உறுதிப்படுத்தல்: ஐசாயா பெர்லினின் பிற்காலக் கடிதங்கள் -1975-1997

முன்குறிப்பு

ibcollage
புத்தக மதிப்புரைகளின் மீது பொதுஜன வாசகர்களுக்கு என்ன அபிப்பிராயம் இருக்கிறது? எத்தனை பேர் அதையெல்லாம் படிக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள்? (வலைத்தளங்களில் எத்தனை பேர் பக்கத்தைப் பார்த்தார்கள் என்று வேண்டுமானால் கணக்கு இருக்கலாம். படித்தது பற்றி அது ஏதும் சொல்லாது.) அதற்கு என்ன தாக்கம் இருக்கிறது என்பதைத்தான் எப்படி அறிவது?
புத்தகம் நிறைய விற்றால் மதிப்புரை ஒன்றாலோ, அல்லது பலவற்றாலோ அது விற்றது என்று நாம் கருத முடியுமா? இல்லை, புத்தக மதிப்புரை எதிரானதாக இருந்ததால் புத்தகம் விற்பது குறைந்தது என்று சொல்ல முடியுமா?
எதைச் சொன்னாலும் அதில் ஊகம்தான் அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது. தவிர, இந்தியப் புத்தகச் சந்தை அப்படி ஒன்றும் மதிப்புரைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.
புத்தக விமர்சகர்கள் என்றில்லை, திரைப்பட விமர்சகர்கள், இசை விமர்சகர்கள், நாட்டிய/ நாடக விமர்சகர்கள் போன்ற எந்த விமர்சகர்களுக்கும் இந்தியாவில் அப்படி ஒரு ஸ்தானம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இங்கு பொது ஜனங்களைப் பொறுத்துத்தான் சொல்கிறேன்.
எந்த சினிமா விமர்சகர் அல்லது இலக்கிய விமர்சகர் பெயரையாவது ஒரு சாதாரண மனிதரால் சொல்ல முடியுமா என்று சோதித்தால் உண்மை தெரியலாம். என் கணிப்பில் அது அனேகமாக ஏமாற்றத்தைத்தான் தரும், யார் பெயரும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலைதான் பெரும்பாலும் தெரிய வரும். உரையாடல்களில் எவரும் புத்தக விமர்சகர்கள்/ சினிமா/கலை விமர்சகர்கள் பெயர்களைப் பேசுவதில்லை. சில தீவிர ரசிகர்களிடையே ஒரு சில விமர்சகர்கள் பெயர் புழங்கும். அதல்ல இங்கு கருதப்படுவது. இங்கு எழுத்து மூலம் தெரிய வரும் விமர்சகர்களைச் சொல்கிறேன். தொலைக்காட்சியில் கிட்டும் சில விமர்சகர்களின் பெயர்கள் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களின் விமர்சனங்களுக்கும் என்ன தாக்கம் இருக்கிறது என்பது சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்பவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம். ஆனால் தொலைக்காட்சி விமர்சகர்கள் அனேகமாக விவரமாகவோ, ஆழமாகவோ எதையும் விமர்சித்து நான் பார்த்ததில்லை. இது பன்னாடுகளிலும் காணும் ஒரு நிலைதான்.
எழுத்துலகைப் பொறுத்து, சில இந்திய மொழிக் குழுக்களிடையே சற்று மேலான நிலை இருக்கலாம். படிப்புப் பழக்கம் நிறையவும், அறிவாளர்களுக்கு சமூகத்தில் கொடுக்கப்படும் அந்தஸ்து அதிகமாகவும் இருக்கும் சில மொழிக் குழுக்களில் ஓரளவு இலக்கிய/ கலை விமர்சகர்கள் பெயர்ப் புழக்கம் இருக்கலாம். ஆனால் அங்கும் இந்திய விமர்சகர்கள் என்று தெரிய வருபவர்களின் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று ஊகிக்கிறேன்.
‘இந்திய’ என்ற சொல், அனேகமாக இங்கிலிஷில் பிரசுரமாகிப் படிக்கப்படும் இலக்கியத்தைச் சுட்டும் என்று சொல்லலாம். ஒரு மாற்று, இந்திய மொழிகளிடையே நடக்கும் மொழி பெயர்ப்பு வழியான பண்பாட்டுப் பரிமாற்றம். இது எண்ணிக்கையில் குறைவான பிரசுரங்கள், எழுத்தாளர்கள், வாசகர்களிடையே நடப்பது என்பது இலக்கியத்தில். ஆனால் காட்சி ஊடகங்களில் பன்மொழி ஊடான பரிமாற்றம் சற்றாவது சுலபமாகவும், கூடுதலான எண்ணிக்கையுள்ளவரிடையேயும் நடக்கிறது. இவை கூட விமர்சகர்களால் பாதிக்கப்படுவதாகச் சொல்ல முடியுமா என்றால் அது ஐயமான விஷயமே.
ஆனால், அந்தந்தத் துறையில் தீவிர ஈடுபாடுள்ளவர்கள் கொண்ட சிறு குழுக்கள் இடையே இப்படி ஒரு தாக்கம் இருக்கலாம், அதுவும் சில விமர்சகர்களுக்கு, சில பத்தியாளர்களுக்கு, சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு ஓரளவு பாதிப்பு இருக்கலாம். இவை எத்தனை தூரம் விற்பனையைப் பாதிக்கும்? சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்பவர்களுக்கே கூட இது தெரியுமா?
வாசகரின் தீவிர இலக்கிய ஈடுபாடு என்பது புத்தக விற்பனையில் பிரதிபலிப்பதில்லை என்று சில எழுத்தாளர்கள் குறை சொல்லி நான் கேட்டிருக்கிறேன். பிரசுரகர்களும், விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களும் இதையே சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
இந்தியச் சந்தையே இப்படி என்றால், தமிழ்ச் சந்தையைப் பொறுத்து நாம் எதையும் சொல்லக் கூடத் தேவை இல்லை என்று தோன்றுகிறது. வேறு தளங்களில் ஒரு எழுத்தாளருக்கு இருக்கும் அந்தஸ்துதான் தமிழில் புத்தக விற்பனையிலும் பிரதிபலிக்கிறது என்று குத்து மதிப்பாகச் சொல்லி விடலாம். மிகச் சிலரின் புத்தகங்களே அவர்களது எழுத்துத் திறனுக்காக விற்கின்றன. ஆக, தமிழில் புத்தக விமர்சனங்களுக்குச் சந்தைப் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று சொல்ல முடியாது என்பது என் ஊகம்.
பழகிய, தெரிந்த எழுத்தாளர்களையே தொடர்ந்து வாசிப்பது தமிழ் வாசகப் பழக்கம். எனவே இங்கு ஒரு எழுத்தாளருக்கு காலக்கிரமத்தில்தான் சமூக மதிப்பு சுமாராகவாவது எழுகிறது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் சில நூறு வாசகர்கள் கிட்டி, அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தால் அபிமானத்துக்கு ஒரு தளம் எழுந்து, கணிசமான எண்ணிக்கையாக அவர்கள் சேர்ந்தபின்,சமூக வெளியில் அவர்களின் கருத்து வெளிப்படுவதன் தாக்கத்தால் அந்த எண்ணிக்கை சற்று வேகமாக இரட்டிப்பாகலாம். இப்படிச் சேரும் வாசகர்களின் எண்ணிக்கை ஒரு சில ஆயிரம் அல்லது பத்தாயிரம் பேர்களாக ஆனபிறகும், அவர்களிலும் வாங்குபவர்களின் எண்ணிக்கை சிறு பகுதியாகவே நிற்கும். பல வருட உழைப்புக்குப் பின், தொடர்ந்த படைப்புகளால் தன்னை ஒரு எழுத்தாளர் ஓரளவு நிறுவிக் கொண்ட பின்னும், புத்தக விற்பனை என்பது சில ஆயிரமாக, அதுவும் நம்பக்கூடிய வகையில் தொடர்ந்த விற்பனையாக ஆவது கடினமாகவே இருக்கிறது.
அதுவரையில் புத்தக மதிப்புரைகள் என்பன சில நூறு இலக்கிய வாசகர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தைச் சற்று ஆழமாகவும், பன்முகத் தன்மை கொண்டதாகவும் நடத்த வழி செய்பவை என்ற அளவில் நம்மால் வரவேற்கப்படக் கூடியவையாக இருக்கலாம். கருத்துகளை உயர்நிலைக்குக் கொணரும் எதையும் நாம் வரவேற்கலாம், மதிப்புடன் கவனிக்கலாம் என்பது இருக்கிறது.
இந்த வகை நோக்கங்களால்தான் சொல்வனத்தில் அவ்வப்போது புத்தக மதிப்புரைகளைப் பிரசுரித்த வண்ணம் இருக்கிறோம்.

