kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்

தானியங்கி இயந்திரங்களை கட்டுப்படுத்த முடியுமா?

thinkingrobot

தானியங்கி எந்திரங்களைச் சட்டத்தின் வரம்புகளுக்குள் கொண்டு வந்து எல்லை மீறாமல் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியை கோரி டாக்டரோவ் என்கிற அறிவியல் நவீன எழுத்தாளர் எழுப்புகிறார். இந்தக் கேள்வியை பற்பல பத்தாண்டுகளாக முதலிய அறிவியல் நவீன எழுத்தாளர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள், நாம் அறிவோம். ஆஸிமாவ் ஒன்றும் எந்திரங்களாலான உலகுக்கு எதிரி இல்லை. அவர் அப்படி ஒரு உலகைக் கற்பனை செய்ததோடு, எந்திரங்களே மறைவிலிருந்து மனித வரலாற்றை நடத்தும் எதிர்காலத்தைக் கூட கற்பனை செய்து தனது ‘தளம்’ தொடர்நாவல்களில் அதன் பற்பல பரிமாணங்களையும் கதையாகத் துளைத்துப் பார்த்திருக்கிறார்.

அவருடைய சமகாலத்தவரான ஆர்தர் ஸி. க்ளார்க்கின் பல கதைகளும் தானியங்கி எந்திரங்களைப் பற்றியவை. அவற்றில் ஒன்று உலகப் பிரசித்தம் பெற்ற எந்திரம். HAL என்று பெயரிடப்பட்ட அது ஒரு அளவுக்கு இந்துஸ்தான் ஏரொநாடிக்ஸ் லிமிடட் என்ற இந்திய அரசுடைய விமானப் பொறியியல் நிறுவனத்தின் பெயரைக் களங்கப்படுத்தியது என்று நாம் கருத இடம் இருக்கிறது. ஏனெனில் HAL என்ற சகல கலா வல்லமை கொண்ட எந்திரம், நமது சூரிய மண்டலத்தைத் தாண்டிப் போய் அங்கு ஏதும் அன்னிய ஜீவராசிகள் உள்ளனவா என்ற கேள்விக்கு விடை தேடும் ஒரு மனித அண்ட பேரண்டத் துழாவல் முயற்சிக்கு உறுதுணையாகவும், முழுப் பொறியியல் இயக்க நாயகமாகவும் இருக்க வேண்டிய எந்திரமாக உருவகிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் அது மனிதருக்குத் தான் கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை மீறி, மனிதரைச் சிறைப்பிடித்து விட்டு, தானாக அந்த பேரண்டத் துழாவலை நடத்தத் தீர்மானிக்கிறது என்று கற்பனை செய்த க்ளார்க், ஸ்டான்லி குப்ரிக்கின் அபாரமான, ஆனால் உணர்ச்சி மக்கிய திரைப்படத்தால் உலகப் புகழ் பெற்றார். HAL என்றென்றைக்குமான மனிதருக்கு எதிரான வில்லனாக உலகெங்கும் அறியப்பட்டிருந்தது.

அதே கதையின் பல வடிவுகளை, மேன்மேலும் சிக்கலாக பற்பல கதாசிரியர்கள் எழுதி விட்டார்கள். இந்த உளச் சிக்கல் மனிதருக்குத் தம் சமூகத்தின் மீது தமக்கிருக்கும் கட்டுப்பாடு தம் கையை விட்டுப் போய் ஒரு மேம்பட்ட அறிவிடம் சேர்ந்தால் தம் கதி அதோகதி என்ற பயத்திலிருந்து எழுகிறது. இந்த வாரம் மேலை நாடுகளில் வெளி வந்த ‘ட்ரான்ஸெண்டன்ஸ்’ என்கிற படத்தின் மையக் கருவும் இதேதான். கட்டுக்கு மீறிப் போய் விட்ட செயற்கைப் பேரறிவு மனித சமுதாயத்தை ஆள முயல்வது கதை. ஆனால் கதையில் ஒரு நிச்சயமின்மை இருக்கிறது. அந்தச் செயற்கை அறிவு, எல்லா மனிதரையும் சாவில்லாத சிரஞ்சீவிகளாக ஆக்கவும் முயல்கிறது என்பதே அந்த நிச்சயமின்மைக்குக் காரணம்.  எனினும் மனிதரின் அச்சம் பற்றிய கதைகள் அறிவியல் நவீனத்திலும், மரபு இலக்கியத்திலும் இப்படி அனைத்தையும் ஆளச் செய்யப்படும் முயற்சிகளுக்கு எதிரானவையாகவே உலகெங்கும் பரிணமிக்கின்றன. பழம்புராணமும், நவீனக் கட்டுக்கதைகளும் (தாஸ் காபிடல்) இதே பயத்தினடிப்படையில் உருவானவையே.

