kamagra paypal


முகப்பு » இலக்கிய விமர்சனம், கட்டுரை, புத்தக அனுபவம்

துறைவன்: முக்குவர் வாழ்வும் வரலாறும்

Thuraivan1

 

முல்லை, மருதம், பாலை நில வாழ்க்கைகளுடன் ஒப்பிட்டால் நெய்தல் நிலம் என்பது எளிய அறிமுகத்திற்கு அப்பால் நான் முற்றிலும் அறியாத ஒன்று. சென்னையைத் தவிரப் பிற கடற்கரை ஊர்களில் எங்களுக்கு உறவினர்களோ நண்பர்களோ முன்னெப்போதும் இருந்ததில்லை. ஆகவே பொதுஅறிவு, எளிய அவதானங்கள் மற்றும் யூகங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் எனக்குச் சற்றும் அறிமுகமில்லாதது கடற்கரையோர சமூகத்தின் வாழ்க்கை. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் தென்மேற்கு கடற்கரையின் மொழி எனக்கு ஒரு வேற்று மொழி அளவுக்கே கூட அந்நியமானது.

எட்டுத்தொகை நூல்களில் பாடப்பட்டட தொன்மையுடைய மீன் பிடித்தல், உப்புவிளைத்தல் முத்துக்குளித்தல் ஆகிய தொழில்களை மேற்கொள்ளும் பரதவர்களுள் முக்குவர் எனப்படும் இனக்குழுவினரின் வாழ்க்கையையும் வரலாற்றையும் பற்றியதே துறைவன். பல அரிய வரலாற்றுத் தகவல்களுடன் பலவகை மீன் வகைகள் அவற்றைப் பிடிக்கும் முறைமைகள், மீன்பிடித்தலுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மீதான விரிவான தகவல்களைக் கொண்டது இந்நூல்.

நெய்தல் வாழ்க்கையை மையமாகக்கொண்ட கன்னி, ஆழிசூழ் உலகு ஆகிய நூல்களுடன் ஒப்பிட்டால், துறைவனின் மொழி எனக்குப் பரிச்சயமான மொழியின் மைய ஓட்டத்துடன் இன்னும்கூட ஒரு படி அதிகப்படியாகவே விலகி நிற்பது. 260 பக்கங்கள் கொண்ட இந்நூலில் வரும் அறுபதுக்கும் மேற்பட்ட சொற்கள், அவற்றின் பிரயோகங்கள் அதுவரையிலும் நான் அறிந்திராதவை. இதை என் வாசிப்பின் தனிப்பட்ட குறைபாடாகவும் சொல்லலாம்.

மானுட வாழ்க்கையே ஒரு வகையில் இயற்கைக்கு எதிரான போராட்டம்தானோ என்று எண்ணச்செய்பவை கடலை நம்பியுள்ள வாழ்வின் சிரமங்கள். கடல்மேல் செல்வது வேளாண்மையைப்போல ஒரு தொழில் மட்டுமல்ல. அது சாவுக்கு எதிரான பகடையாட்டம். நவீன தொழில் நுட்பமும் கருவிகளும் இருக்கும் இன்று கூட அது மிகவும் ஆபத்தான ஒன்றுதான் என்றாலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் புழக்கத்திற்கு வருவதற்கு முந்தைய காலகட்டம் இன்னும் இடர்கள் மிகுந்தது. ’இரவில் படகு என்பது மிதக்கும் கல்லறை விதியிருந்தால் மறுநாள் காலை உயிருடன் இருப்பார்கள்’ என்று இந்நூலில் வருவதைப்போல. மாவுச்சாக்கை தைத்து ஓட்டையடைக்கப்பட்டு, நிரந்தரமாகவே தோல்வியடைந்து விட்டது போலத் தோற்றமளிக்கும் பாய்மர படகை நம்பி கடலில் இறங்கினாலுங்கூட, மனிதனுக்கு வலி ஒரு பொருட்டல்ல. ”man is not made for defeat. A man can be destroyed, but not defeated” என்று கடலும் கிழவனும் கதையில் சான்டியாகோ சொல்வதைப் போன்றதும்தான்.

