kamagra paypal


முகப்பு » வேளாண்மை

உலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு

மனிதன் பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை இயற்கையில் தானாகவே விளைந்த விதைகள், கனிகள் ஆகியவற்றை உண்டு வாழ்ந்த நாளிலிருந்து 19ஆம் நூற்றாண்டில் வேதியியல் அல்லது ரசாயனங்கள் கண்டுபிடித்த காலம் வரையில் உலகம் முழுவதும் இயற்கை விஞ்ஞானம் நீடித்து வந்தது. புதிய கற்காலத்தில் வேளாண்மையில் மண்ணைப் பண்படுத்தக் கற்கருவிகளும், மரக்கருவிகளும் பயன்பட்டன. பின்னர் உலோகக் காலம் அதாவது பித்தளை – இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு சேகரிப்பிலிருந்து உணவின் உற்பத்தியும், உணவு உற்பத்தியில் உபரி உணவும் சேர்ந்த பிறகு தொழில் – வணிகம் செழித்து உலக நாகரிகங்கள் அரும்பின. கிரீஸ், ரோம், ஆசியா மைனர் என்று சொல்லப்பட்ட துருக்கி, ஈராக், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் புராதன நகரங்கள் தோன்றின. இன்றைய வேளாண்மை சுமார் 10,000 ஆண்டுக்கால வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்கு 19, 20 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சோதனைகள் வேளாண்மையில் அறிமுகமான ரசாயனங்கள் ஆகும். வேளாண்மை என்றால் அது இயற்கை வழி வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மைதான் என்ற இயல்பு மாறி இதில் இரண்டு பிரிவு வந்தது. எவ்வளவுதான் ரசாயனம் வந்தாலும் பாரம்பரிய வேளாண்மையை அதன் இயற்கைத் தன்மையுடன் போற்றிவரும் சிலருடன், ரசாயனத்தைக் கைவிட்டு இயற்கைக்குப் பலர் மாறினாலும் இயற்கை விவசாயம் செய்வோர் சிறுபான்மையினராகவும், ரசாயன விவசாயம் செய்வோர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல; உலகளாவியதாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் இவ்வாறு பெரும்பான்மையான விவசாயிகள் இயற்கை வழியைக் கைவிட்டது ஏன்? இயற்கை விவசாயத்தில் உற்பத்தி குறைவு, மக்கள் தொகை, பசி – பஞ்சம் என்ற காரணங்களும் அல்ல. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்பேச்சுகள் எழுந்தன. எது நிஜம்?

tn-farmer

Photo-credit: David Zimmerman

உலகில் மண்ணிலும், விண்ணிலும் ரசாயனத்தை அறிமுகம் செய்யக் காரணமானவர் பேரன் யொஸ்டஸ் வான் லீபெக் (Baron Justus Von Liebig) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். இவர் 1840இல் “வேளாண்மையிலும் உடற்கூறிலும் ரசாயனத்தின் பயன்பாடு” (Chemistry in its Application to Agriculture and Physiology) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.

பல வகையான உணவுத் தாவரங்களை எரித்துப் பற்பமாக்கி அந்தப் பற்பத்தில் (பஸ்பம்) எஞ்சியுள்ள தாதுப்புகளை அளவிட்டு, ஒரு செடி நன்கு வளரச் செயற்கையில் உற்பத்தி செய்த தாது உப்புகளை நீரில் கரைத்து அல்லது ஈர நிலையில் மண்ணில் இட்டுப் பயிரில் ஏற்றலாம் என்று முன்மொழிந்தார்.

மிகவும் அடிப்படையாகப்  பயிருக்கு நைட்ரஜன் என்ற தழைச்சத்து, பாஸ்வரம் என்ற மணிச்சத்து, பொட்டாசியம் என்ற சாம்பல் சத்து மிக அதிக அளவிலும், நுண்ணிய அளவில் கால்சியம், கந்தகம், குளோரின், துத்தநாகம், தாமிரம், வெள்ளீயம், பித்தளை, வெங்கலம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவை தேவை என்று அடுக்கிக்கொண்டு போகலாம். பேரூட்டங்களான நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம் கலவையை ஆங்கிலத்தில் சுருக்கமாக, என்.பி.கே (NPK) கலவை என்று ஆங்கிலத்தமிழில் நாம் பேசுவதுண்டு. இந்த என்.பி.கே. கலவையுடன் சிறிது சுண்ணாம்பும் (ஜிப்சம்) சேர்த்து மண்ணில் இட்டுப் பரிசோதித்துப் பார்த்தபோது நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி எதுவுமே யோசிக்காமல் முக்கியமாக வெடிமருந்து தயாரிக்கும் ரசாயன நிறுவன முதலாளிகள் லீபெக்கைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கொண்டாட்டம் போட்டனர். கண்டமேனிக்கு மண்மேல் ரசாயனங்கள் கொட்டப்பட்டன.