இதன் வேர் உலக மதங்களில் பலவற்றிலும் உள்ள பயம்தான். கோலெம் என்ற செயற்கையாக உயிர்பெற்றெழும் ஜீவனை மனிதர் உருவாக்கியதில் கோபமுற்ற ‘இறை’ மனிதரைத் தண்டிப்பதாகவும், அந்த கோலெம் மனிதருக்கெதிரான அழிப்பு சக்தியாக மாறுவதாகவும் பண்டை நாகரிகத்தில் யூதம் கற்பனை செய்திருந்தது. அதன் பல விளைவுகள் கிருஸ்தவத்திலும், இஸ்லாத்திலும் தொடர்ந்து அதிர்வுகளைக் கொணர்ந்திருக்கின்றன. க்ளார்க், ஆஸிமாவ் போன்றாரின் புனைவுகளில் இந்த பயத்தின் அல்லது பல நூறாண்டு அச்சத்தின் சில விளைவுகள் சிறிதே மத அச்சத்தை விலக்கி, அறிவியல் அச்ச உருவோடு வெளிப்படுகின்றன.

அந்த அச்சத்தைச் சிறிது ஆழமாக கோரி டாக்டரோவ் இந்தக் கட்டுரையில் நோக்குகிறார். ஏன் தானியங்கி எந்திரங்களைக் கட்டுப்படுத்துதல் கடினம் என்று விளக்குகிறார் இங்கே.

http://www.theguardian.com/technology/blog/2014/apr/02/why-it-is-not-possible-to-regulate-robots

 

oOo

அறிவியல் முகமூடியில் பெண்ணெதிர்ப்பு

semenya

நவீன யுகம் என்பது ஏதோ அறிவுத் துலக்கத்தின் உச்சம் என்று நம் பகுத்தறிவுகள் தினமெழுந்து சேவல்களைப் போல கொக்கரிக்கிறார்கள். நவீனத்துவம் என்பது எக்கச் சக்கமான சுயமயக்கங்களையும், தற்காலிக எதார்த்தங்களில் ஊறலையும், ஏராளமான பொய்மைகளையும் கொண்டது என்பது அனேகமாக தினந்தோறும் நிரூபிக்கப்பட்டாலும் அதையே ஒரே பாதை என்று வணங்கி வழிபடும் மூடர் கூட்டம் இது. இவர்கள் பண்டைப் பண்பாடுகளையும், மரபுகளையும் இழித்துரைக்காத நாளே இல்லை என்பதுதான் அபத்த நாடகங்களின் உச்சம். அதுவும் இடது, முற்போக்கு என்ற முகமூடியை அணிந்து கொண்டு இவர்கள் ஆடும் அபத்த நாடகங்களில் பற்பலவும் வெறும் கேலிக் கூத்துகள். இங்கே ஒரு கேலிக்கூத்தை மேற்கின் ‘விளையாட்டு’ அமைப்புகள் ஆடியிருப்பதை ஒரு பெண் அம்பலப்படுத்துகிறார். விளையாட்டு என்ற சொல்லையே அபத்தமாக்கி இருப்பன பல நாட்டு ‘விளையாட்டு’ச் சீரமைப்பு நிறுவனங்கள். அவை கொணரும் சீர் என்ன வகைத்தது என்றால், பற்பல பெண்களின் உடல்களைச் சித்திரவதைக்குள்ளாக்கி, அவமதிப்பதுதான் என்று இவர் வாதிடுகிறார்.

