எண்ணெய்யும் தண்ணீரும்: விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும்

oldyoungladyபக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கலாம்.  அதில் இருப்பது ஒரு இளம் பெண்ணா அல்லது ஒரு வயது முதிர்ந்த பாட்டியா  என்பது  நீங்கள் படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விஷயம். பூமியில் எவ்வளவு எண்ணெய்யும் எரிவாயுவும் ஒளிந்திருக்கின்றன என்பதும் நாம் அலசும் விதம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலிய விஷயங்களைப் பொறுத்து பாட்டியிலிருந்து இளம்பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறது! நாம் ஐந்தாம் வகுப்பில் தெரிந்து கொண்டதுபோல், இருந்து அழிந்த உயிரியல் எச்சங்கள் பூமிக்கடியில்  புதைந்து போனபின், பூமியின் உள்ளே நிலவும் வெப்பமும், அழுத்தமும் பல்வேறு ரசாயன மாற்றங்கள் வழியே  அவற்றை சமைத்து கச்சா எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்ற புரிதலில் மாற்றம் ஏதும் இல்லை. உருவாவதை விட வெகு வேகமாக நாம் எண்ணெய்யை எடுத்து  சாப்பிட்டுக்கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் எல்லா கிணறுகளும் வற்றிப்போய் எண்ணெய்/எரிவாயு உற்பத்தி நின்று விடும் அல்லது மிகவும் குறைந்து விடும்  என்பதிலும் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் அந்த முடிவு எப்போது வரும் என்பது பற்றிய கருத்து அவ்வப்போது  மாறி விடுகிறது. 1980களில் நான் பிளாட்பார்மில்  பணி புரிந்து கொண்டிருந்தபோது, இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து வருடங்கள்தான் வெட்டி எடுக்க பூமியில் எண்ணெய் இருக்கிறது. அதற்குள்  நமது சக்தி/ஆற்றல் தேவைகளுக்கு  நாம் வேறு ஏதாவது உபாயங்களை உருவாக்கிக்கொள்ளாவிட்டால் அதோகதிதான் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தக்காலக்கட்டம் எல்லாம் முடிந்துபோன நிலையில் இன்று. இன்னும் ஐம்பது வருடங்களுக்கு எண்ணெய் வற்றிவிடாது போல் தெரிகிறது!  இதற்கு  பல காரணங்கள் உண்டு.
உலகே எண்ணெய்க்கு அடிமையாகி இருப்பதால், சென்ற அத்யாயங்களில்  சொன்னபடி எங்கே பீய்ச்சிக்கொண்டு அடிக்கும் என்று உலகம் பூராவும் நாம் அதைத்தேட ஆரம்பித்தோம். பொதுவாக ஒரு பேசினில் (Hydrocarbon Basin) இருக்கும் எண்ணெய்யில் சுமார் நாற்பது சதவீதம் மேலே வந்து சேர்வதற்குள் அடியில் உள்ள அழுத்தம் குறைந்து எண்ணெய் மேலே வரும் வேகம் வெகுவாக குறைந்து விடும். நமக்கிருக்கும் தேவைகளை நினைத்துப்பார்க்கும்போது 60  சதவீதத்திற்கும் மேற்பட்ட எண்ணெய்யை விட்டுவிட முடியுமா என்ன? முடிந்த அளவு அதை பிடித்து இழுத்து மேலே கொண்டுவர பல்வேறு தொழில் நுட்பங்கள் உண்டு.

