kamagra paypal


முகப்பு » பயணக்கட்டுரை

நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள் – 3

இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். இரண்டாம் பகுதியை இங்கே படிக்கலாம்.

அனைத்துலக உல்லாசப் பயணிகளையும் நியூசிலாந்துக்கு ஈர்ப்பது இங்குள்ள புவியியல் அதிசயங்களே. Geological நியூசிலாந்து தோன்றியதே புவியியல் அற்புத நிகழ்ச்சியின் விளைவால் என அறிய வேண்டும். பல மிலியன் ஆண்டுகளுக்கு முன் பூமியின் அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் அசைந்து நகர்ந்தமையால், பூமியின் மேற்பரப்பில் பல மாற்றங்கள் விளைந்தன. பூமியின் அடியில் பாறைகள் உருகி எரிமலைகளாக வெளியில் கக்கின. அந்த அடுக்கடுக்கான சாம்பல் மலைகளையே நியூசிலாந்து எங்கிலும் காண்கிறோம். கற்பாறைமலைகள் மிகக் குறைவே.

image001

நியூசிலாந்தின் வடதீவில் இருக்கும் ‘ரொற்றுவா’(Rotrua) மாவட்டம் இன்றும் எரிமலைகளின் செயல்பாடுகளுக்கு இருப்பிடமாக உள்ளது. வெலிங்டன் நகரைத் தாண்டி ரொற்றுவா செல்லும் வழியெல்லாம் பச்சைப்பசேல் எனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள்; பண்ணை வீடுகள்; ஆட்டுமந்தைகள்; பால்பண்ணைகள். அடர்ந்த காடுகள். வழியில் ஆங்காங்கே பயணியரின் வசதிக்காகச் சாலையோரப் பூங்காக்கள் உள்ளன. சாலையோரப் பூங்காக்கள் அனைத்திலும் கழிப்பறை வசதி உள்ளது. இதனை ‘லூ’(Loo) என்கின்றனர். அதனருகிலேயே கழிவுகளைப் போடும் பாதுகாப்பான குப்பைத் தொட்டியும் உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியானாலும் திறந்த வெளியில் அசிங்கம் செய்வதோ குப்பை போடுவதோ இங்கு அறவே இல்லை.

விடியற்காலையில் வெலிங்டனை விட்டுப் புறப்பட்ட நாங்கள் காலை 11மணியளவில் ‘தெளபோ’(Taupo) என்னும் ஏரியை அடைந்தோம். இது நியூசிலாந்தின் மிகப்பெரிய ஏரி. 240 சதுரமைல் பரப்பு உள்ளது. 25மைல் நீளமானது. ஏறக்குறைய சிங்கப்பூரின் பரப்பளவைக் கொண்டது. பார்ப்பதற்குக் கடல் போலக் காட்சியளிக்கின்றது. மிக அழகான சூழலைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாகவும் அமைதியாகவும் தோற்றம் அளிக்கும் இந்த ‘தெளபோ’ ஏரி , நீரால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் எரிமலை என்று அறிகிறோம். இந்த எரிமலை கடைசியாக 1810ல் வெடித்துச் சிதறியது. இதன் பாதிப்புச் சீனாவின் வெப்பநிலையிலும் மாற்றம் விளைவித்ததாம். அப்பொழுது தோன்றியதுதான் இந்த ஏரி.

இந்த ஏரியின் தென்கரையில் மும்மூர்த்திகளைப்போல மூன்று எரிமலைகள் உள்ளன. அவை ’ருவாபெகு’(Rua Pehu), ‘தொங்கரியரோ’(Tongariro), ‘நங்கரொசொ’(Nagarohoe) என்பன. இவை பனிபடர்ந்த எரிம்லைகள். ஆனால் இவற்ரின் அடிவாரம் புல்பூண்டற்ற பாலைவனம். இவற்றின் அருகில் செல்லும் நெடுஞ்சாலைக்குப் ‘பாலைவனச் சாலை’ (Desert Road) என்று பெயர் வழங்குகிறது. ‘ருவாபெகு’(Rua pehu) 1996-ல் குமுறியது. அதிக அழிவை விளைவிக்காமல் புகையையும் புழுதியையும் மட்டும் கக்கி அடங்கியது. இந்த மலைத்தொடரில் ஃவக்கப்பாப்பா(Whakkapapa), ‘துரோவா’ (Turova), ‘துகினொ’(‘Thukino ) என்னும் மலைச்சாரல்களில் பனிச்சறுக்கு விளையாட்டு மைதானங்களுள்ளன. வசந்த காலம் முழுவதும் இங்கு பனிபடர்ந்து இருக்கும். குவியும் பனியைத் ‘தூற்றுவான்’(Blower) கொண்டு சமதளம் ஆக்குகிறார்கள். மழையால் களிமண்பூமி சேறாவதுபோல் இங்குப் பனிச்சேறு கண்டேன். கண்கொள்ளாக் காட்சி.

நண்பகல் ‘ரொற்றுவா’ வை அடைந்தோம். ரொற்றுவாவை நெருங்க நெருங்க கந்தகமணம் மூக்கைத் தொளைத்தது. ரொற்றுவாவுக்குக் ‘கந்தகநகர்’ (Sulphar City) என்றொரு பட்டப் பெயரும் உண்டு. இந்த நெடியை அழுகிய முட்டையின் மணத்துக்கு இணையாகக் கூறுவர். நீண்டநேரம் மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சீக்கிரம் பழகிப்போய்விடும். செல்லும் வழியெல்லாம் ஆங்காங்கே கந்தகமணத்துடன் பூமியிலிருந்து புகை பொத்துக் கொண்டு வருவதைக் காணலாம். நிலத்தின் அடியிலிருந்து வரும் இந்த வெப்பமான வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ரொற்றுவாவில் வாழும் மக்களிடமும் கந்தக நெடி வீசும் எனத் ’தமாஷ்’ செய்வதுண்டு. உள்ளூர் மக்களும் அதை நகைச்சுவையோடு ஏற்றுக் கொள்வர்.

