kamagra paypal


முகப்பு » அனுபவம், சமூகம்

நம் நலன்…..நம்மைச் சேர்ந்தவர் நலன்…..சமூக நலன்….

90 வயதான ஒருவர் சாலையில் நடந்து செல்லும்போது, தன் “ஷு” லேஸ் அவிழ்ந்துவிட்டதைக் கவனித்தார். ஆனால் நடுங்கும் குளிருக்காக கனமான அங்கி அணிந்திருந்ததாலும் கையில் நிறைய பணம் வைத்திருந்ததாலும் குனிந்து லேஸை சரி செய்ய பயந்து மேலே நடந்தவாறே இருந்தார். குனியும்போது பணப்பைக் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது?
 
அப்போது அந்த வழியே வந்த ஒரு டாக்ஸி’ ஓட்டுனர் வண்டியை நிறுத்தி ” உங்கள் லேஸ் அவிழ்ந்து விட்டது..” என்று கூறினார். இவர் அதற்கு ” தெரியும். ஆனால் உட்கார்ந்து சரி செய்யதான் இடம் தேடுகிறேன்….” என்றார்.
 
உடனேயே அந்த டாக்ஸி ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு, விட்டு இறங்கி மறு வார்த்தைப் பேசாமல் பெரியவரின் ஷு” லேஸை சரி செய்ய ஆரம்பித்து விட்டார்!

சின்ன செயல்தான்…. ஆனால், உதவ வேண்டும் என்ற எண்ணம் அப்படி தன்னிச்சையாக, இயல்பாக வரும்போது அதில் நம்மையறியாமலேயே ஒரு நிறைவு வந்து உட்கார்ந்துகொள்ளுமே…..அதற்கு ஈடு இணையே இல்லை. சமீபத்திய சென்னையின் மழை வெள்ளத்தில், இருக்க இடமில்லாமல் தவித்த பலருக்கு தங்கள் வீடுகளில் இடம் இருப்பவர்கள் முன்பின் தெரியாதவர்களுக்கும் இடமளித்தார்கள்.

பேரிடர் என்பது சொல்லி வைத்து வருவதில்லை. இயற்கையோ அல்லது மனித வெறுப்பில் உருவான தீவிரவாதத் தாக்குதலோ, எதிர்பாராமல்தான் நம்மைத் தாக்குகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். நமக்கு ஐந்து நிமிடம் தரப்படுகிறது. அதற்குள் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளி வர வேண்டும். அதன் பின்னர் உங்கள் வீடு உங்கள் எதிரேயே தரைமட்டமாக்கப்படும். இது வேண்டும் அது வேண்டும் என்று வீடு நிறைய காலங்காலமாக சேர்த்துவைத்துள்ளவற்றில் எதை விடுவது? எதை எடுத்துக்கொள்வது? அதுவும் ஐந்து நிமிடங்களில்? உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடத்தான் தோன்றும்.

gujarat_earthஇப்படி எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நிலையில் நம் முன்னே வரும் ஒவ்வொரு உதவிக் கரமும் மகத்தானது.

2002ம் வருடம், குஜராத்தில் பூகம்பம் சமயம் இதுபோல் மனிதாபிமானத்துடன் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உதவிகள் நிறைய வெளி வந்தன. ஒருவர் தன் குடும்பத்தில் அனைவரையும் இழந்துவிட்டார். இருந்தாலும் தன் சோகத்தை ஒருபக்கம் தள்ளிவிட்டு பிறருக்கு உதவி செய்ய முற்படுகிறார். பலருக்கு உடுத்தியிருக்கும் உடை மட்டுமே மிச்சம். வேறு ஒரு இடத்தில் ஒரு பெண்ணுக்கு அதுவும் இரவல். ” என் குடும்பம் என் வீடு எல்லாவற்றையும்
இழந்துவிட்டேன்…. நான் இப்போது உடுத்தியிருக்கும் உடை கூட யாரோ கொடுத்தது……” என்கிறாள் அந்தப்பெண்.
ஒரு 9 வயது சிறுபெண் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த சமயத்தில் சுவற்றின் அந்தப்புறம் இருந்த தன் தந்தையுடன் பேசிக்கொண்டு உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு சமாளித்திருக்கிறாள். அதோடில்லை…தன் அருகில் பக்கத்துவீட்டுக்காரர்கள் இருவர் இறந்து அவர்களின் சில மாதமே ஆன குழந்தை மட்டும் உயிர் பிழைத்திருந்திருக்கிறது. அந்தக் குழந்தையின் கைகளைப் பிடித்து கொண்டு இந்த சிறு பெண் அந்தக் குழந்தைக்கு
ஆறுதலாக இருந்திருக்கிறாள்!!!!! – அத்தனை இடிபாடுகளுக்கிடையே கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு அசாத்திய மன தைரியத்துடன் இருந்து பிழைத்து வந்திருக்கிறாள்….

