ஜானவி

இந்திச் சிறுகதை 
மூலம்                            :  ஜயினேந்திர குமார்
ஆங்கிலம்                       : கேசவ் மாலிக்
தமிழில்                           : தி.இரா.மீனா

கடந்த ஞாயிற்றுக் கிழமைக்குப் பிறகு இன்று மூன்றாவது இல்லை நான்காவது நாள். விடியற்காலையில் முழிப்பு வந்தது. பக்கத்து மாடியில் ஒரு பெண் கரையும் காக்கை கூட்டத்தின் மத்தியில் நிற்பது கண்ணில் பட்டது. அவள் காகங்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். சில அவளை வட்டமிட்டபடி இருந்தன. பல வந்த வண்ணமிருந்தன. கூரை மேல் உட்கார்ந்தும், கரைந்தும், சிறகுகளை அசைத்த படியும் இருந்தன. காக்கை கூட்டத்தின் எண்ணிக்கையில் அந்தப் பெண்ணுக்குத் திருப்தி இல்லை என்பதால் அவள் ’காக்கைகளே வாருங்கள்’ என்று தொடர்ந்து  கூப்பிட்ட வண்ணமிருந்தாள்.

சிலநிமிடங்களுக்குள் கூரை முழுவதும் கருமையானது. சில காக்கைகள் தைரியம் அடைந்தவையாக அவள் கைகளையும், ஆடைகளையும் உரசுவது போலப் பறந்தன. அவள் ரொட்டித் துண்டுகளைத் தூவினாள். ’கொத்திக் கொள்ளுங்கள் ’என்று பாடினாள்.

கரையும் சத்தமும், சிறகுகளை அடித்துக் கொள்ளும் சத்தமும் தொடர்ந்ததால் எனக்கு அவள் பாடல் வரிகளைக் கேட்க முடியாமல் போனது. அவைகள் அவள் கையிலிருந்த ரொட்டித் துண்டுகளைப் பறித்துச் சாப்பிட்டன. அவள் மேல் பிரியம் உள்ளவை போல அவளைச் சுற்றி சுற்றி வந்தன.அவள் பாட்டில் தன்னை மறந்தவளாக ஆடினாள்.

crowdusk

(Crow Dusk, 13 x 18, watercolor, ©2011 Helen Klebesadel)

ரொட்டி முழுவதும் தீர்ந்து போனது. காக்கைகளும் அதை உணர்ந்தன. ’சாப்பிடுங்கள் காக்கைகளே” என்று சந்தோசமாகச் சொல்லி கைகளை வானத்தை நோக்கி வீசினாள்.சில நடுவானில் பறந்து கொத்துவது போல தோற்றம் காட்டின.

’என் சதை முழுவதும் உங்களுக்குதான்
ஆனால் கண்களை மட்டும் விட்டு விடுங்கள்.
என் காதலனின் புன்னகையை பார்க்க விரும்புகிறேன்

என்று பாடினாள். காக்கைகள் பறந்து விட்டன. அவள் பார்த்தபடி இருந்தாள்.நொடியில் கூரை காலியானது.அவள் மட்டும் தனியாக நின்றிருந்தாள்.அதைப் போலவே பக்கத்தில் கூரைகளும்,அங்கு ஜனங்களும் இருந்தனர். ஆனால் அவள் எதற்கும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.பாடல் முடிந்து விட்டது. சூரியன் வர வானம் நீலமானது. வாய் திறந்திருக்க  அவள் கண்கள் அடிவானத்தோடு கலந்திருந்தது. நான் வியந்தபடி அவளைப் பார்த்தேன்.

அவள் சிறிது நேரம் அங்கிருந்தாள்.என்னைப் பார்த்திருப்பாளோ? பார்த்திருக்கலாம்; ஆனால் கவனித்திருக்க முடியாது. அவள் யாரையும் கவனித்ததாகத் தெரியவில்லை. பார்வையில் வெறுமை தெரிந்தது. சில நிமிடங்களில் கீழே போய் விட்டாள்.