oOo

சரி, வாழ்ந்து மறைந்த இங்கிலிஷ் எழுத்தாளரின் புத்தகத்தின் மீதான மதிப்புரையைக் கொணர்வதில் என்ன பயன்? அது அந்த எழுத்தாளரின் நெடுங்காலத் தாக்கம் சார்ந்தது என்பது ஒரு பதில். இங்கு கொணரப்படும் மதிப்புரை அப்படி ஒரு சிந்தனையாளரின் சமீபத்திய புத்தகத்தைப் பற்றியது.
இவருடைய பல புத்தகங்கள் பல வருடங்களாக இந்தியாவில் கிடைக்கின்றன-கிடைத்திருந்த போது நானும் வாசித்திருக்கிறேன்- என்பதுடன் இந்த எழுத்தாளரைப் பற்றிப் பொருட்படுத்தக் கூடிய எண்ணிக்கையுள்ள இந்தியர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதும் ஒரு காரணம்.
தவிர தமிழகத்தில் இன்னமுமே கணிசமான ‘அறிவு ஜீவிகள்’ மார்க்சிய மாயையில் மூழ்கியவர்கள் என்பதால் இந்த எழுத்தாளரின் கருத்துகளைப் பற்றிய ஒரு கட்டுரை ஒரு சிறு அளவு மயக்கத் தெளிவிப்பு முயற்சியாக இருக்கட்டுமே என்றுதான் இதைக் கொணர்கிறேன். மாறாக, மனநல மருத்துவ சிகிச்சையை அளித்தாலாவது ஏதாவது பயன் இருக்கும் என்று சிலர் சொல்லக் கூடும்.
இப்படி நகைச்சுவையைக் கருதிச் சொன்னாலும், இன்றைய மனநல மருத்துவமுமே அப்படி ஒன்றும் பயனுள்ள சிகிச்சை முறை என்று தோன்றவில்லை என்றும் சுட்டுகிறேன்.
வேப்பிலை அடித்து மஞ்சள் நீராட்டிப் பேயோட்டியவர்கள் காலம் போய், அடுத்த கட்டத்தில் மார்க்ஸ்/லெனின்/ மாஒ மந்திர உச்சாடனத்தில் (நீட்ஷா சொன்னதைப் போல) தாமே பேயானவர்கள் காலடித்தடங்கள் தேய்ந்து போய், ஃப்ராய்டிய ஜெபம் செய்து தம் மன அரிப்பைப் போக்க உலகில் எல்லாரையும் பித்தர்களாக ஆக்கி மகிழ்ந்தவர்கள் பித்தலாட்டக்காரர் என்று உறுதியான பின்னும், யாராவது தேவதூதன் மறுபடி உயிரோடு எழுந்து உலகைக் காப்பார் என்று தலைமுறை தலைமுறையாக மாயாஜால விடைகளை நம்புவோரை எந்த சிகிச்சையும் தேற்றாது. அவர்களுக்கு அனேகமாக மேற்கிலிருந்து எதையாவது இறக்குமதி செய்தால்தான் எதுவும் எடுபடும். அதனாலும் இந்தப் புத்தகத்துக்கும், மதிப்புரைக்கும் கொஞ்சம் கவனிப்பு இருக்கலாம்.
கவனித்துப் படிப்பாருக்கு தொடர்ந்த மதிமயக்கத்துக்கு எதிரான தடுப்பு ஊசி போல இக்கட்டுரைகள் பயன்படலாமோ என்னவோ.
இந்தப் புத்தகத்தின் மூலகர்த்தா, ஐசையா பெர்லின் நிறைய கடிதங்கள் எழுதிய ஒரு சிந்தனையாளர். அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகளை விடப் பன்மடங்கு கடிதங்கள் வழியேதான் தன் சிந்தனைகளை அதிகம் வெளிப்படுத்தி இருக்கிறார் எனலாம். ஹென்ரி ஹார்டி என்பார் பல்லாண்டுகளாக ஐசையா பெர்லினின் எழுத்துகளைப் புத்தகங்களாகத் தொகுத்து வெளியிடுவதில் முனைந்திருக்கிறார். இப்போது வெளியிட்டிருப்பது ஐசையா பெர்லினின் கடைசி இருபதாண்டுகளில் அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு. இவற்றுக்குத் தலைப்பாக ஹென்ரி ஹார்டியும், சக பதிப்பாசிரியர் மார்க் பாட்டிலும் தேர்ந்தெடுத்திருப்பது ‘அஃபெர்மிங்’ என்ற சொல். உறுதிப்படுத்தல், ஆமோதித்தல் என்று சில அர்த்தங்கள் இந்தச் சொல்லுக்கு உண்டு. இறுதி ஆண்டுகளில் அவர் எழுதிய கடிதங்கள் வழியே தன் வாழ்வில் தான் எடுத்த முடிவுகளின் வழியே கிட்டிய கருத்துப் பாதையைக் கை விடாமல், தொடர்ந்த பரிசீலனைகளுக்கு அப்பாலும், அந்த வழி சரியானது என்று ஐசையா பெர்லின் உறுதிப்படுத்தி இருப்பதாகப் பதிப்பாசிரியர்கள் சுட்டுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அது வெறும் அடாப்பிடிவாதத்தால் கிட்டிய உறுதிப்படுத்தல் இல்லை என்பது புத்தகத்தைப் பற்றிய மதிப்புரையின் துவக்கத்திலேயே தெரிய வருகிறது. ஏனெனில் ஐசையா பெர்லினின் ஒரு குணாம்சம், தொடர்ந்த ஐயப்பாட்டை அவர் மதித்தார் என்பது.
இந்த மதிப்புரையை எழுதியவர் ஜான் க்ரே என்ற தத்துவாளர், கட்டுரையாளர். பிரிட்டனில் குறிப்பிடத்தக்க தற்கால எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், மற்றும் தத்துவாளர்கள் நடுவே ஜான் க்ரே கவனிக்கத்தக்க ஆகிருதி உடையவர்.
துரித ஓட்டத்தை மிக மதிக்கும் இந்நாளைய கருத்து வெளியில் நிறைய உத்திகள் மனித குலத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் மருந்தாக பிரகடனத்துடன் வெளி வருகின்றன. ஜான் க்ரே, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கருக்குடன், சுருக்குடன் இத்தகைய உத்திகளால் ஓட்டப்படும் சிந்தனைகள் எத்தனை மலிவானவை, மெலிவானவை, வரலாற்று அறிவோ, ஆழ்ந்த சிந்திப்போ அற்றவை என்று நமக்கு விளக்குவதில் வல்லவர். ஒற்றை மரம் தோப்பாவதில்லை என்று அவர் விளக்குவதற்கு ஒரு காட்டாக அவர் எழுதிய ஒரு கட்டுரையைப் பார்க்கலாம். http://www.theguardian.com/books/2014/jan/17/moral-tribes-joshua-greene-review
இவர் இந்தப் புத்தகத்தை சீர்தூக்கி எழுதிய ஒரு கட்டுரையை இங்கு மொழி பெயர்த்துத் தருகிறோம். அவர் கட்டுரைக்குத் தலைப்பாகக் கொடுத்திருப்பதும் கவனிக்கத் தக்கது. சுதந்திரம் பற்றிய குறிப்புகள் என்பது அக் கட்டுரைக்குத் தலைப்பு.

