kamagra paypal


முகப்பு » அறிவியல்

ஸ்படிகங்கள் பெற்றுத் தந்த நோபல் பரிசுகள்

கட்டுரையாளர் ஷங்கர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பவியல்(Bio-technology) துறையில் முனைவர்(Ph.D.) பட்டம் பெற்று, தற்போது Strasbourg-இல் உள்ள IGBMC என்ற ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிகிறார்.

2009 வேதியலுக்கான நோபல் பரிசு

ramak_venkiஇந்த ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(Venkatraman Ramakrishnan) என்ற தமிழ் நாட்டில் பிறந்து அமேரிக்காவுக்குக் குடி பெயர்ந்த தமிழர் உட்பட, இஸ்ரேலிய அடா யோனாத் (Ada Yonath), மற்றும் அமேரிக்க தோமஸ் ஸ்டைஸ் (Thomas Steitz) ஆகிய மூவரும் ரைபோசோம் எனும் செல்லுக்குள் இயங்கும் நுண் உறுப்பு ஒன்றின் மூலக்கூறு வடிவத்தை(Molecular structure) எக்ஸ்-கதிர்வீச்சுகளைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள், தனித் தனியாக இதைச் செய்திருந்தாலும், பரிசு மூவருக்கும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளது.

வெங்கட் ராமகிருஷ்ணன், அடா யோனாத், மற்றும் தாமஸ் ஸ்டைஸ் மூவரின் கிரிஸ்டலோகிராஃபி சார்ந்த பணிகளுக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு புரோட்டீனைக் கிரிஸ்டலாக்கி அதன் வடிவத்தைக் கண்டுபிடித்தாலே முனைவர் பட்டம் (Ph.D) கொடுத்துவிடுகிறார்கள். 1995-2005 வரை இந்த நிலை தான். ரைபோசோம் ஒரு புரோட்டீன் அல்ல, ஒரு புரோட்டீன் கூட்டு. அதில் பல RNA-க்கள் வேறு நடுவில் இருக்கும். இத்தகைய ஒரு கலவையை, அதை மொத்தமாகச் சேர்த்து கிரிஸ்டல் ஆக்கியிருக்கிறார்கள். ஒரு புரோட்டீனுக்கான கிரிஸ்டலை வளர்ப்பது என்பதே கடினமான காரியம். அதிலும், ஒரு 10-20 புரதங்கள் சேர்ந்து இருக்கும் கூட்டுக் கலவையை கிரிஸ்டலாகச் செய்வதென்பது, இன்றும், மிகவும் கடினமான காரியம்.

ரைபோசோம் என்றால் என்ன ?

எல்லா உயிரினங்களின் மரபும் டி.என்.ஏ-க்கள் (DNA) மூலம் கடத்தப்படுவது தெரிந்ததே (சில விதிவிலக்குகள் உண்டு). டி.என்.ஏ-க்களில் நூக்கிளியோடைடுகள் வரிசை மொழியாக மரபுகள் கடத்தப்படுகின்றன. இந்த டி.என்.ஏ-வில் இருக்கும் ஜீன்கள் புரதமாக மாறினால் தான் மரபு வெளிப்படும். எளிமையாக சொல்வதென்றால், டி.என்.ஏ என்பது ஒரு சிற்பத்தை எவ்வாறு வடிக்கவேண்டும் என்று சொல்லும் புத்தகம். புரதம் என்பது அந்த புத்தகத்தை படித்து ரசித்து ஒரு சிற்பி வடித்த சிற்பம் போன்றது. அந்த சிற்பி தான் ரைபோசோம். ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது. நமது சிற்பிக்கு டி.என்.ஏ புத்தகத்தின் மொழி புரியாது. அதை யாராவது மொழிபெயர்த்துக்கொடுத்தால் சிறப்பாக சிற்பமாக வடித்துவிடுவான். அவனுக்குத் தெரிந்த ஒரே மொழி ஆர்.என்.ஏ மொழி.

புரதம் என்பது என்ன ?

