kamagra paypal


முகப்பு » இசை

பாகிஸ்தானிய இசைத் தூதர்கள்

சில நாட்களுக்கு முன் முன்னாள் பாகிஸ்தானிய சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப்பின் பெயர் மறுபடியும் செய்தி ஊடகங்களில் வெகுவாக அடிபட்டது. அனால் இம்முறை அது இந்தியா மீது திடீர் தாக்குதலைத் திட்டமிட்டது அல்லது இரானுக்கு அணு ஆயுதத் தளவாடங்களை ரகசியமாகக் கடத்தியது என்பன போன்ற வழக்கமான காரணங்களுக்காக இல்லை. ஒரு புகழ்பெற்ற ஸுஃபி இசை கலைஞருடன் எவரும் எதிர்பாராத வண்ணம் அவரும் கோதாவில் இறங்கி ஒரு கஸல் பாடலைப் பாடியதே இதற்குக் காரணம். அடிப்படையில் ஒரு செவ்வியல் இசையாய் தோன்றும் இந்த “லாகி லாகி” எனும் பாடல் ஹிந்துஸ்தானிய பைரவி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. (இந்த ஹிந்துஸ்தானிய பைரவியைத்தான் நம்மூரில் சிந்துபைரவி என அழைக்கிறோம். கர்நாடக சங்கீதத்தில் ஏற்கனவே இரண்டு தைவதங்களையும் கொண்ட ஒரு பைரவி இருந்ததால் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து இறக்குமதியான இந்த ராகம் சிந்துபைரவி என இங்கே அழைக்கப்படுகிறது) . இப்படிப்பட்ட ஒரு செவ்வியல் பாடலை முன்பின் இசைப்பரிச்சயம் இல்லாததொரு ராணுவ ஜெனரல் அசராமல் பாட முயற்சித்தது எனக்கு வியப்பை அளித்தது. ஒரு ஏஞ்சலா மேர்கல்லோ அல்லது கார்டன் ப்ரவுனோ பீத்தோவனின் இசையை முன்பின் அறியாமல் திடீரென்று ஒரு சிம்பொனி குழுவுடன் சேர்ந்து இசைக்க முடியுமா? அல்லது நம் மன்மோகன்சிங்தான் ஒரு ஹிந்துஸ்தானி இசைக்கலைஞருடன் சேர்ந்து ஒரு துருபத்தைச் சடாலென்று பாட முடியுமா? இசையில் முதிர்ந்த உஸ்தாதிலிருந்து இசைப் பரிச்சயமே இல்லாத ஜனதா வரை அனைவரையும் சென்றடையும் கஸல் ஒரு அருமையான செவ்வியல் கலை.

அடிப்படையில் இந்த கஸல் உருது மொழி இலக்கியத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் கவிதை வகையாகும். இன்னமும் நெருங்கிப் பார்த்தால் தெரிவது இவை.  இரண்டு இரண்டு அடிகளைக் கொண்ட கவிதைகளை “ஷேர்” (Sher) என அழைப்பார்கள். இப்படியான ஷேர்களை கண்ணி கண்ணியாகக் கோர்த்துப் பின்னப்படும் கவிதை மாலையே கஸல் எனப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் எல்லா ஷேர்களின் தொடுப்பும் கஸலாகி விடாது. உருதுவில் ஒரு பாட்டின் சந்தம் ‘பெஹர்’ என அழைக்கப்படுகிறது. ஒரு கஸலுக்குள் புனையப்படும் எந்த ஒரு கண்ணியின் இரு அடிகளும் ஒரே பெஹரில் அமைய வேண்டும் என்பதும், எல்லா கண்ணிகளுக்குள் இடையேயான பெஹரும் ஒத்துப்போக வேண்டும் என்பதும் கஸலின் மிக முக்கியமான விதி.