மைத்ரேயன்

oOo

ஜான் க்ரே

affirming
மனித சிந்தனைக்குத் தான் அளித்திருப்பதைப் பற்றி ஐசையா பெர்லினுக்கு அப்படி ஒன்றும் உயரிய அபிப்பிராயம் இல்லை. 1978 இல் உளநிலைப் பகுப்பாளர் ஆந்தனி ஸ்டொருக்கு எழுதுகையில் அவர் ஒப்புக் கொள்கிறார், ‘நான் இதுவரை எழுதிய ஒவ்வொரு வரியும், நான் ஆற்றிய ஒவ்வொரு உரையும் சிறிதே மதிப்புள்ளனவாகவோ அல்லது ஒரு மதிப்பும் இல்லாதனவாகவோதான் எனக்குத் தெரிகின்றன.’ அதே போல தன் கருத்துகளின் பிரசுரம் பற்றியும் பெர்லின் ஏதும் பொருட்படுத்தியதில்லை. இந்த அலட்சியம் ஓரளவு அன்று பல்கலைகளில் நிலவிய பண்பாட்டைத்தான் பிரதிபலித்தது எனலாம்- ’பிரசுரி இல்லையேல் வீழ்ச்சி’ என்பதான அழுத்தம் அன்று இல்லை என்பது இன்று மங்கிய நினைவுதான். அவர் மாணவராக இருந்த ஆக்ஸ்ஃபோர்டிலும், இளம் ஆய்வாளராக இருந்த நியு காலேஜிலும், ஆல் ஸோல்ஸ் கல்லூரியிலும் ஏகமாக பிரசுரித்துக் குவிப்பது என்பது உயர் பதவியைப் பிடிக்க ஓடுவதாகவோ, அல்லது பகட்டைத் துரத்துவதாகவோ கருதப்பட்டது, பாண்டித்யமாகப் பார்க்கப்படவில்லை. இந்த மனோபாவம் 70கள் வரை கூட நீடித்தது, எண்பதுகளிலும்,தொன்னூறுகளிலும்தான் தொழில் முனைப்புள்ள உற்பத்தி நோக்கம் முழுதும் வேர் பிடித்து எழுந்தது. இன்று பல்கலைகளில் கல்வியாளர்களின் ஆய்வு ஈடுபாடும், பிரசுரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் கடும் நிலையில், பெர்லினைப் போன்ற ஒருவர் பிரிட்டனின் உயர்கல்வி நிறுவனங்களில் எங்குமே ஒரு வேலையைப் பெறுவதோ, அதைத் தக்க வைத்துக் கொள்வதோ நடக்குமா என்றால் அது ஐயத்துக்குரியதே.
ஹென்ரி ஹார்டி 1974 இல் பெர்லினின் பதிப்பாசிரியராக ஆனார். ஹார்டியின் உந்துதலும், 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சோர்விலாத உழைப்பும் இல்லாமல் போயிருந்தால், இன்று பெர்லினின் எழுத்துகளாகக் கிட்டும் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் மேலும் அச்சில் இருப்பனவும் நமக்குக் கிடைத்திருக்க மாட்டா என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது. அப்படி ஆவது மிகவும் வருந்தத் தக்க நிலையாக ஆகி இருக்கும், ஏனெனில் ஹார்டியும் அவரது சக பதிப்பாசிரியர், மார்க் பொட்டிலும் இந்த நான்காவதும், இறுதியுமான புத்தகத்திற்கு எழுதும் முன்னுரையில் சொல்வது போல, பெர்லினின் கடிதங்கள் ’அவரது மொத்தப் படைப்புகளில் பிரிக்க முடியாத வகையில் மையமானவை’ . அவரது மறைவுக்குச் சில தினங்கள் முன்பு வரை நீடித்த கடிதப் போக்குவரத்தை எல்லாம் கொணரும் இந்தத் தொகுப்பு, பெர்லின் எப்படி உலகத்தில் தொடர்ந்து நடப்பனவற்றுக்கெல்லாம் தன் மறுவினையைத் தெரிவித்தபடி இருந்தார் என்பதைச் சுட்டுகிறது: தாச்சரும், ரேகனும் உயர்ந்து எழுவது, ஐ ஆர் ஏவின் பயங்கரவியம், ஈரானில் நடக்கும் இஸ்லாமியப் புரட்சி, ஆஃப்கனிஸ்தானில் சோவியத்தின் படையெடுப்பு, ஃபாக்லாண்ட் போர், போலந்தில் ஸாலிடாரிடி அமைப்பு உருவாவது, கர்பசாஃப் (Gorbachev) முன்னுக்கு வந்தது, பெர்லின் சுவர் வீழ்ந்தது ஆகிய சில இவற்றில் அடங்கும். இறப்பதற்கு முன் எழுதிய வேறு கடிதங்களில் தனக்குத் தெரிந்த அல்லது சந்தித்திருந்த பலரைப் பற்றி, விறுவிறுப்பாகவும், சுதந்திரமாகவும் தன் கருத்துகளை அவர் எழுதுகிறார். இவர்களில் வின்ஸ்டன் சர்ச்சில், ஆந்தனி ப்ளண்ட் போன்றார் அடக்கம். டி.