kamagra paypal


முகப்பு » ஆன்மீகம், தத்துவம்

இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 2

இந்து மதங்கள் கூறும் எட்டு ஆன்ம குணங்கள்

உலகெங்கும் உள்ள மற்ற தத்துவ, சமய அமைப்புகளோடு ஒப்பிட்டால், மனிதனை மையப்படுத்தும் அமைப்புகளில் இந்திய தத்துவ சம்பிரதாயங்கள் அல்லது இந்து சமய முறைமைகளை மட்டுமே முதன்மையாகச் சொல்ல முடியும் என்று சென்ற பகுதியில் எழுதியிருந்தேன்.

ஆனால் அதுதான் ஏன்? ஆணோ, பெண்ணோ, மனிதன் தன் வாழ்வில் சாதிக்கக்கூடியது என்ன, வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? மனிதனின் கவலை இதுவாகத்தானே இருக்கின்றது?

இது போன்ற கேள்விகளைவிட அடிப்படை ஆளுமைக்கே இந்து தத்துவங்களிலும் சமயங்களிலும், அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்? அதிலும் குறிப்பாக, துவக்ககால முறைமைகளுக்கு இது மிகவும் பொருந்துகின்றது.

இந்திய தத்துவ சம்பிரதாயங்களும் சமய அமைப்புகளும் ஆன்மீகம், பக்தி இவற்றை விட மனிதன் தன் வாழ்வு மேன்மையடைய கடைபிடிக்க வேண்டிய தர்மத்துக்கே முதன்மை இடம் அளிக்கின்றன.  இதைக் கேட்டால், உலகின் பிற பகுதிகளில் உள்ள அடிப்படைவாத மரபுகளைச் சேர்ந்த பலர் அதிர்ச்சியடையக்கூடும்.

ஒருவன் அடிப்படையில் நேர்மையாகவும் சரியாகவும் இருந்தால், அவன் அதைக் கொண்டு தன் திறமைகளைச் செம்மையாக வளர்த்துக் கொள்வான், சாவதற்குள் தன் லட்சியத்தை அடைந்து விடுவான் என்ற எண்ணமே தர்மத்தை வலியுறுத்த ஒரு காரணமாக இருக்கலாம்.

oOo

மேலும், இந்திய தத்துவ சம்பிரதாயங்கள்/ இந்து சமயங்களின் நெகிழ்வுத்தன்மை பற்றி சில விஷயங்கள் குறிப்பிட்டிருந்தேன். முதலில் கவனிக்க வேண்டியது, இந்த நெகிழ்வுத்தன்மையின் காரணம்- பல வகைகளில் மாறுபடும் மக்கள் குழுக்களை நெறிப்படுத்தவும், வெவ்வேறு திசைகளில் விரியும் அவர்களின் ரசனையைத் திருப்தி செய்யவும் இவை தோன்றின என்று எழுதியிருந்தேன்.

நெகிழ்வுத்தன்மையின் இரண்டாம் காரணம், எல்லாவற்றையும்விட உயர்ந்த மறைநூல் என்று எதுவும் இந்து சமயங்களில் கிடையாது. புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரே காரணத்தால் அதிலுள்ளவை எல்லாமே உயர்வு என்று இந்து சம்பிரதாயங்களும் சமய முறைமைகளும் கருதுவதில்லை.

மூன்றாம் காரணம்  பாகவத புராணத்தின் முடிவில் வேத வியாசர் சொல்வது – எது தர்மம், எது அதர்மம் என்பது காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம், சமூகத்துக்குச் சமூகம், சூழலுக்குச் சூழல் வேறுபடும் என்றும், புத்தகங்களில் உள்ளவை வழிகாட்டு நெறிகள் மட்டுமே, என்றும் எழுதியிருந்தேன்.

சம்ஸ்கிருத சமய நூல்களில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் சமய முறைமைகளும் தர்மம் அதன் சூழலைச் சார்ந்து மாறுபடும் தன்மை கொண்டது என்ற புரிதலை அளிக்கின்றன.

oOo

budhaஒழுக்கம் சூழல் சார்ந்தது என்பதால், அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொது ஒழுக்கம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இந்து சமயங்கள் சொல்வதில்லை. மாறாக, மனிதன் தன் ஆளுமையைக் கொண்டு சூழலைக் கடப்பதற்குத் தேவையான ஒழுக்கங்களை வலியுறுத்தவே செய்கின்றன.

