ஆதாரமற்ற பொருளாதாரம் – 1

இடம்விட்ட மீனைப் போலும் எரிதணல் மெழுகுபோலும்
படம்எடுத் தாடுகின்ற பாம்பின் வாய்த்தேரை போலும்
தடங்கொண்ட ராமபாணம் செருக்களத்துற்றபோது
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
அருணாசலக் கவிராயர்

செப்டம்பர் மாதம் 21-ம் தேதி, ந்யு யார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலையிருக்கும் தீவுக்குச் சென்றிருந்தேன்.பதினேழு டாலர் செலவில், அங்கொரு அருங்காட்சியகத்தில் சென்ற நூற்றாண்டில் புது வாழ்வையும் வாய்ப்பையும் தேடிக் கப்பல் கப்பலாக அமெரிக்கா வந்த புலம்பெயர் யூரோப்பியர்களின் வரலாற்றை நன்கு அறியமுடிந்தது. அவர்களின் உழைப்பால் அமெரிக்கா எப்படி வல்லரசானது போன்ற ஆவணங்கள் காணக் கிடைத்தன. ஒருவேளை நான் ஒரு வாரம் கால தாமதமாக ந்யு யார்க் போயிருந்தால் சுதந்திர தேவி சிலையின் தீவைப் பார்த்திருக்க முடியாது. காரணம், செப்டம்பர் இறுதியில் அமெரிக்க அரசின் கஜானா காலியாகி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு அரசு தள்ளப் பட்டது. இதனால் சுற்றுலா போன்ற அத்தியாவசியமில்லாத பல இலாகாக்களை இழுத்து மூடியது. இதைத்தான் அமெரிக்க அரசு ஸ்தம்பித்துவிட்டது என்றார்கள்.

ஊடகங்களில் இது அமெரிக்காவின் ஆளுங்கட்சியை மேலும் கடன் வாங்க விடாமல் தடுக்க எதிர்கட்சி நடத்திய நாடகமாக சித்தரிக்கப் பட்டது. நாடு ஸ்தம்பித்தால் எனக்கென்ன இல்லை உலக பொருளாதாரம் சிதைந்தால் எனக்கென்ன என புது மாப்பிள்ளை போல் கடைசி வரை ஒபாமா முறுக்கிக்கொண்டு நிற்க, இறுதியில் எதிர்கட்சி அடி பணிந்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. அடுத்த உலகளாவிய பொருளாதார மந்தம் தவிர்க்கப்பட்டதாக ஒட்டுமொத்த உலக நாடுகளும், பங்குச் சந்தைகளும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டன. இப்போது மறுபடி சுதந்திர தேவியின் சிலைக்கு படகுகள் இயக்கப் படுகின்றன.

Yaksha_Prashna_Enchanted_Pool_Yudhishtira_Questions_Lake_Death_Die_Surprise_Life_Panadava_Water_Thirsty

ராஜாஜி எழுதிய மகாபாரதத்தில் மாயச் சுனை ஒன்றைப் பற்றிய ஒரு சிறுகதை உண்டு. வனத்தில் அலைந்து களைத்துப் போய் தாகத்திற்குத் தண்ணீர் தேடிப் போகும் முதல் நான்கு பாண்டவர்களும் ஒரு யக்ஷன் காக்கும் குளத்தில் அடாவடியாகத் தண்ணீர் எடுக்க முயன்று அவனால் நிர்மூலமாக்கப் பட்டிருப்பார்கள். கடைசியாக வரும் தருமன், அந்த யட்சனை அறிவால் வென்று தம்பிகளை மீட்டெடுப்பான். அதில் கடைசியாக தருமன் தரும் பதில்தான் யட்சனுக்குத் திருப்தியளிக்கிறது.  இவ்வுலகிலேயே பெரிய அதிசயம் எது என யட்சன் வினவ, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மரித்துக் கொண்டே இருந்தாலும் நாமும் ஒரு நாள் இறந்துதான் போவோம் என்கிற நினைப்பை மனிதன் உணருவதில்லை, சிரஞ்சீவியாக இருக்கவே விரும்புகிறார்கள் என்பதே அந்த பதில்.

