kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்


ஜிஹாதி ஜான்

Jihadi_John

இந்தச் செய்தி அத்தனை அதிசயமானதே அல்ல. மேற்கின் பல நாட்டுப் பல்கலைகளில் மார்க்சியர்கள் சமூக ஆய்வுத் துறைகளில் பதவிகளைப் பிடித்துப் பல பத்தாண்டுகள் ஆயின. இந்தியாவின் முக்கியப் பல்கலைகளிலும் இடது சாரிகளும், மார்க்சியர்களும் தவிர வேறு கட்சிப் பார்வையுள்ளவர்களோ, கருத்தியல் சார்பில்லாதவர்களோ, வலது சாரியினரோ, இந்து என்று தம்மைக் கருதுபவர்களோ பதவியில் இருப்பது அதிசயமாகவே இருக்கும். இப்படி முழு இடதுசாரி, மார்க்சியர்/ முற்போக்கு என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் கும்பலின் ஆதிக்கம் இருப்பதுதான் சமூக ஆய்வியல் துறைகளில் உண்மையைப் போதிக்க ஒரே வழி, நல்ல வழி என்று முழு மனதோடு நம்பும் மனிதர்கள் ஏராளமானவர்கள் ஊடகங்களில் பதவிகளில் இருக்கிறார்கள்.

இடது சாரிகளின் கையில் சமூக ஆய்வுத் துறை இருந்தாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விஷயம் தெரியாது. மார்க்சியருக்கு இந்து சமயம் என்றாலே உடலெல்லாம் பற்றிக் கொண்டு எரியும். ஆனால் இஸ்லாம், கிருஸ்தவம் என்றால் அவற்றை ஆவி சேர்த்துத் தழுவ அவர்களுக்கு ஒரு தயக்கமும் இராது. இங்கு, இந்தியாவில் மட்டும்தான் இப்படி என்றில்லை. மேற்கிலும் இதே நிலைமைதான். அங்கு கிருஸ்தவத்தை விட்டுச் சற்று விலகி நின்று விடும் மார்க்சியர் கூட, இஸ்லாம் என்றால் அப்படியே உருகி வழிவார்கள். சிறுபான்மையினரை ஆதரிப்பது ஒன்றுதான் முற்போக்கு என்ற அசட்டு நம்பிக்கைதான் இதற்குக் காரணம். இஸ்லாமிசம் ஆட்சி செய்யும் நிலங்களில் மட்டும் இதர சிறுபான்மையினரை ஆதரிக்க, அதுவும் இந்துக்களாக அவர்கள் இருந்தால் இந்த மார்க்சிய/ முற்போக்குக் காக்கைகள் கூட்டத்திலிருந்து ஒரு காக்கை கூட வராது.

ஒரு நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களை எதிர்க்க வேண்டும், ஆனால் உலகெங்கும் உள்ள பெரும்பான்மை மக்களை இவர்கள் ஒன்று திரட்டப் போகிறார்களாம்.  அதுவும் எந்தக் கேள்வியும் கேட்கப்படக் கூடாத புத்தகத்தை இறுதி வார்த்தையாக எதிலும் எடுத்துக் கொள்ளும் இஸ்லாமிசம் இந்த மார்க்சியர்களின் அன்பார்ந்த தோழன். அதில் பாசிஸமே சிறிதும் இல்லை, மாறாக அது சுத்த ஜன நாயகம்.

வேறெந்த தனி நாட்டிலும் உள்ள பெரும்பான்மை என்பது பாசிஸம். ஆனால் உலகப் பெரும்பான்மை மட்டும் பரிசுத்த ஜன நாயகம்.  அப்படி ஒரு சிதிலமடைந்த புத்தி.

இந்தக் கட்டுரையில் உலகின் பெரும் கொலைகாரர்கள் என்று தம்மை நிறுவுவதில் மிக ஊக்கம் கொண்டுள்ள ஐஸிஸ் எனும் உலக பயங்கர இஸ்லாமிய இயக்கத்திற்கு இங்கிலாந்தின் பல்கலைகளிலிருக்கும் பல மாணவர்கள் ஏன் தாமாகப் போய்ச் சேருகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு ஒரு முஸ்லிம் பதில் சொல்கிறார்.

