வாசகர் மறுவினை

தமிழ் இசை மரபு

கட்டுரை சிறப்பாக இருக்கிறது.
நல்ல மொழி பெயர்ப்பு. பல சொல்லாக்கங்கள் பல பத்தாண்டுகளுக்கு முந்தைய மொழிப் புழக்கத்திலிருந்து வந்தவை, அதெல்லாம் மொழிபெயர்ப்பாளர் உஷா வைத்யநாதனின் பிரக்ஞையில் இன்னும் இருக்கின்றன என்பதே எனக்கு அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
‘பாரிய மனோவசியம்’ என்பது அப்படி ஒரு சொல். பாரிய என்ற சொல்லைப் பார்த்து வெகு நாளாகி இருந்தன.
‘கொள்ளை நோய்’ என்பதும் மிகவும் புழக்கம் தேய்ந்து போன சொல். இப்படி நெடுகப் பல சொற்கள் எனக்கு மகிழ்ச்சி அளித்தன. வாக்கேயக்காரர்கள் என்பது இன்னொரு சொல்.
மகுட சிகாமணி!!
கட்டுரை வெறுமனே சுவாரசியமாக இல்லை. பிரமாதமாக இருக்கிறது. திரு.வெ.சா இதை எல்லாம் என்றோ தமிழுக்கு மாற்றி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்குக் கிட்டி இருக்கும் பிம்பமே மாறி இருக்கும். இதைச் செய்ய அவருக்கு நல்லதொரு மொழி பெயர்ப்பாளர் தேவைப்பட்டிருக்கிறார் என்பது வியப்புக்குரியது. அவரே இரு மொழிகளிலும் நன்கு எழுதக் கூடியவர் என்றிருக்கும்போது அவரே மொபெ செய்திருக்கலாம்.
இசை, கவிதை பிரிவிற்கு முக்கியக் காரணம் மகாலேயிசம்- நவீன மகாலேயிசம் இன்னும் கோரமானது. சுதந்திர இந்தியாவில் இங்கிலிஷ் வழிபாடு இத்தனை அதிகரித்தது ஒரு சாபக்கேடு. அதற்குக் காரணம் நேருவிய ஆட்சியில் இங்கிலிஷ் தெரிந்த அதிகார வர்க்கம் ஆட்சியில் பெரும் பங்கைக் கைப்பற்றியதும், அவரே ஒரு இங்கிலிஷ் மோஹியாக இருந்ததும் என்று சொல்லலாம். இந்தி, இந்திய மொழிகள் ஆகியனவற்றை அவரும் இந்த இங்கிலிஷ் மோஹிகளுமாகச் சேர்ந்து பிற்போக்குத்தனத்தின் உறைவிடம், இந்து மதத்தின் ஆணி வேர் என்று பார்த்து ஒழிக்க முயன்றது இன்று பண்பாட்டுச் சிதிலத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
நவ காலனியம்=> சித்தப் பிரமை, Schizophrenia.
ஏனெனில் இதே நவகாலனிய அடிமைத்தனமும், அதன் விளைவான குறுநிலத் தேசியவாதமும், பிராந்திய மொழி தேசியமாக வடிவெடுத்துள்ளன. பிரிட்டிஷார் விதைத்துப் போன பிரிவினைவாதத்தின் விளைவாக எழுந்ததால், இந்திய மொழிகளிடையே உள்ள இணக்கங்களை மறுதலித்து பிரிவுகளை வலியுறுத்திய குறுந்தேசியவாதத்தின் வக்கிர நோக்கும், அது எதிர்ப்பதாகச் சொல்லும் இந்தி ஏகாதிபத்தியத்தின் அசட்டுச் செயல்பாடுகளுமாக ஒரு பெரும் கலாச்சார புனருத்தாரணம் நடைபெறாமல் செய்திருக்கின்றன. இன்னும் முனைந்து மேலைச் சிந்தனை, மேலைப் பண்பாடு ஆகியவற்றை மொழி பெயர்த்து இங்கு பொருத்தி இந்தியம் வளராமல் செய்யும் நோக்கமே புரட்சி என்று கொண்டாடப்படுகிறது. முற்போக்கு என்பதன் அர்த்தமே இந்தியம் என்பதை இல்லாமல் ஆக்குவது என்றானபின் தேசியம் என்பது பிற்போக்காளர்களின் அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியப் பண்பாட்டின் பற்பல ஒருங்கிணைப்புகள், பரிமாற்றங்களில் மிளிரும் அழகும் பூரணத்துவமும் எங்கே கொண்டாடப்படப் போகின்றன? வெ.சா போன்றாருடைய அகில இந்திய பிரக்ஞை தமிழில் பரவலாகக் கிட்டி இருந்தால் இந்தப் பிரிவினை வாதத்தின் நச்சு கொஞ்சமாவது மட்டுப்பட்டிருக்கும்.
இன்றளவும் திரு.வெ.சா தன் கருத்துலகை முன்வைத்தபடி இருப்பதை, அது இந்தக் கட்டுரையில் வெளிப்படுவதை வெறுமனே பாராட்டிச் சொல்லிப் பயனில்லை. இத்தகைய முயற்சிகள் மேலை நாடுகளில் 50-80கள் வரை இருந்த காலகட்டத்தில் பிரமாதமான கவனிப்பைப் பெற்றிருக்கும். இன்றும் இத்தகைய தொகுப்புக் கட்டுரைகள், சிறந்த கவனத்தைப் பெறுகின்றன, முன்னத்தனை புகழும் பொது அரங்கில் கவனமும் கிட்டுவதில்லை. ட்விட்டர்/ முகநூல் காலம் இது என்பதால் சுருக்கம்தான் கவனம் பெறுகிறது. [வரலாற்று நினைவு சக்தியும் மக்களுக்கு அத்தனை போற்ற வேண்டியதாகத் தெரியவில்லை. ]
ஆனாலும் இன்றாவது சொல்வனம் பத்திரிகைக்கு இதை வெளியிடும் வாய்ப்பு கிட்டியது போற்றக் கூடியதுதான்.
தமிழிலோ நிலைமை அன்றும் இன்றும் அப்படி எல்லாம் ஊக்கக் களனாக இல்லை. அவர் விடாமல் தன் பணியைச் செய்கிறார், அதற்குத் தக உழைப்பை நல்க ஒரு உஷாவை இன்று அவர் கண்டது அதிசயம்தான்.
ரவிசங்கர்