இந்தியாவில் உள்ள சம்பிரதாயங்கள் மற்றும் சமய முறைமைகளில் பலவும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய குறிப்பிட்ட சில அடிப்படை குணங்கள் எவை என்பதைக் கடந்த 2000 ஆண்டுகளாகச் சிந்தித்து வந்திருக்கின்றன. இந்தச் சிந்தனையைச் சிறந்த வகையில் வளர்த்தெடுத்ததன் பயனாக, சில இந்து சம்பிரதாயங்களும் மரபுகளும், மனிதன் தரமான வாழ்வு வாழ குறிப்பிட்ட சில ஒழுக்கங்கள் அவசியம் என்றும்கூட பிரகடனம் செய்கின்றன.

மனிதனிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள் எவை என்பது குறித்த விவாதங்கள் வரலாறு நெடுக பல சிந்தனை முறைமைகளில், ஏன் கதைகளிலும்கூட, காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கௌதமர் தன் தர்ம சூத்திரங்களில் மிக அவசிய நற்குணங்கள் என்று கூறும் எட்டு ஆன்மகுணங்கள்.  பலரும் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையாக இருப்பதால்தான் இந்த எட்டும் நடைமுறையில் உள்ளன.  மற்றபடி “எட்டு” என்பதில் எந்தப் புனிதமும் இல்லை.

கௌதமருக்கு முன்னும் பின்னும் அடிப்படை குணங்கள் குறித்து நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் எட்டு ஆன்ம குணங்கள் என்ற விஷயம் கௌதமர் பெயரோடு மட்டும் எப்படியோ சேர்ந்து விட்டது.

பஞ்சசீலம் பற்றி பரிக்ஷீத்து என்கிற அரசன் பேசுவதை நாம் பார்க்க முடிகிறது என்றாலும், அந்தச் சொல் அவருக்குப் பின்னர் வந்த புத்தரோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது என்பது போன்றதுதான் இது. கௌதமருக்கு முன்னரும் பின்னரும் விரும்பத்தக்க நற்குணங்கள் அல்லது லட்சிய தர்மங்கள் இருந்தன. வேத காலத்திலும்கூட ரிதம், சத்யம் முதலிய நற்குணங்கள், சூக்குமமான பல தத்துவங்களைக் காட்டிலும் உயர்வாகக் கருதப்பட்டதைப் பார்க்கிறோம்.

oOo

பிற அற மரபுகளிலும் முறைமைகளிலும் உள்ளதுபோல், சிற்றின்பங்களைத் துறக்க வேண்டும் என்ற அழைப்பையோ மைய மார்க்கம் ஒன்றைத் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற கோட்பாட்டையோ இந்து சமயங்களிலும் மரபுகளிலும் நாம் பார்க்க முடியாது. பிறர் வாழ்வில் குறுக்கிடாமல் நமக்கு விருப்பப்பட்ட வகையில் நிறைவான வாழ்வு வாழ அனைவரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மனிதன், தன் ஆசைகளைக் குறுக்கிக் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அது பேராசையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பசி, தாகம், கலவி போன்ற இயற்கை நாட்டங்களை நிறைவு செய்து கொள்ளும் விருப்பம் இயல்பானது. இதை உணர்ந்திருப்பதால், புலன் இன்பங்களைக் கட்டுப்படுத்த மிதமிஞ்சிய விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

எது ஹிதம், அதாவது, நன்மை பயப்பது என்றும் எது ஹிதாதமம், மிகுந்த நன்மை பயப்பது என்ற பகுப்பையும் உபநிடதங்களில் பார்க்க முடிகிறது. பிறரையும் நம் ஆன்மாவாகவே நினைக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தப்படுகிறார்கள். தனக்கும் தன் குடும்பத்துக்கும் நன்மையளிப்பதைச் செய்யும்படி ஒவ்வொரு மனிதனும் அறிவுறுத்தப்படுகிறான். ஆனால் இயல்புக்கு மாறானதாகவோ, சமூகத்துக்கு எதிரானதாகவோ இருக்கும்போது, அது கண்டிக்கப்படுகிறது.

