எண்ணெய்யும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள்

சென்ற இதழில் விட்ட இடத்திலிருந்து இன்னும் கொஞ்சம் தோண்டுவோம். குழாய் குழாயாய் இணைத்து உள்ளே இறக்கிக்கொண்டே போகும்போது அந்தக்கிணற்றின் விட்டத்தை இன்னும் குறைப்பது வழக்கம். மேலிருந்து கீழ் வரை உலோக குழாய்கள்தான் கிணற்றின் சுவராக இருக்கின்றன. அதன் நடுவே நீண்டு சுழன்று சுழன்று தோண்டிக்கொண்டு இருக்கும் தோண்டும் இழை (Drilling String) என்ற அமைப்பும் உலோகம்தான் என்றாலும், எண்ணெய் இருக்கும் பேசின் இரண்டு கிமீ தூரம் என்பதால், அந்த தூரத்திற்குள் இந்த அமைப்பு மொத்தம் ஏழெட்டு சுற்றுகள் சுற்றியிருக்கும்! இதை ஒரு நிமிடம் நின்று யோசித்தால் இரும்புக்குழாய்கள் துணியால் ஆன ஒரு துண்டை நாம் முறுக்கி பிழிவது போல் எட்டு சுற்று முறுக்கப்பட்டு இருப்பதன் ஆச்சரியத்தை உணர்வோம்!

drilling

இப்படி நோண்டிக்கொண்டே போனால் இறுதியில் அந்த 2000 மீட்டர் தூரத்தையும் கடந்து எண்ணெய் பேசினை தொடும்போது உள்ளே சுமார் 2000 பி‌எஸ்ஐ அழுத்தத்தில் இருக்கும் கச்சா எண்ணையும் எரிவாயுவுமான குழம்பு பீரிட்டுக்கொண்டு பூதமாய் வெளிவரும். ஒரு ஒப்புமைக்கு சாதாரண கார் சக்கரத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம் வெறும் 40 பி‌எஸ்ஐ மட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொள்ளலாம்! எனவே அதற்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுத்து ஜாக்கிரதையாக அந்த கிணற்றை இறுக மூடி வைத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக பூமிக்குள் புதைந்திருக்கும் எண்ணையும் எரிவாயுவும் பீய்ச்சிக்கொண்டு மேலே வராமல் இருப்பதற்கு காரணம் அதற்கு மேல் இரண்டு கிலோமீட்டர் உயரத்திற்கு நின்று அழுத்திக்கொண்டு இருக்கும் மண்ணும் பாறைகளும்தான். மேலிருந்து ஒரு கிணறு வெட்டும்போது நாம் இந்த பாறைகளையும் மண்ணையும் அப்புறப்படுத்தி ஒரு துளை போடுவதால், எந்தவித தங்குதடையும் இன்றி அடியில் இருக்கும் எண்ணெய் எக்கச்சக்க அழுத்தத்துடன் வெளியே வந்துவிட முடியும். சென்ற இதழில் நாம் பார்த்த மேலிருந்து உள்ளே செலுத்தப்படும் சகதி என்ற கலவை, விலக்கப்பட்ட அந்த இரண்டு கிலோமீட்டர் ஆழ பாறைகளுக்கு இணையாக எண்ணெய் எரிவாயு கலவையை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் செய்கிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அந்தக்கலவையின் வழியே மேலிருந்து அழுத்தத்தை கூட்டி குறைப்பதன் மூலம் சரியான வேகத்தில் எண்ணையை மேலே கொண்டுவரவோ தடுத்து நிறுத்தவோ முடியும். இருந்தாலும் அழுத்தம் பூமிக்கடியில் மிக அதிகம் என்பதால், அந்த தோண்டும் இழை எனப்படும் சகதி நிறைந்த குழாய்க்கு வெளிப்புறத்துக்கும் கிணற்றின் சுவராக செயல்படும் குழாய்க்கு உட்புறத்துக்கும் இடையே உள்ள வளையம் போன்ற (ring shaped clearance) சிறு இடைவெளி வழியே எண்ணையும் வாயுவும் வெடித்துக்கொண்டு வெளிவர முயற்சிக்கும்.
இந்த அடங்காப்பிடாரி ராட்சசனை கட்டுக்குள் வைத்திருக்க, வெடிப்புத் தடுப்பான் (Blowout Preventor) என்ற ஒரு சாதனம் மிக அவசியம். பக்கத்து படத்தில் இரண்டு ஆள் உயரத்திற்கு இருப்பது அந்த சாதனத்தில் ஒரு வகை. கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் இதை அமைத்துக்கொண்டு இதன் வழியேதான் துளை போட்டு நோண்டுவார்கள். அழுத்தம் அதிகமாகி கீழிருந்து பூதங்கள் புறப்பட்டால், இந்த சாதனம் வெகு விரைவாக அந்தக்கிணற்றின் கழுத்தை நெருக்குவதைப்போல் செயல்பட்டு, கிணற்றை மூடி வெடி விபத்தை தவிர்க்கும். அதன்பின், மேலிருந்து இன்னும் அழுத்தத்தை அந்த வளைய இடைவெளியிலும், தோண்டும் இழை என்ற சுற்றும் குழாய்க்குள்ளும் செலுத்தி நிலையை சமன் படுத்தி பூதத்தை அடக்கிப்பிடித்துக்கொண்டு  கிணற்றை மெதுவாக திறந்து  தோண்டலை தொடரலாம். மிக அபூர்வமாக சில சமயங்களில் கிணற்றின் அழுத்தத்தை சமாளிக்கவே முடியாமல் போனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தடுப்பானை கிணற்றின் நிரந்தர மூடியாக விட்டுவிட்டு திரும்புவதும் உண்டு. இந்தத்தடுப்பான் சரியாக வேலை செய்யாதது 2010ல் அமெரிக்காவின் தெற்குபகுதியில் இருக்கும் மெக்ஸிகோ வளைகுடாவில் நிகழ்ந்த 11 பேர்களை பலிவாங்கிய Deepwater Horizon ரிக் விபத்திற்கு ஒரு முக்கியக் காரணம். விபத்து நிகழ்ந்த போது 5000 அடி ஆழமுள்ள கடலின் மேல் மிதந்து கொண்டு கடலின் தரையில் இருந்து இன்னும் 5 கிலோ மீட்டருக்கு மேல் ஆழமான கிணறு ஒன்றை தோண்டிக்கொண்டிருந்தார்கள்! இந்த எண்களை எல்லாம் ஒரு நிமிடம் நின்று யோசித்து உள் வாங்கிக்கொண்டால் இது எவ்வளவு கடினமான, ஆபத்தான பணி என்பது புரியும்.

