வருகை

krishnan`கிருஷ்ணன் நம்பி – சுந்தர ராமசாமி நினைவோடை` நூலில் சுந்தர ராமசாமி கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் பற்றி எழுதிய பகுதியிலிருந்து கீழே கொடுத்துள்ளோம்:

அவனது `மருமகள் வாக்கு` ரொம்பப் பேருக்குப் பிடித்த கதை. திரும்பத் திரும்பப் பல அந்தாலஜிகளில் சேர்க்கப்படும் கதை அது. அசோகமித்திரன் ரொம்பப் பிரமாதமான கதை என்று சொல்லியிருக்கிறார். எனக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. அவனது உடல்நிலை ரொம்பவும் மோசமாக இருந்த காலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.

அப்போது நான் காஃப்காவினுடைய `மெட்டமார்பசிஸ்` கதை படித்திருந்தேன். ரொம்ப வேடிக்கையாக இருந்தது. முதலில் புரிந்துகொள்ளச் சிரமமாக இருந்தது. பிரதான கதாபாத்திரம் கதை ஆரம்பித்திலேயே ஒரு பூச்சியாக உருவமாற்றம் பெறுகிறான். அதன் பின் கதை அப்படியே நகர்ந்துபோகிறது. அந்தச் சமூகத்தினர் அந்தக் கதையை எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள், அங்கு கதைகள் எப்படி எழுதப்படுகின்றன என்ற விஷயங்கள் எனக்கு ரொம்பவும் ஆச்சரியமானதாக இருந்தது. ஏனென்றால் எனக்கு யதார்த்தமான கதைகளுடன் தான் அதிக பரிச்சயம் இருந்தது. நம்பியிடம் அந்தக் கதையின் பல பகுதிகளைச் சொன்னேன். அவன் அது தொடர்பாகப் பல கேள்விகள் கேட்டு அந்தக் கதையை முழுவதுமாகப் படித்த உணர்வை அடைந்து விட்டான். அதன் பாதிப்பில் ஒரு கதை எழுதியிருந்தான். `தங்க ஒரு…` என்றொரு கதை. அந்தக் கதையில் ஒரு கணவனும், மனைவியும் ஒரு பூட்சுக்குள் வசிப்பார்கள். சென்னையில் இட நெருக்கடி ஏற்படுவது குறித்த கற்பனைக் கதை அது. அதற்கான இன்ஸ்பிரேஷனை காஃப்காவின் கதையிலிருந்துதான் எடுத்துக்கொண்டிருந்தான். அதுபோல் தமிழில் அப்படி ஒரு கதை வரவேயில்லை, இப்போது மாந்த்ரீக யதார்த்தம் என்று சொல்கிறார்களே அந்த அம்சம் இருக்கும் கதை அது.

அப்புறம் கடவுள் நம் முன் தோன்றுவது என்பதை ஏதாவது ஒரு கதையில் சொல்லிவிட வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசையாக இருந்தது. கடவுள் வரும்போது ஏற்படும் சமிக்ஞைகள், அவரைப் பார்ப்பதால் ஒருவனுக்கு ஏற்படும் உணர்வுகள் இவற்றைச் சொல்ல வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அது பற்றி ஒரு கதை எழுதவும் செய்தான். எழுதி முடித்ததும் என் மனதில் இருந்ததில் கால்வாசியைக் கூட கொண்டுவர முடியவில்லை என்று சொன்னான். நான் படித்துப் பார்த்தேன். நன்றாகத்தான் வந்திருந்தது. நீ சோர்வடையத் தேவையில்லை. நன்றாகத்தான் வந்திருக்கிறது என்று சொன்னேன்.

இக்கதை ராஜமார்த்தாண்டன் தொகுத்த `கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (முழுத்தொகுப்பு)` (காலச்சுவடு பதிப்பகம்) தொகுப்பிலிருந்து தட்டச்சியது.

