kamagra paypal


முகப்பு » சிறுகதை

நிழலாடும் நினைவுகள்

solv_146

பின் மாலை நேரம். சூரிய வெளிச்சம் மங்கி இருந்தது. சாலை முழுவதுமாக வாகனங்கள் இடை விடாமல் ஒன்றை ஒன்று முந்தி கொண்டு ஓடின. சாலையில் நாம் நம் வண்டியில் செல்லும் போதோ, நடை பாதைகளில் நடந்து போகும் போதோ நம்மை கடந்து செல்பவர்கள் அல்லது  நாம் கடந்து செல்பவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சொல்லப்டாத, எழுதப்படாத, கேட்கப்படாத கதைகளை சுமந்து செல்கின்றனர் என்பதை எப்போதேனும் உணர்ந்ததுண்டா? அந்த வாகன கூட்டத்திற்குள் அனந்தனின் அம்மா மகா வண்டியை ஓட்ட அனந்தன் பின்னே அமர்ந்திருக்கிறான். க்ரே நிற டீ ஷர்ட் அணிந்திருந்தான். சீவினால் படியாதது போன்ற தோற்றம் அளிக்கும் தலை முடி காற்றில் பறந்து கொண்டே இருந்தது. கண்கள் தூக்கமின்மையால் சுருங்கி, கருவளையம் பூண்டிருந்தது. கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். மெலிந்த உடல். பார்பவர்கள் மன நோயாளியோ என்று கூட சந்தேகித்து விடும் தோற்றம் அவனுக்கு. மகா தன் நாற்பதுகளின் மத்தியில் இருந்தாலும் அனந்தனுக்கு அக்காவா என பலர் கேட்டுள்ளனர். முன் விளக்குகளின் வெளிச்சம் மகாவின் முகத்தில் ஒளிர்வதும், வாகனங்கள்  கடந்து சென்றதும் அணைவதுமாய் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஏதோ ஒரு விடையை நோக்கி செல்பவர்களாய், ஏதோ ஒரு சொல்ல பட வேண்டிய கதையை சுமந்தவர்களாய்.

மகாவுக்கு காதில் நிறைய குரல்கள் ஒலித்தன.

‘அனந்தா, என்னோட பிங்க் சுடி எங்க வெச்சேன்னு ஞாபகம் இல்ல.ஹெல்ப் பண்ணு டா, பிளீஸ்.’என்று அனந்தனின் தங்கை அபி எப்பொழுதும் கேட்பது, ‘நான் கிளாஸ்ல சொல்லி குடுக்குறத எல்லாம் ஒரு வார்த்த கூட விடாம அனந்தன் பேப்பர்ல எழுதிடுறான். ஹி இஸ் ஸச் எ லக்கி பாய்!!!’ அவன் ஆசிரியை பாராட்டியது, ‘ப்ரியா ஓடி வந்து வந்து தங்க கொலுசு தொளஞ்சிடிச்சும்மானு சொன்னதும் பதறிட்டேன். அவருக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். அனந்தன் ப்ரியா கூட வெலயாடிட்டு இருந்ததால நல்லதா போச்சு. அவனுக்கு தான் நன்றி சொல்லணும்.’ என்று பக்கத்து வீட்டு பிரியாவின் அம்மா நன்றி பாராட்டியது.

மகா சிந்தனையில் மூழ்கி இருக்க பின்னே வந்த லாரியின் ஹாரன்

சத்தத்தை கவனிக்கவில்லை. திடீரென்று லாரி கடந்ததையும், ஓட்டுனர் திட்டி கொண்டே சென்றதையும் கண்டு திடுக்கிட்டாள். ஒரு நொடி என்னென்னவோ ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின. அனந்தன் இது எதுவும் கவனிக்காமல் சாலையை சுற்றி வெற்று பார்வையை வீசினான்.

சேர வேண்டிய இடத்திற்கு வந்ததும் இருவரும் இறங்கினர். ‘Sky Home Psychiatric Rehabilitation Centre’ பலகையை பார்த்த படி மகா உள்ளே சென்றாள்.அனந்தன் பின் தொடர்ந்தான்.

ஒரு வாரத்திற்கு முன் மகா அனந்தனை அழைத்து கொண்டு இங்கே வந்திருந்தாள். சமீபமாக திடீர் என்று அனந்தன் ‘ஓ’ வென்று மகாவின் தோளில் சாய்ந்துக் கொண்டு அழுவதும், தனிமையில் வெகு நேரம் இருப்பதுமாக அவன் செயல்கள் மாறி வருவதை மகா கவனித்தாள். அனந்தனிடம் ஏதோ பிரச்சனை இருப்பதை அறிந்துக்கொண்ட மகா,தானே என்னவென்று யூகிக்க முயன்றாள். பயனில்லை.

