kamagra paypal


முகப்பு » இலக்கியம், நாடகம்

பாஸனின் மத்யம வ்யாயோகம்

மகாபாரதக் கதைப் பாத்திரங்களை  மட்டும் மூலமாக எடுத்துக் கொண்டு கதையையும், களத்தையும் தனக்குரிய பாணியில் பாஸன்  அணுகியுள்ள விதம்  இந்நாடகத்தின்  தனிச் சிறப்பாகும். பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தின் பின்னணியில் நடக்கும் கதையாக இது அமைகிறது.

Madhyama_Vyayoga_Drama_Composed_Poet_Bhasaஓர் அந்தணர் தன் மனைவி மற்றும் மூன்று மகன்களோடு காட்டு வழியில் வரும் போது கடோத்கஜன் அவர்களைப் பின் தொடர்கிறான்.அவனுடைய கருமையான யானையின் தும்பிக்கை போன்ற கரங்கள், பலசாலியான தோற்றம் ஆகியவை அவர்களுக்கு அச்சம் தருகின்றன. அக்காட்டில் தங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்று பேச்சு வரும் போது பாண்டவர்கள் அங்குதான் இருக்கிறார்கள் எனவும், யாரழைத்தாலும் உதவி செய்ய வருவார்கள் எனவும் அந்தணர் சொல்கிறார். பாண்டவர்கள் அப்போது யாகம் ஒன்றிற்குச் சென்றிருப்பதாகவும் தங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை எனவும் மூத்த மகன் கூறுகிறான். பீமன் மட்டும் ஆசிரமத்தில் இருப்பதாகவும் அது அவன் பயிற்சிகள் செய்யும் நேரம் எனவும்  மூன்றாம் மகன் சொல்கிறான்.

அப்போது கடோத்கஜன் அவர்களை நிறுத்தி, தன் தாயின் வேண்டுகோளை நிறைவேற்றத் தான் வந்திருப்பதாகவும், அந்தணர் தனக்கு உதவி செய்தால் தான் யாருக்கும் துன்பம் தராமல் போய் விடுவதாகவும் கூறுகிறான். தன்னிடம் என்ன உதவி என்பது போல அந்தணர் அவனைப் பார்க்கிறார். கடும் விரதத்தில் இருக்கும் தன் தாய் ஹிடும்பா உணவாக ஓர்  அந்தணனைக் கேட்பதாகவும் அதனால் அவர்களைத் தேடி வந்ததாகவும் கூறுகிறான். மகன்களில் ஒருவரை அவனோடு அனுப்பி விட்டால் அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் போக முடியும் என்றும் சொல்கிறான். அந்த வேண்டுகோள் முதலில் அவர்களுக்கு  மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. தான் போனால் குடும்பம் பிழைக்கும் என்ற எண்ணத்தில் அந்தணர்  தாம் வருவதாகச் சொல்கிறார். ஒவ்வொருவரும் தாம் வருவதாகக் கூறுகின்றனர்.

முதியவர் என்பதால் அந்தணரை அழைத்துச் செல்ல முடியாது எனவும், தன் தாய் இன்னொரு பெண்ணை ஏற்க மாட்டாள் எனவும் சொல்லி அவர்களை கடோத்கஜன் மறுக்கிறான். மூன்று மகன்களும் வருவதாகச் சொல்கின்றனர். சிறிது விவாதத்திற்குப் பிறகு மூத்த மகன் மீது தனக்குப் பிரியம் எனவும் அவனை அனுப்ப இயலாது எனவும்  தந்தை சொல்ல,  தாய் கடைசி மகன் மீது தனக்குப் பிரியம் என்கிறாள். நடுவில் உள்ள மகனுக்குத் தன் மீது யாரும் பிரியம் காட்டவில்லையே என முதலில் வருத்தம் ஏற்படுகிறது. மூத்தவர்களுக்காகவும், குடும்பத்திற்காகவும் உயிர் கொடுப்பது மிகச் சிறந்தது  எனக் கூறி விட்டுத் தான் வருவதாகச் சொல்கிறான். அருகிலுள்ள பொய்கையில்  தண்ணீர் குடித்து விட்டு வருவதாகச் சொல்லிப் போகிறான். சிறிது நேரமாகியும் அவன் வரவில்லை. தாயின் பசி அதிகமாகும் என்ற கவலை கடோத்கஜனுக்கு ஏற்படுகிறது. பெற்றோரிடம் இரண்டாம் மகனின் பெயரை கேட்கிறான். மத்யமன் [ நடுவில் உள்ளவன் ]  என்று பெயரைச் சொல்ல மிக உரத்த குரலில் அவன் பெயரைச் சொல்லி அழைக்கிறான்.