புரதம் என்பது அமினோ அமிலங்களின் முத்துச்சரம் போன்ற வரிசை. புரதங்கள் தான் நமது உடலில் அனைத்து வேலைகளையும் செய்கின்றன. எடுத்துக் காட்டு:  ஹீமோகுளொபின். ரத்தத்தில் பிராண வாயுவைக் கடத்துவது இந்தப் புரதம் தான். இன்சுலின், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது இந்தப் புரதம் தான். நம் உடலில் பேக்டீரியா நுழைந்துவிட்டதா, அதை அடித்துவிரட்டுவதும் எதிர்ப்பு சக்தியாக வரும் ஆன்டி-பாடி  (anti-body) எனும் புரதங்கள் தான்.

ரைபோசோம்களின் வேலை என்ன?

டி.என்.ஏ-வை ஆர்.என்.ஏ-வாகப் பிரதி மாற்றுவது (Transcription) என்று சொல்லப்படுகிறது. அதற்கென்றே சில நொதிகள் உள்ளன. ஆர்.என்.ஏ-வை புரதமாக மாற்றுவது தான் நமது ரைபோசோம்கள்(படம் 1). இது செய்யும் வேலையின் பெயர் மொழிபெயர்ப்பு (Translation) என்று கூறுகிறார்கள்.

படம் 1

படம் 1 (நன்றி: விக்கிமீடியா. தமிழாக்கம்: ஷங்கர்)

டி.என்.ஏ-விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வரும் ஆர்.என்.ஏ-வை மெசஞ்சர் ஆர்.என்.ஏ(messenger RNA அல்லது mRNA) என்று அழைக்கிறார்கள். இதில் இருக்கும் சங்கேதத்தைப் புரதமாக மாற்றுவது ரைபோசோம்களின் வேலை. இதற்கு அமினோ அமிலங்களை சுமந்து வரும் டிரான்ஸ்ஃபர் ஆர்.என்.ஏ (Transfer RNA or tRNA)-க்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரைபோசோம்கள், பெரும் பகுதி(Major sub unit) மற்றும் சிறு பகுதி (Minor sub unit) என்று இரண்டு பகுதிகளாக இருக்கின்றன.

சிறு பகுதி, ஒரு பெரிய ஆர்.என்.ஏ-வும், 32 வெவ்வேறு புரதங்களாலும் ஆனது.

பெரும் பகுதி என்றழைக்கப்படும் பகுதி மூன்று ஆர்.என்.ஏ-க்களும் 46 வெவ்வேறு புரதங்களாலும் ஆனது.  மேலே உள்ள விளக்கப்படத்தில் (படம் 1) அடர் பச்சை வண்ணத்தில் சிறு பகுதியும் வெளிர் பச்சை வண்ணத்தில் பெரும் பகுதி ரைபோசோமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது

அனைத்து புரதங்களும் டி.என்.ஏ விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு அமினோஅமிலங்கள் வரிசையாக மாறுவது ரைபோசோம்களால் தான். இவைகளின் மூலக்கூறு வடிவத்தை எக்ஸ்-கதிர்வீச்சைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துள்ளனர்.

எக்ஸ்-கதிர்வீச்சினால் எவ்வாறு மூலக்கூறு வடிவத்தை கண்டுபிடிக்கலாம் ?

அறிவியலாளர்கள் ஒரு பொருளின் மூலக்கூறு வடிவத்தைக் காண எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்திவந்துள்ளனர். அந்தப் பொருளை மிகவும் தூய்மையான ஸ்படிகமாக(crystal) மாற்றி அதை கதிர்வீச்சில் வைத்தால் அது எக்ஸ்-கதிர்களை அலைப் பிதிர்வு(diffraction) செய்யும். இத்தகைய பிதிர்வுகளை படம் பிடித்து அதில் வரும் பிதிர்வுக் கோலத்தை(diffraction pattern) ஆராய்ந்து மூலக்கூறுகளில் உள்ள அணுக்களின் நிலையைக் கண்டறிகிறார்கள்(படம் 2). இப்படி கண்டறிந்த அணுக்களின் நிலையை வைத்து மூலக்கூறின் நிலையையும், அதை வைத்து முழுப் பொருளின் மூலக்கூறு வடிவத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

படம் 2

படம் 2

ரைபோசோம்களின் மூலக்கூறு வடிவத்தால் என்ன நன்மை ?

