kamagra paypal


முகப்பு » சமூக வரலாறு, சூழலியல், சூழல் நசிவு அபாயங்கள்

சூழல் விழிப்புணர்வில் இரு மைல்கற்கள்

 

chipko

 

இந்தியாவின் சுற்றுச்சூழல் மேம்பாடு வளமா, வளர்ச்சியா என்ற சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.வளர்ச்சி தான் எங்களை வாழவைக்கும் என்ற எண்ணத்தில் வளங்களின் பாதுகாவலர்களாக வாழவேண்டிய ஏழை மக்கள் வள அழிப்புக்கும் வன அழிப்புக்கும் துணை போகின்றனர்.

வனப்பாதுகாப்பு என்பது மண் மற்றும் வனம் சம்பந்தப்பட்ட விஷயம். வளர்ச்சி என்பது புதிய புதிய தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றை குறிக்கும். வளர்ச்சி இருந்தால் வேலைவாய்ப்பு கிட்டி வாழ்விற்கு வித்திடுவதால், வளத்தை காப்பாற்றாமல் வளத்தை அழிப்பதே வாழ்வு என்ற கையறு நிலை உள்ளது.

இருபதாம் நூற்றாண்டை விடவும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சூழல்விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள் அதிகம். சூழல் விழிப்புணர்வு ஊர்வலம், மராத்தான் ஓட்டம், பள்ளிச் சிறுவர்கள் பங்கேற்பு என்று எவ்வளவோ சொல்லலாம். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எம் எல் ஏ, எம்.பி க்கள், சூழல் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பற்றாக்குறைக்கு பாரத பிரதமரின் “தூயபாரதம்” கோஷமும் நல்ல பக்கபலம். இவ்வளவு இருந்தும் கூட தூய்மையான குடிநீருக்கு வழியில்லை. ஆழ்துளைக் கிணறுகளில் காரீய விஷம் சேர்ந்துவிட்டது. நகரங்களில் குப்பைக் கொட்ட இடம் இல்லை.ஒவ்வொரு நகரங்களிலும் மலை மலையாக குப்பைமேடு தூய்மையற்ற கோபுரங்களாகிவிட்டன.நகராட்சி செய்வோருக்கு குவிக்கத் தெரிகிறது. கூட்டத் தெரிகிறது. குறைக்கத் தெரியவில்லை.குவியும் குப்பையை நிர்வகிக்கத் தெரியவில்லை. குப்பைகளில் செல்வம் இருந்தும் இந்தியக்குப்பைகள் ஏழையாக உள்ளன. மக்கும் குப்பைகளில் இருந்து தரமான கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம்.

குப்பைகளிலிருந்தும் சாணத்திலிருந்தும் செப்டிக் டாங்கிலிருந்தும் உருவாகும் எரிவாயு கொண்டு சமையலுக்கும், மின்விளக்குகளுக்கும் பயன்படுத்தினால் விறகுப் பயன் குறையும். இன்னமும் 70சதவீத மக்கள் சமையலுக்கு விறகைப் பயன்படுத்துகின்றனர். தமிழ் நாட்டில் கிராம மக்களுக்குகேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டாலும் குளிப்பதற்கு வெந்நீர் போட விறகு தேவைப்படுகிறது.ரேஷனில் வழங்கப்படும் புழுங்கரிசியில் சோறு வேக கேஸ் அடுப்பை பயன்படுத்தினால் சீக்கிரம் தீர்ந்து விடும் என்று கேஸ் அடுப்பு இருந்தும் விலையில்லாமல் கிட்டும் சீமைகருவேலத்தைவெட்டி மூட்டும் விறகில் தான் ரேஷன் அரிசி வேகுதாம்.

