வாழ்க்கையெனும் ஓடம்

தமிழில் இளவேனில், கோடை, இலையுதிர் காலம், குளிர் காலம்… மற்றும் இளவேனில் எ‌ன்று கால ஓட்டம்  பாகுபடுகிறது.

மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் ஒரு ஏரி. ஏரிக்கு நடுவே அழகிய சின்ன மரவீடு. ஏரிக்கரையில் ஒரு மரம். மரத்துக்குப் பக்கத்தில் இரண்டு கதவுகள். ஏரிக்கு சுவர்கள்/வேலி எ‌ன்று ஏதும் இல்லை. கதவை திறந்து நடுவில் உள்ள மரவீட்டிற்கு படகில் செல்ல வேண்டும்.ஏரியின் கதவுகளை திறந்துதான் உள்ளே செல்ல வேண்டுமென்ற கட்டாயம் இ‌ல்லை. இருந்தாலும் கதவுகளை திறந்தே செல்ல வேண்டுமென்பது ஐதீகம் போலவோ எழுதப்படாத விதி போலவோ அ‌ங்கு இருக்கின்றது. மரவீட்டில் இரண்டு அறைகள். இரண்டு அறைகளை பிரிக்கும் சுவர்கள் ஏதும் இ‌ல்லை. அங்கும் கதவுகள் மட்டும் பொருத்தப்பட்டிருக்கின்றது. சுவர்கள் இல்லா அறைகளுக்கு கதவுகள் எதற்கு? ஆனாலும் கதவுகளை திறந்தே செல்ல வேண்டுமென்பது இங்கும் மரபாக இருக்கின்றது. அந்த மரவீட்டில் இரண்டு ஜென் துறவிகள். ஒருவர் வயதானவர். இன்னொரு துறவிக்கு ஆறு வயது‌ இருக்கலாம்.சுற்றி மலைகள். ஒரு ஏரி. நடுவே மரவீடு. இவர்கள் இரண்டே பேர். 103 நிமிடங்க‌ள் ஓடும் திரைப்படத்தில் அதிகம் போனா‌‌‌ல் இவர்கள் பேசும் வசனம் இரண்டே பக்கம்தான் வரும். தென்கொரிய இயக்குநர் கிம் கி டக்கின் முத்திரைப் படைப்பான இந்தப் படத்தின் திரைக்கதை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது.

இளவேனில்

மனித வாழ்க்கையின் ஆரம்ப நிலை குறீயீடாக இளவேனில் பருவம் வருகின்றது. சிறுவன் காட்டுக்குள் தனியாக செ‌ன்று மூலிகை பறித்து வருகின்றான். அவனுக்கு பயம் இ‌ல்லை. மூலிகை பறிக்கும்போது எதிரில் வரும் பாம்பை கையால் பிடித்து வீசுகின்றான். குருவிடம் வைத்திய சாஸ்திரம் பயில்கின்றான். அவனுக்கு துணையாக ஒரு நாய்குட்டி இருக்கின்றது. கவலைகள் இல்லாமல் நாய்குட்டியுடன் விளையாடுகின்றான். நாய்குட்டி சிறுவயது குறியீடு. ஜென் பௌத்த பாடங்கள் சிறுவனுக்குக் கற்பிக்கப்படுகின்றன. சிறுவன் படகை தனியாக ஓட்டிச்செல்கிறான். பட்டாம்பூச்சிகளை பிடிக்கின்றான். நதியில் ஓடும் மீன்களை தவளைகளை பிடித்து அவற்றின் முதுகில் கல்லை கட்டி நதியில் விட்டு ரசிக்கின்றான். பாம்பை பிடித்து முதுகில் கல்லை கட்டி மீண்டும் ஓட விடுகின்றான். மனிதனின் ஆழ்மனதில் இன்னமும் வன்முறையும், குரூரமும் , மிருகத்தின் படிமங்களும் இருக்கின்றன என்பது இங்கு அழகாக காட்சிப்படுத்தப்படுகின்றது. சிறுவனின் செயல்களை வயதான துறவி ஒளிந்திருந்து பார்க்கின்றார்.