ரைபோசோம்கள் அனைத்து ஜீவராசிகளிலும் உள்ள செல்களில் ஒரே போன்ற வேலையைச் செய்துகொண்டிருக்கின்ற மிக முக்கியமாக நுண்ணுறுப்பு. செடி கொடிகள், தாவரங்கள் முதல் மனிதன் வரை ரைபோசோம்களின் வடிவம், அமைப்பு எல்லாம் ஒரே போலத்தான் இருக்கின்றது. முக்கியமாக வியாதிகள் தரும் நுண்கிருமிகளான பாக்டீரியாக்களில் உள்ள ரைபோசோம்களுக்கும், மனிதனுடைய செல்களில் உள்ள ரைபோசோம்களுக்கும் சிறிய வேறுபாடே உள்ளது. பொதுவாக ரைபோசோம்களின் வேலையைத் தடை செய்யும் மருந்துகள் மூலம் வியாதிகள் தரும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அது மனித செல்லில் உள்ள ரைபோசோம்களைத் தாக்காமல் இருக்க வேண்டும். ஒரு சில நுட்பமான வேறுபாடுகளைக் கண்டறியவும், மனித ரைபோசோம்களைத் தாக்காது பாக்டீரியாவின் ரைபோசோம்களைத் தாக்க சரியான மருந்துகளை வடிவமைக்கவும் இந்த ரைபோசோம்களின் மூலக்கூறு வடிவம் உதவுகிறது.

கண்டுபிடிப்பின் முக்கிய பயன்கள்

ஆன்டி பயாடிக் (Antibiotic) எனப்படும் கிருமி நாசினி மருந்துகள், பாக்டீரியாக்களின் வாழ்க்கையில் எங்கெல்லாம் பாதிக்கின்றன என்பது மூலக்கூறு உயிரியல் (Molecular biology) ஆராய்ச்சி செய்பவர்களால் காலங்காலமாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. ரைபோசோம்களின் வடிவம் தெரிவதற்கு முன்னரே அந்த மருந்துகள் ரைபோசோம்களைத்தான் தாக்குகின்றன போன்ற விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டிருந்தன. ரைபோசோம் கூட்டமைப்பு வடிவம் தெரிந்ததனால் பாக்டீரியாவிற்கு எதிராக வேலை செய்யும் மருந்துகள், அதில் எந்த இடத்தைப் போய் ஒட்டுகின்றன, அதனால் ரைபோசோம்களின் வேலை எப்படி பாதிப்படைகிறது என்பதை எல்லாம் கண்டுபிடித்துவிடலாம்.

உதாரணமாக, ஜென்டாமைசின் (Gentamycin), அமைகாசின் ( Amikacin), ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin- ஒரு காலத்தில் காச நோயெதிர்ப்பு மருந்து -TB drug), க்ளோராம்ஃபினிகால் (Chloramphenicol), டெட்ராசைக்ளின் (Tetracyclin)  டாக்ஸிசைக்ளின் (doxycylcin), அஸித்ரோமைசின் (Azithromycin), எரித்ரொமைசின் ( Erythromycin) போன்றவை எல்லாமே பாக்டீரியாக்களின் ரைபோசோம்களை மட்டுமே குறி வைத்துத் தடுக்கக்கூடியவை. ஒவ்வொன்றும் எவ்வாறு வேலை செய்கிறது என்பது இப்போது தெரியும். இவை எல்லாவற்றிற்கும் வெங்கட்ராமன், அடா யோனாத், தோமஸ் ஸ்டைட்ஸ் கண்டுபிடித்த ரைபோசோம் கூட்டமைப்பின் வடிவம் தான் அடிப்படை. இன்னொன்றும் இப்போதெல்லாம் செய்கிறார்கள். ரைபோசோம்களில் நாம் உட்கொள்ளும் எதிர்ப்பு-சக்தி மருந்து ஒட்டிக்கொள்ளும் இடத்தை வைத்து அதன் ஒட்டும் தன்மையைக்(affinity) கூட்ட அந்த மருந்தில் சிற்சிறு வேதியல் மாற்றங்களைச் செய்து புதிய, மேலும் சக்திவாய்ந்த மருந்துகளை உருவாக்குகிறார்கள். Structure based drug design என்று அதற்குப் பெயர்.