ரொற்றுவா மவுரிகளுக்கு முக்கியமான ஒரு நகரம். மவுரிகள் இன்றும் அங்கு பெரும்பான்மையராக வாழ்ந்து வருகின்றனர். உலகின் பிறநாடுகளிலிருந்து மவுரிகளின் கலாச்சாரத்தைக் காணப் பல்லாயிரம் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

நாங்கள் முதலில் ‘வக்கவரேவரேவா’ (Whakarewarewa) என்ற இடத்திற்குச் சென்றோம். ஹவாய்க்கித் தீவிலிருந்து எட்டுத்தோணிகளில் புறப்பட்ட மவுரிகளில், ‘அரவா’ (Arawa) என்னும் பெயருடைய தோணியில் வந்த மவுரிகள் இப்பகுதியில் குடியேறிப் பெருகினர். மவுரிகள் அனைவரும் கலப்பினத்தராகிப் பண்பாட்டு மாற்றம் எய்தி, நகர்களுக்குக் குடியேறிவிட்டதால், உல்லாசப் பயணிகள், மவுரியரின் பண்டைய வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொள்ள, ‘வக்கரேவரேவா’வில் மவுரியரின் ‘மாதிரி கிராமம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 150- 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மவுரியின் வாழ்க்கையை அங்குக் கண்டு அறிந்து கொள்ள முடியும். நுழைவுச் சீட்டு வாங்கி உள்ளே சென்றவுடன் அனைவரையும் வரவேற்பு அறையில் அமர்த்தி ஒரு மவுரிப்பெண் அழகான ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்று மவுரியின் வாழ்க்கையை விளக்குகின்றாள்.

image007மவுரியின் கிராமம் அல்லது குடியிருப்பு ‘பா’(Pa) எனப்படும். ‘பா’ பெரும்பாலும் குன்றின் உச்சியில் இருக்கும். அங்கிருந்து அடிவாரத்தில் உள்ளோர் நடமாட்டத்தைக் காணும்படியாக இருக்கும். ‘பா’வைச் சுற்றிலும் வேலி போடப்பட்டு இருக்கும். அதைச்சுற்றி அகழி வெட்டப்பட்டிருக்கும். பகைவர் நடமாட்டத்தை அறிய உயர்ந்த பரணும் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும். மவுரியின் குடிசைக்கு,’வரே’(Whare) என்று பெயர். ‘வரே’ தாழ்ந்த , உயரம் குறிந்த வாயில் உள்ளதாக இருக்கும். சமையல் திறந்த வெளியில்தான் நடக்கும். சட்டி, பானை போன்ற பாண்டங்கள் பயன்பாட்டில் இல்லை. நெருப்பில் காய்ந்த கற்குவியல்தான் அடுப்பு, சமையல்பாத்திரம் எல்லாம். குடியிருப்பில் உள்ளோர் அனைவருக்கும் பொதுவாகவே உணவு சமைக்கப்படும். வக்கரேவரெவாவில் உள்ள மாதிரி கிராமத்திலும் பெரிய உணவு விடுதிகளிலும் உல்லாசப்பயணிகளின் மகிழ்ச்சிக்காக இத்தகைய உணவு சமைத்து (சுட்டு) உண்ணுவது மவுரிகளால், பொழுதுபோக்குக் கேளிக்கையாக நடத்தப்பட்டு வருகின்றது.

உணவைச் சேமித்து வைக்கப்படும் வீட்டுக்குப் ‘பதகா’(Patka) என்று பெயர். இது நான்கு பெரிய தூண்களுக்குமேல் நான்கு அல்லது ஐந்தடி உயரத்தில் எலி முதலியனவற்றிற்கு எட்டாதவாறு அமைந்திருக்கும்.

image010‘பா’ வின் நடுவில், தலைவனின் வீட்டுக்கு அருகில் ‘மராய்’ (Marae) எனப் பெயர் உடைய இல்லம் அமைந்திருக்கும். கலை உணர்ச்சியுடன் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பெரிய இல்லம், மவுரி சமூகப் பண்பாட்டு அமைப்பில் மிகப் புனிதமானதும் முக்கியமானதுமாகும். ஐரோப்பியர் வருகைக்கு முன் ‘மராய்’ மவுரிகள் அனைவரும் நாள்தோறும் கூடி முடிவெடுத்துச் செயல்படும் சமூக மையமாகும்(Community Centre). மராய் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் நெடிய சடங்குகள், இந்தக்கட்டிட அமைப்பு எத்துணைப் புனிதமும் முக்கியமும் வாய்ந்தது என்பதைக் காட்டும். பலருடன் கலந்து பேசி, நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே மராய் கட்டுவதற்கு உரிய இடம் தேர்வு செய்யப்படும். இதில் புரோகிதனுக்குப் பெரும் பங்கு உண்டு. மராய் வடக்குப் பார்த்த வாயிலை உடையதாக அமைக்கப்படும். மராய் கட்டுவதற்குத் தேவையான மரங்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுப்பர். மரங்களை வெட்டுவதற்கு முன்னும் மராய் கட்டும்போதும் ‘கராக்கி’ (Karaki) என்னும் மந்திரப்பாடல்களைப் பாடுவர்.

பழங்காலத்தில் மராயிக்கு அடிக்கல் நாட்டுவது நரபலியோடு கூடிய சடங்காக இருந்தது. கிராமத்தில் செல்வாக்குள்ள குடும்பத்து இளைஞன் ஒருவன், அவன் மவுரித்தலைவனுடைய மகனாகக் கூட இருக்கலாம், -பலியிடப்படுவான். அவனுடைய இருதயத்தை எடுத்துச் சமைத்து, அதாவது, நெருப்பில் சுட்டு, புரோகிதன் தின்பான். அதன்பின், முறைப்படி பலசடங்குகளைச் செய்வான். பலியிடப்பட்ட இளைஞனின் பெருமை, புகழ் , செல்வாக்கு என்பன்வற்றிற்கேற்ப மராயின் புனிதமும் அமையும் என நம்பப்பட்டது. குடியின் பழைமையன சின்னங்கள் (Tribal relics) , பழைய கருவிகள் போன்றன முன்வாயிலில் உள்ள தூணுக்கு அடியில் புதைக்கப்படும்.

