விதியின் பிழை காண் – பகுதி 4

உள்புறம் – பட்டத்திப் பாட்டியின் வீடு – பகல்
பட்டத்திப் பாட்டியின் பேரன் வீடு. தருமனும் நாகையும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாட்டி ஒரு விசிறியுடன் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். ஒரு பெண்மணி சோறு பரிமாறுகிறாள்.

பட்டத்திப் பாட்டி

உன் தாத்தா கொடுத்த பெட்டியைத் தேடியா இவ்வளவு தூரம் வந்தாய்? பெட்டியை நான் இங்கே தூக்கி வந்து என்ன செய்ய? சாத்தூரிலேயே தான் இருக்கிறது.

தருமன்
(சலிப்புடன்)

பாட்டி, அதை முன்னாடியே கொடுப்பதற்கென்ன?

பட்டத்திப் பாட்டி

உன்னிடம் நாலைந்து முறை சொல்ல வந்தேன். நீ இந்தக் காலத்துப் பிள்ளை. பாட்டிகளிடம் தெருவில் நின்று பேச மாட்டாய்.

நாகை

பாட்டி, அவர் என்னிடமே பேச மாட்டேன் என்கிறார். எப்பொழுதும் வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்.

பட்டத்திப் பாட்டி

சரி, வந்தது வந்தாய். குற்றால அருவியில் நல்ல சுகமான சாரல். போய்க குளித்து வா.

தருமனும் நாகையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

தருமன்

பாட்டி, இந்தப் பக்கம் குள்ளர்கள் இருப்பார்களாமே. அவர்களைப் பார்க்க வேண்டும்.

பரிமாறும் பெண்

முன்னால் அவர்கள் நிறைய பேர் உண்டு. ஆடிப் பெருக்குக்கு தென்காசிநாதர் கோவிலுக்கு வருவார்கள். இப்பொழுது இரண்டு மூன்று வருடங்களாக யாரையுமே பார்க்க முடிவதில்லை.

தருமன்

குற்றாலத்தில் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டேன்.

பரிமாறும் பெண்

அவர்களை அப்படி எளிதாகப் பார்க்க முடியாது. அவர்களே விரும்பி வந்து பார்த்தால் தான் உண்டு. குற்றால மலைக்கு மேலே புலிகள் நடமாடும் காட்டில் இருப்பார்கள் என்று கேள்வி.

பட்டத்திப் பாட்டி

உனக்கு எதற்கு அவர்களுடன் சகவாசம். காட்டுமிராண்டிகள். பிடித்துக் கட்டிப் போட்டு விடப் போகிறார்கள்

தருமன்
(எழுந்து கொண்டே)

எதற்கும் நாளை குற்றாலம் போய்ப் பார்த்து வருகிறேன்.
வெளிப்புறம் – வழுதி வீட்டுத் திண்ணை – பகல்
தென்னதரையன், வழுதி, வழுதியின் அம்மா மூவரும் வழுதி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள்.

வழுதி
(காலை ஆட்டியவாறே)

அரையரே, இங்கே பெண்கள் எல்லோருக்கும் என் மேல் ஒரு கண்.

வழுதியின் அம்மா

தலையெழுத்து. எல்லோருக்கும் திருமணம் ஆகிக் குழந்தை பெற்றாயிற்று. அய்யா, நீங்களாவது இவனுக்குப் புத்திமதி சொல்லித் திருமணம் செய்யச் சொல்லுங்கள்.

தென்னதரையன்
(சிரித்தபடி)

அம்மா, அரசாங்க வேலை. நீங்கள் பார்த்து வைக்கவே வேண்டாம். அவனே பார்த்துக் கொள்வான்.

வழுதி

அரையரே, இந்த மலைகளில் ஏதோ ரகசியம் என்றீர்களே, அது என்ன?

வழுதியின் அம்மா எழுந்து உள்ளே போகப் போகிறாள். தென்னதரையன் அவளை நிறுத்தி,
தென்னதரையன்

அம்மா, நீங்கள் பல நாட்களாக இங்கே இருக்கிறீர்களே. அரசர் அடிக்கடி இங்கே வந்து போவது தெரியுமா?

வழுதியின் அம்மா

பாண்டியரா? அப்படி ஒன்றும் தெரியாதே? ஆனால் இரண்டு, மூன்று வருடங்களாக இங்கே படை நடமாட்டம் அதிகம் தான்.

தென்னதரையன்

அது ஏன் தெரியுமா? ஊரில் என்ன சொல்கிறார்கள்?

வழுதியின் அம்மா
(தயக்கத்துடன்)

உங்களுக்குத் தெரியாதா, என்ன?

தென்னதரையன்

தெரியாது. சொல்லுங்களேன்.

வழுதியின் அம்மா

குற்றாலத்தில் இருந்து மலை செல்லும் பாதையில் பாண்டியர் காவலாட்கள் இருக்கிறார்கள். மலையில் யாரும் உள்ளே செல்ல முடிவதில்லை.

வழுதி

பாண்டியர் புது ராணி யாராவது வைத்திருக்கிறாரோ?

வழுதியின் அம்மா

இதெல்லாம் உனக்கு எதற்கு. வேலையைப் பார், நல்ல பெயர் வாங்கு.

அவள் உள்ளே போகிறாள்.

தென்னதரையன்
(வழுதியிடம்)

உண்மையில் அரசர் தென்காசி வழியாக மாதம் ஒரு முறை வருவார். அது ரகசியமான பயணம். யாருக்கும் தெரியாது. நானே அவருடன் செல்ல அனுமதி கிடையாது.

வழுதி

அப்படி என்ன தான் நடக்கிறது அங்கே?

தென்னதரையன் மெளனமாக இருக்கிறான். பிறகு,

தென்னதரையன்

நாளை என்னுடன் குற்றாலம் வருகிறாயா?