இந்த அழைப்பு, பயிற்சி செய்து கொண்டிருக்கும் பீமனின் காதில் விழுகிறது. அவனுக்கு மத்யமன் என்ற பெயரும் உண்டு. குந்தி புதல்வர்கள்  யுதிட்டிரன், பீமன், அர்ச்சுனன் என்ற வரிசையில் அமைவதால் அவன் இருவருக்கு மத்தியில் மத்யமனாகிறான். தன்னை யார் அழைப்பது என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறான். இரண்டாம் முறையும் அழைப்பு கேட்கிறது. எனவே அந்த இடத்திற்கு வருகிறான். அந்தணர் குடும்பக் கலக்கத்தைப் பார்க்கிறான். அந்தணர் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார். அங்கிருந்த கடோத்கஜனின் தோற்றம் அவனுக்கு வியப்பைத் தருகிறது. சில அடையாளங்களை நினைவூட்டுகிறது. அது போலவே அவனும் பீமனின் தோற்றத்தால் கவரப்படுகிறான்.இது  இருவரின் மனவோட்டமாகவே அமைகிறது. மத்யமன் எனத் தன்னை அழைத்ததால் தான் வந்ததாக பீமன்  கூறுகிறான். அழைத்த காரணத்தைக் கேட்கிறான். தான் அவனை அழைக்கவில்லை என கடோத்கஜன் சொல்ல இருவரும் விவாதம் செய்கின்றனர்..

அந்த நேரத்தில் இரண்டாம் மகன் மத்யமன் வருகிறான். புறப்படத் தயார் என்கிறான். மத்யமனாகிய தன்னை அழைத்ததால் தானும் வருவேன் என பீமன் உறுதியாகச் சொல்கிறான். இருவரின் பலம் குறித்த பேச்சும், அதன் பின்னணியில் பலப் பரீட்சையும் நடக்கிறது. தன் சக்தியை பீமனிடம் காட்ட முடியாத நிலையில் தாயின் விரதம்  தீர்க்கத்தான் அந்தணரின் மகனை  அழைத்துப் போவதாக கடோத்கஜன் கூற, தாய் யார் என்ற கேள்வி எழுகிறது. தாய் ஹிடும்பா எனச் சொல்ல அவன் தன் மகனே என பீமனுக்குத் தெரிகிறது. அதை வெளிப் படுத்தாமல்  ஹிடும்பாவைத்  தான் சந்திக்க வேண்டும் என பீமன் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். அனைவரும் போகின்றனர். பசியோடு காத்திருந்த ஹிடும்பா தன் பசி தீர்க்க வந்தவனைப் பார்க்க வரும்போது பீமன் நிற்கிறான். மகிழ்வுடன். அவன்  தன் கணவன் என அவள் சொல்ல, கடோத்கஜன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அந்தணர் குடும்பம் மகிழ்வோடு திரும்புவதாகவும் நாடகம் முடிகிறது.

the_death_of_ghatotkacha_Bhasa_Plays_Sanskrit_Classics_Drama_Mahabharat_Theater

ஓரங்க நாடகம் என்ற வரிசையில் இடம் பெறும் இது வ்யாயோகம் என்ற வகையில் அடங்குவதாகும். இது கற்பனைகளுக்கு இடமின்றி வீரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் இயல்புடையது. நாடகத்தின் தொடக்கம் முதல் ஹிடும்பா இடம் பெற்றாலும் நாடகத்தின் இறுதிக் காட்சியில் தந்தை-மகன் அறிமுகச் சூழலில் மட்டும் நேரடிப் பங்கு பெறுகிறாள். பெண் பங்கேற்பு மிகக்  குறைவான நிலையில் அமைவதும் இவ்வகை நாடகத்தின் தன்மையாகிறது. நாடக உரையாடல்களில் மெல்லிய நகையுணர்வு அங்கங்கே  இழையோடுவது குறிப்பிடத் தக்கது. பெற்றோர் தமக்குப் பிடித்த மகன்களைச் சொல்லி விட

இர. மகன்:  பெற்றோருக்கே என்னைப் பிடிக்கா விட்டால் வேறு யாருக்கு என்னைப் பிடிக்கும்?

கடோத்:  உன்னை எனக்குப் பிடிக்கும், எனக்கு நீ வேண்டும்.