மராய் கட்டும் பணியில் பெண்மக்களை விலக்கியே வைப்பர். மராய் கட்டி முடிந்தவுடன், கிராமத்தார் முன்னிலையில், தங்கள் குடியுடன் தொடர்புடைய பெயரை மராய்க்குச் சூட்டுவர். அதன், பின்னர், புரோகிதனான ‘தோகுங்கா’ கட்டிடத்தின் மீது உள்ள ‘தபு’ அல்லது தீட்டினைப் போக்கும் சடங்கினைச் செய்வான். இந்த முக்கியச் சடங்கு செய்யும்போது, மராய்க்குத் தொடர்புடைய குடிகள் அனைவரும் சூழ இருப்பர்.

நம்நாட்டில் புரோகிதர்கள் சடங்குகளுக்குத் தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்துவதைப் போல மவுரிப் புரோகிதன் ‘கராமு’ (Karamu) என்னும் ஒருவகைச் செடியின் தழைக்கொத்தினைப் பயன்படுத்துவான். இந்தத் தழைக்கொத்து புனிதமானதாகக் கருதப்பட்டது. உரிய மந்திரப்பாடல்களை (கராக்கி) ஓதிக்கொண்டு, கராமுவின் கொத்தினால் மராயின் பாகங்களைப் புரோகிதன் தடவித் ‘தபு’வினை நீக்குவான்.

மராயின் விட்டம் 100 நீளம் வரைக்கும் இருக்கும். விட்டத்தின் முன்புற முகப்பில், தலைவாசலுக்கு மேலே, கடுகடுத்த முகத்துடன் ஒரு பதுமை வைக்கப்படும். நம்மூர் கண்திருஷ்டிப் பொம்மையைப் போல . துருத்திக் கொண்டு இருக்கும் அதன் கண்களில் ‘பெளவா’ என்னும் வெள்ளி போன்ற பிரகாசமான சிப்பி பொருத்தப்பட்டு இருக்கும். மரத்துண்டில் குடைந்து செய்யப்பட்டிருக்கும் இந்த பதுமைக்கு,’தெக்கொதெக்கொ’ (Tekoteko) என்று பெயர்.இந்த பொம்மை மராயின் வாசல் முகப்பில் இருந்து கொண்டு தீய ஆவிகள் உள்ளே நுழைந்து விடாமல் தடுக்கும் பணியினைச் செய்யும். புரோகிதன் இந்தப்பொம்மைமேல் ‘கராக்கி’ மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு ‘கராமுக்’கொத்தினால் தடவுவான். இதனால், அந்தத் ‘தெக்கொதெக்கோ’ தீயனவற்றைத் தடுக்கும் ஆற்றலைப் பெறும். இதன் பின் மராயில் இருக்கும் ஒரே சாளரம் வழியாக உள்நுழைந்து வாயில் கதவினைத் திறந்து வெளிவருவான். அன்றைய நிகழ்ச்சி அத்துடன் நிறைவுறும்.

அடுத்தநாள் விடியற்காலை, விடிவெள்ளி (கோப்பு Kopu) தோன்றியவுடன் , நற்குடிப் பிறப்பும் உடல்நலமும் வாய்ந்த வயதில் மூத்த பெண்கள் மூவர் ‘கராக்கி’ எனும் பாடல்களைப் பாடிக்கொண்டே வாயிலின் வழியாக மராயின் உள்புகுந்து புதுமனை புகுதலைச் செய்வார்கள். இந்தச் சமுதாயக் கூடத்தைக் காக்கும்படி அவர்கள் தெய்வங்களை வேண்டுவார்கள். பெண்கள் புதுமனைபுகும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, மரயின் உள்ளெ பிறர் வருவர். இது நம்மூர்க் ‘கட்டுக்கழுத்தி’ப் பெண்களுக்கு உள்ள சிறப்பினைப் போன்றது.

மராய் பற்றிய செய்திகள் சற்று நீண்டு விட்டன. இதனை விரித்து எழுதியதற்குக் காரணம் உண்டு. மவுரிகள் இன்று கலப்பினமாகிப் பழைய பண்பாடுகளை இழந்து வரும் நிலையில், தம்முடைய பழமைத் தொடர்பினைப் புதுப்பித்துக் கொள்ள மவுரிகளுக்கு இன்றும் துணையாக நிற்பது ‘மராய்’ என்னும் இந்த அமைப்பே. மவுரிகள் கிறித்துவர்களாக மதம் மாறிய பின்னரும் அவர்கள் தங்களுக்கென உருவாக்கிய சர்ச்சுகளில் ‘மராய்’யினை அமைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுடைய சர்ச்சு நடவடிக்கைகளில் மராய் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மாராய் மரத்தால் ஆன வெறும் கட்டிடமல்ல.அது மவுரிக்கு அவனுடைய மூதாதையரின் இருப்பிடம். (Wharetipura – ancestral house). மராய் மூதாதையரின் உருவமுமாகும். மராயின் முகப்பில் அமைக்கப்படும் ‘கொருகு’ எனும் உருவம் மூதாதையரின் தலையைக் குறிக்கும். முகப்பில் விட்டத்தோடு பொருத்தி அமைக்கப்படும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பலகை (Barge Boards) ,’மாய்கி’(Maiki) மூதாதையரின் கரங்களைக் குறிக்கும். அதன்முனையில், நீட்டிய விரல்களைப்போல் அமைந்திருக்கும் உறுப்புக்கு ‘ரபரப’(Raparapa) என்று பெயர். அது ஒருவரை அணைக்கும்போது விரல்கள் நீண்டு இருப்பதைக் குறிக்கும்.

