kamagra paypal


முகப்பு » அறிவியல் கதை, சிறுகதை

கடந்தகாலத்தின் எதிர்காலத்தவர்

science_pic

இன்று முதல் நாள்; சிறப்பாகச் சொல்லும்படி ஏதுமின்றி திருப்திகரமாக கழிந்தது.  அடுத்த இரண்டரை ஆண்டுகள் இவ்வாறாகத்தான் செல்லும். ஒன்றரை ஆண்டுகளிலேயே இவர்களின் பாடத்திட்டத்தை முழுவதுமாய் முடிக்க இயலும் என்றாலும் இழுத்தடிப்பார்கள்; அனுபவம் பெறுவது பற்றியும் ஆழ்ந்தறிவது குறித்தும் ஒரு பெருங்கட்டுரையைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.  மிகஅபூர்வமான அதிபுத்திசாலி ஜென்மங்களுக்கு மட்டும் விதிவிலக்காய் ஒரேவருடத்தில் அனைத்தையும் முடிக்கவைத்து அனுப்பிவிடுவார்கள்.  ஆனால், ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க அதிபுத்திசாலித்தனர் ஒன்றும் தேவையில்லை; ஆனாலும், எங்களை அவ்வளவு விரைவில் முடிக்கவைப்பதில்லை ஆகசுமாருக்கும் கூடுதலான திறன் கொண்ட நானும் என்போன்ற இன்னும் 31 பேரும் இவ்வாறாக அடுத்த 2 ½ ஆண்டுகளைக் கழிக்கப் போகிறோம்.  இன்றுபோல் சிறப்பாக ஏதுமில்லாமல் சாதாரணமாய் எல்லா நாட்களும் சென்றால் சிறப்பு.  நாங்கள் அட்வான்ஸ்ட் இன்ஜினியரிங் படிப்பிற்கான 122-வது பேட்ச்.  ஆண்டு 2168 A.D.  என் பெயர் சான்டியாகோ கசோர்லா.

“கால-வெளி” (Space-time) Continuum-த்தை நாம் தொடர்ச்சியாக ஒவ்வொரு புள்ளியாகத்தான் உணர்ந்து வருகிறோம்.  வெளியின் முப்பரிமாணத்தில், ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு செல்ல இயன்றாலும் காலம் (காலப்பரிமாணம்) மாறிக்கொண்டே, முன்னேறிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.  ஆக, வெளியில் நாம் மீண்டும் ஒரு புள்ளிக்கு சென்றாலும் காலவெளியில் அது முற்றிலும் வேறுஇடம்.  அந்த புவியளவுப் பேரிடர் நிகழும் முன்னர், இந்த காலப்பரிமாணத்தை கைகொள்ளும் ஆராய்ச்சிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. நான்கு அடிப்படை விசைகளின் இயல்பினை அடிப்படையில் விவரிக்கக்கூடிய “ஒருமித்தகோட்பாடு” குறித்தும் அளப்பரிய முன்னேற்றம் இருந்தது.  ஆனால் இயற்கையின் மிக மிக அடிப்படை நியதியான “சமநிலை” (Equilibrium) சற்றே குலைந்து கொண்டிருந்தது.  ஆய்வாளர்கள் சிலமுறை உரத்துக்கூறியும் யாரும் கேட்பதாயில்லை. இயற்கையின் பல்லடுக்கு பிரமிடில் எங்கெங்கோ ஏற்படுத்தப்படும் சிறுஅளவு சமநிலை-குலைவுகள் மற்றெங்கெங்கோ பெருத்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.  அத்தகைய நிகழ்வுக்கான முன்னெச்சரிக்கை தடயங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்தவண்ணம் இருந்தனர்.  இவ்வாறு சற்றே மேலோட்டமான வரலாறுதான் எங்களிடையே ஆரம்பத்தில் இருந்தது.

