kamagra paypal


முகப்பு » அறிவிப்பு, புகைப்படத்தொகுப்பு

காசியில் பாரதி நினைவாக…. ஒரு கோரிக்கை, ஒரு கடமை.

திரு. ஜி.ஆர். பிரகாஷ் காசிக்கு சென்றபோது பாரதி வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடித்து ஒளிப்படங்களையும், பாரதியின் அத்தை மகன் கிருஷ்ணனின் வீடியோக்களையும் அனுப்பியிருக்கிறார். (சொல்வனம் சமீப இதழில் வ.ஸ்ரீநிவாசன் மெச்சியிருந்த அஃகம் சுருக்கேல் நூலின் தொகுப்பாளர் பிரகாஷ்.)

oOo

 

எனக்கு கடந்த வாரம் மூன்றாவது முறையாக காசி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கனவே முதல் இரு முறைகளிலும் மகாகவி பாரதி காசியில் வாழ்ந்த இடத்தைப் பார்த்து வந்த எனக்கு இம்முறை பாரதியின் அத்தை குப்பம்மாள் (எ) ருக்மணி அம்மாள் அவர்களின் மகன் திரு .கே வி கிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

காசியில் ஹனுமன்காட் பகுதியில் சங்கரமடம் எதிரில் புராதனமான சிவமடம் உள்ளது.

பாரதியின் அத்திம்பேரின் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கபடும் சிவமடத்தில் தற்போது கே வி கிருஷ்ணன் (89). தன் மகன் ரவி,மருமகள் பவானி மற்றும் பேத்தி உடன் வசித்து வருகிறார் .பனராஸ் இந்து பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . மிருதங்கம் வாசிப்பதில் மிகுந்த திறமையும் பெரிய வித்வான்களுக்கு வாசித்த அனுபவமும் கொண்டவர் . தமிழ் சுடர்,தமிழ்மாமணி போன்ற விருதுகளையும் அரசின் பாரதியார் விருதையும் பெற்றவர் மேலும் காசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய சொசைட்டியின் தலைவராகவும் உள்ளார்

தனது தள்ளாத வயதிலும் பாரதியை பற்றி பேசும் போது பெரியவர் உற்சாகமாகப் பேசுகிறார். பாரதி உபயோகித்த எழுதும் டேபிள் , ஹார்மோனிய பெட்டி ஆகியவற்றையும் பாரதி அவரது சகோதரிக்கு சீராகக் கொடுத்த இரும்புப்பெட்டியையும் காண்பித்தார்.

மடத்தில் உள்ள சித்தேஸ்வரர், சித்தேஸ்வரி ஆலயத்தில் அமர்ந்துதான் “வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள் “பாடலைப் பாடியுள்ளதாகத் தெரிவித்தார் .

பாரதியார் வசித்த ,அவரது சிலை உள்ள இடத்தை பராமரித்து தமிழர்கள் அதிகஅளவில் சென்று பார்க்கும்படியாக சீரமைக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், உதர்கண்ட் எம்பி தருண்விஜய், உள்ளிட்ட பலர் சிவமடத்திற்கு வந்துள்ளனர். முன்பு பெரும் செல்வந்தர்களாக இருந்த திரு கே. கிருஷ்ணனின் முன்னோர்களால் கொடுக்கப்பட்ட இடத்தில்தான் தற்போது சங்கரமடம், கோவில் ஆகியவை உள்ளன. ஆனால் தற்போது வறுமை நிலையில் உள்ள இவர்களுக்கு தங்கள் கொடுத்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதி சிலை அமைந்துள்ள வீட்டின் ஒரு பகுதியில், சிலைக்கு மேல் மாடி எழுப்பி பாரதியின் புத்தகங்கள், படங்கள், அவர் உபயோகித்த பொருட்களை வைத்து நினைவாலயம் அமைக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. அதற்கு அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக நியமித்துப் பராமரிக்க வேண்டும் என்பது நமது ஆசை.

 

Tamil Thiru Prof .K.V.Krishnan,Tamil sudar,Tamil mamani
Retd Asst Professor,Faculty of performing arts,BHU
(Nephew of National Poet Mahakavi Subramaniya Bharathi)
President:Kashi TamilSangam
Recipient of BHARATHIYAR AWARD From Govt of TamilNadu
President:TheSouthIndian Society, VARANASI
B.4/57,Shiva Mutt,
Hanuman Ghat,
Varanasi-221001
Mob: 09670893284
LL:0542-2276079

oOo

Subramania_Bharathiyaar_Kasi_varanasi_Stay_Statue_Memorial_Photos_Images

புகைப்படங்கள்: ஜி.ஆர். பிரகாஷ்,   24-5 சக்திமஹால், சின்னம்மாள் வீதி, கே கே புதூர், கோயம்புத்தூர் 641038 போன் : 9940985920.)