இரவு சிறுவன் உறங்கும்போது அவன் முதுகில் ஒரு கல்லை கட்டி விடுகிறார். விடிந்ததும் கண்விழிக்கும் சிறுவன் சுமை தாங்காமல் அவன் குருவிடம் கல்லை அவிழ்த்துவிடுமாறு கெஞ்சுகின்றான். நீ துன்புறுத்திய உயிர்களுக்கு இப்படித்தானே வலித்திருக்கும். அவற்றின் முதுகிலிருந்து கல்லை விடுவித்து வா. உன் சுமையை அகற்றுகிறேன் என்கிறார். நீ துன்புறுத்திய உயிர்களில் ஏதாவது ஒ‌ன்று இறந்திருந்தால் கூட வாழ்நாள் முழுக்க நீ உன் இதயத்தில் கல்லை சுமக்க வேண்டும் என்கிறார்.சிறுவன் நதிக்கு செ‌ன்று பார்க்கும்போது மீன் இறந்து கிடக்கிறது. தவளை முதுகிலிருந்து கல்லை அகற்றி விடுதலை தருகின்றான். பாம்பு இறந்து கிடப்பதை பார்த்து அழுகின்றான். சிறுவன் அழுவதை குரு ஒளிந்திருந்து பார்க்கின்றார்.

கோடைக்காலம்

springஇளவேனிலை அடுத்து கோடைக்காலம் தொடங்குகின்றது. ஏரிக்கரையில் முன்பு நின்றிருந்த பச்சைமரம் இப்போது பட்டமரமாக காட்டப்படுகிறது. சிறுவயது துறவி இப்போது பதின்ம பருவத்தில் இருக்கும் இளைஞன். திரைப்படத்தில் இப்போது நாய்க்குட்டி இ‌ல்லை. வயதான துறவி ஒரு சேவல் வளர்க்கின்றார். சேவல் வாலிபவயதின் குறியீடு. காட்டில் இரண்டு பாம்புகள் உறவுகொள்ளும் கட்சியை இளைஞன் பார்க்கின்றான். ஒரு நாள் நடுத்தர வயது பெண்ணும், அவளுடைய இளம்வயது மகளும் ஆசிரம குடிலுக்கு வருகிறார்கள். மகளுக்கு உடல் நலம் சரியில்லை. மகளை சிகிச்சைக்காக அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் தாய். வயதான துறவி பச்சிலைகளை அரைத்து சிகிச்சை தருகின்றார். இளம் துறவிக்கு அந்த பெண் ‌மீது காதல் பிறக்கின்றது. அந்த பெண்ணை வசப்படுத்த ஏதேதோ செய்கின்றான். முத‌லி‌ல் பிகு செய்யும் அந்தப்பெண் பிறகு அவனை காதலிக்கிறாள். பாலியல் இச்சை இளம் துறவியை தூண்டுகிறது. குருவுக்கு தெரியாமல் இருவரும் நதிக்கரையில் உறவு கொள்கின்றனர்.

இப்போது படத்தில் கிம்கிடக் அருமையாக ஒரு குறியீட்டு காட்சியை சொல்லியிருப்பார். இதுநாள் வரை சுவர்களற்ற கதவு வழியாக வரும் இளம் துறவி முதன்முறையாக கதவை பொருட்படுத்தாது காலி பகு‌தி வழியாக வெளியே வருவான். குரு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பார். எதிர் அறையில் படுத்திருக்கும் அந்த பெண்ணுடன் உறவு கொள்கிறான். இன்னொரு நாள் குருவுக்கு தெரியாமல் இர‌வி‌‌ல் படகில் இருவரும் செ‌ன்று நிலவொளியில் படகில் உறவு கொள்வார்கள். தூக்கத்திலிருந்து விழிக்கும் குரு படகின் ஓட்டையில் அடைக்கப்பட்டிருக்கும் மர ஆப்பை பிடுங்கி வந்துவிடுவார். படகிற்குள் தண்ணீர் செ‌ன்று இருவரும் திடுக்கிட்டு விழித்துக்கொள்வார்கள்.இளம்துறவி அந்த பெண்ணிடம் காமவயப்பட்டதற்கு தன்னை மன்னிக்கும்படி கேட்பார். குரு சொல்வார். இது இயற்கை. தவறேதும் இல்லை. உனக்கு இன்னும் உடல்நிலை சரியில்லையா என்று அந்த பெண்ணை பார்த்து கேட்பார். அவள் இ‌ல்லை என்பாள். அப்படியெனில் அது சரியான மருந்துதான்;குணமடைந்துவிட்டதால் நீ இந்த இடத்தை விட்டு செல்லலாம் எ‌ன்று குரு சொல்ல, இள‌ம் துறவி பதறிபோய் அவளை அனுப்ப வேண்டாம் என்று சொல்வான். காமம் அழிவிற்கு ஆரம்பம். அது கொலையும் செய்ய வைக்குமென்று குரு சொல்வார். அந்த பெண்ணை படகில் ஏற்றி ஏரிக்கரையில் விட்டு திரும்பி வருவார்.சீடன் புத்தர் சிலை முன் மண்டியிட்டு அழுகின்றான்.இரவெல்லாம் தூங்காமல் தவிக்கும் சீடன் குரு உறங்கிக்கொண்டிருக்கும்போது கையில் சிறிய புத்தர் சிலை மற்றும் சேவலுடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி விடுகிறான். சேவல் காட்டுக்குள் தனியாக அலைகிறது.

