பொன்முட்டை

radha-krishna-ivy-sharma

இரண்டு முறை அதே தெருவில்  வீட்டைத் தேடி தவறவிட்டாகிவிட்டது. செல்போனில் அழைத்தால் “ பச்சை பெயிண்ட் அடிச்ச கேட் சார்.. சின்னதா இருக்கும். இப்ப தெருக்கோடியில குப்பை லாரி தெரியுதா? அதுலேர்ந்து நாலாவது வீடு”
நான் தெருக்கோடியில் திரும்பவதற்குள் குப்பை லாரி போய்விட்டிருந்தது. மீண்டும் “பச்சை கேட்” என செல்போன் சொல்லுமுன், முந்திக்கொண்டேன்.” ஹலோ. நான் இப்ப முனிசிபல் ஸ்கூல் வாசல்ல  நிக்கறேன்.” ஒரு கணம் நிதானித்து “இருங்க. வர்றேன்” என்றவர், இரு நிமிடத்தில், முன்னே நின்று கைகுலுக்கினார் “. நான் சீனிவாசன். வாங்க”
வீட்டின் கேட் இருந்தது வெளிர் மஞ்சள் கலரில். “ பச்சைன்னா சொன்னேனா? அட… சரி முன்னப்பின்ன இருந்தாலும் பெயிண்ட் அடிச்ச கேட்-னு பாத்திருக்கலாம் நீங்க” ஆஹா..சரிதான்.
நாராயணன் “வாங்க” என்றார் வயோதிகர்களின் வேட்டிகளுக்கென ஒரு மணம் உண்டு. அது சற்றே நாசியை துளைத்தது.  அவர் அருகே கீழே காலை மடக்கி மற்றொரு கிழவர் படுத்திருந்தார். மிக ஒல்லியாக, எலும்புகள் துருத்தி, வழுக்கைத் தலையில் வெண் முடிக்கற்றைகள் காதருகே அடர்ந்து நீண்டிருந்தன. அவர் இருமாமல் இருந்திருந்தால் , “இப்பத்தான் ஒரு மாஸ்ஸிவ் அட்டாக்ல போனார்” என்று யாரும் சொன்னால் நம்பியிருப்பேன்.
’வாங்க’ என்றார், அசோக் குமார் . “சொல்லியிருக்கலாம்ல? நானே பிக் அப் பண்ணியிருப்பேன். உங்க ஓட்டல் வழியாத்தான் வர்றேன்.” அவர் தவிர திருமதி. சிவசக்தி மட்டும்தான் எனக்குத் தெரிந்தவர். நாலு இளைஞர்கள் சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.
டூரில் வந்தபொழுது, இந்தமுறை ரயிலுக்கு அவகாசமிருப்பதை அசோக்கிடம் சொல்ல, “எங்க கூட்டத்துக்கு வாங்களேன்?. நாராயணசாமி பேசறார். நாராயணன் தெரியும்ல? பழந்தமிழ் பாடல்களில் அறிவியல் பார்வைன்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். ” என்றார்.
அந்த புத்தகத்தைப் படிக்கவில்லை என்று சொன்னாலும் அசோக் கேட்கவில்லை. ‘சீனிவாசன், சார் நாளைக்கு மீட்டிங்க்ல வர்றாரு. ” என்று போன் போட்டுச் சொல்லிவைக்க, இப்போது நான் வெளிர்மஞ்சளான பச்சை கேட் கடந்து உள்ளே நிற்கிறேன்.
நாராயணன் தொடங்குகையில்,  கண்களைச் சுருக்கி வரிகளை நினைவு கூர்ந்தார். வெயில் ,எதிரேயிருந்த கோயில் மதிளில் எதிரொளித்து ரோட்டைப் பார்க்க முடியாமல் செய்திருந்தது.