வெளிப்புறம் – குற்றால அருவியும் கோவிலும் – பகல்
அருவி தடதடவென்று விழுந்து கொண்டிருக்கிறது. சுற்றிப் பெரும் காடு. ஒரு சிறு பாதை அருவிக்கு அருகே செல்கிறது. அதன் பக்கத்தில் ஒரு கோவில். தருமனும் நாகையும் கோவிலருகே நின்று அருவியைப் பார்க்கிறார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர் வந்து நிற்கிறார். தருமன் அவருக்கு வணக்கம் செய்கிறான்.

தருமன்

உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். இங்கேயே இருந்து இந்த அருவியைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

பட்டர்

ஆமாம்
(beat)
சீக்கிரம் காது செவிடாவது தான் பலன்.

சொல்லி விட்டுப் பட்டர் கோவிலுக்குப் பின்புறம் உள்ள பாதையில் போகிறார். தருமனும் நாகையும் அவரைத் தொடர்கிறார்கள். ஒரு பெரிய அரசமரம். அதன் கீழே மேடை போலக் கட்டியிருக்கிறார்கள். அதில் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். பட்டர் அவர்கள் அருகே போய் அமர்கிறார்.
ஒருவர்

உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். இங்கேயே இருந்து இந்த அருவியைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

பட்டர்

நூறு வருடமாகக் காணாத யுத்தம்.

மற்றொருவர்

பாண்டியர் கோவிலூரில் பாசறை நட்டிருக்கிறார். களப்பிரனிடம் போன தூதன் இன்னும் வரவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது.

ஒருவர்

இந்தக் களப்பிரனுக்கு புத்தி ஏன் இப்படிப் போகிறது? குழந்தையைப் போய் யாராவது கடத்துவார்களா? கலி காலம்.

பட்டர்

அப்பா, களப்பிரன் குழந்தையைக் கடத்தி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்த யுத்தம் பல நாள் தயாரிப்பு. ஏன், இந்தக் குற்றால மலைகளிலே பாண்டியருக்கு ஒரு ரகசிய ஆயுதம் இருப்பதாகக் கேள்வி.

தருமனும் நாகையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். சற்றுத் தள்ளி மூன்று பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உரையாடலைக் கவனிக்கிறார்கள்.
ஒருவர்

ரகசிய ஆயுதமா? அது என்ன?

பட்டர்

தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் வரை, அதோ, அந்த மலையின் மறு பக்கம் முழுவதும் குள்ளர்களின் நாடு இருந்தது.

(சிலர் சற்றுத் தள்ளிப் பின்னால் தெரியும் மலையைப் பார்க்கிறார்கள்)
பட்டர்
(CONTD)

சித்திரா பௌர்ணமியன்று வந்தீர்களானால் இந்த அருவிப் பக்கமெல்லாம் அவர்கள் தான்.

ஆனால், இப்பொழுது ஒருவனைக் கூடக் காணோம். மிகவும் அதிசயமாக வந்த ஒருவனைப் பிடித்துக் கேட்டேன். எங்கே உன் மக்கள் என்று கேட்டேன். அவன் தான் பாண்டியரின் ரகசிய ஆயுதத்தைப் பற்றிச் சொன்னான்.

மற்றொருவர்

அட, குள்ளன் சொல்வதையா நம்புவது?

பட்டர்

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் அந்தக் குள்ளர்கள் நன்றாகப் பயந்திருக்கிரார்கள். அவர்களில் பாதிப் பேர் இறந்து போய் விட்டதாக அவன் சொன்னான்.

ஒருவர்

நல்லதாகப் போயிற்று. நரபலி கொடுப்பவர்கள். நர மாமிசம் தின்பவர்கள். பாண்டியர் உருப்படியாகச் செய்த ஒரே காரியம்.

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தவர்களில் ஒருவன், மாறன் என்னும் வீரன் பேசுகிறான்.
மாறன்

அய்யா, இங்கே சமீபத்தில் குள்ளர்கள் யாரையாவது பார்த்தீர்களா?

பட்டர்

கண்ணிலேயே படுவதில்லை. ஏன் கேட்கிறீர்கள்?

மாறன்

மலைத் தேன் விற்பவர்கள் நாங்கள். அவர்களிடம் வியாபாரம் செய்ய நினைத்தோம்.

ஒருவர்

பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பிடித்துச் சமைத்து விடப் போகிறார்கள்.

தருமன் அந்த மூவரையும் உற்றுப் பார்க்கிறான். அவர்கள் கைகளில் தழும்புகள் தெரிகின்றன.

பட்டர் எழுந்து போகிறார். மலைத்தேன் வியாபாரிகள் சாப்பிட்டு எழுகிறார்கள்.
தருமன்

அவர்களைப் பார்த்தாயா? மலைத்தேன் விற்பதாகச் சொன்னார்கள் இல்லையா?

நாகை

ஆமாம்

தருமன்

பொய் சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் கையில் வாள் தழும்புகள் தெரிகின்றன.

நாகை

பாண்டியர் ஆட்களோ?

தருமன்

ஆமாம். இவர்கள் பேசுவதைப் பார்த்தால் குள்ளர்கள் இருக்குமிடம் பற்றித் தெரிந்திருக்கலாம்.

அவர்கள் மூவரும் கோவிலுக்கு பின்னால் போகும் பாதையில் போகிறார்கள்.
தருமன்

அவர்கள் பின்னால் போகலாம் வா.

வெளிப்புறம் – குற்றால மலைப் பாதை – பகல்
தென்னதரையனும் வழுதியும் ஒரு அகலமான காட்டுப் பாதையில் மெதுவாக நடந்து செல்கிறார்கள். பாதை மேலே ஏறிப் போகிறது. சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று வீசுகிறது.

வழுதி

அரையரே, அரசர் ஏதோ கோபத்தில் பேசியிருப்பார். அதற்காக நீங்கள் வேலையை விட்டுக் கிளம்பி இருக்கக் கூடாது.

தென்னதரையன்

அப்படியில்லை. என்னுடைய வேலை அரச குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது. அதில் நான் தவறி விட்டேன். என் காவலில் இளவரசனைக் கடத்தி இருக்கிறார்கள். அதற்கு மேல் எனக்கு என்ன அவமானம் வேண்டும்?