பிரிட்டனின் பல்கலைகளில் எப்படி கருத்து சுதந்திரம் என்ற மாயப் புகை மூட்டத்தின் ஊடே, வெறும் கொலைவெறியையும், யூதர் மீது வெறுப்பையும், இஸ்லாமியர் அல்லாத மக்கள் மனிதரே அல்ல என்ற நோக்கையும், உலகை ஆள்வது இஸ்லாமிய காலிஃபேட்டாகத்தான் இருக்க வேண்டும் என்ற பகல் கனவையும் பரப்பும் வெறியர்கள் சுலபமாகப் புகுந்து புறப்படுகிறார்கள், அவர்களுக்கு எத்தனை புத்திசாலி மாணவர்களாக இருந்தாலும், இன்னும் உணர்வளவில் மன முதிர்ச்சி அடையாத இளைஞரும், உலக அனுபவம் இல்லாத மாணவர்களும் எளிதில் இரையாகிறார்கள் என்றும், தானும் எப்படி அப்படி ஒரு வெறுப்பாளனாகி உலகை இஸ்லாம் ஆள வேண்டும் என்ற கருத்தையே பரப்பக் கருதி பல நாடுகளில் பிரச்சாரத்தில் இறங்க வந்தது எப்படி என்றும் விளக்குகிறார். எகிப்தில் சிறையில் தள்ளப்பட்டு நான்காண்டுகள் இருந்த போது தன் கருத்தியலை மறு பரிசீலனை செய்து அதிலிருந்து விலகியதாகவும் ஒப்புக் கொள்கிறார்.

இவருக்கு ஏற்பட்ட தெளிவு ஒரு தனிநபருக்கு ஏற்பட்ட தெளிவுதான். இன்னும் பிரிட்டிஷ் பல்கலைகளில் உலவும் பயங்கரவாதிகளுக்கு ஒரு தடையும் இல்லை என்பதைத்தான் அவர் சுட்டுகிறார். இந்தியப் பல்கலைகளிலோ வன்முறையாளர்களுக்கும், மத வெறியர்களுக்கும், மார்க்சியம் என்ற போர்வையில் சமூகத்தின் மீது போர் தொடுத்து இந்திய நாகரீகத்தை அழிப்பதையே தம் கடமையாகக் கொண்டு திரிவாருக்கும்தான் எத்தனை வசதிகள் இருக்கின்றன என்று நாம்தான் யோசிக்க வேண்டும். அவர்கள் யோசிக்க ஒரு அவசியமும் இல்லையே.

http://www.nytimes.com/2015/03/03/opinion/the-education-of-jihadi-john.html

இதே போல இன்னொரு முஸ்லிம் மருத்துவர், இவர் பாகிஸ்தானிய-அமெரிக்கர். இவர் இஸ்லாமிசம் பற்றி என்ன எழுதுகிறார் என்று பார்த்தால், உலகின் கொலைபாதகக் கூட்டமெல்லாம் ஏன் இஸ்லாமிய நிலங்களிலேயே ஜனிக்கின்றன என்று வியக்கிறார், மனம் நொந்து எழுதுகிறார். பெரும் இனப்படுகொலைகளை ஏன் இஸ்லாமிய நாடுகள் நடத்துகின்றன என்றும் கேள்வி எழுப்புகிறார். உலக இடது சாரிகளும், பல்கலையாளர்களும் இஸ்லாமிஸ்டுகளோடு வாதிட்டு ஒரு பயனுமில்லை என்றும், இஸ்லாமிசம் பண்டை இஸ்லாமியப் பழக்க வழக்கங்களைப் புத்தகத்திலிருந்து பெறுவதால் அதில் இவர்களுக்குப் பரிச்சயம் போதாமை தெளிவாகத் தெரிகிறது, இஸ்லாமிசத்தினருக்குத் தாம் வெற்றி பெற்றதான பிரமை நீடிக்கிறது என்றும் விளக்குகிறார். பெண்களைக் கைப்பற்றி அடிமைகளாக்குவதும், அடிமைகளைப் போகப்பொருளாகப் பயன்படுத்துவதும், சந்தையில் ஆடுமாடுகள் போல அவர்களை விற்பதும் பண்டை இஸ்லாமிய நூல்களில் ஏற்கப்பட்டிருக்கின்றன என்ற வாதத்தை இஸ்லாமிய அரசு (எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட்) முன்வைக்கும்போது பாகிஸ்தானியருக்கு அதெல்லாம் புரியவில்லை, இ. அ பாகிஸ்தானைக் கைப்பற்றும் போது அவர்களுக்குப் பயங்கர அதிர்ச்சி ஏற்படப் போகிறது என்கிறார்.  பாகிஸ்தானியருக்கே இஸ்லாமிய அரசின் கொடூரம் புரியவில்லை என்றால் சூஸான்னா ராய்க்கும், ப்ரகாஷ் காரத்துக்கும், இந்தியாவின் ஏராளமான பெரு நகர பெண்ணியர்களுக்கும் (இவர்கள்தான் லவ் ஜிஹாத் என்று ஏதும் இல்லை என்று சாதிப்பவர்கள்) புரிய வாய்ப்பு என்ன இருக்கிறது? சரி, இந்த மருத்துவரின் கடிதம்/ கட்டுரைக் குறிப்பு எப்படி அவுட்லுக் பத்திரிகையில் வெளி வந்தது, அது நமக்கும் அதிர்ச்சியானதுதானே?