2002 ல் குஜாரத்தைத் தாக்கிய பூகம்பம், தலைமுறைகளுக்கும் நினைவு இருக்குமளவு காயம் ஏற்படுத்தியது போல், 2004ல் தமிழகத்தை புரட்டி போட்ட சுனாமி, மனிதாபிமானத்தின் உச்சக்கட்டத்தை எடுத்துக்காட்டியது. நிகழ்வு, பேரிடரோ, தினசரி சிறு சந்தர்ப்பங்களோ, தக்க சமயத்தில் செய்யும் உதவி மகத்தானது. இந்த சமயங்களில் ஆறுதலளிக்கும் விஷயம், வெள்ளம் போல் பொங்கிவரும் மனிதாபமானம். ஈரக்கசிவும், தங்கள் சிரமத்தைப் பொருட்படுத்தாது பிறருக்கு உதவும் மனமும் இன்னும் நிறையவே நம்மிடம் இருக்கிறது என்பதை இப்படிப்பட்ட சமயங்கள் வெளிச்சம்போட்டுக் காண்பிக்கின்றன.
 
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு சமூகத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு மனதுடன் ஈடுபடும்போது அங்கே தீர்வுகள் நிச்சயம் கைகூடுகின்றன. இப்படி இடர்காலங்களில் அமைக்கப்படும் உதவிச் சங்கிலிகள் சமூகப் பிணைப்புக்கு பெருமளவில் வழி வகுக்கின்றன . சமூக இணைப்பினால் உதவும் மனங்கள் அதிகமாகின்றனவா அல்லது உதவும் மனங்கள் அதிகமாகி, அதனால் சமூக இணைப்பு வளருகிறதா என்று புரியாமல் இருக்கலாம். ஆனால் உதவும் மனங்கள் அதிகமாகும்போது அங்கே எந்தவித பேதமுமில்லாமல் சுமூகமான, இணக்கமான சமுதாயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆளுக்கொரு “இயந்திரத்தை” கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு “தீவாக” இருக்கும் காலம் இது. முன்பெல்லாம் ரயில் போன்ற பொது போக்குரத்து வாகனங்களில் பயணம் செய்யும்போது கலகலவென்று அனைவரும் ஏதோ பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அவரவர் தங்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் முதலில் தங்கள் செல்போனை எடுத்து தடவ ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லது சிலர் தனக்குத் தானே பேசிக்கொள்கிறார்கள் – காதில் இருக்கும் கருவியைப் பார்த்தப் பிறகுதான் எங்கோ தொலைவில் இருப்பவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நமக்குப்புரிகிறது. தன் அருகில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி அவர் கவனித்தாரா என்பது சந்தேகம்.