இன்று அமெரிக்கக் கடன் பிரச்சனைக்குத் தீர்வு, மேலும் கடன் வாங்குவதே என முடிவாகியும், ஒரு வல்லரசாகத் திகழும் அமெரிக்காவின் கருவூலம் காலி பெருங்காய டப்பாவாக இருப்பதும், அந்நாடு கடன் வாங்கியே காலந்தள்ளுவதும் நம்மில் பெருவாரி மக்களுக்கு விசித்திரமான செய்தியாகப் புலப்படவில்லை. இதற்குக் காரணம் இணையத்தில் இந்த கட்டுரையை வாசித்து வரும் நடுத்தர வர்க்க வாசிகளைப் போன்ற மக்களில் முக்கால்வாசிப் பேர் தம்மை அறியாமல் கடனாளியாக இருந்தும் (குறிப்பாக வீட்டுக் கடன்) வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளை விடத் தம்மைப் பாக்கியசாலிகளாகக் கருதிக் கொண்டிருப்பதே.

கடன் வாங்குவது பெரிய குற்றம் அல்ல. வாங்கிய கடனைத் திருப்பி அடைக்கும் திறன் இருக்கும் வரை. ஆனால் இப்படிச் சிந்திப்பதற்குப் பதிலாக, இன்றைய வளர்ச்சியடைந்த மேலை நாட்டுப் பொருளாதாரத்தில் மேலோங்கி நிற்கும் சிந்தனை, கடனுக்கு வட்டி செலுத்தும் திறன் இருக்கும் வரை கடன் வாங்கிக்கொண்டே இருக்கலாம் என்பதே. இன்றைக்கு ஆஸ்திரேலியா, சீனா, எண்ணை வளம் மிக்க நாடுகள் போன்ற சில நாடுகளைத் தவிர, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் என உலகின் முன்னணி நாடுகளாகக் கருதப்பட்டு வரும் பல நாடுகள் உண்மையில் இமாலயக் கடனாளிகள். அதாவது இவர்கள் வரவை விடச் செலவு அதிகம் செய்கிறார்கள். அதே போல தாங்கள் உற்பத்தி செய்வதை விட அதிகமாக நுகர்கிறார்கள். தம் நாடு ஏற்றுமதி செய்வதை விடக் கூடுதலாகப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி அதிகம் செய்து வாழ்கிறார்கள்.  இந்த வகை நாடுகளில் எல்லாம் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும். இதைச் சமன் செய்ய இந்நாடுகள் கடன் வாங்கித்தானாக வேண்டும்.

ஒருவேளை இவர்களுக்குக் கடன் கொடுக்க ஆளில்லை என வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? தற்போது அமெரிக்காவில் நடக்கவிருந்ததைப் போல அரசு ஊழியர்களுக்கு ஒன்றாம் தேதி சம்பளம் போயிருக்காது. ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப் பட்டிருக்காது. மருத்துவ மனைகளில் பலருக்கு இலவச சிகிச்சை ரத்து செய்யப்பட்டிருக்கும். பழுதான சாலைகள் சரி செய்யப் பட்டிருக்க மாட்டா. அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் வசதிக் குறைவுகள் தீவிரப்பட்டு, தரம் குறைந்து போயிருக்கும். அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் குறைக்கப் பட்டிருக்கும். இதனால் வெளியுலகில் விலை வாசி இறங்கி விடுமா என்ன? அதைச் சந்திக்க, அவ்வூழியரிடையே லஞ்சம் தலை விரித்தாடியிருக்கும். அரசியல் வாதிகளும் சொந்த ஆதாயம் தேடி ஊழலில் இறங்கியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் உலகின் நாயகர்களாக நாம் இன்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் பல நாடுகள், வளரும்/ வளர்ச்சி அடையாத மூன்றாம் உலக நாடுகள் போல் ஆகியிருக்கும்.

