kamagra paypal


முகப்பு » இயற்கை விவசாயம்

சாதனை மன்னர் கரும்பாழ்வார்

புளியங்குடி அந்தோணிசாமிக்கு நம்மாழ்வார் நினைவுப் பரிசாக, “கரும்பாழ்வார்” என்று பட்டம் வழங்கத்தகும். நான் அடிக்கடி குறிப்பிடும் விஷயம், தமிழ்நாட்டிலேயே இயற்கை விவசாயத்தில் நம்பர் ஒன் விவசாயி யார் என்றால் அந்தோணிசாமி என்பதுதான்.

கடந்த பத்தாண்டுகளில் அவர் பெற்ற விருதுகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் கவனித்தால், இந்தியாவிலேயே இவர்தான் முதல் நிலை இயற்கை விவசாயி என்று தயக்கமில்லாமல் கூறலாம்.

கரும்பில் சாதனை. கம்பில் சாதனை. நெல்லில் சாதனை. எலுமிச்சையில் சாதனை. நெல்லிக்காயில் சாதனை. மண்வளத்தில் சாதனை. இவர் காய்ச்சும் வெல்லத்தின் இனிப்பில் சாதனை.

admin-ajax.php

இவையெல்லாம் பொய்யல்ல. எல்லா துறையிலும் சான்றிதழ் ஆவணங்கள் உண்டு. இவர் தோட்டத்தைப் பார்ப்பவர்கள் மலைப்பதுண்டு. இப்படியும் ஒரு மனிதர் வாழ முடியுமா? கோமதிநாயகத்தைத் தன் குருவாகப் போற்றும் இந்தப் படிக்காத மேதை அந்தோணிசாமியை ஒரு அற்புத விஞ்ஞானி என்று சொல்ல வேண்டும்.

வேளாண்துறை விஞ்ஞானிகளின் யோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, கரும்பு நடவில் புதிய புதிய உத்திகளை இவர் கடைபிடித்து வருகிறார். ஒரு வயலில் சோதனையாக, 20 மறுதாம்பு செய்துள்ளார். சாதாரணமாக ரசாயன விவசாயத்தில் கரும்பை ஒரு முறைதான் மறுதாம்பு செய்ய முடியும். ஆனால் இவரோ 20 வருடங்களுக்கு முன் நடவு செய்த அதே கரும்பை அறுவடை செய்தபின் மறுதாம்பு – அதாவது வேரிலிருந்து தாய்க்கரும்பு அறுத்தபின்அதே தூரில் சிம்பு முளைவிடச் செய்து 21ஆம் ஆண்டில்கூட ஏக்கருக்கு 60 டன் விளைவிக்கிறார்.

சாதாரணமாகக் கரும்பைச் சாகுபடி செய்வோர், நெல்லுக்கு நீர் கட்டுவது போல் வயலில் தண்ணீர் தேக்குவார்கள். இது வீண் செலவு என்று நிருபித்த அந்தோணிசாமி, தான் கரும்பு சாகுபடி செய்யும் 60 ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம் போட்டுள்ள இந்த படிக்காத பட்டிக்காட்டு விஞ்ஞானி, ஒரு கிலோ சர்க்கரை எடுக்க 1800 லிட்டர் தண்ணீர் போதும் என்று புள்ளிவிவரம் தந்துவிட்டு, வேளாண்துறை யோசனைப்படி ரசாயனக் கரும்பு விவசாயி ஒரு கிலோ சர்க்கரைக்கு 22000 லிட்டர் தண்ணீர் செலவழிப்பதாகக் கூறும் இவர், இந்த முறையில் தண்ணீர் 8 சதவிகிதம் மட்டுமே போதும் என்கிறார்!  நீர்ச்சிக்கன வழிகாட்டியாக நிற்கும் இவரைப் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் பல விவசாயிகள் கரும்புப் பயிருக்குச் சொட்டு நீர் விட்டுவிட்டனர்.

