கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!-2

 

krishna_1

 
கண்ணன் பிறந்தான்!
கிருஷ்ணன் குழந்தையாகப் பிறந்த நிகழ்வு பல கவிஞர்கள், அடியார்களின் எண்ணங்களுக்கும் கருத்திற்கும் வித்தாகி கணக்கற்ற அருமையான பாடல்களையும் பாசுரங்களையும் ஸ்லோகங்களையும் அவர்கள் இயற்றக் காரணமாயிற்று. கிருஷ்ண அவதாரத்தைப் போலக் கொண்டாடப்பட்ட, இன்றும் கூட கொண்டாடப்படும் அவதாரம் வேறு ஒன்றுமே இல்லை. அந்தக் கருமணிக் குட்டனின் ஒவ்வொரு அசைவினையும், அழகினையும், அவனுடைய அத்தனை குறும்புகளையும், ரசித்து, மனக்கண்ணில் கண்டு வாழ்ந்தவர்கள் புனைந்த பாடல்களும் ஸ்லோகங்களும் வெகு அழகானவை. அவனைப் பற்றிய எது தான் அழகில்லை?
நாராயண பட்டத்ரிக்கு குருவாயூர் குழந்தை கிருஷ்ணன் ப்ரத்யட்சம். கிருஷ்ணன் குழந்தையாக அவதரித்ததை, அருமையாக, ஒவ்வொரு சிறு கட்டத்தையும் விளக்கமாகத் தானே நேரில் கண்டது போல் உள்ளம் உருக அனுபவித்து ‘நாராயணீய’த்தில் ஸ்லோகங்களாகப் பாடியிருக்கிறார். அவற்றுள் சில…
கிருஷ்ணனின் அவதார வேளை நெருங்கிய போதில், அது கருமுகில்கள் வானை நிறைத்திருந்த மழைக்காலமாயிருந்தது. எங்கும் பளீரிட்ட மின்னல் கீற்றுகள், எல்லாவற்றையும் தம் ஒளிக்கீற்றுகளின் வெளிச்சத்தினால் நிரப்பிக் கொண்டிருந்தன. பட்டத்ரி இதனை உருவகிப்பது வெகு அழகாக இருக்கிறது; கிருஷ்ணனாக அவதரிக்கப் போகும் மகாவிஷ்ணுவின் கருமையான நீலமேக ச்யாமள திவ்ய உருவிலிருந்து  எழுந்து வெளிப்படும் மின்னல் போன்ற ஒளிக்கீற்றுகள் இந்த உலகையே ஒளிமயமாக்குவதாக உருவகிக்கிறார். மேகங்களையும் மின்னல் கீற்றுகளையும் அந்த நீலமேக ச்யாமளனாகவே கண்டு களிகொள்கிறார்.

ஆனந்தரூப பகவந் நயிதே அவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமாணைஹி
காந்தி வ்ரஜைரிவ கநாகநமண்டலைர்த்யாம்
மாவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா
(தசகம் 38: ஸ்லோகம்-1)

‘எல்லாத் திசைகளும் பெய்த மழையினால் குளிர்ந்திட, மக்கள் தங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகி விட்டதை எண்ணிக் களிக்க, மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதாரம் செய்தார்’, என்கின்ற பட்டத்ரி, குழந்தையை மகாவிஷ்ணுவாக கொண்டாடுகின்றார்.
பிறந்த குழந்தை அணிமணிகள், சங்க சக்கரங்களுடன் மேக வண்ணனாக அழகுற விளங்குகிறானாம்! லக்ஷ்மி தேவி மார்பில் விளங்க, அவளுடைய கடைக்கண் கடாட்சத்தினால் அந்தச் சிறையில் கம்சனால் விளைவிக்கப்பட்ட துர்நிமித்தங்கள் அனைத்தும் விலகிவிட்டனவாம்.
ஞானிகளுக்கும் கூட மனதால் காணக்கிடைக்காதது பகவான் கிருஷ்ணனின் தரிசனம். அந்த திவ்ய தரிசனத்தைக் கண்டு உடல் புளகாங்கிதம் எய்தி வார்த்தைகள் குழறத் துதித்து நின்றார் வசுதேவர். அவருடைய கண்கள் வண்டுகள் போன்று ஆசைதீர கிருஷ்ணனின் அழகிய வடிவம் எனும் தேவாம்ருதத்தினை மாந்தி மாந்திக் களித்தனவாம்.