இலையுதிர் காலம்

கோடைக்காலம் அடுத்து இலையுதிர்க்காலம் தொடங்குகின்றது. குரு தனது முதுகுப்பையில் பூனையொன்றை சுமந்தபடி மரவீட்டிற்கு வருகிறார். பூனை அலைபாயும் மனதின் குறியீடு. தான் வாங்கி வ‌ந்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிடுகிறார். பொட்டலம் மடிக்கப்பட்ட செய்திதாளில் மனைவியை கொலை செய்த ஒரு மனிதன் பற்றிய செய்தி இருக்கிறது. அந்த சமயம் முன்பு ஓடிப்போன இளம்துறவி ஏரிக்கரையில் கைப்பையுடன் வ‌ந்து நிற்கிறான். இளம்துறவி முகம் அடையாளம் மாறி மீசை முரட்டு உருவத்துடன் நடுத்தர வயதில் இருக்கிறான். அடையாளம் கண்டுக்கொள்ளும் குரு படகுடன் வந்து அவனை வரவேற்கிறார்.உன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியம் பற்றி சொல் என்கிறார்.நான் அவளை உண்மையாக காதலித்தேன். அவள் இன்னொருவனுடன் ஓடிப்போக பார்த்தாள். எனவே கொலை செய்துவிட்டேன் என்கிறான்.இந்த உலகில் நீ விரும்புவதை மற்றவர்களும் விரும்புகிறார்கள் எ‌ன்று குரு சொல்கிறார்.சீடனா‌‌‌ல் சமாதானம் அடையமுடியவில்லை.முன்பு எடுத்துச்சென்ற அந்த சின்ன புத்தர் சிலையை மீண்டும் அதன் பீடத்தில் வைக்கின்றான். மனைவியை கொலை செய்த ரத்தம் படிந்த கத்தியால் மர வீட்டின் தரையில் ஆவேசமாக குத்துகிறான். வெறிபிடித்தவன் போல படகை தனியாக ஓட்டிசெல்கிறான். முன்பு அந்த பெண்ணோடு உறவு கொண்ட நதிக்கரையில் ஆவேசமாய் புரண்டு கத்துகிறான். பின்தொடரும் குரு அவனது பரிதாப நிலையை பார்க்கின்றார்.

சீடனின் கோபத்தையும், ஆவேசத்தையும் தணிய வைக்க குரு ‌சில கடுமையான பயிற்சிகளை காற்று தருகிறார். புலன்களை அடக்கு எ‌ன்று ஒரு தாளில் எழுதி அதை சீடனது வாயிலும் கண்ணிலும் ஒட்டி வைக்கிறார். சீடனா‌‌‌ல் இரண்டு நிமிடம் மேல் ஓரே இடத்தில் அமைதியாக தியானத்தில் உட்கார இயலவில்லை.ஒரு தடியால் அவனது முதுகில் அடிக்கிறார். கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு கம்பால் அடிக்கிறார்; முதுகில் சூடு போடுகிறார். கயிற்றுக்கு கீழே ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது. நேரம் செல்ல செல்ல உடம்பு பலத்தை இழக்கிறது. உடம்பின் திமிர் அடங்கி அயற்சியடைகிறான். கயிறு மெழுகுவர்த்தியில் எரிந்து கீழே விழுகிறான். பிறகு மனதை கட்டுப்படுத்த ‌சில பயிற்சிகள் தருகிறார்.