முன்பின் தெரியாதவருக்கு உதவுவது ஒரு பக்கம் இருக்கட்டும். சில வருடங்கள் முன்பு செய்யப்பட்ட ஒரு ஆய்வில்,  நட்பு என்றால் பலருக்கு ஒரு அவசியமான சமூக அல்லது வியாபார ரீதியிலான ஒரு பிணைப்பு, மற்றும் கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் தன் தேவை பூர்த்தி செய்யப்படுகிறதா என்ற ஒரு நோக்கு, இவைதான் இழையோடுவதாக குறிப்பிடப்பட்டது. இன்னொரு ஆய்வின்படி, இன்று பொதுவாக மக்கள் நல்ல வசதியுள்ளவர்களாகவும் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், நட்பு அல்லது ஒரு ஆத்மார்த்தமான உறவு என்கிற ரீதியில் மிகவும் ஏழைகளாக இருக்கிறார்கள். பலருக்கு ஆத்மார்த்தமான நண்பர்களே கிடையாது. இன்னும் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மூன்று நண்பர்கள் இருந்தால் அதிகம்…என்ற ரீதியில் போய்கிறது இந்த ஆய்வு.
 
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆய்வுகளின்படி, இன்றைய மனிதன் நண்பர்களை உதறி விடுவதில் மன்னனாம்! தன் வாழ்க்கையில் ஒரு “நண்பரது” பணி ஆகிவிட்டது என்றால் அவரைக் கழட்டி விடத் தயங்குவது இல்லையாம். இப்படி சமூகத்தில் நட்பு உணர்வு குறைவதற்கு காரணம் உலகபோர்களுக்கு பின்னர் அதிகரிக்க ஆரம்பித்த பொருளாதார முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட ஒரு வாழ்க்கை முறையும், வாழ்க்கை நெறிகளும்தான் என்று சுட்டி காட்டுகிறது இந்த ஆய்வு. மன அழுத்தம் போன்ற பலவித மன நோய்களுக்கும் இந்த நட்பில்லா
வாழ்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உண்மை இருக்கலாம். கொஞ்சம் அசந்தாலும் போட்டியாளர்களால் எங்கே நாம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற நிலையில் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளும் நட்பிற்கு இடம் இல்லையோ என்ற கவலை வருகிறது. இந்த புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது காடுகளில் எப்போதும் ஒரு ஜாக்கிரதை உணர்வுடன் சுற்றும் விலங்குகள் நினைவுக்கு வந்தால் அது நம் தவறில்லை!
 
ஆனால், அப்படி ஒன்றும் இரக்கமோ நட்புணர்வோ இல்லாமல் உலகம் மாறிவிடவில்லை; மனிதாபிமானமும் நட்புணர்வும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்று மேலேக் குறிப்பிட்டது போன்ற நிகழ்வுகள் நம்பிக்கையளிக்கின்றன. சில வருடங்கள் முன்பு டில்லியில் ஒரு சமூக நிகழ்வில் ஒரு அமெரிக்க தூதரின் மனைவி சினேகிதம் செய்யும் வரைமுறைகளைப் பற்றி குறிப்பிட்டது நினைவுக்குவருகிறது. நட்பு பற்றி அவர் இப்படி விவரித்தார்:
 
” உங்கள் எண்ண அலைகளுக்கு ஏற்ற சினேகிதம் கிடைப்பது முதல் படி. பின்னர், இருவரும் ஒருவருக்கொருவர் எப்படி உதவியாக இருப்பீர்கள் என்று தீர்மானிக்கபடுகிறது. அடுத்தது அவரவர் எண்ணங்களை மற்றும் பலவித அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல். உங்களை ஒருவரிடம் வெளிப்படுத்திக்கொள்வதன் மூலம் ஒருவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுமதிக்கிறீர்கள். முடிந்தவரை இருவரும் சேர்ந்து பல வேலைகளில் அல்லது பிரயாணங்களில் ஈடுபடுவது உங்கள் உறவை பலப்படுத்தும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பிணைப்பை ஸ்திரப்படுத்தும் வகையில் தொடர்பு விட்டு போகாமல் இருப்பது – ஈ மெயில், போன், முடிந்தால் ஒரு நேர்முக சந்திப்பு…. இப்படி எத்தனையோ வழி இருக்கிறதே…..” என்று இவர் விவரித்தார்.
 