சௌரிஸ்துதீர முனிமண்டல சேதசோபி
தூரஸ்திதம் வபுருதீஷ்ய நிஜேக்ஷணாப்யாம்
ஆனந்தபாஷ்ப புலகோத்கம கத்கதார்த்ர
ஸ்துஸ்டாவ த்ருஷ்டி மகரந்தரஸம் பவந்தம்
(தசகம் 38: ஸ்லோகம்-5)

பட்டத்ரியின் உவமைகள் மிகவும் அழகு வாய்ந்தவை. நிறைவுற்ற நிதானத்துடன், மென்மையாக, அணுவணுவாக ரசித்து, ருசித்து தசகம் 38, 39-களில் கிருஷ்ணாவதாரத்தை விவரித்துள்ளார்.
தேவகியின் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணன் மானுடக் குழந்தை வடிவம் தாங்குகின்றான்! வசுதேவர், உடனே குழந்தையை எடுத்துக் கொண்டு கோகுலத்தில் தன் நண்பன் நந்தனின் இல்லத்தில் அவனுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையுடன் மாற்றம் செய்வதற்குச் செல்கிறார். குழந்தையை ஏந்திச் செல்லும் வசுதேவரின் கைகளில் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் இளமையான அன்னம் போலத் திகழ்கிறானாம் குட்டிக் கிருஷ்ணன்!
இந்த ஸ்யாமகிருஷ்ணனின் சகோதரி தான் மஹாமாயா எனப்படும் பார்வதி. தன் தமையனுக்கு உதவவே அவள் பெண்குழந்தையாக நந்தகோபன் இல்லத்தில் அவதரித்திருக்கிறாள். அவளுடைய மாயையினால் தான் காவலர்கள் அனைவரும் உறக்கத்திலாழ, சிறைக்கதவுகள் தாமே திறந்து கொள்ள, வசுதேவர் சென்ற பாதைக்கு ஆதிசேஷனின் ரத்தினங்கள் ஒளிவீசி வழிகாட்ட, அவனுடைய படமானது கொட்டும் மழைக்குக் குடை விரிக்க, அவர் குழந்தை கிருஷ்ணனை ஏந்திச் செல்லலானார்.
அவருடைய பாதம் பட்டதும் யமுனை நதி தனது பெருக்கைக் குறைத்துக் கொண்டு வழி செய்து கொடுத்தாள். கனவில் நடப்பது போலச் சென்று நந்தனின் இல்லத்தை அடைந்த வசுதேவர், பிறந்திருந்த பெண்குழந்தையை எடுத்துக் கொண்டு அவ்விடத்தில் கிருஷ்ணனை வைத்து விட்டுக் கிளம்பினார்.
(இந்த மஹாமாயா கம்சனின் சினத்தினை எதிர்த்து, அவன் தன்னைக் கொல்வதைத் தவிர்த்து, அவனைக் கொல்பவன் எங்கோ பிறந்து வளர்கிறான் என அறிவித்து வானில் மறைந்து விடுகிறாள்.)
நந்தனின் இல்லத்தில் பெரும் குரலெடுத்துக் கால்களை உதைத்துக் கொண்டு குழந்தை அழ ஆரம்பித்ததும், ஓடோடி வந்த ஆயர்பாடிப் பெண்கள் யசோதைக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர். ‘குழந்தைக்குப் பாலூட்டிய யசோதை பேரானந்தம் அடைந்த விதத்தினை யாரால் வர்ணிக்க இயலும்?’ எனக் கிருஷ்ணன் பிறந்த வைபவத்தினை நாரயணீயத்தில் உள்ளம் நெகிழ நாராயண பட்டத்ரி விவரிக்கிறார்.
கோகுலத்தில் இப்போது ஒரே கொண்டாட்டம். கோபிகள், இடையர்கள் அனைவரும் எண்ணெயையும் வண்ணப் பொடிகளையும் ஒருவர் மேல் ஒருவர் தூவி மகிழ்கின்றனர். இதனால் நந்தகோபன் வீட்டு முற்றம் சேறாகி விட்டது.