முன்புறத்தில் உள்ள தூண்கள் ‘அமோ’ எனப்படும். அவை மூதாதையரின் கால்களைக் குறிக்கும். விட்டம் முதுகெலும்பையும், குறுக்குச் சட்டங்கள் விலா எலும்புகளையும் குறிக்கும். மராயின் முகப்பில் உள்ள தோரணவாயில் ‘ரோரோ’(Roro) எனப்படும். அது மூதாதையரின் மூளையைக் குறிக்கும். மராயின் உள்ளே சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய தூண்கள் குல முன்னோர்களைக் குறிக்கும். எனவே, மராயினுள்ளே நுழைவோர், மூதாதையரின் அன்புக்கு உரியோராவர் என்பது கருத்து. அதற்குத் தகுதி உடையவர்களே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

கிராமத்திற்கு விருந்தினர் வந்தால் அவர்களை ‘மராயி’யில்தான் வரவேற்பர். அதற்கென ஒரு சம்பிரதாயமுறை உண்டு. அது இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது. மராயினுள் உணவு உட்கொள்வதோ காலணி அணிந்து செல்வதோ கூடாது. மியூசியத்தில் உள்ள மாதிரி மராயிலும் கூட இந்த நடைமுறை உள்ளது. நியூசிலாந்துக்கு வெளிநாட்டுப் பிரமுகர்கள் வருகைதரும்போது அரசுமுறையில் இராணுவ வரவேற்போடு, பொதுமக்கள் வரவேற்கும் முறையில் மராயில் மவுரி சம்பிரதாயத்தோடு வரவேற்பு அளிப்பது இந்நாட்டுப் பண்பாக உள்ளது.

மராய்க்குச் சொந்தமான , அதாவது, தாயாதிகளும் கிளையினரும் ‘தங்கத்தாவெந்நுவா’ (Tangata whenua) எனப்படுவர். விருந்தினர் ‘மனுகிரி’(Manuhiri) எனப்படுவர். மராய்க்கு வருகை தரும் மனுகிரியிடம் அவர்கள் சமுதாயத்துக்குரிய ‘தபு’ இருக்கும். அது, ‘தங்கதவெந்நுவா’வுக்குத் தீங்கு இழைக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடும். அதைப் போக்குவதற்கு, மனுகிரியாகிய விருந்தாளிகள் முறையான சடங்கு ஒன்றினுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் அதன் மூலம் விருந்தாளிகள் மராயினுட் புகத் தூய்மையாகின்றனர். அவர்களை ஒட்டிக் கொண்டு வரும் தீயசக்திகள் தவிர்க்கப்படுகின்றன.

image018விருந்தினர் மராய் எல்லையினுள் வந்தவுடன் ’தங்கதாவெந்நுவா’ வீரன் ஒருவனோ பலரோ நீண்ட கழியைச் சுழற்றிக் கொண்டு, துருத்திய நாக்கும் உருட்டிய கண்ணுமாகச் சண்டைக்கு வருவாரைப் போல் உரக்கக் கூவிக் கொண்டு வேகமா வருவர். அவர்கள் ஆடிவருகின்ற கூத்தின் பெயர் ‘ஹக்கா’ (Hukka). என்பதாம். கழியை விருந்தினர்கள் முன்பு நீட்டிக் கொண்டு தரையில் ஃபெர்ன் (fern) இலையையோ அது போன்ற ஒன்றையோ வைப்பர். தோழமையுடன் வரும் மனுகிரி அதி எடுத்துக் கொள்வர். அதை எடுத்துக் கொள்ளாதவர் பகையெனக் கருதப்பட்டுக் கொல்லப்படுவர். விருந்தினர் அதை எடுத்துக் கொண்டவுடன் மூதாட்டியான மவுரிப்பெண் ஒருத்தி, உரத்த குரலில், ‘கராகி’ ஒன்றை இசைப்பாள். அது விருந்தினர்கலை மராயினுள் அனுமதிக்கும் அறிகுறியாகும். அந்தப் பெண்மணி இசைக்கும் ‘கராயி’யினால் விருந்தாளியின் ‘தபு’ நீக்கப்படுகிறது அல்லது செயலிழக்கச் செய்யப்படுகிறது. விருந்தாளிகள் அமைதியாக மராயி வாயிலில் நிற்க வேண்டும். ‘வெந்நுவா’(host) ‘மனுகிரி’(visitor) ஆகியோரின் இறந்துபோன மூதாதையர்களுக்கு வணக்கம் செலுத்தியபின், வரவேற்பு உரை நிகழ்த்தப்படும். மவுரித் தலைவன் அமர்ந்த பின்னர் அனைவரும் அமர்வர். ‘தங்கத்த வெந்நுவா’ , ‘மனுகிரி’யின் மூக்கின் மீது தன் மூக்கை வைத்து மெல்ல அழுத்தி அசைப்பார். இது, விருந்தினருக்குச் செய்யும் வணக்கமும் மரியாதையும் ஆகும். இப்படிச் செய்யும் மரியாதைக்கு ‘ஹோங்கி’ (Hongi) என்று பெயர்.

இந்தச் சடங்கு இப்பொழுது உல்லாசப்பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் நிகழ்த்திக் காட்டும் கலைநிகழ்ச்சி, நாடகம் போலாகிவிட்டது. 1990ஆம் ஆண்டு ‘வைத்தாங்கி உடன்படிக்கை நாள்’ விழாவுக்குப் பிரிட்டீஷ் அரசியார் இராணி எலிஸபெத் வந்திருந்தார். அவருக்கு மவுரி சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் அடிப்படையை அறியாத ஸ்விஸ் நாட்டு நிருபர் ஒருவர், ‘அரசியாரின் வருகையை விரும்பாத மவுரிகள் அவருக்கு எதிராகக் கலகம் செய்து போருக்கெழுந்தனர்’ என்று தம்முடைய பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்பினார் என்றால் , அந்த வரவேற்பு ‘ஹக்கா’ எப்படி இருந்திருக்கும்?

அந்த நிருபர் அனுப்பிய செய்தி: “It was not exactly a friendly welcome the English Queen Elizebeth receive in Newzealand , for a welcome , a woman demonstrator trew a flagpole in her direction, and about 500 chieftains of the original Maori population led a war dance, poking out their tongues and threatening her with spears, “go home,Queen’. The Queen tried to sooth the Maoris, but , they only replaced with scoffs and war cries”.

