kamagra paypal


முகப்பு » அறிவியல், பொருளாதாரம்

அமெரிக்காவில் கதிரொளி ஆற்றலின் பிரும்மாண்டங்கள்

கலிபோர்னியா -நெவாடா ஆகிய மாநிலங்களுக்கு இடையே ஆன நெடுஞ்சாலையில் பயணிக்கும் பல கார்களும், ஆவலாக நின்று பார்த்து பிரமிக்கும்படி நிற்கிறது ஐவன்பா (Ivanpah) மின்சார உற்பத்தி நிலையம். அவ்வழியே பயணம் செய்யும் பெரும்பாலோர் ‘இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது’ என்ற கேள்வியை எழுப்பாமல் செல்வதில்லை. வெளிர் நீல வானின் நடுவே தக தகவென மின்னிகொண்டு, இரண்டாவது சூரியனோ என்று ஆச்சரியத்தில் நம்மை மூழ்கடிக்கும் படி உயர்ந்து நிற்கின்றன மூன்று கோபுரங்கள். கீழே நூறாயிரக்கணக்கான ஹீலியோஸ்டேடுகள் (Heliostats) எனப்படும் சிறு அளவிலான கண்ணாடிகள்.

இவை பகல் வேலையில் சூரியன் இருக்கும் திசையை நோக்கித் திரும்பி,சூரிய கிரணங்களை உள்வாங்கி அதை குறிப்பிட்ட இலக்கிக்கிற்கு அனுப்பும் ஆற்றல் கொண்டவை. இவற்றை கணினிகள் மூலமும் கட்டுப்படுத்தி இயக்க முடியும். தனித்தனியே நாற்பத்தி ஆறு அடுக்குகளைக் கொண்டுள்ள சுமார் 459 அடி உயரமுள்ள இந்த மூன்று கோபுரங்களும், கீழே சுற்றிலும் அமைக்கபட்டிருக்கும் பலநூறாயிரக்கணக்கான ஹீலியோஸ்டேடுகள் உள்வாங்கி அனுப்பும் சூரிய வெளிச்சத்தை வெப்ப சக்தியாக மாற்றுகின்றன. இந்த கோபுரங்களின் மேல் அமைக்கபட்டிருக்கும் கொதிகலன்களில் இருக்கும் தண்ணீர் ஃபாரன்ஹீட்  அளவுகோலில் 1000 டிகிரி வரை செல்லும் இந்த வெப்ப சக்தியினால் சூடேற்றப்பட்டு, நீராவியாக மாற்றப்படுகிறது. இந்த மூன்று கோபுரங்களின் மேலே இருக்கும் கொதிகலன்களில் நிரப்புவதற்கு நிலத்தடி நீரே பயன்படுத்தபடுகிறது. இந்த நீராவியினால் சுழற்றப்படும் நீராவி விசையாழிகள் மின்சாரத்தை உருவாக்குகின்றன. இந்த 46 அடுக்குகளிலும் மேலும் பல மின்சார உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Nevada_Arizona_Energy_Google_Power_Source_Ivanpah Solar Electric Generating System

இவ்வாறு சூடாக்கப்படும் தண்ணீரை மீண்டும் குளிர வைக்க காற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இம்மாதிரி வறண்ட நிலப்பரப்புகளில் தண்ணீரும் அதிகம் செலவு செய்யப்படுவதில்லை. மேலும் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி அனுப்பும் இந்த ஹீலியோஸ்டேடுகள் நாள் முழுவதும் சூரிய ஒளியைப் பெருமளவு உள்வாங்கி அதை இந்த கோபுரங்களில் படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகளின் மேல் மாசு படியுமேயானால் இதன் பயன்பாடு பாதிக்கப்படும். எனவே அவ்வப்போது இக்கண்ணாடிகளைத் துடைத்து சுத்தம் செய்வதற்கு ரோபோ போன்ற இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

