kamagra paypal


முகப்பு » அனுபவம்

பயணத்தின் அடுத்தகட்டம்

இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின்  நிறைந்தது தான்  என்ன? ஒன்றுமில்லை தான்.  எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை. எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன? அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.

உதாரணமாகச் சொல்லப் போனால், ராஜாஜி இந்த தேசத்தின் வரலாற்றில் கணிசமான பங்காற்றியவர். அவர் அது பற்றி எழுதியவரில்லை. தமிழ் சமூகத்தின் வரலாற்றையே கிளறி வைத்துவிட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். இவர்களும் கூட தம் சுயசரிதத்தை எழுதியவர்கள் இல்லை. காந்தியும் நேருவும் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்தி தேசத்தின்  வரலாறு ஆகி மறைந்துவிட்டார்கள். இப்படி இருக்க,  தமிழ் எழுத்துலகில் கூட ஒரு பொருட்டாக இல்லாத நான் என் வாழ்க்கையை எழுதப் புகுந்தது ஏதோ சுயபிரமையில் ஆழ்ந்து செருக்கு மிகுந்த காரியமாகப் படும். அது ஒரு பார்வை. அத்தகைய செருக்கு மிகுந்த எழுத்துக்கள்தாம் பெரும்பாலும் இங்கு தமிழ் சமூகத்தில் உண்டு. அவர்கள் தமக்கு உகந்த ஒரு சித்திரத்தை தாமே உருவாக்கித் தமிழ் சமூகத்துக்குத் தந்து செல்கிறார்கள். எது தன்னைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று தானே எழுதிக் குவித்துவிடும் காரியங்கள் நடக்கின்றன. பெரிய பெரிய காரியங்கள் படைத்தவர்கள், தேசத்தின் போக்கையே நிர்ணயித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றி எழுதாவிட்டாலும் எழுதுபவர்கள் ஒரு மாதிரியான பக்தி நிறைந்தவர்கள். அவர்கள் எழுத்தில் வெட்டலும் கூட்டலும் நிறைந்திருக்கும். அவர்கள் வரம் வேண்டி நிற்பவர்கள். அல்லது வரங்கள் பல பெற்றதன் நன்றிக்கடன் செலுத்துபவர்கள். இன்றைய மாறிய சமூக அரசியல் சூழலில் இம்மாதிரி நிறைய நடந்தேறி வருகின்றன. பக்தியின் பிறழ்ச்சி.

பக்தி இயக்கம் தோன்றியதே தமிழ் நாட்டில் தானே. உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெத்திலையும் எல்லாம் கண்ணனாகவே கண்ட ஒரு ஆழ்வார், “சிக்கென உன்னைப் பிடித்தேன், இனி எங்கு எழுந்தருளுவதே”  என்று பரவசப்படும் சமயக்குரவர், “அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ” என்று இன்னும் ஒரு சமயக் குரவர், இவர்கள் எல்லாம் காட்டிய வழிதான். அது தான் இன்றும் தொடர்கிறது ஆனாலும் அது இத்தகைய அகோர ரூபத்தில் குணம் மாறி தாண்டவமாடமாடுவது எல்லாம் அர்த்தமிழந்து போனதையே சாட்சியப்படுத்துகின்றன. இந்த நூற்றாண்டு பக்தியின் சொரூபம் இது. அன்றைய பக்தியைச் சாடும் இன்றைய பக்தர்கள். இது ஒரு பக்கம்.

நான் சொல்லவந்தது இன்னொரு பக்கம். அது ஒரு துருவ கோடி என்றால், இது மற்றொரு துருவ கோடி. க.நா.சு. சொல்வார்,  ”யாரும் சிறு கதை எழுத அவர்கள் வாழ்க்கையில் சில அனுபவங்கள் கட்டாயம் இருக்கும்,” என்று அவர் எழுதியிருக்கிறார். எங்கோ நினைவில்லை. இப்படி அவர் நிறைய ஆங்காங்கே உதிர்த்துச் செல்வார், வெகு சாதாரணமாக, அவையெல்லாம் பொருள் பொதிந்தவை.