சொல்லப்போனால், லீபெக்கின் கண்டுபிடிப்புகளான சூப்பர் பாஸ்பேட், பென்சீன், ஆல்க்கலி போன்றவை போன்றவை வெடிகுண்டுகளுக்குரிய தாதுப்புகள் ஆகும். போரும் அமைதியும் வெடிஉப்பு உற்பத்தியாளர்களை வாழவைத்தன. போர்க் காலங்களில் வெடிகுண்டு வீசுவதால் லாபம். அமைதிக் காலங்களில் அதையே ரசாயன உரங்களாக மண்ணில் இட்டால் கூடுதல் லாபம். ஆனால், மனிதனின் உடல்நலத்திற்கும், உயிர்ச்சூழலுக்கும், பல்லுயிர் வளங்களுக்கும் நஷ்டம். முதல் உலகப்போருக்கு முன்னும் பின்னுமாக செயற்கையான ரசாயன உரப்பயன் மேலை நாடுகளில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்தது.

உலக மக்கள் ரசாயன உரப் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை உடனடியாக உணரவில்லை.  எனினும், தீர்க்கதரிசிகளாக வாழ்ந்த புகழ்பெற்ற மருத்துவர்களும், மண்ணுயிர் நிபுணர்களும், நுண்ணுயிர் வல்லுனர்களும் லீபெக்கின் சாம்பல் தத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். லீபெக்கின் அடிப்படையான ஆராய்ச்சியில் உயிருள்ள பசுமைத் தாவரத்தை எரித்துக் கிடைத்த சாம்பலில் உள்ள உப்பை மட்டும் கணக்குப் பண்ணும் இவர் செயலுக்கு “சாம்பல் தத்துவம்” என்று பெயரிட்ட அமெரிக்காவில் மிசௌரி பல்கலைக்கழகப் பேராசிரியர் விலியம் அல்பிரைஹ்டை (Dr.  William A. Albrecht) வரலாறு மறந்துவிடாது. (1)

“சாம்பல் என்றாலே அது மரணத்தின் அறிகுறி. லீபெக்கின் தத்துவம் மரணத்தின் தத்துவம்” என்று 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் குரல் கொடுத்த அல்பிரைஹ்டை உலகம் மறந்துவிட்டது. மண்ணியல் பற்றி நுண்ணிய ஆய்வுகள் செய்த பல ருஷ்ய விஞ்ஞானிகளும் புறக்கணிக்கப்பட்டனர். ருஷ்ய விஞ்ஞானிகளின் மண்ணியல் ஆய்வுக் கட்டுரைகள் விலைபோகாமல் இருந்தவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்ட   ஜெரோம்.ஐ.ரோடேல்  (Jerome Irving Rodale) பிரிட்டிஷ் இந்தியாவில் பணிபுரிந்த மருத்துவர் மக்காரிசன் (Robert McCarrison), வேளாண் விஞ்ஞானி ஆல்பர்ட் ஹாவார்ட் (Dr. Albert Howard), ஜப்பானிய காந்தி ஃபூகோகா (Masanobu Fukuoka) போன்ற பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாய முன்னோடிகள் இந்த சாம்பல் தத்துவம் மண் வளத்தை அழித்துவிடும் என்று எச்சரித்தனர்.

உலகப் போர்களும், உள்நாட்டுப் போர்களும் விளைவித்த பல்வேறு தீமைகளில் வளம் இழந்த வேளாண்மையும் ஒன்று. லீபெக் வளர்த்த என்.பி.கே. என்ற சாம்பல் தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக ருஷ்யாவில் நல்ல விளைச்சலுக்கு ஹ்யூமஸ் (Humus) என்று சொல்லப்படும் மண்ணில் உள்ள மக்குப் பொருள்களே என்ற ஆய்வு முடிவை அங்குள்ள சில விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மூலம் வெளியிட்டனர். அவற்றைப் பின்னர் நாம் கவனிக்கும் முன்பு, மிகவும் தர்க்கரீதியாக லீபெக் தத்துவத்திற்குத் தக்க பதிலை வழங்கியவர் இந்தியாவில் வேளாண்மை ஆய்வுகளை நிகழ்த்திய ஆல்பர்ட் ஹோவார்டே ஆவார்.

