kamagra paypal


முகப்பு » அனுபவம், அரசியல், எமர்ஜென்சி, புத்தக அறிமுகம்

எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்

PMOஇந்திய அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் நாட்குறிப்புகள் வைத்துக்கொள்வது அல்லது நினைவுக்குறிப்புகள் எழுதுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கூட தங்கள் பணி சார்ந்த அனுபவங்களை பெரும்பாலும் எழுதுவதில்லை. நீல பத்மநாபன், பி.ஏ.கிருஷ்ணன், குஷ்வந்த் சிங் போன்ற சிலர் கட்டுரைகளாக அல்லது புனைவுகளாக அவற்றை எழுதி வைப்பது உண்டு என்றாலும் வரலாற்றாசியர்களுக்கு அவை போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்று நிகழ்வுகளைத் தொகுக்க முடியாது போவதற்கு இவை பெரிய காரணங்கள். குப்தா கமிஷன் அறிக்கை, மண்டல் கமிஷன் அறிக்கை போன்று நீதித்துறை சார்ந்த குற்றப்புலணாய்வு அறிக்கைகள் சமகால நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் ஆய்வதற்கு வழியாகின்றன. ஆனாலும், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் அரசுப்பணியாளர்கள் பேச்சுவழக்கில் குறிப்பிடும் அரசு நடைமுறைகள் அந்த அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தொகுக்கப்படாமல் காற்றில் கரையும்போது அரசு உயர் அதிகாரிகளின் குறிப்புகளுக்கான மதிப்பை நம்மால் உணர முடிகிறது.

பிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன்.

ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார். இந்தியில் எழுதிய இக்குறிப்புகள் 2000க்குப் பிறகு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு PMO Diary – I (The Emergency), PMO Diary – II (The Emergency) என இரு தொகுதிகளாக வெளியாயின. நாட்குறிப்புகளில் எமெர்ஜென்சி காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த சிறிய நிகழ்வுகள் முதற்கொண்டு இதில் பதிவாகியுள்ளன. சிறிதும் பெரிதுமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரதமர் அலுவலகம் எப்படி செயல்பட்டது என மிக சுவாரஸ்யமான முறையில் எழுதியுள்ளார். எமர்ஜென்சியைப் பற்றிய அபிப்ராயமாக மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களில் இயங்கிய மந்திரிகள் முதல் பிரதமர் இந்திரா காந்தி வரையிலான தனிப்பட்ட குணாதிசயங்களும் இக்குறிப்புகளில் நமக்குக் கிடைக்கின்றன. இதுவரை வெளிவராத செய்திகளும் இதில் பதிவாகியுள்ளன. அதிகாரம் எனும் இயக்கசக்தி கண்ணுக்குத் தெரியாமல் சிக்கலான சிலந்தி வலைகளைப் பிண்ணுவதோடு மட்டுமல்லாது அரசு இயந்திரத்தில் தொடர்பில்லாத எளியவர்களைக் கூட எப்படி கெண்டிச் செடி போல விழுங்குகிறது என்பதைப் படிக்கும்போது ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. தன் நிழலைப் பார்த்து எதிரியென நிலைகொள்ளாமல் தவிப்பது போல அரசு அலுவலகர்களும் மந்திரிகளும் விடுபடமுடியாத வியூகத்தில் சிக்கிக்கொண்டதை உணர முடிகிறது.

பிஷன் நாராயண் டாண்டன் எழுதிய நாட்குறிப்புகளின் முன்னுரைப்பகுதியையும், நாட்குறிப்பின் சில பக்கங்களையும் கீழே தமிழாக்கித் தந்திருக்கிறோம்.