அதையே கொஞ்சம் நீட்டிச் சொல்வதென்றால், எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த சாதாரணனுடைய வாழ்க்கையிலும் தான், சொல்வதற்கு என்று நிறையவே இருக்கும். அது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்துவம் மிக்கதாகவும் இருக்கும். பிரபலங்களின் அரசியல் வாழ்க்கையை விட ஒரு சாதாரணனின் வாழ்கையில் காணும் மனித உறவுகள், அதன் நெகிழ்ச்சிகள் உண்மையானவை, உன்னதமானவை. வாழ்க்கையை இனிமையாக்குபவை.

ve.sa

இது எழுதத் தொடங்கிய பின் தான், கடந்த வாழ்க்கையை ஒவ்வொன்றாக நினைவு கொள்ளத் தொடங்கிய பின் தான் தெரியத் தொடங்கியது.  என்ன தான் இருக்கிறது எழுத?, அப்படி என்ன ஒரு அவதார வாழ்க்கை வாழ்ந்து விட்டோம்? என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் தம்மை அவதார புருஷர்களாக எண்ணி தாமே எழுதியும், எழுதுவித்தும் நடமாடுபவர்களிடையே வாழும் காலத்தில், அகல் பதிப்பக பஷீரும், தமிழ் சிஃபி அண்ணா கண்ணனும் போயும் போயும் என்னை எழுதத் தூண்டியதும் சரி, மேடை கிடைக்கிறது, கேட்கிறார்கள் எழுதுவோமே, என்னதான் சாதாரணமான் வாழ்க்கையே ஆன போதிலும், க.நா.சு. சொன்னது போல, யாருடைய வாழ்க்கையில் எழுதுவதற்கு விஷயங்கள், மனிதர்கள், சம்பவங்கள் இருக்கத் தான் செய்கின்றன என்று தெரிந்தது. ஏதோ எந்த முனைப்பும் இன்றி எழுதிச் சென்றேன். நடந்ததை நினைவில் கொண்டு நினைவில் வந்தவாறே. இயல்பாக எழுதிச் சென்றதில் சொல்ல கொஞ்சம் இருந்திருக்கிறது. அதிலிருந்து தனித்து பின் அட்டையில் பிரதானப்படுத்திச் சொல்ல என்று பஷீரை எடுக்கத் தூண்டியிருக்கிறது. அதுவே ஒரு விதத்தில் இந்த சுய வரலாற்றின் ஆதார சுருதி என்றும் சொல்லலாம்..

”என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சி உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும் பலவீனங்களையும் மீறி. அவர்கள் உன்னதமான மனிதர்கள் தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும் வெளியிலும், அவர்களது சில பலங்களையும் மீறி, அவர்கள் இழிந்த மனிதர்கள் தான்.

எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாசாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில், அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.”

முதல் பாகம் எழுதத் தொடங்கும் போதே இதெல்லாம் தானாகவே எழுதிச் சென்றது என்று தான் சொல்ல வேண்டும். முதல் சில பக்கங்களிலேயே இது திட்டமிடாமலேயே தன் இயல்பில் தானாகவே எழுதிக்கொண்டுவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. நினைவில் வந்ததையெல்லாம் எழுதுகிறோம். நினைவுக்கு வந்த ஒழுங்கில், வரிசையில். முதல் பாகம் அச்சிட்டு வெளிவந்ததைப் பார்த்தால், அட்டையின் பின் பக்கத்தில் இந்த வாசகங்கள். தன்னையே எழுதிக்கொண்டது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