அக்டோபர் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது சோதனைக் கட்ட நிலையில் இருக்கும் 3500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த மின்சார உற்பத்தி நிலையம், சரியாக இயங்குமேயானால், உருவாக்கபடும் மின்சாரமானது இந்த வருட முதல் பாதியில் கலிபோர்னியா மாநிலம் முழுவதுமாக உபயோகப்படுத்தப்படும். இவ்வாறாக சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் மிகப்பெரிய நிலையமாக ஐவன்பா விளங்கும். இதனால் சுமார் 377 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு கிட்டத்தட்ட கலிபோர்னியாவின் 140,000 வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். மேலும் சுமார் 2100 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் பெரும்பான்மை பங்குகளை என் ஆர் ஜி சோலார் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனமான கூகிளும் முக்கி பங்குதாரராக விளங்குகிறது. இதன் கட்டுமான பணிகளில் பெக்டெல் பவர் (Bechtel Power) நிறுவனமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதே போன்று பெரிய அளவில் விளங்கும் மற்ற சில மின் உற்பத்தி நிலையங்களில் அபுதாபியில் உள்ள ஷாம்ஸ்1, ஸ்பெய்னில் உள்ள ஆண்டசால் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதை போன்ற ராட்சத அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் பல பகுதிகளில் முளைக்கத் தொடங்கியுள்ளன. குத்து மதிப்பாக இதே போன்று 232 மின் உற்பத்தி நிலையங்கள் பலதரப்பட்ட கட்டங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. எடிசன் எலக்ட்ரிக் யுடிலிடி என்ற மின்சார அமைப்பின்படி இதில் பெரும்பான்மையானவை தென்மேற்கு மாநிலங்களிலும், இன்னும் சொல்லப் போனால் கலிபோர்னியா மாநிலத்திலுமே வடிவமைக்கப்படுகின்றன. இதைத்தான் பசிபிக் காஸ் அண்ட் எலெக்ட்ரிக் என்ற மின்சார கொள்முதல் நிறுவனத்தின் துணைத் தலைவரான திரு.பொங்க்வன் (Fongwan) புதுப்பிக்கப்படக்கூடிய மின்சார (renewable energy) உற்பத்தியின் அணிவகுப்பாக பார்க்கிறார்.

இதே போன்ற ராட்சத அளவிலான அமைப்புகளை கிழக்கு மாநிலங்களில் கட்ட முடியுமா என்றால், அது அவ்வளவு எளிதில்லை என்றே கூற முடியும். ஒருவேளை இந்த அளவில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே சாத்தியம். இதற்கு மேற்கில் உள்ளது போன்ற பரந்த நிலப்பரப்பின்மையும், தங்கு தடையின்றி கிடைக்கும் சூரிய வெளிச்சமின்மையும் காரணங்களாக கூறலாம்.மேலும் மேற்கில் இம்மாதிரி அமைப்புகளைக் கட்டத் தேவையான நிதி உதவியும், இன்ன பிற சலுகைகளும் கிடைப்பது அரிதாக இல்லை என்பதும் உண்மையே . ஐவன்பா போன்ற அமைப்புகளில் உபயோகிக்கப்படும் ஃபோடோ வோல்டாயிக் செல்ஸ் (Photo voltaic cells) என்பவை நாம் சாதாரணமாக சிறிய அளவில் வீட்டுக்கூரைகளின் மேல் பயன்படுத்தும் வகையைச் சார்ந்தவை. மிக எளிதில் கிடைக்கக் கூடிய இவை, விலை மலிவாகவும் கிடைப்பதனால் இதைப் போன்ற பெரிய அமைப்புகளை உருவாக்குவதும் சாத்தியமாகிறது. இந்த காரணங்களினால் கிழக்கில் இம்மாதிரி அமைப்புகளை சிறிய அளவிலும், நகரங்களுக்கு மிக அருகிலும் ஏற்படுத்தத் திட்டங்கள் உருவாகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் இதற்குகந்த வகையில் இருக்கும் நிலப்பரப்புகளை கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளன. உதாரணத்திற்கு சார்லட், நார்த் காரலினாவைத் தலைமை இடமாகக் கொண்ட டியூக் எனெர்ஜி (Duke Energy) என்ற நிறுவனம் சுமார் 30 மெகாவாட் அளவு மின்னுற்பத்தி செய்யத் திட்டத்தை உருவாக்கி, நார்த் காரலினா மாநிலத்தில் இந்த அமைப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இதனால் சுமார் 6000 வீடுகளுக்கு மின்சக்தி விநியோகிக்கப்படும் என்றும் கணக்கிடப்படுகிறது.

போடோவோல்டாயிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் ஐவன்பா , டோபாஸ் சோலார் ஃபார்ம் (Topaz Solar Farm) போன்ற பெரிய அளவிலான மின்னுற்பத்தி மையங்கள் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு தயாரிக்கப்படும் மின்னுற்பத்திக்கு இணையான அளவில் இயங்கக் கூடியவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. 2012ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சார அளவில், 37% நிலக்கரி மூலமும் 30% இயற்கை எரிவாயு கொண்டும், 3.5% காற்றின் மூலமும் கிடைத்தன. இதில் சூரிய ஒளியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டது வெறும் 0.1% மட்டுமே. இந்த எண்களைப் பார்க்கும் பொழுது நாம் இருப்பது வெறும் ஆரம்ப நிலை மட்டுமே என்பது தெளிவாகிறது.

