kamagra paypal


முகப்பு » ஆளுமை, உரை, சமூகம்

ஜெயகாந்தன் சிந்தனைகள்

8_Jeyakanthan

 • “எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக் கண்டுதான் மனிதன் பத்து தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்துவிடவில்லை.”
 • “என்னதான் இந்நாட்டுப் பிரதமர் குழந்தைகளை ‘பாரதத்தின் புஷ்பங்கள்’ என்று வர்ணித்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடினாலும், அந்தப் புஷ்பங்கள், வளர்ந்த சமூகத்தின் காலடியில் மிதிபட்டு நசுங்கிச் சாகும் பிரத்யட்ச வாழ்க்கையை காணும்போது வயிறு பற்றி எரிகிறது ! ‘ஓ’ வென்று கதறியழத் தோன்றுகிறது.”
 • “குடுமி வைத்திருப்பவன் பிற்போக்காளன்; கோயிலுக்குப் போகிறவன் பிற்போக்காளன்; நமது புராணங்கள் யாவும் பிற்போக்கானவை; நமது சாஸ்திரங்கள் யாவும் பிற்போக்கானவை என்பது ஒரு முற்போக்கான கொள்கையாய்க் கொண்டாடப்படுகிறது! பெயரை மாற்றிக் கொண்டால் முற்போக்கு; நாத்திகம் பேசினால் முற்போக்கு; பிரியாணி சாப்பிட்டால் முற்போக்கு; தொட்டதற்கெல்லாம் மேனாட்டைப் பற்றிப் பேசுவது முற்போக்கு; நம்மை நாமே இழித்துக் கொள்வதும் நமது விக்கிரகங்களை உடைத்தெறிவதும் முற்போக்கு என்பது மற்றொரு கொள்கை. உண்மையில் இந்த இரண்டு தன்மைகளை வைத்துமட்டும் முற்போக்கு – பிற்போக்கை இனம் பிரிப்பது அறிவாளிகளின் செயலாகாது. எவனொருவன் தன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகளின் மீதோ துவேஷம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும், உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்குத் தானோர் உதாரண புருஷன் என்ற லட்சிய வேட்கையோடு செயலாற்றுகிறானோ, தன் வாழ்வையே அர்பணித்துக்கொள்கிறானோ அவன் அந்த அளவில் மனித இதயங்கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்குவாதிதான்.”
 • “ஒழுக்கமென்பது ஆண்-பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமே என்று நினைப்பது ரொம்பக் கொச்சையான தீர்ப்பு.”
 • “நான் எந்தக் கொள்கைக்கும், எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலி கட்டிக் கொண்டதில்லை”
 • “காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும். காதல்வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும், மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குண நலன்களே காரணமாயிருக்கின்றன.”
 • “எந்த அரசியலில் இருந்து இலக்கியமும், கவிதையும் வெளிவராதோ அது மக்களுக்கு உகந்தது அல்ல. எந்த அரசியலிலிருந்து பொய்க்கவிதையும் புழுத்த இலக்கியமும் புறப்படுமோ அதுவே நான் தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு. அவ்விதம் நேரும் காலையில் ஆசார்ய துரோணரை எதிர்த்து நான் திருஷ்டத்யும்னனை அனுப்புவேன். பிதாமகர் பீஷ்மரை எதிர்த்து சிகண்டியை அனுப்புவேன். இறுதி விதி அறிந்து இடையில் மனிதாபிமானத்தோடு தூதும் போவேன். வீமனுக்குத் தொடை தட்டியும் காண்பிப்பேன். எனது அன்பர்களின் நலனைக் காக்கும் பொருட்டு எதிரியின் அஸ்திரங்களை எல்லாம் வஞ்சககமாகவும் அபகரிப்பேன்.”
 • “எனது நூல்கள் யாவும் மகாகவி பாரதியின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கப்படுவனவே யெனினும் இந் நூல் பாரதியின் இலக்கியச் சோலையிலிருந்து பறித்தெடுத்த மலர்களால் தொகுக்கப் பட்டது என்பதனைக் கருதிச் சொந்தத்தோடும், உரிமையோடும் அவரது சென்னியிலிதைச் சூட்டுகிறேன். (பாரதி பாடம்)

(அவரது முன்னுரைகளிலிருந்து)

Series Navigationடால்ஸ்டாய் மொழிகள்

3 Comments »

 • G.Sundar said:

  “காதல் என்பது மிகவும் அற்பமானது” என்று ஜெயகாந்தன் சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் இந்த மேற்கோள் ஒரு ரொமாண்டிக் எழுத்தாளரின் வாயிலிருந்து வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. காதல் என்பது அற்புதமானது. அதை அனுபவிக்க வேண்டும். ஆராயக் கூடாது. இந்த அற்பக் காதலினால்தான் இந்த பூமியில் 700 கோடி பேர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துகொண்டிருக்கிறோம். காதலர்கள் வேண்டுமானால் அற்பர்களாக இருக்கலாமே ஒழிய, காதல் என்றுமே அற்பமாகிவிடாது.

  # 6 August 2014 at 5:00 am
 • G.Sundar said:

  வாழ்க்கையில் பக்குவம் அடைந்த எந்த ஒரு ஆணுக்கும் அல்லது எந்த ஒரு பெண்ணுக்கும் முன் மூன்று பாதைகள் காத்திருக்கின்றன. மேற்கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க. அவர்களில் பெரும்பாலானோர் ஆத்திகத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். சாப்பாட்டு ராமர்கள் ஆத்திகத்தைத் தேர்ந்தெடுக்காமல் வேறு எதைத் தேர்ந்தெடுப்பார்களாம்?! நாத்திகர்கள் என்றுமே குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். நோபல் பரிசு பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் வோல் சோயிங்கா, ஆத்திகம், நாத்திகம் பற்றிக் கூறியிருப்பதைப் படித்துப் பார்த்து, பரிசீலித்து ஆத்திகத்தையோ, நாத்திகத்தையோ இளைஞர்கள், இளம் பெண்கள் ஏற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டும் இல்லாமல் மூன்றாவதாக ஒன்றும் இருக்கிறது. அதன் பெயர் அக்னாஸ்டிசிஸம். நேரு, சீமா முஸ்தபா, குஷ்வந்த் சிங் ஆகியோர் அக்னாஸ்டிக்குகள்தான். “கடவுள் இருக்கலாம். அதாவது இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அந்தக் கடவுளுக்காக நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, நம் வேலையை உருப்படியாகப் பார்த்தாலே போதும்” என்பதுதான் அக்னாஸ்டிக்குகளின் கொள்கை.

  # 6 August 2014 at 5:14 am
 • meenakshi tp said:

  எந்த எந்த கதைகளின் முன்னுரை என்று குறிப்பிட்டிருந்தால் வாசகர்கள் அந்தந்த கதைகளை படிக்க உதவியாக இருந்திருக்கும்.நன்றி.

  # 13 August 2014 at 12:26 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.