இன்னொரு வகையில் சொன்னால், வளர்ந்த நாடுகளிடமும் பணம் இல்லை, வளராத நாடுகளிடமும் பணம் இல்லை. ஆனால் பின்னவர்கள், கையில் காசு இல்லாதவன் ஏழை என்பதால் விரலுக்கேத்த வீக்கம் என மனதைச் சாந்திசெய்து கொண்டு விடுவதால், ஏழையாக வாழ அதிகம் யோசிப்பதில்லை. முன்னவர்கள் காசு இல்லாவிட்டால், பாமா விஜயம் நாகேஷ் போல வரவு எட்டணா, செலவு பத்தணா என வாழ்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம், கடைசியில் இவர்கள் பாடு துந்தனா ஆவதேயில்லை.

net_worth_comic_Wealthy_get_Debt_Credit_for_Rich_Poor_Beggar_Cartoon_Caricature

சென்ற வருடம் யூரோப்பிலுமே பல நாடுகள் கடன் தொல்லையில் மூழ்கின. குறிப்பாக கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், இட்டலி, அயர்லாந்து போன்ற நாடுகளை நம்பி மேலும் கடன் கொடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் இந்த நாடுகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டன. அப்போது முன்னாள் மலேசியப் பிரதமர் மஹாதீர், யூரோப்பிய நாடுகளிடம் பணம் இல்லை, அதனால் அவர்கள் பணக்காரர்களாக வாழ்வதைத் தவிர்த்து ஏழைகளைப் போல வாழ வேண்டும் என்றார், (பார்க்க: http://www.bbc.co.uk/news/business-16918000.) ஆனால் யூரோப்பிய ஒருங்கிணைப்பு, ஜெர்மனியின் தலைமையில் மேலும் கடன் கொடுத்து நிதி உதவி இந்த நாடுகளை காப்பாற்றியது. ஆனால் இதில் ஜெர்மனியே ஒரு கடனாளி தான். அது அளவோடு கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறது, வட்டியையும் கட்டி வருகிறது. கிரீஸ் நாடோ, ஊழலும், சோம்பேறித்தனமும் மேலோங்கி, அதற்கும் மேல் ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறேன் பேர்வழி என மேலும் கடன் வாங்கி சொக்கப்பனை வைத்தது. ஆக இன்றையச் சூழலில் வட்டி கட்டினால் போதும், எவ்வளவு கடன் வேண்டுமானாலும் வாங்கலாம், திருப்பிக் கொடுப்பதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் என மேலே சொன்ன கருத்துக்கு இது சிறந்த உதாரணம். Micro Financing தத்துவத்தின் அடிப்படையில் ஐந்தாயிரமும் பத்தாயிரமுமாக பல இல்லத்தரசிகளுக்கு கடன் வழங்கிய வங்க தேசத்தின் க்ராமீன் வங்கிக்கு கடனிலேயே ஊறி உழன்று கொண்டிருக்கும் மேற்கத்திய வல்லரசுகள் அமைதிக்கான நோபல் விருதை அளித்து கொண்டாடியதுதான் இதில் பெரிய முரண்நகை.

சரி, இப்படி எல்லாருமே கடனாளிகள் என்றால், கடன் கொடுப்பவர் யார். இவை பெரும்பாலும் வங்கிகள், ஓய்வூதிய காப்பீட்டு நிறுவனங்கள். இவர்களுக்கு முதலீடு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் இது பொது மக்களாகிய நீங்கள் இவர்களிடம் சேமிக்கும் பணம்தான். இருந்தும் வங்கிகள் தம்மிடம் நிதி இல்லாமலேயே பிறருக்குக் கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