“உங்கள் சுய சரிதையை எழுதுங்கள்” என்று முதலில் அண்ணாகண்ணனும் பஷீரும் சொன்ன போது கொஞ்சம் அலட்சியமாகவே, என்ன இருக்கு எழுத? என்று நினைத்த போதிலும், பின்னர் எழுத தொடங்கியதும், அவ்வப்போது நினைவில் எழுந்ததை எழுதி வரும்போது, எந்த கட்டத்திலும் எந்த வயதிலும், எந்த இடத்திலும் வாழ்க்கை எனக்கு  வாழத் தகுதியான ஒன்றாகவே இருந்ததாகதான் எண்ணுகிறேன். அந்த அனுபவங்கள் எதாக இருந்தாலும் ஏமாற்றமோ, ஆச்சரியமோ, துன்பமோ சந்தோஷமோ எல்லாமே, அததற்குரிய மன நெகிழ்வைத் தருவனவாகவே இருந்தன. பாட்டியின் அன்பும், மாமாவின் கரிசனமும், உடலையும் மனத்தையும் வாட்டி வருத்தும் வறுமையையும் மீறி  எந்த பிரதி பலனையும் எதிர்பாராது, உறவுகளுடன் கொண்ட தன் சக்திக்கு மீறிய பாசம்

இந்த பாசமும், உறவுகளின் நெருக்கமும், தான் இன்னமும் தொடர்கின்றன. அது பாட்டியோ மாமாவோ இல்லாமல் இருக்கலாம் அது 1935 தொடக்கம். அன்று தொடங்கிய மனதுக்கு இதமும் இனிமையுமான நினைவுகள் ஹிராகுட் என்று, ராஜா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி, அவன் தாயும் தங்கைகளும், ரோத்தக்கிலிருந்து வீட்டை விட்டும் அண்ணனைப் பார்க்க ரயிலேறி நாலைந்து இடங்களில் வண்டி மாறி, கிடைத்ததைச் சாப்பிட்டு புர்லா வந்து கதவைத் தட்டிய அந்தச் சிறுமி, சோப்ராவின் தங்கை, சீனிவாசன் என்று நீளும். எத்தனை சம்பவங்கள், விஜயலட்சுமி, அபிஜீத் சாக்ஸேனா, நீனா, வையெல்லாம் கடந்து தஞ்சை பிரகாஷ் வரை நீளும். ஜெயந்தன் வரைக்கும் கூடத்தான்.எனக்குத் தெரிந்தவரை எந்த கழகத்துடனும் அனுதாபம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரியாரிடம் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை பக்தி என்றே சொல்லவேண்டும். ஆனால் என்னுடனான அவரது சினேக பந்தத்திற்கு அதெல்லாம் ஒரு தடையாக இருந்ததில்லை. மறந்து விடுவார். அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது என்கிறமாதிரி. இவ்வளவும் ஒருவனை வெறுப்பதற்கு பாப்பான் என்ற விவரம் போதும் என்னும் இரண்டு தலைமுறை தமிழகச் சமூகச் சூழலில் அவர் சிக்கியதில்லை. ஜெயந்தனின் இந்த சினேகம் மிகப் பெரிய விஷயம் . அந்த வரலாறு பூராவும் சொல்லியாக வேண்டும். அந்த சினேகங்கள், நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள் எல்லாம் திரும்ப என் நினைவுகளில் ஓடும். அது ஒரு சுகமான அனுபவம். சாதாரண என் வாழ்க்கைக்கு இனிமை தந்தவர்கள்.  என்னால் ஆவதென்ன? இவர்கள் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. பம்பாயிலிருந்து தில்லி வரும் ஃப்ராண்டியர் மெயிலில குளிரில் படுத்து உறக்கத்திலிருக்கும் எனக்கு எதிர் சீட்டில் இருக்கும் யாரோ அன்னிய பெண்மணி தன்னிடமிருந்த ஒரு போர்வையை தூக்கத்திலிருந்த எனக்குப் போர்த்தியது என்ன எதிர்பார்த்து?  ராஜஸ்தானிலிருந்து வந்து ஆக்ராவில் வண்டியேறி சென்னைக்குப் போகும் ஒரு குடும்பம், அவர்களில் ஒரு மூத்த ஸ்திரீ, ஆச்சரியத்தில்  என்னைப் பார்த்து  சந்தோஷத்துடன் முகம் மலர்ந்து ”அட நீங்களா?” என்று தான் கூச்சலே இட்டாள். அவளை பத்து நாட்களுக்கு முன் அதே வண்டியில் சென்னையிலிருந்து தில்லி செல்லும் பயணத்தில் பார்த்தேன். அப்போது நட்பு பாராட்டி, என்னோடு தம் உணவைப் பகிர்ந்து கொண்ட குடும்பத்தினள் அவள். என்னிடமிருந்து அவள் பெற்றது எதுவும் இல்லை. மீண்டும் சந்தித்த சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது, எதை எதிர்பார்த்து?