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே
(பெரியாழ்வார் திருமொழி-13)

பெரியாழ்வார், தானே ஆய்ப்பாடி போந்து கண்ணனின் அவதார விழாவில் பங்கெடுத்தது போல அனுக்ரஹித்த திருமொழிகள் அபூர்வச் சிறப்பு வாய்ந்தவை.
மணிமணியான பாசுரங்கள்…
முற்றம் சேறானால் கிருஷ்ணனைக் காண வருபவர்களும் ஓடியாடுபவர்களும் வழுக்கித்தானே விழ வேண்டும்? விழுகிறார்கள்; பின் எழுந்து, ‘எங்கே அந்த நம்பி?’ எனத் தாம் காண வந்த காயாம்பூ வண்ணனைத் தேடிப் பின்னும் பரபரத்து ஓடுகின்றார்கள்; இவ்வாறு ஓடியவண்ணமும், பாடியவண்ணமும், ஆடியவண்ணமும் களிப்பவர்களால் நிரம்பி விட்டது நந்தகோபனின் திருமாளிகை!
ஆய்ப்பாடியில் இத்தகைய ஒரு பிள்ளை (ஆண்குழந்தை) பிறந்ததை, ஆச்சரியமும் ஆனந்தமும் மிகக் காண வந்தவர்களும் கண்களால் கண்டு களித்துச் செல்கின்றவர்களும் ஒருசேர ஒரே கருத்தை வாயுரையாக வெளியிடுகின்றனர். அது என்ன?
“இவனை, இந்த ஆண்பிள்ளையை ஒத்த வேறொரு ஆண்பிள்ளை மூவுலகிலும் வேறு ஒருவருமே இல்லை,” “இவன் பிறந்த நட்சத்திரம் திருவோணம்,” “இவன் உலகை ஆளப் போகிறான்,” என்றெல்லாம் சொல்லி மகிழ்ந்தனராம்.

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்ல காண்திரு
ஓணத் தானுல காளுமென் பார்களே
(பெரியாழ்வார் திருமொழி-15)

‘புருஷேஷு விஷ்ணு,’ என்பதை இங்கு நினைவு கூரலாம். ஆகவே மஹாபுருஷன் என்று சொல்லத்தக்க தகுதி படைத்தவன் அவன் ஒருவன் தானே!
குழந்தை கிருஷ்ணன் பிறந்து பன்னிரண்டு நாட்கள் ஆகி விட்டன. இடையர்கள் வெற்றி மிகுந்த மங்கலத் தூண்களை நான்கு திசைகளிலும் நாட்டினர். வலிய யானைகள் உலவுகின்ற கோவர்த்தன மலையைக் கைவிரலால் தாங்கிய மைந்தனைத் தத்தம் கரங்களில் மாற்றி மாற்றி எடுத்துக் கொஞ்சிக் குதூகலித்தனர் அந்த இடையர்கள்.
குழந்தையைப் பார்க்க வந்துள்ளனர் சில பெண்கள். குழந்தையின் அழகினையும், துறுதுறுப்பையும், களையையும் பற்றிப் பேசிப்பேசி அவர்களுக்கு வாய் ஓயவில்லை! தன் குழந்தையை அவர்கள் புகழ்வதால் யசோதையின் உள்மனதில் பெருமிதம் பொங்குகிறது. ஆனாலும் எங்கே தன் கருமணிக் குட்டனுக்குக் கண்ணேறு பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தன் பக்கத்திலுள்ள அப்பெண்களிடம் பொய்யாகச் சலித்துக் கொள்கிறாளாம்:
“நங்காய்! இந்த என் குழந்தையைத் தொட்டிலில் இட்டால் அத்தொட்டில் கிழிந்து போய்விடுமோ என்னும் படியாக உதைக்கிறான்; சிறிது நாழி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால், நழுவி இறங்கி, என் இடுப்பை முறித்து விடுகிறான்; சிறிது நேரம் ஒன்றும் செய்யாமலிருப்பானாக என்று இறுக மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டால் குட்டிக் கால்களால் வயிற்றில் உதைக்கிறான். இப்படி இவன் தனது பருவத்துக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதனால் நான் மிகவும் மெலிந்து களைத்துப் போய் விட்டேன்,” என்கிறாள்.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்
(பெரியாழ்வார் திருமொழி-21)