எஸ். எலியட், ஹான்னா ஆரெண்ட் போன்ற அவருக்கு உவப்பில்லாத சில சிந்தனையாளர்கள், மேலும் எழுத்தாளர்களைப் பற்றிக் கடுமையாகவும், தவிர, ஷொல்செனிஸின் பற்றி, பாராட்டும் விருப்பிருந்தாலும் கூடவே தயக்கமும் கண்டனமும் கலந்த கருத்துகளையும் எழுதி இருக்கிறார்.
சுவாரசியமான இந்தத் தொகுப்பை, 20ஆவது நூற்றாண்டின் முடிவிலிருந்த சில பத்தாண்டுகள் மீது மிக பண்பட்டதும், கூர்மையானதுமான ஒரு புத்தியிலிருந்து கிட்டிய தொடர்ந்த விமர்சனமாகப் பார்ப்பது இதை அணுகுவதற்கேற்ற ஒரு வழியாக இருக்கும். நாம் எதிர்பாராத விதமாக, சில நீண்ட, விரிவான தகவல்களோடு கூடிய கடிதங்கள், அவருடைய கருத்துகளை ஆதரித்து எழுதப்பட்டவையாக உள்ளன. ஜூலை 1991 இல், அரசியலியலாளர் ஃப்ரெடரிக் ரோஸென் ஆற்றிய ஒரு உரையில் பெர்லின் மீது வைத்த சில குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக பெர்லின் ஒரு கடிதம் எழுதுகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் வழக்கமாக பெர்லின் மீது முன்பே சொல்லப்பட்டவைதான் – ‘பனிப்போர்’ சார்ந்த வாதங்களை பெர்லின் கடைப்பிடித்தார், அரசு மிகக் குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்று கருதினார், ஹாயெக்கிய அல்லது தாச்சரிய வழியில் கட்டுப்பாடுகளில்லாத முழுச் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை விரும்பினார் என்பன அவை. என் கருத்தில், பெர்லினின் மறுவினை மிகக் கோர்வையாக இருந்ததோடு, மிகவும் கட்டுப்பாடோடு எழுதப்பட்டிருந்தது. அவரைப் பற்றி ஏதும் தெரிந்திருந்த எவருக்கும் பெர்லின், ‘பனிப்போராளிகள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் பலரைப் போலவே, ஒரு ரூஸ்வெல்ட்டிய தாராளவாத அரசியலைக் கொண்டவர் என்பது புரிந்திருக்கும். பெர்லின், சுதந்திரம் என்பதை எதிர்மறையாக அணுகினார் என்பது உண்மைதான். அதாவது தனிமனிதர்கள் என்ன செய்வதென்பதையோ, செய்ய வேண்டாம் என்பதையோ தேர்ந்தெடுப்பதில் அரசும், சமூகமும் எவ்வளவுக்குத் தலையிடாமல் இருக்கின்றனவோ, அவ்வளவு நல்லது என்று கருதி இருந்தார். ஆனால், அவர் திட்டவட்டமாகவும், மறுபடி மறுபடியும் தெளிவாக்கியது என்னவென்றால், இந்த எதிர்மறைச் சுதந்திரம் என்பதன் எல்லை விரிப்பு, மற்றவர்களின் மதிப்பீடுகளுக்குச் சேதம் விளைவித்து செய்யப்படக் கூடாது, அதாவது சமூக ஒற்றுமை, துன்பங்களில் சிக்கியிருப்போருக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியனவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது.
ஆக்ஸ்ஃபர்டில் 1958 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய ‘சுதந்திரம் பற்றிய இரு கோட்பாடுகள்’ என்ற புகழ் பெற்ற ஒரு உரையில் இதுதான் தலையாய செய்தியாக இருந்தது. 30 வருடங்கள் கழிந்த பின், ரோஸெனுக்குத் தான் எழுதும் கடிதத்திலும் இதே கருத்தை அவர் வலியுறுத்துகிறார்.