blowout_preventer

ஒரு வழியாக இந்தத்தோண்டல் படலம் முடிந்தபின், கிணற்றை முடித்து வைக்கும் குழு (Well Completion Team) மேடை ஏறும். அவர்கள் வேலை 2 கிமீ தரைக்குள்ளே இருக்கும் கிணற்றின் முடிவு எப்போதும் அடைத்துக்கொண்டு விடாமல் கட்டுமான வேலையை முடித்து வைப்பது. அதைச்செய்தபின் கடலின் தரை மட்டத்தில் இருந்து ஒரு நூறடி கீழே வால்வ் ஒன்றை அமைப்பார்கள். இதற்கு நிலத்தடி பாதுகாப்பு வால்வ் (Subsurface Safety Valve அல்லது SSSV) என்று பெயர். சாதாரணமாக இந்த வால்வ் இறுக மூடியே இருக்கும். கடலுக்கு மேல் இருக்கும் பிளாட்ஃபாரத்தில் இருந்து 300 அடி நீளத்திற்கு ஒரு கால் அங்குல ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் குழாய் அமைக்கப்பட்டு அது கிணற்றின் வெளிப்புறமாக ஓடி கடலுக்கு கீழே இந்த வால்வுடன் இணைக்கப்பட்டு இருக்கும். கடலுக்கு மேலே பிளாட்பாரத்தில் இதனுடன் கையடக்கமான ஒரு குட்டி பம்ப் இணைக்கப்பட்டு அது ஹைட்ராலிக் எண்ணெய்யை பம்ப் செய்து கீழிருந்து வரும் அழுத்தத்திற்கு இணையாக 2000 பி‌எஸ்ஐ அழுத்தத்தை மேலிருந்து கொடுக்கும்போது மட்டுமே அந்த வால்வ் “அண்டா காகசம், அபு காகசம், திறந்திடு ஸீஸேம்” என்று சொன்னது போல் திறக்கும். இந்தக்குட்டி பம்ப்பை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பிறிதொரு சமயம் இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம்.
அந்த பம்ப் மட்டும் பத்தாது என்று, எண்ணெய்க்கிணற்றின் குழாய் பிளாட்பார்முக்கு மேல் வந்தபின் அங்கே இன்னொரு நில மேற்பரப்பு பாதுகாப்பு வால்வ் (Surface Safety Valve அல்லது SSV) என்று வேறு ஒன்று உண்டு. SSSV போலவே இதுவும் சாதாரண நிலையில் மூடியபடிதான் இருக்கும். இதைத்திறக்க ஹைட்ராலிக் எண்ணெய்க்கு பதில் காற்று அல்லது வாயுவினால் (pneumatic) ஆன சாவி வேண்டும்.
ஒரு அடி விட்டத்திற்கு குழாயை அமைத்திருந்தாலும், கடைசியில் எண்ணெய் வெளிவரும் துவாரத்தின் சைஸ் என்ன தெரியுமோ? சுமார் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் மட்டும்தான்! அவ்வளவு சிறிய துளை வழியாக ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பீப்பாய் எண்ணெய் மேலே வந்து சேரும் என்றால் தரைக்கடியில் இருக்கும் அழுத்தத்தை எளிதாகப்புரிந்து கொள்ளலாம்.
அந்த கிணற்றை முடிக்கும் குழுவினர் தங்கள் வேலையை ஒழுங்காக செய்து முடித்து கிணற்றை ஒப்படைக்கும்போது கிணறு சுத்தமாய் மூடிக்கொண்டு இருக்க வேண்டும். பின்னால் அந்த இடத்தில் பிளாட்பார்ம் கட்டி (அல்லது கப்பலில் எடுத்து வந்து பொருத்தி தண்ணீருக்கு உள்ளே வெளியே எல்லாம் வெல்டிங் செய்து) முடித்தபின், ஹைட்ராலிக் எண்ணெய் அழுத்தத்தையும், வாயு தரும் நியூமாடிக் அழுத்தத்தையும் இரண்டு சாவிகளாக போட்டு திறந்தால்தான் கிணற்றிலிருந்து எண்ணெய் பாய ஆரம்பிக்கும். ஏதாவது புயலிலோ அல்லது விபத்திலோ அந்த பிளாட்பார்ம் சுத்தமாக உடைந்து விழுந்தாலும் அல்லது ஏதாவது எதிரிகளால் தாக்கப்பட்டாலும் கூட, கிணறு திறந்தே இருந்து எண்ணெய் பாட்டுக்கு கடலில் கொட்டி, தீப்பிடித்து பேரழிவு எதுவும் நிகழ்ந்துவிட வழிவகுக்காமல், ஒழுங்காக தானியங்கு முறையில் (Automatic) எல்லா திறப்புகளையும் மூடி ஒரு பாதுகாப்பான நிலைக்கு (Fail-Safe) கிணற்றை எடுத்து செல்லவேண்டும் என்பதுதான் இந்த அமைப்புகளின் குறிக்கோள்.