pumpjack

இந்தத்தொழில்நுட்பங்களிலேயே மிகவும் வயதான ஒன்று பம்ப்ஜாக் (Pumpjack) என்று அழைக்கப்படும் பம்ப்புகள். 1925 வாக்கில் வால்டர் டிரௌட் என்பவர் வடிவமைத்த இந்த பம்ப், நம் ஊர்களில் ஆழ்குழாய் கிணறுகள் வெட்டி, கை பம்ப்புகள் மூலம் தண்ணீர் இறைப்பது போன்ற  டெக்னிக் படிதான் வேலை செய்கிறது.  இந்த  30 செகண்ட் யுட்யூப்  வீடியோ இந்த மாதிரி  பம்ப்புகள் எப்படி  எண்ணெய்யை வெளியே கொண்டுவருகின்றன என்று எளிதாக புரியும்படி காட்டுகிறது.  அமெரிக்காவின் டெக்சாஸ், ஓக்லஹோமா போன்ற மாநிலங்களில் பெரிய ஊர்களுக்கு வெளியே முடிவே இல்லாமல் நீளும் சாலைகளில் நாள் முழுதும் காரை ஓட்டிக்கொண்டு போகும்போது நிறைய இடங்களில் இந்த பம்ப்புகள்  சோம்பேறித்தனமாய் இயங்கிக்கொண்டிருப்பதை சாலையிலிருந்தே பார்க்கலாம். ஏதோ பிரம்மாண்ட சைஸ் குழந்தைகள் சாய்ந்தடம்மா, சாய்ந்தாடு என்று விளையாட நவீன ஓவியங்களின் பாணியில் உருவாக்கப்பட்ட இயந்திரக்குதிரை பொம்மைகள் போல் இவை தோற்றமளிக்கும். குழந்தைகள் ஏதுமில்லாமல் காற்றில் சும்மா ஆடிக்கொண்டிருப்பதாய் நம்மை எண்ண வைக்கும் இந்த பம்ப்புகள்  ஒவ்வொரு குதிரை தலையாட்டலுக்கும் சுமார் முப்பது லிட்டர் எண்ணெய்யை மேலே கொண்டுவரக்கூடியவை. ஆனால் எண்ணெய் வற்றிப்போன கிணறுகளில் விட்டேனா பார் என்று கடைசி வரை சுரண்டுவதுதான் இவற்றின் வேலை என்பதால், பெரும்பாலான பம்ப்புகள் நிறைய எண்ணெய்யை தருவதில்லை. அதே சமயம் இவற்றை அமைப்பதோ, ஓட்டுவதோ  கடலில் ரிக் (Rig) வைத்து கிணறு தோண்டி எண்ணெய் எடுப்பது போல் ரொம்ப பணச்செலவாகும் விஷயமும் இல்லை. எனவே அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்த சுரண்டு கிணறுகளை (Stripper Wells) அமைத்து ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
எக்கச்சக்கமாய் எண்ணெய் தரும் கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் பீப்பாய் எண்ணெய் கிடைக்கக்கூடும் என்று முன்பு பார்த்தோம் இல்லையா? ஆனால் பெரும்பாலான பம்ப்ஜாக் அமைப்புகளில்  ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு நாளைக்கு பத்து பீப்பாய் எண்ணெய் கிடைத்தால் அதிகம்!  ஒரு பீப்பாய் என்பது 158 லிட்டர். நான் சிறுவனாய் இருந்தபோது வரண்டுபோன தருமபுரி மாவட்ட கிணறுகளில் என் அம்மா குடிதண்ணீர் சுரக்க  அரை மணி நேரம் காத்திருந்து ஒரு குடம் தண்ணீர் இறைத்துக்கொண்டு வருவதை பார்த்திருக்கிறேன். அது போல இந்த கச்சா எண்ணெய் கிணறுகளிலும் எண்ணெய் மெதுவாக சுரந்து சேர சில மணி நேரம் காத்திருந்து, பிறகு சிறிது நேரம் இயங்கி அதை தரைக்கு கொண்டுவரும்  பம்ப்புகள்  நிறையவே உண்டு. இந்த மாதிரியான பம்ப்ஜாக் அமைப்புகள் அமெரிக்காவில் மட்டும் நான்கு லட்சத்திற்கு மேல்! இவற்றில் பெரும்பாலானவை ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு பீப்பாய் எண்ணெய் மட்டுமே தந்தாலும், ஒட்டுமொத்தமாய் அவை ஒரு நாளைக்கு ஒன்பது லட்சம் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி செய்து கொடுத்து விடுகின்றன!