அனந்தனிடம் ஒரு நாள் கேட்டாள்.

‘ஆனந்தா, வெளிய சொல்ல முடியாத விஷயம்னு நெனசிக்கிட்டு எதையாவது மனசுக்குள்ள வெச்சிருந்தா அம்மா கிட்ட வெளிப்படையா சொல்லு. Don’t make yourself confused.’

‘மா, நத்திங்க் டு வர்ரி. ப்ராஜக்ட் வேலைல சரியா தூக்கம் இல்ல. அதான் ஸ்ட்ரெஸ். ஐ வில் பி ஃபைன் வித்தின் எ வீக்.’சிரித்து கொண்டே மகாவின் தோள்களில் தாடையை வைத்து கொண்டு சொன்னான்.

சில தினங்களுக்கு முன் அனந்தனின் நண்பன் தமிழ் வீட்டிற்கு வந்திருந்தான். அவனுடன் மகா பேசுகையில் ‘ஆண்ட்டி, உங்க கிட்ட இத பத்தி சொல்லணும்னு நெனச்சேன். அனந்தன் இஸ் பிஹேவிங் ஸ்டிரேஞ்ச் தீஸ் டேஸ். சின்ன சின்ன விஷயத்தல்லாம் ஞாபகம் வெச்சிக்கிட்டு எல்லார் கிட்டயும் கோப பட்ரான், சரியா எதுவும் பேச கூட மாற்றான். இன்னைக்கு கூட ஃபோர்ஸ் பண்ணி தான் அவன படத்குக்கு கூட்டிட்டு போறேன். ஐ ஹோப் ஃபிரண்ட்ஸோட வெளிய வந்தா இதெல்லாம் சரி ஆயிடும். டேக் கேர் ஆஃப் ஹிம் ஆண்ட்டி.’அனந்தன் கிளம்பி தன் அறையை மூடிக் கொண்டு வெளியே வந்ததும் இருவரும் அமைதி கொண்டனர்.

‘அனந்தா,சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு. டேக் கேர் ஆஃப் யுவர்செல்ஃப்’ என்று மகா சொன்னதும்,

‘நா என்ன சின்ன கொழந்தையா மா? ஏன் என்ன சைல்ட் மாறி ட்ரீட் பண்றீங்க? எங்கயும் தொளஞ்சிட மாட்டேன். சீக்கிரம் வந்துட்றேன் ,போதுமா’ என்று எரிந்து விழுந்து விட்டு தமிழை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.

மகா ஆழ்ந்த யோசனையில் இறங்கினாள். தனக்கு தெரிந்த மருத்துவர், தோழி நிர்மலா psychiatrist clinic வைத்திருக்கிறார் என்று கேள்வி பட்டதும் உடனே அவரை அணுகி அனந்தனுக்கு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கினாள்.

இதை பற்றி அனந்தனிடம் கூறியதும், ‘என்ன பைத்தியம்னே முடிவு பண்ணிடியா மா?’ என்று கேட்டு பரிதாபமான பார்வையை மகாவின் மீது வீசினான்.

‘உங்க அப்பா ஆக்சிடென்ட்ல எறந்த பெறகு உன்னையும், அபியையும் எந்த மன கஷ்டமும் வராம பாத்துக்கணும்னு தான் இவ்ளோ நாளா பாடு பட்டுட்டு இருக்கேன். உனக்கு ஒரு பிரச்சனன்னு தெரிஞ்சும் எப்டி அனந்தா பாத்துட்டு சும்மா இருக்க சொல்ற?’ மகா அனந்தனிடம் கேள்வியை வீசினால்.

முதலில் இது அபத்தாமாகவே தெரிந்தாலும், தனக்கு ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்த அனந்தன் மகாவின் திருப்திக்காக வர சம்மதித்தான்.

ஒரு வரத்திற்கு முன்…

‘சொல்லுங்க Mrs.மகா, பாத்து ரொம்ப நாள் ஆகுது. எப்டி இருக்கீங்க?’ நிர்மலா பழகிய சிரிப்போடு கேட்டார்.

‘என் பசங்க சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான் டாக்டர்.பசங்க மேல அன்பு செலுத்துரத விட லைஃப்ல வேற என்ன கமிட்மென்ட்ஸ் இருக்க போகுது?’ அனந்தனை பார்த்து கொண்டே பேசினால் மகா.

