kamagra paypal


முகப்பு » இலக்கியம், கவிதை, மொழிபெயர்ப்பு

சார்ல்ஸ் ஸிமிக் கவிதைகள்

வந்து கொண்டிருக்கிற அக்டோபர்

Closed Window

பூஞ்சை எறும்பொன்றுதான் எனக்கு
இன்று சிந்திக்கத் துணை.
பிறரிடம் உண்டு புனிதர்களின் படங்கள்,
பிறரிடம் உண்டு ஆகாச மேகங்கள்.

குளிர்காலம் கதவோரம் காத்திருக்கிறதோ,
ஏனெனில் அவன் முற்றிலும் தனியாயுள்ளான்,
ஒளிய வேண்டிய அவசரமும் அவனுக்கு.
இருந்தாலும், முடிவெடுக்க முடியாமல்

அவன் தன் சுவடுகளில் திரும்புகிறான்
பலமுறைகள் காண்கிறான் தன்னையே
ஒரு பெரும் வெற்றுச் சுவரின் மீது
அதிலேதும் ஜன்னல் இல்லை

இருண்டு திரண்ட மரங்கள்
தம் புதிர்வெளிகளை வீசுகின்றன அவன் முன்
அடுத்து அவற்றை அழிக்க மட்டுமே
கள்ளமாக, எழும் கடலின் ஓசையுடன்

oOo

வரலாறு

az-almaஒரு சாம்பல் நூற்றாண்டின்
ஒரு சாம்பல் மாலையில்,
நான் ஓர் ஆப்பிளைத் தின்றேன்
யாரும் பார்க்காத வேளையில்.

புளிப்பான, சிறியதோர் ஆப்பிள்
மரமெரியும் ஜ்வாலையின் நிறத்தில்
அதை நான் முதலில் துடைத்தேன்
என் சட்டையின் கைமீது.

பிறகென் கால்களை நீட்டினேன்
அவை எத்தனை தூரம் போகுமோ அத்தனைக்கு
எனக்கே சொன்னேன்
என் கண்களை ஏன் மூடிக் கொள்ளக் கூடாதிப்போது

நாளின் கடைசி உலகச் செய்தியும், வானிலை அறிவிப்பும்
வருவதற்கு முன்பு.

தனிமை

அங்கே பார், முதல் துணுக்கு
மேசையிலிருந்து எங்கே விழுகிறதோ
நீ நினைக்கிறாய் யாருக்குமது கேட்கவில்லையென
தரையில் அது தட்டும்போது

ஆனால் ஏற்கனவே எங்கோ
எறும்புகள் அணிய ஆரம்பிக்கின்றன
தம் சமத்துவக் குல்லாய்களை
கிளம்பின வெளியே உன்னைப் பார்க்க வரத்தான்.

கேள்

Atomic Bomb Explosionஉன்னைப் பற்றிய அனைத்தும்,
என் உயிரே, ஒரே சமயம்
நிஜமும்தான் புனைவும்தான்.
நாமொரு ஜோடி
இரவுமுறை வேலை செய்கிறோம்
ஒரு வெடிகுண்டு ஃபாக்டரியில்

“சப்தமில்லாமல் வா,” ஒருவன் சொல்கிறான்
இன்னொருத்தியிடம்
அவள் கையை அவன் பற்றியபடி
அவளை அழைத்துச் செல்கிறான்
மேல் கூரைக்கு
நகரைப் பார்க்க ஏதுவாயுள்ளதற்கு.

இந்த நேரத்தில், யாரும் நீண்ட நேரம்
கூர்ந்து கேட்டால்,
அவர் கேட்க முடியும் ஒரு தீயணைப்பு எஞ்சினைத்
தூரத்தில், ஆனால்
உதவி கேட்கும் குரல்கள் எட்டாது.

மௌனத்தை மட்டும்
அது ஆழமாகும்போது
ஓரு குழந்தையைப் பார்க்கையில்
ஜன்னல் வழியே அது தாவும்போது
அதன் இரவு ஆடைகள் தீப்பற்றி இருக்க.
————————-

மூலம்: சார்ல்ஸ் ஸிமிக்

தமிழாக்கம்: மைத்ரேயன்

[மூலக் கவிதைகளின் தலைப்புகள் முறையே: October Arriving; History: SolitudeListen

இவை New and Selected Poems of Charles Simic என்ற புத்தகத்தின் 2013 ஆண்டுப் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.]