இவை தவிர நம் தமிழ் இலக்கணத்தின் இயைபுத் தொடையைப் போலவே கஸலிலும் சில விதிகள் உண்டு. அதாவது, எல்லா கண்ணிகளின் கடைச் சொல்லும் (அல்லது கடைச் சொற்களும்) ஒரே விதமான இயைபுத் தொடையில் அமைய வேண்டும். இது ‘ரதீஃப்’ எனப்படுகிறது. இது தவிர, ‘ரதீஃப்-புக்கு முன் வரும் பகுதியும் அதே போல ஒரே அளவில் இருக்க வேண்டும். இதை ‘காஃபியா’ என்கிறார்கள். இவை தவிர இன்னும் பல நுணுக்கமான விதிகளும் உண்டு. ஆக கஸல் என்பது அடிப்படையில் ஒரு கவிதை சார்ந்த படைப்பாய், பாட்டுக்கு மெட்டெழுதப்படும் கவிதை வடிவே அன்றி அனைவரும் தவறாக கருதும் வண்ணம் மெட்டுக்கு பாட்டெழுதப்படும் இசை வடிவல்ல.

அதே போல கஸல் கவிதைகளின் கருவும் மிகவும் பக்தி மார்கமானதோ (ஸுஃபி கஸல்களில் மீரா, ஆண்டாளைப் போல கடவுளைக் காதலுடன் பார்க்கும் பாடல்கள் இருந்தாலும்), ஒரே மூச்சில் பெரிய பெரிய இதிகாசங்களையும், காவியங்களையும் ஏனைய உப இசைப் பகுதிகளாய் தருவிப்பதோ அல்லது அறிவுரை கூறும் தொனியில் வறட்சியாக அமைவதோ இல்லை. தலைவன் தலைவியைத் தற்காலிகமாகப் பிரிவதையோ, அவள் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் நிராகரிப்பதையோ அல்லது அவளை நிரந்தரமாகப் பிரிவதன் மூலம் அனுபவிக்கும் ஆறாத சோகத்தையோ பெரும்பாலும் மையமாகக் கொண்டு பாடப்படும் கவிதைகளே இவை. நமது திருவள்ளுவர் “பசப்புறுபருவரல்”லிலும் “பிரிவு ஆற்றாமை”யிலும், அகநானூற்றுப் பாடல்கள் பலவற்றிலும் இப்படிப்பட்ட பசலைப் பிரிவைக் குறித்துப் படித்திருக்கிறோம். ஆனால் கஸல் செவ்வியல் மொழியிலிருந்து கீழிறங்கி சாதாரண சொற்களில் அமைவது மட்டுமில்லாமல், “மாது”வைத் தொடர்ந்து நாயகன் “மது”வையும் நாடித் தத்துவ ரீதியில் புலம்புவதையும் அப் பாடல்களில் காணலாம். இவ்வாறு பெரும்பாலும் சாதாரண மக்கள் தம் வாழ்வில் சந்திக்கும் யதார்த்தமான சூழல்களைச் சார்ந்த கவிதைகளாய் இருப்பதாலேயே கஸல் ஒரு செவ்வியல் போர்வை போர்த்திய ஜனரஞ்சக வடிவாய் இருக்கிறது.

காலப்போக்கில் கஸலின் கட்டுக்கோப்பான சந்தம் இசையமைக்கத் தோதுவாகவே, உருது கஸல்களுக்கு முகாலயர்களின் காலத்தில் இசையமைத்துப் பாடும் வழக்கம் வலுப்பட்டது. இதே காரணத்தால் அன்றிலிருந்து இன்றுவரை கஸல் பாடல்கள் பாகிஸ்தானிய கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. இந்தத் தலைமுறையில் இந்தியத் துணைக்கண்டம் கண்ட மிகச்சிறந்த இசைக்கலைஞர்களின் வரிசையில், பாகிஸ்தானைச் சேர்ந்த கஸல் பாடகர்களான மெஹதி ஹாசன், குலாம் அலி ஆகிய இருவரும் நிச்சயமாக இடம் பெற்றிருப்பர்.