ரைபோசோம்களின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த மருந்துகளை அதில் பொருத்திப்பார்த்ததில் ரைபோசோம்களின் வேலையை அது எவ்வாறு மூலக்கூறு லெவலில் தடுக்கிறது என்று நமக்குப் புலனாகிவிடுகிறது. அந்த அறிவை வைத்துக்கொண்டு புதிய மேலும் வீரியம் மிக்க மருந்துகளை நாம் வடிவமைக்க முடியும். வெறும் கம்ப்யூட்டர் உதவியுடனேயே இதெல்லாம் செய்துவிடலாம். ஒரு அரை-நாள் போதும். ஒரு டஜன் வெவ்வேறு மருந்துகளின் வீரியம் எவ்வாறு இருக்கும் என்று கம்ப்யூட்டரில்(in silico) செய்து பார்த்துவிடலாம். அதில் தேறுவதைச் சோதனைச்சாலையில்(in vitro) சோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

ரைபோசோம்களின் வடிவம் தெரியாதெனில், மருந்துகளை ஒவ்வொன்றாக வளர்க்கப்பட்ட பேக்டீரியா மேல் செலுத்தி அது பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறதா என்று கண்டுபிடிக்கவேண்டும். இச்சோதனையின் முடிவுகளை முழுமையாக பெற சில தினங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம். இந்தக் கால அளவைக் குறைத்து, முன்னிலும் வலுவான எதிர்ப்பு-சக்தி(anti-biotic) மருந்துகளை மிக வேகமாக தயாரிக்கத் துணை புரிவது திரு. வெங்கட்ராமனின் ஆராய்ச்சி.

2009 மருத்துவத்திற்கான நோபல் பரிசு

2009 மருத்துவத்திற்கான(Medicine and Physiology) நோபல் பரிசு, முனைவர்கள் எலிசபெத் பிளாக்பர்ன் (Elizabeth Blackburn), ஜாக் சோஸ்டாக்(Jack Szostak), மற்றும் கேரல் கிரெய்டர் (Carol Greider) என்ற மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மனித உடலில் தினமும் அரை கோடி செல்கள் செத்து மடிகின்றன. தினமும் அத்தனை கோடி செல்கள் செல் பிளவு மூலம் இனப்பெருக்கம் செய்து இறந்த செல்களை ஈடு செய்கின்றன. செல் பிளவு நடக்க முக்கியமாக மரபணுக்கள் எனும் குரோமோசோம்கள் பிரதியெடுக்கப் படவேண்டும். குரோமோசோம்கள் டி.என்.ஏ-க்களான ஆனவை (படம் 3).

படம் 3: செல்லுக்குள் இருக்கும் குரோமோசோம்கள்

படம் 3: செல்லுக்குள் இருக்கும் குரோமோசோம்கள்

செல்லுக்குள், நியூக்ளியஸ் எனும் பகுதியில் குரோமோசோம்கள் இருக்கின்றன. மரபு-நூலிழையான டி.என்.ஏ சில ஹிஸ்டோன்கள் என்ற புரதத்தின் மேல் சுற்றிக்கொண்டு பல மில்லியன் ந்யூக்ளியடைடுகள் கொண்ட மரபுநூலிழை சில மைக்ரான்களான செல்லுக்குள் அடைக்கப்பட்டுவிடுகின்றது. குரோமோசோம்களின் மத்தியப்பகுதி, சென்ட்ரமியர் (Centromere) என்றும் முனைப்பகுதி டீலமியர் (Telomere) என்றும் அழைக்கப்படுகிறது. (படம் நன்றி: விக்கிமீடியா. தமிழ் மொழிபெயர்ப்பு: ஷங்கர்) [டெலமியர் என்றும் சொல்லலாம்.]