மவுரி மாதிரி கிராமத்தில் , மவுரி மரச்சிற்பப் பயிற்சிக்கூடம் ஒன்றும் கத்தாழை போன்ற ஃபேக்ஸ் எனும் செடியிலிருந்து நாரெடுத்து ஆடை நெசவு செய்யும் கட்சிக்கூடம் ஒன்றும் உள்ளன. மவுரிகள் பரம்பரையாக மரத்தைக் குடைந்து சிற்பங்கள் செய்வதில் வல்லவர்கள். சிற்பங்கள் என்றால் நம் நாட்டுக் கோவில்களில் உள்ள தேர்களில் காணப்படும் சிற்பங்களைப்போல என நினைத்துவிடக் கூடாது. பழங்குடி மக்களின் சமயச்சின்னங்களுடன் தொடர்புடையன, அம்மரச் சிற்பங்கள். அதற்கேற்ற உறுதியான மரங்கள் நியூசிலாந்தில் மிகுதியாக இன்றும் உள்ளன. ஈட்டி, தேக்கு போலக் ‘கவுரி’(kowri) என்னும் ஒருவகை மரம் நியூசிலாந்தின் இயற்கைச் செல்வம். உறுதியானதும் மிக உயரமாக வளரக் கூடியதுமான இவ்வகை மரம் அருகி வருகின்றது. இதனைப் பாதுகாக்க அரசு மிகுந்த அக்கறை கட்டி வருகிறது. மவுரியின் நீண்ட தோணிகளும் குடி சிற்பங்களும் இவ்வகை மரத்தில் அமைக்கப்பட்டவை.

ஃபேக்ஸ் என்னும் செடி தாழை போன்ற வடிவமுடையது. பழங்கலத்தில் ஃபேக்ஸ்சின் தாழையினைக் கிலிஞ்சில் போன்றதொரு சிப்பியினால் சுரண்டி, சோற்ருப்பசையினைப் போக்கியபின் மரத்தால் அடித்து நாராக்கி அதனைப் பாய்போல் முடைந்து மவுரி உடுத்துக் கொண்டான். இவ்வாறு ஃபேக்ஸின் பயன்பாட்டுச் செயல்விளக்கம் மவுரி கிராமத்தில் காட்டப்படுகிறது.

ரொற்றுவாவிலுள்ள ‘தெர்மல்’ அதிசயங்களில் ‘வக்கரேவரேவா’ வெந்நீர் ஊற்றுக்கள் முக்கியமானவை. நிலப்பிளவுகளிடையிலிருந்து வெந்நீர் ஊற்று, புகைப்படலத்துடன், பத்துப்பதினைந்தடி உயரத்திற்குப் பீச்சி அடிக்கின்றது. அப்பகுதி முழுவதும் கந்தக நெடியுடன் கூடிய புகைமண்டலமாகக் காட்சியளிக்கின்றது. கொதிக்கும் நீரானதால், பார்வையாளர்கள் அதனருகில் மிக நெருங்கி விடாதபடி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் வெந்நீர்க் குளமாக அப்பகுதி இருப்பதால், குட்டையான புதர்களைத் தவிர வேறு செடிகொடிகள் ஒன்றும் அங்கு இல்லை.

வெந்நீரூற்றுக்குச் சற்று தூரத்தில், வெப்பமான களிமண் குட்டை (Mud Pool) ஒன்று உள்ளது. அதில் குமிழ்கள் தோன்றிப் பெரிதாக விரிந்து ‘டப்’ என்ற ஒலியோடு வெடிக்கின்றன. அதிலிருந்து அலைகள் வட்ட வட்டமாகத் தோன்றி விரிகின்றன. இவ்வாறு வெடிக்கும் குமிழ்களிலிருந்து தோன்றி மலர்ந்து விரியும் அலைகள் அழச்கிய இயற்கை ஓவியமாகக் காட்சி அளிக்கின்றது. இந்தக் களிமண் குட்டையைச் செல்லமாகக் ‘கஞ்சிக்கலயம்’ (Porridge Pot) என்கின்றனர்.

வெந்நீரூற்றுக்கு அருகில், நியூசிலாந்தின் தேசியப் பறவையாகிய கிவிப்பறவைகளை , அதன் இயற்கைச் சூழலில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். கிவி மிகவும் கூச்சமான பறவை. சிறிய பறவை. மனிதர்களீன் பார்வைக்கு எட்டாத இடங்களில் பகலெல்லாம் மறைந்திருந்து, இரவில் மட்டும் உணவு தேடவெளிப்படும். இதற்குப் பறக்க இயலாது. ஒருகாலத்தில் இது பறக்கும் இனமக இருந்ததற்கு அடையாளமாக இரண்டு சிறகுகள் உண்டு. அது, ‘கிவி’ பறவை இனம் என்பதற்கு அடையாளமே ஒழிய பறப்பதற்கு உதுவுவது இல்லை. கிவிக்கு நீண்ட தொலையுடைய காது உண்டு. மெல்லிய ஒலியையும் நொடியில் அறிந்து கொள்ளும். புழு பூச்சி போன்ற உணவினைப்பெற மண்ணையும் குப்பைகூளங்களையும் கிளறுவதற்கு ஏற்ற நீண்ட அலகு இதற்கு உண்டு. உணர்வு உறுப்பாக மீசையும் (whiskers) உண்டு. கண்பார்வையால் அன்றி மணத்தால் இரையை அறிந்துகொள்ளும். அதற்கு ஏற்ற வகையில் இதற்கு நாசி அலகின் நுனியில் உள்ளது. நாசி அலகின் நுனியில் இருக்கும் ஒரேபறவை கிவிதான்.

கிவிப் பறவையின் இன்றைய நிலைமை அதன் பரிணாம வலர்ச்சியின் ஒருகட்டம். ‘கோண்டுவானா’(Gonduwana) நிலப்பகுதியிலிருந்து நியூசிலாந்து தனியாகப் பிரிந்த பொழுது, இங்கு ‘மோவா’ என்றொரு பறவை இனம் இருந்தது. உருவத்தில் அது மிகவும் பெரியது. அது வேகமாக ஓடும். ஓடும்போதே தாழ்ந்த உயரத்தில் அது பறக்கவும் செய்யும். அதனுடைய வழித்தோன்றல்தான், ஆஸ்திரேலியாவில் காணப்படும் நெருப்புக்கோழி (Ostritch). இதன் மிகப்பெரிய உருவமே இதற்குப் பகையாக ஆனது. நியூசிலாந்தில் மிகப் பெரிய கழுகு இனமும் ஒன்றிருந்தது. அந்தக் கழுகு இனத்திற்குப் பெயர் Harpagonis moora. மோவாவின் பெரிய உருவம் பறந்து வந்து தாக்கும் மிகப்பெரிய கழுகினத்திற்கு எளிதில் கிடைக்கும் இரையாயிற்று. பெரிய உருவுடைய இந்த இருவகைப் பறவைகளுக்கும் நடந்த போராட்டத்தில் இரண்டுமே அழிந்தொழிந்தன. எஞ்சிய மோவாப் பறவை, கழுகுக் கூட்டத்திற்குத் தப்பிப் பிழைக்க உடலைக் குறுக்கி ஒளிந்து ஒளிந்து வாழ்ந்து காலப்போக்கில் அதனுடைய பரிணாமத்தில் இன்று ‘கிவி’யாக மாற்றம் அடைந்துள்ளது. போராட்ட உணர்வினை இழந்து கூச்ச சுபாவம் உடையதாயிற்று. பகலில் வெளியில் உலவுதலைத் தவிர்த்து இரவில் உணவு தேடும் பழக்கம் உடையதாயிற்று.