oOo

Mayil_Peacock_Harp_Yazh_Yaal_Yaaz_Instruments_Music_Isai_Tamil_Violin_Ancient_Classical_Songsஇதுவரையிலான கட்டுரையில் பல சுவையான அருமையான புதிய விபரங்களை அறிந்தேன். கட்டுரை முடியும் இடத்திலிருந்து இன்று வரையான போக்கைப் பற்றியும் எழுதுங்களேன்.
தமிழ்மக்களின் வாழ்வின் ஒரு பாகமாய் இசை என்றுமே இருந்து வந்துள்ள இசை இன்று சினிமாப்பாடல்களின் இசையாய் தொடர்கிறதா? ஆனால் இதில் இசைக்கு மட்டுமே இடம் உள்ளது தமிழ் தொலைந்துபோய் விட்டது போலிருக்கிறது.
பாபநாசன் சிவனை ஒரே வரியில் சொல்லி முடித்துவிட்டது அநியாயமாய் படவில்லையா?
தொடரின் அடுத்த பாகத்தையும் எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
உஷா வை.

oOo

கருத்தளவில் இக்கட்டுரை இந்திய இசை மரபின் மொத்தப்பரப்பில் கர்னாடக சங்கீதத்தின் இடம் என்ன, பங்களிப்பு என்ன எனப் பார்க்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சிலப்பதிகாரப் பங்கு மற்றும் வேங்கடமகி கோட்பாட்டு நூல் பற்றி விரிவாக ஆய்வு செய்து இந்திய இசையில் கர்னாடக சங்கீதத்தின் இடத்தை நவீன உலகில் நிறுவிய அபிரகாமப் பண்டிதர், யாழ்நூல் எழுதிய விபுலானந்த அடிகலார் பற்றிய குறிப்புகள் அடுத்தப்பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும். தமிழ் இசை vs கர்னாடக இசை எனும் சண்டைக்குள் போகாது இவர்கள் இருவரது பங்களிப்பைப் பற்றி பேசமுடியும். குறிப்பாக சங்கீதரத்நாகரத்தில் இருக்கும் 22 ஸ்வர வரிசைகளைப் பற்றி உன்னிப்பாக ஆராய்ந்து தமிழ் பண்களைக்கொண்டு வட்டப்பாலை முறையில் திருத்தங்களைச் சொன்னவர் அபிரகாமப்பண்டிதர். பரோடா இசை ஆய்வரங்கிலும் இதை முன்வைத்துப் பேசியவர். நா.மம்மது போன்ற ஆய்வாளர்கள் இதைப் பற்றி பின்னர் பேசியுள்ளனர். அடுத்தப் பகுதி இதைப் பற்றி எழுதமுடியுமா? இந்த விவாதத்தைத் தொடர ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்..
இன்னொன்று, தமிழ் பண்களைக் கைகொள்ளாது கர்னாடக இசை ஸ்வரவரிசையை முன் எடுத்துச் சென்றதற்கு மற்றொரு காரணம் – தென்னிந்தியாவில் இல்லாது போல தமிழ் அரசுகள். பக்தி இயக்கத்தை முன் எடுத்த அளவுக்கு தமிழ் இயல், இசை, நாடகங்களை 13ஆம் நூற்றாண்டிலிருந்து எடுத்துச் செல்ல களம் அமையவில்லை. வைணவ பக்தி இலக்கியம் இருந்தாலும் அது பெரும்பாலும் (பிரபந்தம் தவிர்த்து) சமஸ்கிருதம் அல்லது மணிப்பிரவாளத்தில் இருந்தது. வங்காளத்தில் 18ஆம் நூற்றாண்டில் உச்சம் அடைந்த வங்க நாடகங்களின் காலத்தில் தமிழ் நாடகங்களை மீட்பார் இல்லை.
அதேபோல் ஆதி மும்மூர்த்திகள் அருணாச்சலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை பற்றியும் இதில் இல்லை..இருக்கவேண்டிய அளவு இவர்களது பங்களிப்பு இந்திய இசையில் செய்த மாற்றங்கள் பற்றித் தெரியாது..வெ.சா அவர்கள் எழுதினால் இதுவும் நல்லதொகுப்பாக இருக்கும்.
ரா.கிரிதரன்