படம் பார்த்துவிட்டு, வாடிக்கைக் கடையில் சாப்பிட்டுவிட்டு புகைத்தபடி தன் அறையை நோக்கி அவன் நடந்தான். பத்து மணி இருக்கும். ஆடி மாதத்துக் காற்று முழு மூச்சுடன் செயல்படத் தொடங்கியிருந்தது. சாரல் கண்டு ஏழெட்டு நாட்களாகிவிட்டன. குடைச் சுமையை நிர்பந்திக்கிற மழைக் கொட்டலை எதிர் பார்ப்பதற்கில்லை என்ற உணர்வில் வெறுங்கையுடன் தான் அவன் வெளிக் கிளம்பியிருந்தான். பெருமழைக்கான எத்தனங்கள் வானில் கூடி வருவது கண்டு அவன் சற்று வேகமாகவே நடந்தான். கரிகரியாய் மேகப்பாறைகள் உருண்டு சரிந்துகொண்டிருந்தன. லேசான ஈரத் துணியுனுள் வைக்கப்பட்ட பிச்சிப் பூப்பந்து போல் இடை இடையே மேக இடுக்குகளில் தெரிந்த சந்திரனைப் பார்க்க ரொம்பவும் ரசமாக இருந்தது அவனுக்கு. வீசிய காற்றின் ஈர நைப்பிலும், தணுப்பிலும் உடல் ஜில்லிட அவன் நடந்தான். ரஸ்தாவின் நடமாட்டங்கள், தேய்ந்து போய்விட்டன. ஓரிரு குடைகளும், கால்களும் பரபரத்துத் தாண்டி மறைந்தன.காற்றில் பொங்கிய அரைவேட்டியை இடக்கையால் பொத்திப் பொத்தி அமுக்கியபடி, ஒரு வகையாய் உடல் கோண அவன் நடந்தான். கடைசித் `தம்`மை நீட்டி உள்ளிழுத்து சிகரெட்டை வீசி எறிந்தான். உடன்தானே பின்னும் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு நடையைத் தொடர்ந்தான். கண்ணில் தென்பட்ட தென்னை மரக் கொண்டைகள் ஆடிக் காற்றில் அறையுண்டு பேயாட்டம் ஆடின. பெருமாள் கோவில் வாசலைக் கடக்குமுன் சிறிது நின்று கண்ணை மூடி, பெருமாளின் பிம்பத்தை ஒருகணம் மனத்தில் கொண்டு வந்து மனசை ஒருநிலைப்படுத்த முயன்று (அன்றைய சினிமாக்காரியின் உருவமும், வேறு சிலதும் நினைவில் பளிச்சிட்டதால்) தோல்வியுற்று, `உம், அவ்வளவுதான்` என்று அன்றும் வெறுப்படைந்து, தன் அறையை நோக்கி மேலும் விரைந்தான். சர்க்காரின் கொசுவைக் கொல்லுகிற திட்டத்தின் கீழ் உத்தியோகம் பெற்று அவன் அவ்வூர் வந்து ஒரு வீட்டின் பெரிய மாடியில் ஒற்றைக் குடித்தனம் பண்ணி வந்தான். கீழே குடியிருப்பவர்களோடு சொந்தம் இல்லாதபடி வெளிப்புறம் தனிவாசல் கொண்டிருந்த அம் மாடி அறை அவனுக்கு மிகவும் பிரியமானதாகவும், வசதியானதாகவும் இருந்தது. கிழக்குப் பார்த்த ஜன்னலை ஒட்டிக் கிடந்த கட்டிலில் படுத்து போர்வைக்குள் சுருண்டதும், வெளியே மழை அமோகமாகப் பிடித்துக் கொண்டதும் சரியாகவே இருந்தது. மழையில் சிக்கிக்கொள்ளாதபடி துரிதமாய் அறையை அடைந்துவிடும் துடிப்பில் பறந்து வந்து வெற்றி கண்டதில் ரொம்பவும் ஆறுதல் அடைந்தான். காற்றில் ஜன்னல்கள் படபடவென்று அறைந்துகொள்ளத் தொடங்கின. மேயவிட்டிருந்த ஆடுகளைக் கூட்டுக்குள் அடைப்பது போல் வெளியே சிதறிக்கிடந்த மனசை உள்வாங்கி அமைதிப்படுத்தி நித்திரையில் அவன் ஒடுங்க முடியாதபடி ஜன்னல்களின் படபடத்தல் அவனை சிரமப்படுத்தியது. எழுந்திருந்தக்கச் சோம்பியவன் ஜன்னல் அடிப்பைச் சகிக்க முடியாதவனாகச் சட்டென்று சோம்பலை உதறி, போர்வையை உதறி எழு
்து ஜன்னல்களை அடைத்துவிட்டு மீண்டும் கட்டிலில் போய் விழுந்து போர்வையினுள் சுருண்டான்