பகுத்தறிவின் நட்சத்திரமான ஃப்ரான்ஸ் என்பது எத்தகைய இனவெறியின், பெண்ணெதிர்ப்பின் கூடாரமாக இருக்கிறது என்பதைக் கடந்த பத்தாண்டு வரலாற்றில் அடிக்கடி நாம் பார்த்திருக்கிறோம். இங்கே இன்னொரு சான்று.  பெண்ணெதிர்ப்பு மனோபாவத்தின், பெண்ணடிமைத்தனத்தை விரும்பும் ஆண்மையப் பார்வையின் பிடியில் சிக்கியிருப்பது வஹ்ஹாபியமும், ஆஃப்ரிக்க நாடுகளின் சில இனக்குழுக்களும், எவாஞ்சலியக் கிருஸ்தவமும்தான் என்று நாம் நினைக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கே நவீனத்துவத்தின் நட்சத்திரங்களான மேலை நாடுகளின் ‘விளையாட்டு’ நிர்வாக அமைப்புகளும், மருத்துவர்களும், இன்னும் பிற அமைப்புகளும் பெண்களை எப்படிக் கட்டுப்படுத்தி, வதை செய்து, மருத்துவம் என்ற பெயரில் அறுவை சிகிச்சைகளை அவர்கள் மீது சுமத்தி ஆண்டிருக்கிறார்கள் என்று விளக்குகிறது இக்கட்டுரை.

http://www.nytimes.com/2014/04/11/opinion/the-trouble-with-too-much-t.html

 

oOo

ஒழுக்கக் காவலர்கள்?!

US Patches_0002d

இன்னொரு கட்டுரை, இன்னொரு சான்று மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இனவெறி, மாறுபட்ட நடத்தை மீது கடும் அச்சம், கட்டுப்பாடு என்பதை ஒரு மதமாக்கும் பார்வை போன்றன எப்படி இளம் சிறார் மீது கொடுமைகளைச் சுமத்துகின்றன என்பதைச் சுட்டுவது.

இதில் பள்ளிகளில், ‘கட்டுப்பாட்டை’ மீறியதற்காகத் தண்டிக்கப்படும் சிறுவர்கள் போலிஸாரால் மின்சாரத் தாக்குதல் நடத்தப்பட்டு மூளை, உடல் ஆகியன சேதமாகுவதும், பலர் இறப்பதும் சுட்டப்பட்டு, பள்ளிகளும், அரசாங்கமும் மக்களெதிர்ப்பு நடவடிக்கைகளை மிக அலட்சியமாகக் கைக்கொண்டு நிர்வாகம் என்ற சொல்லைக் கேவலப்படுத்தி இருக்கின்றன என்பதைச் சொல்கிறது.

இந்த நாடு உலகில் பல நாடுகளில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதாகப் பாவலா காட்டுகிறது என்பதை இந்தியர்கள் கவனிப்பது நல்லது பயக்கும்.

http://www.nytimes.com/2014/04/12/opinion/torturing-children-at-school.html

 

oOo

செல்ஃபோன்களால் புற்றுநோய் போன்ற வியாதிகள் வருமா?

electromagnetic-radiation

சில நேரம் பொது மக்களின் சர்ச்சைகள் ஒரு அறிவியலாளரின் விவாதத்தை விடப் பொருளுள்ளவையாக மாறலாம், மாறும். இதற்கொரு சான்றாக இந்தக் கட்டுரையையும், அதன் கீழே வாசகர்களிடையே நடக்கும் சர்ச்சையையும் காட்டலாம்.

செல்ஃபோன்களால் புற்றுநோய் போன்ற வியாதிகள் வருமா? என்பது கட்டுரையின் கரு. ஆனால் வாசகர்களின் மறுவினைகளைக் கவனித்துப் படிப்பது மிகவுமே உதவும்.

http://www.salon.com/2014/04/12/your_cellphone_is_killing_you_what_people_dont_want_you_to_know_about_electromagnetic_fields/

oOo

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.