unmanned

இந்தப்பணியும் முடிந்தபின், முன் சொன்னது போல் அந்தக்கிணற்றின் மேல் ஒரு பிளாட்பார்ம் நிறுவப்படும். இப்படி நிறுவப்படும் பிளாட்பாரம்களில் சிறிய எளிமையான வகை படத்திலிருக்கும் “ஆளில்லா பிளாட்பார்ம்”தான். பெயருக்கேற்றபடி, இந்த பிளாட்பார்ம்களில் மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கடலுக்கு அடியில் இருந்து பீய்ச்சிக்கொண்டு மேலே இருக்கும் இத்தகைய பிளாட்பாரத்திற்கு வரும் எண்ணெய்+எரிவாயு கலந்த குழம்பு, அங்கிருந்து கடலின் தரையில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு பெரிய குழாயின் வழியே, சுமார் 10 மைல் தள்ளி இருக்கும் பணியாளர்கள் புழங்கும் பெரிய பிளாட்பாரதிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இது வரை நாம் பார்த்த அமைப்பின்படி செங்குத்தாக ஒரு ஆழ் குழாய் கிணறை மட்டும் வெட்டினால், ஒரு கிணறுக்கு ஒரு ஆளில்லா பிளாட்பார்ம் என்று கட்ட வேண்டி இருக்குமில்லையா? அந்தச்செலவை குறைப்பதற்காக, இன்னொரு உத்தி அறிமுகப்படுத்தப்பட்டது. Directional Drilling என்று சொல்லப்படும் இந்த முறையின்படி செங்குத்தாய் ஒரு கிணறு தோண்டி முடித்தபின், பத்தடி தள்ளி அங்கேயே இன்னொரு கிணறை ஆரம்பித்து, ஒரு கிமீ வரை தோண்டியபின், பாக்கி இருக்கும் தூரத்தை 45 டிகிரி கோணத்தில் தோண்டுவார்கள். இப்படிச்செய்யும்போது எண்ணெய் எடுக்கப்படும் இறுதி இடம் முதல் கிணற்றில் இருந்து ஒரு அரை கிமீ தள்ளி விழும். இப்படியாக அருகருகே வெட்டப்படும் கிணறுகளின் கோணத்தை கடலுக்கடியே சுமார் 45 டிகிரி திசை திருப்பினால், ஒரே இடத்தில் பத்து கிணறுகளை தோண்டி நான்கைந்து சதுர கிமீ பரப்பளவிலுள்ள எண்ணையை (10 ஸ்ட்ரா வழியே உறிஞ்சுவதுபோல்) மேலே உட்கார்ந்திருக்கும் ஒரே பிளாட்பாரதிற்கு கொண்டு வந்து விட முடியும்.

directionald

இப்படி கிணறு தோண்டும் திசையை பூமிக்கடியில் மாற்ற முடியும் என்றால் வெறும் 45 டிகிரி கோணத்துடன் நிறுத்துவானேன் என்று என்னென்னவோ புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வந்து விட்டார்கள். முதலில் கொஞ்சம் வளைத்து தோண்டுவதற்கு பதில் கிடைமட்ட தோண்டல் (horizontal drilling) வந்தது. அதன் பின் ஜிலேபி சுற்றுவது போல் எப்படி வேண்டுமானாலும் தோண்டலாம் என்று முன்னேறி விட்டோம். இரண்டு வருடங்களுக்கு முன் அண்டெக் (AnTech Ltd.) என்ற இங்கிலாந்து நிறுவனம் தோண்டும் நுனிக்கு அருகே ஒரு ஜய்ரோஸ்கோப், மைக்ரோ சிப் எல்லாம் வைத்து நீங்கள் எப்படி கிறுக்கல் கோடு போட்டாலும் அப்படி எங்கள் உளி கிணறு வெட்டும் என்று பொலாரிஸ் என்ற இந்த ஒரு புதிய உளியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்!