என்னிடம் நூறு ரூபாய் இருந்தால்தான் நான் உங்களுக்கு நூறு ரூபாய் கடனாகத் தர முடியும். ஆனால் கையிருப்பை விட அதிகமாகப் பிறருக்குக் கடன் கொடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் பற்பல மடங்கு அதிகமாக கடன் கொடுப்பது வழக்கமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன. இது எப்படிச் சாத்தியம் ஆகும்? நீங்கள் வங்கியில் வீட்டுக்கடன் வாங்க விண்ணப்பித்தால், வங்கி உங்களுக்குப் பணம் அளிக்கிறது. அதை நீங்கள் வீடு கட்டும் நிறுவனத்திடம் செலுத்துகிறீர்கள். அந்த நிறுவன முதலாளி அந்தப் பணத்தை தன் வங்கிக் கணக்கில் போடுகிறார், அல்லது அதில் வேறு பொருள் வாங்குகிறார். ஒரு தொடர் சங்கிலி போலப் பொருளை விற்பவர் அந்த பணத்தைத் தன் வங்கிக் கணக்கில் போடுகிறார். ஆக ஒரு வங்கியில் நீங்கள் பெறும் கடன், வங்கிகளுக்குள்ளேயே இயக்கம் பெற்றுச் சுற்றுவதால் கொடுக்கக் கையில் வேண்டுமளவு பணம் இல்லாவிட்டாலும், வங்கிகளால் அள்ளி அள்ளி கொடுக்க முடிகிறது. இப்படிக் கடனாகவே சுழலும் நிதியின் அளவு பெருகப் பெருகப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதாகப் பொருளாதாரம் என்ற ஒரு கல்வித் துறையில் பெரும் படிப்பெல்லாம் படித்துக் கற்ற நிபுணர்கள் கருதுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கையில் சிரிக்காமல் இருக்கிறீர்களா, நீங்கள் நன்கு விவரம் தெரிந்த மனிதர் என்று கருதப்படுவீர்கள். ஆனால் உங்களுக்கு உண்மையில் விவரம் தெரியுமா?

Countries_Loan_Economist_world_debt_map_2012

இதற்கு அடுத்த கட்டமாக, தவணை முறையில் கூடக் கடனைத் திருப்பிக் கட்ட முடியாது எனத் தெரிந்தும் வங்கிகள் வாடிக்கையாளர்களைத் துரத்தி துரத்திக் கடன் வாங்கச் சொல்கின்றன. இது மட்டுமா, இவ்வாறாகக் கொடுக்கும் சில்லறைக் கடன்களை மொத்தமாகக் கூட்டி ஒரு பத்திரமாக ஆக்கி, அதை மடித்து ஒரு அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைத்துப் பூட்டி மொத்த வியாபாரமாகப் பிற வங்கிகளிடமோ முதலீட்டாளர்களிடமோ விற்று அதிலும் லாபம் பார்க்கின்றன. கடைநிலையில் இருக்கும் வாடிக்கையாளன் தவணையைச் செலுத்தமுடியாமல் போனால், சந்தையில் ஒருவரை ஒருவர் நம்பும் ஆதாரம் சிதைந்து ஒட்டுமொத்தக் கட்டடமும் ஆட்டம் கண்டு விடுகிறது. தற்போதையப் பொருளாதார மந்தத்தின் மூல காரணமே இம்மாதிரி ஒரு காசு பெறாத கடன்களைப் பல கோடிகளுக்கு வங்கிகள் பிற முதலீட்டாளர்களுக்கு விற்றதால் தான். சமீபத்தில் ஜே. பி. மார்கன் சேஸ் என்ற வங்கி இதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தண்டனையாக, வெறும் 78000 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. வங்கி நிர்வாகிகள் யாரும் சிறைக்கு அனுப்பபடவில்லை. ஆனால் ஒரு தனி மனிதன் கடன் வாங்கித் திருப்பித் தராவிட்டால், மோசக்காரன் என முத்திரை குத்தி உறுதியாகச் சிறைக்குள் தள்ளியிருப்பார்கள்.

சரி உலகப் பொருளாதார மந்தம் வந்ததுதான் வந்தது, அது மறைந்த பாடில்லை. அதை சரி செய்வது எப்படி என உலக நாடுகள் யோசித்தன. அதற்குச் சிறந்த வழியாக அரசுகள் தேர்ந்தேடுத்த வழிமுறையில் வியப்பொன்றும் இல்லைதான். இதை அடுத்த பகுதியில் காண்போம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.