வாசகர் எதிர்வினை

icon
Dr M S Shri Lakshmi
Dear Editor,
I  enjoyed Mr. Desikan’s essay about the great literary personality Mr Asokamithran.  My heartiest congratulations to Mr Desikan, for sharing this rare essay about Mr Asokamithran.
Thank you
With regards,
Dr M S Shri Lakshmi.
icon
ஆர்.அபிலாஷ்
அழகுநம்பி அவர்களுக்கு,
சொல்வனத்தில் டேவிட் ஷெப்பர்ட் பற்றின அஞ்சலி படித்தேன். அருமையான கட்டுரை. போலியான பாவனைகள் இல்லை என்பதே இக்கட்டுரையின் முக்கிய சிறப்பு. அடுத்து ஒரு புன்னகையுடனான மீள்பார்வையாக உள்ளது இதன் உத்தேசம். இழப்பைப் பற்றி பேசுகையில் சமநிலைக்கு இந்த நகைச்சுவை நல்லது. உங்கள் நினைவுகளிலிருந்து ஆரம்பித்து குறிப்பான புறவய தகவல்கள் தந்து அருமையாக ஒருங்கிணைத்துள்ளீர்கள். ”விளையாண்ட நாட்களிலேயே அவர் … போட்டியின் ‘சிறந்த இருக்கை’ என நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு நடுவர் தொழிலுக்கு வந்தார் டேவிட் ஷெபர்ட்.”: இந்த சித்திரம் எத்தனை லாவகமாக அமைந்திருக்கிறது. உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசிக்க விரும்புகிறேன்.

Regards
R.Abilash
http://thiruttusavi.blogspot.com/
icon
வா.மணிகண்டன்
அன்பின் ஆசிரியருக்கு,

வணக்கம்.

சொல்வனம் பற்றி நண்பர் பாவண்ணனோடு பேசிக் கொண்டிருந்தேன். அவர் தங்களின் செயல்பாட்டை மிகுந்து பாராட்டினார்.

இன்றிரவில் பொறுமையாக வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மிகச் சிறப்பான வடிவமைப்பும் நல்ல படைப்புகளுமாக சொல்வனம் இருக்கிறது.

வாசிப்பதற்கான பல தளங்களை கொடுப்பதும் பாராட்டுதற்குரியது.

குறையெனில் வெகு சில படைப்புகள் மட்டும் (குறிப்பாக இலக்கியம் பகுதியில்) சற்றே வலுவின்மையுடன் இருக்கின்றன. அவற்றை தவிர்ப்பது சொல்வனத்தின் செறிவை அதிகமாக்கும் என்பேன்.

பிரியத்துடன்,
வா.மணிகண்டன்.

icon
ஜெயக்குமார்

அன்புள்ள ஆசிரியருக்கு,கடந்த இரு இதழ்களை இனிமேல்தான் படிக்க வேண்டும். இந்தியாவில் பயணமாய் இருந்ததால் படிக்க இயலவில்லை.

இந்த இதழ் குறித்த எனது கருத்துக்கள்:

”கார்கோகல்ட் இந்துத்வா” எனும் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை இந்து இயக்கங்களின் சிறுபிள்ளைத்தனமான பெருமைகளை நோக்கி ஓடும், அல்லது யார் சொல்வார்கள் எனக் காத்திருக்கும், பழம்பெருமை பேசுபவர்களின் மனநிலையில் இருப்பதைப் போன்ற சித்திரத்தை அளிக்கிறது.

ஏன் நாசாவை தேர்ந்தெடுக்க வேண்டும், மேலும் யஹோவா சாட்சிகளைப் பற்றிய கருத்துக்கள அனைத்தும் அருமை. குறிப்பாய் இதுபோன்ற இயக்கங்களைப் பற்றிய விளக்கமாக அரவிந்தன் எழுதியுள்ள // என்றோ அடிநாளில் விபத்து போல மறைந்த ஒரு பெரும் நாகரிகம் அடைந்த ஞானம், நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் முன்னேறிய தொழில்நுட்பம் ஆகியவற்றையே நாம் இன்று சிறிது சிறிதாக மீண்டும் கண்டடைகிறோம் என்பதே இந்த இயக்கங்களின் அடிநாதம்// என்ற விளக்கம் எவ்வளவு பொருத்தம்.. அருமையான கட்டுரை.

—————–

சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற ரைமிங்கில் தலைப்பு வைக்கப்பட்டுள்ள ”ஆட்டோவில் போன அசோகமித்திரன்” கட்டுரை ஆசிரியர் தமிழகத்தில் எழுத்தாளராய் வாழ்வதில் உள்ள அபாயங்களை அசோகமித்திரன் வாயிலாக சொல்லி இருக்கிறார். அசோகமித்திரன் பற்றிய எளிய அறிமுகமாகவும் இருக்கிறது கட்டுரை. அசோகமித்திரன் பற்றிப் பலர்கூறக்கேட்டதால்தான் அவரைப்பற்றியே தெரியவந்திருக்கிறது. இனி அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பதே தெரியாமல் போகக்கூடும்.. ந்மது இலக்கிய வாசனையும், இலக்கிய எழுத்தாளனை மதிக்கும் விதமும் அப்படி.

