ஜீவனாம்சம் – ஆண், பெண் சம உரிமை

சில மாதங்களுக்கு முன் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் ஒரு ஆய்வுக்கட்டுரை வந்திருந்தது. சமீபகாலங்களில் இந்தியாவில் விவாகரத்து வழக்குகளில் கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் தரும் படியான தீர்வுகளும் அதிகரித்து வருகின்றன என்று உதாரணங்களுடன் அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இந்து திருமணச் சட்டப்படி அவரவர் பொருளாதார நிலையைப் பொறுத்து கணவனோ அல்லது மனைவியோ ஜீவானாம்சம் கோரும் உரிமை இருபாலருக்குமே உண்டு.
இப்படி ஜீவனாம்ச உரிமை கோருவதில் சம உரிமை என்பது பற்றி சிங்கப்பூரில் 1996ம் ஆண்டு பெருவாரியாக அலசப்பட்டது.
அந்த சமயம் நான் செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்த செய்தி நிறுவனம், பன்னாட்டு பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பும் ஒரு நிறுவனம். அதனால் நான் அனுப்பும் செய்திக் கட்டுரைகள் பல அந்தந்த நாட்டு செய்தித்தாள்களுக்கேற்ப பிரெஞ்ச், பிலிப்பினோ என்று இதர மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகும். அப்படி பிரெஞ்சிலும், இத்தாலியிலும் மொழி பெயர்க்கப்பட்டு அந்த நாட்டு பத்திரிகைகளில் வெளி வந்த செய்தி இது.