Polaris

இந்த மாதிரி பலவிதமான தொழில்நுட்பங்கள் நம் கை வசம் இருந்தாலும், இடத்திற்கு ஏற்றாற்போல் சரியான உத்திகளை உபயோகிக்க வேண்டியது அவசியம். உதாரணமாக கடலின் மேல் பிளாட்பார்ம் கட்டும்போது பத்து கிணறுகளை ஒரு பிளாட்பார்ம் வழியே ஒருங்கிணைப்பது நிறைய சேமிப்பிற்கு வழி வகுக்கும். மாறாக தரையின் மேல் எண்ணெய் கிணறுகளை வெட்டும்போது ஒவ்வொரு கிணற்றையும் தனித்தனியாக வேண்டிய இடத்தில் செங்குத்தாக வெட்டுவது செலவை குறைக்கும். பார்க்கப்போனால் நிலக் கிணறுகளை அமைக்கும்போது கோணங்களை மாற்றுவது (இன்னும் விலையுயர்ந்த தொழில் நுட்பத்தை உபயோகிப்பதின் காரணமாக) செலவை அதிகரிக்கும். இருந்தாலும், சமயங்களில் எண்ணெய் இருக்கும் இடத்திற்கு மேல் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்பு அதிகமாக இருந்தாலோ அல்லது மிக மிருதுவான மண் போன்றவை இருந்தாலோ, செங்குத்தாக கிணறுகளை அமைப்பதை தவிர்த்து, தரையிலும் இந்த தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படுவதுண்டு.