நல்லது, கெட்டது என்ற பாகுபாட்டை உணர்ந்தால்தான் தர்மத்தைக் கடைபிடிக்க முடியும். எனவேதான், உலக விஷயங்களின் நிரந்தரமற்ற தன்மையை உணர்த்தி, எது விடுதலை பெற உதவியாக இருக்கும் என்பதைப் புரிய வைக்கவே இந்து சமய முறைமைகள் முயற்சி செய்கின்றன.

இந்த அடிப்படையில்தான் பக்தி சம்பிரதாயங்களில் “கீழ்மையான உணர்வுகளை அவற்றைவிட மேம்பட்ட லட்சியங்களில் கரைக்க வேண்டும்” என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

oOo

பிறப்பு முதல் மரணம் வரை ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட சில சடங்குகளைப் பற்றிய நம்பிக்கை baudhayanaஇந்து மரபுகளில் உண்டு. இவை பதினாறு அல்லது நாற்பது என்ற எண்ணிக்கை கொண்டு, சம்ஸ்காரங்கள் என்று அறியப்படுகின்றன.

ஆனால், முக்கியமான இந்த நாற்பது சம்ஸ்காரங்கள் அத்தனையும் கடைபிடித்தாலும்கூட, எட்டு ஆன்ம குணங்கள் இல்லாதவனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்று இதே மரபுகள் சொல்லவும் செய்கின்றன. கௌதமர் பட்டியலிடும் எட்டு ஆன்ம குணங்களும் கொண்டவன் எந்த சம்ஸ்காரமும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நாற்பது சம்ஸ்காரங்கள் செய்தவனைவிடவும், பண்டிதனைவிடவும், அவனே மதிக்கத்தக்கவன் என்றும் இதே மரபுகள் சொல்கின்றன.

அப்படியானால், எந்த தேசம், சாதி, சம்பிரதாயம், சமயத்துக்கு உரியவனாக இருந்தாலும் சில அடிப்படைக் குணங்கள் இருந்தால் அவனே பிற எவரைக் காட்டிலும் மேன்மையானவன் என்று போற்றும் இந்து சமயங்கள் வலியுறுத்தும் ஆன்ம குணங்கள் எவை?

இவையே அஷ்ட ஆன்ம குணங்கள்-

  1. தயை – அனைத்து உயிர்களிடத்தும் கருணை
  2. க்ஷாந்தி – பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி
  3. அனஸூயை – பொறாமைப்படாமல் இருத்தல்
  4. சௌச்சம் – உடல், மனம், செயலில் தூய்மை
  5. அனாயாசம் – தன்முனைப்பின் காரணமாகவும் பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலிமிகுந்த உழைப்பு
  6. மங்களம் – கலகலப்பாக இருத்தல், இறுக்கமற்று இருத்தல், நன்மையளித்தல் போன்ற நற்குணங்கள்
  7. அகார்ப்பணியம் – தாராள மனம் கொண்டிருத்தல், நன்னடத்தை, தன்னைக் கீழ்மைப்படுத்திக் கொள்ளாதிருத்தல்
  8. அஸ்ப்ருஹம் – வேண்டத்தகாதவற்றை விரும்பாதிருத்தல்

தயை

தயை என்றால் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் கொண்டிருத்தல் என்று அர்த்தம். உலக உயிர்கள் அனைத்திடமும் கருணையோடு இருப்பவன்,  எண்ணத்தாலும் பிறருக்கு தீங்கு இழைக்க மாட்டான். இத்தகைய மனமே, அனைவரையும் மிகவும் நேசிப்பதாக வளரும். இதனால் அவன் அமைதியான, திருப்தியான, நிறைவான வாழ்வு வாழ முடியும்.

தயை என்பதற்கு பதிலாக அகிம்சையை அவசியமான ஆன்ம குணமாக வைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து நிறைய சர்ச்சைகள் உண்டு. ஆனால் அனைவரிடமும் அன்பும் கருணையும் உள்ள ஒருவன், பிறருக்குத் தீங்கு இழைப்பதை நினைத்தே பார்க்க மாட்டான் என்றால், அப்போது அகிம்சை இயல்பாகவே அவனது செயல்பாட்டில் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, தயை அகிம்சையைக் காட்டிலும் அடிப்படையானது, அகிம்சையைத் தன்னுள் கொண்டது.

பிற அனைத்து நற்குணங்களுக்கும் தோற்றுவாயான ஆதார குணம் என்பதால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய நற்குணங்களின் முதன்மை இடம் தயைக்கு அளிக்கப்படுகிறது.