பாதை முன்னால் திரும்புகிறது.
வழுதி

இளவரசன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்றா நினைக்கிறீர்கள்?

தென்னதரையன் பதில் சொல்லும் முன்னால் இருவரும் பாதை வளைவில் திரும்புகிறார்கள். சற்றுத் தூரத்தில் சில வேல் தாங்கிய வீரர்கள் நிற்கிறார்கள். அருகே இரண்டு மூன்று குதிரைகள்.
வழுதி

அட. இப்போது என்ன செய்வது? இவர்களைத் தாண்டி எப்படிப் போவது?

தென்னதரையன்

கவலைப்படாதே. என்னிடம் இன்னும் அரசரின் இலச்சினை இருக்கிறது.

வழுதி

அரையரே, அதை இப்படி பயன்படுத்துவது குற்றம் இல்லையா?

தென்னதரையன் பதில் சொல்லாமல் முன்னால் நடக்கிறான். வீரர்கள் வேல்களைப் பாதைக்குக் குறுக்கே மறிக்கிறார்கள்.
வீரர்கள் தலைவன்

யார் நீங்கள்? இங்கு என்ன வேலை?

தென்னதரையன்

அரசரின் ஆணைப்படி இங்கு வந்திருக்கிறோம்.

தென்னதரையன் இடைத்துணியில் இருந்து அரசரின் இலச்சினையை எடுத்துக் காட்டுகிறான்.

வீரர்கள் தலைவன் அதை வாங்கி உற்றுப் பார்க்கிறான். பிறகு இலச்சினையைத் திருப்பிக் கொடுக்கிறான்.
வீரர்கள் தலைவன்

வழி விடுங்களப்பா

வேல்கள் பிரிகின்றன. தென்னதரையனும் வழுதியும் தொடர்ந்து போகிறார்கள்.
வழுதி
(சற்று நேரம் கழித்து)

இங்கு ஒன்றுமே இல்லையே. இதற்கா இவ்வளவு காவல்?

இரு பக்கமும் பாறைகள் உயர்ந்திருக்கின்றன. பாதை மறுபடி மேலேறிச் செல்கிறது.

சற்று நேரத்தில் ஒரு மேட்டை அடைகிறார்கள். அங்கிருந்து பாதை கீழிறங்கிச் செல்கிறது. பாதையின் விளிம்பில் நின்றபடி கீழே பார்க்கிறான் தென்னதரையன்.
தென்னதரையன்
(கீழே கையை காட்டியபடி)

பாண்டியரின் ரகசிய ஆயுதம்.

கீழே ஒரு பள்ளத்தாக்கு தெரிகிறது. பல வீடுகளும் கூடாரங்களும் தெரிகின்றன. பல உலைக்களங்களில் இருந்து புகை மேலே கிளம்புகிறது. பெரும் மைதானங்கள் தெரிகின்றன. அவற்றில் படை வீரர்கள் பயிற்சி எடுப்பது சிறிதாகத் தெரிகிறது. அங்குமிங்கும் வண்டிகள் போகின்றன.

அது ஒரு சிறு நகரத்தின் அளவுக்குப் பெரியதான ஒரு படையின் பாசறை.

அந்தப் பாசறையைச் சுற்றி மரங்கள் சற்று தூரத்திற்கு இல்லை. மலையின் அழகுக்குக் குறுக்கே ஒரு வெட்டைப் போல இருக்கிறது
அது.
வழுதி

இது என்ன? இவ்வளவு பெரிய படை இங்கே இருக்கிறதா? யாருக்கும் தெரியாமல்?

தென்னதரையன்

ஆமாம். வழுதி, இது மட்டுமல்ல. இது போன்ற பல பாசறைகள் இந்த மலைகளுக்கு உள்ளே இருக்கின்றன. இந்தப் படையைத் தான் பாண்டியர் மூன்று வருடங்களாகச் சேர்த்து வருகிறார்.

இருவரும் பாதையில் கீழே நடக்கத் தொடங்குகிறார்கள்.
தென்னதரையன்

சாத்தூருக்குப் போகும் வழியில் சில குள்ளர்களைப் பார்த்தோம். நினைவிருக்கிறதா? அவர்களில் ஒருவனை கோவிலில் கூடப் பிடித்தோம்.

வழுதி

ஆமாம். நினைவிருக்கிறது.

தென்னதரையன்

இந்த மலைகள் முழுவதும் அவர்கள் இடம் தான். தம்முடைய படையை ரகசியமாகக் கூட்டப் பாண்டியர் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மூன்று வருடங்களாகக் குள்ளர்களுக்கும் பாண்டியருக்கும் ஒத்து வரவில்லை. இதனால் நெல்வேலியில் மறுபடி மறுபடி வந்து தொந்திரவு செய்தார்கள். அப்படித் தான் எனக்கு இதைப் பற்றிச் சந்தேகம் வந்தது.

வழுதி

இதற்காகத் தான் சாத்தூர் வரை வந்தார்களோ?

தென்னதரையன்

ஆமாம். அரசர் அங்கும் அவர்களை விரட்டி விட்டார். இப்படிப் படை திரட்ட ரகசியமாக இடம் வேண்டாமா? அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

வெளிப்புறம் – மலைப் பாதை – பகல்
நாகை மலைப் பாதையில் மெதுவாக நடக்கிறாள். தருமன் சற்று முன்னால் நடக்கிறான்.

நாகை

தருமா, கால் வலிக்கிறது.

தருமன் அவள் வரும் வரையில் நிற்கிறான். பிறகு ஒரு வளைவின் பின்னால் நின்று எட்டிப் பார்க்கிறான். முன்னால் அந்த வணிகர்கள் செல்கிறார்கள்.

நாகை

பாண்டியரின் ஆட்கள் நிம்மதியாக மலையில் கழிக்கப் போகிறார்களோ என்னவோ.

