மகரந்தம்

கம்போடியா: போராட்டத்தின் குரல்

cambodia_Sonando-beehive_Struggle_Censor_Freedom_Liberty_Voice_Independence_Khmer_Rouge_Oppression

கம்யூனிஸ்டுகளின் கையில் இன்னும் சிக்கி இருக்கும் கம்போடியா எப்படி இருக்கிறது? அதை கம்யூனிஸ்டுகளே சொன்னால்தான் இந்திய இடதுகளும், முற்போக்குகளும் நம்புவார்கள். அதுதான் என்ன பயன்? நம்பினாலென்ன, நம்பாவிட்டாலென்ன? இந்திய அரசியலில் இப்போது அடையாள அரசியலும், குண்டர் படை அரசியலும் தவிர, மக்களை கரையானை விட மொசமாக அரிக்கும் ஊழல்வாதிகளின் தலைமையில் இயங்கும் குறுந்தேசியம்தான் தலை தூக்கி இருக்கிறது. இதில் முற்போக்காவது, கம்யூனிசமாவது, எல்லாம் ஆடிக்காற்றில் பறக்கும் தூசு.

கம்போடியாவில் 30 ஆண்டுகளாகப் பதவியிலிருக்கும் கம்யூனிஸ்டு அரசு இன்னும் 50 ஆண்டுகள் கழித்துத் தனக்கும் பொருளாதாரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளும். அதுவரை மக்களை ஏதோ மூச்சு விட அனுமதிக்கிறோமே அதுவே பெரிய விஷயம் என்று சோவியத் அரசுகள் சொல்லிக் கொண்டிருந்ததையேதான் கம்போடிய அரசும் சொல்லப் போகிறது. யூரோப்பியக் காலனியக் கொடுமையிலிருந்து தப்பி அரக்கர்களான மார்க்ஸிய லெனினியக் க்மேர் ரூஜ்களிடம் அகப்பட்டு நாட்டில் மூன்றிலொரு பகுதி மக்கள் கொல்லப்பட்ட பின்னும் கம்போடியர்களுக்கு இன்னும் விடியவில்லை. பகலில்தான் வாங்கினார்கள், ஆனால் சூரியனையே இருட்டடிக்கும் திறன் மிக்க நிர்வாகம் மார்க்சிய லெனினியருடையது. அவர்க்ளுக்கு ஒளிதான் பிடிக்காது. கம்போடியர்கள் தொடர்ந்து இருளில் இல்லை, ஏனெனில் கொஞ்சம் உலக முதலியத்தின் சுரண்டலை கம்போடியக் கம்யூனிஸ்டுகள் தமக்குச் சாதகமானது என்று சீனக் கம்யூனிஸ்டுகள் கண்டு பிடித்த மாதிரியே கண்டு பிடித்திருக்கிறார்கள். பாட்டாளிகளை ஓரம் கட்டுவதில் உலக அரசியல் கருத்தியல் அனைத்தும் ஒரே வகைதான். குறுங்குழுவின் கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை ஒடுக்குவதிலும் எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா நாடுகளிலும் ஒரே சாரிதான்.

கம்போடியாவில் 30 வருடமாக இன்னும் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தில் ஒரு பகுதியை உலக முதலியம் சுரண்டுகிறது, அதற்குத் துணைபோகும் கம்யூனிஸ்டுகளில் ஒரு பகுதியினர் வளமாக வாழ்கின்றனர். இதரர்களுக்கு வளமும் இல்லை, பேச்சு சுதந்திரமும் இல்லை. அது குறித்து ஒரு கட்டுரை இங்கே. இது ஒரு தகவல் கட்டுரை, அலசி ஆய்ந்து முடிவு சொல்லும் கட்டுரை இல்லை. ஆனால் இதைத் தருவது உலக முதலியத்தின் துந்துபிகளில் ஒன்றான நியுயார்க் டைம்ஸ். அதனால் கொஞ்சம் மிளகு, உப்பு சேர்த்துக் கொண்டு படியுங்கள்.

http://www.nytimes.com/2014/03/14/world/asia/in-cambodia-voicing-the-struggle.html

oOo

திரைப்படம்: ஸ்காட்லாந்து அரசியல்

Scarlett Johansson Under the Skin

சில சமயம் விமர்சகர்கள் ரொம்பவே ஏமாந்து போகிறார்கள், அல்லது நம்மை ஏமாற்றுகிறார்கள்.