மருத்துவர் மகாவை பார்த்து சிரித்துகொண்டே அனந்தன் பக்கம் திரும்பி கேட்டார்,‘இவர் தான் உங்க பையன் அனந்தனா இருக்கணும் ரைட்? சின்ன வயசுல பாத்தது. அதுக்கப்பறம் இப்போ தான் பாக்குறேன்.’

ஆனந்தன் மருத்துவரை பார்த்து பேருக்கு ஒரு சிரிப்பை உதிர்த்தான். பின் மகா தான் கேட்டவற்றையும் கண்டவற்றையும் பற்றி மருத்துவரிடம் எடுத்து உரைத்தாள்.

‘ஓகே மகா, இஃப் யு டோன்ட் மைண்ட், ஃப்யூ மினிட்ஸ் வெளிய வெயிட் பண்ண முடியுமா? அனந்தன் கிட்ட பேசிட்டு உங்கள கூப்புடுறேன்.’

மகா சென்றதும் அனந்தன் நிர்மலாவை பார்த்து கேட்டான் ‘உங்க டாட்டர் ஷைலஜா நல்லா இருக்கங்களா?’

நிர்மலா ஆச்சர்யத்துடன் ‘ஷீ இஸ் ஃபைன்’ என்றார்.

‘இன்னும் ரெண்டு வர்ஷத்துல ஸிசூலிங்க் முடிக்க போறா இல்ல? ஷைலஜாவுக்கு சிங்கிங்க்ல தானே இண்டரெஸ்ட்? சிட்டில நல்ல மியூசிக் ஸ்கூல்ஸ் சிலது எனக்கு தெரியும். என் ப்ரெண்ட்ஸ் அங்க தான் ம்யூசிக் கத்துக்குறாங்க. நான் நம்பர் குடுக்குறேன், காண்டாக்ட் பண்ணிக்கோங்க’

மருத்துவர் வாயடைத்து போய் ‘கண்டிப்பா நா ஷைலு கிட்ட சொல்றேன். பை த வே ,அவளுக்கு சிங்கிங்க்ல ஆர்வமனு உனக்கு எப்டி தெரிஞ்சது? சமீபத்துல எங்கயாவது மீட் பண்ணிகிடிங்களா?’

‘நோ நோ’ அனந்தன் ஆமோதித்து கொண்டே தொடர்ந்தான், ‘நீங்க தான் சொன்னிங்க ஷைலஜா டீவியில பாட்டு ஒடுனா கூடவே பாட அரமிச்சிடுவா. பாட்டுன்னா அவ்ளோ இண்டரெஸ்ட்னு’ எந்த ஏற்றம் இரக்கமும் இல்லாமல் அனந்தன் கூறினான்.

‘எப்போ?’ குழப்பமாய் கேட்டாள் நிர்மலா.

‘இன்னைக்கு தேதி 2-5-2015 ஆகுதா? ஹ்ம்ம், சரியா சொல்லனும்னா  பதினோரு வர்ஷம், ஏழு மாசம், பதிமூணு? இல்ல, பதினாலு நாள் முன்னாடி, 18-09-2003 வியாழன் அன்னைக்கு சொன்னிங்க.’

‘இண்டரெஸ்ட்டிங்’ மருத்துவர் அதிர்ந்த தோனியில் சொன்னார். அனந்தன் அலட்டிக் கொல்லாதவனாய் அந்த அறையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

‘ஞாபக சக்தி அதிகமா இருக்கு போல’ டாக்டர் காகிதத்தில் ஏதோ எழுதிக்கொண்டே அனந்தனை கேட்டார்.

அனந்தன் சட்டென்று ‘அதுதான் டாக்டர் என்னோட பிரச்சனையே’ என்று கூறி சோக பார்வை வீசினான்.

நிர்மலா பேனாவை வைத்து விட்டு, ‘கொஞ்சம் தெளிவா விளக்க முடியுமா?’ என்றாள்.

குரலை கரகரத்துக் கொண்டு அனந்தன் பேச ஆரம்பித்தான் ‘நமக்குல்லாம் மறதி ஒரு பெரிய தடையாவே இருக்குனு நெனச்சிட்டு இருக்கோம் டாக்டர். உண்மைய சொல்லனும்னா மறதி ஒரு வரம்னு தான் சொல்லணும். வாழ்க்கைல சில நேரம் சில விஷயங்கல நாமே மறக்க ஆச படுறோம். சிலது தானாக மறந்து போகுது. இது ரெண்டுமே எனக்கு நடக்கல.’ மௌனம் ஆனான் அனந்தன்.

‘ஞாபகங்கள் வாழ்க்கைக்கு நல்லது தானே அனந்தன். அனுபவம் ஆயிரம் விஷயம் சொல்லி கொடுக்கும் இல்லையா?’