தருமன் அவர்கள் மறைந்த பின்னர் அந்தப் பாதையில் தொடர்கிறான். சீக்கிரத்தில் பாதை முடிகிறது. வெறும் கல்லும் முள்ளுமாக இருக்கிறது. சிறிது தூரத்தில் ஒரு ஓடை சலச்சலக்கிறது. அதன் கரையில் தருமனும் நாகையும் நடக்கிறார்கள்.

நாகை

அவர்கள் எங்கே?

இருவரும் சுற்றிப் பார்க்கிறார்கள்.

நாகை

திரும்பிப் போக வழி தெரியுமா?

திடீரென்று ஒரு அலறல் சத்தம் கேட்கிறது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்புகிறார்கள். சற்றுத் தள்ளிச் சத்தம் வந்த திசையை நோக்கி மெதுவாக நடக்கிறார்கள். காடு அடர்ந்து இருக்கிறது.

மறுபடியும் ஒரு தீனமான புலம்பல் கேட்கிறது. தருமன் குனிந்தபடி நடக்கிறான். ஒரு இடத்தில் ஒரு பெரிய மரம் விழுந்து கிடக்கிறது. அதற்குப் பின்னால் வந்து நின்று எட்டிப் பார்க்கிறான். நாகையும் அவன் அருகில் வந்து நிற்கிறாள்.

எதிரே ஒரு பழங்காலக் கட்டிடம். கிட்டத்தட்ட முழுதுமாக இடிந்திருக்கிறது. அந்த இடிபாடுகளின் இடையே இரண்டு தூண்கள் நிற்கின்றன. அவற்றில் முன்னும் பின்னுமாக நான்கு குள்ளர்கள் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் முகங்களில் தண்ணீர் விட்டு அடிக்கிறான் ஒரு “வியாபாரி”. அவன் பாண்டிய வீரன் என்று இப்போது தெளிவாகத் தெரிகிறது.

நடுவே ஒரு ரத்தம் சிந்தும் கத்தியுடன் நிற்கிறான் மற்றொரு வீரன்.. குள்ளர்கள் முகங்களில் ரத்தம் தெரிகிறது. தருமன் சுற்றிப் பார்க்கிறான். மூன்றாவது வீரனைக் காணவில்லை.

மாறன்
(கட்டிப் போடப்பட்ட ஒரு குள்ளனிடம்)

அடேய் குரங்கா, எழுந்திரு.

வீரன்-2

எங்கே இருக்கிறான் மலையன்?

குள்ளன் சும்மா இருக்கிறான். அவன் முகத்தில் ஒரு அடி விழுகிறது. முதல் வீரன் கத்தியுடன் சுற்றி வருகிறான்.

மாறன்
மலையில் ஒளிந்து எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. சொல், குரங்குப் பயலே.

வீரன்-2
இவர்களிடம் பேசிப் பயனில்லை, மாறா. மோட்சம் கொடுத்து விடலாம்.

குள்ளன் ஒருவன் நிமிர்கிறான்.

குள்ளன்
இந்த ஜன்மத்தில் நீங்கள் மலையன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது.

மாறன்
(சிரித்தபடி)
குள்ளா, உனக்கு எங்கள் பாசறையில் உள்ள தூக்கு மேடை பற்றித் தெரியுமா?

குள்ளன் திமிருகிறான்.

மாறன்
(CONTD)
ஆஹா. உங்கள் எல்லோருக்கும் அந்தத் தூக்குப் பற்றித் தெரிந்திருக்கும். அதில் மலையனுக்கும் உங்களுக்கும் தனிக் கயிறுகள் ஆயத்தமாக இருக்கின்றன.

வீரன் உரத்துச் சிரிக்கிறான். கோவிலுக்குப் பின்னால் இருக்கும் காட்டில் இருந்து மூன்றாவது வீரன்
வருகிறான்.

வீரன்-3

மாறா, இப்படி வா.

மூன்று வீரர்களும் கூடிப் பேசுகிறார்கள். பேசும் போது ஒரு வீரன் சுற்றி உள்ள மரங்களை உற்றுப் பார்க்கிறான்.

திடீரென்று மரங்களின் பின்னால் இருந்து ஒரு ஓலம் கேட்கிறது. வீரர்கள் திடுக்கிட்டுத் திரும்புகிறார்கள். வாளை ஆயத்தமாகப் பிடிக்கிறார்கள்.

“பூக்” என்று ஒரு சத்தம் கேட்கிறது. வீரன்-2 அலறிக் கீழே விழுகிறான். அவன் கழுத்தைப் பிடித்தபடித் துடிக்கிறான்.

மற்ற இரு வீரர்களும் திரும்பி ஓடுகிறார்கள். அவர்களை தொடர்ந்து “பூக்”, “பூக்” என்று சத்தம் கேட்கிறது. வீரன்-3 கீழே விழுகிறான். மூன்றாமவன் காட்டுக்குள் ஓடுகிறான்.

இன்னொரு பக்கம் காட்டுக்குள் இருந்து சில குள்ளர்கள் ஓடி வருகிறார்கள்.

நாகை
(மெதுவாக)
இவர்கள் இத்தனை நேரம் இங்கு தான் ஒளிந்திருந்தார்கள் போலிருக்கிறது.

அவர்களுக்குப் பின்னால் “கரக்” என்று ஒரு சத்தம் கேட்கிறது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்புகிறார்கள்.

ஒரு குள்ளன் கையில் கத்தியுடன் நிற்கிறான்.
வெளிப்புறம் – அடர்ந்த காட்டுப் பாதை – பகல்
காட்டுச் செடிகளையும் மரக் கிளைகளையும் விலக்கிக் கொண்டு தருமனும் நாகையும் போகிறார்கள். அவர்களுக்கு முன்னால் சில குள்ளர்கள் போகிறார்கள். தூண்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த குள்ளர்களும் பின்னால் வருகிறார்கள்.

ஊர்வலமாக மெதுவாகச் செல்கிறார்கள். சற்று நேரத்தில், சற்றே திறந்த ஒரு இடத்தில் நிற்கிறது.