இயற்கையின் பிரம்மாண்டம், கருணை, குரூரம் ஆகியவற்றின் முன் அன்றாடமும் சாட்சியாகி நிற்கும் வாழ்க்கை முறை காரணமாக இறை நம்பிக்கையும் சாகச உணர்வும் சகமனிதர் மீது தோழமையும் நம்பிக்கையும் நிறைந்த ஆளுமையைத் தலைமுறைகளாகக் கைவரப் பெற்றவர்கள் இம்மக்கள். I am glad we do not have to try to kill the stars. Imagine if each day a man must try to kill the moon, he thought. The moon runs away. But imagine if a man each day should have to try to kill the sun? We were born lucky என்று எண்ணிக்கொள்ளும் ஹெமிங்வேயின் சான்டியாகோவை போன்றவர்கள்.

ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் கரிய மொஸாம்பிக் மக்களைக் கண்டிருந்த போர்த்துகீசியர் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு வந்தபோது அம்மக்களின் நிற ஒற்றுமையை முன்னிறுத்தி அவர்களையும் முக்குவா என்றே அழைக்கின்றனர் என்ற தகவலில் இருந்து விரிந்து செல்வது இதன் விவாத இழை. மாப்ள என்ற புதிய கேரள முஸ்லீம் சாதியின் தோற்றம் போன்ற தென்மேற்கு கடற்கரையோர வாழ்வின் இனவரைவியல் தகவல்களும் இந்நூலில் உண்டு.

அலை தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. அலைகள் என்பவை கறுத்த யானைகள். கடலுக்குள் நடக்கும் யானைச்சண்டையில் வென்ற யானைகள் தோல்வியுற்ற யானைகளைக் கடற்கரை நோக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது. யானைகளின் குருதி வெள்ளை நிற நுரையாகக் கடற்கரையெங்கும் பரவிக்கிடக்கிறது.

அலை விழும் இடத்திலிருந்து கடல் விளிம்பு வரையுள்ள கடல்நீர் பேரருவி விழுந்து உருவாகும் வெண்பரப்பு சிறுமியின் கருநீல பட்டுப்பாவாடையின் வெள்ளை விளிம்புபோலத் தரையில் உரசியபடி படிகிறது. அரபிக்கடலில் பின்னோக்கி நீந்திக்கொண்டிருந்த இறால் மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொள்கிறது. வீடுகளின் இடுக்குவழியாக ஓடிய செம்மண் கலந்த மழைவெள்ளம் கடற்கரையெங்கும் இரத்தம் போலச் சகதியாகிறது. மீனவர் வாழ்க்கையில் கடலே சகல திசைகளிலும் வியாபித்திருக்கிறது.

கட்டுமரம், வள்ளம், படகு, பிளைவுட் ஆகியவற்றின் வர்ணனைகள், மாயக்கா எனும் மீன்பிடி சாதனம், கரமடிவலை, நீள்வலை, பட்டுநூல் வலை ஆகிவவற்றின் விளக்கங்களும் பயன்படுத்தும் முறைகளும்; கொழுவாளைமீன் , தெரச்சிமீன், கட்ட கொம்பன், ஏவ எனும் பொங்குமீன் ஆகியவற்றின் விவரங்கள்; படகின் எஞ்சின்களின் வகைகள், அவைகளைப் பராமரிக்கும் விதம்; மடி, வெள்ளுடும்பு போன்ற திமிங்கில வகைகள் மற்றும் ஓலைக்கணவாய் தோட்டுக்கண்வாய் மீன்களுக்குள்ள வித்தியாசம்; குழிநண்டுகளைப் பிடித்து அவற்றை வைத்து நண்டுகளைப் பிடித்து, பின் அந்த நண்டுகளை வைத்து கணவாய் மீன்களைப் பிடிக்கும் தொழில்நுட்பம்; ஓங்கில் இறைச்சியை வைத்துச் சுறாக்களைப் பிடிக்கும் முறை, ஜி.பி.எஸ் இயங்குவிதம் ஜி.பி.எஸ் பாயிண்டுகளின் விளக்கம், என மீன்பிடி தொழிலின் அரிய தகவல்கள் இந்நூலில் உண்டு.