காக்கைகள் எவ்வளவு தூரம் பறந்திருக்க  முடியும் என்ற யோசனையில் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். சில மரங்களின் மீது உட்கார்ந்திருக்க பல இலக்கின்றிப் பறந்து கொண்டிருந்தன.அவை கவர்ச்சியற்றதாகவும், அருவருப்பு தருவதாகவும் இருந்தன. அவைகளின் கருமையும்,அலகுகளும் எரிச்சலூட்டுவதாக இருந்தன. காக்கைகள் என் உடலைக் கொத்துவதை என்னால்  நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. காகங்களும் எனது உடலும்… ஹ்ஹ்..

நான் அந்த ஜன்னலையே பார்த்த  வண்ணம்  இருந்திருக்கிறேன். அந்தப் பெண் இம்முறை பெரிய துணி மூட்டையைத்  தலையில் வைத்திருந்தாள். இப்போது அவள் பாடவில்லை. அங்குள்ள கட்டிலில் மூட்டையைப் போட்டாள்.ஒவ்வொன்றாக எடுத்து சுருக்கம் நீவி உலர்த்தினாள். பின்பு தலையைச் சுற்றியிருந்த புடவையைத்  தள்ளி விட்டு சோம்பல் முறித்தாள். தலையை ஆட்டி  தண்ணீரை நீக்கினாள். கொத்து முடியை எடுத்துப் பார்த்து விட்டு மீண்டும் பின்னுக்குத் தள்ளினாள். நீண்ட கருமையான முடி; இது அவளுக்கு பெருமையைத் தருவதா வருத்தம் தருவதா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. விரல்களால் முடியைக் கோதி விட்டு பின்பு தலையை முந்தானையால் மறைத்துக் கொண்டு கீழே போய் விட்டாள்.

நான் ஜன்னலில் இருந்து பார்வையை விலக்கினேன். கல்லூரியில் படிக்கும் என் மைத்துனி விருந்தாளியாக வந்திருந்தாள். திருமணம் ஆகாதவள்.”ஒரு நிமிடம் இங்கே வருகிறாயா” என்று அவளைக் கூப்பிட்டேன்.

’எங்கே “ அவள் சிரித்தாள்.

ஜன்னலருகே சென்ற நான் “ உனக்கு ஜானவியின் வீடு தெரியுமா?”என்றேன்.

“ஜானவியா? ஏன்? எங்கே இருக்கிறாள் அவள்?”

“எனக்கு எப்படித் தெரியும்?இது அவள் வீடு இல்லையா?”

“நான் அவள் வீட்டைப் பார்த்ததில்லை. அவள் கல்லூரிக்கு வருவதை நிறுத்தி விட்டாள்.”

எனக்கு எப்படி ஜானவியைத் தெரியும் என்ற குறுக்கு விசாரணைக்கு அவள் இறங்குவதற்கு முன்னால் நான் பேச்சை மாற்றி விட்டேன். ஒரு முறை மைத்துனிதான் அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். இப்போது அதைச் சொன்னால் நம்ப மாட்டாள். எப்படியோ பேச்சை மாற்றி விட்டேன்.

இன்று புதன் கிழமை. திங்களும்,செவ்வாயும் வந்து போயின. இன்று  நான்காவதுநாள். தினமும் காக்கைகள் வந்து கரைந்து அவள் கையைக் கொத்தி விட்டு போவதை ஜன்னல் வழியாக பார்க்கிறேன்.ரொட்டிக்கு பதிலாக தன்னையே தருவது போல அவள் பாடியபடி.. “காக்கைகளே”  ..காக்கைகள் அவளைக் கொத்தினால் கூட அதை பொருட்படுத்துவாளா என்பது எனக்கு தெரியவில்லை.எப்போதும் ”என் உடலை நீங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறேன். ஆனால் என் கண்களை மட்டும் விட்டு விடுங்கள்.என் கண்களில் ஒரு நம்பிக்கை , அவை எனது காதலனுக்கு சொந்தமானவை.அவை அவனை பார்ப்பதற்கு மட்டும்தான் . எப்போதும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கண்களை மட்டும் விட்டு விடுங்கள். .. “என்ற வரிகள் மட்டுமே

இவை எல்லாவற்றையும் இன்று காலையும் பார்த்தேன். பறவைகளுக்கு உணவு கொடுத்து விட்டுத் துணி மூட்டையோடு வந்தாள். காய வைத்து விட்டு போய் விட்டாள்.