மூன்றாவதாக, கரணை நடுவதிலும் புதுமை உண்டு.வேளாண்துறை விஞ்ஞானிகளின் சிபாரிசு ஒரு ஏக்கருக்கு 30000 கரணைகளை நடச் சொல்கிறார்கள். ஒரு கரணையில் இரண்டு பருக்கள் இருக்கும். இந்த முறையில் அதிகம் கிளை வெடிக்காது. சிம்புகள் குறைவாக வெடிக்கும் அளவில் நெருக்க நடவு. ஆனால் அந்தோணிசாமியோ, ஒரு ஏக்கருக்கு 10000 முதல் 15000 கரணை கள் மட்டுமே நடவு செய்து விதைச் செலவு மிச்சம் பிடிப்பது மட்டுமல்ல, இவர் செய்யும் இயற்கை விவசாயத்தில் வரிசையில் பார்க்கட்டு 5 முதல் 7 அடி, சில இடங்களில் 10 அடிக்கு ஒரு கரணை என்று நட்டு, அகலத்தில் சற்று நெருக்கம் கொடுத்து மொத்தத்தில் ஏக்கரில் ஒரே அளவு கரணை நடுவது இவர் சிறப்பு. இப்படி நாடுவதால் காற்றோட்டம் கிட்டுகிறது. நிறைய சிம்புக்கள் பெறுவதால் நிறைய கிளைக்கரும்புகள் விளைவித்து 60 முதல் 70 டன் விளைச்சல்.  நெருக்க நடவில் சராசரியாக 40 முதல் 50 டன் விளையும்.

இவர் கரும்புக்குச் செய்யும் பயிர், நேர்த்திச் சிறப்புமிக்கது. பல வயல்களில் பத்து மறுதாம்பு செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு நல்ல தொழுவுரம் 2 டன் வரை இட்டு ஒரு முறை உழவு. பார் இடைவெளியில் தக்கைப் பூண்டு விதைத்து 45 நாளில் அதை மடக்கி உழுதுவிட்டு சிறுபயறு விதைக்கிறார். 40 நாளில் வளர்ந்த பயறுப் பயிரையும் மடக்கி உழுது விடுகிறார். அதன்பின் கரும்பு வளர்ந்ததும் முற்றிய இலை காய்ந்து சோகையாகும். இப்படி காயும் சோகைகளைக் கரும்பிலிருந்து அகற்றி மூடாக்கு போடுகிறார். இவ்வாறு மூடாக்கு போட்டு கரும்பின் சிம்புகளில் குளிர்ச்சி ஏற்படுத்துகிறார். இதனால் மண்ணுக்கு அடியில் நுண்ணுயிரிகள் பெருகி மண்வளம் காப்பாற்றப்படுகிறது.

WP_20140309_11_22_05_Pro

இவர் விளைவிக்கும் கரும்பின் சராசரி எடை 2.5 கிலோ. ஐந்தாறு சிம்புகள் கிளைவிட்டு ஒரு தூரில் ஆறு கரும்பு வரை பார்க்கலாம். அறுவடை செய்த கரும்பை இவர் வெல்லச் சர்க்கரையாக மாற்றிவிடுகிறார். ஒரு கிலோ இயற்கை வெல்லச் சர்க்கரை ‘அண்டோணியோ”, என்று பிராண்ட் செய்து நேர்த்தியாகப் பாக் செய்து தமிழ்நாட்டின் எல்லா இயற்கை அங்காடிகளிலும் விற்கப்படுகிறது.

இவரது சாகுபடி நேர்த்தியைப் பார்த்தால் ‘கரும்பாழ்வார்’ என்று நாம் இவரை அழைப்பதில் ஒரு தவறும் இல்லை என்பது புலனாகும்.