0813191718ஆல்பர்ட் ஹாவார்ட் (Albert Howard) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல், வேளாண்மை, மண்ணியல், காளானியல் (Mycology) ஆகிய பாடங்களில் தேர்ச்சியுற்ற பேராசிரியர். இவர் மேற்கிந்தியத் தீவில் பார்படோஸ் நகரில் உள்ள இம்பீரியல் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சரில் ஒரு விரிவுரையாளராக வாழ்வைத் தொடங்கியவர். அங்கு முதலாவதாக லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்த மருத்துவர் மக்காரிசனின் நட்பு கிடைத்தது. ராபர்ட் மக்காரிசன் (Robert McCarrison) புகழ்மிக்க மருத்துவர். இம்பீரியல் இந்திய அரசில் ஊட்டச்சத்து ஆய்வுத்துறைத் தலைவராகவும், நீலகிரி மாவட்டத்தில் கூனூரில் உள்ள லூயி பாஸ்ச்சர் நிறுவனத்தின் தலைவராகவும் முப்பது ஆண்டுக் காலம் பணிபுரிந்ததைப் பாராட்டி பிரிட்டிஷ் மகாராணியிடம் வீரப்பதக்க விருது (Knighthood) பெற்றவர். இவர் சிலகாலம் ஆப்கானிஸ்தானில் ஹுன்சாஸ் பழங்குடி மக்களின் உணவுப் பழக்கவழக்கம், உடற்கூறு பற்றி ஆராய்ந்தவர். ஹுன்சாஸ் பழங்குடிகள் அலெக்சாந்தர் படையெடுப்பின்போது கூடவந்த கிரேக்கப் படைவீரர்கள் மீண்டும் அவருடன் திரும்பாமல் ஆப்கானிஸ்தானில் தங்கி அம்மரபில் வந்தவர்கள். அவர்கள் ஒரு நாளில் 120 மைல் நடக்கக்கூடியவர்கள். 100 வயதுக்குமேல் வாழ்ந்தவர்கள். எந்த வைத்தியமும் செய்துகொள்ளாதவர்கள். குறிப்பாக வயிற்றுநோய், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் ஹுன்சாஸ் மக்களுக்கு வந்தது கிடையாது என்று மக்காரிசனின் மருத்துக் குறிப்பு கூறுகிறது.(2)

“உணவே மருந்து” என்ற குரல் இன்று ஓங்கி ஒலிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல; அன்றைய இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மக்கள் நோய் நொடியில்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான காரணம் பாரம்பரிய உணவு முறை என்பதை மக்காரிசன் பகுத்துரைத்தவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “வயிற்றுப் போக்கு, குடல் நோய்களும் தவறான உணவும்” என்ற தலைப்பில் – அதாவது “Faulty Food in Relation to Gastro Intestinal Disorders” – என்ற பொருள் பற்றி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள உடற்கூறு ஆய்வியல் துறையில் இவர் ஆற்றிய சொற்பொழிவு லீபெக்கின் தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. “வளமான வாழ்வுக்குத் தக்க அளவு ரசாயன ஊட்டங்களை ஏற்க வேண்டும்” என்பது லீபெக்கின் வாதம். ஆனால் சரியான உணவே போதும் என்பது மக்காரிசனின் வாதம். மக்காரிசன் கூறிய அடிப்படையில் இந்தியாவில் வேளாண்மையில் ஆய்வு செய்வதைத் தொடர்ந்தவர் ஹாவர்ட். எனினும், இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் எதுவெனில் இந்தியாவில் மக்காரிசனின் ஆய்வுக் கட்டுரைகளும் அரசாங்க வெளியீடு கோப்புக் குப்பைகளில் புதையுண்டதுபோக, எஞ்சியதிலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் குறைவானவை.

மேற்கிந்தியத் தீவில் பணிபுரிந்த ஹாவார்டின் முக்கியப்பணி அந்த நாட்டின் வர்த்தகப் பயிர்களான கரும்பு, கோகோ, ஜாதிக்காய், ஆரவல்லி என்ற ஆரோரூட் (Arrowroot), பட்டாணி, வாழை, எலுமிச்சை ஆகியவற்றின் சாகுபடியை மேம்படுத்துதலாகும். கரும்புப் பயிருக்கு ஏற்படும் பூஞ்சாண நோய் பற்றியும் ஆராய்ந்து மருந்து வழங்குதலும் ஒன்று. அவர் ஆராய்ச்சி செய்ய சோதனைக்கூடம் இருந்தது. ஆனால் சோதனை வயல் / தோட்டம் வழங்கப்படவில்லை. ஆகவே, அவர் நேரிடையாக விவசாயிகளின் வயல்களுக்குச் சென்று கவனித்துத் தக்க யோசனைகளை வழங்கினார். “சோதனைக்கூடங்களில் சோதனைக் குழாய்களுடன் சங்கமமாகிவிட்டால் அறிவு மழுங்கிவிடும் என்றும், நேரிடையாகக் களத்தில் இறங்கி விவசாயிகளின் நுட்பங்களைக் கவனித்தால் அறிவு வளர்ந்துவிடும்” என்பது அவர் கருத்து.