நீர் நிலைகளை கவனிப்போம். ஏரிகுளங்கள் மழைநீர் சேகரிப்புக்காகவும், விவசாயத்திற்காகவும் நமது முன்னோர்கள்-மன்னர்கள் வடிவமைத்துள்ளனர். நாகரீகமான மனிதன் அப்படிப்பட்ட குளங்களிலும் ஏரிகளிலும் குப்பையை சேமிக்கிறான். தூர்வாராமல் தூர்ந்துவிட்ட ஏரிகள் மீது அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுப்பிவிட்டான். இதற்கு சென்னை மாநகரமே உதாரணம். சுயநலத்திற்காக மனிதன் தனக்கு தாமே தற்கொலை செய்துக்கொள்வது போல் உள்ளது. ஒரு புதிய நகர்/ காலனியை உருவாக்கும் போது நீர்நிலை இருந்த இடத்தை ஒதுக்கிவிட்டு அப்புதிய நகரின் தண்ணீர்தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பிருந்தும் அப்படிச் செய்யாமல் அங்கேயே கட்டிடங்கள் எழுப்பிஇறந்து மடிந்ததற்கு மவுலிவாக்கமே சான்று.

ஒவ்வொரு ஊரிலும் ஆறுகள் உண்டு. ஆறுகள் எதற்கு? பாதாள சாக்கடை வழியே செல்லும் கழிவுநீரை வடித்துக் கொள்ளவே பயனாகிறது. சுத்தி செய்யப்படாமல் கடலில் விழுகிறது.காடுகள் அழிக்கபடுகின்றன. காட்டை அழித்து அலுமினிய சுரங்கம், இரும்புச் சுரங்கம், கரிச்சுரங்கம் ஏற்பட அரசு திட்டமிடும்போது, வனப் பாதுகாவலர்களாக வாழ வேண்டிய கிராமத்து ஏழைகளே வேலை வாய்ப்புகளை எண்ணி வனப் பாதுகாப்பிற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். அரசியல் வாதிகளின் வெற்று கோஷம் விண்ணை பிளக்கிறது. முன்பெல்லாம் தெரியாமல் தவறு செய்தனர். விறகுக்காகவும், விவசாயத்திற்காகவும் காட்டில் மரங்களை வெட்டினார்கள். இன்று தெரிந்தே வெட்டி விற்கிறார்கள். சுரங்கம் போன்ற தொழில் நிறுவனங்களுக்கு வனநிலம் ஒதுக்கப்படுகிறது. சூழல் வாழ்வில் வளர்ச்சி பாதுகாப்புடன் ஒன்றி போகாமல் பிரிந்து செல்வதால் பிரச்சினைகள் ஓய்வதாக இல்லை. எனினும் வாழ்வுடனும் வளர்ச்சியுடனும் வளம் பாதுக்ககப்பட்ட உதாரணங்களில் இரண்டை சூழல் வாழ்வில் மைல்கற்களாக சொல்லலாம். புலித்திட்டம் மற்றும் சிப்கோ இயக்கம்.

 

புலித்திட்டம்

இந்தியாவில் புலித்திட்டம்(Project Tiger) தொடங்க 1969-இல் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஸ்விட்சர்லாந்தை தலைமையாகக் கொண்ட இயற்கை மற்றும் இயற்கை வளம் பாதுகாக்கும் அனைத்துலக நிறுவனம் (International Union for the conservation of Nature and Natural resources) சார்பில் டெல்லிக்கு வந்த பிரதிநிதிகள் புலிகளைப் பாதுகாக்க மைய அரசை வற்புறுத்தினார்கள். அதே ஸ்விட்சர்லாந்தை மையமிட்டு இயங்கிவரும் WWF எனப்படும் உலக விலங்கினப் பாதுகாப்பு நிதியம் சார்பாக இந்தியாவிற்கு வந்த அதன் அறங்காவலர் கை மவுண்ட் ஃபோர்ட் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சந்தித்து அழிந்து வரும் இந்தியப் புலிகளைக் காப்பாற்றும் திட்டத்திற்கு உதவி வழங்குவதாகவும், புலிகளைக் காப்பற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தவே, 1973-ஆம் ஆண்டு இந்திய வனப்பகுதியில் ஆறு புலிச் சரணாலயங்கள் உருவாகிப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்களும் சேர்க்கப்பட்டு வனப்பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டது. புலிச்சரணாலயங்கள் உள்ள இடங்களில் மேய்ச்சல், மரம் வெட்டுதல் மனித நடமாட்டம் தடை செய்யப்பட்டது. இயற்கை வளப்பாதுகாப்பில் வனங்களைப் பாதுகாக்கும் முதல் நடவடிக்கையான புலித்திட்டம் இன்றளவும் எஞ்சியுள்ள அடர்ந்த காடுகளில் புலிகளுடன் புலிகளுக்கு இரையாகும் மான், மாடுகள், புலிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு மனித வேட்டை நின்றதால் மரங்களும் மற்ற விலங்கினங்களும் காப்பாற்றப்பட்டன.