இந்திய இங்கிலிஷ் பத்திரிகைகளில் உள்ள மேதாவிகள் எல்லாருக்கும் உலகின் ஆகப் பயங்கர சக்தி இந்து பாசிஸம்தான். மோதியை மட்டும் பதவியிலிருந்து ஒழித்து சிறையில் தள்ளி விட்டால் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் உடனே தீர்ந்து விடும். இஸ்லாமிசம் என்ற சொல்லே இந்து பாசிஸத்தின் பொய்க் கற்பனைதான். ஆகவே எல்லா ரோகங்களுக்கும் நிவாரணி, மோதியைப் பதவியிலிருந்து அகற்றி, ராகுல்பாபாவைப் பிரதமராக்குவதுதான். ஆமாம், ஜோக் இல்லை இது.  உலகப் புகழில் திளைக்கும் அமர்த்யா பாபாவும் இந்த மருந்துக் குளிகை இந்தியாவின் நோய்களை எல்லாம் தீர்க்கும் சஞ்சீவி ஔஷதம் என்று அடித்துச் சொல்கிறார். தமிழகத்தின் ஒற்றே ஒரு தேசியப் பத்திரிகையின் ஆசிரியராகச் சமீபத்தில் பதவி ஏற்ற ஒரு பெண்மணி, அதி புத்திசாலி, இன்று ஒரு சமூக ஊடகப் பதிவில் சொல்கிறார், தாலி என்பது ஆணாதிக்கத்தின் அடையாளம், ஆனால் புர்க்கா என்பது இந்தியச் சிறுபான்மையினர் தாம் பெரும்பான்மையினரால் அச்சுறுத்தப்படுவதால், தம் அடையாளத்தை வலியுறுத்தத்தான் அணிகிறார்கள் என்று. என்னவொரு மேதமை! அடடா, இப்படி மேதைகளைத் தமிழகம் எப்படித்தான் உண்டாக்குகிறதோ!

இஸ்லாமிச நாடுகளான பாகிஸ்தான், இராக், இரான், லிபியா, சிரியா, எகிப்து, சவுதி அரேபியா, என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம், அந்நாடுகளில் கூட முஸ்லிம் பெண்கள் புர்க்கா போடுவது இந்திய பெரும்பான்மை அவர்களை அச்சுறுத்துவதுதான் என்று கூடச் சொன்னாலும் சொல்வார். அப்படி ஒரு புத்திசாலி!

இந்த மருத்துவர் கடிதம் அவுட்லுக் பத்திரிகையில் வந்தது என்பது, மூன்றே நாட்களில் யாஹோவா உலகைப் படைத்தாராமே அந்த அதி அற்புதத்திற்கு நிகரானது என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

இதை இந்திய இடது சாரிகள் படித்தார்களா, புரிந்து கொண்டார்களா என்று கேட்கிறீர்களா? என்னவொரு நகைச்சுவை உணர்வு ஐயா உங்களுக்கு? தமிழ் நாட்டின் ‘தேசிய பத்திரிகை’யின் பதிப்பாசிரியர் (பெண்) இந்து ஆணாதிக்கத்தைப் பற்றிச் சொன்னதை இன்னும் படிக்கவில்லையா நீங்கள்!

http://www.outlookindia.com/blogs/post/Islam-Colonisation-Imperialism-And-So-On/3433/38#17962


