kamagra paypal


முகப்பு » உலக அரசியல், சமூகம், தீவிரவாதம், மகரந்தம்

குளக்கரை

நகரங்களில் பயங்கரவாதம்

DENMARK-ATTACKS-ISLAM-MEDIA

யூரோப்பியர்கள் ரொம்பவே குழம்பி இருக்கிறார்கள். ஒரு விஷயம் இரண்டு விஷயம் என்றில்லை, நிறைய விஷயங்களில். ஒரு புறம் அரசாங்கத்தின் சமூகத் தலையீடு சுருங்க வேண்டும் என்று கூக்குரல், இதனால் அதிகாரத்துக்கும் வரும் கட்சிகள், இன்னொரு புறம் அரசாங்கம் தனிமனித உரிமைகளில், சுதந்திரங்களில் தலையிடாமல், பொருளாதாரத்தை மட்டும் தூக்கி நிறுத்த எல்லா முயற்சியும் செய்ய வேண்டும் என்ற கூக்குரல், அதை எதிர்த்து பொருளாதாரத் துறையில்தான் அரசு சிறிதும் தலையிடக்கூடாது, அரசுடைய செலவு ஏகப்பட்ட அளவு சுருங்கினால் சந்தை அமைப்பு மக்களுக்கு பெரும் செல்வச்செழிப்பைக் கொணரும் என்ற பழைய கள்ளைப் புதிய மொந்தையில் கொடுக்கும் முயற்சி.

இது போலவே ரஷ்யாவை ஆதரிக்கும் ஒரு கூட்டம், இது அமெரிக்காவுக்கு நிரந்தர எதிர்ப்புக் கூட்டம், இன்னொரு புறம் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்க்கும் கும்பல், இதுவும் ரஷ்யாவின் நிரந்தர எதிரி. ஆக உக்ரைனுக்கு இப்போதைக்கு விடிவு காலம் பிறக்க வாய்ப்பில்லை.

மூன்றாவது திக்கில், ஆஃப்ரிக்கா, மேற்காசியா போன்ற நிலப்பரப்புகளில் இருந்து எதிலாவது தொத்திக் கொண்டு கடல் வழியே யூரோப்புக்குள் நுழைந்து விட முயலும் பொருளாதார அகதிகள், அரசியல் அகதிகள், வாய்ப்பு தேடி ஓடி வரும் குடியேற்ற முயற்சிக்காரர்கள். இவர்களைப் பல யூரோப்பிய நாடுகள் உள்ளே நுழைய விடாமல் கடும் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஃப்ரான்ஸ், யு.கே, இத்தலி, கிரீஸ் போன்றன இப்படி. இவற்றுக்குள்ளேயும், ஸ்காண்டிநேவிய ஜனநாயகங்கள் என்று தாராளமான குடியேற்றக் கொள்கைகளும், அகதிகளுக்குப் புகலிடம் தரும் கொள்கைகளும் வைத்திருப்பதாக இத்தனை காலமாகப் பெருமிதம் கொண்டிருந்த (இது அப்படி ஒன்றும் உண்மை இல்லை என்பது வேறு விஷயம்) நாடுகளிலும் இப்போது இந்த தடுப்புக்கு எதிர்ப்பு இருந்தாலும் அரசுகள் வேறு ஒரு காரணத்தால் தம் ‘தாராள’க் கொள்கைகளைக் கைவிடத் துவங்கி உள்ளன. அது என்ன வேறு ஒரு காரணம்?

அதுதாங்க, உலகப் புற்று நோயாக உருவெடுத்துள்ள இஸ்லாமிசப் பயங்கரத் தாக்குதல்கள், தவிர பொதுப்பயங்கரர் தாக்குதல்கள். இவற்றுக்கு எதிரான தடுப்பு முயற்சிகளில் குடியேறிகளைக் கடும் சோதிப்புக்கு உள்ளாக்குதல், கூடிய மட்டிலும் உள்ளேயே நுழைய விடாமல் இருத்தல், ஏற்கனவே உள்ளே வாழ்பவர்களுக்கு இடையூறுகளைக் கொடுத்து அவர்கள் மனம் தளர்ந்து தம் முன்னாள் நாடுகளுக்குத் திரும்பலாமா என்று யோசிக்க வைத்தல், யூதர்களைத் தாக்குவோரைக் கண்டு கொள்ளாமல் விட்டு, யூதர்களை யூரோப்பிலிருந்து ஓடிப் போகலாம் என்று எண்ண வைத்தல் என்று பற்பல கடுமை தேசியவாத நடவடிக்கைகள் ஒரு புறம். இன்னொரு புறம் குடியேற முயற்சிக்கும் அனைவரையும் வரவேற்பதோடு அவர்கள் சுதாரித்துத் தலையெடுக்கும் வரை அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற வழக்கமான இடதுசாரிக் கூச்சல்.