செப்டம்பர் 1, 1946, ஆனது ஆகஸ்ட் 31, 1946, போலவே பெரிதும் நிகழுமாறு எதிர்பார்க்கப்பட்டிருந்தது; ஆங்காங்கே சில முக்கிய மாற்றங்களைத் தவிர.  அன்று காலை டோக்கியோவிலும், பீஜிங்கிலும் வழக்கம் போல விடிந்து கொண்டிருந்தது; புதுதில்லியிலும், இஸ்தான்புலிலும் அவ்வண்ணமே நிகழவிருந்தது.  மேற்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா விழித்தெழ ஆயத்தமாயிருந்தது.  வடதென் அமெரிக்கா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது.  நிலநடுக்கம் எங்கேயேனும் ஒரு புள்ளியில் நிகழப்பெற்று அதிர்வலைகள் வாயிலாக அதன் வலுகுறையும் தூரம் வரை ஒலியின் வேகத்தில் கடத்தப்பெற்று உணரப்படும்.  ஆனால், அன்று, செப்-1, 1946, ஒட்டுமொத்த புவியும்அதிர்வடைந்தது.  எப்போதும் போல புவியோடுகளின் இடுக்குகளில் தோன்றி – பரவிய நடுக்கமாக அது இல்லை;  உலகெங்கிலும், அத்தகையதொரு நடுக்கம் தோன்றினால் தோற்றப்புள்ளி மற்றும் நடுக்கத்தின் வலு உடனுக்குடன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும்.  ஆனால், அன்று புவி முழுமைக்கும் உணரப்பட்ட அந்நடுக்கத்தின் தோற்றப்புள்ளி அறியப்படவில்லை.  24 முதல் 36 ரிக்டர் அளவில் நடுக்கம் பதியப்பெற்றது. புவிமுழுதும் மனிதர் கட்டிய பெரும்பான்மையான கட்டமைப்புகள் தரைமட்டமானது.  அழியாமல் தப்பித்த சில ஆயிரம் கட்டமைப்புகளில் நாங்கள் பயிலவிருக்கும் இந்த பயிற்றரங்கக் கட்டடமும் ஒன்று.  நிகழ்ந்தவற்றின் சுவடுகளை நினைவுகளில் பதிய இக்கட்டடப்பயிலரங்கில் அனைவருக்கும் ஒருமாதகால வகுப்புகள் நடத்தப்பெறும்.  இன்றைக்கு எவ்வளவோ பரவாயில்லை.  2046-ஆம் ஆண்டு அதிர்வில் மீண்டும் இருண்ட யுகத்துக்கே மனிதஇனம் போனது; மனித இனத்தில் என்ன மிஞ்சியதோ அது.  அன்றிலிருந்து சக்கரத்தை மீண்டும் கண்டுபிடித்த கதையாக மிகநூதனவகை கண்டுபிடிப்பையும் மீண்டும் நிகழ்த்தி அவற்றுக்கான ஆய்வகங்கள் மற்றும் தொழிற்கூடங்களை ஏற்படுத்தினோம்.  அதேவேளையில் நாங்கள் அதுவரை முழுவதும் விளங்கியிராத இயற்பியலின் அடிப்படைவிதிகள் குறித்த ஆய்வையும் முடுக்கிவிட்டோம்; ஏனெனில், 1946-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது இயற்கையான விபத்தோ, பேரிடரோ அல்ல என்பதை ஆணித்தரமாக நம்பினோம்.  அப்புதிருக்கான விடையை இயற்பியல் அளிக்கும் என்றும் நம்பினோம்.

புவியின் பெரும் விளைநிலங்களில் ஏறக்குறைய கால்வாசிப் பகுதி கதிர்வீச்சாலும், அதன் கழிவுகளாலும் பாதிக்கப்பட்டிருந்தது; அணு உலைகள் ஆற்றலுக்கு மட்டுமல்ல, அன்று அனைவருக்குமே உலையானது.  பேரதிர்வின்  தாக்கத்தில் இறந்தோர் ஒரு பகுதி, அதன் தொடர்ச்சியாய் உணவற்றும் தொடர்நோய்த்தாக்காலும் கதிர்வீச்சுநிறைந்த காற்றாலும் துகள்களாலும் அதுவரை மனிதஇனம் கண்டிராத அளவில் அழிவை சந்தித்தோம்.  மனிதஇனம் மட்டுமல்ல, பெரும்பான்மையான விலங்கினங்களும் தாவரஇனங்களும் தப்பவில்லை.  ஆரம்பகாலகட்டத்தில் கடகமகரரேகைகளுக்கிடையே எப்போதும் குறைந்திராத வெப்பப்புயல் நிலவிற்று, துருவப்பகுதிகளில் வழக்கத்தைவிடக் கூடுதலான குளிர் நிலவியது.