wellanimated

ஒரு ஆளில்லா பிளாட்பாரத்திற்கு சுமார் பத்து கிணறுகளில் இருந்து வரும் எண்ணெய் கடற்படுகையில் கிடைமட்டமாக அமைக்கப்பட்ட ஒரு குழாய் வழியாக பணியாளர்கள் உள்ள ஒரு பெரிய பிளாட்பாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று பார்த்தோம். ஒரு பெரிய பிளாட்பார மையத்தைச்சுற்றி சுமார் பத்து பனிரண்டு ஆளில்லா பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த பெரிய பிளாட்பாரத்திலும் ஒரு டஜன் கிணறுகள் அமைக்கப்பட்டு எண்ணெய் சேகரித்தல் நடந்த வண்ணம் இருக்கும். எனவே ஒரு பெரிய பிளாட்பாரதிற்கு சுமார் நூறு கிணறுகளில் இருந்து எண்ணையும் எரிவாயுவும் வந்துகொண்டிருக்கும் என்றால் மிகையாகாது. அப்படி பணியாளர்கள் வேலை செய்யும் பெரிய பிளாட்பார்ம்கள் நாலைந்து உண்டு. ஒவ்வொரு கிணற்றில் இருந்தும் ஒரு நாளைக்கு 5000 முதல் 10,000 பீப்பாய் எண்ணெய் கிடைக்கும். எல்லா எண்களையும் பெருக்கிப்பார்த்து ஒரு நாளைக்கு உற்பத்தி எவ்வளவு என்று கண்டறியுங்கள்.
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கிணறுகளில் இருந்து பொறியாளர்கள் பணிபுரியும் பிளாட்பார்முக்கு வந்து சேரும் பாய்பொருளை அடுத்து என்ன செய்வார்கள்? எளிதாகச்சொல்லப்போனால் அடுத்த நான்கு செயல்களில் கடலில் நடக்கும் பணிகளை அடக்கி விடலாம்.
1. வரும் குழம்பை பெரிய தொட்டிகளில் (Large Closed Tanks) செலுத்தி கொஞ்சம் ஓய்வெடுக்க வைப்பது. இப்படி செய்யும்போது அந்தக்குழம்பில் உள்ள சிறிதளவு தண்ணீர் கீழேயும், கச்சா எண்ணெய் நடுவிலும் எரிவாயு மேலுமாக பிரிந்து நிற்கும்.
2. தண்ணீரை தொட்டிக்கு கீழே பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள் வழியே வெளியே கொண்டுவந்து கடல் நீர் அளவுக்கு சுத்தப்படுத்தி கடலில் கொட்டி விடுவது.
3. நடுவில் சேரும் எண்ணையை பிரித்தெடுத்து கடற்படுகையில் கிடைமட்டமாக 160கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் குழாய் வழியாக மும்பைக்கு அருகே இருக்கும் ரீஃபைனரிக்கு அனுப்புவது. அங்கே இந்த எண்ணையில் இருந்து பெட்ரோல், மண்ணெண்ணை, தார் முதலிய பொருட்களை பிரித்தெடுப்பார்கள்.
4. டேங்க்கின் மேல் புறத்தில் இருந்து எரிவாயுவை எடுத்து அதிலும் தண்ணீர் அல்லது எண்ணெய் துளிகள் கலந்திருந்தால், அவற்றை அப்புறப்படுத்திவிட்டு, பெரிய பம்ப் வழியே செலுத்தி அழுத்தப்படுத்தி, வேறு ஒரு கடல் குழாய் வழியாக அதையும் மும்பைக்கு அனுப்புகிறார்கள். பின்னால் அதிலிருந்து சமையல் செய்யும் காஸ் முதல் பல்வேறு வகையான எரிவாயுக்கள் பிரித்து எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
தரைக்கடியில் இருக்கும்போது எண்ணெய் + எரிவாயு குழம்பு எக்கச்சக்க அழுத்தத்திலும் வெப்பத்திலும் இருப்பதால், பாய்பொருள் நிலையில் இருக்கிறது. ஆனால் தரைக்கு வந்து வெப்பமும் அழுத்தமும் குறைந்தால் அந்த எண்ணெய் கட்டியாகி விடும். எனவே எண்ணையை குழாய்க்குள் செலுத்துவதற்கு முன் PPD (Pour Point Depressant) என்று சொல்லப்படும் ஒரு ரசாயனப்பொருளை சேர்ப்பார்கள். இது எண்ணெய் குழாய் வழியே ஓடும்போது டூத்பேஸ்ட் மாதிரி ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளும். இது ஒரு விதத்தில் பார்த்தால் நாம் கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிடுவது போலத்தான். இல்லாவிட்டால் நமது இரத்த நாளங்களுக்குள் கொலஸ்ட்ரால் படிந்து