இந்தக்கிணறுகளில் பயமுறுத்தும் அழுத்தங்கள் ஏதும் கிடையாது என்பதால் அக்கம் பக்கம் பணியாளர்கள் யாரும் இல்லாத பொட்டைவெளிகளில் இவை பாட்டுக்கு இயங்கிக்கொண்டிருப்பதை நிறைய பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் நீராவியால் கூட இயக்கப்பட்ட இவற்றை இப்போதெல்லாம் இயக்க மின்சார மோட்டார், பெட்ரோல், எரிவாயு அல்லது டீசலில் ஓடும் என்ஜின் என்று எதை வேண்டுமானாலும் உபயோகிக்கிறார்கள்.  மாடுகளை கட்டி இவற்றை இவற்றை ஒட்டாததுதான் மிச்சம்!
இப்படி பம்ப் வைத்து எண்ணெய்யை பிடித்து மேலே இழுப்பது ஒருபுறம் என்றால் மறுபுறம்  தண்ணீர், வாயு போன்றவற்றை மேலிருந்து கீழே அதிக அழுத்தத்தில் அனுப்பி, இருக்கும் எண்ணெய்யை கீழிருந்து மேலே தள்ளுவது இன்னொரு தொழில் நுட்பமுறை. 1980களில் இந்த அமைப்புகளை பற்றி  முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அதெப்படி? பூமிக்கடியில் எண்ணெய் இருப்பது ஒரு டப்பாவிலா? தண்ணீரை மேலிருந்து தரைக்குள் செலுத்தினால் அது பாட்டுக்கு எல்லா திசைகளிலும் கசிந்து ஓடி விடாதா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஆனால் படத்தில் காட்டியுள்ளதுபோல் இறுகிய  பாறைகள், மணல் அடுக்குகளுக்கு இடையே சிக்கியுள்ள எண்ணெய்யை சுற்றிவர அமைக்கப்பட்ட பல தண்ணீர் கிணறுகள் வழியே பல லட்சம் லிட்டர் தண்ணீரை செலுத்திக்கொண்டே இருப்பதன் மூலம்  பேசினில் நிலவும் அழுத்தத்தை அதிகரித்து வெளிக்கொணர்ந்து விட முடிகிறது!

Waterflood

இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு வகையான மாறுபாடுகளும் உண்டு. உதாரணமாக,

  • முதலில் எண்ணெய் எடுப்பதற்காக தோண்டப்பட்ட கிணறுகள் பின்னால் தண்ணீரை உள்ளே செலுத்த உபயோகப்படுத்தப்படுவது உண்டு.
  • ஒரு எண்ணெய் கிணறை சுற்றி நாலு தண்ணீர் செலுத்தும் கிணறுகள் அல்லது நாலு எண்ணெய் கிணறுகளுக்கு மத்தியில் ஒரு தண்ணீர் செலுத்தும் கிணறு என்று தேவைக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்வதும் உண்டு.
  • தண்ணீருக்கு பதில் கார்பன் டைஆக்ஸைடு போன்ற வாயுக்களை உபயோகப்படுத்துவதும் உண்டு.
  • பாக்டீரியா போன்ற கிருமிகள் கீழே போய் எண்ணெய், பேசின், குழாய்கள்  முதலியவற்றை  பாழக்காமல் இருக்க, செலுத்தப்படும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு போன்ற ரசாயனங்களை சேர்ப்பதும் வழக்கம்.
  • குழம்பு நிலையில் இல்லாமல் சற்றே இறுகி இருக்கும் எண்ணெய்யை இளக வைக்க தேவையான ரசாயன சமாச்சாரங்களை தண்ணீர் வழியே கலந்து அனுப்பி, எண்ணெய்யை தாஜா பண்ணுவதும் உண்டு.