BNTandon1969 ஆம் வருடம் அக்டோபர் 4ஆம் தேதி நான் தில்லியின் துணை ஆணையாளர் பதவியைவிட்டு விலகி பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராகச் சேர்ந்தேன். எனக்கு முன் சுஷிதால் பானர்ஜி எனும் நண்பர் அந்தப் பதவியில் இருந்தார். ஒரு மாத காலம் ஒன்றாக வேலை பார்த்து துணை செயலாளர் அலுவலகத்தைப் பற்றி எனக்கு அறிமுகம் செய்தபின்னர் அவர் புது பொறுப்பை ஏற்றுக்கொள்ள வாஷிங்டன் சென்றுவிட்டார். அவர் வேலை பார்த்த காலத்தில் நாட்குறிப்பு வைத்துக்கொள்ள ஆசைபட்டும் முடியாதுபோய்விட்டதால் என்னை கட்டாயப்படுத்தினார். நீதித்துறை சார்ந்த நண்பரும் பிற்காலத்தில் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவருமான ஆர்.எஸ்.பதக் அவர்களும் இதே அறிவுரையை எனக்கு வழங்கினார். ஆரம்பத்தில் அந்த எண்ணம் உறுதிப்பட்டாலும், பின்னர் வேலைபளு காரணமாக என்னால் நாட்குறிப்பு எழுத முடியாமல் போய்விட்டது. இக்காலத்தில் உள்ளது போலில்லாமல் அப்போது துணை செயலாளர் அலுவலகம் என்பது மிகச் சிறியது. இப்படி ஒரு துறை தேவையில்லை என்பதே கிட்டத்தட்ட எல்லா அரசுப் பணியாளர்களின் கருத்துமாக இருந்தது. பிரதம மந்திரி வைத்தது தான் சட்டம் என பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசியலமைப்பு சட்டம் தெரிவிக்கிறது. பிரதமமந்திரியின் முடிவு என்பதை விவாதிக்கலாம் ஆனால் எதிர்க்கக் கூடாது எனும் குழப்பமான செயல்முறையும் ஆங்கிலேயரிடம் இருந்திருக்கிறது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலங்களைப் பிரிக்கும் கோரிக்கையைப் பரிசீலித்த பிரதமர் ஜவஹர்லால் நேருவை எதிர்த்து கருத்து சொன்ன அவரது துணை அலுவலகர் சி.டி.தேஷ்முக் அவர்களிடம், “நான் இந்த நாட்டின் பிரதமமந்திரி. பிரதமமந்திரி என்பவன் முதல் குடிமகன். அரசின் கொள்கையை அவனால் முன்மொழிய முடியும்”, என்றார்.

பிரதமரின் அலுவல்களில் எல்லாவிதங்களில் உதவுவது துணை அலுவலகரின் பிரதானக் கடமை.  புது கொள்கைகளைத் துவங்குவது, மந்திரிகளின் வேலைகளை கவனிப்பது, மத்திய மாநில அரசுகளின் உறவு முறையைப் பேணுவது, அமைச்சரவை முன்மொழிவுகளைப் பரிசீலணை செய்வது போன்றவை அவற்றுள் அடங்கும். பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியம்.

1969-1971 வரை இந்திரா காந்தி தனக்குக் கிடைத்த பெருவாரியான வெற்றிகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை. 1971ஆம் வருடம் மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜெயபிரகாஷ் நாராயணன் எழுதிய கடிதத்தில், “முன்னெப்போதும் இல்லாதவகையில் மக்களுக்குச் சேவை செய்யும்படியான பேராதரவு உனக்குக் கிடைத்துள்ளது. இனி வரும் சிக்கல்களை நன்கு ஆராய்ந்தபின் எதிர்க்கொள்வீர்கள் என நினைக்கிறேன். தேர்தல் சமயத்தில் தங்களுடைய நடத்தையை நான் அங்கீகரிக்கவில்லை. உங்களை அரசியலில் ஸ்திரமாக்கிக்கொள்வதற்கான யுத்தி என்பதை அறிவேன். இனி முழுமுற்றாக அதிகாரத்தைப் பெற்றபின் உங்களுக்கு நல்ல புத்தி கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்”

ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் அவர் தனது அதிகாரத்தை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்தார். நிர்வாகத்திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் முறைகளைக் கற்றுக்கொள்ளாமல் தன்னுடைய அடையாளத்தை ஊதிப்பெருக்குவதில் நிறைய நேரத்தை செலவு செய்தார். 1967 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் பத்திரிகையாளர் குல்திப் நய்யாரிடம், “கட்சிக்கு வேண்டியவர் யார் மக்களுக்கு வேண்டியவர் எனும் குழப்பம் இருக்கு. மக்களுக்கு நான் தேவை என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். அதில் சந்தேகமில்லை “, என்றார். அவருக்கு இருந்த அளவுக்கதிகமான தன்னம்பிக்கை எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அன்றிருந்த நிலைமையில் அவரிடம் யாராலும் அதை நிரூபிக்கச் சொல்ல முடியாது.