மெஹ்தி ஹாசன்

மெஹ்தி ஹாசன்

மெஹ்தி ஹாசன் சிறு வயதிலிருந்தே தன் தந்தையிடம் முறைப்படி ஹிந்துஸ்தானி சங்கீதம் பயின்றவர். உண்மையில் ராஜஸ்தானில் பிறந்த இவர் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்தார். இதனால் இவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தும் தனக்கு உருது மொழியின் மேல் இருக்கும் காதலால் பழைய கஸல் கவிதைகளை தேடிப் பிடித்து அதற்குப் பாரம்பரிய இசை கலந்த எளிமையான பூச்சைப் பூசி பாகிஸ்தான் ரேடியோ மூலம் இசை அலைகளை எழுப்பினார். 60களிலும் 70 களிலும், நம்மூர் டிஎம்எஸ் போல் பாகிஸ்தானிய சினிமாவின் முதன்மைப் பாடகராக விளங்கினார் ஹாசன். லாகூரை மையமாகக் கொண்டதால் ‘லாலிவுட்’ எனப்படும் பாகிஸ்தானிய திரை உலகில் மட்டுமல்ல, எல்லைக்கு இந்தப் புறம் அவர் பாடிய ஹிந்திப் பாடல்களும் மிகச் சிறப்பானவை. இந்த கால கட்டத்தில் அவர் லாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் பாடிய கஸல்களே இந்த செவ்வியலை மக்கள் மத்தியில் பிரபலமாக்கின.

காதலியைப் பற்றி வியந்தும் புகழ்ந்தும் தன்னை உதாசீனப் படுத்துவதை எண்ணி அழுதும் தொழுதும் அமையும்  மெஹ்தி ஹாசன், குலாம் அலியின் கஸல்கள், ஒவ்வொருவரும் இது தனக்கு ஏற்படும் அனுபவம் போல் லயிக்க வைப்பவை. இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பாடல்களுமே ஏறக்குறைய இந்த வகைதான்.

“மொஹப்பத்” என்ற திரைப்படத்தில் மெஹ்தி ஹாசன் பாடிய ‘ரஞ்சிஷ் ஹி’ எனும் இந்தப் பாடல் திரையிசை கஸல்களுக்குள் தலை சிறந்ததாகக் கருதப் படுகிறது. (கவனிக்க: இணைக்கப்பட்டுள்ள இந்த கோப்பு சரணத்தில் தொடங்குகிறது); “யமன் கல்யான்” ராகத்தில் அமைக்கப்பட்டது. ஆரோகணத்தில் சட்ஜமத்தையும் பஞ்சமத்தையும் சட்டை செய்யாது, அவரோகணத்தில் இரண்டு மத்யமங்களையும் தொட்டுக் கொண்டு இறங்குவது இந்த ராகத்தின் சுபாவம். இத்தகைய செவ்வியல் விதியிலிருந்து பிசகாது எளிமையோடு இப்பாடலை இவர் கொடுத்திருக்கும் விதம் அலாதியானது.

‘பாத் கர்ணி’ என்ற இந்தப் பாடலில் இவர் நம்மை உருக்கிக் கொண்டிருக்கையில் பின்னணியில் தாஜ்மஹால் தேயிலை விளம்பரத்தில் வரும் ஜாகிர் உசேன் போல் தபலா கலைஞரும் புகுந்து விளையாடி இவ்விசை வடிவின் செவ்வியல் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். ‘பஹாடி’ எனும் மற்றொரு அற்புதமான ராகத்தை ஒட்டி அமைந்த இந்தப் பாடல் இந்தியாவின் கடைசி முகலாயச் சக்கரவர்த்தியான “பகதூர் ஷா ஸஃப்பர்” எழுதியது. தான் அரசாண்ட காலத்தில் நுண்கலைகளை ஆதரித்தது மட்டுமல்லாது, தன்னைச் சிறையிலடைத்த போதும் கரித்துண்டால் அறையின் சுவர் முழுதும் கவிதையாய் எழுதித் தீட்டும் அளவிற்கு இவருக்குக் கலையின் மீதும் கவித்துவம் மீதும் ஆர்வம் இருந்திருக்கிறது.