ஒரு முறை ஜானவி என் வீட்டுக்கு வந்திருந்த போது அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் படி என் மனைவி ரகசியமாகச் சொன்னாள். அவள் போன பிறகு”உங்களுக்கு அவளைப் பிடித்திருக்கிறதா ?” என்று கேட்டாள்.

“நல்ல பெண்ணாகத் தெரிகிறாள். பார்க்கவும் நன்றாக இருக்கிறாள். எதற்குக் கேட்கிறாய்?” என்றேன்.

“நம் பிர்ஜுவுக்கு அவள் பொருத்தமானவளாக இருப்பாளா?” கேட்டாள்.பிர்ஜூ என் மருமகன் எம்.ஏ . படிக்கிறான்.

“பிர்ஜு மோகன்? இவளோடு ஒப்பிடும் போது அவன் சின்னக் குழந்தை”

“குழந்தையா அவன்?அடுத்த மாதம் வந்தால் அவனுக்கு இருபத்திரண்டு வயது.”

“நாற்பதாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.அவன் அவ்வளவு நாகரிகமாக இருப்பவன். இந்தப் பெண் மிக எளிமையாக இருக்கிறாள். வெள்ளை புடவை தவிர வேறு எதுவும் அணிவதில்லை.அவன் இவளுக்கு பொருத்தமாவானா? இன்னும் சொல்லப் போனால் பாவம் இவள் பிர்ஜுவின் தகுதிக்கு  சிறிதும் சரியானவள் இல்லை. நான் இதைச் சிறிது உண்மையாகவும் ,சிறிது கேலியான தொனியிலும் சொன்னேன். மனைவி என் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்ததாகத்  தெரியவில்லை. இதை அடுத்து என் மனைவியின் முயற்சியால்   இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பேச்சு நடந்தது. வரதட்சணை, இத்யாதி அனைத்தும் முடிவு செய்யப்பட்டன.

திடீரென்று நிலைமை முழுவதும் மாறிப் போனது.விநோதமாக ஒன்று நடந்தது. என் மருமகனுக்குக் கிடைத்த கடிதம் ஒன்று திருமணத்தை நிறுத்தி விட்டது. முதலில் என் மனைவி அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு சமாதானமாகி விட்டாள். திருமணம் போன்ற விசயங்களைப் பொறுத்த வரை நான் உபயோகமில்லாதவன் என்று நினைத்து யாரும் இது பற்றி என்னிடம் பேசவும்,விவாதிக்கவும் இல்லை. சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் “நீங்கள் ஏன் ஜானவியைப் பற்றி முன்பே சொல்லவில்லை? என்று மனைவி கேட்டாள்.

“என்ன சொல்ல வேண்டும்?”

“அவள் மோசமானவள் என்று”

“மோசமானவளா?”

“தெரியாதது போல நடிக்க வேண்டாம்.உங்களுக்கு இப்போது எல்லாம் தெரியும்”

“ஜானவி மோசமானவள் என்று எனக்கு எப்படித் தெரியும் என்று எதிர்பார்க்கிறாய்?:

சிறிது வியப்படைந்தவள் போலப் பார்த்தாள்.”பிர்ஜுவுக்கு வந்த கடிதம் பற்றித் தெரியாதா? தெரியாமல் இருப்பதே நல்லது.சரியான நேரத்தில் இந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்தது. இல்லாவிட்டால்…”

என்ன நடந்தது என்று தெரியாமல் கருத்து தெரிவிப்பது சரியல்ல என்ற நினைப்பில் “நடந்தது என்ன என்பதை விளக்கமாகச் சொல்” என்றேன்.

