kamagra paypal


முகப்பு » இலக்கிய விமர்சனம்

விலக்கமும் துலக்கமும்

தமிழ்மகனின் ‘அம்மை’ சிறுகதையை முன்வைத்துச் சில குறிப்புகள்

tamilmagan

எந்தக் கதையையும் ஊன்றி வாசித்தால் அதில் பேசுவதற்கு விஷயம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கான தகுதி அந்தக் கதைக்கு இருக்கிறதா இல்லையா என்பது நம் வாசிப்பைச் சார்ந்த முன்முடிவாக இருக்க முடியாது- எந்த வாசிப்பும் தனிநபர் சார்ந்த ரசனை மற்றும் இலக்கிய அளவுகோல்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும் என்பது உண்மை எனினும், ஊன்றி வாசித்தல் என்ற வாசக பொறுப்பை நிறைவேற்றுவதுதான் முதல் கடமையாக இருக்க முடியும், அதன் பின்னரே விமரிசன அளவுகோல்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.
 
இந்தக் கதையில் நாம் பார்ப்பது ஏறத்தாழ ஒரு டெம்ப்ளேட் சூழல். பத்தாவது படிக்கும் சிறுவன் தன்னை விட இரு வயது மூத்த பெண்ணிடம் முதிராக்காதல் கொள்கிறான், அந்த காதல் எந்த நகர்வுமற்றதாய் இவன் மனதில் மலர்ந்தவாறே முடிவுக்கு வருகிறது- அதற்கு புறக்காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அந்தக் காரணம் இவன் காதலுக்கு மட்டுமல்லாமல் கல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. காதலிலும் அதன் முறிவிலும் அந்தப் பெண்ணுக்கு என்ன பொறுப்பு என்பது சொல்லப்படுவதில்லை- இருவருக்கும் இடையில் உள்ள உணர்வுப்பிணைப்போ, சிறுவனின் கனவு போல் தோன்றிக் கலையும் ஒருதலைக் காதலோ, மனமுறிவுக்குப் பிற்பட்ட உணர்வுகளோ போதுமான அளவு அழுத்தமாகவோ தீவிரமாகவோ சொல்லப்படாததாலும் இதுபோன்ற பிள்ளைக்காதல்கள் பலமுறை சொல்லப்பட்டு விட்டதாலும் இந்தக் கதை முதல் வாசிப்பில் பெரிய எந்த ஒரு தாக்கமும் ஏற்படுத்துவதில்லை. நோய்மையையும் தழும்பையும் நினைவுபடுத்தும் “அம்மை” என்ற கதையை வலியேயில்லாமல் தமிழ்மகன் எழுதியிருப்பது ஆச்சரியப்படுத்தும் விஷயம்தான், அதன் துயரமும் பேசப்படுவதில்லை.
 
ஆனால் இரண்டாம் வாசிப்பில் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்வது, கதைசொல்லியின் பெயர் கருணாகரன் என்றாலும் அவன் கர்ணா என்று அழைக்கப்படுவதும்,
“.. எனக்கே ஊரைக் கடப்பதற்கு வெட்கமாக இருந்தது. ஊருக்குள் புது ட்ரஸ் போட்டுக் கொண்டு போவது வெட்கம் பிடுங்கித் தின்னும் விஷயம். அதிலும் பேண்ட் வேறு. யாருமில்லாத நேரமாகப் பார்த்துக் கடந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான்…”
என்று கதைசொல்லி கூறுவதும்- கருணாகரன் ஊருக்கு வெளியே இருக்கிறான் என்றால் அவன் யார்? கர்ணன் என்ற பெயர் அவன் விலக்கி வைக்கப்பட்டவன் என்பதை உணர்த்துகிறது என்பதைத் தவிர கதையில் சாதி குறித்த குறிப்போ, சாதீய ஒடுக்குமுறை குறித்த அவதானிப்போ எதுவும் கிடையாது. சற்றே கவனமான வாசிப்பில், பிறரது பார்வை அச்சுறுத்துவதாகவும் பாராமை தப்பித்தலாகவும் இருப்பதை கதை நெடுகக் காண முடிகிறது. இரண்டாம் வாசிப்பை முடித்தபின், கதையை மனதில் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதுதான் இந்தக் கதையில் விலக்கத்தின் வலி உள்வாங்கப்பட்டு இயல்பென ஏற்றுக் கொண்டு சமநிலைப்பட்டுள்ளதும், அதன் விளைவாய் துலக்கமின்மை செயல்வடிவம் பெறுவதையும் ஊகிக்க முடிகிறது. 
 