நல்ல நட்பின் இலக்கணம் அடிப்படையாக ஒரு புரிந்துணர்வு. சேர்ந்தே இருக்க
வேண்டும் என்பதோ அல்லது எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. நல்ல நட்பில் போட்டியுணர்வு இருக்காது. “தான்” அல்லது “தான் உயர்வு” என்ற உணர்வு மேலோங்கி நிற்காது. மற்றவருக்கு என்ன வேண்டும் அல்லது விருப்பம் என்பதை மனதால் உணர்ந்து அதன்படி நடக்கதான் தோன்றும். மற்றவர் மனம் காயப்படும்படி நடந்து கொள்ள தோன்றாது.

சில நாட்கள் முன்பு எனக்கு ஒரு புதையல் கிடைத்தது. பல லட்சம் பணமல்ல….. அதைவிட அரிதானது. எனக்கு நண்பர்களும் உறவினர்களும் பலவருடங்கள் முன்பு எழுதியக் கடிதங்கள்! ஒரு காலத்தில் அப்படித்தான் தொடர்புகொண்டோம். நீல வண்ணத்தில் இருந்த இன்லேண்ட் கவர்கள் மற்றும் 6 அங்குலஅளவில் போஸ்ட்கார்டுகள். ஒவ்வொரு முறை வீடு அல்லது ஊர் மாற்றலின் போதும் இவற்றை தூக்கி எறிந்துவிடலாம் என்று நினைப்பேன்; ஆனால் செயலாக்க முடிந்ததேயில்லை. தூக்கிப் போடும் முன்பு ஒரு முறை படிக்கலாமே என்று ஆரம்பிப்பேன். ஒவ்வொரு கடிதத்திலும் எனக்கு மறந்து போன குடும்ப நிகழ்வு அல்லது நண்பர்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் என்று ஏதாவது இருக்கும். ‘வேண்டாம்….இன்னும் கொஞ்சநாள் இது இருக்கட்டும் என்று ஒவ்வொரு கடிதமாக மீண்டும் பத்திரப்படுத்தப்படும்! பெரும் தலைவர்கள் மற்றும் இலக்கியவாதிகள், இவர்களின்கடிதங்களில் ஒரு நாட்டின் சரித்திரம் அறியப்படும் என்பதுபோல, நம்மைப் போன்ற சாதாரணமானவர்களின் குடும்பச் சரித்திரம் இது போன்ற கடிதங்களுக்கிடையே பொதிந்துள்ளது.

பலவித தொடர்பு சாதனங்களால் இன்று சமூகத்தொடர்பு மிக எளிதாக ஆகிவிட்டது. ஏதேனும் ஒரு வகையில் நாம் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கமுடியும். ஆனால் ஒரு காலத்தில் பேனாவில் குறுக்கிக் குறுக்கி – பக்கவாட்டில், குறுக்கில் என்று ஒரு ‘இன்லேண்ட் “ கடித அளவு போதாமல் எழுதப்பட்ட கடிதங்கள் இன்று கிடைக்காத பொக்கிஷங்கள்.

கையால் எழுதியக் கடிதங்களோ அல்லது மின்னஞ்சல்களோ, நாம் ஒத்த எண்ண அலைகள் உள்ளவர்களுடன் பலவிதமாக பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், எத்தனை விதங்களில் நாம் தொடர்புகளுடன் இருந்தாலும், சமூக வேறுபாடுகளினால் ஒரு சமுதாய இடைவெளியும் இருக்கதான் செய்கிறது.