“அவளுக்கு யாருடனோ தொடர்பிருக்கிறது.படித்த பெண்களே இப்படித்தான் “என்றாள்.

“படித்த பெண்கள் ஒரே மாதிரியாக இருப்பதில் தவறில்லை. சரி என்ன நடந்தது ?

“அவள் அம்மாவைதான் கேட்க வேண்டும்.எனக்கு ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.ஒன்றுக்கு ஆசை இல்லாதவள் போல இருந்ததால் நம்பி விட்டோம். எல்லாம் முடிந்து கல்யாணத்திற்கு நாள் குறிக்க வேண்டியதுதான். கடைசி நேரத்தில் தப்பித்தோம். அவள் நம் வீட்டு மருமகளாகியிருந்தால் என்னால் வெளியே தலைகாட்டி இருக்கவே முடியாது.எதற்கு அவள் தலை காட்டியிருக்க முடியாது என்ற காரணம் இன்னமும் எனக்குப் புரியவில்லை.[

ஜானவி பிரிஜுவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள். நான் அதைப் படித்தேன்.அவள் என் மகளாக இருந்திருந்தால் எப்படி என் உணர்வுகள் இருந்திருக்கும் என்று யோசித்தேன். அவள் என் மகளாக இல்லை நான் அதிருஷ்டசாலி  என்று என்னால் நினைக்க முடிய வில்லை. பல நேரங்களில் இந்தக் கடிதமும் ,செய்திகளும் நினைவுக்கு வருகின்றன. இந்த சூழலில் நானும் ஓர் அங்கம் எனும் போது வெறுமைதான் என்னைத் தாக்கியது.

அது ஒரு சுருக்கமான  கடிதம்தான்.”நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும் போது அதற்கு நான் தயாரானவளாக இருக்க வேண்டும்.ஆனால் புனிதமான திருமணத்திற்கு தயாரான மனநிலையில் இப்போது இருக்கிறேனா என்ற பயம் எனக்கிருக்கிறது. ஒரு பெண் மனைவி என்ற உறவைத் தவிர  கணவனுக்கு நல்ல தோழியாக  இருக்க வேண்டும்.நான் அப்படி இருப்பேனா என்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை.  என்றாலும் நீங்களும் ,உங்கள் பெற்றோரும் விரும்பினால் நான் இந்தத் திருமணத்திற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்.உங்களுடையவளாக என்னை நீங்கள் ஏற்கும் போது நான் உண்மையாகவும்,அன்பாகவும், நன்றியாகவும் இருப்பேன்.உங்கள் வாழ்க்கைத் துணையாக நீங்கள் என்னை ஏற்காமல் போனாலும் உங்கள் அன்பை  நினைத்து அதே அளவு நன்றியோடு  இருப்பேன்.முடிவு உங்கள் கையில். உங்கள் கையில் மட்டும் தான்.எது  உங்களுக்குச் சரியோ அதைச் செய்யுங்கள்” என்று கடிதம் இருந்தது.

“இந்தத் திருமணம் நடக்க வாய்ப்பேயில்லை “ என்று பிர்ஜு உறுதியாகச் சொன்னான். ஆனால் என்னிடம் மட்டும்  திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை எனவும் ,ஒரு வேளை செய்து கொண்டால் அது ஜானவிதான் என்றும் சொன்னான். அவனுடைய பேச்சு ஒரு வகையில்  எனக்கு வியப்பாக இருந்தாலும் , இயல்பாகவும் இருந்தது. அகங் காரம் இல்லாதவனாக அவன் மாறியிருந்த்தை என்னால் உணர முடிந்தது. .உலகமே தனக்குள் அடக்கம் என்றிருந்தவன் பணிவானவனாக இருந்தது வித்தியாசமாகத் தெரிந்தது.ஒருநாள் மார்க்கெட்டில் அவனைச் சந்தித்தேன்.அடையாளம் தெரியாமல் மாறியிருந்தான்.”வாழ்க்கை எப்படிப் போகிறது ?” கேட்டேன்