“மனித மதிப்பீடுகளில் வாழ்வின் குறிக்கோள்கள் என்பனவற்றோடு, சமூக வாழ்வின் அவசியத் தேவைகளையும் சேர்த்தால்- இவற்றில் சில ஒரு நிலையில் ஒன்றுடனொன்று உடன்பட மாட்டாதவையாக இருக்கலாம்- இவை முன் நிற்கையில், எந்தவகைச் சுதந்திரமானாலும் அது இந்த மதிப்பீடுகளுக்கு வழிவிட்டால்தான் நன்மை பயக்கும் சமூகம் ஒன்றை அமைக்க முடியும்.”

பெர்லின் மேலே சென்று, தாராளவியத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டுகிறார், இந்த வேறுபாடு என்பது இன்று பலருக்கு ஏற்க முடியாததாக ஆகி இருக்கிறது.

“நான் இங்கு ஒன்றைக் கவனிக்கக் கோருகிறேன், ஜனநாயகங்கள் என்பன சிலவமயம் அளவு மீறிய ஒடுக்கல் கொண்டவையாக ஆகக் கூடும், அப்போது சமூக மற்றும் அரசியல் உரிமைகள் குறைக்கப்படக் கூடும்தான். அதீனிய ஜனநாயகம் அதன் நிஜ செயல்பாட்டில் …. சோக்ரடீஸ், அனக்ஸகோராஸ், தியாகோராஸ் மேலும் பல சிந்தனையாளர்கள் நாடுகடத்தப்பட்டோ, மரண தண்டனையாலோ தண்டிக்கப்பட்டனரே (அரிஸ்டாடில் கூட இவற்றிலிருந்து மயிரிழையில்தான் தப்பினார்) …. இவர்களின் அடிப்படை உரிமைகளோடு ஒத்திசைந்திருக்கக் கூடும் … என்று நம்புகிறீர்களா என்ன? அமெரிக்க ஜனநாயகம், அது எதார்த்தத்தில் இருக்கிற ஒன்றுதான், அதன் செயல்பாட்டில் உள்ள பல குறைகளோடு, இவை நாம் எல்லாம் அறிந்த வகையான குறைபாடுகள்தாம், பல வித சிறுபான்மையினரைப் பொறுத்த வரை ஒடுக்கு முறையைக் கொண்டதில்லை என்பீர்களா? மகார்த்தி காலத்தை மட்டும் சொல்லவில்லை, நியு இங்கிலாந்தில் பதினேழாம் நூற்றாண்டில் – சேலம் நகரில் சூன்யக்காரிகள் என்று தண்டிக்கப்பட்டவர்களைப் பொறுத்துச் சொல்கிறேன் – கடுமையான ஒடுக்கு முறையைக் காட்டவில்லையா?”