‘சில அனுபவங்கள் பாடமா அமையும். பெரும்பாலும் அனுபவங்கள் கசப்பு தான் தருது. மனிதர்கள் அன்பு பாராற்ற உலகம் கடந்து போயாச்சு டாக்டர்.’

‘இவ்ளோ சின்ன வயசுல ஏன் அனந்தன் இவ்வளவு விரக்தி?’

‘எனக்கு காரணம் சொல்ல தெரியல. யார் மேலயாவது சாஞ்சிகிட்டு  ‘ஓ’னு அழுகனும் போல இருக்கு. எதையும் மறக்க முடியாத இந்த மூளைய தூக்கி எறிஞ்சிடனும் போல கோவம் வருது. என் ஃபிரண்ட்ஸ் ஈஸியா எடுத்துக்குற விஷயத்த என்னால ஏத்துக்க முடியல. இதுக்குலாம் எப்போ முடிவு வரும்னு ஏங்கிக்கிட்டு இருக்கேன்.’ அனந்தன் அழுதே விட்டான்.

நிர்மலா அமைதியாக கேட்டு கொண்டாள். மனிதர்களுக்கு தங்கள் கஷ்டத்திற்கு விடை கிடைக்கா விட்டாலும், அவற்றை உட்கார்ந்து கேட்பதற்க்கு எவரேனும் இருந்தால் மிகவும் ஆறுதலாகத்தான் இருக்கும்.

‘மகா நல்ல ஓபன் டைப் தானே? அவங்க கிட்ட மனசு விட்டு பேசி இருக்கலாமே?’ நிர்மலா அனந்தனை பார்த்து கேட்டாள்.

கண்களை துடைத்து விட்டு வெளியில் அமர்ந்திருக்கும் மகாவை கதவு கண்ணாடி வழியே பார்த்து அனந்தன் சிரிக்க, மகா அனந்தனை பார்த்து சிரித்தாள்.

‘அப்பாவோட கார் ஆக்சிடென்ட் ஆன போது நானும் கார்ல தான் இருந்தேன். லாரி மோதுனதுல கார் கவுந்து கெடந்துது. அப்பா தலையில் இருந்து இரத்தம் ஓடிக்கிட்டே இருந்துது. எனக்கு அப்போ வயசு 7 தான். நடு ராத்திரி ஹைவேல நடந்ததால யாருமே உதவிக்கு இல்ல. இடிச்ச லாரி டிரைவர் தப்பிச்சி ஓடிட்டான். இரவு முழுக்க அப்பா இறந்தது கூட தெரியாம அழுதுட்டு இருந்துருக்கேன். நான் எப்டியோ சின்ன காயங்களோட தப்பிச்சிட்டேன்.’ குரல் தழு தழுத்தது அனந்தனுக்கு.

சிறிய மௌனத்திற்குப் பின் அனந்தனே தொடர்ந்தான் ‘அன்னைக்கு அப்பா நீல நிற டீ ஷர்ட் போட்டுருந்தாரு. அம்மாக்கு ஆஃபிஸ்ல சின்ன வேல இருந்ததால எங்க கூட அன்னைக்கு மட்டும் அவுட்டிங் வரல. அபி அப்போ கை குழந்த. ஸோ அம்மா பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. சரியா மணி 11:47, அம்மா கிட்ட பேசிட்டு கால் கட் பன்னாரு. திடீர்னு பெரிய சத்தம் கேட்டுது. கண் மூடி தொறக்குறதுக்குள்ள எவ்ரிதிங் வாஸ் ஓவர்.’

நிர்மலா சற்று நிதானித்து பேசினாள் ‘இத நீ மகா கிட்ட இன்னும் சொல்லலையா?’

‘இல்ல. இவ்ளோ நாள் மறந்து போன இந்த விஷயம் சமீபமா தான் எனக்கு நினைவுக்கு வந்துது. அப்பாவோட லாஸ் தாங்காம அம்மா ரொம்ப கஷ்ட பட்டாங்க. அதுலேர்ந்து வெளிய வந்ததே பெரிய விஷயம். திரும்ப எதுக்கு அவங்கள கஷ்ட படுத்தணும்னு இத பத்தி பேசவே இல்ல.’

நிர்மலா ஏதோ எழுத அனந்தன் அமைதியாக தரையை பார்த்து கொண்டிருந்தான். மகாவை உள்ளே வர சொன்னார் நிர்மலா.