17 அக்டோபர் 1975

இன்று மிசா சட்டத்தில் ஒரு திடீர் மாற்றம் செய்யப்பட்டது. அவசர அவசரமாக மாலை ஆறு மணிக்கு ஒரு செயற்குழு கூட்டப்பட்டது. எங்கள் குழுவிலுள்ள பால் எனும் உறுப்பினர் எமர்சென்சி கால நடவடிக்கைகளை திட்டம் தீட்டுபவர். மதியம் என்னிடம் அவர் செயற்குழு திட்டவரவைத் தந்தார். பிரொபசர் தர் என்னிடம் செயற்குழு குறிப்புகள் எனும் கோப்பை அனுப்பி நான் கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என பிரதம மந்திரி விருப்பப்படுவதாகச் சொன்னார். அது மிகச் சிறிய குறிப்பு. விடுவிடுவெனப் படித்துவிட்டேன். அதில் மிசா சட்டத்திருத்தம் பற்றி ரெண்டு யோசனைகள் இருந்தன. முதலாவதாக இருந்த திருத்தம் எல்லா சட்டத்திருத்தங்களில் இருக்கும் ஒன்று தான். மிசா சட்டத்தின்படி மாநில அரசு கைது செய்யும் நபர்களின் விபரங்களை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதே அந்த சட்டத்திருத்தம். இது எப்போதும் நடக்கும் ஒன்று என்பதால் செயற்குழுவின் ஆதரவைப் பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை. பிரச்சனை இரண்டாம் சட்டத் திருத்த ஆலோசனையில் இருந்தது. கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சியினரின் கொள்கை போன்றதொரு விஷயம். மிசா சட்டத்தை மீறுபவர்களை விசாரிக்கு மாநில நீதிமன்றங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் நீதிமன்றங்களின் விசாரணை பிற குற்றங்களைப் போல சாட்சிகளின் அடிப்படையில் அமையவேண்டியிருந்தது. புது சட்டத்திருத்தத்தின்படி நீதிமன்றங்கள் எவ்விதமான சாட்சியமும் இல்லாமல் ஒரு கைதியை மிசா சட்டத்தின்படி தண்டிக்க முடியும். காவல்துறையினர் கைது செய்த நபரை நீதி மன்றத்தில் விடுதலை செய்ய முடியாது. அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

மதிய சாப்பாட்டுக்குப் பிறகு எங்கள் குழுவின் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். சுமார் நான்கு மணிக்கு பிரதம மந்திரி என்னை சந்திக்கவேண்டும் என அழைத்திருந்தார். அறைக்குள் நுழைந்தபோது ரஷ்யன் உள்துறை அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். மிசா சட்டத்திருத்தம் தொடர்பாக பேச அழைத்திருப்பதாக என்னிடம் கூறினார். பிரதம மந்திரி சட்டத்திருத்தம் பற்றி பிரொபசர் தர் அவர்களிடம் சில சந்தேகங்கள் கேட்டார். நீதித்துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் இத்திருத்தம் செல்லுபடியாவது கடினம் என விளக்கிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் சிரிப்போடு கேட்ட பிரொபசர் தர் செயற்குழு கூட்டத்தினரின் முடிவுகளைப் பற்றி என்னிடம் கேட்கச் சொன்னார். நானும் அந்த கூட்டத்துக்குச் செல்லாததால் என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை. எங்களைப் பார்த்துவிட்டு பேச்சைத் தொடர்ந்த பிரொபசர் தர், இந்த சட்டத் திருத்தங்களுக்கு செயற்குழு ஆதரவு தெரிவித்துவிட்டது எனக்கூறினார். மிகக்குறுகிய காலத்தில் இச்சட்டம் அமலாக்கப்பட்டு செயல்படவும் தொடங்கிவிட்டது.

தனிமனித சுதந்தரத்துக்குக் கிடைத்த மிகப் பலமான அடி!

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.