kamagra paypal


முகப்பு » சிறுகதை

வேலி

(யாழ்ப்பாணத்தில் வேலிகளைக் கொண்டு எல்லைகளை நிர்ணயிப்பார்கள். குடும்பங்களுக்கிடையே சண்டைகள் உருவாக வேலிகளும் ஒருகாரணம். இதை மையமாக வைத்த எழுதப்பட்ட கதையிது.)

fence

பரமு என்ற பரமலிங்கம் மீசாலையில் பத்துப் பரப்புக்காணிக்குச் சொந்தக்காரன். காணியில் இரண்டறைகளைக் கொண்ட உள்ள கல்வீடு. வளவுக்கு, கண்டி-யாழ்ப்பாணம்  வீதியை நோக்கிய வாசல். சாவகச்சேரியல் இருநது கிழக்கே நான்கு  மைல்; தூரத்தில் உள்ள கிராமம்; மீசாலை. “மீ” என்பது இலுப்பையைக் குறிக்கும். இலுப்பை மரங்கள்  செறிந்து காணப்படும் இவ்வூரில், இலுப்பை எண்ணைதயாரிக்கும்  ஆலைகள் இருந்தபடியால் அவ்வூருக்கு மீசாலையெனப் பெயர் வந்திருக்கலாம்.

மீசாலை ரயில்வே ஸ்டேசன் கூப்பிடு தூரத்திலிருந்தது. காணிக்குள்; வேலி ஓரமாக ஒரு நல்ல தண்ணீர் கிணறு. மா, பலா, நெல்லி, நாவல், விளா மரங்கள் பரமுவின் காணிக்குள் நல்ல நிழலையம், பயனையும்; கொடுத்தன.

கோடை காலத்தில் ஒருநாள், வியர்வை சொட்டச் சொட்ட கொடிகாமம் சந்தையிலிருநது 6 கி.மீ தூரத்துக்கு தனது ரெலி சைக்கிலை ஓட்டி வந்த பரமு, வீட்டுப் படலையைத் திறந்து தனது வளவுக்குள்  சைக்கிலை ஓரமாக  வேப்பமரத்துக்கு கீழ் நிறுத்தினான்.

“ அப்பாடா என்ன வெக்கை. காத்து கூட வீசுதில்லை”, என்று வியர்வையைத் தனது சால்வையால் துடைத்தபடி வீட்டுக்குள் போனான். பரமு மீசாலையில் ஒரு சின்ன கடைவைத்து பல சரக்கு சாமான்கள்? மரக்கரி, பழவகைகள். உணவு வகைகள் போன்றவறறை வியாபாரம் செய்துவந்தான். அவனது கடை ரயில்வே ஸ்டேசனுக்கு அருகாமையில் யாழ்ப்பாணம்-கண்டி பெரும் பாதையில் இருந்ததால் நல்ல வியாபாரம்.  அவனுடைய கடையில் மீசாலை கறுத்த கொழும்பான், அம்பளவி, செம்பாட்டு மாம்பழங்களும், பலாப்பழமும் வாங்குவதற்காக சாவகச்சேரி, கொடிகாமத்தில், கச்சாய் , சரசாலை ஆகிய ஊர்களிலிருந்து சனங்கள் வருவார்கள். அவனது மனைவி சரஸ்வதி சுவையாக சமைக்கக் கூடியவள். அவன் தயாரித்த சுண்டல், உழுந்துவடை, சூசியம்  அகியவற்றிற்கு சனங்களிடம் நல்ல மதிப்பிருந்தது. அதுவல்லாமல் அவள் தயாரித்த ஊறுகாய், வேப்பம்பூ வடகம் , மோர் மிளகாய் ஆகியவற்றிற்கு கோவில் திருவிழாக்காலங்களில் விரதம் இருப்போர் பரமுவின் கடையயைத் தெடி வந்து வாங்குவார்கள். அதனாலை பரமுவுக்கு கடையில் நல்ல வியாபாரம். தன் மனைவியின் அண்ணன் மகன் செல்வம் என்ற செல்லத்துரையை தனக்கு உதவியாக வைத்திருந்தான். செல்வத்துக்கு மதிய சாப்பாடும் கொடுத்து கடையைக் கவனிபதற்கு சிறு தொகையை மாதம் மாதம் பரமு கொடுத்துவந்தான். படிப்பை பாதியில் குளப்பிக் கொண்டு வந்த செல்வத்துக்கு, மாமாவிடம் வேலை செய்வது பெருமையாக இருந்தது.