‘அனந்தன் கிட்ட பேசிட்டேன் மகா. நீங்க எதுக்கும் கவல பட தேவ இல்ல. அனந்தனுக்கு விவரம் நல்லா தெரிஞ்சிருக்கு. ஹி வில் பி ஆல்ரைட் சூன். இதுல கொஞ்சம் டெஸ்ட்ஸ் அண்ட் டாப்லெட்ஸ் எழுதி இருக்கேன். இன்னைக்கு எடுத்துடுங்க. அடுத்த வாரம் ரிசல்ட்ஸ் வந்ததும் உங்கள காண்டாக்ட் பண்றேன்.’

‘அடுத்த வாரம் மீட் பண்றோம் டாக்டர்’ சொல்லி விட்டு மகா முன்னே சென்றாள். அனந்தன் கதவு அருகே சென்றதும் திரும்பி நிர்மலாவை பார்த்தான். ‘நா சொன்னது எதையும்….’ அனந்தன் முடிப்பதற்குள்

‘கண்டிப்பா மகா கிட்ட சொல்ல மாட்டேன். சந்தர்ப்பம் கெடச்சா நீயே அம்மா கிட்ட பேசு.’ சரி என்று தலை அசைத்து கொண்டே விடை பெற்றான்.

இன்று

அனந்தனும் மகாவும் கிளினிகுக்குள் நுழைந்தனர். நிர்மலாவின் சந்திப்பிற்கு பிறகு அனந்தனிடம் சில மாற்றங்களை மகா கவனித்தாள். அவனது அப்பாவின் நினைவை பற்றிக் கூட மகாவிடம் பகிர்ந்து கொண்டான். முதலில் மகா தடுமாறினாலும், அதிலிறிந்து மீண்டு அனந்தனின் உணர்வுகளை புரிந்து கொண்டாள்.

‘வாங்க மகா உக்காருங்க. அனந்தன், இப்போ எப்டி ஃபீல் பண்ற?’

‘பெட்டர் டாக்டர்.’ அனந்தன் தெளிந்த தோனியில் பதிலளித்தான்.

‘கொஞ்சம் வெளிய உக்காந்துரு அனந்தன், அம்மா கிட்ட பேசிட்டு உண்ண கூப்புடுறேன்.’

அனந்தன் சென்றதும், ‘மகா, அனந்தனோட ரிபோர்ட்ஸ் பாத்தேன். நான் யூகிச்ச மாறியே தான் நடந்துருக்கு. அனந்தனுக்கு Hyperthymesia.’

மகா சற்று தடுமாறியவளாய் ‘நிர்மலா, அப்டி ஒண்ணு நா கேள்வி பட்டதே இல்லயே. பிளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.’

‘Hyperthymesia ஒரு அரிய வகை நோய். இது வரைக்கும் உலகத்துல 25 பேருக்கு மட்டும் தான் இந்த நோய் இருக்குறது உறுதி செய்ய பட்டிருக்கு. அனந்தன் 26ஆவது பேஷண்ட்.’

‘இதனால உயிருக்கு ஒண்ணும் பாதிப்பு இல்லையே?’ மகாவின் கைகள் நடுங்கின.

‘நோ நோ. மகா நீங்க பயப்பட தேவ இல்ல. Hyperthymesia வந்தவங்களுக்கு அவங்களோட கடந்த கால நிகழ்வுகள் ஒண்ணு விடாம நினைவுக்கு வரும். அவங்க குறிப்பிட்ட தேதியில என்ன பண்ணிட்டிருந்தாங்க, என்ன கலர் டிரஸ் போட்டுருந்தாங்க, யார் யார் கூட இருந்தாங்க இப்டி எல்லா விஷயமும் துல்லியமா ஞாபகத்துக்கு வரும்.’

‘இத குண படுத்த முடியாதா நிர்மலா?’

‘இத்துக்கான ட்ரீட்மெண்ட் இப்போ தான் டெவலப்மெண்ட் ஸ்டேஜ்ல இருக்கு. அடிப்படையா சென்சிடிவ் ஆகாம பாத்துக்குட்டாலே போதும்.’

‘ஞாபகங்கள் நல்லது தானே டாக்டர்?’ கொஞ்சம் நிம்மதியுற்றவலாய் மகா கேட்டாள்.

‘அது மன அழுத்தத்த குடுக்காத வரைக்கும் நல்லது தான்.’

மகா அனந்தனை நோக்கினாள். நிர்மலா அறைக்கு வெளியில் இருந்த சிறிய தோட்டம் போன்ற அமைப்பினை ரசித்து கொண்டிருந்தான் அனந்தன். அங்கு பூத்திருந்த பூக்களும் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியும் அனந்தனுக்கு இயற்கை தோற்றத்தை அளித்தது. அவன் உதடுகள் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருந்தன.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.