ரொற்றுவா நகரிலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் ‘வைடாமோ’(Waitomo) என்னும் ஓரிடம் உள்ளது. இந்த இடத்தில் இருக்கும் சுண்ணாம்புப் பாறைக்குகைகள் உலக உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் மிகச் சிறந்த புவியியல் அதிசயமாகும்.

பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி உயிரினங்கள் நிறைந்த கடலாக இருந்தது. நிலத்தின் மேற்பகுதியில் நிகழ்ந்த மாற்றத்தால் , கடலழிந்தது. உய்ரினங்கள் நிலத்தில் புதையுண்டன. அவற்றின் எலும்புகள் காலப்போக்கில் சுண்ணாம்புப் படிவங்கள் ஆயின. நில அதிர்வுகளால் பிலங்கள் உண்டாயின. நிலத்தின்மேல் எப்போதுமிருக்கும் ஈரப்பசை ஊறிஊறிச் சுண்ணாம்புப்படிவங்கள் மெலிதாகக் கசியத் தொடங்கின. சுண்ணாம்புப் படிவங்களின் அதிசய வடிவங்கள் இயற்கையன்னையின் திறத்தால் உருவாயின.

‘வைடமோ’ குகைகளின் இருப்பு 1887ல்தான் அறியப்பட்டது. ஃப்ரெட்மேஸ்(Fred Mace) என்னும் ஆங்கிலேயரும் ‘தனே தினேரு’(Tane Tinorao) என்னும் மவுரியும் இக்குகைகளைக் கண்டு ஆராயத் தொடங்கினர். குகையின் அடியில் நீரோடை இருந்தது. சிறிய ஓடத்தில் , மெழுகுவத்தி வெளிச்சத்தின் துணையோடு குகைக்குள் சென்றனர்.

இப்பொழுது மரப்பலகையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய மின்விளக்குகள் தேவையான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. மவுரி வழிகாட்டி உடன் வருகிறார். அதிகஒலி, ஒளி இரண்டும் குகை அமைப்பைப் பாதிக்கும் என்பதால் குகையைவிட்டு வெள்யே வரும்வரை யாரும் பேசக் கூடாது என்று முன்னதாக அறிவித்த பின்னரே குகைக்குள் பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

மங்கிய ஒளியில் வெண்ணிறமான படிவங்கள் ஏதோ ஆவியுலகத்துக்குள் நுழைந்துவிட்ட மருட்கையினையும் அச்சத்தையும் அளிக்கின்றன. இன்றைய நிலையிலேயே நமக்கு இத்தகைய உணர்வினை இக்குகை தருகின்றதென்றால் , பேயுலகத்தை முழுதும் நம்பும் மவுரியுடன் மெழுகுவத்தி வெளிச்சத்தில் சென்ற அந்த வெள்ளைஆய்வாளரின் நிலை எப்படியிருந்திருக்கும் எனச் சற்றுக் கற்பனையில் கண்டு நாமும் அனுபவிக்கலாம். ஒளியும் ஒலியும் குகையின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்பதால் நம் பயணம் முழுவது அமைதியாகவே நடைபெறுகின்றது.

பின்னர், குகையினுள் படகில் நம் பயணம் தொடருகின்றது. கும்மிருட்டில், ஓரத்தில் பொருத்தியுள்ள கம்பிக் கிராதியைப் பற்றிக் கொண்டு, ‘வழிகாட்டி’ உந்திஉந்திப் படகைச் செலுத்துகிறார். துடுப்புப் போட்டால் தண்ணீரில் சத்தம் உண்டாகும் என்று இவ்வாறு செய்யப்படுகிறது. திடீரென , விண்மீண்கூட்டம் நிறந்த நீலவானம் நம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து விட்டது போன்ற தோற்றம்! உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண்கொள்ளாக் காட்சி. அத்தனையும் ஒருவகை மின்மினிப் புழுக்கள்(Glow worm). ஈரப்பசையுள்ள சுண்ணாம்புப் படிவங்களின் மீது வந்து ஒட்டும் சிறுபூச்சிகளே இந்தப் புழுக்களுக்கு உணவு. ஓளிவீசும் புழுக்கல் நிறைந்திருப்பதனால் இந்தக்குகைக்கு ‘Glow worm Caves) என்று பெயர்.படகு நீரில் மிதந்து நழுவிச் செல்லும் ஓசையும் மேலிருந்து கசிந்து நீர் சொட்டும் ஓசையும் அல்லது வேறு ஓசையே இல்லை. ஒருவகையான திகிலுணர்வுடன் இந்தக் குகையைக் கடந்து வெளியே வந்தவுடன் ‘அப்பாடா’ என்று பயணிகள் எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ந்தனர்.