முன்னால் சென்ற குள்ளர்கள் அவர்களுக்குள் கூடிப் பேசுகிறார்கள்.

நாகை

நம்மை அப்படியே தின்னலாமா இல்லை வேக வைத்தால் நன்றாக இருக்குமா என்று பேசுகிறார்கள் பார்.

குள்ளர்களில் ஒருவன் அவர்களருகே வருகிறான். அவன் கையில் தோல் பட்டை ஒன்று இருக்கிறது.

குள்ளன்

இரண்டு பேரும் குனியுங்கள்

தருமன் குனிகிறான். அவன் கண்கள் தோல் பட்டையால் கட்டப்படுகிறது.

திரை இருட்டாகிறது.

வெளிப்புறம் – ரகசியப் படைவீடு – பகல்
தென்னதரையனும் வழுதியும் அந்த பாசறையின் வழியே மெதுவாக நடந்து போகிறார்கள். நண்பகல் தாண்டிச் சற்று நேரம் சென்று விட்டது. கூரையிட்ட பெரும் தொழிற்சாலை ஒன்றைத் தாண்டி நடக்கிறார்கள். உள்ளே இருந்து வண்டிகளில் வேல்களும் கத்திகளும் செல்கின்றன. அடுத்து ஒரு சாப்பாட்டுக் கூடம் இருக்கிறது. அதன் உள்ளே பல வீரர்கள் போய் வருகிறார்கள்.

மெதுவாக நடக்கும் பொழுது ஒரு பெரும் மைதானம் வருகிறது. அதன் நடுவே குதிரைகள் சுற்றி ஓட வீரர்கள் வாட்களால் மோதுகிறார்கள். சற்றுத் தள்ளி ஒரு சில மரப் பலகைகள் நட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன. சில வீரர்கள் அவற்றில் அம்பு விட்டுப் பயிற்சி செய்கிறார்கள். ஒரு அம்பு சரேலென்று பாய்ந்து பலகையின் நடுவில் குத்திட்டு நிற்கிறது.

தென்னதரையன் மெதுவாகத் திரும்பி அந்த மைதானத்தின் ஓரத்தில் தெரியும் பயங்கரக் காட்சியைப் பார்க்கிறான்.

ஒரு அகலமான தூக்கு மேடை. அதில் பத்துப் பதினைந்து உடல்கள் தொங்குகின்றன. தள்ளி இருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், மேடைக்குக் கீழே சில குள்ளர்களை வீரர்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள். மேடையின் மேலே நாலைந்து பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வெய்யிலில் அந்த உடல்கள் மெதுவாக ஆடுகின்றன. மேலே சில பருந்துகள் சுற்றுகின்றன. தூக்கு மேடையின் மேலே பல காக்கைகள் உட்கார்ந்து கத்துகின்றன.

வெளிப்புறம் – குள்ளர்களின் மறைவிடம் – பகல்
திரையில் வெளிச்சம் தெரிகிறது. தருமனின் கண் கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவன் சுற்றிப் பார்க்கிறான். அவன் அருகில் நாகை நிற்கிறாள். அவர்கள் இருப்பது ஒரு பழைய கோவிலின் வெளியே. சுற்றிச் சிறு சந்நிதிகள் இருக்கின்றன. சற்றுத் தள்ளி ஒரு பெரும் சுவர், கோட்டைச் சுவரைப் போலப் போகிறது.

பல குள்ளர்கள் அவர்களைச் சுற்றி நிற்கிறார்கள். குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு குள்ளர் பெண்மணிகள் சில பேர். சில சிறுவர், சிறுமியர். எல்லோரும் தருமனையும் நாகையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

குள்ளர்களில் ஒருவன் ஒரு தடித்த கொடியைக் கையில் வைத்திருக்கிறான்

குள்ளன்

கீழே உட்கார்.

தருமனும் நாகையும் அந்தச் சந்நிதியின் தூண் அருகே அமர்கிறார்கள். சுற்றிச் சலசலப்பு அதிகமாகிறது.

அந்தக் குள்ளன் அவர்கள் இருவர் கைகளையும் இணைத்துத் தூணோடு சேர்த்துக் கட்டுகிறான்.

பிறகு, பல குள்ளர்கள் விலகிப் போகிறார்கள். சிறுவர் சிறுமியர் மட்டும் தருமனையும் நாகையையும் பார்த்தவாறே நிற்கிறார்கள்.

நாகை

தருமா, முதுகு சொரிகிறது.

அந்த கோட்டையின் உள்ளே அங்குமிங்கும் பெண்கள் விளக்கு ஏற்றுகிறார்கள்.

சந்நிதிக்கு உள்ளிருந்து ஒரு வினோதமான பாட்டுச் சத்தம் கேட்கிறது. தருமனும் நாகையும் உள்ளே பார்க்கிறார்கள். ஒரு வயதான குள்ளர் ஒருவர் பாடியவாறே வெளியே வருகிறார். அவர் கையில் ஒரு சிறு உடுக்கு இருக்கிறது. அதைத் தட்டியவாறு பாடுகிறார்.

அவர்கள் இருவரையும் பார்த்து விட்டுப் பாட்டை நிறுத்துகிறார். குழந்தைகள் அவரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

சிறுமி
(தருமனைக் காட்டி)

தாத்தா, பாண்டியர்கள்.

தாத்தா சந்நிதியின் திண்ணையில் அமர்ந்து கொள்கிறார்.

குள்ளர் தாத்தா

யார் நீங்கள்? ஒற்றர்களா?

நாகை

ஐயோ, இல்லை தாத்தா. சோதிடர் இவர்.

தருமன்

முதலில் எங்களை அவிழ்த்து விடும்

சிறுமி

தாத்தா, அவிழ்த்து விடாதே. நம்மைப் பிடித்துக் கொள்வார்கள்.

குள்ளர் தாத்தா

எந்த ஊர் நீங்கள்?