இப்படி எல்லா முறைகளையும் உபயோகித்து அடித்துப்பிடித்து இழுத்தால், பாறைகளின் அமைப்பு, அங்கே இருக்கும் எண்ணெய்யின் குணங்கள் முதலியவற்றைப்பொறுத்து அதிகப்பட்சம் 90% எண்ணெய்/எரிவாயுவை தரைக்கு கொண்டு வந்து விடலாம். ஒரு கட்டத்திற்கு பின்னால் தரைக்கு வந்து சேரும் குழம்பில் 95 சதவீததிற்கு மேல் வெறும் தண்ணீரே இருக்கும் நிலை வரும். அப்போது  இதற்கு மேல் லாபகரமாய் இங்கிருந்து எரிபொருட்களை பெற முடியாது என்று முடிவு செய்து கிணறுகளை மூடி விடுவார்கள்.
இதே தொழில்நுட்பங்கள் தரையிலும் சரி கடலில் உள்ள கிணறுகளிலும் சரி ஏறக்குறைய ஒரே மாதிரிதான் உபயோகப்படுத்தப்படுகின்றன. இயங்கும் முறை ஒன்றுதான் என்றாலும், கடலில் இதே தகிடுதத்தம் வேலைகளை செய்வது கடினம். நிறைய செலவும் ஆகும். ஆகையால்  ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு எண்ணெய் எளிதாக கிடைக்கும், எவ்வளவு எண்ணெய் இந்த மாதிரியான இழுபறி முறைகளை பிரயோகிப்பதன் மூலம் கிடைக்கும், அதற்கு இடத்தை பொறுத்து எவ்வளவு செலவாகும் என்று ஆய்ந்தறிந்து அதன் பின்னரே வேலையில் இறங்குவார்கள். ஓ‌என்‌ஜி‌சி  பராமரிக்கும் பிளாட்பார்ம்களிடையே இந்த மாதிரியான தண்ணீரை உள்ளே செலுத்தும்  கிணறுகளும் (Water Injection Wells/Platforms) நிறைய உண்டு. 1980களிலேயே பேசினில் இருந்த அழுத்தம் குறைய ஆரம்பித்ததால், இந்த கிணறுகளை அமைத்து தண்ணீரை பம்ப் செய்ய ஆரம்பித்தோம். நான் அங்கே பணிபுரிந்த வருடங்களை  பாம்பே ஹை (Bombay High) பிளாட்பார்ம்களின் பொற்காலம் என்று ஒரு பாசத்துடன் என்னை நினைக்கத்தூண்டும் வகையில்,  1986-89 வருடங்களில் நாங்கள் ஒரு நாளைக்கு நாலு லட்சம் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு தந்து கொண்டிருந்தோம். அதன்பின் உற்பத்தி குறைந்து கொண்டே போய்  2000க்கு அப்புறம்  ஏறக்குறைய சரிபாதியாய் தினசரி உற்பத்தி இரண்டு லட்சம் பீப்பாய்களை நோக்கி போய் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களில் புதிய கிணறுகள் வெட்டியும், தொழில்நுட்பங்களை தொடர்ந்து புதுமை படுத்தியும் திரும்பவும் தினசரி உற்பத்தியை மூன்று லட்சம் பீப்பாய்கள் வரை அதிகரித்திருக்கிறார்கள். அதைத்தவிர எரிவாயு உற்பத்தி, இந்தியாவின் கிழக்கு, தெற்கு பகுதிகளில் இருக்கும் எண்ணெய் வயல்களை உபயோகித்தல் போன்ற  விஷயங்கள் வழியே மொத்த உற்பத்தியை பெருக்க முயற்சிகள் தொடர்கின்றன. இப்படி உற்பத்தி குறைவதும், தண்ணீரை உள்ளே அனுப்பி உற்பத்தியை பெருக்க முனைவதும் உலகெங்கிலும் உள்ள பழக்கம்தான். அருகிலுள்ள படம் பாம்பே ஹை போலவே 1980களில் இருந்து இன்றும் இயங்கிவரும் நார்வேயை சேர்ந்த வட கடலில் இருக்கும் ஈகோஃபிஸ்க் (Ekofisk) பிளாட்பாரத்தினுடையது. 