இது எழுத்தாளர் எண்ணியிராத மிகைவாசிப்பாய் இருக்கும் வாய்ப்பு உள்ளது எனினும் ஒரு பிரதியின் வாசிப்பில் வாசக பங்களிப்போடு ஒப்பிடுகையில் எழுத்தாள நோக்கம் இரண்டாமிடம்தான் பெறுகிறது என்பதால் இதில் தவறில்லை- எழுத்தாள நோக்கம் என்று எதையும் சுட்டாதவரை இவ்வகை வாசிப்புகள் பிரச்சினையற்றவை.  
 

oOo

 
தான் படித்த பள்ளிக்குத் திரும்புகிறான் கதைசொல்லி. அவன் இப்போது கட்டிட கான்டிராக்டராக இருக்க வேண்டும் – தலைமையாசிரியரிடம் செய்து முடித்த வேலைக்கான காசோலை வாங்க வந்திருக்கிறான். பேச்சோடு பேச்சாக, அவன் அம்மை போட்டது காரணமாக படிப்பை நிறுத்திக் கொண்டது தெரிய வருகிறது, அந்தக் காரணம் உண்மைதானா என்ற கேள்வியையும் எழுப்பிக் கொள்கிறான் கதைசொல்லி.
 
அடுத்து நடப்பதைச் சொல்லுமுன் சற்றே திசைமாறி ஒரு வித்தியாசமான வாக்கியத்தைச் சுட்ட விரும்புகிறேன் –
“வெள்ளை அரைக் கை கதர் சட்டை கசங்காமல் எழுந்தேன். அது நான் சொன்ன பேச்சை கேட்பது போல் இழுத்துவிட்ட இடத்தில் நின்றது”.
சட்டை சொன்ன பேச்சை கேட்பது போல் நின்றது என்றெல்லாம் எந்த நவீன இலக்கிய எழுத்தாளரும் தற்காலத்தில் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். புறப் பொருட்களில் அகக்குறிப்பை ஏற்றிப் பேசும் மரபு மிகப் பழமையானது, சங்க காலம் தொட்டு வருவது. இன்று குறிப்பால் உணர்த்தப்பட்டாலும் படிமங்களாய் இடம் பெற்றாலும் இது போன்ற நேரடிக் குறிப்புகளாய் இடம் பெறுவதில்லை என்பதும், அவ்வாறுள்ள இடங்கள் நமக்குச் செயற்கையாகத் தெரிவதும் அண்மைய இழப்புகளில் ஒன்று.
 
அதே போக்கில், கதைசொல்லியின் கிளர்த்தப்பட்ட உணர்வுகள் உயிர்பெறுவது இவ்வாறு விவரிக்கப்படுகிறது- “.. கவனிப்பாரற்ற அமைதியும் புங்க மர நிழலும் என்னுடைய நினைவுகளை வரவேற்றன”. 
 
நினைவுகள் வெளிச்சத்துக்கு வருவதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு மட்டுமல்ல, அதற்கு கவனிப்பாரற்ற அமைதியும் புங்க மர நிழலும் இணைந்து அளிக்கும் பாதுகாப்பு கதைசொல்லிக்குத் தேவைப்படுகிறது. மிக யதார்த்தமான ஒரு கதையில் இது போன்ற கற்பிதங்கள் அபூர்வமாக இருப்பதால் தோன்றுமிடங்களில் அர்த்தமுள்ளவை என்று நினைக்கிறேன், அவற்றைத் தொடரவும் விரும்புகிறேன்.
 