இந்த குழந்தை ஆலிலையில் அழகுறப் படுத்த வண்ணம், கால் கட்டை விரலைச் சப்பியபடி (வடபத்ர சாயி) மிதந்து கொண்டிருக்கிறான்.
நீலாம்பரி ராகத்திலமைந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இசை, சொல் அழகுகளோடு மிளிரும் அன்னமாச்சாரியார் பாடல்.
கேட்கும் போதே குட்டிக் கிருஷ்ணனை அள்ளி அணைத்துக் கொள்ள ஆவல் பிறக்கிறது.
காவேரி நதியின் மென்மையான அலைகள் கரங்களாகி, ஸ்ரீ ரங்கன் (கிருஷ்ணன்) என்னும் குழந்தை படுத்திருக்கும் ஆலிலையைத் தொட்டில் போல அசைத்த வண்ணம் இருக்கின்றன. பால்துளிகள் படிந்த சிவந்த அதரங்களுடன் கொள்ளை அழகாக இருக்கும் குழந்தை இந்தப் பாட்டிலும் தொட்டில் ஆட்டத்திலும் அமைதி கொள்கின்றது.
எத்துணை அழகான உபமானம். ஸ்ரீ ரங்கநாதனைக் குழந்தையாக்கிப் பார்க்கும் நயம்… இதையும் விட அழகிய கற்பனை உண்டோ?

அவனுக்கு இந்தப் பிரபஞ்சமே ஒரு தொட்டில்.  உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்ளச் சிரிப்புடன் அதி சௌந்தர்யமாக, ஆலிலையில் அழகாக ஊஞ்சலாடுகிறான் குழந்தை.
(திருமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டால் மனக்கண்ணில் கிருஷ்ணன் ஆலிலைத் தொட்டிலில் ஊஞ்சலாடுவதை உணரலாம்).

தொல்லியுனு மாராக்கு தொட்டெலனெ யூகேகன
செல்லுபடி நூகீனி ஸ்ரீரங்க சிசுவு.
 
கலிகி காவேரி தரகல பாஹுல தலனே
தலக கிதுரங்க மத்யபு தொட்டெலனு
பலுமாரு தனு நூச்சி பாடகா நூகீனி
சிலுபால நெலவிதோ ஸ்ரீரங்க சிசுவு.
 
அடிவோ கமலஜுனி திருவாராதனம் பனக
அதன கமல பவாந்தமனு தொட்டெலனு
உததுல தரங்கமுலு நூசகா நூகீனி
செதரனி சிருல தோட ஸ்ரீரங்க சிசுவு.

இவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சிப் போற்றி வளர்க்கப்படுகிறான் யசோதையின் பாலகன் கிருஷ்ணன். இதற்கெல்லாம் இடையில் ஒரு ஆத்மாவின், நொந்து கிடக்கும் ஒரு தாயுள்ளத்தின் வேதனை மிகுந்த புலம்பல் யார் காதிலாவது விழுகின்றதா?
 
குழந்தையின் அழகிலும் அவன் மேல் கொண்ட பிரேமையிலும் தம்மையே மறந்து விட்டமையால் எல்லோரும் மறந்து போய்விட்ட ஒரு ஜீவன், அவனைக் குடல்விளக்கம் செய்த தாய் தேவகி. ஒரே ஒருவர் தான் அந்தத் தாய் உள்ளத்தின் துயரத்தினைத் தானும் அவளைப் போலவே அனுபவித்தார். அவள் உள்ளம் எப்படியெல்லாம் பாடுபட்டது என விவரிக்கிறார். அவர் தான் குலசேகராழ்வார் என்னும் மன்னர் பெருந்தகை.
“ஆலை நீள் கரும்பன்னவன், அம்புயத் தடங்கண்ணினன் என்றெல்லாம் விதம் விதமாக உன்னைப் போற்றிப் பாடித் தாலாட்டும் ஆனந்தத்தினை நான் பெறவில்லையே! உலகத்துத் தாய்மார்களுள் கடையளான தாய் நானல்லவோ?” எனப் புலம்புகிறாள் தேவகி.
பெற்றெடுத்த முதல் ஏழு குழந்தைகள் கண்ணெதிரே கொல்லப்பட, எட்டாவது குழந்தையைப் பிழைக்க வைக்க, அவனை மாற்றி வைத்தார் வசுதேவர்.
“இப்போது கண்ணால் எட்ட இருந்தும் கூடக் காண இயலாத பாவியாகி விட்டேனே. ஊர்ப்பெண்டிரெல்லாம் வந்து நீ தொட்டிலில் கிடக்கும் அழகைப் பார்த்துச் செல்லும்போது நான் அவர்களில் ஒருத்தியாகக் கூட இருக்கவில்லையே… மேல்புறம் கறுத்து உட்புறம் சிவந்த திருவடிகளையும் கைவிரல்களையும் முடக்கிக் கொண்டு ‘இது மேகக் குட்டியோ?யானைக்குட்டியோ’ என எண்ணும் உன் அழகினை நான் அனுபவிக்கப் பெற்றிலேனே…”