மனித செல்களில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்களைப் பிரதி எடுப்பதில் உள்ள முக்கியமான சிக்கல் அதன் முனைகளான டீலமியர் பகுதியைப்(Telomere)பிரதி எடுப்பதில் தான் உள்ளது. ஷூ லேஸ் போல் நீளமான நூலாக இருக்கும் மரபுநூலிழையின் முனை ஷூ லேசில் இருக்கும் பிளாஸ்டிக் போல் ஒரு பகுதியை வந்தடையும் போது சாதாரணமாக பிரதி எடுக்கும் நொதிகள் செயலற்றுப் போய்விடுகின்றன. அப்படியே முனைகளைப்பிரதி எடுக்காமல் விட்டால் நாளடைவில் குரோமோசோம்கள் சுருங்கி சிறிதாகிவிடும், முக்கியமான ஜீன்கள் பிரதி எடுக்கப்படாமல் தொலைந்து போகக்கூடும் அபாயம் உள்ளது.

டி.என்.ஏ பாலிமரேஸ்(DNA polymerase) எனப்படும் நொதி மரபணுக்களைப் பிரதி எடுக்கும் வேலையைச் செய்கிறது. அது வேலை செய்ய பிரைமர் எனப்படும் ஒரு தொடக்க நூலிழை தேவை, அது ஆர்.என்.ஏ எனப்படும் ரைபோ நியுக்ளியைக் அமிலத்தாலானதாக இருக்கும். அதன் அடியில் புதிய நியூக்ளியடைடுகளை அது கோர்த்து மரபுநூலிழையைப் பிரதி எடுக்கும் என்ற உண்மையை கோர்ன்பர்க் 1959 ல் கண்டுபிடித்தார். டி.என்.ஏ இழைகள் பின்னிச் சுருளும் இரட்டை இழைகளாக (Double helix என்று கூறுவர்) இருப்பது இயல்பு. இவ்விரண்டு இழைகளையும் பிரதி எடுக்க பாலிமரேஸ் வேலை செய்கிறது. ஆனால், டி.என்.ஏ பாலிமரேஸ் ஏற்கனவே இருக்கும் இழையில் தான் புதிய நியூக்ளியடைடுகளை கோர்த்து இழையை உருவாக்கும் தன்மையுடையது, மேலும் இது ஒரு திசையில் தான் வேகமாக வேலை செய்யும், அது 3′->5′ திசை. எதிர் திசையான 5′->3′ திசையில் இருக்கும் இழை கொஞ்சம் மெதுவாக விட்டு விட்டுத்தான் பிரதி எடுக்கப்படுகிறது. பின்னர் கடைசியாக அனைத்து இடைவெளிகளும் நீக்கப்பட்டு இழைகள் இணைக்கப்படுகின்றன. இப்படி பின்தங்கும் இழையில் ஏற்படும் இடைவெளிகளை அதற்கு அடுத்து இருக்கும் இழையில் நியுக்ளிய்டைடுகளைக் கோர்த்து நீட்டி இடைவெளிகளை இணைத்துவிடுகின்றது. ஆனால், முனையில் இருக்கும் ஆர்.என்.ஏ தொடக்க இழையை நீக்கிய பின்னர் புதிய நியூக்ளியடைடுகளை டி.என்.ஏ பாலிமரேஸால் கோர்க்கமுடியாது. இதனால் ஒவ்வொரு முறையும் மரபு-நூலிழை பிரதி எடுக்கப்படும் போது சுருங்கிக்கொண்டே போகலாம். ஆனால், அப்படி நடப்பதில்லை. இதன் காரணத்தைக் கண்டு பிடித்தவர்கள் தான் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றவர்கள்.