உணமையைச் சொல்வதானால் இவர் புகழ் எலுமிச்சையில் தொடங்கி கரும்பில் முடிந்துள்ளது. முதல்தடவை இவரைச் சந்தித்தபோது எலுமிச்சை, நெல்லித் தோட்டங்களைப் பார்த்தேன். இரண்டாவது தடவைதான் கிழக்குப் பகுதியில் கரும்பும், நெல்லும், காய்கறிகளையும் கண்டேன். மேற்கில் எலுமிச்சையை 60 ஏக்கரில் அற்புதமாக சாகுபடி செய்து வருவதை மறுப்பதற்கில்லை. எலுமிச்சை, நெல்லியை கவனித்தபோது கூடவே கோமதிநாயகமும் இருந்தார். அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சி. அவருடைய எலுமிச்சை, நெல்லித் தோட்டத்தில் பச்சைப்பசேல் என்று புற்கள் மண்டியிருந்தன. கோமாதாக்களை வளர்த்து வரும் கோமதிநாயகத்துக்கு அவற்றைப் பார்த்ததும் பசுக்களுக்கு அறுத்துப் போடலாம் என்று ஆர்வமிகுதியால் தான் ஒரு ஆளை அனுப்பி இந்தப் புற்களை அறுத்துப் போகிறேன் என்றார். ‘ஐயா, நான் உங்களுக்கு எலுமிச்சை தருகிறேன், நெல்லிக்காய் தருகிறேன் ஆனால் புல்லை மட்டும் கேட்காதீர்கள்’ என்று கூறிய இந்த விஞ்ஞானி அதற்கு விளக்கமும் வழங்கினார். புற்கள் எலுமிச்சைக்கு பசுமை மூடாக்கு என்றும், புல் உள்ள இடத்தில் மழை பெய்யும் போது மண்ணில் இறங்கும் நீர் எலுமிச்சை, நெல்லிக்கு உதவும் என்பதுடன், புற்களை அகற்றிவிட்டு அந்த மண்ணை எடைபோட்டுப் பார்த்தால் அம்மண்ணில் அதிகம் காற்று இருப்பதால் எடைகுறைவாக இருக்கும் என்றார் இவர். புல் முளைக்காத இடத்தில் 1 சதுர அடி இடத்தில் மண்ணை நோண்டி எடுத்து எடைபோட்டதில் அம்மண் 30 கிலோ இருந்தது என்றும், புல் உள்ள இடத்தில் 1 சதுர அடி 25 கிலோ இருந்தது என்றும் கூறிய இந்த விஞ்ஞானி கோடையிலும் பனியிலும் இந்தப்புற்கள் தானாகவே மடிந்து கரிமத்தை உருவாக்கி அதன் கீழுள்ள எலுமிச்சை வேருக்குக் கரிம நீரை வழங்குவதாகக் கூறுகிறார். வசந்தம் வரும்போது மீண்டும் புற்கள் உயிர் பெறுவதாகக் கூறும் இவர் புல்லுக்கு வாழ்வு தந்து நெல்லிக்கும், எலுமிச்சைக்கும் உயிர்மண் வழங்கும் அதிசயத்தை எங்குமே பார்க்க முடியாது.

இப்படிப்பட்ட உயிர்மண்ணில் இவர் விளைவிக்கும் எலுமிச்சையையும் நெல்லியையும் காண்போம். ‘விந்தையிலும் விந்தை இதுதான்’ என்பார்கள். இவர் சாகுபடி செய்யும் எலுமிச்சம்பழம் பெரிய அளவிலும், பளபளப்பிலும் இருக்கிறது. 60% சாறு. சிட்ரிக் அமில அளவு 11 சதவீதம். நெல்லியில் செவ்வரி – மனிதக் கண்களில் காணப்படும் சிவப்பு வரிகள் – இருக்கும். இவரது நெல்லிக்காயை கேரளத்து வியாபாரிகள் தோட்டத்துக்கு வந்து நல்ல விலை வழங்கிக் கொள்முதல். பல இடங்களில் காய்களின் கனம் தாங்காமல் எலுமிச்சையும் நெல்லியும் கிளை முறிந்து காணப்படும். எனினும் இவரது கிழக்குத் தோட்டத்தில் சுற்றிப் பனைமரங்கள். காற்றுத் தடுப்பாகச் செயல்படுகிறது. மேற்குத் தோட்டத்திலும் காற்றுத் தடுப்பு மரங்கள் இருந்தும் ஒடியும் கிளைகளைத் தவிர்ப்பதற்கில்லை.