இப்போது ஒரு விசித்திரமான இருதலைக் கொள்ளி நிலை எழுந்துள்ளது. ஒரு புறம் பயங்கர வாதத்தால் திடீர் திடீரென்று நகரங்களில் கொலைவெறித் தாக்குதல்கள் நடக்கத் துவங்கி உள்ள நிலையில் பல யூரோப்பிய அரசுகள் நகரெங்கும் கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, மக்களைச் சோதிக்கும் முயற்சிகளை ரயில் நிலையங்கள், பஸ் டெர்மினஸ்கள் என்று பல பொதுப் போக்குவரத்துக்கான இடங்களில் மேற்கொள்ளத் துவங்கி இருக்கின்றனர். தொலைபேசித் தொடர்புகள், வலையுலக சஞ்சாரம் ஆகியனவும் நேரடிக் கண்காணிப்பிலும், மறைமுகக் கண்காணிப்பிலும் இருக்கின்றன. போலிஸாருக்கு கிட்டத் தட்ட ராணுவ வீரர்களுக்கு இருப்பது போன்ற ஆயுதங்களும், தாக்குதலில் அதே போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்பட்டவிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த பல பத்தாண்டுகளாக இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்து, மிரட்டி, பல வகை எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த யூரோப்பிய இடது/ வலது சாரியினர் இப்போது நாம் இஸ்ரேலிடம் இருந்து பயங்கரவாதத்துக்கு எதிராக நகர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று கற்க வேண்டும் என்று சொல்லத் துவங்கி உள்ளனர். அடடா, தனக்கு வந்தால்தான் தலைவலியும் திருகுவலியும் என்னவென்று தெரியும் என்று நம் ஊர்க் கிழங்கள் சொல்லுமே, அதுதான் எத்தனை நிஜம் பாருங்க! அப்படிச் சொல்லும் ஒரு கட்டுரையை சில நேரம் இடது, சில நேரம் வலதாக மூச்சு விடும் டெர் ஷ்பீகல் என்ற ஜெர்மன் சஞ்சிகை பிரசுரித்து மகிழ்ந்திருக்கிறது. இதோ அந்தக் கட்டுரை.

http://www.spiegel.de/international/europe/editorial-on-the-need-in-europe-to-address-threat-of-islamist-terror-a-1019395.html

இஸ்ரேலில் பாதுகாப்பின்மையின் அரசியல்

ISRAEL-POLITICS-LABOUR-ELECTION-HERZOG

அதே நேரம் இஸ்ரேலில் என்னவென்று பார்த்தால், அங்கு ஆட்சி புரிந்த வலது சாரி அரசுடைய அரசியலை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் சொல்கிறார், பயத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லும் அரசியலை ஒழித்துக் கட்டி, மக்கள் சுதந்திரமாக உலவும் அரசியலைப் பீடமேற்றுவோம் என்று குரல் கொடுக்கிறார். அதாவது இஸ்ரேலைப் பயங்கரவாதிகளுக்கும், இஸ்லாமியத்தின் யூத வெறுப்பு அரசியலுக்கும் தாரை வார்ப்போம் என்கிறார் என்றுவைத்துக் கொள்ளலாம். யூதர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஐசக் ஹெர்ஸாக் என்ற எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார், அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை மறுபடி கொளுத்தி வைப்பாராம். அவர் ஹீப்ருவில் என்ன சொல்லைப் பயன்படுத்தினார் என்று நமக்குத் தெரியாது, ஆனால் டெர் ஷிபிகல் தனக்குத் தெரிந்த இங்கிலிஷில் பயன்படுத்திய சொல் ‘reignite’. அமைதிக்கான பேச்சுவார்த்தை என்பதை ஏதோ சொக்கப்பனை போல ஹெர்ஸாக் உருவகிக்கிறாரா என்று தெரியவில்லை. இஸ்ரேலையே கொளுத்துவோம் என்று சொல்கிறாரோ?

http://www.spiegel.de/international/world/interview-with-israeli-prime-minister-candidate-isaac-herzog-a-1018502.html

ரத்தத் திசுக்களும் புற்று நோய்த் தடுப்பும்

blood-sample

சீனாவில் எல்லாமே பெரியதுதான். புற்று நோய்ப் பிரச்சனையும். அங்குள்ள பெரு நகரங்களில் பலவிதமான புதுவகைப் புற்று நோய்கள் உண்டு. உலகப் புற்று நோயாளிகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 27% சதவிகிதத்தினர் சீனாவில் தான் உள்ளனர். சீன டாக்டர்கள் இப்போது ரத்தத்தில் இருக்கும் திசுக்களை ஆராய்வதன் மூலம் கேன்சரின் சில வகைமாதிரிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியுமா என ஆய்வு செய்து வருகிறார்கள். மரபணு தொடர்பிணைப்புச் சோதனை மூலம் சிலவகையான கல்லீரல் புற்று நோய்களைக் கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களை இவ்விதம் ஆராய்ந்ததில் 17 வகையான புற்று நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர். ரத்த சோதிப்பு வழியாக திசுக்களை ஆய்வு செய்வதில் புது வழியைக் கண்டறிந்த சீன மருத்துவர்களுடன் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ  மையமும் இணைந்திருக்கிறது. எதிர்காலத்தில் வரப்போகும் புதுவகை புற்று நோய்களையேனும் முளையிலேயே கதிரியக்க மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியலாம்.

http://www.technologyreview.com/featuredstory/534991/liquid-biopsy/

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.