தருமன்

சாத்தூர்

குள்ளர் தாத்தா

ஹூம். கேள்விப்பட்டதில்லை. மலைப் பகுதி இல்லையோ?

தருமன்

இல்லை. வெறும் முள் காடுகள்.

குள்ளர் தாத்தா

நான் என் வாழ்க்கையில் இந்த மலைப் பகுதியைத் தாண்டிப் போனதில்லை. இவ்வளவு ஏன்? கடல் என்று ஒன்று இருப்பதே எங்கள் பழைய பாட்டுக்களை வைத்துத் தான் தெரியும்.

தருமன் சுற்றிப் பார்க்கிறான்.

தருமன்

இது உங்கள் கோவிலா?

குள்ளர் தாத்தா
(சிரிக்கிறார்)

எங்களுக்குக் கோவில்கள் கிடையாது. புலி, யானை தான் நம் தெய்வங்கள். காடு தான் கோவில். இந்தக் கோவில் பழங்கால மன்னர் யாரோ கட்டியது. இப்போது அந்தத் தெய்வங்களும் இல்லை.

நாகை
(ஆச்சரியத்துடன்)

தெய்வங்கள் மாறுவார்களா என்ன?

குள்ளர் தாத்தா

தெய்வங்கள் மாறும். பழைய கோவில்கள் மண்ணாகும். பழைய மக்கள் மாண்டு போவார்கள். உங்கள் புராணங்களில் வரும் காலச் சக்கரத்தின் அடியில் இன்று நாங்கள் மடிவோம்.

தருமன் அவரை உற்றுப் பார்க்கிறான்.

நாகை

பெரியவரே, உங்களுக்குப் புராணங்கள் கிடையாதா?

சிறுவன்

தாத்தா, குள்ளர் சரித்திரம் சொல்லேன்.

சிறுவர்கள் சுற்றி அமர்ந்து கொள்கிறார்கள். பெரியவர் நிமிர்ந்து உட்கார்கிறார்.

ஒரு பெண் அந்தச் சந்நிதியில் தீபம் ஏற்றுகிறாள்.

குள்ளர் தாத்தா

மனிதர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் தான் இருந்தார்கள். காங்கு என்ற ஆதிக் கடவுள் அவர்களுடன் சேர்ந்தே இருந்தான். ஒரு நாள் களிமண்ணால் மனிதர்களை உருவாக்கும் பொழுது, நிறைய மது அருந்திப் படுத்து விட்டான் காங்கு. மயக்கத்தில் அவன் உருவாக்கிய மனிதர்கள் உயரமாகி விட்டார்கள். அவர்கள் கடவுளுடன் சண்டைக்குப் போனார்கள். கோபம கொண்ட காங்கு அவர்களை உலகம் முழுவதும் துரத்தி விட்டான். அப்படித் தான் குள்ளர்கள் இந்த மலைச் சாரலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சிறுவர்கள் ஆர்வத்துடன் தாத்தா முகத்தையே பார்க்கிறார்கள்.

குள்ளர் தாத்தா
(CONTD)

பல நூறு வருடங்களுக்கு குள்ளர்கள் தான் இந்த நாட்டில் இருந்தார்கள். நமக்கு மன்னர்கள் கிடையாது. நாம் பேசியது தமிழ் இல்லை. நம் மலை மொழி இப்பொழுது அழிந்து விட்டது.

விளக்கு வெளிச்சத்தில் தாத்தாவின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் தெரிகின்றன.

குள்ளர் தாத்தா
(CONTD)

ஒரு நாள், தமிழ் அரசன் சோமசுந்தர பாண்டியன் இந்த மலைக் காடுகளில் வழி தவறி வந்து விட்டான். புலியால் தாக்கப்பட்ட அவனை, குள்ளர்கள் தான் காப்பாற்றினார்கள். அவனுக்கு வழி தெரியாமல் இருக்க அவன் கண்ணைக் கட்டி காட்டுக்கு வெளியே அனுப்பி வைத்தார்கள். ஆனால் பாண்டியன் வழி நெடுக உள்ள மகிழம் பூவின் வாசனையை வைத்து வழி கண்டுபிடித்து விட்டான்.

கோவிலின் இடிந்த தூண்களும், அவற்றில் உள்ள பழைய அசுரர் சிற்பங்களும் தெரிகின்றன.

(தாத்தா V.O.)

சோமசுந்தர பாண்டியன் திரும்பி வந்தான். பெரும் படையுடன் குள்ளர்களைத் தாக்கினான். ஆனால் காட்டில் உள்ள புலி, யானை, சிங்கங்கள் அப்படையைத் துரத்தி அடித்தன. தோல்வியை ஒப்புக் கொண்ட பாண்டியன் குள்ளர் நாட்டை தானும் தன் சந்ததிகளும் எந்தக் காரணத்தாலும் தாக்க மாட்டோம் என்று சத்தியம் செய்தான்.

ஆனாலும், நம் காடு சிறிதாகிக் கொண்டே வருகிறது. பாண்டியனுக்கு அவன் தெய்வங்கள் துணை இருக்கின்றன.

கோட்டைச் சுவரைத் தாண்டி அடர்ந்த காடு இருண்டு கிடக்கிறது.

(தாத்தா V.O.)

இந்த மலைகளைத் தாண்டினால் பெரும் கடல் ஒன்று இருக்கிறது. அந்தக் கடலுக்கு அப்பால், உலகத்தின் நடுவே, குள்ளர்களின் நாடு ஒன்று இருக்கிறது. அவர்கள் மிகப் பலசாலிகள். மலை நாட்டிற்கு ஒரு நாள் அவர்கள் வருவார்கள். வந்து நம் எல்லோரையும் திரும்ப அழைத்துப் போவார்கள்.

(சிறுவன் V.O.)

எப்போது வருவார்கள் தாத்தா?

(தாத்தா V.O.)

இன்று இரவே கூட வரலாம், யார் கண்டது.

காட்டின் உள்ளிருந்து பலர் நடக்கும் சத்தம் கேட்கிறது.