அந்தோணிசாமி விவசாயத்தில் சகலகலாவல்லவர். பாரம்பரிய நெல் ஆற்காடு கிச்சடி சாகுபடி செய்கிறார். இவரது இயற்கை அரிசி அங்காடியில் கிலோ ரூ70/ வரை விலைபோகிறது. அந்தக் காலத்தில் இவர் இந்திய விவசாய நிறுவனத்திற்காக ஒட்டுக்கம்பு தாய்விதைகளை வழங்கியுள்ளார். ஒட்டுக்கம்பு, வாழை, தென்னை, காய்கறி என்று பல சாகுபடி செய்யும் இவர் எலுமிச்சைக்கும், நெல்லிக்கும் ஒட்டுக்கட்டித் தானும் சாகுபடி செய்து வேண்டுவோர்க்கு விலைக்குத் தருவதுண்டு.

இவர் பெற்றுள்ள சான்றிதழ்கள், விருதுகள் பற்றிய குறிப்புகளுடன் முடிவுக்கு வருவோம்.

 1. இவருடைய இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு APEDA  சான்றிதழ் உண்டு. உலக அளவில் சான்றிதழ் இயற்கை விளைபொருள்களுக்கு வழங்கும் இந்த நிறுவன முகவரி:

Indian Society for Certification for Organic Products (ISCOP)

Rasi Buildings, 162/163, Ponnaiya rAjApuram, Coimbatore – 641001

2. எலுமிச்சையில் C  வைட்டமின் நிறைந்த புதிய கண்டுபிடிப்புக்காக அனில் குப்தா அகமதாபாத்தின் National Innovation Foundation and Traditional Knowledge  விருது 2005 பெற்றிருக்கிறார். 2007 ல் மறுபடியும் இயற்கை வழி எலுமிச்சையில் காளாண் நோய் எதிர்ப்பு சக்தி கட்டுப்பாட்டுக்கும் புதிய கண்டுபிடிப்பாளர் விருது.

3. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இவருக்கு வேளாண்மைச் செம்மல் விருது வழங்கியுள்ளது.

4. இவரை அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது டெல்லிக்கு அழைத்து கவுரவித்ததுடன் அகமதாபாத் இன்னொவேஷன் விருதையும் இவர் அப்துல்கலாம் கரத்திலிருந்து பெற்றுள்ளார்.

5. இவர் தயாரித்து வரும் வெல்லம்/ வெல்லச்சக்கரையில் பூச்சி மருந்து விஷம் அனுமதிக்கப்படும் அளவை விடக் குறைவாக இருப்பதையும் சர்க்கரைச் சத்து 88 சதவீதமும் சுக்ரோஸ் 80 சதவீதம் உள்ளதையும் பரிசோதனை மூலம் நிரூபித்த சான்றிதழை Central Food Research Institute (Government of India) வழங்கியுள்ளது.

6. இவரது விளைபொருள் எல்லாவற்றையும் பரிசோதித்து A.M.முருகப்பச் செட்டியார் ஆய்வு நிறுவனம், தரமணியும் சான்றிதழ் வழங்கியுள்ளது.

7. மைய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் MCRC/ IITM நிகழ்த்திய மண் பரிசோதனைகள் (ஆறு இடங்களில்) முடிவுப்படி இவர் தோட்டமண்ணின் அமிலாகார நிலை சராசரி 6.5 சதவீதம். எல்லா நுண்ணூட்டமும், பேரூட்டமும் இயல்பாக உள்ளதைக் காட்டும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். இவர் சாதனைகளின் மன்னர். இன்னமும் இயற்கை விவசாயத்தில் சாதிக்க விரும்பும் கரும்பாழ்வார் அந்தோணிசாமியை வாழ்த்துவோமாக.

3 Comments »

 • krish said:

  useful information

  # 23 March 2014 at 12:46 am
 • Siva said:

  கரும்பாழ்வார் அந்தோணிசாமியை வாழ்த்துவதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியும்?

  # 24 March 2014 at 2:00 am
 • Kailash said:

  Pls give his contact details and also let us know in which shops his sugar is being sold

  # 26 March 2014 at 3:44 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.