பாரம்பரியம் மிக்க ராகத்தில் அமைக்கப்படும் பெரும்பாலான திரையிசைப் பாடல்கள் அந்த ராகபாவத்தை வெளிக் கொணர்வதில் அவ்வளவாக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதாவது அப்பாடல்கள் அனைத்தும் அந்த ராகத்தில் இருக்கும் ஸ்வரங்களை வைத்தே மெட்டாக்கப் பட்டிருக்குமேயொழிய, அந்த ராகத்திற்கு உண்டான பிரவாகங்களை நிர்மாணிப்பதில்லை. இந்த விஷயத்தில் திரையிசையில் அமைந்த இந்த பாகிஸ்தானியர்களின் கஸல் ஒரு விதிவிலக்கு. “அஸ்மத்” என்ற பாகிஸ்தானிய திரைப்படத்தில் ‘ஜிந்தகி மே’ என வரும் இந்த பீம்ப்ளாஸ் ராக கஸல்லே இதற்குச்சான்று. “நி ஸ மா” “ம ப நி த” போன்ற இந்த ராகத்திற்கே உரித்தான ஸ்வரக் கோர்வைகள் சரிவர இங்கே பிரயோகிக்கப்பட்டுள்ளன.

முன்னரே கூறியது போல் செவ்வியல் தடம் புரளாமல் செல்லும் இவரின் கஸல்கள், இசையின் நுட்பங்களும், விதிகளும் தெரியாத மக்களும் ரசிக்கும் வகையில் எளிமையான அழகுடனும் இருப்பவை. அறுபதுகளில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில்  ஜெமினி கணேசனுக்காக PB ஸ்ரீநிவாஸ் ஏதோ பாடுவதைப் போல மெஹ்தி ஹாசன் பாடும் இந்த கஸலிலிருந்து, இவர் இக்கலையை மக்களிடம் எந்த அளவுக்கு எடுத்துச் சென்றிக்கிறார் என்பது புலப்படும்.

குலாம் அலி

குலாம் அலி

மெஹ்தி ஹாசன் கஸலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப் பட்டாலும், அவருடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்க வல்ல நபர்களில் குலாம் அலியும் ஒருவர். இவரின் இசைப் பாரம்பரியமும் வெகு சிறப்பானது. ஹிந்துஸ்தானிய சங்கீதத்திலேயே ஜாம்பவான் எனக் கருதப்படும் படே குலாம் அலிகான்தான் இவரது குரு. வசந்த் ராவ் தேஷ் பாண்டே, லக்ஷ்மி ஷங்கர், அஜாய் சக்ரபர்த்தி போன்ற இசை வல்லுனர்களை உருவாகிய அதே பாட்டியாலா கரானாவில் குருகுல வாசம் புரிந்தவர். மெஹ்தி ஹாசன் கஸல் இசையில் ஒரு சூரியன் என்றால் இவர் ஒரு பூரண சந்திரன்.

ஹாசனைக் காட்டிலும் குலாம் அலியின் குரல் சற்றே ஆழமாக கீழ்ஸ்தாயியில் பாடுவதற்கு மிகவும் உகந்த குரல். அனால் அதே நேரத்தில் மேல்ஸ்தாயியில் எட்ட வேண்டிய இடத்திற்கு லாவகமாக எட்டிப் பிடிக்கவும் கூடிய வசீகரமும் கொண்டது. இப்படிப்பட்ட பல ஸ்தாயிகளில் செல்லக்கூடிய குரல் இவருடைய மிகப் பெரிய பலம். இவரை ஒரு மக்கள் கலைஞர் என்றும் கூறலாம்.  கச்சேரிகளின் நடுவே திடீர் திடீரென்று பாடுவதை நிறுத்தி விட்டு ரசிகர்களுடன் அந்த கஸல்லின் பொருள் குறித்தோ அதன் அழகைக் குறித்தோ பேச ஆரம்பித்து விடுவார்.