“இஞ்ஞாரும் எனக்கு கொஞ்சம் மோர் கொண்டுவாரும். வேய்யிலிலை வெளியே போட்டு வந்தது ஒரே தாகமாய் இருக்கு”, வீட்டின முன் விராந்தையில் அமர்ந்தவாறே மனைவியிடம் பணிவாக வேண்டினான்.

மோரும் கையுமாக பரமுவிடம் வந்த சரஸ்வதி “ கேட்டியளே கதையை?. பக்கத்து வீட்டு பங்கஜம் புது கிளுவை மரக் கதி;யால்களைப் போட்டு வேலி அடைக்கப்போறாளாம். இரண்டு வருஷத்துககு முதல் வேலி அடைத்த போது எங்கடை காணியிலை ஆறு அங்குலத்த எடுத்துப்போட்டாள். இந்த முறை நான் அவளை அவள் விருப்பத்துக்கு வேலி அடைக்க விடப்போவதில்லை” . என்றாள் சரசு என்ற பரமுவின மனைவி சரஸ்வதி.

பரமு வெளியே போய் வந்த களைப்பு தீர மோரை மடக் மடக் என்று குடித்தான்.

“ நான் முக்கியமான விசயம் கதைக்கிறன், நீங்கள் என்ன பேசாமல் இருக்கிறியள்.” பரமு பேசாமல் இருந்தது சரசுவுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

“நான் என்னத்தை சரசு கதைக்கிறது. எங்கடை கிழக்கு பக்கத்து வேலி இவ்வளவு காலமும் பங்கஜம் தான் அடைத்து வந்தவள். அதைத் தான் எங்கடை காணி உறுதியிலையும் எழுதியிருக்குது. அந்த வேலியை பராமரிப்பது அவள் பொறுப்பு. தெரிஞ்சிருந்தும் ஏன் நீ வீணாக அவளோடை போய் சண்டைக்குப் போகிறாய் ?”

“சண்டை போடுகிறேனோ? இப்படி ஒவ்வொரு முறையும் வேலி அடைக்கக்கை எங்கடை காணியிலை  அங்குலம் அங்குலமாக கொஞ்ச காணியை  எடுத்துப்போடுவாள். அதுமட்டுமே..” என்று இழுத்தாள சரசு.

“வேறே என்ன பிரச்சனை”?

“வேலியிலை இருக்கிற பூவரசம் மரத்திலை ஒரே மசுக்குட்டி. அந்த இலைகள் மசுக்குட்டியோடு எங்கடை கிணத்துக்குள்ளை விழுகிது. அந்த கிணத்துத் தண்ணியை எப்படி நாங்கள் குடிக்கிறது? இலைகளை வெட்டு என்று சொன்னால் கேட்கிறாள் இல்லை.”

“வேலியோடு சம்பந்தமான பல பிரச்சனைகள் உனக்கு இருக்குது போல  தெரியுது” பரமு கேட்டான்.

“இன்னொரு பிரச்சனையும் இருக்குது.”

“என்னது மூன்றாவது பிரச்சனை. சொல்லு ?”

“பங்கஜத்து வீட்டு நாய் ஜம்மி, எங்கடை வளவைத்தான் மலசலம் கழிக்கப் பாவிக்குது. அண்டைக்கு பாத்தனான் வேலியிலை ஓட்டை ஒன்றை செய்து எங்கடை வளவுக்குள்ளை அது வந்து போவதை. இதை எத்தனை முறை பங்கஜத்துக்கு முறையிட்டாலும் அவள் கேட்கிறாள் இல்லை. நீங்கள் அவளின்றை மனுசன் செல்லரோடை  நீஙகள் கதையுங்கோ”.