“எல்லாம் நன்றாகவே இருக்கிறது” என்று சொன்னவன் வீடு வரை வந்தான். வரவேற்ற என் மனைவி மோசமான  நிலையிலிருந்து எப்படியோ தப்பித்து விட்டதாகச் சொன்னாள்.அந்தப் பெண்ணைப் பற்றி பயங்கரமான  செய்திகளைத் தெரிந்து கொண்டவள் போல பேசினாள்.”நான் எப்போதும் யாரையும் மோசமாகப் பேசுபவள் இல்லை. ஆனால்..” பிர்ஜு மௌனமாக இருந்தான் .அவள் தொடர்ந்தாள்.”என்ன ஆயிற்று உனக்கு? நீ இப்போது உன் மாமாவைப் போல ஆகி விட்டாய்.இதென்ன உடை? பேசுவது கூட  நின்று விட்டது.மாமாவுக்கு வயதாகி விட்டது . ஆனால் நீ ஏன் இப்படியானாய்?” என்றாள்.

“ஒன்றுமில்லை அத்தை. உடைகளைச் சலவைக்கு கொடுத்திருக்கிறேன்.” என்றான். திருமணம் செய்து கொள்ளும்படி தனியாக அவனிடம் பேசிய போது சொன்னேன்.குரலில் முதிர்ச்சியோடு “அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது மாமா” என்றான். அதற்குப் பிறகு நான் அதைப் பற்றி பேசவேயில்லை.

ஞாயிறுகள்,திங்கள்கள்,செவ்வாய்கள் இன்று புதன் என்று எல்லா நாட்களிலும் அந்தப் பெண் காக்கைகளை  அழைத்து ரொட்டிகள் தருவதை நான் ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்.அவள் ஜானவியா? ஒரே ஒரு முறைதான் அவளை நெருக்கமாகப் பார்த்தி ருக்கிறேன். அதனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.அவளும் இந்த உயரம்தான் அந்த ஜானவி கொஞ்சம் அழகானவள்.அவள் அந்த ஜானவி இல்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை.விடியற் காலைகளில் காக்கைகள் சூழ்ந்திருக்க அவள் நிற்பதால் அவளை முழுதாகப் பார்க்க முடியவில்லை.கருப்புப் போர்வை போன்ற தோற்றத்தில் காக்கைகள் சிறகடித்தும் ,கரைந்தும்,தமக்குள் அன்பாகச் சண்டையிட்டு கொண்டும் அவள் கையிலுள்ள ரொட்டித் துகள்களை கொத்திக் கொண்டும்  பறக்கின்றன அவள் இன்னமும் “காக்கைகளே வாருங்கள்..இல்லை,இல்லை கண்களை மட்டும் விட்டு விடுங்கள்.என் காதலனின் புன்னகையைப் பார்க்க வேண்டும்” என்று பாடியபடி …

ஆசிரியர் அறிமுகம் : ஜயினேந்திர குமார் [1905-1988]

உத்தர பிரதேசம் அலிகாரில் பிறந்தவர். இயற்பெயர் ஆனந்திலால். உயர் கல்விக்காக பனாரஸ்  ஹிந்து கல்லூரிக்குச் சென்றவர் காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டு, உயர்கல்வியைத் தொடராமல்  நிறுத்தி விட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். ஜயினேந்திர குமார் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது அக்கால கட்டத்தில் தான். 1930 ல் இவருடைய முதல்  சிறுகதை தொகுப்பு வெளியானது. ஏக் ராத், அங்கிதா,  மய் அவுர் ஹம்  ஆகியவை   இவருடைய சிறுகதைத்  தொகுப்புகளில் சிலவாகும். சிறுகதை,நாவல் ,கட்டுரை எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி.நடப்பு உலகின் ஒழுக்கம் சார்ந்த சிக்கல்களை  எளிமையான மொழி அழகோடும் , இயல்பான  நடையோடும் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் .  1971 ல்  பத்மபூஷன் விருது பெற்றவர்.’முக்திபோத்’ என்ற இவருடைய நாவல் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.