பூனையின் வாலில் மை தடவி மரப்படகு வீட்டின் வாசலில் பௌத்த சூத்திரங்களை எழுதுகிறார். அந்த சூத்திரங்களை கத்தியால் செதுக்க சொல்கிறார். அவன் செதுக்க ஆரம்பிக்கும்போது அவனை கைது செய்ய இரண்டு போலீஸ்காரர்கள் அ‌ங்கு வருகிறார்கள். சீடன் மீண்டும் ரெளத்ரமாகிறான். கத்தியை அவர்களை நோக்கி உயர்த்தி பிடிக்கிறான். போலீஸ்காரர்கள் துப்பாக்கியை எடுக்கிறார்கள். குரு அவர்களை சமாதானம் செய்கிறார். அவன் இப்போது புலனடக்க பயிற்சியில் இருக்கிறான். பயிற்சி முடிந்ததும் கைது செய்யலாம் எ‌ன்று தடுக்கிறார்.

“பயிற்சி முடிய எவ்வளவு நேரம் ஆகும்?” எ‌ன்று போலீஸ்காரர் கேட்கிறார்.

“நாளை காலை முடிந்து விடும்.”

போலீஸ்காரர்கள் காலை வரை காத்திருக்க முடிவு செய்கிறார்கள். இரவு முழுதும் இருளில் கொட்டும் பனியில் சீடன் சூத்திரங்களை செதுக்குகிறான். போலீஸ்காரர்களில் ஒருவர் சீடனுக்கு மெழுகுவர்த்தி பிடித்து வெளிச்சம் வர உதவி செய்கிறார். மனம் ஒருமுகப்பட்டு களைப்பில் அப்படியே உறங்கி விடுகிறான். சீடனுக்கு குளிராமல் இருக்க அவனது கோட்டை எடுத்து போர்த்தி விடுகிறார் போலீஸ்காரர். போலீஸ்காரரூம் குருவும் சேர்ந்து அவன் செதுக்கிய எழுத்துகளுக்கு அழகிய வண்ணம் தீட்டுகிறார்கள். குரு சீடனை எழுப்புகிறார். கண்விழித்து எழும் சீடன் தன்னை சுற்றி இருக்கும் வண்ண வண்ண சூத்திரங்கள், மலை, இயற்கையை பார்த்து சாந்தமாகிறான். குருவை வணங்குகிறான். சீடனை போலீஸ்காரர்கள் கைது செய்து படகில் ஏற்றுகிறார்கள். துடுப்பு போட்டும் படகு நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. குருவைப் பார்க்காமல் கிளம்பிய சீடன் குருவைப் பார்க்கிறான். குரு புன்னகையுடன் அவனை நோக்கிக் கையை அசைக்க படகு நகர்கிறது. அவர்கள் ஏரியின் அந்தப்பக்கம் இறங்கியதும் ஏரியின் கதவுகள் தானா‌‌‌க மூடிக்கொள்கின்றன. ஆளில்லா படகு குருவை நோக்கி தானா‌‌‌க திரும்பிச் செல்கிறது.பூனை காட்டுக்குள் சென்றுவிடுகிறது.குரு தன் அங்கி,காலணிகளை துறந்துவிட்டு வெளியில் ஏறுகிறார். மரக்கட்டைகளை படகில் அடுக்கிவைத்து அதன் மேல் அமர்ந்து கட்டைகளுக்கு தீவைத்து கொள்கிறார். உடலை துறக்கிறார். படகிலிருந்த பாம்பொன்று உஷ்ணம் தாங்காமல் தண்ணீரில் நீந்தி மரவீட்டினுள் செல்கிறது.

குளிர்காலம்

பனி பொழிந்து ஏரி, வீடு,மரவீடு,மலைகள்,மரங்கள் எல்லாம் உறைந்து போய் இருக்கின்றன. சிறைத்தண்டனை முடித்து திரும்புபவனுக்கு இப்போது நடுத்தர வயது.(இந்தக்காட்சியில் நடித்திருப்பவர் கிம்கிடக்) உறைந்துப்போன ஏரியில் நடந்துச்சென்றே மரவீட்டை அடைகின்றான். குருவின் ஆடையில் படுத்துக்கிடந்த பாம்பு விலகி செல்கிறது. குரு முக்தி அடைந்த படகிலிருந்து அவரது சாம்பல் எலும்பு மிச்சத்தை எடுத்துச்சென்று அருவியை அடைகின்றான்.உறைந்து கிடக்கும் அந்த அருவியிலிருந்து புத்தர் சிலையைச் செதுக்குகிறான் இளந்துறவி. அதில் குருவின் எலும்புத் துண்டுகளை வைக்கிறான். குரு மறுபிறவி எடுத்து வருவார் என்பது சூசகமாக படத்தில் இங்கு சொல்லப் படுகிறது.