மஞ்சுநாத் கொலை வழக்கு

Manjunath_Petrol_IOC_India_Dead_IIM

எதற்கும் ஒரு பக்கபலம் இருந்தால்தான் இந்த நாட்டில் சிறிதாவது நீதி கிட்டும். பெட்ரோல் பங்கில் ஊழல் என்று கண்டு பிடித்த மஞ்சுநாத் அந்த பங்கின் உரிமையாளர்களால் ஏதோ கொசுவை அடிப்பது போல, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தக் கொலை தற்செயலாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் கண்டு பிடித்தாலும், உத்தரப் பிரதேசத்தின் அடையாள அரசியலே முக்கியமாகக் கருதும் அரசு தானாக எதையும் செய்து கொலைகாரர்கள்மேல் வழக்கு நடத்தி நீதியை நிலை நாட்டி இராது. அப்படிச் செய்யுமாறு அரசை வற்புறுத்த, கட்டாயப்படுத்திச் செயல்பட வைக்க, மஞ்சுநாத்தின் பல்கலையைச் சார்ந்த முன்னாள் மாணவர்களின் கூட்டணி ஒன்று நிதி திரட்டி, நெடுநாள் முயன்று இறுதியில் நீதியைப் பெற்றிருக்கிறது. மஞ்சுநாத் ஒரு தமிழர், கர்னாடகத்தில் வளர்ந்தவர். மிகவும் வசதி குறைந்த ஒரு குடும்பத்தில் இருந்து கடும் உழைப்பால் படித்து முன்னேறியவர். மேலாட்சித் துறையில் பட்டம் வாங்கிய பின், வேலை பார்த்தது இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனத்தில். அவர் கொல்லப்பட்டது கோலா கோகரன் என்கிற ஊரருகே. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பம்பின் உரிமையாளர்கள் இவரைக் கொன்றிருக்கிறார்கள். இந்தியன் ஆயில் கார்பொரேஷன் இந்த வழக்கில் என்ன செய்தது என்று ஒரு வரி கூட எழுதத் துப்பில்லை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தியாளர்களுக்கு. அத்தனை தொழில் நேர்த்தி, கடமையுணர்வு, திறமை!

லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மானேஜ்மெண்ட்டில் படித்தவர் மஞ்சு நாத். வழக்கு நடந்தது உத்தரப் பிரதேசத்தில் என்பதால் மஞ்சு நாத்தின் குடும்பம் அந்த வழக்கில் ஈடுபட முடியவில்லை. அதே மேலாட்சிப் படிப்புக்கான பல்கலையில் படித்துப் பட்டதாரிகளான ஒருவரும், பங்களூரில் உள்ள மேலாட்சிப் பல்கலை மாணவர் இன்னொருவருமாகச் சேர்ந்து முன்னாள் மாணவர்களின் சங்கத்தின் வழியே நிதி திரட்டி இந்த வழக்கை இறுதி வரை நீதி மன்றத்தில் நடத்தி இருக்கிறார்கள். 2005 இல் நடந்த கொலை, 9 ஆண்டுகளுக்குப் பிறகு, உச்ச நீதி மன்றத்தில் நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையாக முடிந்திருக்கிறது. இது உச்ச நீதி மன்றம் வரை சென்றது என்பதே ஆச்சரியம். குற்றவாளிகளுக்கு என்னவொரு பணபலம் இருக்கிறது என்பதை இது சுட்டுகிறது. அரசும், இந்தியன் ஆயில் நிறுவனமும் எத்தனை மெத்தனமாக இருந்திருக்கின்றன என்று இந்த சம்பவம் சுட்டுகிறதா என்பதைத்தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் துருவித் தேடிப் பார்க்கத் தவறி இருக்கிறது.

இன்னும் எத்தனை ஆயிரம் வழக்குகளை இந்தியாவின் பண முதலைகள் தமக்குச் சாதகமாகத் திருப்பி விடுகின்றனரோ?

http://indianexpress.com/article/india/india-others/outrage-in-iim-got-justice-for-manjunath/


ஊருக்கு உபதேசம்

Cherelle_Baldwin_US_Women_Females_Abusers_Law_Justice_Courts_Prison_Sentences_Convicts