“.. கவனிப்பாரற்ற அமைதியும் புங்க மர நிழலும் என்னுடைய நினைவுகளை வரவேற்றன” என்பதற்கு முந்தைய வரிகள் இவை- 
 
“.. மனக் கிணற்றில் மூடிபோட்டு மறைத்து வைத்திருந்த நினைவுகளை மெல்ல திறந்தேன். அதைத் திறக்கும்போது யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அனிச்சை காரணமாகச் சுற்றிலும் பார்த்துக் கொண்டேன்.”
 
நினைவுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன, அல்லது, மறைவான ஒரு இடத்தில் விலக்கி வைக்கப்பட்டுள்ளன. மறைவில் இருக்கும் நினைவுகளைத் திறப்பதில் ஒரு மீறலுக்குரிய அச்சம், அல்லது குற்றவுணர்ச்சியுடன் மீனாவை நினைத்துப் பார்க்கிறான். அவனோடு சைக்கிளில் வீடு திரும்ப விரும்பும் அவள், “கர்ணா நானும் உன்கூட வரட்டுமாடா?” என்று கேட்கிறாள். அதற்கு கதைசொல்லியின் உணர்வுகள் இவ்வாறு இருக்கின்றன-
 
.. எனக்கே ஊரைக் கடப்பதற்கு வெட்கமாக இருந்தது. ஊருக்குள் புது ட்ரஸ் போட்டுக் கொண்டு போவது வெட்கம் பிடுங்கித் தின்னும் விஷயம். அதிலும் பேண்ட் வேறு. யாருமில்லாத நேரமாகப் பார்த்துக் கடந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் மீனா இப்படி கேட்டாள்.”
 
இங்கு, “ஊருக்குள் புது ட்ரஸ் போட்டுக் கொண்டு போவது வெட்கம் பிடுங்கித் தின்னும் விஷயம். அதிலும் பேண்ட் வேறு.” என்பது மிக இயல்பாக, கதைசொல்லியின் குறிக்கீடு எதுவும் இல்லாமல் போகிற போக்கில் சொல்லப்பட்டு விடுவதால் நாம் அதை கவனிப்பதில்லை. “ஏன் ஊருக்குள் புது ட்ரஸ், அதிலும் பேண்ட் போட்டுக் கொண்டு போக வெட்கப்பட வேண்டும்?” என்று கேள்வி எழும்போதுதான் இந்தக் கதையில் காதலுக்கு அப்பால் எதுவோ இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் முன் சொன்னது போல் சாதிக் குறிப்புகள் எதுவும் இல்லாமல் கதையைக் கொண்டு செல்கிறார் தமிழ்மகன். 
 
தினமும் சைக்கிளில் பயணப்படும் இருவரின் நட்பில் ஒரு இயல்பான நெருக்கம் உருவாகிறது. அப்போது ஒரு நாள் அது காதலாய் கதைசொல்லி மனதில் மலர்கிறது-
 
“.. ஒரு மழைநாளில் ஆளவரவமற்ற சாலையில் தெப்பலாக நனைந்து சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தேன். பனஞ்சாலை. சாதாரணமாகவே அங்கு யாரும் தென்பட மாட்டார்கள். அவள் “ரொம்ப குளிருது கர்ணா” என்றபடி சட்டென்று முதுகின் மேல் சாய்ந்து கொண்டாள்.”
 