குழாய்களின் விட்டத்தை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக இரத்த ஓட்டத்தை தடை செய்வது போல், அந்த கடலுக்குள் கிடக்கும் குழாயின் சுவர்களில் எண்ணெய் ஓட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதன் விட்டத்தை குறைத்து எண்ணெய் ஓடுவதை தடுத்து வைக்கும். தினப்படி தட்பவெப்ப நிலை என்ன, இன்றைக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணெய்யின் குணாதிசயங்கள் என்னென்ன என்று அலசி, தினமும் எவ்வளவு கொலஸ்ட்ரால் மருந்து எண்ணெய்யில் கலக்க வேண்டும் என்று பரிந்துரைக்க பிளாட்பார்மில் ஒரு கெமிஸ்ட் எப்போதும் குடியிருப்பார்!
பிளாட்பாரத்தில் பணிபுரியும் அனைவருக்கும், ஒருவிதத்தில் பார்த்தால் பெட்ரோலும் எரிவாயுவும் கலந்த ஒரு வெடிகுண்டுக்கு உள்ளேயே இருந்து பணி புரிகிறோம் என்பது நன்றாகத்தெரியும்! எனவே எல்லோரும் எல்லோரையும் தவறுகள் ஏதும் செய்யவிடாமல் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, ரம்பத்தால் ஏதாவது உலோகத்தை அறுப்பதோ, சாதாரண சுத்தியலால் ஏதாவது உலோக குழாயை அடிப்பதோ பெரிய தவறு! அத்தகைய செயல்களில் இருந்து உருவாகும் தீப்பொறி எங்காவது அருகில் உலவும் எரிவாயுவை பற்றவைத்து விடலாமல்லவா? எனவே இந்த மாதிரி வேலைகளை செய்ய அதிக காற்று அழுத்ததுடன், ரப்பர் சீல் பொருத்தப்பட்ட கதவுகளுடன் கூடிய தனி பணிமனைகள்  (positively pressurized workshops) உண்டு. வெளிப்புறங்களில் இருக்கும் சாதாரண லைட் ஸ்விட்ச் கூட ஸ்பெஷல் சீல்களுடன் கூடிய, ஸிவிட்சை போடும்போதோ அணைக்கும்போதோ ஏற்படும் தீப்பொறியை ஸ்விட்சுக்கு வெளியே போக விடாத சிறப்பு தயாரிப்பாக இருக்கும். தப்பித்தவறியும் புகை பிடித்தபடி யாரும் Living Quarters பகுதியின் கதவை திறந்து விட முடியாது. ஒருநாள் மாலை பிளாட்பார்ம்மின் வெளிப்புறத்தில் நின்றவாறு அழகான சூரியாஸ்தமனத்தை ரசித்துக்கொண்டு நின்ற ஒரு காண்ட்ராக்ட் எஞ்சீனீயர் கையில் சிகரெட் இருந்தது போல் தோன்ற, என் குழுவில் பணி புரிந்த A.K.மொஹந்தி என்ற எஞ்சீனீயர் கடுப்புடன் வெளியே ஓடி அந்த ஆளை திட்ட ஆரம்பித்து, அவர் கையில் வைத்து கடித்துக்கொண்டு இருந்தது வெறும் பென்சில்தான் என்று தெரிந்து ஜகா வாங்கியது எனக்கு தெளிவாக ஞாபகம் இருக்கிறது.
இதற்கு மேல் பத்தடிக்கு ஒன்று என்று ESD (Emergency shutdown) மற்றும் FSD (Fire Shutdown) ஸ்விச்சுகள் அமைக்கப்பட்டிருக்கும். தேவையானால் யார் வேண்டுமானாலும் அவற்றை பிடித்திழுத்து மொத்த பிளாட்பாரத்தையும் அணைக்க முடியும்! பணிபுரியும் பொறியாளர்கள் அனைவரும் ஆரஞ்சு வண்ண பருத்தியினால் ஆனா பாய்லர் சூட் உடையை அணிய வேண்டும். எளிதில் தீப்பிடிக்காது, கடலில் யாராவது விழுந்தாலும் உடனே தெரியும் என்பதனால் இந்தத்தேர்வுகள். கால் விரல்களுக்கு மேல் இரும்பு தகடு அமைக்கப்பட்ட காலணிகளையே (Steel Toe Shoes) வேலை செய்யும்போது அணிய வேண்டும். அவை அடிப்பக்கத்தில் நிலை மின்சாரம் (Static Electricity) சேராத வகையில் அமைக்கப்பட்டவை. நடக்கும்போது எதன்மேலாவது பட்டு தீப்பொறி ஏதும் உருவாகக்கூடாது அல்லவா?
இவ்வளவு பாதுகாப்பு சிந்தனைகளுடன் அமைக்கப்பட்ட இடத்தில் ஒரு நாள் இரவு நான் ஏன் தீப்பொறி பறக்கும் துப்பாக்கியை எடுத்து பிளாட்பாரத்தை நோக்கி சுட்டேன் என்று இந்தத்தொடர் முடிவதற்குள் ஒரு முறை விளக்க வேண்டியது நிச்சயம் என் கடமை!