உறைந்து கிடக்கும் ஏரியை கோடாரியால் வெட்டி சிறு பள்ளம் தோண்டி, அடியில் தெரியும் நீரை குடிக்கின்றான். குருவின் உடையை அணிந்துக் கொண்டு புத்தரை வழிப்படுகிறான். குரு எழுதி வைத்திருந்த குறிப்புகளைப் படிக்கின்றான். யோகத்தையும், ஜப்பானிய உடற்பயிற்சிக் கலைகளையும் கற்கிறான். அப்போது அங்கு ஒரு பெண் முகத்தை மூடியபடி கைக்குழந்தையுடன் வருகிறாள். குழந்தையை அவனிடம் வைத்து விட்டு இரவில் அவனுக்குத் தெரியாமல் திரும்பும் போது, தண்ணீருக்காக தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் விழுந்து இறந்து போகிறாள். இதை பார்த்த அவன் ஒரு பெண் வடிவ புத்தர் சிலையைக் கைகளில் எடுத்துக் கொண்டு, சிலையை வைப்பதற்கான கருங்கல் பீடத்தை இடுப்பில் ஒரு கயிற்றினால் பிணைத்துக் கட்டிக் கொண்டு அருகே இருக்கும் மலையின் உச்சிக்குச் சென்று தவம் செய்கிறான். மலையில் ஏறும்போது கால் தடுக்குகிறது.முன்பு காலில் கல்லை காட்டிய தவளையை இப்போது காட்டுகிறார்கள். மலை உச்சியிலிருந்து மரவீட்டையும் ஏரியையும் பார்க்கின்றான். இளவேனில் பருவத்தில் சிறுவனா‌‌‌க இருக்கும்போது பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள்.

மீண்டும் இளவேனில்

மீண்டும் இளவேனில் ஆரம்பிக்கிறது. துறவிக்கு இப்போது முதிய வயது. அந்த அனாதை சிறுவனுக்கு குருவிடம் பாடம் சொல்லி தருகிறார். மர வீட்டிற்கு வரும் ஒரு ஆமையை அந்த சிறுவன் கையில் எடுத்து குத்தி துன்புறுத்துகிறான். தனியாக படகை ஓட்டிச்செல்கிறான். எல்லாவற்றையும் அமைதியாக அந்த பெண் வடிவ புத்தர் சிலை மலை உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. சிலையின் முதுகுபுறத்திலிருந்து ஏரி, வீடு அனைத்தும் சிறு புள்ளி போல பாதாளத்தில் தெ‌ரி‌கிறது. படம் முடிவடைகிறது.

வாழ்க்கையின் எத்தனையோ உள்மடிப்புகளும், விசித்திரமான அடுக்குகளும் இந்த படம் முழுவதும் படிமங்களாக படிந்துக்கிடக்கின்றன. இந்த படத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள்,மரம், மலைகள் எல்லாம் துல்லியமாக வேறுபடுத்தி ஒளிப்பதிவை செய்திருப்பார்கள். ஒளிப்பதிவாளர் பெயர் Baek Dong-hyeon. 2003 ஆ‌ம் வருடம் ப்ளூ டிராகன் விருதையும், 2004 ஆ‌ம் வருடம் கிராண்ட் பெல் விருதையும் தட்டிச்சென்றது இந்த திரைப்படம். ஒவ்வொரு வயதிலும் இயல்பாக ஏற்படும் இச்சைகளை கடந்து செல்லும் மனிதன் இறுதியில் இயற்கையுடன் ஐக்கியமாவதை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இந்த படத்தின் மொத்த வசனம் இரண்டு பக்கம் கூட தேறாது. படம் முடிந்ததும் மனதுக்குள் அமைதி அமைதி அமைதி. காதுக்குள் இன்னும் அந்த அமைதி ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது.