kamagra paypal


முகப்பு » மகரந்தம்

மகரந்தம்

loveஆதலினால் காதல் செய்வீர்

நாம் காதலிக்கும் போது காதல் குறித்து சிந்தனை செய்யும் போது நம் சிந்தனை ஓட்டமே மாறுபட்டுவிடுகிறதாம். வெறும் காமம் குறித்த நினைப்பல்ல, காதல் குறித்த நினைப்பு. ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் யென்ஸ் ஃபாஸ்டர், காய் எப்ஸ்டூட், ஆமினா ஓஸேல்செல் (Jens Forster, Kai Epstude, and Amina Ozelsel) ஆகிய் மூன்று ஆய்வாளர்களின் ஆராய்ச்சி காட்டும் முடிவு இது. காதல் குறித்து சிந்திக்கும் போது சிந்தனையோட்டம் விரிவுத்தன்மை அடைகிறதாம்.  புத்தாக்கத்தன்மை அடைகிறதாம். மாறாக காமம் குறித்து சிந்திக்கும் போது சிந்தனை குறுகிய தன்மை அடைகிறதாம். பகுத்தாயும் போக்கு மேலோங்குகிறதாம். இதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆய்வாளர்கள் காதல் என்பது தொலைநோக்குடன் சிந்திப்பதாகவும் காமம் உடனடித்தேவை பூர்த்தியாகவும் அமைவதால் இத்தகைய சிந்தனையோட்டங்களை உருவாக்கலாம் என்கிறார்கள். மேலதிக விவரங்களுக்கு இந்த ஸைண்டிஃபிக் அமெரிக்கன் சுட்டியைச் சுண்டவும்.


61509varmusஜாஸ் இசையும், புற்றுநோயும்: புற்றுநோய் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற ஹரல்ட் வா(ர்)மஸ் (Harold Varmus) என்ற விஞ்ஞானியும், ஜாஸ் இசைக் கலைஞரான ஜேகப் வா(ர்)மஸ் (Jacob Varmus) என்ற அவர் மகனும் இணைந்து, புற்றுநோயைப் பற்றிய ஒரு எளிய அறிமுகம் தரும் நிகழ்ச்சியைத் தந்திருக்கிறார்கள்.  செல்கள் பெருகிப் பரவுவதைப் பற்றி அப்பா விளக்க, பின்னணியில் அவர் மகன் ஜாஸ் வாசித்திருக்கிறார். “Cells are like tiny orchestras, and they contain several instruments, Cells use their instruments to create the harmonies of life.” என்று சொல்கிறார் ஜேகப் வா(ர்)மஸ். இதைக் குறித்ததொரு சிறு கட்டுரையை இங்கே படிக்கலாம். இசையைப் பின்னணியாகவோ, முன்னணியாகவோ கொண்டு இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடக்கின்றன.

காடுகளற்ற பூமி!
091006-mass-extinction-fungi-forests_bigபுவி சூடேற்றம், மற்றும் காடுகள் அழிப்பு குறித்து தீவிரமாக விவாதித்து வரும் இத்தருணத்தில் வெளியாகியிருக்கும் ஒரு கண்டுபிடிப்பு இது. 250 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஒரு எரிமலை வெடிப்பினால் ஒட்டுமொத்த பூமியும் தன் காடு வளத்தையும், அதன் விளைவாக பெருமளவிலான உயிரினங்களை இழந்து நின்றதை குறித்தும் பேசுகிறது. எல்லாம் சரி, இந்தப் பெரும் அழிவிற்குப் பிறகு மிஞ்சியவை எவை? வேறென்ன, சில தாவரங்களும், செத்த மரங்களும், அவற்றை உண்டு ஜீவிக்கும் கிருமிகளும் தான்.

அடுத்து என்ன? – சாதனை புரியும் மலாவி இளைஞர்

“அடுத்து என்ன?” என்ற இந்த கேள்வி மனித குலத்தின்question-mark மிகப்பெரிய வரம். தங்கள் வாழ்வு நிலையை மேம்படுத்திக் கொள்ள, இருவேறு சமூகங்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சீர்படுத்த, இந்த ஒற்றை கேள்வி பல விடைகளை அளித்திருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள். புதிய வாழ்க்கை முறைகள் மனித குலத்திற்கு வரலாறெங்கும் மகத்தான பாய்ச்சலை அளித்திருக்கிறது. வறுமையாலும், மோசமான வாழ்வு நிலையாலும் உழலும் மலாவி நாட்டில் ஒரு இளைஞனின் தன்முனைப்பும், கண்டுபிடிப்பும், ஒரு சமூகத்திற்கே மகத்தானதொரு தருணத்தை அளித்திருப்பதை இங்கே படித்தறியலாம்.

இதே கேள்வி, தொழில்நுட்ப ரீதியாக மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது. புத்தாடை அணிய விரும்பாத மனிதர் எத்தனை பேர்? ஆடைகளை வாங்குவதும் அணிவதும்தான் எத்தனை மகிழ்வு தரும் செயல்! இந்தத் தயார் ஆடைகளை வாங்க நாம் நிறைய பொறுமை காட்ட வேண்டுமே? ஆனால் ஆடைகளை அணிந்து பார்ப்பதைச் சுலபமாக்கும் ஒரு முறை மட்டும் இருந்தால் இந்தத் தீபாவளிக்குத் துணி வாங்குவதை எத்தனை இலேசாக்கி விடலாம்?  [சரிதான், பில் வரும்போது எல்லாம் ஒரே கனமாகி விடாதா என்பீர்கள். அதற்கு ஏதும் விடை எங்களிடம் இல்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் யாராவது அரசியல்வாதியைப் பிடியுங்கள் உங்கள் பில்லை அவர் பார்த்துக் கொள்வார்!]

இந்தத் தொழில் நுட்பம் துணி வாங்குவதை எவ்வளவு சுலபமாக்குகிறது பாருங்கள். இது குறித்த ஒளிப்படம் ஒன்று கீழே :

வரலாற்றுக் கசப்பை கடக்க முயலும் அரசியல்

armenian_genocide320-ஆம் நூற்றாண்டின் முதல் இனஅழிப்பு என ஆர்மீனியர்கள் மீது துருக்கி அரசு நடத்திய்  வன்முறை கலந்த பெரும் இனப் படுகொலை கருதப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆட்டம் ஈகோயானின் “அராரத்”(Ararat) திரைப்படம்  இந்த இருண்ட நிகழ்வின் வரலாற்றின் மிக அருமையான பதிவு.  ஆர்மீனியர்கள் ஒரு நூறாண்டுகளாகத் துருக்கியரிடம் இந்த இனப் படுகொலைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளனர்.  துருக்கியரோ, அரசோ அந்தப் படுகொலை நடந்ததை மறுத்தே வந்துள்ளன.

ஆனால், இரு நாடுகளுக்கும்(துருக்கி,ஆர்மீனியா) உள்ள தற்போதைய அரசியல் தேவைகள், வரலாற்றின் இந்த உறைந்த பகுதியை மீள்நோக்க செய்கின்றன. இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்ட சமீபத்தைய ஒப்பந்தத்தின் படி, வணிகம் போன்ற துறை சார்ந்த ஒப்பந்தங்கள் மட்டுமல்லாது, வரலாற்று ரீதியான ஒப்பந்தம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இதன்படி இரு நாடுகளும் இந்த இன அழிப்பு குறித்துப் புதிய கருத்துப் பரிமாற்றத்தைத் துவக்கவுள்ளன. இது குறித்த இரு கட்டுரைகள்.  ஒன்று, கடந்த காலத்தை நினைவு கொள்ள வேண்டி ஆர்மீனியாவை இறைஞ்சுகிறது. மற்றொன்று, எதிர்காலத்தில் இரு நாட்டு உறவும் பயணிக்ககூடிய திசையைக் குறித்துப் பேசுகிறது.

Comments are closed.