சினிமாவைப் பற்றி என்பதை விட அதன் பின்னணியில் என்னென்ன கிறுக்குத் தனங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். உலகெங்கும் பெண்கள் மீதான வன்முறை குறித்து ஏராளமான தகவல்களும், செய்திக் குறிப்புகளும், கடும் விமர்சனங்களும், பெண்களின் போராட்டங்களும் எழுந்துள்ள இந்தக் காலகட்டத்தில்தான் உலகெங்கும் பன்னாடுகளிலும் பெண்களுக்கெதிரான சட்டங்களும் அடக்கு முறையை நாடும் பழம்பெருமை இயக்கங்களும் தலையெடுத்திருக்கின்றன. இந்தக் கட்டத்தில் இப்படி ஒரு படம் ஏன் எடுக்கப்பட்டது என்பதைப் பேசலாம்.

‘அண்டர் த ஸ்கின்’ என்கிற இந்தப் படம் அமெரிக்க விமர்சகர்களிடம் அத்தனை மதிப்பு பெறவில்லை என்று கார்டியன் விமர்சகர் போகிற போக்கில் சொல்கிறார். இதுவோ இன்னும் அமெரிக்காவில் வெளியிடப்படுவதற்குத் தேதிகள் கூடக் குறிக்காத நிலை. விமர்சகர்கள் ஏன் கவனிக்கப் போகிறார்கள்?

இதை பிரிட்டனில் (குறிப்பாக ஸ்காட்லாண்டில் க்ளாஸ்கோ நகரில் ) எடுத்திருக்கிறார்கள். அதனாலும் ‘ஏ’ லிஸ்ட் என்று சொல்லப்படக் கூடிய ஹாலிவுட் முன்னணியில் உள்ள நட்சத்திரமான ஸ்கார்லெட் யோஹான்ஸொன் தனக்கு இயல்பாக வரக்கூடிய குணமான வேட்டையாடும் பெண்ணாக நடித்து க்ளாஸ்கோவின் வீதிகளில் உலா வருகிறாராம். போதாதா ஸ்காட்டியர்களுக்கு, புளகிக்க? அதுவும் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் ஏராளமான எழுத்தாளர்களும், எழுத்தர்களும் ஸ்காட்டியர்கள். அவர்களும்தான் என்ன செய்வார்கள். இருந்த கரிச் சுரங்கங்களை மார்கரெட் இரும்பு முட்டி தாச்சர் 80களிலேயே மூடு விழா நடத்தி விட்டார்- அவை இந்தியாவில் அப்போதெல்லாம் இருந்த மாதிரி அரசு நடத்திய சுரங்கங்கள் என்று என் நினைவு. தாச்சருக்குத்தான் அரசையே பெரும்வணிகம்தான் நடத்த வேண்டும் என்ற ‘நல்ல’ கனவு இருந்ததா, சுரங்கங்களில் தொழிலாளர் யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்தவுடன், அதுதான் சாக்கு என்று சுரங்கங்களையே மூடிவிட்டார். அதற்கப்புறம் ஸ்காட்லாண்ட் எனப்படும் பகுதி எக்கச் சக்கமாக இருட்டில் துன்பத்தில் மூழ்கியது, நகரங்கள் சீரழிந்தன, இளைஞர்கள் நடுவே போதை மருந்தும், விபச்சாரமும், இன்னும் என்னென்னவோ கோரங்களும் பரவின. பிறகு யு.கே யின் பொருளாதாரமே கோவிந்தா ஆக விருந்தபோது, லண்டனை உலகப் பெருமுதலாளிகள் கேள்வியற்றுப் பணம் முதலீடு செய்யத் திற்ந்து விட்டது பிரிட்டிஷ் அரசு. இன்றும் லண்டன் அப்படித்தான் இருக்கிறது என்று கேள்வி.

க்ளாஸ்கோ போன்ற இடங்கள் உலக வங்கிகளின் கூடாரங்களாக மாறின. இன்று ஸ்காட்லாண்டின் முக்கியத் தொழில் இப்படி பண வியாபாரம்தான் என நினைக்கிறேன். ஸ்காட்லாண்டில் விஸ்கி, பெட்ரோலியம், கொஞ்சம் துணி உற்பத்தி, கணனிப் பொறியியல் சம்பந்தப்பட்ட ஏற்றுமதிகள் என்று பல இன்னும் இருக்கின்றன. வடக்குக் கடலில் இருந்து எடுக்கும் எண்ணெய் வியாபாரம் இதன் முக்கிய விற்பனைப் பொருள்.