இன்று ஜனநாயகம் சுதந்திரத்தை ஒடுக்கக் கூடும் என்ற சிந்தனையே அனேகமாக ஏற்கப்படாததாகி விட்டது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சிறுபான்மையினரைத் துன்புறுத்தினால், அங்கு ஜனநாயகம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நமக்குச் சொல்லப்படுகிறது. பெர்லின் ஒரு முந்தைய காலத்துத் தாராளவியச் சிந்தனையைக் கொண்டிருந்தவர், அது ஜனநாயகமே தாராளமற்று இருக்கக் கூடும் என்பதை ஏற்றிருந்த சிந்தனை. இந்த உண்மை, பெர்லின் அந்தப் பல்கலை ஆய்வாளருக்குக் கடிதம் எழுதிய காலத்துக்குப் பிந்தைய கால் நூற்றாண்டு காலத்தில், சிறிதும் முக்கியத்துவம் குறையாததாகத்தான் இருக்கிறது.
வேறு பல கடிதங்களில், குறிப்பாக இறப்பதற்குச் சில மாதங்கள் முன்னரே ஒரு போலந்துக்காரருக்கு எழுதிய கடிதத்தில், பெர்லின் தனது மிகச் சிறப்பான கருத்துக்குச் சாதகமான வாதங்களை முன்வைக்கிறார்- மதிப்பீடுகளில் பன்மை இருப்பது என்பது அது. மனிதத் தேவைகளில் அடிப்படையானவை அனேக நேரம் ஒன்றோடொன்று ஒவ்வாதவையாக இருக்கலாம், மோதுபவையாகவும் இருக்கலாம், சில விஷயங்களில் எடை போட முடியாதவையாகவோ, ஒப்பிட முடியாதவையாகவோ கூட இருக்கலாம் என்பது- அதாவது ஒன்றோடொன்று போட்டி போடும் கோரிக்கைகளிடையே அறிவார்ந்த முறையில் உடன்பாடு காண முடியாது என்ற கருத்து இதில் இருப்பது- பலருக்கு பரிச்சயமற்ற ஒரு கருத்தாகவோ, இயல் உள்ளுணர்வுக்கு எதிரானதாகவோ இருக்கிறது. 1993 இல் எழுதிய பெர்லின் கூறுகிறார், ‘எல்லா அற, சமூக, அரசியல் மற்றும் அழகியல் கேள்விகளுக்கும் மையமான மதிப்பீடுகளிடையே இருக்கும் ஒப்பிட முடியாமை, அதை விடக் கூடுதலாக ஒவ்வாமை என்கிற பிரச்சினைகளைப் பற்றி யோசித்திருக்கிறேன். இவை பற்றி எந்த அணுகலையோ, உரையாடலையோ (துறை) ‘இலக்கியம்’ என்று பொதுவாகச் சொல்லப்படுவதில் எங்குமே நான் கண்டதில்லை.’
பெர்லினின் விமர்சகர்கள், இந்த மதிப்பீடுகளின் பன்மைத்தன்மை என்பதற்கு புரியாமை கலந்த எரிச்சலோடு எதிர்வினை செய்திருக்கிறார்கள். ப்ளேட்டோ, காண்ட், பெந்தம் ஆகியோர் நம்பிய மாதிரி அனைத்துக்கும் பொதுவான ஒரு கோட்பாடு அல்லது தத்துவத் தேற்றத்தை உருவாக்கி இந்த வகைத் தீர்வு காண முடியாத மோதல்களை அறவாழ்வு என்பதிலிருந்து முற்றிலும் அகற்றி விட முடியாதா என்ன? அப்படி முடியாதென்றால், மேலைத் தத்துவத்துடைய நெடுங்கால லட்சியங்களில் ஒன்றைக் கைவிட்டு விட வேண்டியதுதான். ஆனால் பெர்லின் இந்த விளைவைக் கண்டு அச்சப்படவில்லை. மேலை மரபுகளோடு மதிப்பீட்டுப் பன்மை என்பது புரசுகிறதா என்று நான் அவரிடம் கேட்ட போது, அவர் உடனே சொன்னார், “மனித மரபோடு கூட.”
பெர்லினின் பார்வையில் தத்துவத்தில் இல்லாதது எதார்த்தம் பற்றிய புரிதல். பிரிட்டிஷ் அரசுக்காக நியு யார்க் நகரிலும், வாஷிங்டனிலும் போர்க்காலத்தில் அவர் பணி புரிந்த அனுபவங்கள், ஒழுக்க/ அறப் பிரச்சினைகளுக்கு எப்போதுமே தீர்வு கண்டு விட முடியாது என்பதை அவருக்குக் காட்டி இருந்தன. தட்டச்சுக் குழுவினர் நடுவே ஒரு உளவாளி எதிரிகளுக்குத் தகவலைக் கசிய விட்டுக் கொண்டிருப்பதாக ஒரு சந்தேகம் எழுந்தால், மொத்த தட்டச்சுக் குழுவையும் வேலையை விட்டு நீக்கலாமா? இப்படிச் செய்வதால் பல அப்பாவிகளின் மீது வாழ்நாள் பூராவும் களங்கம் சுமத்தப்படாதா? பெர்லின் அப்படி ஆகும் என்றுதான் நினைத்தார், ஆனால் அவருக்கு இந்தப் பிரச்சினையை வாதங்கள் மூலம் தீர்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. பல தத்துவாளர்களைப் போல அப்படி முடியாதது குறித்து அவருக்கு வருத்தமேதும் இல்லை. ஆய்வறிவால் அனைத்துக்குமிடையே ஒத்திசைவை அடைய முடியும் என்ற பகல் கனவுகளை விட, தீர்வில்லாத மோதல்கள் கொண்ட மனித எதார்த்தத்தின் அலங்கோலங்களை அவர் விரும்பி ஏற்றார்.
அன்று உயர்கல்விச் சூழல் அழுத்தங்களற்றதாக இருந்தது என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், பெர்லின் பிரசுரங்கள் வேண்டும் என்று ஒரு அவதியும் படாமல் இருந்தது இதனால்தானோ என்னவோ. தத்துவம் நம்மிடையே உள்ள மோதல்களில் என்னவெல்லாம் கிடந்து உருள்கின்றன என்பதை வேண்டுமானால் தெளிவுபடுத்தலாம், அவற்றுக்குத் தீர்வு காண முடியாது. அவர் சில நேரம் தனக்குப் போதிக்க எதுவும் இல்லை என்று கூடச் சொல்லுமளவு சென்றிருக்கிறார். ஆனால் அது ஒரு பிழை, ஏனெனில் அவர் செய்தது- அவருடைய கடிதங்களிலும் சரி, ஹார்டி அவரிடம் இருந்து எப்படியோ கைப்பற்றிய புத்தகங்களிலும் சரி- என்னவென்றால் இப்படி சோகமான விதங்களில் மதிப்பீடுகளிடையே நடந்த மோதல்களை அவர் தெளிவாகவே அறிந்திருந்த போதும், அந்த மதிப்பீடுகளை அவர் அங்கீகரித்தார், உறுதிசெய்தார். பெர்லினுக்கு மனிதரின் உலகு குறித்து அனாவசிய மயக்கங்கள் ஏதும் இல்லை. ஆனாலும், அதில் வாழ்வதில் அவர் மகிழ்ச்சியே கொண்டிருந்தார்.
(தமிழாக்கம்: மைத்ரேயன், அக்டோபர் 2015)
இங்கிலிஷ் மூலம்: லிடரரி ரெவ்யு, செப்டம்பர் 2015 இதழ்.
பதிப்பாசிரியர்கள்: ஹென்ரி ஹார்டி, மார்க் பாட்டில் (2015 அக்டோபர்)