க்ஷாந்தி

க்ஷாந்தி என்றால் சகிப்புத்தன்மை, பொறுமை.

விரயங்கள், வியாதி, ஏழ்மை போன்ற அத்தனை துன்பங்களையும் பொறுமையாகச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று தவறாக இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. அனைவரையும் நேசித்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தீங்கு செய்பவர்களையும் மன்னித்து நேசிக்க வேண்டும். அப்படி அவர்களைப் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, அவர்களோடு நட்பு பாராட்டும்போது வரும் தொல்லைகளையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ளாமல் தாண்டிச் செல்ல வேண்டும் என்றுதான் இந்த நற்குணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பைக் கொண்டு பொறுமையை நிறைப்பதால் தயையே ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய முக்கியமான ஆன்ம குணம் ஆகிறது.

அனஸூயை

அனஸூயை என்றால், அஸூயையின்மை, பொறாமைப்படாமல் இருப்பது.

நாம் கருணை நிறைந்தவர்களாக அனைவரிமும் அன்பு செலுத்த வேண்டும். பிறரிடம் உள்ள செல்வம், புகழ், அழகு, திறமை என்று எதைப் பார்த்தும் நாம் பொறாமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. பொறாமை வயிற்றெரிச்சலுக்கே இட்டுச் செல்கிறது, அதனால் உடல் நலம் கெடுகிறது, மன அமைதி குலைகிறது.

உடலும் ஆரோக்கியமாக இல்லை, மனதிலும் அமைதி இல்லை என்ற நிலையில் மனிதன் இயல்பாகவே வெறுப்புக்கும், அதன் உச்ச நிலையில் வன்முறைக்கும் இடம் கொடுப்பான்.  பொறாமைப்படாத ஒருவனது மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக இருக்கும். அதனால் அவன் எதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியும். பொறாமைப்படுபவனைவிட, அமைதியான மனதும் ஆரோக்கியமான உடலும் உள்ள ஒருவன் நன்றாக வேலை செய்ய முடியும்.

சௌச்சம்

சௌச்சம் என்றால் சுத்தம், அல்லது தூய்மை. புறத்தூய்மை மட்டுமல்ல, அகத்தூய்மையும் கடைபிடிக்கப்பட வேண்டும். நம் செயல்களை நம் எண்ணங்களே தீர்மானிக்கின்றன என்பதால், நாம் தெளிவான, தூய்மையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வாயால் சாப்பிடுவது மட்டுமல்ல, நம் புலன் உறுப்புகள் வழி உட்செல்வது அனைத்துமே ஆகாரம் என்று பொருள்கொள்ள வேண்டும் என்றார் ஆதி சங்கரர். எனவே ஆகாரசுத்தி என்பது, தூய உணவு மட்டுமல்ல, புலன் அனுபவங்கள் அனைத்திலும் தூய்மை கொண்டிருத்தல்.

குளித்தல், தூய ஆடை அணிந்திருத்தல், தன் புலன்களைக் கொண்டு தூய விஷயங்களை மட்டுமே அறிதல் என்று தூய அனுபவங்களைத் துய்க்கும் ஒருவனது எண்ணம், சொல், செயல் என்று அனைத்தும் ஒருமைப்பாடு கொண்டதாக இருக்கும்.

அனாயாசம்

ஆயாசம் என்றால் களைப்பு, உழைப்பு. துல்லியமாகச் சொன்னால், ஆயாசம் என்பதன் எதிர்ப்பதம், அல்லது, ஆயாசமின்மை என்பதுதான் அனாயாசம். இது தவிர, இந்தச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.

சுமுகமாக இருப்பது, எதையும் சாந்தமுடன் எடுத்துக் கொள்வது, மன அழுத்தமில்லாமல் இருப்பது, துன்பத்தில் கொண்டு போய் சேர்க்கும் பிரயாசைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது, என்று நிறைய சொல்லலாம். சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, நவீன உளவியலில் flow என்ற ஒரு தத்துவம் உண்டு, இது அதற்கு இணையான ஒன்று.