இந்தப் பத்தியில் ஆளரவமற்ற சாலை, சாதாரணமாகவே அங்கு யாரும் தென்பட மாட்டார்கள் என்ற விபரங்கள் தேவையில்லைதான். ஆனால் இதுவரை, “யாராவது பார்த்து விடுவார்களோ?” என்ற அச்சத்திலேயே இருப்பவன் கதைசொல்லி என்பதால் இது அவனுக்கே உரிய நுண்விவரமாகிறது. அவனைத் தவிர வேறு யாரும் இந்தக் கதையில் இதைச் சொல்லியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல- அவசியமற்ற விஷயங்கள், ஆனால் அவனுக்கு முக்கியமானவை-, இங்கு அவனது இயல்பு கொஞ்சம்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் இயற்கையாய் வெளிப்படுகிறது, அந்தக் காரணத்தாலேயே நாம் இதைத் தவற விடவும் செய்கிறோம்.
 
இந்த நெருக்கம் ஏற்பட்டதும் கதை சொல்லி வைத்தாற்போல் முடிவை நெருங்குகிறது. தன் வகுப்பாசிரியரைத் தேடிச் செல்லும் கர்ணன் மூடப்பட்டிருக்கும் லாப் கதவைத் திறக்கும்போது திருமூர்த்தி சாரை சற்றே அலங்கோலமான கோலத்தில் பார்க்கிறான், அதையும் அவன் யதார்த்தமாய், “ஆயாசமாகப் படுத்திருந்தார் போலும்” என்றுதான் நினைக்கிறான். ஆனால் அவரோ புங்க மரக் கிளையை உடைத்து பொய்க்குற்றம் சாட்டி அவனை விளாசுகிறார். வேண்டுமானால் இதுவரை மறைவாய் இருந்த அதிகார அமைப்பின் ஒடுக்குமுறை இப்போது முதல்முறையாக வெளிப்படையாக பிரயோகிக்கப்படுகிறது என்று சொல்லலாம். கதைசொல்லி வகுப்புக்குள் நுழையக்கூடாது என்று விலக்கி வைக்கப்படுகிறான்.
 
… “டேய் நீ கிளாஸூக்குள்ள வரக்கூடாது. ஓடிப் போடா வீட்டுக்கு ராஸ்கல்” என்றார் திருமூர்த்தி சார்.
 
வகுப்பு முடிவதற்கு சற்று நேரம் முன்னதாகவே “”சார் நான் உள்ள வரலாமா?” என்றேன்.
 
“உன்னத்தான் வீட்டுக்குப் போடான்னு சொன்னனே..”
 
அத்தோடு அம்மை போட்டதாகச் சொல்லி பள்ளியிலிருந்து விலகிக் கொள்கிறான் கதைசொல்லி. தலைமையாசிரியர் இப்போது,
 
“யாருக்கெல்லாம் படிக்க ஆசையோ அவங்களுக்குதான் மேற்கொண்டு படிக்க முடியாம போயிடும். அம்மை போடாம இருந்தா படிச்சீருப்பீங்க” என்றார் ஆறுதல்போல.
 
“ஆமா. அம்மை போட்டதுதான் தப்பா போச்சு” பதில் பேச்சுக்காக ஏதோ சொன்னேன்.
 
இந்த அம்மை என்பது எந்த நோய்மையின் வடுக்கள்? கதை இப்படி முடிகிறது-
 
“எத்தனை முறை ஞாபகப்படுத்தும்போதும் புங்க மரத்தடியில் திருமூர்த்தி ஆசிரியர் அடித்துக் கொண்டிருந்தபோது மீனா லேபிலிருந்து வெளியே ஓடிய காட்சியை மட்டும் நினைத்துப் பார்க்கவும் மறுத்துவிடுவேன் நான்.”
 