. கட்டில் பக்கத்து ஜன்னலை மட்டும் அடைக்கவில்லை. வீசிய காற்றைத் தன்மேல் மோதவிட்டு, போர்வைக்குள் அழுந்திக் கிடக்கும் சுகம் அவனுக்கும் வேண்டியிருந்தது. சிறிது நேரம் குழந்தை உற்சாகத்துடன் கண்ணை மூடிக்கொண்டு கட்டிலில் புரண்டான். தொழில் படாதிருந்த படி முகத்தை ஜன்னலின் பக்கம் திருப்பி வானத்தையும் மரக்கொண்டைகளையும் கவனிக்கத் தொடங்கினான். ஆடிக்காற்றில் தென்னைமரக் கொண்டைகள் ரொம்பவும் கவனத்துக்குரியதாகிவிடுகின்றன. எதிர்சாரியில் ஒரு முடுக்கு தெப்பக்குளத்தை நோக்கிப் போகிறது. முடிக்கின் இரு புறங்களிலும் தென்னை மரங்கள் ஓங்கி நிற்கின்றன. குளக்கரையில் பந்தலாய்க் கவிந்த ஒரு பெரிய அரசமரம். அன்றைய இயற்கையின் சூழ்நிலையில் செல்வாக்கு இழந்து போயிருந்த சந்திரனின் மங்கல் ஒளி, இருளைப் பார்க்க உதவும் ஒரு அற்பமான விளக்காகவே தென்பட்டது. தான் தினமும் காணுகின்ற அரசமரம், தென்னை மரக்கூட்டம், குளப்பரப்பு இவை அவ்விரவில் கொண்ட புதிய கோலம் அவனுள் ஒரு விந்தையான ஆவலையும், பயத்தையும், களிப்பையும் தூண்டிவிட்டது. குளப்பரப்பில் நிலவொளியின் பிரதிபலிப்பு நெளிநெளியாய், ஒரு சிற்றாற்றின் ஓட்டமாய், ஒரு கனவுக் காட்சியாய்த் தெரிந்தது. அரசமரம் கருந்துணியால் போர்வையிடப் பட்டதாய்த் தோற்றம் தந்தது. இடை இடையே தென்னை மரக் கொண்டைகள் முட்டிக்கொண்டதில் எழுந்த புதிய ஒலியை அவன் ஆவலுடன் கேட்டான். முடிவில்லாதபடி வானில் குவிந்தவண்ணம் இருந்த கரிமேகங்களில் அவன் பார்வை பதிந்தது. மேகங்களின் இடையே நசுக்குண்டு நிலாத்தேசல் சீரழிந்து கொண்டிருந்தது. மழை நின்றுபோயிருந்ததால், நீரில் பிசையப்பட்ட கரிச்சேற்றின் பெரும் அம்பாரங்களாய்த் தோற்றம் கொண்ட மேகங்கள் மேலும் தெளிவுற்றுத் தெரிந்தன. அப்போது வானம் தனக்கு மிகவும் சமீபித்துவிட்டதான ஒரு உணர்வை அவன் அடைந்தான். விசித்திரமான அச்சமூட்டும் கற்பனைகள் உள்ளத்தில் கிளர்ந்து எழக்கூடிய ஒரு தருணம் அது என்று கண்டான். அதுவரை அறிந்திராத விதத்தில் காற்று ஒரு புதிய கதியில் இசைக்கத் தொடங்கியது. அவ் ஒலியை ஏதோ ரகசியத்திற்குக் காது கொடுப்பவன் கண்கள் சிறிது நேரத்தில் நித்திரை வசப்பட்டு மூடிக்கொண்டன. அப்படி அதிக நேரம் அவன் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கவில்லை. நீர் சேர்ந்து ஓங்கி அடித்த காற்று முகத்தில் படவும் சட்டென்று அவனுக்கு விழிப்புக் கொடுத்துவிட்டது. நனைந்துவிட்டிருந்த முகத்தைப் போர்வையால் துடைத்துக்கொண்டான். ஜன்னலை மூடிவிடலாமா என்று ஒரு கணம் எண்ணி பிறகு அது வேண்டாமென்று வைத்தான். ஒரு முழுத் தூக்கம் தூங்கிவிட்டது போல் இருந்தது. மீண்டும் காற்றுடன் சாரல் தெறிக்கவே, அவன் ஒரு பாதி ஜன்னலை மட்டும் மூடினான். தென்னை மரங்களின் அரற்றலும், அதனிடையே அரசமரத்தின் முனகலும், காற்றின் நெடிய ஓலமும் அவனைச் சூழ்ந
து கவ்வின
. மேகங்கள் உருவின்றி, ஒரே இருள் விரிப்பாய், கரிப்பூசலாய்த் தோற்றம் தந்தன.