இவர் முதன் முறை சென்று பாரதி வாழ்ந்த இடத்தின் நிலை பற்றிச் சொன்னவற்றை புதிய தலைமுறையில் செய்திக் கட்டுரையாகப் போட்டிருந்தார்கள்.

நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே — எஸ் சந்திர மௌலி

காசியில் மகாகவி பாரதி வசித்த வீடு இன்று கேட்பாரற்றுக் கிடப்பதை நேரில் கண்டு வந்த கோவையைச் சேர்ந்த பிரகாஷ் தன் வேதனையைப் பகிர்ந்துகொள்கிறார்:

“நான் மகாகவியின் தீவிரமான அபிமானி. அவர் எழுத்துக்களை ஆர்வத்துடன் வாசிப்பதோடு நின்றுவிடாமல், அந்த மாமனிதருடன் தொடர்புடைய எட்டயபுரம், கடையம், புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களுக்குச் சென்று, அவர் வசித்த மண்ணை நெகிழ்வுடன் வணங்கி இருக்கிறேன். அதனாலேயே எனக்கு, ஒரு முறை காசிக்குச் சென்று அவர் வசித்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் பல்லாண்டுகளாக இருந்து வந்தது. அதற்கான வாய்ப்பு 2013 ஜூலையில் எனக்குக் கிடைத்தபோது நான் மிகவும் பூரிப்படைந்தேன். என் நண்பர் சுப்ரமணியம் காசி செல்லும் திட்டம் பற்றி என்னிடம் சொன்னதுமே, “காசியில் விஸ்வநாதரை தரிசிப்பது எத்தனை முக்கியமோ அதே அளவு பாரதி வசித்த வீட்டுக்குச் சென்று பார்ப்பதும் எனக்கு முக்கியம் என்று சொன்னேன். அனால், எனக்கு அங்கே வேதனைதான் மிஞ்சப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

வாரணாசி ரயில் நிலையத்தில் இறங்கியதுமே, அங்கே பாரதியாரின் வீடு குறித்த தகவல் பலகை ஏதாவது இருக்குமா? என்று ஆர்வத்துடன் தேடினேன். ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோதும், “அப்படி ஏதும் இல்லை” என்று சொல்லிவிட்டார்கள். ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் வந்ததும், ரிக் ஷாக்காரர்களிடமும், ஆட்டோ டிரைவர்களிடமும் பாரதியின் வீடு பற்றி விசாரித்தபோது, அவர்களுக்கு மகாகவியைப் பற்றியே தெரியவில்லை என்று அறிந்து மனம் நொந்துபோனேன். காசியில் பார்க்கவேண்டிய இடங்கள் என்று ஒரு பட்டியலே எங்கள் கைவசம் இருந்தது. அதில் எங்கே சென்றாலும், நான் பாரதி வசித்த வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்பதும், அவர்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்பதும், என் வருத்தத்தை அதிகமாக்கியது. ஒரு கட்டத்தில் “காசி மண்ணை மிதிப்பதே பெரும் பாக்கியம் என்பார்கள். ஆனால், அந்த மண்ணில் நாலு நாட்களாக திரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மகாகவியின் வீட்டைப் பார்க்கிற பாக்கியம் இன்னமும் கிடைக்கவில்லையே” என்று நண்பரிடம் புலம்பத்தொடங்கினேன்.

ஊரிலுள்ள நண்பர் ஒருவரிடம் என் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்ட மறுநாள், அவரிடமிருந்து ஃபோன். இயக்குனர், எழுத்தாளர் சுகா மூலமாக, ‘காசியில் அனுமான் காட் என்ற பகுதியில் இருக்கும் சங்கரமடத்துக்கு எதிரில்தான் பாரதி வசித்த வீடு இருக்கிறது” என்ற தகவலை அறிந்து எனக்குத் தெரிவித்தார். தகவல் அறிந்த கணமே ‘அனுமான் காட்’டுக்கு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தோம். பாரதியார் 1898 முதல் 1902 வரை காசியில் வசித்தார். அப்போது அவர் தன்னுடைய அத்தை குப்பமாளின் ஆதரவில் காசி இந்து கலாசாலையில் படித்தார். அங்கேதான் அவர் சமஸ்கிருதமும், ஹிந்துஸ்தானி மொழிகளையும் கற்றுக் கொண்டார் என்பது போன்ற தகவல்கள் என் நினைவுக்கு வந்தன. சங்கரமடம் சென்றடைந்தோம்.

