கவிதைகள்

கீற்று

boy-looking-out-window-in-the-rain
இளம் குளிர்.
பரவலாய் வீசும் மழை.
மரங்களில், இலைகளில் மலர்ச்சி.
வீடுகள் நனைந்து கொண்டே
வெளியே சாலையில் வேடிக்கை பார்க்கும்.
முகப்பில் சன்னல் கம்பிகளில்
அல்லது
கைகளில் கன்னம் பதித்து
சிறுமியரும், பையன்களும் கூட.
உள்ளேயும் உள்ள வானம்
“சற்றே வெறிக்கட்டுமா?”
என்று மெதுவாய்
உத்திரவு கேட்கும்.
உறங்கும் குழந்தை,
மஹாவிஷ்ணுவின் கிலுகிலுப்பைக்கு
சிரித்து முடித்த பின்னர்தான்
‘உம்’ கொட்டும்.
அதுவரை அமைதியாய்க்
கை கட்டி நிற்கத்தான் வேண்டும்.
வ. ஸ்ரீநிவாசன்

oOo

உருவம் உள்ளடக்கம்
dali_sleep
அவன் அறிவான்
வெள்ளைக் கழுத்துப் பட்டிக்கு
விதித்ததும் பழக்கமாவதும்
வாய்மொழி வன்முறை
உடல் மொழி எச்சரிக்கை
மின்னஞ்சல் தாக்குதல்
தரவுகளின் நிழற்படங்கள்
இலக்குகள் பற்றி மிரட்டல்கள்
இரவு வரை நீண்டன
ரயிலில் ஆறடி சயன இயருக்கையில்
தஞ்சமாகும் போது
காற்றை செலுத்தி வடிவமளித்த
தலையணை ஒன்றே ஆறுதலாய்
அழுந்தி எழுந்து
உள்ளடக்கம் மாறி மாறி
அதன் உருவம் மட்டும்
மாறாததை
வியந்து ஒரு பாடம்
கற்க
அவன் விழித்திருக்கவில்லை
விடிந்ததும்
அவன்
ரயிலை நீங்கும் முன்
தலையணை தட்டையாக
மாநகர வணிகக் காற்றை
அந்த ஊர்
உள் வாங்கியது
சத்யானந்தன்

0 Replies to “கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.