இதெல்லாம் தான் என் வாழ்க்கை. அதற்கு அர்த்தம் தரும் கணங்கள். இந்த பழைய நினைவுகள் அவ்வப்போது மனதை வருடிச் செல்லும் போது மனத்திரையில் காட்சி தரும்போது ஒரு மெல்லிய இசை, மந்திர ஸ்தாயியில்,விளம்ப காலத்தில் இழையோடும்.  இந்த நினைவுகளை காற்றோடு கரைந்து விடாது நான் பதிவு செய்வது  இந்த இதமான வருடல்களை இந்த எழுத்து இருக்கும் வரையாவது வாழ வைக்கும் என்  ஆசையில் தான்.

வைத்திய நாத சிவனும், தீக்ஷிதரும், தியாகய்யரும் பாடிக் கேட்கும் அனுபவம் எப்படி இருந்திருக்கும்? யாருக்குத் தெரியும்? மைலாப்பூர்  கௌரி அம்மாள் தன் யௌவன காலத்தில் கோயில் உற்சவத்தில்  நடனமாடும் காட்சி எப்படி இருந்திருக்கும்? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. காற்றில் கரைந்தது கரைந்தது தானே. என் நினைவுகளின் இனிமையை, என் அனுபவங்களின் சிலிர்ப்பை எழுதியாவது வைக்கலாமே. எனக்கு இவற்றை அளித்தவர்களுக்கு நான் காட்டும் நன்றி உணர்வு தான் இது.

அன்போடு பழகிய மூத்த உறவினர்களின் புகைப்படங்களைப் பார்ப்பது போல. 1947 மதுரை கிழக்குச் சித்திரை வீதியின் மனித நடமாட்டத்தை புகைப்படத்தில் பார்ப்பது போல. அதைப் பார்த்ததும் மனதில் ஒரு கிளர்ச்சி. ஒரு சோக உணர்வின் இழையோடுமில்லையா? கிட்டப்பாவின் “எவரனி” டேப்பில் கேட்பது போல.

எழுத்தில் நான் சொல்ல முடியும். ஆனால் அந்த எழுத்து அந்த நினைவுகளின் போது என் மனத்திரையில் ஓடும் காட்சிகளையும் உணர்வுகளையும் கொண்டு வருமா? அவை எனக்குள் சிறைப்பட்டவை.  அந்த புகைப்படங்கள் இருந்தால் அந்தப் பழைய வண்டியூர் தெப்பக்குளத்தைப் பார்ப்பது போல. இன்று அது உயிர் இழந்த, இழக்க வைக்கப்பட்ட ஒன்று. நினைவுகளின் சுவட்டில் முதல் பாகம் வெளியிடப்பட்ட போதாவது, உடையாளூரின் கோவில் தெருக்கள், என் மாமா, பெற்றோர் புகைப் படங்கள் கிடைத்தன. ஆனால் ஹிராகுட் வாழ்க்கையைக் காட்சிப் படுத்த, உறவாடிய நண்பர்கள் யாருடைய புகைப்படங்களும் இல்லை. அந்நாட்களில் இப்போது போல, புகைப் படம் என்பது எல்லோருக்கும் எப்போதும் சுலபமாக கைவசப்படும் ஒன்றல்ல. 1952-53 ல் புர்லா நண்பர்கள் வெளியூரில் சுற்றிய போது எடுத்த படங்கள் இருந்தன. எங்கள் அலுவலக அதிகாரி லாமெக் பிலாய்க்கு மாற்றலாகிச் சென்ற போது எடுத்த க்ரூப் போட்டோ எனக்கு நினைவிலிருக்கிறது. அதில் மிருணால் இருப்பான். அது எதுவும் எங்கே போயிற்றோ. எனக்கு இவையெல்லாம் மிகப் பெரிய இழப்புக்கள். எண்ணும் போதே ஒரு சோகம் கப்பும் இழப்புக்கள்.