பயிர்களுக்குரிய நோய்க்குறிகள் மண்ணில் புலப்படுவதை ஹாவார்ட் கண்டறிந்தார். தான் செய்யக்கூடிய ஆராய்ச்சிக்கு விரிந்த அளவில் தோட்டமும் வயலும் வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவருக்கு இந்திய வாய்ப்பு வந்தது. இந்திய விவசாயத்தை மேம்படுத்தவும், இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தி உற்பத்தியை உயர்த்தவேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் தகுதி வாய்ந்த விஞ்ஞானி ஒருவரை பிரிட்டிஷ் இந்தியாவில் அன்று வைஸ்ராயாக இருந்த (Viceroy) கர்சான்  (Curzon) தேடிக்கொண்டிருந்தார். தில்லிக்கு அருகில் உள்ள புசாவில் 75 ஏக்கர் நிலத்துடன் இணைந்த வேளாண்மை ஆய்வுக்கூடத்தைக் கர்சான் தொடங்குவதாக இருந்தார். 1905இல் இந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல் வல்லுனர் பதவி ஹாவார்டுக்குக் கிடைத்தது. இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு விரும்பியது. ஹாவார்டோ இந்திய விவசாயத்தில் உற்பத்தியை உயர்த்த ரசாயனம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தியாவிலிருந்துதான் லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்குத் தர்க்கரீதியாகத் தக்க பதிலை ஹாவார்டு இவ்வாறு வழங்கினார்.

லீபெக்கின் தத்துவத்தில் ஒரு பயிர் விளைந்து நல்ல மகசூல் பெறவேண்டுமானால், நன்கு விளைந்த அதே பயிரைச் சுட்டெரித்துப் பின், அந்தச் சாம்பலில் உள்ள தாதுப்புகளை அளவிட்டு அதை மண்ணில் இட்டால் போதுமானது. இரண்டாவது இயற்கை விவசாயிகள் கூறும் மக்குப்பொருள் என்ற ஹ்யூமஸ் முக்கியம் இல்லை. மக்குப்பொருளில் உள்ள கார்பனை மண் மூலம் பெறவேண்டியதில்லை. பச்சை இலைகள் காற்று வடிவில் உள்ள கார்பனை சுவாசித்து ஏற்பதால் மண்ணில் கரிமம் வேண்டும் என்று காத்திருக்காமல் அப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்களை ரசாயன வடிவில் நீரில் கரையக்கூடிய உப்பாக வழங்கவேண்டும் என்று கூறுவதோடு நிற்காமல் ஹ்யூமஸ் மக்குப்பொருள் என்ற கரிமச்சத்து தண்ணீரில் கரையாது என்றும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்கு எஞ்சுகிறது என்ற உண்மையையும் பொய்யென்று  லீபெக் வாதிட்டார்.

வேளாண்மை வேதியியல் (Agriculture Chemistry) என்ற துறையில் லீபெக்கின் பங்கைப் பாராட்டிய ஹாவார்ட் முதல் நிலையை ஏற்றுக்கொண்டாலும், இரண்டாவது நிலை மிகவும் தவறு என்று கூறினார். ஒரு தாவரத்திற்குத் தேவையான ஊட்டத்தை உப்பு வடிவில் வழங்கும் செயல் மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் பாதிக்கும் என்று நிரூபித்தார். லீபெக்கைப் பற்றி அன்று ஹாவார்டு கூறிய ஒரு கருத்து இந்தியாவில் ஏட்டுச் சுரக்காய்களாக வாழும் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. பயிர் வளர்ச்சிக்கு மக்குப்பொருளான ஹ்யூமஸ் தேவையில்லை என்று கூறுவதும், சோதனைக்கூட முடிவே இறுதியான முடிவு என்பதும், உழவியல் நுட்ப அறிவோ, வேளாண்மை அனுபவ அறிவோ லீபெக்கிடம் இல்லை என்று எடுத்துக்காட்டுகிறது என்று ஹாவார்ட் கூறுகிறார். விவசாய வளர்ச்சிக்கு சோதனைக்கூட அறிவு வயலுக்குச் செல்லவேண்டும் என்பதைவிட வயலில் அனுபவ அடிப்படையில் விவசாயிகளின் பாரம்பரிய அறிவு சோதனைக்கூடத்தை அடையவேண்டும் என்பது மிக முக்கியம் என்று ஹாவார்ட் கருதுகிறார். ஒரு தாவரத்திற்கு வேண்டிய அவ்வளவு தாதுப்புச் சத்துகளும் மண்ணில் உண்டு என்றும், உண்மையில் மக்குச்சத்து என்ற ஹுமஸ் மண்ணில் கரைந்து உலோக உப்புச்சத்துகளை நுண்ணிய வழியில் கரைத்து வேர் உறிஞ்சிகளுக்கு எடுத்துக்கொடுக்க நுண்ணியிரிகள் உதவுகின்றன என்பதால், ஹ்யூமஸ் என்ற மக்குப்பொருள் நீரில் கரையாது என்பதும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்குப்பொருள் எஞ்சாது என்பதும் நிரூபிக்கப்படாதவை என்று கூறும் ஹாவார்ட், அனுபவபூர்வமாக லீபெக்கின் தத்துவத்தையும் பொய்யென்று நிரூபித்துக் காட்டிவிட்டார்.