அமெரிக்க நீதி முறை நிறைய வக்கிரங்களைக் கொண்டது. அதுவும் பெண்கள் தம் பாதுகாப்பை முன்னிட்டு நடவடிக்கைகள் எடுத்தால் அவற்றை அமெரிக்க நீதி முறை கடுமையாகத் தண்டிக்கிறது. இந்த லட்சணத்தில் பராக் ஒபாமா இந்தியாவுக்கு சகிப்புத் தன்மை பற்றி பாடம் போதிக்க முன்வருகிறார். மெரில் ஸ்ட்ரீப் என்னும் நடிகையும், ப்ரீடா பிண்டோவும் இந்தியாவுக்கு பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று லெக்சர் அடிக்க முன்வருகிறார்கள். இந்த வழக்கைப் பற்றிப் படித்தால் தெரியும் என்ன வகை வன்முறைகளை அமெரிக்க நீதி முறை கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்று. இதே போன்ற இன்னொரு வழக்கில் ஒரு கருப்புப் பெண் 20 வருடம் ஜெயில் தண்டனைக்கு ஆட்படுத்தப்பட்டார். ஏராளமாக அவருக்கு பொது மக்கள் ஆதரவு தெரிவிக்கப்பட்ட பின் இரண்டு வருடங்கள் சிறையில் கழித்த பின் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் செய்த குற்றம்- அவருடைய முன்னாள் கணவர், அவரைப் பல முறை தாக்கிக் காயப்படுத்தியவர், அவர் வீட்டில் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்து அவரை அச்சுறுத்த முயன்ற போது துப்பாக்கியால் கூரையை நோக்கிச் சுட்டு எச்சரித்ததற்காக அந்த தண்டனை. ஆனால் இன்னொரு வழக்கில் வெள்ளையர் ஒருவர் தெருவோடு போன கருப்பு இளைஞனைத் துரத்தி, அனாவசியமாக வம்பிழுக்கப் போன போது நடந்த கைகலப்பில் அந்தப் பையனை வெள்ளை ஆண் சுட்டுக் கொன்றுவிட்டு ஒரு தண்டனையும் இல்லாமல் தப்பித்து விட்டார்.

ஆண்களின் வன்முறை கூட வெள்ளையராக இருந்தால் ஒரு நீதி, கருப்பராக இருந்தால் இன்னொரு நீதி என்பது அமெரிக்கக் கருப்பருக்கு ஏற்கனவே தெரியும். இவர்கள் ஆவணப் படங்கள் எடுத்து இந்தியாவின் அக்கிரமமான சமூகத்தின் அவலங்களை உலகுக்கு எடுத்துரைக்கிறார்களாம். என்ன ஒரு அகம்பாவமும், மதர்ப்பும். மருத்துவரே முதலில் உம் நோயைக் குணப்படுத்திக் கொள்ள வழியைப் பாரும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

http://www.salon.com/2015/03/11/this_21_year_old_woman_faces_decades_in_prison_for_trying_to_escape_her_abuser_partner/


கருப்புப் படம்

Black_Portraits_White_America_Race_Photographs_Black_And_White_Culture_USA_America_South

தேஜு கோல் சுருக்கமாகவே பிரபலமாகி விட்ட ஒரு கருப்பின எழுத்தாளர். இவரது முதல் நாவலே பிரபலமாக விற்றது. இவர் தொடர்ந்து எழுதும் பலவும் கவனிக்கப்பட ஒரு காரணம் இவர் தனித்த விதமாக உலகைக் கவனித்து எழுதுகிறார் என்பதாக இருக்கலாம். Luminous prose என்று இவரது உரைநடையை வருணித்தனர். அதனாலோ என்னவொ சமீபத்தில் கருப்பின மக்களின் தோலை எப்படி ஒளிப்படத்தில் பதித்தனர் என்பதைப் பற்றி ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார். முதலில் இந்தக் கட்டுரையைப் படிக்கலாமே.

http://www.nytimes.com/2015/02/22/magazine/a-true-picture-of-black-skin.html?_r=1


பொருளாதாரம் - மழைக்காடுகள் - கானழித்தல்

Ezequiel_Antonio_Castanha_Brazil_Amazon_Forest_Novo_Progresso_Para_Deforestation_Environment_Global_Warmin_Carbon_Emissions

ப்ராஸீல் உலகின் நுரையீரல் போன்ற நாடு எனச் சொல்லலாம். அமேஸான் மழைக்காடுகள்தாம் இந்தப் பெயருக்குக் காரணம். கடந்த சில பத்தாண்டுகளில் இந்த மழைக்காடுகளை ஏகப்பட்ட அழிப்புக்கு உள்ளாக்கியவர்கள் பல ப்ராஸீல் நாட்டு கடத்தல் கும்பல்கள், குற்றக் கும்பல்கள், மேலும் ஆட்சியாளர்களின் துணையோடு காட்டு நிலத்தை பண்ணை நிலமாக மாற்றத் துடிக்கும் பெரு நிதிக் கிழார் கும்பல். இந்த நிதிக்கிழார் கும்பல் பன்னாட்டு விரிவு கொண்டது.