வெளிப்புறம் – படை வீடு – பகல்
தென்னதரையனும் வழுதியும் படை வீட்டின் உள்ளே இன்னும் நடக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்ப் பக்கம் சில குதிரைகள் தடதடவென்று போகின்றன. சற்றுத் தள்ளி அவை சரேலென்று நிற்கின்றன.

ஒருவன் மட்டும் குதிரையைத் திருப்பிக் கொண்டு அவரகளைப் பார்த்து வருகிறான். பக்கத்தில் வந்து விட்டு,

குதிரை வீரன்

தென்னதரையரே! எங்கே இந்தப் பக்கம்?

தென்னதரையன்
(திகைப்புடன்)

அரசர் வருவதற்கு முன்னால் காவலுக்கு வந்தேன்.

குதிரை வீரன்

அரசர் இங்கு வருகிறாரா என்ன?

தென்னதரையன்

அப்படித் தான் சொன்னார்.

குதிரை வீரன்

என்னுடன் வாருங்கள். உச்சி வேளையாக இருக்கிறது. என் கூடாரத்தில் சமையலும் ஆயத்தமாக இருக்கும்.

தென்னதரையன்
(யோசித்து)

சரி, வருகிறேன்.

குதிரை வீரன் இறங்கி அவர்களுடன் நடந்து வருகிறான். முன்னால் சென்ற குதிரைகள் மெதுவாக நடக்கின்றன.

வழுதி

என்ன சமையல் இன்று?

குதிரை வீரன்

இங்கேயே ஒரு தோட்டமும், சில பயிர் வகைகளும் இருக்கின்றன. அவற்றை வைத்து ஏதாவது கூட்டாஞ்சோறு ஆக்கியிருப்பார்கள்.

தென்னதரையனும் வழுதியும் சுற்றிப் பார்த்தபடி நடக்கிறார்கள்.

வீரனின் கூடாரம் அருகிலேயே இருக்கிறது. வீரன் குதிரையை விட்டு விட்டு உள்ளே போகிறான். வழுதியும் தென்னதரையனும் பின்னால் போகிறார்கள்.

உள்ளே சற்று மங்கலான் வெளிச்சமாக இருக்கிறது. கண்கள் பழகும் போது, வீரனும், அவன் ஆட்கள் இருவரும் உருவிய கத்தியோடு நிற்பது தெரிகிறது.

குதிரை வீரன்

அரையரே, கத்தியைக் கீழே போடும்.

தென்னதரையன் மெதுவாக இடைக் கச்சை அவிழ்க்கிறான். வாள் கீழே விழுகிறது. வழுதியும் அவன் கத்தியைக் கீழே போடுகிறான்.

குதிரை வீரன்

அரையரே, நீங்கள் அரசர் சேவையில் இல்லை. இல்லாத பொழுது அரச இலச்சினையைக் காட்டி இங்கே நுழைந்தது குற்றம்.

தென்னதரையன்
(இடைக் கச்சைக் காட்டி)

இலச்சினை அதில் இருக்கிறது.

வழுதி

இப்போழுது எல்லோரும் சாப்பிடப் போகலாமா?



vpk_2

உள்புறம் – சிறைக் கட்டிடம் – பகல்
தென்னதரையனையும் வழுதியையும் கைகளைக் கட்டி ஒரு பெரும் அறைக்குள் தள்ளுகிறார்கள். இருவரும் தடுமாறி நிற்கிறார்கள். உள்ளே பெரிய எண்ணை விளக்குகள் எரிகின்றன. அந்த அறை விலாசமாக இருக்கிறது. அதன் பாதி வரை பல உருவங்கள் படுத்திருக்கின்றன. உற்றுப் பார்த்தால் அவர்கள் குள்ளர்கள் என்று தெரிகிறது. பெண்கள் முகங்களும், குழந்தைகள் முகங்களும் தெரிகின்றன.

வழுதி

நம் மேல் எவ்வளவு மரியாதை இருந்தால் இவர்களுடன் நம்மைச் சேர்த்து வைத்திருப்பார்கள்?

சிலர் அழும் சத்தம் கேட்கிறது.

தென்னதரையனும் வழுதியும் ஒரு ஓரமாகப் போய் உட்கார்கிறார்கள். தென்னதரையன் கண்ணை மூடுகிறான்.

திடீரென்று அவன் கண் முன்னால் அந்தத் தூக்கு மேடை தெரிகிறது. யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. திடுக்கிட்டுக் கண் விழிக்கிறான்.

அந்தச் சிறைக்குள்ளே நான்கு பாண்டிய வீரர்கள் நிற்கிறார்கள்.

வீரன் – 1

ஐந்து பேர் போதும்.

குள்ளர்கள் இப்போது அறையின் அடுத்த பக்கம் குவிந்து நிற்கிறார்கள். சிலர் வாய் விட்டு அலறுகிறார்கள்.

வீரன் – 1

உம், நேரமில்லை, இழுத்து வா.

வீரர்கள் கத்தியுடன் குள்ளர்களை அணுகுகிறார்கள். இரண்டு பெண்களைப் பிடித்து இழுக்கிறார்கள். இன்னொருவன் இரண்டு குள்ளர்களைப் பிடித்து இழுக்கிறான். ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது.

தென்னதரையன் எழுந்து நிற்கிறான்.

தென்னதரையன்

அடேய், இது என்ன அக்கிரமம். எங்கே கொண்டு செல்கிறீர்கள் அவர்களை?

வீரர்களில் ஒருவன் எட்டி அரையனைத் தள்ளி விடுகிறான். குள்ளர்களை இழுத்தபடி வீரர்கள் வெளியே செல்கிறார்கள்.

தென்னதரையன்

வழுதி, இது என்ன? பெண்களைத் தூக்கில் போடும் நிலைமைக்கா பாண்டிய நாடு வந்து விட்டது?

குள்ளனின் குரல்

ஐயா, இங்கே பத்துச் சிறுவர்கள் இருந்தார்கள். இப்பொழுது நான்கு பேர் தான் இருக்கிறார்கள்.