இருப்பது மெல்ல மெல்ல மங்கி மறைந்து வரும் நினைவுகள். அந்நினைவுகள் தரும் இப்பதிவுகள். இவை ஓரளவுக்கு அந்நாளைய வாழ்க்கையை, மனிதர்களை, பேணிய வாழ்க்கை மதிப்புகளை, ஒரு வேளை சொல்லலாம். ஆனால் வாழ்ந்த உணர்வுகள். மனத்திலோடும் காட்சிகள்…..? அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் இந்த நினைவுகள் வல்லமை இணையத்தில் அவ்வப்போது எழுதப்பட்டு வரும் போது, நான் பேசும் ஹிராகுட், புர்லா பற்றியும் அந்நாளில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றியும் அறிந்த அன்பர் எங்கிருந்தோ வந்து அவ்வப்போது தன் மனப்பதிவுகளையும் சொல்லி வந்தார். அவை எனக்கு அளித்த சந்தோஷங்கள், எதிர்பாராது வந்தவை தான். இதோ அதில் ஒன்று.

இன்னம்பூரான்
08 10 2011

இன்னம்பூரான் wrote on 8 October, 2011, 19:54

கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு முன் இது விஷயமாக, நான் கட்டுரை ஆசிரியருக்கு, வேறு ஒரு தளத்தில் எழுதியது:
*
அன்புள்ள திரு.வெ.சா. அவர்களுக்கு,
அன்றொரு நாள் ஒரிஸ்ஸா பாலசுப்ரமண்யம் வந்திருந்தார். மகிழ்ச்சியுடன் இருவரும் ஒரிஸ்ஸாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தோம். இயற்கையின் மடியில் தூங்கி வடியும் அழகிய  பெண்குழந்தையல்லவா, அவள் ?  நான் 80-களில் ஒரிஸ்ஸாவில் பணி புரிந்தேன். ஸீதாகாந்த் மஹோபாத்ரா  அண்டைவீடு.  நினைத்தால் வரத்து போக்கு.  திரு.வெங்கட் ராமன்,  திருமதி .லீலா  வெங்கட் ராமன் ( அவர் தந்தை திரு கிருஷ்ணசாமியும்   நண்பர், ஆசான்), சுந்தரராஜன் (ஐஏஎஸ்), ஹபீப்அஹ்மத்   மீனாட்டி மிஸ்ரா [கலை உணர்வு: என்னுடன்  தமிழில் பேசினார், பந்தநல்லூரில்  குருகுலவாசம் பற்றி சொன்னார்.  கண்வெட்டு எப்படி என்று கலைஉணர்வுடன் அடித்துக் காண்பித்து என்னையும் என் மனைவியையும் அசத்தினார்.] ஆகியோர்  நட்பு.  கொரபேட் குக்கிராமத்திலிருந்து மயூர்பஞ்ச் இடிந்த அரண்மனைவரை அத்துபடி. சிமிலிபால் கோர் ஏரியாவில் அசந்தர்ப்பமான களிறு நேர்காணல், கைரி புலிக்குட்டியுடன் ஓடி விளையாட்டு, பீத்தர் கணிகா ராஜநாகம், முதலை.சம்பல்பூர் கரடி, பூரி ஜெகன்னாத் நபகளேபரில் குஷி, சாக்ஷிகோபாலில்தாருப்ரம்மன் தரிசனம். ஃபூல்பானி முதுகுடி விருந்து. சொல்லி மாளாது .போங்கள். சொல்வதில்  எனக்கு சந்தோஷம்.  ஒரு காசு கொடுத்து பாடச்சொன்னா, பத்துக்காசு கொடுத்து நிறுத்தச் சொல்லணும். நாடோடி சொன்னமாதிரி, ‘இதுவும்ஒரு ப்ருகிருதி’. கேட்பதில் மகிழ்ச்சி என்றீர்கள். அதான்.
நீங்கள் ஒரிஸ்ஸாவில் இருந்தது 50களில்? அப்போது நான் சென்னைக்கேணியில் தவளை.