“ கம்பன் பிஸிக்ஸை ஒரு பிடி பிடிச்ச இடம் ஒன்னு இருக்கு” என்றார். ஒரு சிரிப்போடு “உங்களுக்குத் தெரியுமா?” என்ற தொனியில் சிரிப்போடு அனைவரையும் ஒருமுறை பார்த்தார். “யுத்த காண்டம். இரணியன் வதைப்படலம். பெருசா உருவமெடுக்கறான் நரசிம்மன்.”
“ககன முட்டை கிழிந்தது”-ங்கறான்,அதைப் பாடற கம்பன். ககனம்னா ஆகாயம். ஒரு முட்டையோடுக்குள்ள இருந்து மேல பாத்தா எப்படி வளைஞ்சு தெரியுமோ அப்படி வானம் தெரிஞ்சது. அதை கிழிச்சிகிட்டு உயர்ந்தான் நரசிம்மன்ன்னு பொருள்.
ஆனா, இதை ஒரு தடவ தவறா ’கனக முட்டை’ன்னு வாசிச்சிட்டேன். ஸ்பூனரிஸம். அடடா-ன்னு திரும்பி வாசிக்கறச்சே தோணிச்சு. கனக முட்டைன்னு சொன்னாலும் தப்பு இல்லை. கனக முட்டைன்னா ஹ்ரண்ய கர்பம்னு சொல்ற பொன் முட்டை. ப்ரபஞ்சம் ஒரு பொன்முட்டை வடிவில் இருக்குன்னு வேதங்கள் சொல்லுது. அப்படிப்பாத்தா கனகமுட்டை கிழிந்தது-.. ப்ரபஞ்சத்தையே கிழிச்சுப் புறப்பட்டான் நரசிம்மன். இது அழகு பாத்தீங்களா? விரிகிற ப்ரபஞ்சம் என்ன வடிவுல இருக்கமுடியும்?. எல்லா விசைகளும் இழுக்க, தள்ள-ன்னு இருக்கையிலே, அவற்றோட மொத்த கூட்டுவிசைல பாத்தோம்னா, ஒரே சீராக எல்லாவிடங்கள்லயும் சமமா இருக்காது. நீள் வட்ட வடிவில்.. ஒரு முட்டை வடிவுலதான் இருக்கும்ங்கறாங்க பல ஆய்வாளர்கள். பல மத, பழங்குடி இனத்தவர்களின் பார்வையிலும், ப்ரபஞ்சம் ஒரு முட்டைதான். ஏன்னா, முட்டையிலேருந்துதான் உயிர் வருதுங்கறது உலகத்தில் நாம் பாத்த நியதி.அது உயிர்க்காப்பு. வமிசத்தின் உத்ரவாதம்.
கம்பன் பாட்டைத் தப்பா வாசிச்சாலும் சரியாத்தான் வருதுங்கறதுக்கு சொன்னேன்” நாராயணன் பலதும் பேசி நிறுத்தினார். மேற்கொண்டு யார்யாரெல்லாமோ பேசினார்கள். கிளம்பியபோது அசோக் “ஓட்டல்ல விட்டுடறேன்” என்றார்..
பைக் அருகே நடந்துவந்த போது கேட்டார் “நாராயணன் பேச்சு எப்படி இருந்தது?”
“ம்ம்” என்றேன், சிந்தனை வயப்பட்டு.
“பிடிக்கலையோ?”
“அப்படியில்ல. எதுக்குஎடுத்தாலும் எங்க மூதாதையர் அப்படி இப்படின்னு உசத்திச் சொல்வதும் ஒரு சமூக நோய்தான். இவரும் அதுல இருக்காரோன்னு தோணுது”
“சார், ஒரு கவித்துவ நீட்சி, மிகைப்படுதுத்துதல்னு எடுத்துக்கலாமே? இதுல தப்பு ஒண்ணுமில்லையே?”
