கடலில் எண்ணெய்க் கசிவு

oilspill

கடந்த மே மாதத்தின் மத்தியில் அமெரிக்க நகரான சாண்டா பார்பராவில் கடலில் எண்ணெய்க் கசிவு கலப்பது பற்றியதான செய்திகள் பரபரப்பையூட்டின. 1969 ல் இதே நகரில் ஏற்பட்ட பெரும் கசிவு போல் இப்போதும் விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற கவலை இருந்தது. 1969 ல் ஏற்பட்டது,  யுனொகல் (Unocal) என்கிற ஒரு எண்ணெய் எடுக்கும்  நிறுவனத்தின் பாதுகாப்பு முறைகள் சரியாக இல்லாததால் ஏற்பட்ட கசிவு. மிகப் பிரமாண்டமான அந்த எண்ணெய்க் கசிவு கடலில் கலந்ததால், ஏகப்பட்ட கடல் வாழ்  உயிரினங்கள் அழிந்ததோடல்லாமல், இதர பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் பாதக விளைவுகளையும் ஏற்படுத்தியது. சுமார் 3 மில்லியன் காலன் அளவு எண்ணெய் கடல் நீரில் கலந்தது.  35 மைல் வரை கலிபோர்னியா மாகாணத்தின்  பசிபிக் கரைகளில் மிதந்த அந்த எண்ணெய், பலவித கடல் வாழ்  உயிரினங்களையும் தாவரங்களையும் மிகவும் பாதித்தது.
அன்று அந்தக் கசிவை நிறுத்த ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. அந்த 1969 ம் வருடக் கசிவுதான் அமெரிக்காவின் எண்ணெய் எடுக்கும் முறைகளில் பலவித கட்டுப்பாடுகளும்  மாற்றங்களும் உருவாகக் காரணமாயிற்று. சுற்றுச் சூழல் விழிப்புணர்வும்   அதிகமானது அப்போதிலிருந்துதான் என்பார்கள்.
தற்போதும்  அதே நகரில் அதே போல் ஒரு எண்ணெய்க்  கசிவு ஏற்பட்டதும் பழைய விளைவுகள் அனைவருக்கும் நினைவு வந்தன. இந்த முறை கசிவு, எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய்களிலிருந்து ஏற்பட்டது. இது அந்தப் பழைய கசிவு போல் அதிகம் இல்லை. 9 மைல் அளவு கடலில் எண்ணெய் மிதந்தது. தொழில் நுட்பம் அதிகரித்துள்ள இந்தக்  காலக்கட்டத்தில், இந்தக் கசிவு வெகு விரைவிலேயே – சில மணி நேரங்களிலேயே – கட்டுபடுத்தப் பட்டுவிட்டது. ஆனால் அதற்குள் கடலுள் கலந்த எண்ணெயின் அளவு 105,000 காலன்கள் !  இப்படிப்பட்ட கசிவுகளை கட்டுப்படுத்த தொழில் நுட்பம் பெரிதளவில் முன்னேற்றமடைந்திருந்தாலும், இந்த முறை கசிவு அகற்றும் வேலையில் ஈடுபட்டவர்கள் பழைய பாரம்பரிய  முறைகளையே பயன் படுத்தினார்கள்.
இந்தச் செய்தியைப் படிக்கும்போது 1991 ல் நடந்த வளைகுடாப்  போருக்குப் பின்னர் இது போல் ஏற்பட்ட கசிவு பற்றி எழுதியது  என் நினைவுக்கு வந்தது. பெர்ஷியன் வளைகுடாவில் ஏற்பட்ட அந்தக் கசிவு அரபிக் கடலில் கலந்து, இந்தியாவையும் இரண்டு வருடங்களில் பாதிக்கும் என்று அப்போது சொல்லப்பட்டது. அந்தக் கசிவினால் பாதிக்கப்பட்டு, உடல் முழுவதும்  எண்ணெய்  படர்ந்து இறக்கைகளை, உடலை நகர்த்தக் கூட முடியாமல் இருந்த பல கடல் வாழ் உயிரினங்களின் படங்கள் அப்போது பத்திரிகைகளில் நிறைய வெளியாயின. பார்க்க மிகப் பரிதாபமாக இருந்தது.
இரண்டு வருட முடிவில் அந்தக் கசிவின் நிலைமை என்னவென்று அறிய முற்பட்ட கட்டுரை இது.