சார்ல்ஸ் ஸிமிக் பற்றி: 

 simicஅமெரிக்கக் கவிஞரான ஸிமிக் இரண்டாம் உலகப் போரின் போது நாடு நாடாகத் துரத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். பெல்க்ரேட் நகரத்தில் வாழ்ந்து வளர்ந்தவரின் குடும்பம் நகரம் குண்டு வீச்சால் தாக்கப்பட்டபோது வெளியேறி அகதி வாழ்வில் சிக்கியதாம். ‘ஹிட்லரும், ஸ்டாலினும் என் பயண ஏஜண்ட்களாயிருந்தனர்.’ என்று கிண்டலடிக்கிறார் ஸிமிக். அன்றைய யூரோப்பிய அகதிகள் பலரும் செய்ததையே அவர் குடும்பமும் செய்தது. ஒரு வழியாக அமெரிக்காவுக்கு வந்து சேர்கிற ஸிமிக், கவிதை எழுதத் துவங்கியதற்கு ஒரு காரணம், உயர்நிலைப் பள்ளியில் இருக்கையில் சக மாணவிகளைச் சந்திக்க ஒரு வழி என்றுதானாம்.

அந்த ஒரு காரணம் மட்டுமே இன்று அவர் உலகறியக் கவிஞராகப் போதியிருக்காது என்று நாம் கருத இடமுண்டு. ஐந்து வருடம் அமெரிக்க ராணுவத்தில் கட்டாய உழைப்புக்குச் சேர நேர்ந்த போது வருடம் 1961. வியத்நாம் போரில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி பல்லாயிரம் இளைஞர்களைக் கட்டாயமாக ராணுவத்தில் சிக்க வைத்த வருடங்கள். 1967 இல் இவரது முதல் கவிதைப் புத்தகம் பிரசுரமாகிறது. தலைப்பு- ’புல் என்ன சொல்கிறது?’[What the Grass Says’].

அவருடைய துவக்க காலக் கவிதைகள், மத்திய யூரோப்பியரின் வாழ்நிலைகளைச் சொன்னவை.  கிராம வாழ்வைப் பேசின, அமெரிக்காவையோ, நகர வாழ்வையோ இல்லை என்று ஜெஃப்ரி தர்லி என்கிற விமர்சகர் சொல்கிறாராம்.

இன்று அவருடைய கவிதைகள் அதீத எதார்த்தம் (Surrealism ), வன்முறையையும், குமுறலான நம்பிக்கையின்மையையும் மிக எதார்த்தமாகச் சித்திரிப்பது, மீபொருண்மை நோக்கைக் கொள்வது போன்ற குணாதிசயங்கள் கொண்டவை என்று பொயட்ரி மாகஸீன் என்னும் கவிதைத் தளம் சொல்கிறது.

குறிப்பாகச் சொன்னால் இவரது கவிதைகளில் ஜடப்பொருட்களெல்லாம் உயிரூட்டப்படுகின்றன, உள்ளோட்டம் கொண்டு விடுகின்றன எனலாம். சாதாரணத்தில் அசாதாரணத்தைத் தொடர்ந்து கண்டு பிடிக்கிறார் இவர்.

யூரோப்பில் இந்த வாரம் ஹாலோவீன் என்கிற ஒரு விசித்திர சடங்கு நிகழ்கிறது. அதற்கடுத்த நாளில் நம் ஊரில் ஒளியைக் கொண்டாடும், ஒளி எழுந்ததைக் கொண்டாடும் பண்டிகை நாடெங்கும் மக்களின் நடுவே பெரும் ஆர்ப்பரிப்பை, மகிழ்வைக் கொணர்கிறது. இந்தக் கட்டத்தில் ஸிமிக்கின் உலகில் உள்ள இருண்மை விவரிப்போடு கலந்த நம்பிக்கையின் மீது மனிதர் கொள்ளும் நம்பிக்கையைச் சொல்லும் கவிதைகளைப் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

(இக்குறிப்பு பொயட்ரி மாகஸீன் என்கிற தளத்தில் உள்ள அறிமுகக் கட்டுரையைப் பயன்படுத்தி எழுதப்பட்டது.)

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.