(தொடரும்)

0 Replies to “எண்ணெய்யும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள்”

  1. 2ம் பகுதியில் ஏராளமான தொழில்நுட்ப விபரங்கள், ஆயினும் அது அலுப்புத் தட்டாமல் தொடர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிற எழுத்து நடை, இறுதியில் அடுத்தபகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம் ஒரு சிறு முடிச்சுடன் முடித்திருக்கும் பாங்கு அனைத்தும் சிறப்பு தம்பி சுந்தர் வேதாந்தம். எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளவேண்டிய பல தகவல்களுடன் கூடிய சிறப்பான தொடர் – வாழ்த்துக்கள்
    எஸ்.சம்பத்,
    கட்டுரையாளர், சட்ட மொழிபெயர்ப்பாளர்
    மதுரை

  2. இவ்வளவு அருமையான நடையில் சுவாரஸ்யமாக தொழில்நுட்ப விபரங்களை விளக்கும் தொடரொன்றைப் படித்து பல மாதங்கள் ஆயிற்று. சொல்வனம் பதிப்புக்குழுவின் சில பதிவுகளை படித்துவிட்டு கடுப்பாகி “இனி சொல்வனம் தேறாது” என்ற முடிவுக்கு வந்த நேரத்தில் உங்கள் தொடர் கண்ணில்பட்டது எனக்கும் சொல்வனத்துக்கும் அதிஷ்டம். வாழ்த்துக்கள். தொடருங்கள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.