இந்த உரையாடலை ஆழ்ந்து பார்க்கும் போது வார்த்தைகளால் விளக்க முடியாத, ஆனால் உணர மட்டும் முடிகிற நெருக்கத்தை பாஸன் விளக்க முயன்றிருப்பது புரியும். இரண்டாம் மகனின்  வருத்தம், அதைச் சரியாக, உடனடியாகப் புரிந்து கொண்ட பாவனையில் கடோத்கஜனின் வார்த்தைகள் வந்து விழுவதான  காட்சி மிகச் சிறப்பானது. மென்மையாக இங்கு பாஸன் காட்டும் பாத்திர உன்னதமும் குறிப்பிடத் தக்கது. மகாபாரத்தில் அந்தணர்களை வெறுப்பவனாக, தர்மத்தைப் புறக்கணிப்பவனாக உள்ள கடோத்கஜன் இந்த நாடகத்தில்  அந்தணர்களுக்கு மதிப்பு தருபவனாக உள்ளான். அவன் இருமைப் பண்பும் வெளிப்படுகிறது.. தந்தையின் அன்பு, தாயின் ராட்சத இயல்பு இரண்டும் கொண்டவனாகச் சித்திரிக்கப் பட்டுள்ளான். தாயின் விரதம் காக்க அந்தணர் குடும்பத்தைப் பின் தொடரும் போது கொடுமைத் தன்மையும், வேறு வழியின்றித் தன்னிடம் சிக்கிய அவர்களை எண்ணிப் பார்க்கும் போது பரிதாப மனமும் கொண்டவனாகிறான்.  தான் எப்போதும் அந்தணர்களை மதிப்பதாகவும், தாயின் வேண்டுகோளுக்காக மட்டுமே வந்ததாகவும் மிக வெளிப்படையாக்க் கூறுகிறான்.

பீமன்-கடோத்கஜன் சந்திப்பும் , உரையாடலும் மிக நுண்ணிய பார்வை உடையதாகிறது. தாக வேட்கையைத் தணித்துக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற இரண்டாம் மகன் விரைவாக வராததால் தன் தாயின் பசி அதிகமாகும் என கடோத்கஜன் நினைக்கிறான்.எனவே அவனை வரவழைக்கும் எண்ணத்தில் பெயர் கேட்கிறான். மத்யமன் என்று அவன் பெயர் சொல்லப் படுகிறது.அந்தக் காட்சி :

கடோத்கஜன் : மத்யமா ! மத்யமா

பீமன்: நான் இங்கே இருக்கிறேன்.

கடோத்: என்ன? நீயும் மத்யமனா?

பீமன்:  உம். நான் பாகுபாடு இல்லாதவன். ஏழை,பணக்காரன் என  வேறுபடுத்திப் பார்க்காதவன். மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் சகோதர வரிசையில் நான் நடுவில் இருப்பவன். [வட மொழியில் மத்யமன் என்பதற்கு     பாகுபாடற்றவன் என்ற பொருளுமுண்டு.]

கடோத்:   ஓ…

பீமன்: ஐம்பூதங்களில் மூன்றாவதான தீயைப் போன்றவன் நான்.  இளவரசர்களில் மத்தியமானவன்.  மனிதர்கள் அச்சப்படும் போது நான் வருவேன். இதோ பார் ! எல்லாவற்றிலும் நான் மத்யமானவன் தான்.

என்று இருவருக்கும் இடையிலான உரையாடல் மிக நுணுக்கமாக உள்ளது. அந்தணரின் இரண்டாம் மகன்தான் தன்னோடு வர வேண்டும் என கடோத்கஜன் பிடிவாதம் செய்யும் போதும் அவர்களுக்கு இடையே நடக்கும் விவாதம் இரு பாத்திரங்களின் மீதும் ஆழமான பிடிப்பை ஏற்படுத்துகிறது. பலமிருந்தால் தன்னை அவன் வலுக் கட்டாயமாக அழைத்துச் செல்லலாம் என்று பீமன் சொல்கிறான் கோபம் கொப்பளிக்க

கடோத்: என்னை யாரென்று நினைக்கிறாய்?

பீமன்: என் மகனென்று ..

கடோத்: எப்படி ? எப்படி நான் உன் மகனாக முடியும்?

பீமன்: என்ன ? என்னிடம் கோபமா? மன்னித்துக் கொள். சத்திரியர்கள் எல்லோரையும் மகனென்று தான் அழைப்பர்கள் .அதனால் தான் அப்படிச் சொன்னேன்.

கடோத்: உம். உன் பயம் தான் என் ஆயுதம்.

என்று பீமனோடு பேசும் இடமும் நயமானது.

நகைசுவை உணர்வு வீரத்தோடு  இழைந்திருப்பது இந்த நாடகத்தின் அழகு என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நாடகம்  இன்றும் மேடைகளில் நடிக்கப்பட்டும், பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக கற்பிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத் தக்கது.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.