அந்த இரவில் அபரிமிதமாய் ஓர் உச்சகட்ட விறுவிறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த இயற்கையின் கூத்தோடு தொடர்புகொள்ளும், மனம் இணையும் வாய்ப்பை இழந்து அவ்வூர் மக்கள் துக்கம்கொண்டிருப்பதாக அவன் எண்ணமிட்டான். திறந்திருந்த பாதி ஜன்னல் கதவு ஒருதரம் மடார் என்று அடித்து மூடி உடன்தானே மீண்டும் திறந்துகொண்டது. ஒரு காலைத் தூக்கி வைத்து அக்கதவு அசையாதபடி அவன் அமுக்கிக்கொண்டான். தலைமாட்டிலிருந்து புகைப்பெட்டியை எடுத்து ஒன்றைக் கொளுத்தி இழுக்கத் தொடங்கினான். தான் ஒரு கவியாக இருந்திருந்தால் இன்றைய இரவு குறித்து விசேஷமானதொரு பாடலை இசைத்திருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. சற்றும் எதிர்பாராத ஒன்றாய் காற்று, மழை, மரங்களின் ஓசை யாவும் திடுமென நின்று சிறிது நேரம் பூரணமான அமைதி தோன்றியதை அவனால் சகிக்க முடியவில்லை. ஜன்னல் கதவைக் காலால் பலமாக ஒரு தட்டுத் தட்டினான். அத் தட்டுதலைத் தான் மும்முரமாக இயங்கத் தூண்டும் `ஸ்விட்ச்` ஆக எடுத்துக்கொண்டது போல மீண்டும் ஊய் ஊய் எனத் தொடங்கியது காற்று. அக்காற்றின் சப்தத்தை மேலும் அவன் ஊன்றிக் கேட்கலானான். அவன்பால் ஏதோ சேதி கொண்டுவர அக்காற்று முயலுவதாய் அவனுள் எண்ணம் எழுந்தது. அத்தனை நேரம் தொடர்ந்து செவி மடுத்ததால் காற்றின் பாஷை அவனிடம் தெளிவுகொள்கிறதோ என்னவோ. காற்றே, நீ என்ன சொல்ல வருகிறாய்? மரங்களின் ஒலியும் வானத்தின் கரிய மேகப்பரப்பும் கூட விசேஷமாக அவனுக்குச் சேதிகளைச் சொல்லக்கூடும். காற்றே, மரங்களே, கரிய மேகங்களே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் எங்கிருந்து என்ன சேதி கொண்டு வரப்போகிறீர்கள்?… அவன் கரிய வானப் பரப்பையும் மரங்களின் நிழல் அசைவையும், காற்றின் நீட்டி முழக்கலையும் மனம் ஒன்றி, கவனிக்கலானான்,. மீண்டும் சாரல் கண்டது. போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டான். மழை நீர் தெரு ஓடையில் களகளக்கும் ஒலி கேட்கின்றது. சரக் சரக் என்று எவனோ செருப்பின்மேல் தெரு தாண்டிப் போனான். காற்றோடு கலந்து ஒரு குழந்தையின் சோர்ந்த வியாதி அழுகையும், கரகரத்த கிழ இருமல்களும் சிறிது நேரம் சப்தித்து அடங்கின.