தென்னதரையன்

வழுதி, இது என்ன? பெண்களைத் தூக்கில் போடும் நிலைமைக்கா பாண்டிய நாடு வந்து விட்டது?

வழுதி

யார் பேசியது?

குள்ளனின் குரல்

சற்று நேரத்தில் சாகப் போகிறோம். அறிமுகம் தேவையா என்ன?

தென்னதரையன்

நீங்கள் யார்? என்ன குற்றம் செய்தீர்கள்?

குள்ளனின் குரல்

தெரியவில்லை. பாண்டியருக்கு மதுரை வேண்டுமாம். நாங்கள் குறுக்கே மாட்டிக் கொண்டோம் அவ்வளவு தான்.

தென்னதரையன்

வழுதி, பாண்டியரின் மண்ணாசை எல்லை மீறிப் போய் விட்டது.

வழுதி

இப்பொழுது இவர்களை எல்லாம் தூக்கில் போடுவதில் என்ன பயன்?

தென்னதரையன்

தெரியவில்லை

குள்ளனின் குரல்

நாங்கள் இருந்தால் என்ன பயன் என்று கேட்கும் பூமி இது.

வெளியே மறுபடி வீரர்களின் காலடிச் சத்தம் கேட்கிறது.

குள்ளனின் குரல்

வருகிறார்கள்

ஓலச் சத்தம் ஒன்று குள்ளர்களிடம் இருந்து கிளம்புகிறது. குழந்தைகள் பெண்களிடம் ஒட்டிக் கொள்கின்றன.

தென்னதரையன்

வழுதி, என் கைக் கட்டை அவிழ்த்து விடு.

வழுதி

அது முடிந்தால் நான் ஏன் இப்படி அமர்ந்திருக்கிறேன்?

கூடாரத்தில் பரபரப்பு அதிகமாகிறது. தென்னதரையன் கையை முறுக்குகிறான். வழுதி கைக்கட்டுடன் துள்ளி எழுகிறான்.
நாம் முதன்முதலில் வழுதியின் வண்மையைப் பார்க்கிறோம் – அவன் முதுகுக்குப் பின்னால் இருந்த கட்டு இப்போது முன்னால் இருக்கிறது.

வழுதி

அரையரே, இரும்.

எண்ணை விளக்கின் முன்னால் கைக்கட்டைக் காட்டுகிறான். கட்டு எரிந்து அவன் கைகள் பிரிகின்றன. அவன் விளக்கின் திரியை எடுத்து தென்னதரையன் முன்னால் காட்டுகிறான். தென்னதரையனின் கைகட்டும் பிரிகிறது.

இருவரும் அந்தச் சிறையின் கதவுக்கு அருகே போய் நிற்கிறார்கள்.

வெளியே சொத், சொத் என்று ஏதோ விழும் சத்தம் கேட்கிறது.

கதவு திறக்கிறது. மலையன் என்னும் குள்ளன், (நாம் முதன் முதலில் சாத்தூர் சாலையில் பார்த்தவன்; பாண்டியர் காலில் விழுந்தவன்) உள்ளே வருகிறான்.

தென்னதரையனும் வழுதியும் திகைத்து நிற்கிறார்கள். குள்ளர்கள், “மலையா, மலையா” என்று கத்துகிறார்கள்.

மலையன் தென்னதரையனைப் பார்த்துக் கத்தியை ஓங்குகிறான்.

குள்ளனின் குரல்

மலையா, அவர்கள் நம் பக்கம்.

மலையன் கத்தியை இறக்குகிறான்.

வெளிப்புறம் – படை வீட்டின் எல்லைப் பகுதி – பகல்
சிறைக்கு வெளியே குள்ளர்கள் ஓடுகிறார்கள். வெளியே சில வீரர்கள் விழுந்து கிடக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் புகை கிளம்புகிறது. அரையனும் வழுதியும் குள்ளர்களோடு சேர்ந்து சற்றுத் தொலைவில் தெரியும் காட்டை நோக்கி ஓடுகிறார்கள்.

அவர்கள் ஓடும் பொழுதே சில குள்ளர்கள் அம்பு பாய்ந்து கீழே விழுகிறார்கள். அடிபட்டு விழும் ஒரு பெண் அருகே குனிந்து அழுகிறாள் ஒரு சிறுமி.

தென்னதரையன் ஓடி வந்தவாறே அந்தச் சிறுமியை அள்ளி எடுக்கிறான். காட்டை நோக்கி ஓடுகிறான்.

வெளிப்புறம் – ஒரு மலையின் மேல் பாதை – மாலை நேரம்
குள்ளர்களில் சிலர், மலையன், தென்னதரையன், வழுதி எல்லோரும் பாதையின் மேலிருந்து வெகு கீழே தெரியும் படை
வீட்டைப் பார்க்கிறார்கள்.

படை வீட்டில் இருந்து புகை கிளம்புகிறது.

மலையன்
(தென்னதரையனிடம்)

ஐயா, எங்கள் மக்களுக்கு நீங்கள் உதவியதாகச் சொன்னார்கள். மிக்க நன்றி.

வழுதி

இப்பொழுது பாண்டியருக்கு எதிரிகள் ஆகி விட்டோம்.

மலையன்

எங்களுடைய கடைசிப் புகலிடம் ஒன்று இருக்கிறது. நீங்கள் விரும்பினால் அங்கே வரலாம்.

எல்லோரும் திரும்பி நடக்கிறார்கள்.

தென்னதரையன்
(மலையனிடம்)

கடைசிப் புகலிடமா? உங்களுடைய மக்கள் இந்த மலைகள் முழுவதும் பரந்திருப்பதாக நினைத்தேன்.

மலையன்

இரண்டு வருடங்களுக்கு முன்னால் அப்படித் தான் இருந்தோம். இப்பொழுது மொத்தமாக இருநூறு பேர் தான் இருக்கிறோம். தூக்கு மேடையைப் பார்த்தீர்கள் இல்லையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.