பாகிஸ்தானில் ஏற்கனவே பெரிய இசைக் கலைஞரான குலாம் அலி, இந்தியாவில் பிரபலம் அடைந்தது, ‘நிக்காஹ்’ என்ற திரைப்படத்தில் பாடிய ‘சுப்கே சுப்கே ராத் தின்’ என்ற இந்த கஸல் மூலம். ஒரு பாடல் தன் ஆவர்த்தனத்தின் சமத்தில் தொடங்காது சில அக்ஷரம் கழிந்து தொடங்கினால் அதை ‘அனாகத எடுப்பு’ என்றும் முந்தைய ஆவர்த்தனத்தின் சில அக்ஷரத்திலேயே தொடங்கினால் அதை ‘அதீத எடுப்பு’ என்றும் சொல்வார்கள் . இவ்வகையில் ஏழு அக்ஷரம் கொண்ட மிஸ்ர சாப்பு தாளத்தில் அமைந்த இந்த பாடலை எடுத்துக் கொண்டால், இது ஒரு அக்ஷரம் கழிந்து, அதாவது சங்கீதத்தில் ‘ஒரு இடம்’ எனச் சொல்லப்படும் தருணத்தில் தொடங்குகிறது. இதே மிஸ்ர சாப்பு தாளத்தில் ஒப்பிட்டுப் பார்கையில் அனாகத எடுப்பில் இரண்டாவது இடத்தில் தொடங்கும் பாடல்களும் (உதாரணம்: “பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்”, “கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே உனக்காக” போன்ற பாடல்கள்), அதீத எடுப்பில் முந்தைய ஆவர்த்தனத்தின் கடைசி இரண்டு அக்ஷரத்திலேயே தொடங்கும் பாடல்களும் (உதாரணம்: “இள – நெஞ்சே வா”, “என்- கல்யாண வைபோகம்” போன்ற பாடல்கள்) சற்றே பொதுவான வகைகளாக இருந்தும் இவற்றை அவ்வப்போதே காணக் கிடைக்கிறது. ஆனால் ஒரு அக்ஷரம் கழிந்து ஒரு புதிரான அனாகத எடுப்பில் இந்த கஸல் அமைந்திருப்பது மிக மிக அரிது. அதை  குலாம் அலி போகிற போக்கில் சிரமப் படாமல் பாடிவிட்டு போவது வேறு இன்னும் ஆச்சரியப்படுத்தும் ஒன்று.

“கொஞ்சமாகத் தானே குடித்து விட்டு வந்தேன். அதற்குப் போய் ஏன் இப்படி ரகளை செய்கிறாய்?” என்ற இந்த கஸலை குலாம் அலி தர்பாரி கானடா ராகத்தில் மிகக் கலகலப்பாகப் பாடி இருப்பார். அடிப்படையில் செல்லக் கோபம் கொள்ளும் மனைவியை சமாதானப்படுத்துவதைப் போலத் தோன்றும் இந்த கஸலுக்குப் பின்னால் சரித்திர முக்கியத்துவம் கொண்ட ஒரு குட்டிக் கதையும் அடங்கி இருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட வேண்டும் என்று ஜின்னாவின் முஸ்லிம் லீக் வலியுறுத்தி வந்த காலத்தில் இந்தப் பாடலை எழுதிய அக்பர் அலஹாபாதி என்ற அந்த கவிஞர் அந்தக் கருத்தை ஒவ்வாத ஒரு காங்கிரஸ்வாதி. அவரைக் கேவலப்படுத்த முனைந்த முஸ்லிம் லீக் நண்பர்கள் “காங்கிரஸ் இவருக்கு ‘ஊத்திக் கொடுத்து’ இந்த மாதிரி பேச வைக்கிறது” என ஒரு புரளியை கிளப்பி விட்டனர். தன் வாழ்நாள் முழுதும் மதுவைத் தொடாமல் ஒரு தூய இஸ்லாமியராய் வாழ்ந்து வந்த அக்பர் அலஹாபாதி-யோ அவர்களின் அறியாமையைக் கேலி செய்யும் வண்ணம் இப்படி சுவாரசியமாக ஒரு கஸலை எழுதியதாகக் கூறப்படுகிறது.