இவ் ஒலிகளால் சற்றே சிதறிய கவனத்தை மறுபடியும் அவன் ஒன்று கூட்டினான். காற்றின் வேகம் மேலும் அதிகரித்து விட்டிருந்தது. அவன் எண்ணமிடலானான். தென்னங் கொண்டைகளின் தொடர்ந்த வெறிச் சலனங்களை நோக்கி என்ன என்ன என்று கேட்டான். காற்றே, இம்மரங்களுக்கு ஓய்வளித்து நீயும் சிறிது அமைதிகொள்ளேன் என்றான். மேலும் வெகு நேரமாய் நீ சொல்ல முற்படுவதைச் சீக்கிரமே சொல்லிவிடு என்றும் சொன்னான். விசேஷமான ஒருவன் வருகை புரியத்தக்க விசேஷம் கொண்டதொரு இரவாகவேதான் அது தோற்றம் கொண்டது. அப்படியானதொரு அசாதாரண இரவு என்றுமே சாத்தியமாகக் கூடியதில்லை. அப்படியாயின் அவன் அந்த இரவில் என்பால் வருகை தரக்கூடும். அவன் அவ்வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

சன்னமாய் கோடிட்டுக்கொண்டிருந்த சாரல் பெருமழையாய் சோவென விரிவுகொண்டது. இப்போது அவன் நெஞ்சில் ஒருவகை ஆவல் பரபரத்தது. அவன் வருகை புரிகிற இவ்விரவு பற்றிய போதமின்றி உறக்கம் கொண்டிருக்கும் இவ் ஊராரின் நிலைதான் என்ன? இப்போது அவன் தன்னைச் சுற்றிலும் ஒரு விந்தையான மாற்றம் நிகழ்வதாய் உணரலானான். ஊய்ஊய்..ஹ்வ்யூய்ய்..வ்..என்னும் காற்றின் சங்கேதக் குறிப்பு அவனுக்குத் தெள்ளத் தெளிவாய்ப் புலப்பட்டுவிட்டது. வானின் இருள் மேகமூட்டமும், ஆட்டமிடும் தென்னங்கொண்டைச் சலசலப்பும் அதையேதான் திருப்பித் திருப்பிப் பாடுகின்றன. மாறிமாறிச் சொரியும் அவ்விரவின் சிறு சாரலும, பெருமழையும் அவ்வருகையின் முன்குறிப்பையே ஜபிக்கின்றன. அன்றுவரை அடைந்திராத வினோத மெய்ப்பாடுகளுக்கு அவன் அப்போது ஆட்பட்டான். அத்துடன் நித்திரையும் அவனது விழிகளில் நிழலாடலானது. மேகத்தைப் போர்வையாய்ச் சுற்றிக் கொண்டு கிடப்பதாயும், நட்சத்திர முட்கள் முதுகை உறுத்துவதாயும், கல்லின் கனத்துடன், அழுத்தத்துடன், கண்டு கேட்டிராத பூக்களின் குவியல்கள் மூச்சை இறுக்குவதாயும் கனவின் மங்கலுடன் உணர்ந்தான். நான் தூங்கியபடி விழித்திருக்கிறேனா விழித்தபடி தூங்குகிறேனா எனவும் அவன் எண்ணமிட்டான்.