oOo

msv-tkr

எம்எஸ்வி – ஓர் அஞ்சலி

“பொதுவாக ஒரு துறையின் மேதைகள் இன்னொரு துறையில் சிறந்து விளங்குபவர்களால் பாராட்டப்பட வேண்டியது மிக முக்கியம். அந்த வகையில் இளையராஜா மிகவும் அதிர்ஷ்டக்காரர். அவரைக் கொண்டாட இன்றைய தமிழின் சிறந்த இலக்கியவாதிகளான ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள், நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் விஸ்வநாதனைப் பாராட்டி அன்றைய தமிழ் இலக்கியவாதிகளில் இசையார்வம் மிக்க ஜானகிராமனோ அசோகமித்திரனோ ஜெயகாந்தனோ அன்று எழுதிய ஒரு கட்டுரையைக்கூட நான் படித்ததில்லை. பொதுவாகவே தமிழின் தீவிர இலக்கியவாதிகள் தமிழ் திரை இசையை அன்று புறக்கணித்தே இருந்தார்கள்…”

கன்னத்தில் அறைவதைப்போன்ற கசப்பான உண்மை!!
எம்.எஸ்.ராஜேந்திரன்

oOo

இந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் தகவல் பிழை ஏற்பட்டிருப்பதை நண்பர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்- “ராமமூர்த்தியுடன் சேர்ந்து எழுநூறு படங்கள், பின் தனியாக ஐநூறு படங்கள்,” இசையமைத்திருக்கிறார் எம்எஸ்வி என்று நான் எழுதியிருப்பது குறித்த சந்தேகம் அது. பன்னிரெண்டு ஆண்டுகளில் இருவரும் இணைந்து எழுநூறு படங்களுக்கு இசையமைத்திருப்பது சாத்தியமில்லை என்று சொல்வது நியாயம்தான் என்று நினைக்கிறேன்.
ஆனால் நான் எழுதியது, எம்எஸ்வி அவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் விருது வழங்கியபோது தமிழக முதல்வர் பேசியதன் அடிப்படையில் அமைந்த தகவல்.
இப்போதும் அவர் தன் இரங்கல் அறிக்கையில் இதையே கூறியிருக்கிறார்.
இதே எண்ணிக்கை தினமலர் நாளேட்டிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கணக்கு எப்படி என்று தெரியவில்லை, என்றாலும் தவறு தவறுதான். இருவரும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கிறார்கள் என்றும் எம்எஸ்வி மட்டும் தனித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கிறார் என்றும் சொல்வது சரியாக இருக்கும். மொத்தத்தில் அவர் இசையமைத்திருப்பது சுமார் 1200 படங்கள் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை என்றே நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரையிலும்கூட எம்எஸ்விக்கு உரிய பெருமை அளிக்கப்படாமல் அவரது பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பது சோகமான ஒரு நகைமுரணாக அமைந்துவிட்டது, வருந்துகிறேன்.
வெ சுரேஷ்

oOo

இன்னும் கொஞ்சம் (நிறைய) எம்.எஸ்.வி – கேட்டவரெல்லாம் பாடலாம்

“வி.ரா. நிரந்தரமாகப் பிரிந்தார்கள். ஏன்? ‘நான் என்ற எண்ணம்?”
ரசிகர்கள் அனைவரின் மனதில் எழுந்த ஆதங்கம்! மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இருவரும் சேர்ந்து போட்ட மெட்டுக்கள் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும்! இருவரும் ஜீவியத்தில் இருக்கும்போது மைய அரசு அவர்களுக்குச் சிறப்புச் செய்ய மறந்தது! தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு விழா எடுத்தார், தன் முயற்சிகளுக்கு மத்திய அரசு மதிப்புத் தரவில்லை என்று வருத்தப்பட்டுச் சொன்னார்! விருது பெற்றவர்களைத் தயார் செய்த எம்.எஸ்.வி. மற்றும் டி.கே.ஆர். அவர்களுக்கு அதனால் குறை ஏதும் இல்லை! இறைவனிடம் இணைந்து விட்ட இந்த மகா கலைஞர்கள் அவரிடம் தங்கள் இசைத் திறமையை அர்ப்பணித்துக் கொண்டு இருப்பார்கள்! அதி அற்புதமான கட்டுரை! வாழ்க மெல்லிசை மன்னர்கள் இசைத் திறம்!
எம் நாராயணன்