இதனாலோ என்னவோ ஸ்காட்டியர்கள் இங்கிலிஷ்காரர்களிடமிருந்து பிரிந்து தனி நாடாகலாம் என்று யோசிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவினை வெற்றி பெறுமா என்று சொல்ல முடியவில்லை, ஆனால் அதற்குக் கணிசமான ஆதரவு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் எதற்கய்யா என்றால், இந்தப் பின்னணியில் மனிதர்களை வேட்டையாடும் அயல் கிரகத்து ஜீவனாக ஸ்கார்லெட் யோஹான்ஸொன் க்ளாஸ்கோ நகரில் உலவுவது ஏன் பிரிட்டிஷ் விமர்சகர்களுக்குக் குதூகலத்தைக் கொணர்கிறது என்பதை விளக்க உதவுமோ!?

எதுவும் நடக்காத தேங்கிய நகரம் என்பது போல க்ளாஸ்கோ கொஞ்ச காலமாக இருக்கிறது. இத்தனைக்கும் அதொன்றும் சோப்ளாங்கி நகரம் அல்ல. நிறைய பல்கலை மாணவர்களும், இளைஞர்களும் உலாவும் நகரம்தான். ஆனாலும் லண்டனோடு ஒப்பிட முடியுமா என்ன? அதனால்தான் அயல் கிரகத்து வேட்டைக்கார ஜந்து க்ளாஸ்கோவைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்காகவாவது தேர்ந்தெடுக்கப்படுகிறதே என்று குதூகலம் போல இருக்கிறது. கொல்கத்தாவை இந்த ஜீவன் தேர்ந்தெடுத்திருந்தால் வங்காளிகள் நிச்சயம் புல்லரித்துப் போயிருப்பார்கள். ஏற்கனவே இருக்கிற ஒரு அன்னிய சக்தி அப்படி ஒரு வேட்டையாடும் சக்திதானே? வேறு யார், மஹா காலியைச் சொன்னேன். சிபிஎம், இஸ்லாமிஸ்டுகள் ஆகியோரைச் சொல்கிறேன் என்று நினைத்தீர்களானால் அது மஹா தப்பு.

கொல்கத்தாவும் இப்படி தொழில் பேட்டையாக உற்சாகமாக இருந்த நகரம், அதை முற்போக்குகளும், இந்திய அரசின் இயலாமையுமாகச் சேர்ந்து கூறு போட்டு தேங்கிய குட்டையாக்கிப் பல பத்தாண்டுகள் ஆயின. வங்காளிகளுக்கு இன்னும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இந்திய வாலுக்குத் தம் நகரமே தலைநகரமாக இருந்தது என்ற மயக்கம் போகவில்லை. ஆனால் இப்படி வீழ்ந்தோமே என்ற ஆதங்கம் நிறைய இருக்கிறது. அதனால் இப்படி ஒரு படத்தை அங்கு தயாரித்திருந்தால் அதை வரவேற்றிருப்பார்கள் என்று ஊகிக்கிறேன்.

ராட்டன் டொமேடோஸ் என்கிற பார்வையாளரின் விமர்சனங்களைத் தொகுக்கும் ஒரு தளத்தில் இதற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. அதன் மதிப்பீடு பற்றி இங்கு பார்க்கலாம்.
http://www.rottentomatoes.com/m/under_the_skin_2013/

கார்டியனின் விமர்சனத்தைப் பார்க்க வேண்டாமா? அது இங்கே.
http://www.theguardian.com/film/2014/mar/13/under-the-skin-scarlett-johansson-peter-bradshaw

oOo

பருத்தி ராஜாங்கம்: அடிமைத்தனமும் பேரரசும்

african-american-slaves-picking-cotton19ஆம் நூற்றாண்டின் முதலியம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டுதான் எழுப்பப்பட்டது. அதே போல அடிமை முறை என்பதே முதலியம் இல்லாமல் எழுந்திராது என்கிறார் வால்டர் ஜான்ஸன் என்னும் வரலாற்றாளர். இவர் அமெரிக்க வரலாற்றை அடிப்படியாகக் கொண்டு இந்த முடிவுக்கு வருகிறார். சமகாலத்தில் மார்க்ஸ் எங்கல்ஸ் போன்றாரும் இதே போன்ற முடிவுக்கு வந்திருந்தனர். அவர்கள் 18, 19ஆம் நூற்றாண்டின் யூரோப்பிய முதலியத்தை அடிப்படியாகக் கொண்டு அந்த முடிவுக்கு வந்திருந்தனர்.