எத்தனை பெரிய பேரிடராய் இருந்தாலும் மனிதஇனமனத்தின் உறுதியும் சவாலை எதிர்கொள்ளும் போர்க்குணமும் எளியோரை வதைக்கும் வெறிக்குணமும் என்றும் குறைந்திடாது.  வெகுவெகுமெதுவாய், ஆனால் நிச்சயமாய், அதிலிருந்து படிப்படியாக மீண்டுவந்தோம்.  புவியின் இயல்புநிலையும் அடுத்த 30-40 ஆண்டுகளில் திரும்பியது; அல்லது, அப்போதிருந்த பூமியில் வாழ்வதற்கு மிகச்சிறப்பாகப் பழகிக்கொண்டோம்.

2046-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒன்றும் பெரிதாய் வாழ்ந்துவிடவில்லை நாம்.  மக்கள் தொகைக்கேற்ற உணவோ ஆற்றலோ நம்மிடம் இல்லை.  வேறுகிரகங்களில் வெற்றிகரமாக குடியேறவுமில்லை.  விண்மீன்களிடைப் பயணத்தில் குழந்தைப்படிகளைத்தான் எடுத்திருந்தோம்.  ஆனால், நம்மால் வெற்றிகரமாக அடுத்த நூறாண்டுகளை புவியில் தாக்குப்பிடிக்க இயலுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றிருந்தது; முடியும் என்ற நம்பிக்கையும் சற்றே இருந்தது.

2100-ஆம் ஆண்டில் மீண்டும் முதன்முதலாக செயற்கைக் கோளை ஏவினோம்.  2105-இல் நிலவுக்கும் அதன்பிறகு பிறகிரகங்களுக்குமாக ஆய்வுக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பி ஆராய்ந்தோம்.  பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையேதான் அந்த ஏவுதல்கள் நிகழ்த்தப்பெற்றன.  புவியளவுப் பேரிடர் நடந்தபோது அதன் தாக்கம், மிக மிக மிக குறைவான அளவில் என்றாலும், மற்ற கிரகங்களிலும் முக்கியமாக சந்திரனில் தாக்கத்தடயங்கள் காணப்பெறலாம் என்ற கணிப்பு இயற்பியலாளர்களிடம் இருந்தது.  ஏனெனில், பூமியில் அவற்றைக் கண்டறிய இயலாவண்ணம் பாதிப்பும் பெரியதாய் இருந்தது; இருந்திருக்கக்கூடிய தடயங்களையும் அழித்திருக்கக்கூடும்.  2122 ஆண்டுவாக்கில் பழைய இந்தியநிலப்பகுதியில், தற்போதைய செக்டர் 7-இல், நாங்கள் பயில்வதைப் போன்ற பல்கலையின் இயற்பியல்பிரிவும் புவியியல்பிரிவும் கூட்டாக பலகட்ட ஆய்வுகளை செய்துவந்தனர்.  பேரிடர் கால புவியீர்ப்பலை Ripples மற்ற அருகாமையிலிருக்கும் விண்பொருட்களையும் பாதித்திருக்கும் என்றகோணத்தில் தீவிரமாக அவர்கள்தான் முதலில் ஆய்வைத் தொடங்கினர்.  செக்டர்-7-லிருந்து, இந்த வகையான ஆய்வைப் புரிவதற்கென்றே குறிப்பாக ஒரு செயற்கைக் கோளை சந்திரனுக்கு அனுப்பியிருந்தனர்.  சில ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு, இன்னும் நுணுக்கமாக அளவெடுக்கும் மற்றும் ஒரு செயற்கைக் கோளையும் சந்திரனின் இருள்பகுதிக்கு அனுப்பினர்.  2046 பேரிடர்புவியீர்ப்பலைகள், சந்திரனில் ஒரு குறிப்பிட்ட ஒருங்கமைப்பில் Ripples-ஐ ஏற்படுத்தியிருந்தது அப்போதுதான் கண்டறியப்பட்டது.  ஆனால், ஒன்றன்பின்ஒன்றாக ஏற்பட்ட பல Ripples-களின் முழுவடிவத்தை அறிவது சுலபமில்லை.  முதல் அலையின் தாக்கத்தை இரண்டாவது அலை மாற்றிவிடும்; அதன் தாக்கத்தை மூன்றாவது மாற்றும்.  அந்த பிரத்தியேக தாக்கவரிசையையும் இயல்பையும் அளவிடுவதற்கென்றே ஏவப்பட்ட செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் மீதான ஆய்வுகளின் முடிவுகள் அவ்வருடம் செக்டர்-7 ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, முடிவுகள் செக்டர்-0 (நாங்களிருக்குமிடம் – முற்காலத்தில் பார்சிலோனா, எசுப்பானியம்) இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்பெறும் “இயற்பியல் கருத்தரங்கில்” (Conference of Tomorrow) தெரிவிக்கப்பட்டன.  அக்கருத்தரங்கில் அம்முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது நிலவிய நிசப்தம் உலக ஆரம்ப நிசப்தத்தை ஒத்திருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  அதன் முடிவு இதுதான்:  “SORRY OLD EARTH. TO SUSTAIN  HUMANKIND  WE DO THIS SACRIFICE – END OF EARTH HUMANS 2072”.  இது மோர்ஸ் சங்கேதக் குறியீட்டில் காலவெளியில் அனுப்பப்பட்டிருந்ததாம்.  அதாவது புவியின் அழிவை எதிர்நோக்கிய நிலையிலிருந்த மனிதஇனம் தனது கடந்தகாலத்துக்கு செய்தி அனுப்பியிருக்கிறது.  அதனோடே, அனுப்பப்பட்ட செய்தியினைப் பெற்ற கடந்தகாலத்தின் எதிர்காலத்தில் அது இல்லாமல் போயிருக்கிறது; அதனுடன் புவிவாழ் பல்வகை உயிரினங்களும்.