வருடம் 1993

வளைகுடாப் போரின் சமயத்தில் பெர்ஷியன் வளைகுடாவில் எண்ணெய்க் கிணறு வெடித்து, ஏற்பட்ட கசிவு இரண்டு வருடங்களில் அரபிக் கடலில் கலக்கும், இந்தியாவுக்கு அதனால் பலவித சுற்றுச்சூழல்  பாதிப்பு ஏற்படும் என்று பேசப்பட்டது. பலர் இதை நகைச்சுவையாக, ‘ இந்தியாவின் எண்ணெய்ப் பிரச்சனை தீர்ந்துவிடும், மற்ற நாடுகளுக்கும் எண்ணெய் விற்று இந்தியா பணக்கார நாடாகிவிடும் என்றெல்லாம் ஜோக்குகள் சுற்ற ஆரம்பித்தன.
ஆனால் கடலோரப் பாதுகாப்பு படை, கடல் வளத்துறை (Department of Ocean Development) அதிகாரிகள், சுற்றுச்சூழல் வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தக் கசிவின் போக்கை உன்னிப்பாக கவனித்து வந்தார்கள்.  இன்றைய நிலை என்ன என்பது பற்றி கடல் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார், “கசிவு நிலைமையைத் தெரிந்து வருவதற்கு. வளைகுடாப் பகுதிக்கு ஒரு கப்பல் அனுப்பினோம். நல்ல வேளையாக கசிவு அந்தப் பகுதியிலேயே நின்று விட்டது. அரபிக் கடல் வரையிலும் வரவில்லை. அதனால்  இந்தியாவுக்கு பாதிப்பும் தற்போது  இல்லை. கடவுள் அருளும், கடல் அலைகளும் கசிவு நம்மை அணுகாதவாறு பார்த்துக்கொண்டுவிட்டன என்றார்.
அன்று பெரும்பாலானக் கசிவை அமெரிக்கா எரித்தே தீர்த்தது.
ஆனால் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் அபாயம்  முழுவதுமாக  நீங்கவில்லை. பொதுவாக இப்படிப்பட்ட எண்ணெய்க் கசிவுகள்  மீண்டும் மீண்டும் வரக்கூடியன. எண்ணெய்க் கிணறுகள் வெடிப்பு, குழாய்கள் மூலம் ஏற்படும் கசிவு தவிர எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல்கள், அல்லது மூழ்கிவிடும் கப்பல்களின் டாங்க்கில் இருக்கும் எண்ணெய்  என்று கசிவின் காரணங்கள் பல இருக்கும்.
1989 ல் எக்சான் வால்டெஸ் (Exxon Valdez) என்ற கப்பல் பவளப் பாறைகளில் மோதியதில் ஏற்பட்ட  விபத்தில் பெட்ரோலியம்   கடலில் கொட்டியது.  அப்படிக் கொட்டிய எண்ணெயின் அளவு, 11 மில்லியனிலிருந்து 38 மில்லியன் காலங்கள் வரை இருக்கும் என்று சொல்லப்பட்டது. சிறிதும் பெரிதுமாக இப்படி கடலில் எண்ணெய்க் கொட்டுவது நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. கசிவு சிறியதாக இருந்தால் விரைவிலேயே சிறு சிறு பாகங்களாய் கடலிலேயே சிதறி நீர்த்து விடும். கடலில் கொட்டும் எண்ணெயின் அளவு அதிகமாய் இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவதும் நீக்குவதும்  கடினம்.