நாடகம் உருவான நாடகம் அருமை.

—————–

ப்ரவாஹனின் கட்டுரை ” வள்ளுவரும் ஒழுக்கமும்” கட்டுரை குறித்து:

இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தில் வள்ளுவர் பண்டமாற்றுப்பொருளானதில் உள்ள கேவலத்தால் மனம் நொந்து எழுதியதுபோல எழுதிவிட்டு , தமிழக முதல்வரை “வாழும் வள்ளுவர்” என்ற அடைமொழியால் அவர் அழைக்கப்படுவதைக் கிண்டலடித்துவிட்டு இறுதியில் திருவள்ளுவர் ஜாதிகள் இருக்கவேண்டும் என்று சொன்னார் என்பதையும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்து(?) , வள்ளுவர் ஒரு பெண் இனவிரோதி என்பதை அப்படியே போகிற போக்கில் சொல்லிவிட்ட தோரணையில் கட்டுரையை முடித்திருக்கிறார் ப்ரவாஹன்.

இந்தக் கட்டுரைமூலம் பிரவாஹன் சொல்ல வருவது ஜாதியைத் தூக்கிப்பிடித்த வள்ளுவனுக்கு தேவைக்கு அதிகமாக மரியாதை தரப்படுகிறது என்பதா? அல்லது திருவள்ளுவர் எழுதியது எல்லாம் பிரவாஹனின் எழுத்துக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்பதா?

தமிழகத்தில் பழங்கால எழுத்துக்கள் அனைத்தும் பூட்டிவைக்கப்படவேண்டியவையே தவிர படிக்கப்பட வேண்டியவை அல்ல என்பதே தமிழகத்தை இதுவரை ஆண்ட மற்றும் ஆண்டு வருகிற திராவிடத் தலைவர்களின் மனநிலை. அதில் விமர்சனம் என்பது திராவிடத்துரோகம். பிறரைத் தவறாக மதிப்பீடு செய்வதன் மூலமே தன்னை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள முனைவது அவர்களது குணாதிசயங்களில் ஒன்று. இக்கட்டுரையும் அவர்களது மனநிலையிலேயே அல்லது அவர்களது அலைவரிசையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பது எனது கருத்து.

—————–

நடுக்கடலுக்குப் போனாலும்… நாகரத்தினம் கிருஷ்ணா.

அருமையான கதை. கிராமப்புறச் சூழலில் ஜாதிவெறி தலைவிரித்தாடும் நிலையில் இப்படி எப்பாடு பட்டாவது ஏதேனும் ஒரு கட்சியின் செயலாளர், பொருளாளராக ஆகிவிடத் துடிக்கும் இதுபோன்ற எண்ணற்ற கிராமப்புற இளைஞர்க்ளைக் கன்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது கதை. கட்சிகளில் பொறுப்பிற்கு வருவதற்கு முனர் எவ்வலவு செலவழிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஒரு சிறிய பதவிக்காக எத்தனைபேர் போட்டி என்பதும் அதில் பணம் இருப்பவனே பதவிக்கு வர இயலும் என்பதும் நிதர்சனம் எனினும் இக்கதையில் மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. கடைசியில் குறைந்தபட்ச மரியாதைக்கு ஆயிரமாவது தேற்ற எண்ணும்போது வீட்டிற்கு வருகிறது இலவச டீ.வி.

——————-

என் சொல்லால் உனக்கொரு முத்தம் கவிதை நன்று. எனக்கு இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களின் பிடியில் அல்லலுறுவதை நினைவூட்டியது இக்கவிதை..

——————–

விழப்போகிறது – ராமன்ராஜா.

வழக்கம்போல அருமையான கட்டுரை.. எரிகற்கள் விழும்போதெல்லாம் பச்சைமரத்தைப் பார்க்கவேண்டும் என்பதே எனது பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்தது. ஆனால் அவைகள் பூமிப்பந்தையே அழித்துவிடும் அபாயம் கொண்டவை மற்றும் அதன் சாத்தியங்கள் இன்றும் இருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது உலகையே ஒட்டுமொத்தமாகக் கட்டியாள நினைக்கும் சக்திகளை நினைத்தால் சிரிப்பாய்த்தான் வருகிறது.

அட்டகாசமான கட்டுரை. ராமன்ராஜாவிற்கு பாராட்டுக்கள்.

——————–

பப்லுவின் ஒவ்வொரு கருத்துப்படமும் ’அட’ சொல்ல வைக்கின்றன. அறிவில் ஒளிரும் நமது இளைய தலைமுறையை கண்முன் நிறுத்துகிறார் கருத்துப்படங்களாக.

———————

111 – அழகுநம்பி

அருமையான அஞ்சலி. அவர் ஒற்றைக்காலில் நிற்பதற்கான காரணம் இன்றைக்குத்தான் தெரிந்தது. நான் ரொம்ப நேரமாய் நிற்பதால் கால்வலிக்காக அப்படி நிற்கிறார் என நினைத்ததுண்டு. இத்தனைக்கும் எங்கள் தெருவில் கிரிக்கெட் தெரிந்த பலரில் நானும் ஒருவன். 🙂 நல்ல அஞ்சலி.

ஜெயக்குமார்