அப்போதுதான் அந்த மாடியின் இரு அறைகளில் ஒன்றின் கதவுகள் ட்டடங் என்று ஓங்கி அறைந்துகொள்ளவும், அவ் ஓசை அவனைத் திடுக்கிட வைத்தது. அவன் எண்ணமிட்டான். அத்தனை நேரம் அசையாதிருந்த அக்கதவுகள் திடுமென உயிர்கொண்டது எவ்வாறு? அவ்வறையினுள் எப்போதும் மூடிக்கிடக்கும் மேல்பக்கத்து ஒற்றைக் கதவு ஜன்னலைக் காற்றின் கரங்கள் திறந்து நுழைந்திருக்க வேண்டும், அவ்வறை வாசல் கதவுகள் வெறுமனே சாத்திருக்கப்பட்டிருக்க வேண்டும். இயக்கம் கொண்டன அக்கதவுகள். காற்றின் வேகத்திற்கேற்றபடி பலமாகவும், மெதுவாகவும், அடித்துக்கொள்ளத் தொடங்கியது. ட்டடங் ….ங்ட்டடடங்ங்வ்ட்டடங்வ்ட்டடங்வ்அவன் செவிகள் அவ் ஒலியில் மனம் கூடின. காற்றொடு, மரங்களோடு, மேகக்கும்பல்களோடு இக்கதவுகளின் ஒலியும் அதைத்தான், அவ்வருகையைத்தான் பறையடிக்கின்றதாக அவனுக்கு நிச்சயமாயிற்று. இருளில் அக்கதவுகளின் திசையை நோக்கி அவன் அமைதி இழந்தான். வெளியே இடியோசையும் அவ்வேளையில் கேட்டது. ஜன்னலை அமுக்கிக்கொண்டிருந்த அவனது வலக்கால் தொப் எனக் கட்டிலில் நழுவியது. பைத்தியக்கார வேகம் கொள்ளலானது காற்று. குளிரால் அவன் உடல் எங்கும் ஜில்லிட்டது. காலின் அழுத்தத்திலிருந்து விடுபட்ட பாதி ஜன்னல் கதவு அடித்துக்கொள்ளத் தொடங்கவே அவன் சட்டென்று கைநீட்டி அதை அடைத்து மூடினான்.

அப்போது அவ்வறைக் கதவுகள் வாய்ப்பிளப்பாய்த் திறந்து கொள்ளவும், அவ்வறையின் மேல்புறத்து ஒற்றைக் கதவு ஜன்னலினோடு, வெறிகொண்டாடும் தென்னைக் கொண்டைகளின் உச்சியில் இருள் வானப் பரப்பில் நெளிநெளியாய் ஒரு மின்னல் தீக்கோடு கிழித்து மறைந்ததையும் கணநேரம் அவன் பார்த்து பிரமித்தான். அடுத்த கணம் அக்கதவுகள் அறைந்து மூடிக்கொண்டன.