வருடம் 1996. சிங்கப்பூர்

divorce.jpg-law
அரசல் புரசலாக கசிந்து வந்த செய்தி நிஜமாகிவிட்டது. இங்கிலாந்து இளவரசர் சார்லசும் டயானாவும் விவாகரத்து செய்துவிட்டனர். ரொம்ப காலம் இழுபறியாக நீண்ட இந்த விவாகரத்தில் டயானாவுக்கு கணிசமான ஜீவனாம்சம் கிடைத்தது. ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால் இதுவே தலைகீழாகவும் நடக்க வாய்ப்பிருக்கிறதா? அதாவது டயானா சார்லசுக்கு ஜீவனாம்சம் கொடுக்கும் சூழ்நிலை இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இங்கிலாந்து இளவரசருக்கு ஜீவனாம்சம் என்பது அதீத, விபரீதக் கற்பனைதான். ஆனால், தற்சமயம் சிங்கப்பூரில் நடந்து கொண்டிருக்கும் சர்ச்சையை வைத்து கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தேன்.
மேலை நாடுகளில் பணக்கார மனைவி கணவனுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகை எலிசபெத் டெய்லர் மாதா மாதம், பெரும் தொகையை ஜீவனாம்சமாக தன் முன்னாள் கணவர் லேரி ஃபொர்டென்ஸ்கிக்கு (Larry Fortensky) கொடுக்கிறார். மேலை நாடுகளில் இது வழக்கம் என்று ஒதுங்கிவிடுவோமே தவிர, நம் மூக்குக்கு கீழ் ஆசியாவில் நடக்கும் என்று நினைக்க மாட்டோம். ஆனால் இந்த நிலையும் மாறலாம் இனி.
தற்சமயம் சிங்கப்பூர் பெருமளவு விவாதித்து வரும் விஷயம் இந்த ஜீவனாம்சம். தேவைக்கேற்ப, ஆண்களுக்கும் கட்டாயமாக ஜீவானாம்சம் அளிக்கப்பட வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் பல பெண்கள் இதை எதிர்க்கின்றனர்.
“பெண்கள் ஏற்கனவே குடும்பம், வேலை என்று இரண்டுக்கும் நடுவே பந்தாடப்படுகிறார்கள். இந்தச் சுமைகளோடு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய சுமையையும் ஏன் அவர்கள் சுமக்க வேண்டும்?” என்பது பல பெண்களின் கேள்வி. “பின்னால் ஒரு காலத்தில் பெண்கள் எல்லாவிதத்திலும் சமமாகக் கருதப்படும்போது வேண்டுமானால் இப்படி இருக்கலாம். ஆனால் தற்போதைய சமூக சூழ்நிலையில் அல்ல.” என்பது அவர்கள் வாதம்.
ஆனால் இதில் சுவாரசியமென்னவென்றால், இப்படி ஜீவனாம்சத்தில் சம உரிமை கோரும் யோசனையை முன் வைத்ததே பெண்கள் முன்னேற்றத்துக்காக சட்ட திட்டங்கள் அமைக்கும் ஒரு சட்ட அமைப்புதான். பெண்களின் உரிமைகளுக்கான சட்ட திட்டங்களைப் பரிந்துரை செய்யும், “பெண்கள் சாசனம்” (Women’ Charter) எனப்படும் ஒரு அரசியல் சட்ட அமைப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பரிந்துரை செய்தது. எல்லாவிதத்திலும் பெண்கள் சமத்துவம் கோரும்போது ஜீவனாம்சத்திலும் பால் வித்தியாசம் இல்லாமல் ஆண்களுக்கும் ஜீவனாம்சம் அளிக்கப்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று அந்த அமைப்பு பரிந்துரைத்தது.
எல்லாவிதத்திலும் ஆண் பெண் சமம் என்று சட்டங்கள் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்த விஷயத்திலும் சம உரிமை இருக்க வேண்டும் என்பது இந்த பரிந்துரையை முன் வைத்தவர்களின் வாதம். குறிப்பாக கணவனைவிட மனைவி அதிகமாக சம்பாதிக்கும் அல்லது மனைவி பணக்காரராக இருக்கும் குடும்பங்களில் கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் தருவதுதான் நியாயம் என்று இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
sv-ws-logo-21961ம் ஆண்டுக்கு முன்வரையில்,சிங்கப்பூரில் ஒன்றுக்கும் மேல் பெண்களை மணம் புரிந்த பலதார ஆண்கள் அதிகம் இருந்தனர். திருமணம் சரிவர பதிவு செய்யப்படாத, மற்றும் விவாகரத்து சட்டங்கள் வலுவாக இல்லாத நிலையில், திருமண வாழ்க்கை சிக்கலில் மாட்டும்போது பல பெண்கள் கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவாகரத்து சட்டங்கள் தெளிவாகவோ வலுவாகவோ இல்லாத நிலையில் பல ஆண்கள் மனைவிகளை ஒதுக்கிவிட்டு வேறு பெண்களை திருமணம் செய்யும் வழக்கமும் இதனால் பல பெண்கள் ஆதரவற்ற நிலையில் கைவிடப்படும் சூழ்நிலை இருந்தது.
1961ல் “பெண்கள் சாசனம்” என்ற அரசியல் சட்ட அமைப்பு உருவாகி, விவாகரத்து சட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, பெண்கள் அல்லலுறும் இந்த சமூக சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த சமயத்தில்தான் ஆண்கள் விவாகரத்து செய்யப்படும் மனைவிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜீவனாம்சம், குழந்தைகள் பொறுப்பு, மற்றும் சொத்து பிரிவினைகள் பற்றிய சட்டங்களும் இடம் பெற்றன.
தற்போது 30 வருடங்கள் கழித்து அந்த பெண்கள் சாசனத்தில் இருக்கும் சட்டங்களை மறு பரிசீலனை செய்யும் வகையில் பத்து உறுப்பினர் அடங்கிய குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது. ஓரினத் திருமணம், குழந்தைகள் பொறுப்பு, கணவனுக்கு ஜீவனாம்சம், மற்றும் சொத்துப் பிரிவினை போன்ற பல விஷயங்களும் இந்த மறு ஆய்வில் அடங்கும்.
கணவனுக்கு ஜீவனாம்சம் என்று இதுவரை சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் இப்படி ஒரு அம்சம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதே பிரச்சனையைக் கிளப்பிவிட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள சுமார் 36 பெண் அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இன்று பல பெண்கள் கணவனை விட அதிகமாக சம்பாதிக்கின்றனர். மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிப்பதால், குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்த கணவர்களும் அநேக குடுமபங்களில் பார்க்கலாம். இந்த மாதிரியான சூழலில் விவாகரத்து செய்யும் மனைவி, கணவனுக்கு ஜீவனாம்சம் கேட்பதிலென்ன தவறு என்று அமரீந்தர் கௌர் என்ற வழக்கறிஞ்ஞர் கேட்கிறார்.
பொருளாதார ரீதியிலும், சமூக அந்தஸ்திலும் இப்படி பல வகையில் பெண்கள் அதிகம் இருக்கும் இந்த சமூக சூழலில், Council of the Law society of Singapore என்ற அமைப்பு பொருளாதார நிலையில் நலிந்து இருக்கும் கணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சட்ட திருத்த மசோதா கொண்டு வருவது அவசியம் என்ற வாதத்தை முன்வைத்தது. இதன்படி, பொருளாதார ரீதியில் நலிவுற்ற கணவனுக்கு, அதிக பண வசதி உள்ள மனைவி ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்.
ஆனால் பெண்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். பொருளாதார உயர்வு பெண்களிடையே இன்னும் பரவலாக வரவில்லை. கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் மிகக் குறைந்த சதவிகிதமே உள்ளனர். கணவன் மனைவி இடையே பொருளாதார இடைவெளி இன்னும் குறையவில்லை. பொருளாதாரம், ஆண்கள் தரப்பில் இன்னும் வலுவாகவே உள்ளது. “பெண்கள் முன்னேறி வருகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது போதாது.” என்கிறார் பெண்கள் அமைப்பு ஒன்றின் தலைவி. “ஆண்கள் அளவு பெண்கள் பொருளாதார ரீதியில் இன்னும் சமத்துவம் அடையவில்லை.குறிப்பாக, வீட்டில் குடும்பப்பொறுப்புகள் சுமக்கும் மனைவிகள், மற்றும் அடிமட்ட வேலைகள் செய்யும் பெண்கள் இவர்களைப் போன்றவர்கள் பொருளாதார ரீதியில் இன்னும் கணவனை சார்ந்தே இருக்கிறார்கள். ஆண்களுக்கு ஜீவனாம்சம் என்ற சட்டம் தவறாக கையாளப்பட்டால், இவர்களைத்தான் மிகவும் பாதிக்கும். ” என்கிறார் இவர்.
மற்றொருபக்கம் சமூக சிந்தனையோட்டம் பெரிதளவில் மாறவில்லை என்ற வாதமும் சொல்லப்படுகிறது. பலரது நோக்கில் ஆண்கள்தாம் குடும்பத்தலைவர்கள். பொருள் ஈட்டுவது இன்றும் ஒரு ஆணின் பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. எல்லாவிதத்திலும் ஆண்தான் மனைவியின் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள்.
சொல்லப்போனால், பொருளாதார ரீதியில் முன்னேறிய பல பெண்களும் அடிப்படையில் பாரம்பரிய சிந்தனையுடனும் இருக்கிறார்கள். கணவனுக்கு ஜீவனாம்சம் என்ற சட்டம் ஒன்றுக்கு அவசியமேயில்லை. இயற்கையாகாகவே மென்மையான குணம் உள்ள பெண்கள் தங்கள் கணவன் – மாஜியாக இருந்தாலும் கூட – பொருளாதார ரீதியில் நலிந்து இருந்தால் தாங்களாகாவே உதவி செய்யத்தான் நினைப்பார்கள். கணவன் சிரமப்படக் கூடாது என்ற பொதுவான ஆசிய சிந்தனை பல பெண்களிடம் வேரூன்றி இருக்கிறது. ஆண்கள் மனைவிகளை நிராதாரவாக விடும் அளவு பெண்கள் ஆண்களை விட மாட்டார்கள் என்பது பலர் கருத்து.
கௌர் கூறுகிறார். “திருமண வாழ்க்கையின் சிக்கலில் மனக்கசப்பும், கோபமும் பல பெண்களிடம் இருக்கலாம். ஆனால் இயற்கையாகாவே இளகிய மனம் கொண்ட பெண்கள், கணவனை அப்படிப் பணமில்லாமல் தவிக்க விட்டுவிடுவார்களா என்ன? இதற்கு சட்டமெல்லாம் எதற்கு? பல பெண்கள் தாங்களாகவே முன்வந்து மாஜி கணவனுக்கு உதவுவார்கள்”