இந்த வாரம் ப்ராஸீலில் ஒரு உள்ளூர் பணக்காரனைக் கைது செய்திருக்கிறது ப்ராஸீலின் காவல் துறை. கடந்த சில வருடங்களில் அமேஸான் மழைக்காடுகளில் சுமார் 10% பரப்பை அழித்த கயவன் இவன் என்பது குற்றச் சாட்டு. கிட்டத்தட்ட 1,872 சதுர மைல்களை இவன் காட்டை அழித்துக் கைப்பற்றி இருக்கிறான். இவனை இன்னும் வழக்கு நடத்திச் சிறையில் தள்ள எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. அதற்குள் ப்ராஸீலின் அரசு பதவியில் இருந்து இறக்கப்படாமல் இருக்க வேண்டும். காவல் துறையின் தீர்மானம் குலைக்கப்படாமல் இருக்க வேண்டும். சாட்சிகள் கொல்லப்படாமல் இருக்க வேண்டும். கடந்த கால நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால் ப்ராஸீலின் காவல் துறையோ, மைய அரசின் துருப்புகளொ அப்படி ஒன்றும் நம்பத்தக்கவர்கள் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

ஈஸ்வரோ ரக்ஷத் என்றும் பெருமூச்சு விட முடியாது. அப்படி யாரும் இருப்பதாகத்தான் தெரியவில்லையே. அந்த ஈஸ்வரன் நாம்தான். நாமோ வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு எண்ணிக்கையில் பெருகி உலகை ஆக்கிரமித்த போதும், பேராசையில் முங்கி, நுகர்வாசையில் திளைத்து, நம் வேர்களை நாமே அறுத்துக் கொண்டு வருவதில் மிக முனைப்பாக இருக்கிறோம். கிட்டத்தட்ட எல்லா அதி புனைவுகளுமே பாலையாகி விட்ட பூமிதான் எதிர்காலம் என்றே கதை சொல்கின்றன. இது நமக்கு நம்பிக்கையும் போய், கற்பனையும் போய் விட்டது என்பதையே சுட்டுகிறது. உண்மையான கலியுகத்தின் துவக்கம் இதுதானோ?

http://www.theguardian.com/world/2015/mar/02/brazils-king-of-deforestation-dethroned-in-drive-to-beat-land-clearers


ஆபதபாந்தவரா? போதை மருந்தா?

Narketan_Ketamine_Anti_Histamine_Meds_Drugs_Tablets_WHO_Special_K

ஊரில் சட்டாம்பிள்ளையாக​ தன்னை நிறுவிக்கொள்ள முயல்பவர்கள் செய்யும் உருட்டல் மிரட்டல்களில் ஒன்று தன் சௌகரியத்திற்கு ​ஊரையே அடிபணியச்சொல்வது. ஐரோப்பாவும், அமெரிக்காவும் எப்பொதும் செய்துவருவது தான் இது. ஆசியாவின் பெரியண்ணனாக உருவாகிவரும் சீனாவும் இப்போது இந்த வழிமுறைக்கு வருகிறது. உயிரைக்காக்கும் அதிகசெலவில்லாத மருந்துப்பொருளான கேடமைனை (Ketamine) ஐ.நா வின் மயக்க மருந்துப்பொருட்கள் என்னும் பட்டியலில் வகைப்படுத்த வைக்க சீன அரசாங்கம் ‘ஆர்வம்’ காட்டுகிறது. ஐ.நா. வின் மயக்கு பொருள் என்னும் பட்டியலுக்குள் வந்தால் கேடமைன் பயன்பாடு தீவிர கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஏற்கனவே அதிக லாபமில்லாத மலிவான கேடமைன், ஐ.நா.வின் மயக்க மருந்து பட்டியலில் சேர்வதால் உருவாகும் தயாரிப்பு-விற்பனை ரீதியிலான கடும் சட்டசிக்கல்களால் தயாரிப்பு நிறுவணங்கள் கேடமைனைத் தயாரிப்பதையே நிறுத்திவிடலாம். அல்லது விலைகூடலாம். பொருளாதாரத்தில் பின் தங்கிய, வளரும் நாடுகளில் இம்மருந்து பயன்படுத்துவது இதனால் கடினமாகும். ஏன் சீனா இந்த விஷயத்தில் திடீரென்று இத்தனை மெனக்கெடுகிறது?

பதில் கிடைக்க இந்தச் சிறிய செய்தித் துணுக்கைப் படியுங்கள்: http://www.thedailybeast.com/articles/2015/03/03/why-special-k-is-good-medicine.html

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.