ஒருகுறிப்பிட்ட அறிவியல் துறையில் – காலவெளியில் செய்தி அனுப்புமளவுக்கு – பெரும் முன்னேற்றம் கண்ட அவர்களால் புவியின் சமநிலையைக் காக்க இயலவில்லை.  எல்லாம் Extinct- இருப்பின்மையான அழிவைச் சந்திக்கும் தருவாயில் அவர்களின் desperate  attempt  to  save ஆக அந்த செயலைச் செய்திருக்கிறார்கள்.  2046 வரைதான் அவர்களால் அனுப்ப முடிந்திருக்கிறது.  ஒருவேளை, மனித முன்னேற்றத்தின் முக்கிய தருணங்களைக் குலைக்காமலும் அதேவேளை புவியின் ஒட்டுமொத்தமாகப் பாழாவதைத் தடுக்கும் வண்ணமும் அவ்வருடம் அமைந்திருக்கலாம்; யூகந்தான், தெளிவாகத் தெரியவில்லை.

(பேரிடரைச் சந்தித்த பின்னரான) புதிய பூமி ஆண்டு 122-ஐ எட்டிய பின்னரும் மனிதஇனம் – 50 மில்லியன் மக்கள்-  வாழ்ந்துகொண்டிருப்பதே அந்த கடந்தகாலத்தின் எதிர்கால மனிதஇனத்தின் திட்டம் வெற்றியடைந்ததற்கான சான்று (அவர்களின் காலவெளி ஓட்டத்தில் 2072-இல் அவர்கள் அழிந்திருக்கிறார்கள்!).  ஒவ்வொரு ஆண்டின் முதல்நாளிலும் இவ்வனைத்தும் நினைவுகூரப்படும்; இதனுடன், நம்இருப்பு, எதிர்காலம் மற்றும் அனைவருக்குமான அனைத்துக்குமான புவி என்பதனை முதன்மைப்படுத்தியே எங்களுக்கான அனைத்துவித பயிற்றுவிப்புகளும் தொடங்கப்படுகின்றன.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.