மீனா திருமூர்த்தி சாருடன் விரும்பி இணங்கினாளா அல்லது அவரது கட்டாயத்தின் பேரில் இணங்கினாளா என்பதற்கான குறிப்புகள் எதுவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை- எது குற்றமாக இருக்க வேண்டுமோ அது இயல்பாக இருப்பது மட்டுமல்லாமல் குற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதற்குரிய சூழலில் தம்மைக் குறித்து வெட்கப்பட்டும் துலக்கமின்றி மறைத்துக் கொள்வதும் கதையின் முக்கிய கூறுகள். அவ்வாறே அவன் எப்படி விலக்கி வைக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு பள்ளியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறானோ அதே போல் அவள் நினைவுகளையும் விலக்கி விடுகிறான்.
 
oOo
 
விலக்கி வைக்கப்படுபவன், விலக்கத்தை தன்னியல்பாக்கிக் கொண்டு பிறர் பார்வையைத் தவிர்க்கிறான், அதனால் அவன் அடையும் தீர்வும் பாராமையாய் இருக்கிறது – விலக்கம் – துலக்கமின்மை, exclusion- invisibility என்ற அச்சு இயங்குவதை நாம் இந்தக் கதையில் பார்க்கிறோம்.
 
நேரடியாக சாதிய ஒடுக்குமுறையைப் பற்றிய கதையாக இல்லாவிட்டாலும், சமூக ஒடுக்குமுறையைப் பேசும் கதை என்று இதைச் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. புறப் பார்வைகள் தம்மியல்பாய் ஏற்றுக் கொள்ளப்படுவதே வாழ்வுக்கு உதவும் தீர்வாகிறது- கர்ணன் கல்வி தடைப்பட்டாலும் வெற்றி பெற்றவனாகவே இருக்கிறான்- “என்ன கருணாகரன் ஸார். எவ்ளோ பெரிய பிஸினஸ்மேன் நீங்க?”  என்று தலைமையாசிரியர் அவனிடம் கேட்கும் அளவுக்கு. ஆனால் இந்த வெற்றிக்கும் கர்ணன் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது: இப்போதும்கூட பார்வையில் படக்கூடாது, பார்வை விழாமல் தப்ப வேண்டும் என்ற உணர்வு கதை நெடுக இருக்கவே செய்கிறது- இல்லாத அம்மைத் தழும்பு இருப்பதைக் காட்டிலும் ஆறாவடுவாகிறது.
 
பிற்சேர்க்கையாய் ஒரு விஷயம்- கதைசொல்லியின் பெயர் கர்ணன் என்கிற கருணாகரனாக இல்லாமல் ராபர்ட்டாகவோ சையத்தாகவோ சங்கரசுப்ரமணியமாகவோ வேறு எதுவாக இருந்தாலும் இந்த வாசிப்பு பொருந்தும் என்று நினைக்கிறேன். இது சாதீய ஒடுக்குமுறையைக் காட்டிலும் சமூக ஒடுக்குமுறையின் விளைவுகள் உணர்வளவில் உள்ளியல்பாகி வெளிப்பாடு காணும் கதை. ஊர் விலக்கம் குறித்த யதார்த்தம் எதுவாக இருந்தாலும், “எனக்கே ஊரைக் கடப்பதற்கு வெட்கமாக இருந்தது. ஊருக்குள் புது ட்ரஸ் போட்டுக் கொண்டு போவது வெட்கம் பிடுங்கித் தின்னும் விஷயம். அதிலும் பேண்ட் வேறு. யாருமில்லாத நேரமாகப் பார்த்துக் கடந்துவிட வேண்டும்,” என்று நினைக்குமளவு விலக்கப்பட்ட உணர்வுகள் உள்ளவரை, வலிந்து தம்மை முன்னிறுத்திக் கொள்வதும் துலக்கமின்றி மறைய விரும்புவதும் இருக்கவே செய்யும். உணர்வுகள் உள்ளவரை அதன் விளைவுகளும் இருக்கவே செய்யும். இந்த அடிப்படை விலக்க உணர்வுக்கு முரணான எதுவும் கதையில் வெளிப்படவில்லை என்று நினைக்கிறேன், மாறாய் மீண்டும் மீண்டும், சிலபோது தேவையில்லாமலும்கூட, “யாரும் பார்த்துவிடக் கூடாது,” என்ற அச்சமே வெளிப்படுகிறது. 
 
சிறுகதை இங்கிருக்கிறது- கீற்று :: அம்மை – தமிழ்மகன்

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.