சங்கர மடத்துக்கு எதிரில் காமகோடி ஈஸ்வரர் கோவில் இருக்கிறது. அதன் வலதுபுறத்தில் ஒரு டீக்கடை. அதன் பக்கத்தில் காம்பவுண்டு சுவர் போட்ட பத்தடிக்கு பத்தடி இடம். அங்கே வெள்ளை கிரானைட்டில் பாரதியாரின் மார்பளவு சிலை. அதன் கீழே “தேசியக்கவி சுப்ரமணிய பாரதி. இந்தச் சிலையை 10 செப்டம்பர் 1986 அன்று உத்திரப் பிரதேச முதல்வர் வீர் பகதூர் சிங் முன்னிலையில், துணை ஜனாதிபதி ஆர். வெங்கடராமன் திறந்து வைத்தார்” என்று இந்தியில் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை நிறுவக் காரணமாக இருந்தது உத்திரப் பிரதேச ஹிந்தி கழகம் என்ற அமைப்பு ஆகும். இதன் மூலமாக, அதுதான் காசியில் பாரதி வசித்த இடம் என்பது உறுதியானது. ஆனால், அதன் பின் அங்கே இருந்த சூழ்நிலை மகிழ்ச்சியானதாக இல்லை. பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகள் இந்த சின்ன இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாரதி சிலையை மறைப்பதால், அங்கே வருகிறவர்களுக்கு, பக்கத்திலேயே இப்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் இருப்பது தெரியாமல் போகிறது. அது மட்டுமில்லை, மரத்தின் இலைகளும், இதர குப்பைகளுமாக அந்த இடமே மிகவும் அசுத்தமாக காணப்பட்டது. பக்கத்து டீக்கடைக் காரர் தன் கடையின் வேண்டாத தட்டுமுட்டுச் சாமான்களைப் போட்டு வைப்பதும் இந்த இடத்தில்தான். (பாரதியார் இவற்றையெல்லாம் பத்திரமாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை போலும்). அந்த இடத்தில் உட்கார்ந்து எங்கள் திருப்திக்காக சில பாரதியார் பாடல்களைப் பாடினோம்; அவரது எழுத்துக்களைக் கொஞ்ச நேரம் வாசித்தோம். “வல்லமை தாராயோ- இவ்வையகம் பயனுற வாழ்வதற்கே” என்று பாடிய பாரதிக்கா இந்த நிலைமை?” என்று வேதனையோடு புறப்பட்டோம். கடந்த ஜனவரியில் மீண்டும் ஒரு நண்பரோடு காசிக்குச் சென்றபோது, மீண்டும் பாரதி வசித்த வீட்டுக்குச் சென்று பார்த்தோம். நிலைமையில் கொஞ்சமும் மாற்றமில்லை. “துடைப்பம் எடுத்து, நாமே இந்த இடத்தை சுத்தம் செய்யலாமா? என்று வேதனையோடு கேட்டார் நண்பர்.

தமிழ்நாட்டிலிருந்து காசி செல்பவர்கள் சௌகரியம் கருதி பாரதி வசித்த வீடு வாரணாசியில் இருக்கும் விபரம் குறித்து வாரணாசி ரயில் நிலையத்திலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் பலரும் தங்கும் நகரத்தார் சத்திரம், அதிக அளவில் மக்கள் கூடும் கோடாலியா போன்ற பகுதிகளிலும் தகவல் பலகை வைக்கலாம்; வாரணாசியின் சுற்றுலா தலங்கள் குறித்த பிரசுரங்களில் பாரதி வசித்த வீட்டையும் சேர்க்கலாம். அதற்கெல்லாம் முன்பாக அவர் வசித்த வீட்டை சுத்தம் செய்து, நல்ல முறையில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அல்லது சென்னை பாரதியார் சங்கம் போன்ற அமைப்புகள் அதைச் செய்ய முன்வரவேண்டும். அதன் பிறகு அங்கே பாரதியார் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவைகளை வைப்பதற்கு ஏற்பாடு செய்யலாம் அல்லவா?

One Comment »

 • நடராசா கண்ணப்பு said:

  காசியில் உரு மாற்றம் அடைந்தார், தமிழ்க்கவியின் கங்கை வாழ்கையின் வற்றாத பாய்ச்சல் …
  இன்னும் இறைமையோடு …

  எல்லோரும் ஓர் நிறை…….

  நல்ல பதிவு.

  # 13 September 2017 at 2:59 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.