“அறிவியல் பார்வைன்னு வர்றப்போ முடிவுகள் வேணும்,நிரூபணங்கள் வேணும்.அல்லது, அவர் சொன்னதுக்கு முன் காரணம், காரணிகள் இருக்கணும். கம்பன் பிஸிக்ஸ் சொன்னான்னு வாதிக்காம, ‘இப்படி ஒரு அறிவியல் தத்துவம் இருக்கு’ன்ன்னு ஒரு இணைகோடு மட்டும் காட்டிட்டுப் போயிருந்தா நல்லாயிருந்திருக்கும். எல்லாத்துலயும் கம்பன் ஜீனியஸ், நம்ம முன்னோர்கள் அனைத்தும் அறிந்தவர்கள்னு நிறுவ வேண்டிய அவசியமில்லை” என்றேன்.
அப்போதுதான் கவனித்தேன்.சீனிவாசனும், நாராயணனும், அருகில் நின்றிருந்தார்கள். நாராயணனுக்கு அந்த பேச்சு பிடிக்கவில்லை போலும். முகம் ஜிவுஜிவுவென்றிருந்தது.
“எதுவா இருந்தா என்ன? இருந்துட்டுப் போட்டும்” என்றார் நாராயணன் சுரத்தின்றி.
“சார்” என்றேன் கவலையோடு “ என்னோட மாற்றுக்கருத்து உங்களோட அறிவிற்கு இல்லை, அறிவியலுக்கும் நம் மரபுக்குமான இந்த அப்ரோச் சரியில்லையோன்னு படுது”
“அதுக்கு ஏன் நான் சொன்னதை எடுக்கறீங்க?” இடைமறித்தார் நாராயணன் எரிச்சலோடு.
நான் தொடர்ந்தேன் “ கனக முட்டை கிழிந்ததுங்கற வார்த்தை கொஞ்சம் நெருடுது. நரசிம்மன் வளர்ந்தது ப்ரபஞ்சத்தைக் கிழித்துக்கொண்டா? அது விஸ்வரூபமாகாதா?”
சீனிவாசன் பின்னால் திரும்பி“ பெரியப்பா, எந்திரிங்க. பெருக்கறவ வந்திருக்கா” என்றார். சடலமாய்ப் படுத்திருந்த மனிதர் மெள்ள எழுந்து ஒரு கையை ஊன்றி அமர்ந்தார். ”ராமா, க்ருஷ்ணா” என்று முக்கி முனகியபடி எழுந்து நின்றார்.
“கோபாலா. ஏதோ சந்தேகமாம். என்னான்னு நீயே கேளு” என்ற நாராயணன் ஒன்றும் சொல்லாமல் விலகிப் போனார்.
“கேட்டுகிட்டுத்தான் இருந்தேன்.” என்றார் கோபாலன்.. இவரிடம் என்ன கேட்பது?
“முதல்ல ரெண்டு விச்யம் புரிஞ்சுக்கணும். ஒண்ணு பெரிதாக வளர்ந்தல்ங்கறது கவித்துவ நீட்சி. அது இரணியன் அளவுக்கும் மேலே பயங்கர உருவுடனும், சக்தியுடனும் நரசிம்மனைக் காட்சிப்படுத்த கம்பன் எழுதியிருக்கான். அது விஸ்வரூபம் இல்லை. விஸ்வரூபம் என்பது ஒரு நிலை. அனைத்தும் நானேன்னு காட்டறது. இது அவதாரம். ஒரு வதம் செய்ய வந்தது. வாமனம் திருவிக்ரமனாக வளர்ந்தது மாதிரி”
“அப்ப ககன முட்டை கிழிந்தது? அது கவித்துவ நீட்சிங்கறீங்களா?”
“ஆமா. ஹ்ரண்ய கர்பம் எப்ப உடையும்? அனைத்தும் அழியும் ஒரு காலம் உண்டு. அப்பதான் இது நடக்க சாத்தியம். இது ஏதோ வேதத்துல மட்டும் சொல்லியிருக்குன்னு நினைக்காதே. ஹாங்காங் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி பார்க்ல – ஒரு பெரிய பொன்முட்டை வடிவத்துல கருத்தரங்கு கட்டியிருக்கான். அதுக்காக சீனாக்காரன் வேதத்துல பஞ்சாதி படிச்சான்னு சொல்லவா முடியும்?”