‘வைடோமோ’ மின்மினிப்புழுக்குகையிலிருந்து 3கிமீ தூரத்தில் ‘அரனூயி’ (Aranui) என்னும் இடத்தில் மற்ரொரு குகை உள்ளது. இது 1911ல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அரனூயி என்னும் மவுரியால் கண்டு பிடிக்கப்பாட்டது. அதனைக் கண்டுபிடித்த மவுரியின் பெயரே அந்தக்குகைக்குப் பெயராயிற்று. ரொற்றுவாவில் உள்ள மூன்று சுண்ணாம்புப்படிவக் குகைகளிலும் இதுவே மிக அழகானதாகக் கருதப்படுகின்றது. நம் கயிலை மலையைச் சுற்ரி வருவோர் , எந்தெந்த வடிவத்தை நினைக்கிறார்களோ அந்த வடிவங்களைக் கண்முன் காண்பார்கள் என்று கூறுவார்கள். அதைபோலவே, இங்கு, எனக்கு, வெண்பளிங்கினால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், தூண்கள், கோயில் கோபுரங்கள், மண்டபங்கள்,, இராமேசுவரத்தில் உள்ள அழகிய திருச்சுற்ருக்கள் போலக் காட்சியளித்தன. Stalactities என்னும் மென்மையான சுண்ணாம்புப் படிவங்கள் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த திரைச்சீலைகள் போல இருக்க , அவற்றின் பின்னல் அமைக்கப் பெற்றிருந்த ஒளிவிளக்குகள் இயற்கை அழகுக்கு வண்ணஒளி அளித்தன. வெள்ளிச்சரிகையில் செய்யபட்ட நுண்ணிய கலைவடிவங்களைப் போல இயற்கையன்னையின் கவண்ணங்கள் அமைந்திருந்தன. Stalagmite என்னும் சுண்ணாம்புத் திடப்படிவங்கள் பெரிய பெரிய தூண்களைப் போலவும் பெரிய பெரிய மரங்களைப் போலவும் காட்சியளித்தன. சில இடங்கள் பெரிய தூண்களை உடைய பிரம்மாண்டமண்டபங்களாகக் காட்சியளித்தன.

இந்தக் குகைகளின் அழகை வருணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்தக் குகைகளுள் இருக்கும் போது விட்டலாச்சாரியா படங்களில் வருவது போன்ற மாயக்குகைகளுள் இருக்கின்ற அச்சம் உண்டானபோதிலும் அருகில் மக்கள் இருப்பதால் கலக்கம் உண்டாவதில்லை. இந்தக்குகைகளில் உள்ள படிமங்கள் கணந்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கின்றனவாம். இரு கியூபிக் சென்டிமீட்டர் வலர 100 ஆண்டுகள் ஆகுமாம். ஒரு அங்குலம் வளர 500 ஆண்டுகள் ஆகுமாம். அப்படியென்றால் இன்று காட்சியளிக்கும் அளவுக்கு வளர எத்தனை நூறு ஆண்டுகள் ஆயிருக்கக் கூடும்? மலைப்பாக இருக்கின்றது. சுற்றுலாப்பயணிகளின் வருகையால் , சுற்றுச்சூழல் மாசுபட்டு, இயற்கையன்னையின் கலைப்படைப்பாகிய இந்தக் குகைகள் சிதைந்து போகாமல் காப்பதற்கு இந்த நாட்டரசு மேற்கொண்டுவரும் கடுமையான நடைமுறை ஒழுங்குகள் பெரிதும் பாராட்டத் தக்கனவாகும்.

‘ரொற்றுவாவுக்கு அருகில் ‘வைரோவா’(Wairoa) என்றொரு சுற்றுலாத்தலம் உள்ளது. 120 ஆண்டுகளுக்கு முன் இங்குச் சுறுசுறுப்பான வளமான கிராமம் ஒன்று இருந்தது. அருகில் ‘தரவேரா’ என்றொரு ஏரியும் (Lake Tarawera) “ரொட்டொமஹானா” (Rotomahana) என்றொரு ஏரியும் இருந்தன. தரவேரா ஏரியை ஒட்டி ‘தரவேரா’ மலையும், மலைச்சாரலில் தேனடைகள்போல நீராவியுடன் கூடிய வெந்நீர் ஊற்றுக்களும் இருந்தன.

இந்த கிராமத்துக்கு இருந்த மற்றொரு சிறப்பு, இங்கு எட்டு ஏக்கர் அளவுக்குப் பரவியிருந்த இளஞ்சிவப்பு, வெண்ணிறமான பாறை அடுக்குகள் (Pink Terrace, White Terrace). சுமார் 800அடிக்கு மேலிருந்த வெந்நீர் ஊற்றுகளிலிருந்து நீர் இந்த அடுக்குகளின் மேல் வீழ்ந்து தவழ்ந்து வந்தது. மழம்புழா போன்ற அணைகளில் , படிக்கட்டுக்கள் போல அமைத்து உயரத்திலிருந்து நீரைத் தவழவிட்டு, மின்னொளியில் செயற்கையாகக் காட்டும் வண்ண ஜாலத்தை இங்கு இயற்கையன்னை கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வண்ணமுடையதாகச் சமைத்திருந்தாள். கதிரவனின் ஒளியில் இப்பாறை அடுக்குகள் இளஞ்சிவப்பாகவும் வெண்பளிங்கு போலவும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. கந்தகம் கலந்த வெந்நீர் நீலநிறத்தில் படிக்கட்டுகளில் தவழ்ந்து ஒழுகி அழகை மேலும் கூட்டின.

இயற்கையின் இந்தக் கோலத்தைக் காண உலகெங்கும் இருந்து பயணிகள் வந்தனர். அவ்வாறு வந்த பயணிகள் முதலில் தங்குவது, ‘வைரொவா’ என்னும் இந்தக் கிராமத்தில்தான். இங்கு மவுரிக் குடியிருப்பு ஒன்றும் இருந்தது. பயணிகள் தங்க ‘ரொடொ மஹானா’ (Hotel Rotomahana) என்னும் இரண்டடுக்குக் கட்டிட உணவு விடுதியும் இருந்தது. 1850களில் ‘டூரிச’ வணிகம் இங்கு அமோகமாக நடந்தது.