கஸல் இசை தன் கலைஞர்களுக்கு அளிக்கும் சுதந்திரத்தை அனைவரையும்விட புத்திக் கூர்மையுடன் உபயோகிப்பவர் குலாம் அலி. ஒழுங்கான ராகத்தில் போய்க் கொண்டிருக்கும் ஒரு பாட்டை சடாலென அதற்க்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு ராகத்திற்கு திசை திருப்பி விட்டு மறுபடியும் அதன் தடத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் இவர் வல்லுநர். கர்நாடக சங்கீதத்தில் “ராக மாலிகை” என முன்னமே தீர்மானித்து விட்டால் மட்டுமே இம்மாதிரியான பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேற்கத்திய செவ்வியல் இசையிலும் “மாடுலேஷன்” (Modulation) என இதற்கு முன்னனுமதி தேவை. அனால் கஸல்-லில் இது மாதிரியான இமைப் பொழுதில் உதிக்கும் யோசனைகளுக்கு இடமளிக்கும் சுதந்திரத்தைக் குறித்த வரையறை எதுவும் இல்லையென்றாலும், அவற்றை தாமே ஏற்படுத்திக் கொண்டு திக்குமுக்காடச் செய்பவர் குலாம் அலி.  அனேகமாக அவரது எந்த ஒரு கஸல்லிலும் இம்மாதிரியான பரிசோதனைகளைப் பார்க்கலாம்.

அதே நேரத்தில் மெஹ்தி ஹாசனைப் போலவே ஒரு ராகத்திற்கு உண்டான தலையாய மரியாதையை இவரும் பேணிக் காப்பவர். இதே தர்பாரி கானடாவின் பல்வேறு பரிணாமங்களைக் கண்டறியவும் தெரிந்தவர். தனது குரலின் இயற்கை எல்லைகளை சாதமாக்கி ஒரே நேரத்தில் தர்பாரி கானடாவின் காந்தாரத்தை ஒரு ஸ்தாயியிலிருந்து இன்னொரு ஸ்தாயிக்கு தாவி பரவசப் படவைக்கவும் இவரால் முடியும். கஸல்களில் எடுத்தாளப்படும் ராகங்கள் மரபு இசை சார்ந்த பாடல்களுக்கும் உயர்தர மெல்லிசைப் பாடல்களுக்கும் நடுநாயகமாகத் திகழ்கிறது. ஒரு உதாரணமாக, திரை இசை என எடுத்துக் கொண்டோமேயானால் “சிவ சங்கரி.. சிவானந்த லகரி”, “மருத மலை மாமணியே” போன்ற மரபிசை சார்ந்த பாடல்கள் ‘தர்பாரி கானடா’வின் ஒரு பரிணாமத்தைக் காட்டுபவை; அவற்றின் ஆழம் மிக அதிகம். “ஆகாய வெண்ணிலாவே”, “எனக்குப் பிடித்த பாடல்” போன்ற பாடல்கள் மற்றொரு பரிணாமத்தைத் தருபவை. இவை மனங்கவரும் ஜனரஞ்சக வகைப்பட்டவை. குலாம் அலியின் இந்த கஸல்கள் இவை இரண்டுக்கும் பொதுவானதொரு மூன்றாம் பரிணாமத்தைத் தருகின்றன. ஆங்கிலத்தில் “best of both worlds” என கூறுகிறார்களே அதைப் போல .

உருது மொழியின் பாரம்பரியத்தை மதித்து இக்கவிதைகளை மரபு பிசகாமல் உச்சரிப்பது, அந்த கவிதையின் இலக்கிய சாராம்சத்தை கடினமான சங்கதிகளுக்குள் பூட்டாது எளிமையாக எடுத்துரைப்பது, பின்னால் இருக்கும் உள்ளார்ந்த உணர்வுகளை மனப்பூர்வமாக உணர்ந்து பாடலுடன் ஒன்றிப் பாடுதல் இவை குலாம் அலி , மெஹ்தி ஹாசன் இருவரிடமுமே நாம் காணமுடியும் சிறப்பியல்புகள்.  குலாம் அலியின் ‘மெஹஃபில் மேன் பார் பார்’ என்ற இந்த கஸலைக் கேட்டால் இந்த சிறப்பியல்புகள்களை நன்கு அறியலாம். மிக இலகுவாக தோன்றும் இந்த ரம்மியமான கஸல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பாடல்.