வள்ளத்தை நீரில் இறக்கிவிட்டு மீன்பிடித்து மீள எத்தனை ஆள்கள் தேவையோ அத்தனை நபர்களும் முதல் இரண்டு அத்தியாயத்திலேயே அறிமுகமாகிவிடுகிறார்கள். செய்நேர்த்தி, வாசிப்பு இன்பம் ஆகியவற்றை அதிகரிக்க என்று எவ்விதமான செயற்கையான பிரயத்தனங்களும் வலிந்து மேற்கொள்ளப்படவில்லை. கதையில் வரும் பல ஆளுமைகளின் சித்திரமும் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் இயல்பாகச் சற்றும் செயற்கையின்றிப் பதிவாகியுள்ளன. மருத, பாலை நிலத்தவர் கொடிய விஷமுள்ள நாகத்தை நல்லபாம்பு என்று அழைப்பது போல இருப்பதிலேயே வலிமையான கடல் மிருகத்தை நெய்தல் நிலத்தவர் நல்லமீன் என அழைப்பதும் ஆச்சரியமூட்டுவது.

”நாமளே எரப்பம்மாரு. எரப்பன் எரந்து எரப்பாளிச்சு கொடுக்கணும்”. “அப்போ நான் பணக்காறனெண்னு அடுத்தவனுக்குக் காட்டவேண்டி குடிச்சேன். அதுக்கப்பெறவு எனக்க போட்ட எரிச்ச சோகத்துல குடிச்சேன். இப்போ கேன்சறுக்க வேதன தெரியாமயிருக்கக் குடிக்கேன். இனியும் இத விட முடியாது பிள்ள” என்பது போன்ற உரையாடல்கள் கதையின் மொழிக்குள் இயல்பாக நிகழ்ந்தபடி இருக்கின்றன. படமெடுத்தாடும் ஒரு சர்ப்பத்தின் தலைமேல் நிற்பதை போலத் தன் கட்டுமரத்தில் நின்று கொண்டிருக்கிறார் பார்த்தலோமி.

இலக்கியமும் இனவரைவியலும் இணைந்திருப்பதால் நாவல் வடிவத்தில் சில போதாமைகளும் குறைகளும் இருக்கலாம். இருப்பினும் இதிலிருக்கும் தகவல்களும் மீனவர்களின் கடல் வாழ்க்கையும் மீன்பிடி யுக்திகளும் அவர்களின் வரலாறும் சிறந்ததொரு வாசிப்பனுவத்தை வாசகனுக்குத் தருமென்பதில் ஐயமில்லை என்கிறார் ஆசிரியர் முன்னுரையில். இலக்கியத்தில் பல்வேறு படிநிலையின் வாசிப்பும் பயிற்சியும் உடைய அந்நிலத்தின் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை இலக்கிய வடிவில் திரும்ப அளிக்கும் முயற்சி என்பதால் அப்படி எளிமையுடன் இருப்பது அவசியமானது என்பதை ஊகிக்க முடிகிறது. வட்டார வழக்குகளைப் பொதுத்தமிழில் விளக்கும் சிறு இணைப்பு, பல்வேறு வகை மீன்கள், வலைகள் மீன்பிடி நுட்பங்களை விளக்கும் படங்கள் ஆகியவை அடுத்தபதிப்பில் சேர்க்கப்படலாம்.

ஓர் இலக்கிய முயற்சியின் முக்கியத்துவம் அதன் பல்வேறு காரணங்களுக்காக முக்கியமான ஒன்றாக முன்னிறுத்தப்படக்கூடும். இதுவரையிலும் முற்றிலும் அறியாத தமிழ்நாட்டின் தென்மேற்கு கடற்கரையின் வாழ்க்கையைத் தமிழ் வாசகனுக்கு இயல்பாக அறியத்தருகிறது என்பதால் துறைவன் முக்கியமான ஒரு நூலாகிறது.

நோக்கு உரல்கள்

1. துறைவன் நாவல் முன்னுரை: ஜோ டி குருஸ் | பதாகை

2. மீன்குருதி படிந்த வரலாறு

3. வழக்குரைஞர்) பணி. பங்கிராஸ் அருளப்பன்: துறைவன் (கிறிஸ்டோபர் ஆன்றணி) ஒரு ரசனை…

4. துறைவன் – என்னுரை – க்ரிஸ்டஃபர் ஆண்டனி, மிச்சிகன், அமெரிக்கா

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.