இந்தியக் கடல் வளத் துறை ஆய்வின்படி, அரபிக் கடலில்  சுமார் 324 கசிவுகள்  ஓர் ஆண்டில் நிகழ்ந்து கொண்டுதான்  இருக்கின்றன. அவற்றில் 135 கசிவுகள் பல்வேறு அளவில்  இந்தியக் கடல் மற்றும்  கடலோர வாழ்க்கையை பாதிக்கும் என்று கடலில் எழும்பும் அலைகளை கவனித்து அனுமானிக்கப்படுகிறது. நடுக் கடலிலேயே  கசிவு அடங்கிவிட்டால் அல்லது கட்டுக்குள் நின்றுவிட்டால் பாதிப்பு குறைவாக இருக்கும். கரைக்கு அருகில் பல தாவர மற்றும் இதர உயிரினங்கள் அதிகம் இருக்கிறபடியால் கரைக்கு அருகில் அந்தக் கசிவு ஒதுங்கும்போது  வரும் பாதிப்பு அதிகம். அதனால்  கசிவு ஏற்பட்டு 15 நாட்களுக்குள் கரையில் ஒதுங்கும் எண்ணெயால் பாதிப்பு அதிகம். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரபிக் கடலில் ஏற்படும் கடல் காற்றால் இந்தியாவின் மேற்குக்  கரைகளில் இந்தக் கசிவுகள் ஒதுங்கும் அபாயம் நிறைய. ஆனால் அந்தக் கசிவுகள் அனைத்துமே  அபாயம் என்று சொல்ல முடியாது. கசியும் எண்ணெய்யின் அளவைப் பொறுத்தது அது.
சரி; கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள  கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும்  பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதோடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.
கடல் பறவைகளும், திமிங்கலம்  போன்ற குட்டி ஈனும் உயிரினங்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். அவற்றின் இறக்கைகளிலும், உடல் மேலும் தண்ணீர் ஒட்டாமல் இருக்கும் வகையில் இயற்கையிலேயே அமைப்பு அமைந்துள்ளது. அவற்றின் மீது எண்ணெய் படரும்போது இந்த இயற்கை மேல் பூச்சுகள்  அழிந்து இந்த உயிரினங்கள் தங்கள் உடலின் மேல் எந்த பாதுகாப்புமின்றி இயற்கையின் தட்ப வெட்ப நிலையை சமாளிக்கும் சக்தியின்றி தத்தளிக்கும். தவிர பெட்ரோலியத்தின்  நச்சுப்பொருட்கள் உடலின் உள்ளே செல்வதால் இந்த உயிரினங்களின் வாழ்  முறையிலும் இயற்கைக்கு மாறாக  பலவித மாற்றங்கள் ஏற்படும். இந்த உயிரினங்களுக்கு பிறக்கும் அடுத்த தலைமுறைக்கு பலவித உடல் நலக்  கூறுகள் இருக்கும்.
1981ல் பிரிட்டனில் நடந்த மற்றொரு ஆய்வின்படி, கடலுக்கடியில் இருக்கும் தாவர வகைகளுக்கும் இதர மீன் வகைகளுக்கும் இத்தனை பாதிப்பு இருக்காது என்று சொல்லப்படுகிறது. 1967 ல் நடந்த ஒரு கப்பல் விபத்தில் வெளியான கசிவில் பில்சார்ட் மீன் என்ற மீன் வகையின் முட்டைகள் பாதிக்கப்பட்டாலும் அடுத்த தலைமுறை மீன்கள்  பிழைத்தன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
உயிரனங்கள் தவிர கரையோரம் இருக்கும் சதுப்பு நிலக் காடுகளும் இதர கரையோர இயற்கை சுழற்சியும்  ( ecosystem) பாதிக்கப்படும். ஆனால் சில சமயம் இயற்கையான  தர வீழ்ச்சி முறையில் இந்தக் கசிவின் பாதகங்கள் மறையலாம்.  கசிவின் சில கனமான பொருட்கள் கெட்டியாக உருண்டு திரண்டு ஒரு ஜவ்வு போன்று  கடலின் இதர  பொருட்களோடு ஒன்றாக மாறிவிடலாம். கெட்டியாக மாறிய இந்தப் பந்து போன்றவை நாளடைவில் தரையில் ஒதுங்கும்போது அவற்றை எடுத்து நீக்கி விடமுடியும்.