Environment_Greenhouse_Emissions_Steam_Water_Ivanpah Solar Electric Generating System

ஐவன்பா போன்ற அமைப்புகளுக்கு இன்றிருக்கும் நிலையை அடைவது அவ்வளவு எளிதாக இல்லை. மொஹாவே போன்ற வறண்ட பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் இந்த கட்டிடங்களில் இருந்தும், ஹீலியோஸ்டேடுகளில் இருந்தும் உருவாகும் வெப்பக் காற்று ஒரு மிக பெரிய அச்சுறுத்தலாகவே விளங்குகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் இதனை எதிர்க்கின்றனர். இதை தவிர்க்க ஐவன்பாவும் பல முயற்சிகளை எடுத்தது. உதாரணத்திற்கு இங்கிருக்கும் ஒரு வகை ஆமைகள் மற்றும் சில வகை உயிரினங்களை இடம்பெயர்த்து பாதுகாப்பான சூழ்நிலைகளில் வளர்க்க உத்திகள் செய்யப்பட்டன. இதற்காகவே இந்த நிறுவனம் 7000 ஏக்கர் நிலப்பரப்பை சுமார் $11.4 மில்லியன் செலவு செய்து உருவாக்கி பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் இது போன்ற இயற்கை வளங்களைக் கொண்டு மின்சார உற்பத்தி செய்வதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் ஆதரிக்காமலும் இல்லை. ஏனெனில் இந்த வகைத் தொழில் நுட்பத்தினால் கரியமிலவாயு போன்ற நச்சு பொருள்கள் காற்றில் கலப்பது பல மடங்கு தவிர்க்கப்பட்டு, இங்குள்ள தாவர வகைகள் பாதிக்கப்படாமல் உயிர்வாழ ஏதுவாகிறது. மேலும் நீராவியைக் குளிரவைப்பதற்கு தண்ணீரை தவிர்த்து காற்றையே உபயோகப்படுத்துவதால் தண்ணீர் விரயமாவதும் தவிர்க்கப்படுகிறது.

இவ்வகைத் தொழில் நுட்பத்திற்கான விதை 2002 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலம், அங்கே உருவாக்கப்படும் மின்சாரத்தில் 20% இயற்கை வளங்களைக் கொண்டே அமையவேண்டும் என்று சட்டம் வகுத்தது. இதை அடுத்து 2020 அம் ஆண்டிற்குள் இவை 33% ஆக உயர்த்தப்பட திட்டங்கள் உள்ளன. கலிபோர்னியா, வர்ஜினியா,மேரிலாந்து உட்பட முப்பது மாநிலங்கள், இவ்வழியில் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனை அடுத்துப் பல நிறுவனங்கள் இது போன்ற அமைப்புகளை வடிவமைக்க ஆர்வம் கொண்டன. இதற்கு மேலும் ஊக்கம் தரும் வகையில் இதுபோன்ற இயற்கை வளங்களைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் பல திட்டங்களுக்கு மத்திய முதலீட்டு வரிக்கடன் (Federal Investment Tax credit), மேலும் எட்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன் விளைவாக அரிசோனா, நெவாடா போன்ற இன்னும் சில மாநிலங்களில் இது போன்ற அமைப்புகள் உருவாகி இருப்பதை நாம் காண்கிறோம். இதனால் உருவாக்கப்படும் மின்சார உற்பத்தியின் அளவும் குறிப்பிட்ட அளவில் உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு பசிபிக் காஸ் அண்ட் எலெக்ட்ரிக்(Pacific Gas and Electric) நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் தன்னுடைய மொத்த உற்பத்தியில் 11% இது போன்ற இயற்கை சக்தியின் வளங்களை கொண்டே உருவாக்கியுள்ளது.

இது போன்ற அமைப்புகளுக்கு உகந்த நிலப்பரப்பைக் கண்டறிய, நில நிர்வாக பணியகம் (The Bureau of Land Management) முதலில் பெரிய திட்டங்கள் ஏதும் வகுக்கவில்லை. நிறுவனங்கள் சுட்டிக்காட்டிய இடங்களை மட்டுமே கருத்தில் கொண்டன. இப்பொழுது நிலங்களை கண்டறிய திட்டங்கள் சீர்ப்படுத்தப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு இவ்வாறாக அறியப்பட்டவை தென்மேற்கு மாநிலங்களில் மொத்தமாக 285000 ஏக்கர் கொண்ட 17 நிலங்கள். தற்பொழுது இவை 19 ஆக உயர்ந்து மொத்தம் 300000 ஏக்கர் நிலப்பரப்பாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வகைத் தொழில் நுட்பத்தில் மேலும் என்ன முன்னேற்றங்கள் உருவாகின்றன என்றும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னவென்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

One Comment »

  • Krishnan said:

    There is one more by product possible with this technology. Use salt water or drainage water to make the vapour, and then after cooling get good quality water. In Tamil Nadu coastal area this can be tried which will help to produce enviornmental friendly electricity as well as drinking water.

    # 10 March 2014 at 11:17 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.