kamagra paypal


முகப்பு » புத்தக அறிமுகம்

ஏக்நாத் எழுதிய ‘ஆங்காரம்’ நாவல்

நாவலுக்கான அணிந்துரை

Aangaaram_Eknaath_Suga_Suka_Discovery_Book_Palace_Villages_Rural_Covers

திருநவேலியில் தெருவுக்கொரு உச்சினிமாகாளி. திருநவேலியைச் சுற்றி பல ஊர்களில் இசக்கி, பேச்சி, முத்தாரம்மன், பேராத்துச் செல்வி, சுடலை மாடன், பூதத்தார் என பல கடவுள்கள். கடவுள்கள் என்றால் வீட்டுக்குள் பூசையறையில் ஓவியமோ, காலண்டர் புகைப்படமோ மாட்டி, செப்பு போல் சிறு விக்கிரகம் வைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை, ஆடி இறுதியில் முழுகாட்டி புதுத் துணி போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, கற்பூரம் காட்டி சக்கரைப் பொங்கல் வைத்து, விழுந்து வணங்கப்படும் சாமிகள் அல்ல. காக்கும் கடவுள்கள்தான் என்றாலும், இவர்களுக்கு வீட்டுக்குள் இடம் கிடையாது. சில சாமிகளுக்கு தெருவிலும், இன்னும் சில சாமிகளுக்கு ஊருக்கு வெளியேயும் கோயில்கள் உண்டு.

‘கும்பிடுத சாமின்னாலும் துடியான சாமியல்லா! அவ்வொள வீட்டுல வைக்க முடியுமா? நம்மதான் அவ்வொ இருக்கற எடத்துல போயிக் கும்பிடணும். பொறவு மனுசாளுக்கும், சாமிகளுக்கும் என்னவே வித்தியாசம்? ‘

இவை போக குலதெய்வங்களுக்கு அசலூர்களில் கோயில் உண்டு. குலதெய்வக் கோயில்களான சாஸ்தா கோயில்களுக்கு எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வருவதுண்டு. வத்தலகுண்டைச் சேர்ந்த குடும்பத்துக்கு குலசேகரன்பட்டணத்தில் சாஸ்தா கோயில் இருக்கும். மன்னார்குடிக்காரர்கள் தங்கள் சாஸ்தா கோயிலைத் தேடி, விக்கிரமசிங்கபுரத்துக்கு வருவர். பாபநாசம் சொரிமுத்து அய்யனாரைப் பார்க்க பிராமணர்களும் வருவதுண்டு. சித்தூர் தென்கரை மகராஜா கோயில் பூசாரியின் பெயர் சொரிமுத்தையர். புனலூர் மலையாளிகள் சித்தூர் தென்கரை மகராஜா கோயிலுக்கு வருவதன் அர்த்தம் பிடிபடாத ஒன்று. சாஸ்தா கோயில் அறியாத, சாஸ்தா கோயில் தேவைப்படாத மனிதர்கள் தங்களுக்கான சாஸ்தாவை உள்ளூர்க் கோயில்களிலேயே வைத்திருப்பார்கள். அவருக்கோ, அவளுக்கோ பெயர்கள் மட்டும் ஊருக்கு ஊர் வேறாக இருக்கும். திருநவேலிக்காரனுக்கு உச்சிமாளி என்றால், செங்கோட்டைக்காரனுக்கு இசக்கி. சீவலப்பேரியில் சுடலைமாடனென்றால், கீழாம்பூரில் மந்திரமூர்த்தி. எதை மறந்தாலும் தங்களைக் காக்கும் சுடலைக்கும், காளிக்கும், இசக்கிக்கும் வருடா வருடம் கொடை நடத்தி அவர்தம் மனதைக் குளிர்விக்க அம்மக்கள் தவறுவதில்லை. ஊர் கூடி தேர் இழுப்பது போலத்தான் ஊர் கூடி கோயில் கொடை நடத்துவது. வருடத்தில் ஒருநாள் ஊர்மக்கள் ஒன்றாகக் கூடிக் கலந்து பொது காரியம் ஒன்றைச் செய்வதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த எப்போதோ இருந்த மனிதர்கள் செய்திருந்த ஏற்பாடாக இருக்கலாம். வருடம் முழுவதும் செய்த தப்பு தண்டாக்களை, கொடை க்கு உழைப்பதைப் பார்த்து சுடலை மாடனோ, பேச்சியம்மையோ மன்னித்து, பாவக் கணக்கிலிருந்துக் கழித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் மனிதர்கள் இழுத்துப் போட்டு கோயில் வேலைகளைச் செய்வது எல்லா சிற்றூர்களிலும் வழக்கமாக நடக்கும் ஒன்று. கொடைக்கு கால் நட்டதிலிருந்து சுத்தபத்தமாக இருந்து, கொடையன்று பால் குடமோ, தீச்சட்டியோ எடுப்பதும் ஆதாரம் வருவதும் எல்லாம் அவர்கள் கையில் இல்லை. சாமி கொண்டாடியென்றால் இன்னும் விசேஷம். சாமி கொண்டாடிகள் சாமியாடுவது என்பது கோயிலுக்குள் இருக்கும் இசக்கியும், பூதத்தாரும் வந்து இவர்கள் உடம்பில் புகுந்து ஆடுவது.சாமிகொண்டாடி சொந்த தாய்மாமனாகவோ, சித்தப்பனாகவோ இருந்தாலும் கூட சாமியாடி குறி சொல்லும் போது அவர் இசக்கி, பேச்சி, சுடலை. கேட்கும் வரம் தரும். சில சமயம் தர மறுக்கும். இன்னும் சில சமயம் தவணை சொல்லும்.