“பங்கஜம் வேலி அடைப்பது எங்களை எப்படிப் பாதிக்கிறது?” பரமு கேட்டான்.

“ என்ன விசர் கதை கதைக்கிறியள். இரண்டு வருஷத்துக்கு முந்தி  கதியால் போடுகிறன எண்டு எங்கடை காணியிலை ஆறு அங்குலம் எடுத்துப்போட்டாள். இந்த வருஷமும் அதை செய்தாலும் செயவாள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எங்கடை காணியைப் பறித்துப் போடுவாள். பேராசைக்காரி.; இதைப்பற்றி பங்கஜத்தின்றை மனுசனோடை உங்களைக் கதைக்கச் சொல்லுகிறன்,” அதுக்குத்தான என்றாள் கோபத்தோடு சரசு.

வேலிப் பிரச்சனையை சரசு தன் பக்கம் திசை திருப்புவதை பரமு கண்டான்;. பங்கஜத்தின் கணவன் செல்லையாவும் தானும் நல்ல கூட்டாளிகள். ஓன்றாhக மார்க்கண்டுவின் கள்ளுக் கொட்டிலுககுப்; போய் வருபவர்கள். தான் எப்படி செல்லையரோடை வேலியைப் பற்றி கதைக்கிறது, பரமு யோசித்தான்;.

சரஸ்வதிக்கு ஊரிலை “சண்டைக் கோழி சரசு” என்று பெயர். சிறு விஷயங்களுக்கு எல்லாம், சுற்றாரோடு சண்டை போடுவாள். ஆனால் சீனி , கோப்பி, மிளகாய் தூள் கடனாக அயலாளரிடம் கேட்டு வாங்கும், போது அன்பாகப் பேசி தனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்வாள். தன்றை மகன் நடராசா, யாழ்ப்பாண பொலீசிலை கிளார்க்காக வேலை செய்கிறான் என்ற திமிர் சரசுவுக்கு. ஊர்ச்சனங்களுக்கு சரசுவின் மகனுக்கு பொலிசின் ஆதரவு இருக்கிறதாக பயம் வேறு. சரசுவுக்கு  இருபது வயதுடைய ஒரு பெண் மகேஸ்வரி. அவள் தாயைப்போல் அல்லாது அமைதியானவள். சங்கத்தானை இந்துக் கல்லூரியில் ஏலெவல் படித்துவந்தாள். ஊர்ச் சனங்களோடு தாய் பிடித்த பல சண்டைகளைப் சமரசம் பேசி தீர்த்துவைத்தவள். அதனால் அவளுக்கு ஊரில் நல்ல மரியாதை இருந்தது.

“என்ன உங்கடை கூட்டாளி செல்லரோடை வேலியைப் பற்றி கதைக்கிறியளே”?. சரசு பரமுவை விட்டதாக இல்லை.

“ சரி சரி நேரம் வரும் போது கதைக்கிறன். இப்ப நான் குளித்திட்டு வாறன் சாப்பாட்டை எடுத்து வை. பசிக்கிது” என்று வேலிக் கதையைத் திசை திருப்பிவிட்டு எழும்பி வீட்டுக்குள் போனான்; பரமு.

♣♣♣♣♣

வேலிச்சண்டைகள் யாழ்ப்பாண குடா நாட்டில் ஏராளம். அதோடு பங்கு கிணற்றுச் சண்டைகள் ஒரு புறம். சில சமயங்களில் கோர்ட் கேசில் போய் முடியும். லோயர்களுக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்வார்கள். சரசுவின் வளவையும் பங்கஜத்தின் வளவையும் பிரிக்கிற வேலி தென்னங்கிடுகால் அடைக்கப்பட்டது. மூன்று வருஷத்துக்கு ஓரு தடவை கிடுகை மாற்றுவதும், புதுக் கதியால்கள் போடுவதும் பங்கஜத்தின் பொறுப்பு. கதியால்களில் உள்ள பூவரசம் மர இலைகளை புகையிலைத் தோட்டக்காரர்களுக்கு மொத்தமாக தீர்த்து பங்கஜம் பணம் வாங்குவது சரசுவுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது.  சரசுவின் காணி உறுதியில் வேலியை பராமரிப்பது அவள் பொறுப்பல்ல என்று எழுதப்பட்டிருநதது, அது சரசுவுக்கு ஒரு பின்னடைவு.