வருடம் 2014

அன்று அத்தனை சர்ச்சையாகி இருந்த விவகாரம் 18 வருடங்கள் கழித்து இன்று சட்டமாகி உள்ளதா என்று இணையத்தில் விவரம் தேடினேன். நான் அறிந்த வரையில் அப்படி ஏதும் சட்டம் வந்ததாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், கணவருக்கும் ஜீவனாம்சம் அளிக்கப்பட வேண்டும் என்ற அதே வாதங்கள் பல இணைய தளங்களில் கண்டேன். மனைவியின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் வழக்குகளில் ஜீவனாம்சம் தேவையில்லை என்று முடிவாகியிருக்கிறதே தவிர, கணவன் ஜீவனாம்சம் கோரும் வழக்குகள் தென்படவில்லை. 18 வருடங்களில் அதிகம் மாற்றமில்லை என்று தோன்றியது.
2014, மே மாதம் பதியப்பட்ட ஒரு வலைப்பூவில் அந்த சமயம் தீர்வான ஒரு விவாகரத்து வழக்கினைப் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. 69 வயதான ஓய்வு பெற்ற ஒரு கணவன், விவாகரத்து செய்யப்பட்ட தன் மனைவிக்கு 70000 சிங்கப்பூர் டாலர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பை அந்தப் பதிவு விவாதித்து இருந்தது. மாதம் 2800 டாலர் மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கும் அந்த ஆண் எப்படி இவ்வளவு பெரிய தொகையைக் கொடுப்பார் என்பது அந்தப் பதிவின் வாதம்.
1961 ம் ஆண்டு, முற்றிலும் வித்தியாசமான சமூக சூழ்நிலை இருந்த சிங்கப்பூரில் இயற்றப்பட்ட “பெண்கள் சாசன” ஷரத்துகளில், ஆண்கள் மனைவியிடமிருந்து ஜீவனாம்சம் கேட்கும் உரிமையைப் பற்றி குறிப்பு ஏதும் இல்லை. தவிர, அன்று இருந்த நிலைமை வேறு, இன்றைய சூழல் வேறு என்று வாதித்து, மாறி வரும் சமூக சூழலில், வீட்டு வேலை செய்யும் ஆண்கள், உடல் நலிவுற்று பொருளாதார ரீதியில் பாதுகாப்பு இல்லாத ஆண்கள் என்று பலதரப்பட்ட உதாரணங்கள் அந்தப் பதிவில் அலசப்பட்டு, அந்த சாசனம் காலத்துக்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் அங்கே முன் வைக்கப்பட்டுள்ளது.
சமூக மாறுதல்கள் சில விஷயங்களில் சற்று தாமதமாகவும் வரலாம். அவற்றில் இதுவும் ஒன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.