அதிசயித்துப்போனேன் “ எப்படி சார் உங்களுக்குத் தெரியும்?”
“போயிருக்கேன். 2010ல ஒரு ஸ்பீச் கொடுத்தேன். அத விடு. ககன முட்டை அது கிழிஞ்சதுங்கறது ஒரு நீட்சிதான்.  பொன்முட்டை உடைஞ்சு போச்சுன்னு சொன்னா ப்ராக்ருத ப்ரளயம் வந்திருக்கணும். எல்லாம் அழிஞ்சு போகும். ககன முட்டை கிழிஞ்சதுக்கு அப்புறம்தான் நரசிம்மன் ,இரணியனனைக் கொல்றான். ப்ராக்ருத ப்ரளயம் வந்தா இதுக்கு அவசியமே இருக்காது. நீ சும்மா எதையாவது முடிச்சுப்போடாதே”
”வேற உதாரணம் இருக்கா சார்? மஹாபாரத்த்துல விஸ்வரூபம் எடுக்கற ஸீன் எல்லாம்வருதே?” நான் விடவில்லை. எங்கயாவது முட்டைகிழிஞ்சதுங்கறதை ப்ரபஞ்ச அழிவோ, விஸ்வரூபத்தோடோ பொருத்தவேண்டிய ஒரு ஈகோ.
அவர் சிரித்தார் “ஒரு முடிவு எடுத்துகிட்டு அதுக்கு உதாரணம் தேடறே. இதுதான் பல ஆராய்ச்சியாளர்கள் செய்யறது. சப்பைக்கட்டு கட்டறாங்க. இதுக்காகவே ரெண்டு தீஸிஸ்-ஐ சரியில்லைன்னு தள்ளிவிட்டுட்டேன்.”
“வில்லிபாரதத்துல துரியோதனன்கிட்ட கண்ணன் தூது போற சருக்கம். துரியோதன் ஒரு நிலவறைக்கு மேலே, மெல்லியதாக மரக்கட்டைகள்,மூங்கில் போட்டு அதுக்கு மேலே ஒரு அரியாசனம் போட்டு வைக்கிறான். தூதுக்கு கண்ணன் வந்தா, அதுல அவனை உக்கார வைச்சு, கீழே நிலவறையில விழும்போது மல்லர்களை வைத்து அவனைப்பிடித்துக் கட்டணும்னு ஒரு திட்டம். கண்ணன் அதுல உக்கார்ந்து , கீழே விழறான். விழற வேகத்துல, கோபத்தோட விஸ்வரூபமாக எடுக்கறான். வில்லிபுத்தூரார் சொல்றார்.

இறைவ-னெழிற்கதிர்-மணிகள-ழுத்திய-தவிசினி-ருத்தலுமே
நெறுநெறெ-னக்கொடுநிலவறை-யிற்புகநெடியவ-னப்பொழுதே
மறலி-யெனத்தகுநிருப-னியற்றியவிரகை-மனத்துணரா
முறுகு-சினத்துட-னடியதலத்துற-முடிகக-னத்துறவே

அடுத்த பாட்டுலதான் அவன் நிமிர்ந்தான்னு வருது. அது வரை இந்த பாட்டு முழுசும் வளர்ந்துகிட்டேதான் இருக்கான் கண்ணன்.
இதை விஸ்வரூபம்னு சொல்றோம். ஆனா, வில்லிபுத்தூரார் அடி அதலத்துலதான் இருக்குங்கறார். அதலத்துக்கு அப்புறம் ஆறு கீழுலகங்கள் இருக்கு. அதையும் தாண்டி விஸ்வரூபம் போயிருக்கணும். முடி? அது விண்ணில இருக்கு. அதைத் தாண்டியிருக்கணுமே? தாண்டலை. இதை விஸ்வரூபம்னு சொல்லலாமா?”
வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.
“விஸ்வரூபம்ங்கறது காலத்துலேயோ, இடத்துலேயோ அடைபடும் சமாச்சாரமில்லை. ஆனா, வில்லிபுத்தூரார் அதை அதலத்துலயும், ககனத்துலயும் அடைக்கிறார். கம்பன், நரசிம்மன் வளர்ந்ததை , ககனம் கிழிஞ்சதுன்னு நீட்டுகிறான். இரண்டும் வளர்வதையும், வியாபிப்பதையும் காட்ட வந்ததனவேயன்றி, ஒன்னோட பிஸிக்க்ஸை நிலைநிறுத்த வந்ததில்லை. மரபு இதற்கெல்லாம் தாண்டிய ஒன்று.“
அப்ப நாராயணன் சொன்னது? நான் கேட்கவில்லை. வீணையின் நரம்பதிர்வில் ஒரு சுத்தமான ராகம் கேட்கும்வேளையில் , எவரும் ஒரேயொரு அதிர்வை அதிசயிப்பதில்லை.
வாசல்வரை சென்றிருந்த சிவசக்தி, பேச்சுக்கேட்டு திரும்பி வந்திருந்தார். “சார் , அப்ப நம்ம மரபுவழி பாசுரங்களிலோ, பாடல்களிலோ அறிவியலை முன்னோர்கள் பாடியிருக்க முடியாதா ? ”
கோபாலன், இரு கைகளையும் மார்பின் குறுக்கே மடக்கி மறுதோள்களைத் தொட்டார்.
”அவங்க பாடினது , உணர்வுக்கு மட்டும் புலன்படும் அறிவியல்னு நினைக்காதேங்கறேன். அதையும் தாண்டி சிலவேளையில், தத்துவார்த்த குவியத்தில்  கவிதையோடு தேய்த்துக் கொடுத்த இடமெல்லாம் இருக்கு. திருவாய்மொழி படிச்சுப் பாரு” நாங்கள் பேசுமுன் திரும்பி உள்ளே போய்விட்டார்.
“உங்களுக்குத் தெரியுமா சார்?” என்றார் சிவசக்தி
“விரியும் ப்ரபஞ்சம்னா என்னன்னு பக்கம் பக்கமா எழுதித் தள்ளியிருக்கும் தீஸிஸ்களின் நடுவே ஒரு குறுஞ்செய்தி வடிவத்தில் இரண்டே வரியில் சொன்ன இடம் ஒண்ணு  இருக்கு, திருவாய்மொழியின் கடைசி 10 பாசுரங்களிலே
“சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த , முடிவில் பெரும் பாழேயோ?”
பாழ் என்பது முடிவிலாத, அறியமாட்டாத ஒன்று. இவ்வளவு அழகாக ப்ரபஞ்சத்தை ஒருவரியில் சொன்னதாக நான் படித்ததில்லை” என்றேன்.
”அப்ப, இது மரபில் அறிவியல்னு எடுத்துக்கலாமா?” என்றார் அசோக். வெளிர் மஞ்சள், பச்சை இல்லை என்பது இன்னும் பலருக்கு நெருடவில்லை.
“ரெண்டையும், இரு இழைகளாக வைச்சு பாருங்க. அது அழகு” என்றேன். அவருக்கு அதில் இசைவு இருந்ததாகத் தெரியவில்லை.
பைக்கில் ஏறிக்கொண்டேன். அடுத்த வீட்டில் ஒரு பெண் வாசல் தெளித்து நெளிக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். இரு இழைகள். அருகருகே. சில இடங்களில் தம்மில் சந்தித்தபடி, ஆனால் சேர்ந்துவிடாதபடி.
 

(பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் இரணியன் வதம்- கம்ப ராமாயணம் பற்றிய கட்டுரை தந்த நினைவினைக் கொண்டு எழுதியது.)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.