 

சிப்கோ இயக்கம்

சிப்கோ இயக்கம் உருவாக உறுதுணையாக நின்ற அமைப்பு தாசோலி கிராம சுயராஜ்ய இயக்கம்.அந்த இயக்கத்தின் தலைவர் சாங்கி பிரசாத்பட் என்னும் காந்தியவாதி. தாசோலி என்பது கட்வால்-தேனி இமாலய வனப்பகுதி. உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது. தாசோலி கிராம சுயராஜ்ய இயக்கம் அப்பகுதி வனங்களையும் பாதுகாத்து வந்தது. அதன் தலைவர் சாந்திபிரசாத் பட் இமயமலைப் பகுதி வனங்களில் பல்வேறு கிராமக் கூட்டுறவு சங்கங்களை நிறுவி இன்றளவும் பாதுகாத்து வருகிறார். வனங்களில் முதிர்ந்து பட்டு விழுந்த மரங்களைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏலத்தில் எடுத்து, வேளாண் உழவுக் கருவிகளை செய்யப் பயன்படுத்தி ஏழைமக்களுக்கு வாழும் வழியைக்காட்டினார். பிரம்பு/மூங்கில் கூடைகள் என்று காட்டில் விளைந்ததைக் கொண்டு அம்மக்கள் குடிசைத் தொழில்கள் மூலம் ஜீவித்து வந்தனர்.

1973 இல் ஹாக்கி மட்டை, கிரிகெட் மட்டை போன்ற விளையாட்டு கருவிகள் செய்யும் ஒரு அலகாபாத் நிறுவனத்திற்கு தாசோலியைச் சேர்ந்த கோபெஷ்வர் நகரத்திற்கு அருகில் மண்டல் என்ற வனப்பகுதியில் 10 மரங்களை வெட்ட வனத்துறை அனுமதித்திருந்தது. மேற்படி நிறுவனத்தின் ஆட்கள் மரம் வெட்ட வந்தனர். தாசோலி கிராமராஜ்ய இயக்கத் தொண்டர்கள் குறிப்பாக பெண்கள் அம்மரங்களை வெட்ட விடாமல் தடுத்ததும்  வெளியேறிவிட்டனர்.

அப்பெண்கள் எவ்வாறு மரவெட்டிகளை வெளியேற்றினர்?

இந்த கேள்வியின் பதில் சிப்கோ கோபேஸ்வர் மண்டல் கிராமத்தில் அம்மரங்களை நம்பி குடிசைத் தொழில் செய்துவந்த தாசோலி கிராம சுயராஜ்ய மகளிர் அணி மரவெட்டிகள் மரங்களை வெட்ட கோடரிகளைத் தூக்கியதும், மரங்களை இரு கைகளால் மார்புடன் தழுவிக் கொண்டு, “முதலில் எங்களை வெட்டி விட்டு மரத்தை வெட்டு” என்று மரங்களை ஆரத்தழுவிய பெண்கள் அறைகூவல் விடுத்ததால், பயந்து நடுங்கிய மரவெட்டிகள் பரந்தொடினர். “சிப்கோ” என்ற சொல்லின் பொருள் “கட்டித்தழுவு”.