‘வார ஐப்பசில ஒன் வீட்டு ஆம்பள திரும்பி வந்திருவான். நீ எனக்கு செவ்வா தோறும் செவ்வரளி சாத்து’.

முகத்தில் தண்ணி எறிந்து அடுத்த ஆளின் குறை கேட்டு குறி சொல்லும் சாமி.

‘எனக்கு வல்லயம்செஞ்சு போடுவியா ?’
திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? ‘
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் சாமிக் கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்’

என்கிற ஏக்நாத்தின் பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு கிராமத்து கோயில் கொடை. அதை ஏற்று நடத்தும் வெவ்வேறு வகை மனிதர்கள். மாடு மேய்ப்பவர், கோழி வளர்ப்பவர், சைக்கிள் கடை நடத்துபவர், அரசியல்வாதி, கல்லூரி மாணவன், மைக்செட்காரர், வில்லிசைக் கலைஞர் என பல முகங்கள். கூடவே ஒரு பகுத்தறிவாளரும் உண்டு. இத்தனை கதாபாத்திரங்களுடன் ஒரு கோயில் கொடையை ‘ஆங்காரம்’ நாவல் மூலம் நமக்கு நடத்திக் காட்டியிருக்கிறார், ஏக்நாத். ஆட்டுப்புழுக்கை வாடையும், ஊதுபத்தி வாசனையும், பச்சைப் பிள்ளையின் பால் வாடையும் , கிராமத்து காப்பிக்கடை அடுப்பில் மிதக்கும் ஆம வடை வாசனையும், ஆட்டை அறுக்கும் ரத்த நெடியையும், அது கொதிக்கும் குழம்பு வாசனையுமாக கதை சொல்லியிருக்கிறார். நாஞ்சில் நாட்டின் சுடலையாண்டியை என்பிலதனை வெயில் காயும் நாவலில் நமக்குக் காட்டியவர், நாஞ்சில் நாடனென்றால் திருநவேலியின் முப்பிடாதியை ஆங்காரம் மூலம் நமக்குக் காட்டுகிறார் ஏக்நாத். இருவருமே வறுமையின் செம்மையோடு கல்லூரிக்குச் சென்ற இளைஞர்கள். ஆங்காரம் நாவலில் கல்லூரி மாணவன் முப்பிடாதியை சாமியாடச் சொல்கிறார்கள்.

‘படிக்கிற பயல சாமியாடச் சொல்லலாமாவே?

‘’படிப்புக்கும் சாமிக்கும் என்னல சம்மந்தம் இருக்கு? கீழத்தெருவுல கொம்பையாத் தேவரு மவன் கரண்டு ஆபிசில என்ஜினீரா இருக்கானாம். இப்பவும் வந்து அவ்வோ வீட்டு கோயில்ல, ஒவ்வொரு கொடைக்கும் ஆடிட்டுதானல இருக்காம்’’

படித்து, பட்டம் பெற்று மும்பையிலோ, கொல்கத்தாவிலோ அடுக்குமாடிக் கட்டிட அலுவலகத்தில், ஆங்கிலமும், ஹிந்தியும் பேசி, ரொட்டியும், சப்ஜியும் தின்று வேறோர் வாழ்க்கை வாழும் அய்யம்பெருமாளோ, நவநீதகிருஷ்ணனோ இன்றைக்கும் வருடத்துக்கு ஒருமுறை தங்கள் உச்சினிமாகாளி, இசக்கியம்மன் கோயில் கொடைக்கு விடுப்பு எடுத்து வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

சிறு மற்றும் பெருநகரவாசிகளுக்கு சிறு தெய்வங்கள் குறித்தோ, கோயில் கொடை பற்றியோ, வரி பிரிப்பதிலிருந்து அதன் சம்பிரதாயங்கள் மற்றும் சண்டைகள் வரை அனைத்துமே கற்பனையாகக் கூடத் தோன்றலாம். இன்றளவும் நடந்து வரும் அவை குறித்த பழைய நினைவுகளில், கொடைக்கு ஊருக்குப் போக முடியாத வருத்தத்தில் இருக்கும் இன்றைய உடலளவு நகரவாசிக்கு இந்த நாவல் ஒரு கொடை.

வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.

கி.ரா பாட்டையாவின் எழுத்துக்களில் மட்டுமே பார்க்க முடிகிற, நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிற, சற்றும் விகற்பம் தோன்றாத இயல்பான ஆண் பெண் சம்பாஷனைகள்.