வால்டர் ஜான்ஸனின் சமீபத்துப் புத்தகம் பற்றிய மதிப்புரை ஒன்றில் அமெரிக்க முதலியம் எப்படி தென் மாநிலங்களில் லட்சக்கணக்கான கருப்பர்களை அடித்து உதைத்து, வதைத்து, சிதைத்து பருத்தி, புகையிலை போன்ற பொருள்களை விளைத்து உலகெங்கும் ஏற்றுமதி செய்தது என்று விரிவாக, ஏராளமான விவரங்களுடன் விளக்குகிறார்.

இந்த அமெரிக்காதான் எவாஞ்சலிய கிருஸ்தவர்கள் நிரம்பிய நாடாக அன்றே இருந்தது. இன்றும் எவாஞ்சலியக் கிருஸ்தவம் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில்தான் வெள்ளை இனவெறியும், முதலியத்துக்குக் குருட்டுத்தனமான ஆதரவும் நிலவும் அரசியல் வன்முறையோடு நிலவுகிறது. அதே எவாஞ்சலியம்தான் இந்துக்களுக்குக் கருணை, அன்பு இதெல்லாம் என்னவென்று தெரியாது என்று இந்தியாவிலும், தமிழகத்திலும் கடும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. நிறைய தமிழ் அறிவு சீவிகளுடைய சமீபத்துப் புத்தகங்களும் இதே கருத்தைத்தான் பிரச்சாரம் செய்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

புத்தக மதிப்புரையை இங்கே காணலாம். இதில் வினோதம் என்ன? அமெரிக்காவில் இடது சாரியினர் அமெரிக்க எவாஞ்சலியத்தின் பொய் முகங்களைக் கிழித்துப் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இங்கு இந்திய இடதுசாரியினர் அதே எவாஞ்சலியத்துக்குப் பாதுகாவலராக அணி வகுக்கின்றனர்.

வரலாற்று முரண் என்று அவர்கள் அடிக்கடி உதிர்க்கும் ஒரு சொல் நினைவுக்கு வந்திருக்குமே இந்நேரம்?

http://www.thenation.com/article/178336/water-and-soil-grain-and-flesh

oOo

பிரான்சு: பாலினக் கோட்பாடு

France_Legalization_Same_Sex_Marriage_Protest_March_Family

பாலியல் கோட்பாடு என்ற துறையில் ஆய்வாளராக, போதகராகப் பெயர் பெற்ற அமெரிக்கர் ஜூடித் பட்லர். இவருடைய புத்தகங்களின் கருத்தியல் ஆதாரங்களாக லக்கான், ஃபூகோ ஆகிய ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்களைச் சொல்லலாம். அவருடைய ஒரு மையக் கருத்து. கோட்பாடு – பாலடையாளம் என்பதில் அனேகமாக எல்லாமே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டதுதான், உடற்கூறின் பங்களிப்பு அதில் மிகக் குறைவு என்பதே.

இது அந்த அளவில் ஒரு கோட்பாடு என்று பலராலும் கேட்கப்பட்டு ஏற்கப்படலாம் அல்லது விடப்படலாம். இந்தக் கோட்பாட்டை அவர் எழுதிச் சில பத்தாண்டுகள் ஆயின. ஆனால் சென்ற ஃபிப்ரவரி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான ஃப்ரெஞ்சு மக்கள் தெருக்களில் இந்தக் கோட்பாட்டை எதிர்த்து ஊர்வலம் போனார்களாம்.

அதோடு நிற்காமல், பாலியல் கோட்பாட்டையும், அதனடிப்படியில் அமைந்த பள்ளிப் பாடங்கள், பாடநூல்களையும் தடை செய்ய வேண்டுமெனவும் அப்புத்தகங்களை நூலகங்களில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனராம்.