oOo

மொழி பெயர்ப்பாளரின் பின் குறிப்பு

பெர்லினின் கடிதங்கள் புத்தகம் பற்றிய கட்டுரையில் ஜான் க்ரே ஒரு சிறு ஆனால் முக்கியமான விஷயத்தைத் தொட்டு கட்டுரையை முடிக்கிறார். பெர்லினின் சிறந்த கருத்து என்று அவர் சொல்வது கேட்கவும், படிக்கவும் எளிதாக இருக்கிறது. ஆனால் நம்மில் அனேகரால் இன்று ஏற்கவோ, ஜீரணிக்கவோ முடியாத கருத்து அது, முடிவு அது.
இதையே நான் பல வருடங்களாக, என் வழியில் வந்தடைந்த முடிவாகச் சொல்லி வருகிறேன். மனிதர் அறிவு சார்ந்த இயக்கம் கொண்டவர்கள் அல்ல. அதாவது முழுதும் அறிவு சார்ந்து இயங்குவது மனிதருக்கு சாத்தியம் இல்லை என்பது அது. அப்படிச் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், நாம் எல்லாரும் பல வகை பாதிப்புகளால் உருவான உணர்ச்சிக் கட்டுகளால் இயக்கப்படுகிறோம். அவை எல்லாவற்றையும் ஏதோ ஒரு புற நிலையில், மிகக் கறாரான கருவி ஒன்றால் சோதித்துப் பின் மறுபடி நம்முடையதாக ஆக்குமளவு நாம் திறந்த புத்தகங்களும் இல்லை, நமக்கே நம் உணர்ச்சிகளின் ஏராளமானவற்றை விளக்கவோ, தனியே பிரித்தெடுத்துக் கவனிக்கவோ முடியாது என்பது என் கருத்து.
ஒரு இலேசான கவனிப்பாக இதைத் தருகிறேன்.
ஓர் இளைஞன் யாரிடமோ தொலைபேசியில் பேசுகையில், உட்புறம் திரும்பி வீட்டில் இருக்கும் தன் அப்பாவிடம் கேட்கிறான், ‘அப்பா, உனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்வீட் எது?”
பதில்: எனக்கு ஸ்வீட்டே பிடிக்காது.
அவன் – ‘வாட்? யு ஆர் க்ரேஸி. ஹௌ கான் யு ஸே தட்? யூ ஈட் ஸ்வீட்ஸ். நா பாத்திருக்கேன்.’
பதில் : சாப்பிடுவேன், ஆனால் எனக்குப் பிடிக்கும் என்றில்லை.
அவன்: ஓக்கே, பட் வாட் காண்டி டூ யூ லைக்?
பதில்: எதுவும் இல்லை. ஐ டோண்ட் லைக் ஷுகர். இட் மேக்ஸ் மீ ஃபீல் இல்.
அவன்: வாட்? ஐ ஹாவ் ஸீன் யு ஈட் காண்டி. ஹௌ கான் யு நாட் லைக் ஷுகர்? ஹௌ டூ யு எக்ஸ்ப்லெய்ன் தட்? ஒய் டூ யு நாட் லைக் சாக்லேட்? ஹௌ டூ யு எக்ப்ளெய்ன் தட்?
அந்தக் கேள்வி பதில் சம்பவம் இப்படிப் போயிற்று. அந்தப் பக்கம் தொலைபேசியில் இருந்தவருக்கும் ஷுகர் பிடிக்காதாம், அவருக்கும் சாக்லேட் உவப்பில்லை.
இறுதியில் சுவை என்பதை விளக்கத் தர்க்கம் ஏதும் இல்லை என்று தெரிந்து உரையாடல் பாதை திரும்பியது.
எனக்கும் சாக்லேட் பிடித்தமான ஒன்றில்லை. அதைத் தவிர்க்க முயல்வேன். சாப்பிடப் பிடிக்காது என்று கூட இல்லை. அது விருப்பமான பொருள் இல்லை. குறிப்பாக சாக்லேட் ஐஸ் க்ரீம் ஆகாது. ஐஸ் க்ரீமே அத்தனை விருப்பமான பொருள் இல்லை. சர்க்கரையும் காஃபியில் சேர்த்துக் கொண்டாலும், அரை டீ ஸ்பூன், பெரிய கோப்பையானால் ஒரு டீஸ்பூன் போலச் சேர்த்துக் கொள்ள முடியும். இது இப்படியே வாழ்நாள் பூராவும் இருந்திருக்கவில்லை. சிறுவனாக இருந்த போது மிட்டாய்கள், ஐஸ்க்ரீம், சர்க்கரைப் பானங்கள் எல்லாம் பிடித்தன. இன்று கருத்தளவிலும் பிடிக்கவில்லை, ருசியாகவும் அவை விருப்பமான விஷயங்களாக இல்லை.
சரி இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று கேட்பீர்களோ என்னவோ. இதெல்லாம் தனி மனித விருப்பு வெறுப்புகள்தான் என்றாலும் இவற்றிலிருந்தும் ஒவ்வாமை பிறக்கும்.
சிலருக்கு விளாம்பழம் பிடிக்காது, சிலருக்கு இலந்தை பிடிக்காது, பலாப்பழத்தைக் கண்டால் ஓடுபவரைப் பார்த்திருக்கிறேன். ஏலக்காய் வாசனை பிடிக்காதவரைத் தெரியும். கத்தரிக்காய் வதக்கலைத் தொட மறுக்கும் எத்தனையோ இளைஞர்களை தமிழ் நாட்டிலும் பார்த்திருக்கிறேன். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, குளிர்பெட்டிக் கோழி இறைச்சி என்று பலவும் இறைச்சிகளை உண்பவர்கள் நடுவே கூடப் பல வகையில் ஒதுக்கப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.
திருமணங்கள், கொண்டாட்டங்களில் தித்திப்பு என்பதைத் தொட்டு விட்டு விலகுவதைப் பார்ப்பவர்கள் சர்க்கரை வியாதியா என்று கேட்பார்கள், அல்லது ஓ, ரொம்பத்தான் ஆடம்பரம் செய்கிறான் என்று நினைப்பார்கள். இப்படி ஒரு சிறு சங்கிலியாக பிம்பங்கள் உருவாகி நம்மைப் பற்றி கருத்து உருவாக்கம் நடக்கும்.
விஷயம் என்னவென்றால், இவர்கள் யாராலும், என்னாலும் இந்த விருப்பு வெறுப்பை தர்க்க ரீதியாக விளக்க முடியாது. காரணமாக, தம் மத நம்பிக்கை சொல்கிறது என்று வாதிடுவோர் அது தர்க்கமல்ல என்பதை மறந்து விடுகிறார்கள். நம்பிக்கை என்பது தர்க்கமல்ல.