வடிக்கொள் அஞ்சனம் எழுதுசெம் மலர்க்கண்
மருவி மேலினிது ஒன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் பொலியும்
நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிரல் அனைத்தும்
அங்கஒயோடு அணைந்து ஆனையின்
கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ
கேசவா கெடுவேன் கெடுவேனே
(குலசேகராழ்வார்- 7ம் திருவந்தாதி)

“குழந்தையைப் பார்க்க வந்தவர்கள், அவனை மடிமீது வைத்துக்கொண்டு, ‘உன் அப்பா யார் சொல் பார்க்கலாம்,’ என்று சொல்லும்போது உனது பிஞ்சுக்கைகளால் நந்தகோபனைச் சுட்டிக் காட்டுவாயே! ஐயோ குழந்தாய்! நான் செய்த பாவமல்லவோ இந்தப் பிராப்தம் வசுதேவருக்குக் கிடைக்காமல், பரம பாக்யசாலியான யசோதையின் கணவனாகையால் நந்தகோபனுக்குக் கிடைத்தது…
“நீ  எனக்கு உன் கனிவாய் முத்தம் தருவதை இழந்தேனே! நீ புழுதியில் விளையாடிப் பின் அக்கோலத்துடன் வந்து என்னை அணைத்துக் கொள்வதனை நான் கிடைக்கப் பெற்றிலனே! உன் விரல்களால் குழப்பி உண்ட சாதத்தின் மிச்சத்தினை உண்ணக் கிடைத்திலனே! இத்தகைய கொடிய வினை செய்த என்னை எதற்காக எனது தாய் பெற்றனளோ?”

தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா
தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன்
மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் வாரி
வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன்
என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே
(குலசேகராழ்வார்- 7ம் திருவந்தாதி)

கண்ணன் தயிரைத் திருடி உண்ணும்போது கண்ட யசோதை தடியும் தாம்புக்கயிற்றையும் எடுத்துக் கொண்டு வருகிறாள். அவசரமாக வாயின் தயிரைத் துடைத்துக் கொள்ளும் குழந்தை வாய் நிறைய அதனைப் பூசிக் கொள்கிறான். பின் யசோதையிடம் அடிபட்டு அழுவான்; அஞ்சினாற்போல் நோக்குவான்; வாய் கோணி விக்கி விக்கி அழுவான்; கைகளை அவளை நோக்கிக் கூப்புவான். இவற்றையெல்லாம் கண்டு யசோதை ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விடுவாள். “யசோதை தொல்லை இன்பத்திறுதி கண்டாளே, உன்னை வயிற்றில் சுமந்து பெற்ற எனக்கோ கிடைக்காமல் போயிற்றே,” என தேவகி புலம்புகின்றாள்.

முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்
முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யுமிவை கண்ட அசோதை
தொல்லை யின்பத் திறுதிகண் டாளே
(குலசேகராழ்வார்- 7ம் திருவந்தாதி)

இவ்வாறெல்லாம் எல்லாரையும் தனது மாயையில் மயக்கி விளையாடும் சிறு குட்டனை லீலாசுகர் எழுதிய ஒரு ஸ்லோகத்தின் துணை கொண்டு இன்னும் ஒருமுறை ரசித்து அனுபவித்துப்பின் அவனுடைய மற்ற லீலைகளைக் காணலாமே!
கையாகிய தாமரையின் துணையால் தாமரை போன்ற கால்களைப் பிடித்துக் கொண்டு, அதனைத் தனது தாமரை போன்ற முகத்தினருகே கொண்டு செல்கின்றான். அமைதியாகப் பின் ஆலிலையில் கிடக்கும் என் சிறு குட்டன் கிருஷ்ணன் என் மனத்தை இச்செய்கையால் கொள்ளை கொள்கிறான். அவனை மனதால் எண்ணுகின்றேன்.

கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தேன வினிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயனம்
பாலம் முகுந்தம் மனசா ஸ்மராமி.

(கிருஷ்ண லீலைகள் வளரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.