இன்னம்பூர் பாடல் பெற்ற ஸ்தலம்; கஜப்ரிஷ்ட விமானம்    பெருமாள்  ஶ்ரீனிவாசர் நாவல்பாக்கத்தில் புலன் பெயர்ந்து  இருந்தாராம், சிலகாலம். கும்பகோணத்திலிருந்து  ஸ்வாமி மலை ரோட்டில் 3 மைல்கல், தள்ளி. நம்மூர்  இல்லை. நான் அந்த ஊர்   என்  இயர்பெயர்: ஸெளந்தரராஜன்.  ஒரு வார்த்தைகேட்டா, பத்து எழுதறேன்   சுருக்கி எழுதறான் ன்னு பேரு வேறே.

நான் கேள்வி  கேட்கவே  இல்லையே. ‘உருப்படவைப்பது சாத்தியமேஎன்று  காமன்பாட்டு பாடினேன்.  தமிழ் நாடு அந்த வகையில் இயங்காததால், பொருள் வளம், கல்வி,  திறன்,  ஆகியவற்றில்  குறைந்த அளவே  உருப்பட்டிருக்கிறது.  மற்றவர்கள் எழுதிய  கருத்துக்களையும் படித்தேன்   உங்கள் கருத்துக்கள்  தெளிவாக இருந்தன, எனக்கு. என் ஆதங்கம் என்ன எனில், கலை உணர்வு அனிச்சமலர் போல.தொட்டாச்சிணுங்கி. சொரணை என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள். It is more than aesthetics. It is more than sensitivity. It carries within itself the Saraswathi of ப்ரக்ஞை. நானும் மற்ற நாடுகளிலும், ஏன் மும்பை, டில்லி, கொல்கத்தாவில் காணப்படும் கலை ப்ரக்ஞையை  சென்னையில்  பார்க்க இயலவில்லை.  குறிப்பாக,  இங்கிலாந்து  கலைத்துறை விஷயங்கள்  பற்றி, குடும்ப ஈடுபாட்டினால்  தெரியும்.  நமது  பிரச்னை  இது தான். கலையும்,  அரசியலுக்கும், வணிகத்துக்கும் கைப்பொம்மையாக  இயங்கத் தொடங்கிவிட்டது.  ஒரு சின்ன உதாரணம்:  சாலியமங்கலத்தில் பாகவதமேளா நடக்கிறது.  உலகளவில்  ஒரளவு புகழப்படுகிறது.  அரசு இனி பார்க்காதது போல் பாசாங்கு  செய்யமுடியாதுவிருது  கொடுத்தார்கள்.  யாருக்கு?  நாதஸ்வர  வித்வானுக்கு மட்டும்!  அவர் கம்பீர நாட்டை ஜோராத்தான் வாசித்தார். அதுவா பாயிண்ட்?  ஏதோ பாகவத மேளா நிழலாட்டம் போல. இங்கு  சிலப்பதிகாரம்  எப்படி தழைக்கும்?

இதுவே ஜாஸ்தி, மன்னிக்கணும்.


அன்புடன்,
*
இன்னம்பூரான்
08 10 2011

எங்காவது ஒரு ஸஹ்ருதயர் எனக்குக் கிடைக்கமாட்டாரா என்ன? இதோ ஒருவர் இன்னம்பூரார்

வெங்கட் சாமிநாதன்/14.2.2014

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.