சாப்பாட்டு விஷயங்கள் சில சமயம் பெரிய ‘அறப் பிரச்சினை’களாகி சமூக மோதல்களுக்கு இட்டுச் செல்லும் என்பதை பசு வதை குறித்த கருத்துப் போர் இப்போது இந்தியாவில் துவங்கி இருக்கிறதே அதை வைத்துச் சொல்லலாம். பரபரப்பை நாடும், ஒளி விளக்கு தன் மேல் இருப்பதையே விரும்பும் எழுத்தாளர்கள் இந்த விஷயத்தையும் விட்டு வைப்பதில்லை. காந்தியே பசு வதையை எதிர்க்க மாட்டார் இன்று என்று எழுதி வைக்கிறார்கள். ஆனால் பசுக்கள் கடந்த பல பத்து ஆண்டுகளாகக் கடத்தப்பட்டும், படு மோசமான நிலைகளில் வைத்தும் கொல்லப்பட்டு வருவதை எதிர்த்து வன்முறையில்லாத வகைகளில் பலர் போராடியது குறித்தும் அவர்கள் தம் முயற்சிகளுக்கு அரசும், வியாபாரமும் செவி மடுக்காதது குறித்து துக்கத்தில் இருப்பது குறித்தும் ஒரு வரி கூட எழுத முடியாதவராக இருக்கிறார். மாறாக மொத்த விஷயத்தையும் சுவை சார்ந்த விஷயமாக மாற்றி இருக்கிறார். அது சுவை சார்ந்த விஷயம் மட்டும் அல்ல என்பதுதான் பிரச்சினை.
இதற்காகச் சிலர் கொல்லப்படுவதும், சிலரைக் கொல்ல ஊக்குவிப்பதும் நடக்கிற அளவுக்கு உணவு விருப்பு வெறுப்பு அமைகிறது. கூட்டி அமர்த்தி ஏன் கூடாது, ஏன் அவசியம் என்று விளக்கச் சொன்னால் பல காரணங்கள் கிட்டும், அவற்றில் எதுவும் ஏன் அது அத்தனை பிடிக்கிறது பிடிக்காது என்ற சுவை சார்ந்த காரணத்தால் விளக்கப்பட முடியாததாக இருக்கும்.
எல்லா மதங்களிலும் சுவை/ உண்ணுதல் சார்ந்த தடைகளும், அவை சார்ந்த மனத்தடைகளும் இருக்கின்றன என்பது (அல்லது ஊக்குவிப்புகளும், விருப்புகளும் இருப்பதை- கிருஷ்ணனுக்கு நாவல் பழம், பிள்ளையாருக்கு மோதகம் இப்படிச் சில) நாம் காண்கிறோம். இவை எதுவும் ‘அறிவு’ சார்ந்த தேர்வுகள் என்று நிறுவுவதற்கு எக்கச் சக்கமான முயற்சி தேவைப்படலாம்.
அத்தகைய முயற்சி பெருவாரி மக்களுக்குச் சாத்தியமில்லைதானே? ஆனால் மோதல்கள் பெருவாரி மக்களுக்குச் சாத்தியம். பெர்லின் இதை ஒப்பிட முடியாத மதிப்பீட்டு மோதல்கள், அறிவு சார்ந்த முடிவால் தீர்க்க முடியாத அறப் பிரச்சினைகள் என்று வகைப்படுத்தி, பகுத்தறிவால் சமூக ஒருங்கிணைப்பு கிட்டும் என்பது பகல்கனவு என்று சொல்கிறார். பகுத்தறிவு என்பதே பகல் கனவு என்று சொல்லவில்லை. அதற்கு எல்லைகள் உண்டு என்பதுதான் அவருடைய முடிவு.
இது செமிதிய சிந்தனைக்கே வேட்டு வைக்கும் ஒரு கருத்து. அதே நேரம் ஒரு கோணத்தில் செமிதியமும் பகுத்தறிவைத் தன் எல்லைக்குள் வர விடாமல் செய்வதில் மிக்க கவனம் கொண்டது. பிறர் மீது அதை ஆயுதமாகப் பயன்படுத்தி இதர பண்பாடுகளை அழிக்கையில் மாத்திரம் பகுத்தறிவு பயன்படும், தன்னிடம் மட்டும் அது வரக் கூடாது என்பது செமிதியத்தின் போர்த் தந்திரம். மாறாக, பெர்லின் மனிதருக்குப் பகுத்தறிவு வேண்டாம் என்றோ, எதிலும் அறிவு வேலை செய்யாது என்றோ சொல்லவில்லை. மனித வாழ்வு பல விதங்களில் அலங்கோலம் நிறைந்தது, அதைத் தொடர்ந்து கடப்பதில் நாம் திறமையை, அமைதியை, சுதந்திர இயக்கத்தை நாடிக் கடக்கலாம், அனைத்தையும் அறிவு பூர்வமாக ஒழுங்கு படுத்துவதாகச் சொல்லிக் கடும் ஒடுக்கலை எப்போதும் நாடுவது உதவாது. அதே நேரம், ஜனநாயகமும் ஒழுங்கு என்ற பெயரில் சில ஒடுக்கல்களைச் செய்துதான் தீரும் என்று ஊவா முள்ளாகக் குத்தும் கருத்துகளை முன் வைக்கிறார்.
அதற்கு ஒரு சான்று இந்தச் சிறு செய்தி: http://www.thedailybeast.com/articles/2015/10/03/oregon-cop-s-mass-murder-deja-vu.html
ஒரு கொலைகாரனால் தன் மகன் கொல்லப்பட்டதை அறியும் பெற்றோர் சொல்கிறார்கள், இதற்காக துப்பாக்கிகளைத் தடை செய்வது உதவாது. எங்களுக்குத் தற்காப்புக்கு துப்பாக்கிகள் அவசியம். குற்றவாளிகளுக்கு எப்படியோ துப்பாக்கி கிட்டி விடும். எங்களுக்குத் துப்பாக்கி இல்லாமல் ஆக்கினால் நாங்கள்தான் பலியாவோம் என்கிறார்கள்.
இவர்கள் சொல்வது என் கருத்தில் அபத்தம். உலகெங்கும் உள்ள பெருவாரி நாடுகளில் மனிதர்களுக்குத் துப்பாக்கிகள் கிட்டுவதில்லை. அவர்கள் எல்லாம் குற்றவாளிகள் துப்பாக்கியோடு தாக்குவார் என்று பீதியில் இருப்பதில்லை.
அதே நேரம் அமெரிக்காவைப் போல பல பத்து மைல்களுக்கு ஒரே ஒரு வீடாக மக்கள் வாழும் பெரும் நிலப்பரப்பும் அனேக நாடுகளில் இல்லை.
இந்த மதிப்பீட்டு மோதல் சுலபத்தில் தீர்க்கப்பட முடியாதது. அதே நேரம் ஆஸ்திரேலியா, இன்னொரு நாடு, அதிலும் பல பத்து மைலகளுக்கு ஒரு வீடு என்று வாழும் மக்கள் நிறைய. அங்கு 96 இல் கொணரப்பட்ட கடும் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அங்கு கொலைகளை, தற்கொலைகளை, கூட்டக் கொலைகளை நிறையக் குறைத்திருக்கிறது என்று ஆஸ்திரேலிய அரசு சொல்கிறது.
அங்கு அரசு ஏதும் கருத்துக் கணிப்பு நடத்தி இந்தச் சட்டத்தைக் கொணரவில்லை. ஒரு கோணத்தில் இந்த வகைச் சட்டம் ஒரு ஒடுக்கு முறை என்று வாதிடலாம். ஆனால் தனி மனித சுதந்திரம் என்பது அப்படி ஒன்றும் புனிதமானதும் அல்ல.
இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் ஏதோ 100 பேர் இருந்தால் அதிகம். ஆனால் இதைச் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதி இதைக் கொணர்ந்தேன். நாமாவது இதைப் படித்து யோசித்தால் அதுவே கூட எனக்குப் போதும்.

One Reply to “உறுதிப்படுத்தல்: ஐசாயா பெர்லினின் பிற்காலக் கடிதங்கள் -1975-1997”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.