இதன் அடுத்தக் கட்ட போராட்டம் மறுமாதம் கோபெஸ்வரிலிருந்து 80 கி.மீ தொலைவில் இருந்தராம்பூர் ஃபாட்டா கிராம வனப்பகுதியில் நிகழ்ந்தது. அலகாபாத் விளையாட்டுக் கருவி நிறுவனத்திற்கு ராம்பூர் ஃபாட்டாவில் மரங்கள் ஒதுக்கப்பட்டு வெட்டவரும் செய்தி கிடைத்ததும் கோபேஸ்வர் மண்டல் பகுதியில் நிகழ்ந்தது போல் சற்று வித்தியாசமாக அப்பழங்குடியினர் தாரை தப்பட்டையுடன் பயங்கர ஒலி எழுப்பி மரவெட்டிகளை வெளியேற்றினர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் கொபெஸ்வர் வட்டத்திற்குள் வரும் ரெனியில் நிகழ்ந்த சம்பவம் உலகம் முழுவதும் விளம்பரமானது. ரெனி கிராமத்தில் ஆண்கள் வேறு இடத்தில் மரம் வெட்டப்போவதாக வந்த தவறான தகவல் அடிப்படையில் தொலைவான கிராமம் ஒன்றிற்கு சென்றபோது, ரெனியில் பெண்கள் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் மரங்களை வெட்ட ஒப்பந்தக்காரர்கள் வந்தனர். அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ரெனி கிராமத்தில் 50 வயதுள்ள கவுரா தேவி என்ற பெண்மணி கிராமத்திலுள்ள அத்தனை பெண்களையும் ஒன்று திரட்டி வெட்ட இருந்த மரங்களை கட்டித் தழுவ உத்தரவிட்டு “எங்களை வெட்டுங்கள் என்று வீரகர்ஜனை புரிந்தாள்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தேரி வனப்பகுதியில் சுந்தர்லால் பஹுகுணா உண்ணாவிரத போராட்டம் நிகழ்த்தவே, சிப்கோ செய்திகள் எங்கும் பரவியது. இறுதிக் கட்டமாக நிகழ்ந்த “ரெனி நிகழ்ச்சி” உலகம் முழுவதும் பரவியதன் விளைவால், 1974 இல் வனங்களில் பழங்குடி மக்களின் ஜீவாதார உரிமைக்கு அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து 1988இல் உருப்படியான இந்திய வனக் கொள்கை (Indian Forest Policy) உருப்பெற்று வளங்களைக்காப்பாற்றுவதில் ஒரு புதிய கண்ணோட்டம் உருவானது.

முதலில் கூறப்பட்ட புலித்திட்ட விளைவால் நமது பல்லுயிர்ப்பெருக்கம் காப்பாற்றுவதற்காக விலங்கு வேட்டை நிறுத்தப்பட்டு மனித நடமாட்டம் தடை செய்யப்பட்டு பகுதிகளாக புலிச்சரணாலயங்கள் நிறுவப்பட்டன. இதற்கு மாறுபட்ட கண்ணோட்டத்தில் வனப்பாதுகாப்பிற்கு தடையில்லாத வனப்பகுதிகளில் பழங்குடிகளின் ஜீவாதார உரிமைக்கு உத்தரவாதம் கிடைத்தது. காலம் காலமாக வனங்களில் நுழைந்து இலுப்பைப்பூ சேகரித்தல், சால், வேம்பு, புங்கன் போன்ற எண்ணை வித்து விதைகள் சேகரித்தல், அறிய மூலிகைச் சேகரிப்பு,கூடை, தட்டுமுட்டுச் சாமான், கட்டுமானம் ஆகியவற்றிற்காக மூங்கில் உரிமை, பட்ட மரங்களை ஏலம் எடுத்தல் ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பழங்குடி உரிமைநிலைநாட்டப்பட்டதால், வனப்பாதுகாப்பில் வாழ்வு பாதுகாக்கப்பட்டது. வளர்ச்சியின் அம்சமாக சுற்றுச்சூழல் காப்பற்றப்பட்டதே ஒரு புதிய கண்ணோட்டம். 2006 இல் வன வாழ்வுரிமை சட்டம்இயற்றப்பட்டதும் பழங்குடி மக்களின் வன உரிமை பாதுகாக்கப்பட்டது.

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.