ஏறத்தாழ 30 ஆண்டுக்காலம் இந்திய விவசாயிகளோடு நெருங்கிப் பழகிய ஹாவார்ட் ஏராளமான பாரம்பரிய உழவியல் நுட்பங்களைப் பயின்று மெருகேற்றி விவசாயிகளுக்குத் திரும்பி வழங்கினார். மக்குப்பொருளில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆற்றல், மண்ணில் உள்ள உயிரியல் ரசாயனங்கள் குறித்து இவர் முப்பதாண்டுக் காலம் நிகழ்த்திய ஆய்வு முடிவில் இவர் வரைந்த சொல்சித்திரம் “வேளாண்மை உயில்”. இதைப் பற்றியும் 1935க்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் இந்திய உழவியல் நுட்பங்களைக்கொண்டு இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட விவரங்களுடன் 1905இலிருந்து 1935 வரை இவர் நிகழ்த்திய ஆய்வுகள் பற்றியும், சமகால் ருஷிய வழங்கல் பற்றியும் இனிவரும் இதழ்களில் கவனிக்கும் முன்பு, லீபெக்கின் பெருந்தன்மை பற்றியும் ஒரு வரி எழுதலாம். “மண்ணில் ரசாயன உரங்களை இடுவது மண் வளத்தைக் கெடுத்துவிடும்’, என்றும், ’பயிர் ஆரோக்கியமாக வளர ஹ்யூமஸ் என்ற மக்கு அவசியமே” என்று லீபெக் ஒரு மரண வாக்குமூலம் வழங்கினாலும்கூட அது காலம் கடந்து வந்து விட்டது. ரசாயன உர உற்பத்தி நிறுவனங்களின் பணப் பசிக்கு மண் இரையானது. இது உலகளாவியதாக இருந்தது.

_____________________________________________________________

1.  பேராசிரியர் விலியம் ஆல்ப்ரைஹ்ட் உடைய பல பிரசுரங்களை இந்தப் பக்கங்களில் காணலாம்.  https://www.earthmentor.com/principles_of_balance/doctor_albrecht_papers/

2. ஹூன்சாஸ் மக்கள் பற்றியும் அவர்களுடைய நீண்ட ஆயுளும் நிரம்பிய ஆரோக்கியமும் நிறைந்த வாழ்வு பற்றிய ஒரு ருசிகரமான வலைத் தளக் கட்டுரையை இங்கே காணலாம்.  http://thepdi.com/hunza_health_secrets.htm

ஆசிரியர் குறிப்பு: திரு. ஆர். எஸ்.நாராயணன் தமிழ் வாசகர்களில் பலருக்கு நன்கு அறிமுகமானவர். தினமணி செய்தித்தாளில் செறிவான நெடிய பல மையப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விவசாயம், தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். மைய வேளாண்மை அமைச்சரகத்தின் ஒரு பிரிவில் 31 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தமிழக விவசாயம் பற்றிப் பேசும் ஊடக வெளியீடுகளில் இவர் ‘இயற்கை விஞ்ஞானி’ என்று அறியப்படுகிறார். இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள், நாடு காக்கும் நல்ல திட்டம், இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி போன்ற விவசாயம் தொடர்பான புத்தகங்களை எழுதியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்து அம்பாதுறையில் விவசாயியாக, எழுத்தாளராக,சூழல் மேம்பாட்டுக்கு உழைப்பவராக நன்மையைப் பரப்பியபடி வசித்து வருகிறார்.

One Comment »