கண்டுபிடிப்புகள்

1970-களின் ஆரம்பத்தில் பிளாக்பர்ன் (Blackburn) டி.என்.ஏ நூலிழையில் உள்ள நியூக்ளியடைடுகளின் வரிசைகளைக் கண்டுபிடிக்கும் உத்தியைப் பயன்படுத்தி டி.என்.ஏக்களின் முனைப்பகுதியில்(டலமியர் பகுதி) எவ்வாறான ந்யூக்ளியடைடுகள் அமையப்பெற்றுள்ளன என்பதைக் கண்டுபிடிக்கிறார். 1980 காலகட்டத்தில் டீலமியர் டி.என்.ஏ-க்கள் ஒரு செல் உயிரியான யீஸ்ட்டில் செயற்கையாகத் திணிக்கப்படும் குரோமோசோம்களை அழிவிலிருந்து காக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பதைச் சோஸ்டாக் (Szostak) மற்றும் எலிசபெத் பிளாக்பர்ன் இருவரும் இணைந்து கண்டுபிடிக்கின்றனர். பின்னர் பிளாக்பர்னிடம் ஆராய்ச்சி மாணவியாக வரும் கேரல் க்ரெய்டர் (Carol Greider) டீலோமியர் பகுதி எவ்வாறு பிரதி எடுக்கப்படுகிறது என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். டீலோமியர் பகுதியை (டி.என்.ஏ முனைப்பகுதியை) பிரதி எடுக்கவே விசேஷமான ஒரு நொதி இருப்பதைக் கண்டறிகிறார்கள். அதற்கு டீலோமரேஸ்(Telomerase) என்று பெயரிடுகிறார்கள். டீலோமரேஸ் என்பது ஒரு புரதமாக இருப்பினும் அது அதனுள் ஒரு சிறு ஆர்.என்.ஏ(RNA)-வை வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் நியூக்ளியடைடுகளைக் கோர்த்து டீலோமியர்களை (முனைப்பகுதியை) நீட்டிவிடுகிறது என்பதும் கண்டுபிடிக்கிறார்கள்.

எச்.ஐ.வி(HIV) எனப்படும் எய்ட்ஸ் கிருமியிடம் இருக்கும் பாலிமரேஸின் பெயர் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்(Reverse transcriptase). ஆர்.என்.ஏ-வை உருவாக்கவேண்டுமென்றால் டி.என்.ஏ-விலிருந்துதான் ஆர்.என்.ஏ-வை உருவாக்க முடியும் என்ற அடிப்படை அறிவியல் விதியை தலைகீழாகத் திருப்பிப் போட்ட நொதி ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ். ஆர்.என்.ஏ இழையிலிருந்து டி.என்.ஏ-வாகப் பிரதி எடுக்கக்கூடியது. இந்த நொதிக்கு எதிராக வேலை செய்யக்கூடிய மருந்துகள் தான் எய்ட்ஸைக் கட்டுப்படுத்துகின்றன. டெலோமரேசும் இப்படித்தான் ஆர்.என்.ஏ இழையிலிருந்து டி.என்.ஏவை பிரதி எடுத்துக்கொண்டிருந்தது. இந்த டெலோமரேஸ் வேலை செய்ய முக்கியத் தேவை டீலோமியர் எனும் டி.என்.ஏ பகுதி. அனைத்து ஜீவராசிகளிலும் (ந்யூக்ளியஸ் உள்ள) இது ஒரே போல் இருப்பதையும் கண்டறிகின்றனர். இப்பகுதி டி.என்.ஏ-க்கள் டெலோமரேஸ் கொண்டு நீட்டப்படாமல் இருந்தால் காலப்போக்கில் செல்லுக்கு முதுமை (Senescence) ஏற்பட்டு இறந்துவிடுகின்றன. மனிதனுக்கும் டீலோமரேஸ் வேலை குறைந்து போய், டீலோமியர் பகுதி மரபணுக்களில் சுருங்கிவிடுவதால் தான் முதுமை ஏற்படுகிறது என்றும் இதன் மூலம் புலப்பட்டிருக்கிறது. டீலோமரேஸ் நொதியின் அளவு மற்றும் வேலையை கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது காலப்போக்கில் புற்று நோயையும் உருவாக்கும் தன்மையுடையது. இந்தக் கண்டுபிடிப்பினால் புற்றுநோய், வயது முதிர்வு போன்ற பிரச்சனைகளைப் புதிய கோணத்தில் எதிர்கொள்ள முடிவதனால் இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்:

1. விக்கிப்பீடியா
2. Nobel prize

One Comment »