அட ஃப்ரான்ஸ் ஒரே முற்போக்குப் பாசறையில்லையா என்று கேட்கும் நம்மவர்களுக்கு அது என்றுமே அப்படி ஒன்றும் முற்போக்குப் பாசறை அல்ல என்பது ஏன் தெரியாது என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது. இந்த பாஸ்டன் குளோப் செய்தி அறிக்கையில் ஓரிடத்தில் கூட இந்த ஃப்ரெஞ்சு எதிர்ப்பாளர்களை ‘ஃபாசிஸ்டுகள், குண்டர்கள், குற்றவாளிகள் என்றெல்லாம் சொல்லவில்லை என்பதை நம் ஆங்கிலமே தம் தாய்மொழி என்று கருதும் உயர்மட்டக் கூட்டம் கவனிப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் அதே உயர்மட்டக் கூட்டத்தின் எழுத்தாளர்கள் இதே போன்ற எதிர்ப்பைக் காட்டும் இந்துக்களை ஃபாசிஸ்டுகள், குற்றக் கும்பல் என்று துவங்கிப் பற்பல இழிவான முத்திரைகளை அவர்கள் மீது சுமத்தத் தவறுவதில்லை. ஏன் நியுயார்க் டைம்ஸும் கூட அப்படித்தான் செய்கிறது. ஃப்ரெஞ்சு மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தால் அது ஜனநாயகம், இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது வேறென்ன, ஃபாசிஸம்தான்.

அதல்லவா முற்போக்குப் பார்வை. டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரை இங்கே உள்ளது.

http://www.bostonglobe.com/ideas/2014/03/02/how-you-upset-french-gender-theory/1DzXUKcQxB01Hv6pN96gvJ/story.html

oOo

ஒசாமா பின் லாடன்: பாகிஸ்தானுக்கு என்ன தெரியும்

Quetta_Madrasa_pakistan_Afghanistan_Recruit_Osama_Bin_Laden_Al_Queda_Terrorism_Taliban_Bombs_Insurgency

நியுயார்க் டைம்ஸின் முட்டாள்தனத்துக்கு எல்லையே இல்லை. அதே போல அதன் வாசகர்களின் முட்டாள்தனத்துக்கும் எல்லையே இல்லை. ஜீரோ டார்க் தர்ட்டி திரைப்படம் எத்தனையோ பூடகமாகச் சொன்னாலும் எளிதாகவே செய்தி வெளிப்படுகிறது – பாகிஸ்தானின் அரசுக்கு பின் லாடன் அண்ட் கம்பெனி பற்றி எல்லாம் தெரியும், ஐ.எஸ்.ஐ தென்னாசியாவையே கலக்கிச் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் தெரியாதவர்களா அமெரிக்கர்கள்? உலக இஸ்லாமிசத்தின் கொடூர ஆக்கிரமிப்பு முயற்சிகளின் மையங்கள் சவுதி அரேபியாவின் வஹ்ஹாபிய இயக்கங்களும், பாகிஸ்தானின் உளவு அமைப்புகளின் கீழுள்ள மதராஸாவில் துவங்கும் வெறி இயக்கங்களும். இவை அனைத்தும் ஏழை பாழை மக்களை மத போதையேற்றி சாவுக்கு அனுப்புகிற மாபாதக அமைப்புகள். சவுதியின் பண முதலைகளும், பாகிஸ்தானின் பெருந்தன நிலச்சுவான் தாரர்களும் மேன்மேலும் கொழுத்துக் கொண்டிருக்கையில் பாட்டாளி முஸ்லிம்கள் பலி கடாவாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.

இங்கே நியுயார்க் டைம்ஸ் அமெரிக்கா ஏதோ வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத அப்பாவி என்று படம் காட்டுகிறது. என்னவொரு அற்பத்தனமான செய்தித் தாள் இது. இதற்கு ஈடு செய்தி அனைத்தையும் திரித்துப் பொய்யைப் பரப்புவதையே தம் தலையாய கடமையாகக் கொண்டிருக்கும் இந்திய ’முற்போக்கு’ப் பத்திரிகைகளும், இதர மத வெறிச் செய்தி அமைப்புகளும் மட்டுமே இருக்க முடியும்.

http://www.nytimes.com/2014/03/23/magazine/what-pakistan-knew-about-bin-laden.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.