“மகன் கனடாவிலை நல்ல வேலை. மாதம் மாதம் சுளையாக பணம் அனுப்புகிறான். அந்த பணத் திமிர் அவள் பங்கஜத்துக்கு. அவள் காணிக்குப் பக்கத்துக் காணியை வீட்டோடை வாங்கப்போறதாக கதை அடிபடுகிறது”, சரசு கணவினிடம் பங்கஜத்தின் மேல் உள்ள பொறாமையைக் கொட்டித் தீர்த்தாள.;

“பங்கஜத்தின காணிக்குப் பகத்துக் காணி, மாமரங்களும் பலாமரங்களும் உள்ள பெரிய பதினைந்து பரப்பு காணியாச்சே. அவுஸ்திரேலியாவிலை இருக்கிற காணி சொந்தக்காரர் மகேந்திரன் ஏன் அதை விற்கப்போறார்?.” பரமு ஊர்விஷயம் தெரிந்து வைத்திருந்த சரசுவிடம் கேட்டான்.

“மகேந்திரன, அவுஸ்திரேலியாவிலை இருந்து திரும்பி ஊருக்கு வரப்போவதில்லையாம். உந்த காணியை வி;ற்று வருகிற காசை பாவித்து  அவுஸ்திரேலியாவில் உள்ள தன் வீட்டு மோர்ட்கேஜ் கடனைத் தீர்க்கப் போறார் போல கிடக்கு. பங்கஜத்திடம் சீட்டு போட்ட காசு இருக்கு. தேவைப்பட்டால் மகன் கனடாவிலை இருந்து காசு அனுப்புவான். வாங்கிற காணியிலை தன்றை இரு மகள்மாருக்கும் வீடுகள் கட்டி குடுக்கிறதாக பிளான் போல இருக்கு.” சரசு விபரம் தெரிந்தவள் போல் சொன்னாள்.

“அப்ப இரண்டு காணிகளையும் பிரிக்கிற வேலிக்கு என்ன நடக்கப்போகுது? ”, பச்சை மிளகாயைக் கடித்தவாரே பரமு கேட்டான்.

“பங்கஜம் இரண்டு காணிகளையும் பிரிக்கும் வேலியை எடுத்துப்போட்டு வாங்கிற காணியையும் தன்றை காணியோடை சேர்த்து பெரிய இருப்ததைந்து பரப்பு காணியாக்கிப் போடுவாள். பிள்ளையள் கலியாணம் முடிச்ச பிறகும் தனக்குப் பக்கத்திலை இருக்க வேண்டும் என்பது அவள் ஆசை”.

“அவள் இருக்கிற வீடு ஆருக்காம கொடுககப் போறாள்;?”

“அந்த வீடு அவள் மகனுக்காம். அவன் இயக்கத்தை விட்டு கனடா போனவன். தான் யாழ்ப்பாணத்திலை தான் முடிப்பானாம் என்று தாயுக்கு எழுதியிருக்கிறான். இங்கை படிச்ச பெண் வேண்டுமாம். கனடாவிலை படிச்ச பெண் சரிப் பட்டு வராதாம்;. இன்னும் கொஞ்ச காலம் அங்கை வேலை செய்து நாலு காசு சம்பாதித்துப் போட்டு ஊரோடை வந்து வாழ அவனுடைய திட்டமாம்.”

“ உமக்கு உதெல்லாம் யார் சொன்னது?”, மாங்காய் ஊறுகாயை சுவைத்தபடி பரமு கேட்டான்.