மேலும், ஒரு கஸலை அதன் கவிதை நயத்தைப் புரிந்து ரசிக்கும் சுகமே தனி. உதாரணமாக இந்த கஸலை பாருங்கள்:

“நேற்றிரவு பௌர்ணமி..

கையில் மது கிண்ணங்களோடு,

நண்பர்களுக்கிடையே ஒரு சர்ச்சை..

உன்னைப் பற்றித் தான்.. !

சிலர் நிலா என்றார்கள்

சிலர் உன் முகம் என்றார்கள்..

நானும் அங்கு அமர்ந்திருந்தேன்

என்னையும் கேட்டார்கள்..

உன் பர்தாவே எனக்கு சம்மதம்…

அதனால் மௌனம் சாதித்து சிரித்து மழுப்பி விட்டேன் ”

இப்படி ஒரு ரம்யமான சூழலை குலாம் அலியின் குரல் நம் கண் முன் நிறுத்தி அழகுணர்வு சார்ந்ததொரு மயக்கத்திற்குத் தள்ளுகிறது.

கஸல் பாடல்களில் பாடகர்களுக்குச் சுருதி சேர்த்துப் பாடத் தோதுவாக இருப்பதும் பிரதான பக்க வாத்தியமாக செயல் படுவதும் ஹார்மோனியமே. ஆனால் இந்த ஹார்மோனியத்தை வாசிப்பதற்கென்று பொதுவாகத் தனியாக  வேறு ஒரு கலைஞரை வைத்துக் கொள்வதில்லை. எனவே குலாம் அலி, மெஹ்தி ஹாசன் போன்ற கஸல் பாடகர்கள் பாடுவதோடு மட்டுமல்லாமல் கை தேர்ந்த ஹார்மோனிய கலைஞர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இந்திய பாகிஸ்தான் சார்ந்த பரஸ்பர நல்லுணர்வு முயற்சிகளில் கிரிக்கெட்டிற்கே முதலிடம் அளிக்கிறோம். நம்மில் பலர் இம்ரான்கானை அறிந்திருக்கிறோம். வாசிம்அக்ரம் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என விரல் நுனியில் வைத்திருக்கிறோம். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த ஜாவேத் மியன்தாதை நாம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் இந்திய பாகிஸ்தானுக்கு இடையே உருப்படியாக நல்லுணர்வைப் பரப்பி வரும் இவ்விருவரையும் நுஸ்ரத் ஃபதே அலி கான், ஃபரீதாகானம், ரோஷனரா பேகம் போன்ற ஏனைய பிற இசை தூதர்களையும், வட மாநிலங்களில் போற்றிப் புகழப்பட்டாலும், இங்கே அதிக பட்சம் சென்னைவாசிகள் அறிந்திருக்கலாம். அவ்வளவே.

என்னிடம் இதுவரை கஸல் இசைப்பரிச்சயம் உள்ளதாகச் சொன்னப் பெரும்பாலான இளைஞர்கள், தனக்கும் “ரசனை” உண்டென்பதை நிரூபிக்க “எனக்கு பங்கஜ் உதாஸ் ரொம்ப பிடிக்கும், நான் ஜக்ஜித் சிங்கை ரொம்ப விரும்பி கேட்பேன்” எனப் பூசி மெழுகி, கஸலைத் தன் போலித்தனத்தை அளவிடும் ஒரு நாகரிக அளவுகோலாக்கி விட்டார்கள்.  ஆனால் கஸல் என்பது குலாம் அலி, மெஹ்தி ஹாசன் போன்ற கலைஞர்களால் ஜனநாயகத்தைப் போல மக்களுக்காகவே மீண்டு வந்திருக்கும் மரபுக் கலை. கஸலிசையின்  எளிமை, அது அளிக்கும் சுதந்திரம், அது கையாளும் மரபிசையின் சாரங்கள் இவை அனைத்தும் அதன் தனித்தன்மையை எடுத்துரைப்பவை. கொஞ்சம் திறந்த மனப்பான்மையுடன் அணுகினால், இந்த இசை வல்லுனர்களின் படைப்புக்கள் வழியே அமைதியும் கோலாகலமும் ஒருங்கே கொண்ட ஒரு கனவு இசை உலகம் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.


One Comment »