1987லேயே ஆரம்பித்துவிட்ட தண்ணீர் செலுத்தும் படலத்தை, சென்ற ஒன்றிரண்டு வருடங்களில் இன்னும் அதிகரித்து எண்ணெய் உற்பத்தியை பெருக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
WIP_Norway
இந்த விடாக்கண்டன், கொடாக்கண்டன் தொடர்ச்சியின் அடுத்த பெரிய  விஷயம் ஃப்ராகிங் (Fracking) என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம். ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பியிருக்கும் இந்த முறை, ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் (Hydraulic Fracturing) என்பதன் சுருக்கம். இது வரை நாம் பார்த்து வந்த எண்ணெய்/எரிவாயு உற்பத்தி முறைகள் அவை எந்த பேசினில், ஒரு தொட்டியில் (Tank) இருப்பதை போல் அடைந்து இருக்கின்றன என்பதை கண்டறிந்து ஒரு ஸ்ட்ரா துளை போட்டு பீய்ச்சி அடிக்க வைப்பது அல்லது உறிஞ்சுவது போல் அவற்றை வெளிக்கொணருவதுதான்.
அப்படி வசதியான தொட்டிகளில் இல்லாமல் நிறைய எண்ணெய்யும் வாயுவும் பாறைகளில் முற்றிலும் கலந்து மிகச்சிறிய துளிகளாக உட்கார்ந்திருக்கவும் செய்கிறது. இதை எப்படி பிரித்தெடுப்பது என்பது சரியாக தெரியாமல் இருந்தது. கடந்த பத்து வருடங்களில் ஒரு பீப்பாயின் எண்ணெய் விலை நூறு டாலருக்கு மேலே போனபோது, அமெரிக்க தொழில் நிபுணர்கள் இதற்கான ஒரு புதிய செயல் முறையை உருவாக்கினர். ஒரு வலைதளத்தில் நான் பார்த்த கீழே உள்ள படம் இந்த செய்முறையை நன்கு விளக்குகிறது. இதன்படி 5000 அடி தரையில் நேராக தோண்டிவிட்டு பின் கிடைமட்டமாக பல ஆயிரம் அடிகள் குடைந்து ஒரு அமைப்பை செய்து கொள்கிறார்கள். அதன்பின் இந்த நீண்ட துளைக்குள் மிக மிக அதிக அழுத்தத்தில் எக்கச்சக்கமாக பல ரசாயனங்கள் கலந்த தண்ணீரை அதிக வெப்பத்துடன் உள்ளே செலுத்தி எண்ணெய்/எரிவாயு கலந்த அந்த பாறைகளை நிறைய விரிசல்கள் விடும்படி உடைக்கிறார்கள். இதற்கு ஏன் ஃப்ராகிங் என்ற பெயர் சூட்டப்பட்டது என்று இப்போது புரிந்திருக்கும். இப்படி செய்யும்போது பாறைகளில் மாட்டிக்கொண்டிருக்கும் எண்ணெய்யும் எரிவாயுவும் விடுபட்டு இந்த தண்ணீரில் கலந்து வெளிவந்து விடுகிறது. இந்தக்கலவயை வெளியே கொண்டுவந்து எண்ணெய் எரிவாயுவை பிரித்தெடுக்கிறார்கள்.