காற்றின் வேகம் மட்டுப்பட்டு ஒரு நிதான கதியில் வீசலாயிற்று. அந்த அறையின் கதவுகள் மீண்டும் ட்டுங்வ்..ட்டடங்வ்..என்று சப்திக்கலாயின. அச்சப்த அலையில் ஒரு தாள லயம் தோன்றுவதாகக் கண்டான் அவன். கலைத்திறம் தோய்ந்த விரல்கள் எழுப்பும் தாளத்தின் ஆவர்த்தனங்கள் அந்த கதவொலியில் பிறந்துகொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். சற்றுத் தலையைச் சாய்த்து மனத்தை ஒரு ஊசி முனையாய் அவ் ஒலியின் மேல் குவித்தான். கேட்கக் கேட்க அவ் ஒலியின் பீதியூட்டும் உன்னத அர்த்தங்கள் மிகுவதாயும், ஒரு ராட்சச நீர்ச்சுழியினுள் தான் அவ்வேளை மடக்கி இழுக்கப்படுவதாயும் அவனுக்குத் தோன்றியது. விருட்டென அவன் எழுந்து உட்கார்ந்தான். அவன் உடலில் ஜிவ்வென உஷ்ணம் ஏறிக் கதகதத்தது. அவ்வறையினுள் இனம் புரியாத வினோத அசைவுகள் நிகழ்வதாய் அவனுக்குப் பட்டது. மார்பு படபடக்க வெளிப்படாத ஒலியின் இழைகளைப் பிடிக்கத் தன் செவியைக் கூராக்கினான். அவ்வறையினுள் பாதங்கள் தரையை ஸ்பர்சித்தலும், நெஞ்சு விம்மி வெளிப்படும் நெடிய சுவாசங்களும் கனம் கொண்ட இதயத் துடிப்புகளும்அது ஏன்..எது? அவன் பயந்தான். அவன் பயந்தான். அந்த நிலைமையை அவனால் தாங்க முடியவில்லை. ஓடிப் போய் அந்தக் கதவுகளைக் காலால் உதைத்துத் திறந்து என்ன என்று பார்த்து சட்டென விடுதலையடைந்துவிடத் துடித்தான். ஆனால் அவனால் முடியவில்லை. தன்னைச் சூழ்ந்துகொண்டு விட்ட மர்ம மூட்டத்தில் சிக்கித் திக்குமுக்காடினான்.

..அது என்ன..அது என்ன? அவ்வறையினுள் அது நிகழ்ந்துவிட்டதா? அவன் உடல் புல்லரித்தது. அவ்வறையினுள் அவ்வேளையில் அவ் வருகை.., அது நிகழ்ந்துவிட்டதா?

அவன் சரீரம் நடுங்கி வெடவெடத்தது. படுக்கையில் சாய்ந்து போர்வையினுள் தன்னை நெருக்கிச் சுருட்டிக் கொண்டான். அது நிகழக்கூடியதா? வேண்டாம் வேண்டாம் வேண்டாம்; என்ன இது பத்தடி தூரத்தில். அந்த அறைக்குள்ளே அவனா? ஆயின் எக்கோலத்தில்?…..பூச்சாண்டி, பூச்சாண்டி!

ஓ வென்று கூச்சலிட்டுக் கீழே விழுந்து புரண்டு புலம்ப வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. அவன் உடல் எங்கும் வியர்வை பொங்கிப் பிரவகித்தது. என்னைப் பயமுறுத்தாதே! போ..போ! உன் ஸ்தூல சமீபம்.., என் உடம்பு பற்றி எரிகிறதே, உன்னை நான் பார்க்க வேண்டியதில்லை. அப்பால் போ, வெகுதூரம், வெகுதூரம், சுவர்களுக்குப் பின்னால், இரும்புத்தடைகளுக்குப் பின்னால், முன்னால் இருந்தது போல்போ, போ! ஓ கடவுளே!

அவன் நினைவிழந்துகொண்டிருந்தான். ஆடிக்காற்றின் பேய்க்கரங்கள் ஏந்திய கூரிய கத்திகள் தென்னங்கொண்டை சுனை அறுத்துச் சாய்த்தன. கன்னங்கரிய மேகப் படுதாக்கள் கிழிபட்டுக் கந்தல் கந்தலாய்ச் சிதறின. மழையின் ரத்தச் சொரிதல்….சோ..

பகல் தோன்றி வெகு நேரத்திற்குப் பிறகுதான் அவனுக்கு நினைவு திரும்பியது.

இலக்கிய வட்டம் – 28.1.1965

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.