பொதுவாக சமகாலத்தில் தன்முனைப்பு மிக அதிகமாக இருக்கிறது, பல விஷயங்களை அடையும் பொருட்டு நாம் கடுமையாக உழைக்கிறோம். நவீன உலகின் நற்குணங்களுள் ஒன்று என்று இந்த இயல்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஆனாலும்கூட இதனால் ஏற்படும் கடும் உளைச்சல் உடலுக்கும் உள்ளத்துக்கும் எல்லையற்ற தீங்கு செய்கிறது. இதனால் நாம் இறுக்கமானவர்கள் ஆகிறோம். கோபம், பொறாமை, ஆத்திரம் போன்ற குணங்களை வெளிப்படுத்துகிறோம்.

உலகெங்கும் உள்ள சமூகங்களில் நாளுக்கு நாள் வன்முறையும் சகிப்புத்தன்மையின்மையும் அதிகரித்து வருவது ஏன் என்று பார்த்தால் இந்த நற்குணங்கள் வேகமாக மறைந்து வருகின்றன எனபதைதான் காண்கிறோம்.

மங்களம்

மங்களம் என்பது எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதைக் குறிக்கிறது. அப்படி இருப்பவனைச் சுற்றி எப்போதும் சுபமான சூழல் இருக்கும். மனிதன் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்போது அவனைச் சுற்றிலும் அந்த உணர்வுகள் பரவுகின்றன. எனவே, மங்களம் என்பது லகுவாகவும் உற்சாகமாகவும் நாமும் இருந்து கொண்டு நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதேயாகும்.

அன்பும் கருணையும் நிறைந்த ஒருவன் தூய்மையாகவும் பொறாமையற்றவனாகவும் இருந்து, எப்போதும் உற்சாகமாக (இதுவரைச் சொல்லப்பட்ட ஆன்மகுணங்கள்)  செய்யும் வேலைகள் அத்தனையும் அனாயசமாக இருக்கும் (இதற்கு முந்தைய ஆன்மகுணம்).

 

அகார்ப்பணியம்

கருமித்தனத்தின் எதிர்குணம்தான் அகார்ப்பணியம், அதாவது தயாள சிந்தை. தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல், கௌரவமாக நடந்து கொள்வது என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு. தீரமும் தயாள குணமும் இருக்கும் ஒருவன் எந்த சூழ்நிலையிலும் உற்சாகமாக, அமைதியாக, தூய மனதுடன், உறுதியாக, கருணை உள்ளத்துடன் இருக்கும் நிலைதான் அகார்ப்பணிய குணம். ஒருவன் எவ்வளவு மோசம் போனாலும், தன் கௌரவத்தைக் கெடுத்துக் கொள்வதைக் காட்டிலும் உலகில் வேறு எதுவும் அவனைக் கீழ்மை செய்வதாக இருக்காது.

 

அஸ்ப்ருஹம்

ஸ்ப்ருஹம் என்பது அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்லும் பேராசை. அஸ்ப்ருஹம் என்பது இந்த குணமற்ற இயல்பு. தர்மத்துக்குப் புறம்பாக இல்லாத இன்பங்கள் அனுபவிப்பதை இந்து சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன என்றாலும், அனைத்து மோகங்களும் வலுவற்றவை என்பதையும் பயனற்றவை என்பதையும் நாம் உணர வேண்டும் என்று அவை கூறுகின்றன.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்” என்பது திருமூலர் வாக்கு.

இதுவே மிக உயர்ந்த நிலை, சாஸ்திரங்களில் கூறப்பட்ட தர்ம வாழ்வை அனைவரும் வாழ்ந்து மோகமற்ற பெருவாழ்வு வாழ வேண்டும்.

ஆன்ம குணங்கள் எட்டும்
உலகோர் அனைவருக்கும் கிட்டட்டும்!
உயிர்கள் அனைத்தும்
இணக்கமும் அமைதியுமாய் வாழட்டும்!
அனைவருக்கும் ஆரோக்கியமும்
ஆனந்தமும் செல்வமும் சேரட்டும்!

 

இந்த எட்டு ஆன்ம குணங்களையும் இன்னும் விரிவாக அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்கள், இவ்விரண்டு நூல்களையும் வாசிக்கலாம்:

 

  1. Patrick Olivelle. The Dharmasutras of Apastamba, Gautama, Baudhayana and Vasishta, (Sanskrit and annotated translations), In Sources of Indian Law, 2000, Delhi: Motilal Banarsidass.
  2. P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.

 

 

Series Navigationஇந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1இந்து சமயங்களில் பாப புண்ணியங்கள்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.