“வேறை யார். எங்கடை பொன்னம்மா ஆச்சிதான். அவவுக்கு ஊரிலை தெரியாத விஷயம் இல்லை”.

“ நீர் பங்கஜத்தோடை மிண்டாதையும் அவுளுடைய மகன் இயக்கத்திலை இருந்தவன். அதாலை பங்கஜத்துக்கு பல பெடியன்களைத் தெரியும். அவள் இயக்கத்துக்கு உம்மைப் பற்றி முறையிட்டால், பிறகு நடக்கிற விஷயம் வேறு”. சாப்பாட்டை முடித்துவிட்டு கையை கழுவியபடியே பரமு மனைவியை எச்சரித்தான்.

“ ஒண்டு மட்டும் சொல்லுறன் அவள் பூர்வீகம் தீவு. புங்கிடுதீவிலை இருந்து இங்கை வந்து குடியேறினவள். ஆனால் எங்கடை பாட்டன் பூட்டன் எல்லாம் பிறந்து வளர்ந்தது மீசாலையிலை. நாங்கள் இருக்கிற வீடும் வளவும் என்றை அப்பாவுக்கு, அவருடைய அப்பா கொடுத்தது. அதை என்றை அப்பா எனக்கு சீதனமாக எழுதினவர். இனி இந்தக் காணி எங்களுக்குப் பிறகு மகேஸ்வரிக்கு. அதுக்கு முதலிலை காணியை கொஞ்சம் கொஞ்சமாய் பங்கஜம் விழுங்கி போடுவாள் போலக் கிடக்கு. நல்ல காலம் எங்கடை கிணறு பங்குக் கிணறில்லை. இல்லாட்டால் அதிலை வேறு பிரச்சனை வந்திருக்கும்”.

“சரி சரி சரசு. நான் செல்லத்துரையரோடை இதைப்பற்றி பேசுகிறன். அவர் நல்ல மனுசன். நீர் பங்கஜத்தோடை சண்டை பிடிக்கிறதை நிற்பாட்டும்”. பரமு  அறைக்குள் சுருட்டொன்றை பற்றவைக்கப் போனான்.

♣♣♣♣♣

வேலிச் சண்டை ஓய்ந்து ஒரு மாதத்துக்குள் யாழ்குடா நாட்டின் நிலமை மாறியது. ஆர்மியின் கட்டுப்பாட்டுக்குள கிராமங்கள் ஒவ்வொன்றாக் வரத்தொடங்கின. மீசாலை, இயக்கத்து பெடியன்கள் பலர் வசிக்கும் ஊர். அதனால் மிசாலைக் கிராமத்தை தங்கள் கட்டுப்பாடடுக்குள் கொண்டு வர ஆர்மி தீர்மானித்தது. அதன் விளைவாக தங்கள் வாகனங்களும், டாங்கிகளும் இலகுவாக போய் வரக் கூடியதாக, பல வேலிகளை வெட்டி எறிந்தார்கள. அப்படி ஆர்மியின் ஆக்கிரமிப்புக்கு பலியான வேலிகளில் சரசுவின வளவையும்,, பங்கஜத்தின் வளவையும பிரிக்கும் வேலியும் ஒன்று. இனி வேலிச் சண்டை வராது. ஆர்மி மீசாலைக்கு வர முன்னரே சரசு குடும்பம் கிளிநொச்சிக்கும்;, பங்கஞம் குடும்பம் கொழும்புக்கும் புலம் பெயர்ந்தன. மீசாலைக் காணியை விட்டுப் போகமுன், சரசு தனது காணியை ஒரு தடவை பார்வைவியிட்டாள். வேலியைக் காணவில்லை. கீழே வெட்டப்பட்ட பூவரசம் மரக் கதியால்கள் கவனிப்பார் அற்று கிடந்தன.

“இனி யாரோடை சண்டைபிடிக்கப் போகிறாய்? என்று அவை தன்னைக் கேட்பது போல் அவளுக்குப் பட்டது.

♣♣♣♣♣

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.