1886 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 9 ஆம் நால் இரவு வைரோவா மக்கள் நிலத்தடியில் நிகழும் குமுறல்களைச் சற்றும் அறியாதவர்களக அன்றைய வாழ்க்கையை நினைந்து மகிழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்தேறியது. விடியற்காலை 1-40மணி. நிலம் அதிர்ந்தது. ‘தவேரா’ மலையின் வயிற்றிலிருந்து நெருப்புக் கோளங்கள் சீறிப் பொங்கி வெடித்துச் சிதறின. சிலமணி நேரத்தில் கிராமம் முழுவதுமே புதையுண்டு காணமல் மறைந்து ஒழிந்தது. ‘தவேரா ஏரி’ சுவறித் திடர்ப்படு மேடாயிற்று. மலைச்சாரலிலிருந்த காடுகள் எரிந்து அழிந்து போயின. நீல நிறத்தில் இருந்த ‘நீல ஏரி’(Blue Lake’) பயத்தால் வெளிறிப்போய்விட்டது போலச் சாம்பல் கலந்து வெண்ணிற ஏரி ஆகிவிட்டது.

உலகத்தின் பிற எரிமலைகளால் நேர்ந்த அழிவுகளையும் உயீரிழப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘தவேரா’ எரிமலையால் நேர்ந்த உயிரிழப்பு மிகக் குறைவுதான். ஆயினும், தரவேராவில் விலைந்த அழிவு உலகைக் குலுக்கியது. காரணம், இயற்கை அன்னை தன்னுடைய கைவண்ணத்தால் தானே உருவாக்கி உலகத்தையே மயக்கிக் கவர்ந்திழுத்த இளஞ்சிவப்பு மற்றும் வெண்பளிங்குப் பாறை அடுக்குகள் இரண்டையும் தன்னுடைய ஆத்திரத்தால் அழித்தொழித்தது போல, அவை இரண்டும் அன்றிரவு சில மணி நேரத்தில் தொலைந்து காணாமற் போயின. உலகத்தின் நிலையாமையை மெய்ப்பிப்பது போல.

120 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்டுபோன ‘வைரொவா’ கிராமத்தை வரலாற்று அறிஞர்கள் , அகழ்ந்தெடுத்து மீட்டுருவாக்கம் செய்து வைத்துள்ளனர். கொல்லன் பட்டறையொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. துருத்தி, சம்மட்டி, உலைக்கூடம் முதலிய கருவிகள் காட்சிப்பொருள்களாக உள்ளன. இது குதிரைகளுக்கு இலாடம் அடிக்கும் பட்டறையாகவும் வண்டிப்பட்டறையாகவும் இருந்திருக்கக் கூடும். மவுரி ‘தோஹுங்கா’(Tohungga மவுரிப்புரோகிதன்)வின் வீடு (Whare) ஒன்றும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவன் இக்கிராமம் அழியப்போகின்றது என்று முன் கூட்டியே அறிவித்திருந்தானாம். 110 வயதான இவன் 100 மணி நேரம் மண்ணில் புதையுண்டிருந்தானாம். மீட்டு எடுக்கப்பட்டபின் சிலநாட்கள் உயிரோடிருந்து இறந்து போனானாம். மவுரி குடிசை, தோஹூங்கா குடிசை, மதுக்கடை, ரொட்டிக்கடை, ரொட்டி சுடும் அடுப்பு, உணவு விடுதி ஆகியன அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அததற்குரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தக் கிராமம் எப்படி இருந்திருக்கக் கூடும் என ஒருவாறு கற்பனை செய்து கொள்ளலாம்.

நம் நாட்டில் மொஹஞ்சதாரோ, ஆதிச்சநல்லூர் முதலிய இடங்களில்நிகழ்ந்த அகழ்வாய்வுகளோடு ஒப்பிட்டால் ‘வைரொவா’ அகழ்வாய்வு ஒன்றும் பெரிதில்லைதான். ஆனால், அண்மைக்காலத்தில், வளமாக மக்கள் வாழ்ந்து, புதையுண்டுபோன மண்ணின்மீது நிற்கின்றோம் என நினைக்கும்போது ஒருவித சோக உணர்ச்சிக்கு ஆளாகிறோம்.

புதையுண்ட கிராமத்தில் ஒரு வீட்டின் எல்லைக்காக நடப்பெற்று இருந்த Aspon Poplars என்னும் மரக்கன்றுகளிற் சில , நிலநடுக்கத்திலும் மலைச்சரிவிலும் எரிமலைச் சீற்றத்திலும் அழிந்துபோகாமல் , இன்று நெடிதுயர்ந்த மரங்களாக அழகுடன் நிமிர்ந்து நிற்கும் அதிசயத்தையும் கண்டோம்.

புதையுண்ட மவுரி கிராமம் வைரோவாவில் ஒரு சிறிய மியூசியம் இருந்தது. அதில் மவுரி பண்பாட்டுத் தொடர்பான பொருள்கள் விற்பனைக்கு இருந்தது. பச்சைக்கல்லில் மனித வடிவில் செதுக்கப்பட்ட ஒன்றை என்மகள் வாங்கிக் கொடுத்தாள். மவுரிகள் அனைவரும் அதுபோன்ற ஒன்றைக் கயிற்ரில் கோத்துக் கழுத்தில் அணிந்திருப்பதைக் கண்டேன். அது மவுரியால் ம்கவும் மதிக்கப்படும் ‘திக்கி’(Tiki) எனப் பெயருடைய அணி. ‘திக்கி’ மவுரியின் மூதாதையரைக் குறிக்கும் அடையாளம். குடும்பங்களில் தலைமுறைதலைமுறையாகப் பாதுகாக்கப்படும் ‘திக்கி’ மிகச் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அன்றிரவு ரொற்றுவாவில் தங்கிவிட்டு , மறுநாள் காலை உணவுக்குப்பின் வெலிங்டனுக்குப் புறப்பட்டோம். வெலிங்டன் அருகில் வரும்போது மாலையாகிவிட்டது. மூன்றுநாட்கள் தொடர்ந்து விடுமுறையாதலால், வெலிங்டன் மக்கள் பெரும்பாலோர் வெளியூர் சென்றுவிட்டு மீண்டு வருகிறார்கள் போலிருந்தது. சாலையில் போக்குவரத்து நெரிசல். பல இடங்களில் நின்றுநின்று செல்ல வேண்டி இருந்தது. போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க ஆங்காங்கே போலிசார் ஒரு உத்தியைக் கையாண்டனர். சாலயோரப் பூங்காக்களில் ‘டீ’ விநியோகம் செய்தனர். லாரி போன்ற கனரக வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களை டீ அருந்திச் செல்லும்படி உபசரித்தனர்.

Comments are closed.