீனாவிடம் சொல்கிறாள் அவள்.
வரும் தலைமுறையினர் நம்மிடம் பரிதாபப்படுவதிலிருந்து நாம் எப்படித் தப்ப முடியும்? தான் வருணித்துச் சித்திரிக்கப்படுவதை விரும்பாத ஒரு நபரை எப்படிச் சித்திரிப்பது என்பது ஃபெராண்டேயின் தொடர் நாவல்களின் மையத்தில் உள்ள ஒரு கேள்வி. லீலா தன்னை அழித்து விட விரும்புகிறாள். தன் நாவலை அவள் எரித்து இருக்கிறாள். தன் உடைமைகளை அவள் நொறுக்கியிருக்கிறாள். கடந்த காலத்துக்கு, நிகழ் காலத்தின் மீது உள்ள ஆதிக்கத்தை அழித்து மீறி விட, தான் செய்த முயற்சிகளின் தோல்வியின் எந்த சான்றையும், பிரதியோ, படங்களோ எதையும் விட்டு வைக்க அவள் விரும்பவில்லை. தன் மகன் ஜென்னாரோவைப் பற்றிச் சொல்லும்போது, லீலா சொல்வது, “நான் அறிந்திருக்கிறபடி, நாம் யாராக இருக்கிறோம் என்பது அனைத்தும் நம் முதல் வருடங்களிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.” இந்த வார்த்தைகள் வருங்காலத்தை முன் கூட்டியே அறிவிக்கின்றனவாக ஆகி விடுகின்றன. ஜென்னாரோ ஐந்து வயதை அடையும்போது, ஒரு பேராசிரியரின் பேரன் மூன்று வயதில் வாசிப்பதை விட மிகக் கீழான அளவே அவன்  வாசிப்பதை அவள் காண்கிறாள். “ஜென்னாரோவைப் புத்திசாலியாக்கச் செய்யும் முயற்சிதான் எத்தனை பயனற்றது,” என்கிறாள் அவள். “இந்தக் குழந்தை ஏற்கனவே தோற்கத் துவங்கி விட்டான், அவன் மேன்மேலும் பின்னிழுக்கப்படுகிறான், அவளால் அவனைப் பிடித்துக் கொண்டிருக்க முடியவில்லை.”
நியபொலிடன் நாவல்களைத் துவங்கும் ஒரு பாவிப்பின்படி, லீலா மறைந்து விட்டாள். ஆக இந்தப் புத்தகத்தின் இறுதி எதிர்பார்ப்பு- இதுவும் ஒரு இருண்ட எதிர்பார்ப்புதான் – லீலா தன் விருப்பத்தை அடைந்து விடுவாள்: முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவது என்பது அது. நாம் உண்மையிலேயே அவள் மறுபடி கண்டெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறோமா? ஆனால், அது ஏன்?

(தமிழாக்கம்: மைத்ரேயன்)
இங்கிலிஷ் மூலம்: ’தோஸ் ஹூ லீவ்’- மிஷெய்ல் குஒ, ஆல்பர்ட் ஊ, (எக்ஸாமிண்ட் லைஃப் பகுதியில்) த பாயிண்ட்மாக். காம் என்கிற வலைத்தளத்தின் பத்தாவது இதழில் பிரசுரமான கட்டுரை. Michelle Kuo and Albert Wu in  Examined Life

 
பின்குறிப்பு:

  1. நியபொலிடன் என்ற சொல்லுக்கு இத்தலியின் நேபிள்ஸ் நகரைச் சார்ந்த என்று பொருள் உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.