கசிவை அகற்றும் பணி ஒரு பிரமாண்டமான செயல்பாடு. பெரிய பெரிய பலூன் (booms) போன்றவற்றை எண்ணெயை சுற்றிலும் மிதக்கவிட்டு, என்ணெய் மேலும் பரந்து மிதக்காமல் கட்டுபடுத்துவது முதல் பணி. அதன் பின் மேலே படர்ந்து இருக்கும் எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக தயிரில் வெண்ணெய் எடுப்பதுபோல் இயந்திரங்கள் மூலம்  மேலாக லாவகமாக எடுக்க ஆரம்பிக்க வேண்டும். இவற்றைப்  பெரிய பெரிய பீப்பாய்களில் சேர்த்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவார்கள்.
ஆனால் கடல் காற்றும் அலையும் பெரிதாக இருக்கும் பட்சத்தில் இந்த முறையில் அகற்றுவது கடினம். அதனால் எண்ணெயைக் கலைக்கும் ரசாயன  ஸ்ப்ரே உபயோகித்து  சிறு சிறுத் துகள்களாக மாற்றிக் காற்றில் கலக்க அல்லது கடல் நீரில் சிதற வைத்து இயற்கை தர வீழ்ச்சி நடக்க வழி செய்வது ஒரு முறை. ” இது ஒரு சோப்பு டிடர்ஜெண்ட் உபயோகிப்பது போன்ற ஒரு முறை. ஆனால் எண்ணெய்க் கசிவை  விட இந்த ரசாயனப் பொருட்கள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. மூன்றாவது வழிமுறை, அந்த வளைகுடா கசிவில் அமெரிக்கா செய்ததுபோல் எண்ணெயைக்  கடலிலேயே எரித்து விடுவது, ” என்கிறார் அந்த கடல்வளத்துறை அதிகாரி.
தீர்வு முறைகள் எதுவானாலும், கசிவுகளினால் ஏற்படும் அபாயம் நிறையவே என்பதால் உலகெங்கிலும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கசிவு ஏற்படாமல் இருக்கவும், நடந்துவிட்டக் கசிவுகளை பாதிப்பு இல்லாமல் அகற்றவும் பலவித ஏற்பாடுகளை அரசாங்கள் முனைந்து செயல் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பொருளாதாரத்தில் உலகம் வேகமாக  முன்னேறி வரும் இந்தக் காலக்கட்டத்தில் இயற்கையின் வரப் பிரசாதங்களை தொலைத்துவிடாமல் இருப்பதும் மிக அவசியம்.

வருடம் 2015

தற்போது எண்ணெய்க் கசிவை  அகற்ற பல நவீன உத்திகள் கையாளப்படுகின்றன. எண்ணெயை சிதற அடித்து இயற்கை தரவீழ்ச்சி ஏற்படுத்த முனையும் ஸ்ப்ரே முறையில்  ரசாயனப்  பொருட்களுக்கு பதிலாக  இயற்கையான ஆர்கானிக் பொருட்கள்  மூலம் செய்ய முனைகிறார்கள். இன்னும் இந்த முறையில் எண்ணெய்க் கசிவை அகற்ற  ஆராய்ச்சிகள்  நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. எண்ணெய்க் கசிவின் அருகில் பறவைகள் வந்துவிடாமல் அவற்றைப் பாதுகாக்க அவற்றை பயமுறுத்தி விரட்டும் வழி வகைகளும் பின்பற்றப்படுகின்றன. கசிவை வாரி எடுக்க இன்னும் நூதனமான இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன.
 

0 Replies to “கடலில் எண்ணெய்க் கசிவு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.