fracking

அமெரிக்காவில் நான் வாழும் பென்சில்வேனியா மாநிலம் மற்றும் வட டகோட்டா  (North Dakota) போன்ற  மாநிலங்களில் செழித்து வளரும் தொழில் இது. பென்சில்வேனியா  மற்றும் அண்டை மாநிலங்களின் தரைக்கடியே உள்ள மார்ஷெல்லாஸ் ஷேல் (Marcellus Shale) மற்றும் டகோட்டா பகுதிகளில் உள்ள பாக்கன் ஷேல் (Bakken Shale) என்ற இரு பாறை தொகுதிகளில் இந்த மாதிரி எண்ணெய் நிறைய இருப்பது ரொம்ப நாட்களாக தெரியும் என்றாலும், அதை வெளியே கொணருவது எண்ணெய் விலையின் காரணமாகவும், தொழில் நுட்ப முன்னேற்றங்களாலும் இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது.  இருந்தாலும் இதில் பல பிரச்சினைகள் உண்டு. இந்த முறையில் சாதாரண எண்ணெய் கிணறுகளில் உபயோகப்படுத்துவதோடு ஒப்பிடும்போது தண்ணீர் செலவு நூறு மடங்கு அதிகம். அதிலும் உபயோகிக்கப்பட்ட தண்ணீர் வெளியே வரும்போது அதில் பலவித நச்சுப்பொருள்கள் கலந்திருக்கும். அதை எப்படி சுத்தம் செய்வது, குடிநீரோடு கலந்துவிடாமல் பாதுகாப்பது என்பது போன்ற விவாதங்கள் காதைப்பிளக்கின்றன. இந்த முறையில் உபயோகப்படுத்தப்படும் ரசாயனப்பொருட்கள் என்னென்ன என்றும் நிறுவனங்கள் சொல்ல மறுக்கின்றன. அவை தொழில் ரகசியம், சொன்னால் எங்கள் தொழில் படுத்துவிடும் என்று நிறுவனங்கள் சொன்னாலும், அது மக்கள் மனதில் பீதியை கிளப்பி இருக்கிறது.  இம்முறையில் எண்ணெய் எடுக்க தேவையான அழுத்தமும் மிகவும் அதிகமாக 10,000 PSI வரை போவதால், இது நிலத்தையே உலுக்கி, இருக்கும் எண்ணெய்யை அலசி பிடுங்குவதற்கு ஈடு. இது ஆங்காங்கே சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது! இதற்கெல்லாம் மேலாக, எங்கு பார்த்தாலும் இப்படிப்பட்ட கிணறுகள் வெட்டப்பட்டு, எரிவாயு உலுக்கி எடுக்கப்படுவதால், பாறைகளில் இருந்து விடுபடும் மீதேன் போன்ற வாயுக்கள் குடிதண்ணீருடன் கலந்து வீட்டு குழாய்களை  அடைந்து விடுகின்றன! சமயத்தில் குழாய் நீரை திறந்துவிட்டு நெருப்பை கிட்டே கொண்டுசென்றால் அது பற்றி எரிகிறது! இந்த வீடியோவில் ஒரு நிமிடம் 45 வினாடிகளுக்கு அப்புறம் நடப்பதை பாருங்கள்!

சுற்றுப்புற சுகாதாரத்தில் ஈடுபாடு கொண்ட பல அமைப்புகள், இந்த மோசமான முறையில் நிறைய கிடைக்கும் எண்ணெய், சூரிய ஒளி, காற்று முதலியவைகளில் இருந்து நமக்கு தேவையான ஆற்றலைப்பெறுவதற்கு நாம் செய்ய வேண்டிய ஆய்வுகளையும் தாமதப்படுத்துகிறது என்று கூக்குரல் எழுப்புகின்றன.
ஆனால் இந்த முறையில் கிடைக்க ஆரம்பித்திருக்கும் எண்ணெய்யும் எரிவாயுவும் பல சாதாரண குடும்பங்களுக்கு தங்கள் நிலத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் நிறைய பணம் பண்ண வாய்ப்பு கொடுத்திருக்கிறது! Promised Land என்ற இரண்டு வருடங்களுக்கு முன் வந்த திரைப்படம் பென்சில்வேனியாவின் சிறுநகர்களில் இந்த தொழில்நுட்பத்தினால் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தினை படம் பிடித்து காட்டியிருக்கிறது. ஜூராசிக் பார்க்/வேர்ல்டு மாதிரி இது ஒன்றும் பெரிய பிளாக்பஸ்டர் படம் இல்லை என்றாலும், நான் அடிக்கடி பார்க்கும் சின்ன ஊர்களையும், அங்கு வாழும் மக்களையும், வழக்கு முறைகளையும், பிரச்சினைகளையும் ஃப்ராகிங் பின்னனியில் எளிதாக புரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் பார்த்து வைக்கலாம். இதே தொழில்நுட்பத்தால் வட டகோட்டா மாநிலத்தின் வேலை  இல்லா திண்டாட்டம் காணாமல் போய், மாநிலத்தின் வருவாய் தேவைக்கு மேல் போக ஆரம்பித்தது!  இப்படி குடும்ப, மாநில அளவுடன் கூட நிற்காமல், இந்த ஃப்ராகிங்கின் தாக்கம் உலகையே எப்படி உலுக்கிக்கொண்டிருக்கிறது என்று அடுத்து ஆராய்வோம்.
(தொடரும்)

0 Replies to “எண்ணெய்யும் தண்ணீரும்: விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.