‘கொழுந்த பிள்ள வேட்டிய உதறும்போது பாத்துட்டென்’

‘மைனிமாரு எத்தன தடவ வேணாலும் பாக்கலாம். அடுத்தாப்ல பாக்கணும்னா எங்கிட்டயே கேளுங்கெ’

பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்’

என்கிற கவிதையை எழுதியவர்தான் ‘ஆங்காரம்’ நாவலை எழுத முடியும்.

கிராமத்து பால்ய நினைவுகளை மீட்க நினைப்பவர்கள், தத்தம் கிராமங்களுக்குச் செல்லத் துடிப்பவர்கள், செல்ல இயலாதவர்கள், கிராமத்து வாழ்க்கையைப் பற்றி அறியாதவர்கள், அறிந்து கொள்ள விரும்புபவர்கள் எல்லோருக்கும் ரத்தமும், சதையுமாக மனிதர்களைக் காட்டுகிறார், ஏக்நாத். நிறைய கிளைக்கதைகளுடன் அச்சு அசலான வட்டார வழக்குச் சொற்களுடன் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதில் ஒலிக்கிறது.

பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?

கவிதை மூலம் இந்தக் கேள்வியைக் கேட்ட ஏக்நாத் ‘ஆங்காரம்’ நாவல் மூலம் அதற்கான பதிலை சொல்லியிருக்கிறார்.

‘தோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடை காடு’ என்னும் தன்னுடைய முதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச் சுற்றி காண்பித்தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்யகாலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என் கண் முன்னே கறந்த பசும்பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பி கொடுப்பாள். இப்போது ஆச்சி இல்லை. ஆழ்வார்குறிச்சியுடனான தொப்புள்கொடி உறவு அறுந்து போய்விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண் சார்ந்த எழுத்துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமையினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்து விட முடியும் என்றுதான் தோன்றுகிறது.

6 Comments »

 • Shivi said:

  சுகா அண்ணன் – மிக அருமையான அணிந்துரை! ஒவ்வொரு முறை உங்கள் எழுத்துக்களை படிக்கும் போதும், ஏற்கனவே பொங்கி வழிந்து கொண்டிருக்கிற திருநவேலி ஊர்ப்பாசம் இன்னும் பல மடங்காகி விடுகிறது! படித்து முடித்த அடுத்த நொடியே, மூட்டை முடிசுகளை கட்டிக்கொண்டு ஊர்ப்பக்கம் நிரந்தரமாக சென்று விடலாம் என்று தோன்றுகிறது! 🙁

  # 30 August 2015 at 11:34 pm
 • S Shankar said:

  மிகச் சிறப்பான அணிந்துரை சுகா. ஏக்நாத்தின் எழுத்துக்குக் கிடைத்த பெரிய விருது இது!

  # 31 August 2015 at 10:51 pm
 • Raja said:

  அருமையான அணிந்துரை.

  சோணமுத்து பஸ் மாதிரி திருநவேலில ஆரம்பிச்சு கண் குளிர பார்க்குற பச்சை, பசுமை, வாய்க்கா, வரப்பு மாதிரி சாமி, சாஸ்தா, கோயில், கொடை விவரமெல்லாம் சொல்லி ஆழ்வாருச்சி ஆச்சி வீட்டுல கொண்டு விட்டுட்டிய அண்ணாச்சி.

  இன்னொரு முக்கியமான விஷயம் வேல்சாமி காப்பித்தூள் கடை இன்னும் அம்பைல இருக்கு.

  # 1 September 2015 at 5:13 pm
 • Arumuganainar said:

  ஆங்காரம் புத்தகம் எங்கு கிடைக்கும்,

  # 13 September 2015 at 3:25 am
 • sampathkumar said:

  Excellent. no words to say.

  # 7 March 2016 at 8:51 pm
 • Radhakrishnan Chellappan said:

  கடல் கடந்து வாழ்ந்தாலும் நுப்பிடாதியையும் சுடலை மாடனையும் நித்தம் நினைக்க தான செய்தோம்…. இப்பவே ஆங்காரம் வாங்கி படிக்கணும் போலலா இருக்கு.
  தொ. பரமசிவம் அவர்கள் சொல்வார்கள் “சிறு தெய்வம் ன்னு… எதை வச்சி சொல்றீங்க?” ன்னு, கமலும் இதை பல தடவை மேற்கோள் காட்டிருக்கார்.
  பெரிய பரிச்சைல (annaul exam) pass ஆனா நுப்பிடாதிக்கு விடலையும், அம்மாவுக்கு utress operation நல்ல படியா முடிஞ்சா கண்மலர் அடிச்சு தாரேன் ன்னு ஆச்சி நேர்ந்ததும் மறக்க முடியுமா… நமக்கு எல்லாம் நுப்பிடாதியும், சுடலையும், பேச்சியும், இசக்கியும் முத்தாரம்மையும், வண்டிமலைச்சாமியும், அம்மா வழி காரசேரி சாஸ்தாவும், அப்பா வழி நாலு மூல கிணறு குன்றின்மேல் சாஸ்தாவும், உய்காட்டனும், உய்யகொண்டாளும் தான் பெரும் தெய்வங்கள். சூப்பர் சுகா!

  # 12 May 2016 at 1:20 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.