oOo

செவ்வியல் இசையில் தனக்கு இருக்கும் ஞானம்,இந்தி மற்றும் தமிழ் திரை இசையில் தனக்கு இருக்கும் ஆழமான ரசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் திரு.பார்த்தசாரதி எம்.எஸ்.வி என்னும் இசை சாகரத்தில் விளைந்த நல்முத்துக்களை தெரிந்து பட்டியலிட்டிருக்கிறார்.அவரின் தேர்வு எல்லாருக்கும் உடன்பாடன ஒன்றுதான்.ஆனால் எம்.எஸ்.வி.யின் படைப்புகள் இசை என்ற ஒற்றை பரிமாணத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை.மொழி,மொழி சார்ந்த பண்பாடு,மனித மனங்களின் பல்வேறு உணர்ச்சிகள் ஆகியவற்றை இசை வடிவாக உரு மாற்றும் ரசவாதமே அவரின் படைப்பு பாணி.தனது பாடல்களின் மெட்டுகள் பாடல் வரிகளிலேயே உள்ளன என்றும்,அவற்றை கண்டறிந்து வெளிக்கொண்டுவரும் வேலையை மட்டுமே தான் செய்வதாக அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.இசைக்காக வார்த்தைகளை சிதைக்காமை,தெளிவான உச்சரிப்பு ஆகியவற்றில் அவர் மிக உறுதியாக இருந்தார்.செங்க மலம் சிரிக்குது என்று நரகல் நம் காதுகளில் விழுந்தது போன்ற அவலமோ–மானாமதுரை மாமரக்கிளையிலே என்பது மானாமதுரை மாமரக்கு ரயிலே என நம் காதுகளில் தடம் புரண்டது போன்ற அவலமோ அவரது இசையமைப்பில் நிகழவில்லை.ராகங்களை அவர் வலிந்து தேடிப்போகவில்லை.கமகங்களையும்,பிர்காக்களையும்,சங்கதிகளையும் திணிக்கவில்லை.அவை மிக இயல்பாக பாடல்களின் சொற்களிலிருந்தே உருவாவதை உணர்ந்து ரசிக்கலாம்.பாடல்களின் சொற்கள் தரும் பொருளையும்,அநுபவங்களையும் இசையாக மாற்றம் செய்த அவரின் படைப்பின் வீச்சை முழுமையாக உணர இசையறிவு மட்டும் போதாது;இசையோடு ஒன்றாகும் அத்வைத நிலை வேண்டும்.அப்போது இந்த பட்டியல் நீளும்.
ஆர் சுரேஷ்

oOo

மிக மிக அருமையான தொகுப்பு, ரசிகன் மனதில் எம்.எஸ்.வி.என்றென்றும் இருப்பார் என்பதற்கு, ‘இசை கேட்டால்………….இசை என்னுடன் உருவாகும்’ என முடித்திருப்பது மிக சிறப்பு, வாழ்த்துக்கள்
ஹேமா ரங்கநாதன்

oOo

எம்எஸ்வி – 1 இசையும் காலமும்

திரு.எஸ்.சுரேஷின் திரையிசை குறித்த கட்டுரைகள் எப்போதுமே நல்ல ஆழமான அலசலைக் கொண்டிருப்பவை. இந்தக் கட்டுரையும் அப்படியே. இது போன்ற கட்டுரைகள் எம் எஸ் வி வாழும் காலத்தில், அவர் தனது ஆற்றலின் உச்சத்தில் இருந்தபோதே வந்திருக்க வேண்டியவை. அந்தத் தலைமுறையின், இசையறிந்த, அதை எழுதும் திறமை படைத்த படைப்பாளிகளின் திரைப்பட இசை குறித்த உதாசீனமே இப்படியொரு ஆழமான அலசலை முன்வைக்க முடியாமல் செய்தது என்பது குறித்து எனக்கு ஒரு பெரிய ஆதங்கம் உண்டு இருப்பினும் நல்ல கலைஞர்கள் ஒருபோதும் அவர்களுக்குரிய புகழினை, மரியாதையினை அடையாமல் போவது இல்லை.
கட்டுரையின் அடுத்தப் பகுதிகளுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வெ சுரேஷ்

oOo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.