இந்த சமூக இடைவெளியை நட்புணர்வும், உதவும் மனப்பான்மையும் குறைக்கும் என்று நேட் ஹீஸ்லி (Nate Heasley) என்கிற சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகிறார். “Goodnikels” என்கிற அமைப்பின் மூலம் தன்னார்வ – சமூக மேம்பாட்டு அமைப்புகள் நிறுவ இவர் உதவுகிறார். “உதவி என்று வரும்போது, நாம் நமக்கு பூளோக ரீதியாகவோ, உறவுகள் மூலமாகவோ, அல்லது நமது மனதளவிலோ நமக்கு அருகில் இருப்பவர்களுக்குதான் முதலில் உதவ அல்லது நம்மிடம் இருப்பதை பகிர்ந்துகொள்ள நினைப்போம். இது குறுகிய வட்டம். இதைத்தாண்டி ஒத்த எண்ணம் உடையவர்கள் அல்லது நாம் மதிக்கும் அற நெறிகளை நம்மைப்போலவே மதிப்பவர்கள் இவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத்தேடி நம்மிடம் இருக்கும் வளங்களை – resources – ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும்போது, அது ஒரு சங்கிலித் தொடராக மாறி, படிப்படியாக சமூக இடைவெளிகள் குறையும் என்பது இவரது கருத்து.

நாம், நம் நலன், மற்றும் நம்மைச் சேர்ந்தவர் நலன் என்று இருப்பது மனிதஇயல்புதான். ஆனால், நம்மைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையை ஒரு சினேக பாவத்துடன் இன்னும் அதிகரித்துக்கொண்டு ஒரு சமூக அக்கறையும் மேலோங்குமானால் அங்கே ஒரு நல்லிணக்கமான சமூகம் உருவாகும்.

____________________

Series Navigationகொடுக்கும் கலைமனம் ஒரு குரங்கல்ல…

One Comment »

 • gowrikanthan said:

  மிக அருமையான கட்டுரை. விவாதிக்க நிறையவே உள்ளன.
  முதலாவது:-மனிதர்கள் உடனடி இக்கட்டுக்கள் வரும்போது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது மனித இயல்புதான். இவ்விதப் போக்கைத்தான பொதுவாக மனிதநேயம் என அடையாளப் படுத்தப்படுகிறது. ஆனால் இக்கட்டுகள் வரும்போது இக்கட்டுகளுக்கு உள்ளானவனிடம் இருந்து முடிந்தளவு பிடிங்கிக் கொள்ளும் நிகழ்வுகளும் நடைமுறையில் உண்டு. “எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்” எனபது இதுதான். இவ்விதமான இயல்புகளைக் கொண்டவர்களும் ஏராளம் உள்ளனர்? இதை எவ்விதம் அடையாளப்படுத்துவது? இதற்கான காரணத்தை எவ்விதம் புரிந்து கொள்வது.
  இரண்டாவது:- இந்த “மனிதநேயம்” என்பதுவும், படிபடியாகச் சமூக இடைவெளிகளை குறைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுண்டுவளர்ந்துவரும் நட்புக்குளுக்களும் ஒன்றா? இல்லை. முன்னையது தனிநபர் மனச் சாந்தி என்ற குறிக்கோளை மட்டும் எல்லையாகக் கொண்டது. பின்னையதோ சமூகத்தின் நலன் என்ன என்பதைக் குறிக்கோளாகக் கொண்டது.
  மூன்றாவது:- காட்டுக்கும் மரங்களுக்கும் இடையேயான தொடர்புகள் பற்றியது. காட்டைவைத்துக் கொண்டு மரங்களைப் பற்றி முடிவை எடுப்பதா அல்லது மரங்களை வைத்துகொண்டு காட்டைபற்றிய முடிவு எடுப்பதா? அதாவது காடா? மரங்களா முதன்மையானது? காடு என்பது சமூகம், மரங்கள் என்பது தனிநபர்கள். சமூக நலனே முதன்மையானது. சமூகத்தை நேசிக்கவும், சமூகத்துடன் நட்புக்கொள்ளவும் பழகிக் கொள்வோமானால், தன் வாழ்க்கையில் ஒரு “நண்பரது” பணி ஆகிவிட்டது என்றால் அவரைக் கழட்டி விடத் தயங்காத மனிதர்கள் வாழும் உலகில் அந்நியமாகாது நின்று பிடிக்க முடியும். எவ்வளவு தனிமைப்பட்டாலும் அந்நியமாகாத ஒரு வாழ்வை வாழமுடியும்.

  # 13 December 2015 at 5:47 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.